Saturday, April 3, 2010

ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவுமா?

ஏப்ரல் மாதம் 1-ம் தேதியன்று " Right of Children to Free and Compulsory Education Act 2009." என்ற மத்திய அரசு சட்டம் அமுலுக்கு வந்துள்ளது. இந்த சட்டம் என்ன சொல்லுகிறது, அது எந்த அளவில் செயல் படுத்தப்படும் என்பதை பார்க்கலாம்.
சட்டம் என்ன சொல்லுகிறது?
1.  6 வயது முதல் 14 வயது வரையிலுள்ள குழந்தைகளுக்கு இலவச கட்டாய கல்வி அவர்களின் அடிப்படை உரிமையாக ஆக்கப்பட்டுள்ளது.
2.  அருகாமையிலுள்ள அரசு, அரசு சார்பு கல்வி நிலையங்கள், இவர்களுக்கு கல்வி வசதியளிக்க வேண்டும்.
3.  குழந்தைகளின் வயதுக்கேற்ப  வகுப்பில் சேர்க்கப்படுவர். அதாவது 6 வயது குழந்தையை 1ம் வகுப்பு, 7 வயது குழந்தை 2 ம் வகுப்பு etc. இவ்விதம் ஆரம்பத்திலிருந்து இல்லாமல், நேரடியாக 2,3,4,5,6,7& 8-ம் வகுப்புகளில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு, விஷேச பயிற்சி அளிக்கப்படும்.
4. ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு பள்ளி என்ற அளவில் பள்ளிகள் அமைக்கப்படவேண்டும். முறையான பயிற்சி பெற்ற தேவையான ஆசிரியர்க்ளை நியமிக்க வேண்டும். வகுப்பறைகள், விளையாட்டு மைதானம், நூலகம், உபகரணங்கள் இவை அவசியம் தேவை.
5. இதனால் மாநில அரசுக்கு ஏற்படும் செலவுத்தொகையில், அதாவது அதிகப்படியாக நியமிக்கப்படும் ஆசிரியர்களின் ஊதியம், வகுப்பறைகள் கட்டுவதற்கான செலவு, உபகரணங்கள் போன்றவற்றிற்கு தனது பங்காக 55%
மத்திய அரசு வழங்கும்.
6. தனியார் கல்வி நிலையங்களில், சேர்க்கப்படும் மாணவர்கள் எண்ணிக் கையில் 25 சதவிகிதத்தை பொருளாதாரம், சமூகம் இவற்றில் பின் தங்கிய மாணவர்களுக்கு ஒதுக்கி இலவச கல்வி வழங்கவேண்டும்.
இது தான் இச்சட்டத்தின் முக்கிய அம்சம் ஆகும்.
சில புள்ளி விபரங்கள்
1. அரசு புள்ளிவிபரப்படி இந்தியாவில் 6 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 22 கோடி. இதில் பள்ளிக்கூடம் செல்லாதவர்களின் எண்ணிக்கை 92 லட்சம் என அரசு கூறுகிறது.
2.  இத்திட்டத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு சுமார் 34,000 கோடி ரூபாய் வீதம் 5 ஆண்டுகளுக்கு 1.7 லட்சம் கோடி ரூபாய் தேவை என " University of Education Planning and Administration "கூறுகிறது.
3. இத்திட்டத்திற்கு சுமார் 12 லட்சம் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தேவை.
சில கேள்விகள்.
1.  1.7 லட்சம் கோடி ரூபாய்கள் தேவைப்படும் இத் திட்டத்திற்கு சுமார் 90,000 கோடி தனது பங்காக மத்திய அரசு செலவு  செய்ய வேண்டும். இத்தொகை அர்சிடம் உபரி இருப்பு தொகையாக உள்ளதா? அல்லது வ்ரியாக வரும் வருமானத்திலிருந்து செலவு செய்யப்படும் என்றால், எந்த இனத்திலிருந்து பெறப்படும்?
2.  ஏற்கனவே மாநில அரசுகள் கல்விக்காக செலவு செய்து கொண்டிருக்கும் பொழுது, மத்திய அரசின் இத்திட்டத்திற்காக  செலவு செய்வார்களா?
3.  மீதி தொகையாகிய 80,000 கோடியை ஜம்மு, காஷ்மீர் நீங்கலாக உள்ள அனைத்து மாநிலங்களும்  செலவு செய்ய வேண்டியுள்ளது. மாநிலங்களின் நிதி நிலைமை அந்த அளவிற்கு உள்ளதா? 
4.  மத்திய அரசிட்மிருந்து  பெறப்படும் 55% தொகை இத்திட்டத்திற்குத்தான் பயன்படுத்தப்படும் என்பதற்கு என்ன உத்திரவாதம்?
5. பள்ளிக்கூடம் செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 92 லட்சம் என கூறப்படுவது  எதன் அடிப்படையில். சமீபத்தில் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டதா?
இது போன்ற முக்கியமான கேள்விகளுக்கு மத்திய அரசிடமிருந்து  பதில் இல்லை. 
இந்த சூழ்நிலையில், மிகவும் அவசியமான இத்திட்டத்தை முழுமையாக செயல் படுத்த வாய்ப்பே இல்லை.
எனவே இச்சட்டமும்  ஏட்டளவில்தான் இருக்கும்.
ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது! 

