Monday, February 6, 2017

வீட்டு குப்பையிலிருந்து உரம் - 1

                      நம் நாட்டை பொருத்தவரை எதையுமே உடனடியாக செய்யாமல் தள்ளிப்போடுவது என்பது எழுதப்படாத சட்டம். இதனால் எளிதாக தீர்வு காணக்கூடிய விஷயங்கள் கூட இந்த மெத்தனத்தால் பெரும் பிரச்சனையாக மாறி, தீர்வே கிடைக்காமல் போய்விடுகிறது. அந்தப்பட்டியலில் திடக்கழிவு என்பதும் ஒன்று. இதில் உதாரணத்திற்கு சென்னை நகரை எடுத்துக்கொள்ளலாம்.  சென்னையில் மட்டும் ஒரு நாளைக்கு உருவாகும் கழிவு 4,500 மெட்ரிக் டன் (1 டன் = 1000 கிலோ) ஆகும். இவற்றை கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி ஆகிய ஊர்களில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இவற்றில் 68% மக்கும் தன்மை கொண்டவை. இவற்றை முறைப்படி மக்க செய்யாமல் அங்கேயே தொடர்ந்து கொட்டப்படுவதால், துர்நாற்றம் ஏற்படுவதுடன் அதை சுற்றியுள்ள பகுதியில் வசிப்பவர்களுக்கு நோய் ஏற்பட்டு பாதிப்பு ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல், அதிலுள்ள மக்கும் தன்மை கொண்ட ஆர்கானிக் பொருட்களை மக்க செய்து உரமாக்கினால் நாள் ஒன்றுக்கு சுமார் 600 - 700 டன் உரம் கிடைக்கும். உரத்தை கேவலம் ஒரு கிலோ இரண்டு ரூபாய் என விற்பனை செய்தாலும், இதன் மதிப்பு தினசரி 12 - 14 லட்சம் ரூபாய் ஆகும்.

         பொதுமக்களின் ஆரோக்கியத்தை பற்றியோ அல்லது வருமான இழப்பு பற்றியோ யாருக்கும் கவலை இல்லை. இந்நிலையில் நமக்கு நாமே என முடிவு செய்து செயல்பட்டால் ஒழிய வேறு வழியில்லை. மொத்தமாக குப்பையை ஒரிடத்தில் குவித்து அதை உரமாக மறு சுழற்சி செய்வது மிகவும் கஷ்டம். எனவே நாம் ஒவ்வொருவரும் நம் வீட்டு குப்பையை நாமே மறு சுழற்சி செய்யலாம். லாபமும் கூட. இவ்விதம் மறு சுழற்சி செய்யப்படும் உரம் கருப்பு தங்கம் ( BLACK GOLD ) என வெளிநாட்டில் கூறப்படுகிறது.

நம் வீடுகளில் இருந்து உற்பத்தியாகும் குப்பையின் அளவு சராசரியாக நாள் ஒன்றுக்கு நபர் ஒன்றுக்கு 700 கிராம் ஆகும். நாம் வெளியே கொட்டும் வீட்டு குப்பையில், மக்கும் தன்மை கொண்ட ஆர்கானிக் பொருட்கள், அதாவது காய்கறி கழிவுகள், அழுகிய பழங்கள், தோல், இலைகள், மிஞ்சிய உணவு பொருட்கள், கிழிந்த காகிதம் மற்றும் செடி மரம் இவற்றின் இலைகள் போன்றவைகள் சுமார் 70%  இருக்கும். அதாவது ஒரு நபர் குப்பையில் 500 கிராம் மக்கும் தன்மையுள்ள ஆர்கானிக் பொருட்கள் நிச்சியமாக இருக்கும். இவற்றை பிரித்தெடுத்து மக்க செய்து உரமாக்க வேண்டும். இதற்கு ராக்கெட் தொழில்நுட்பம் போன்ற எதுவும் தேவை இல்லை. நம் முப்பாட்டன் காலத்திலேயே இதை செய்து வந்தார்கள். இடம் தேவை இல்லை. நேரம் செலவு செய்ய வேண்டாம். வருமானமும் கிடைக்கும்.

இதைப்பற்றி வரும் பதிவுகளில் தொடராக பார்க்கலாம்.

அடுத்த பதிவில் சந்திப்போம்......................