6 comments:

 1. ந‌ல்ல‌ த‌க‌வ‌ல்.... ச‌ட்ட‌த்தின் அல‌ச‌லும் அருமை.. தொட‌ருங்க‌ள்.. முத‌ல்முறை உங்க‌ள் த‌ள‌த்திற்கு வ‌ருகிறேன்..

  ReplyDelete
 2. உங்கள் தளத்திற்கு முதல் முறையாக வரும் போதே எதிர்வினையோடு வருவதற்கு வருத்தம்.

  உங்கள் வரிசைக்கிரம தொகுப்பு அலசலுக்குரியதாக இருந்தாலும் பிள்ளை பிறப்பதற்கு முன்பே பெயர் வைக்கிற மாதிரியும்,உயிரோட பிரசவிக்குமாங்கிற சந்தேகத்தை எழுப்புவது மாதிரி உள்ளது கடைசி வரிகள்.சட்டம் எப்படி செயல்படுத்த படுகிறது என்பதை அடுத்த ஐந்து ஆண்டுகளில் கணிக்க வேண்டிய விசயம் இது.

  மற்ற மாநிலங்கள் எப்படியோ இப்போதைய நிலையில் இலவச வாரி வழங்குதல்களையெல்லாம் நிறுத்தி விட்டு கல்விக்காக கவனம் செலுத்தலாம்.கல்வி மட்டுமே இந்தியாவை உயர்த்தும்.நன்றி.

  ReplyDelete
 3. தேவையான தகவல்,தொடருங்கள் நாங்கள் தொடர்ந்து வருகிறோம்...

  ReplyDelete
 4. தங்கள் வருகைக்கு நன்றி நாடோடி அவர்களே!
  அஹமது இர்ஷாத் அவர்களே தங்கள் வருகைக்கு நன்றி! தொடர்ந்து வந்து ஆதரவு தாருங்கள்.

  ReplyDelete
 5. ராஜ நடராஜன் அவர்களே, தங்கள் வருகைக்கு நன்றி. எதிர்வினை,தர்க்கம் என்பது ஆரோக்கியமான விஷயம் தான்.
  "பிள்ளை பிறப்பதற்கு முன்பே பெயர் வைக்கிற மாதிரியும்,உயிரோட பிரசவிக்குமாங்கிற சந்தேகத்தை எழுப்புவது மாதிரி உள்ளது கடைசி வரிகள்.சட்டம் எப்படி செயல்படுத்த படுகிறது என்பதை அடுத்த ஐந்து ஆண்டுகளில் கணிக்க வேண்டிய விசயம் இது."என எந்த நம்பிக்கையில் கூறுகிறீர்கள்? அரசியல்வாதிகள் அரசியல் வியாபாரிகளாக மாறி விட்ட பொழுது, இதை முழு வீச்சில் அமுல்படுத்துவார்கள் என நம்ம முடியாது. மேலும் சட்டியில் இருந்தால் தானே ஆப்பையில் வரும்?

  ReplyDelete
 6. ஐயா,அருமை தங்கள் கருத்தை நான் முழுவதும் ஏற்றுக்கொள்கிறேன்.தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றிய பதிவு முழுமை பெறவில்லை.அதன் அடுத்த பதிவு எப்போது?மேலும் பொதுநல வழக்கு தொடர்வது பற்றி ஒரு பதிவிடுங்கள்

  ReplyDelete