Wednesday, June 30, 2010

ஐயையோ! ஆட்டோ வரப்போவுது. காப்பாத்துங்களேன்!

சிறிது நேரத்துக்கு முன் எனக்கு போன் வந்தது. அழைத்தவர் தான் வங்கி அதிகாரி என்றும், என் வலைப்பக்கத்தில், என் பதிவை அவர் படித்ததாகவும் கூறினார்.           "எப்படிருந்தது"  என கேட்டதற்கு நேரடியாக வருகிறேன் என கூறி என் முகவரியை கேட்டார். வலையுலக நண்பர்கள் உங்கள் மீதிருந்த நம்பிக்கையால் முகவரியை கொடுத்துவிட்டேன். அவர் ஆட்டோவில் வருவதாக சொல்லியிருக்கிறார். அவர் வந்து சென்ற பின், பதிவிடும் நிலையில் நான் இருந்தால், விபரத்தை பதிவிடுகிறேன்.

லீகல் நோட்டீஸ் - திரவியநடராஜன்

பொதுவாக லீகல் நோட்டீஸ் என்றாலே, அது வக்கீல் மூலமாக அனுப்பப்படும் நோட்டீஸ் என்றே நாம் நினைக்கிறோம். அது தவறு. அதாவது எதிர் தரப்பினர் மீது, அவரது செயலுக்கு எதிப்பு தெரிவித்து எடுக்கப்படக்கூடிய சட்ட நடவடிக்கை பற்றிய அறிவிப்பு கடிதம் தான் அது. அதை நாமே அனுப்பலாம். நமக்கு அது பற்றிய விபரம் தெரியாத பட்சத்தில், வழக்கறிஞர் மூலமாக அனுப்பவேண்டும்.

நமது நாட்டு சட்டப்படி, வழ்க்கு தொடுப்பவர் ( Petitioner / Complainant) மற்றும் எதிர் தரப்பினர் ( Opposite Party ) -தான் வழக்கு நடவடிக்கையில் நேரடியாக ப்ங்கேற்க வேண்டும். அது சட்டம் நமக்கு வழங்கியிருக்கும் உரிமை. இதில் வழ்க்கு தொடுப்பவருக்கோ அல்லது எதிர் தரப்பினருக்கோ போதுமான சட்ட அறிவு இல்லாத நிலையில் வழ்க்கறிஞர் மூலமாக செய்ய வேண்டும்.

பொதுவாக லீகல் நோட்டீஸ் என்பது, நாம் அனுப்பும் நோட்டீஸ் மற்றும் வழக்கறிஞர் மூலம் அனுப்பப்படும் நோட்டீஸ் , இவை இரண்டையுமே குறிப்பிடும் சொல்லாகும். வழக்கறிஞர் மூலம் அனுப்பப்படும் நோட்டீஸ் அட்வகேட் நோட்டீஸ் / லாயர் நோட்டீஸ் ஆகும்.

லீகல் நோட்டீஸ் தயாரிப்பது எப்படி?

உதாரணத்திற்கு நீங்கள் ஒரு வாஷிங் மிஷின் வாங்கியிருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அத்ற்கு ஒரு வருட உத்திரவாதம் உற்பத்தியாளரால் வழ்ங்கப்பட்டுள்ளது என வைத்துக்கொள்வோம். வாங்கிய ஒரு சில நாட்களி லேயே அது பழுதடைந்து விடுகிறது. நீங்கள் எந்த கடைக்காரரிடம் வாங்கினீர்களோ, அவரிடம் புகார் செய்கிறீர்கள். அவர் அங்கீகாரம் பெற்ற சர்வீஸ் டீலராக இருந்தால் அவரே பழுது பார்த்து கொடுப்பார். அப்படி இல்லை என்றால் கம்பெனியின் சர்வீஸ் செண்டர் முகவரியை தருவார். அங்கு புகார் செய்கிறீர்கள். அவர்கள் பழுது பார்த்து த்ருகிறார்கள். மறுபடியும் குறுகிய காலத்தில் பழுது ஏற்படுகிறது. மீண்டும் பழுது பார்க்கப்படுகிறது. பழுதடைவது தொடர்கிறது . இதனால், உங்களால் தொடர்ச்சியாக மிஷினை பயன்படுத்தாத நிலை. இந்நிலை யில், உங்களுக்கு விற்பனை செய்யப்பட்ட பொருள் தரம் குறைந்தது அல்லது உற்பத்தியில் குறைபாடுள்ள பொருள் (Manufacturing Defect) என கருதுகிறீர்கள். அதனால் அந்த மிஷினுக்கு பதில் வேறு மிஷின் தருமாறு கேட்க்கிறீகள். கம்பெனிக்கரர்கள் அவ்விதம் செய்ய மறுக்கிறார்கள். அதனால் கன்ஸ்யூமர் கோர்ட்டில் வழக்கு தொடர போகிறீர்கள். இப்பொழுது நீங்கள் செய்ய வேண்டியது என்ன? அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.

இந்த விஷயத்தில், விற்பனையாளரை பொறுத்த வரையில் அவர் மீது எவ்வித தவறும் கிடையாது. எனவே வழக்கில் அவரை எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டிய அவசியம் கிடையாது. சேர்த்தாலும் தவறு கிடையாது.


லீகல் நோட்டீஸ்

BY REGISTERD POST WITH A/D, OR BY FAX OR E-MAIL

அனுப்புநர்: ( இது உங்கள் முகவரி)
எஸ். சுப்பிர மணியன்,
14, 18 வது மெயின் ரோடு,
அண்ணா நகர்
சென்னை -600 040.

பெறுநர்:
LG Electronics Pvt Ltd,
AA11, 2nd avenue,
Fatima Tower,
Anna Nagar West,
Chennai - 600 040.

சட்ட பூர்வ அறிவிப்பு.


தங்கள் நிறுவன தயாரிப்பாகிய LG FAWM -9987 மாடல் வாஷிங் மெஷின் ஒன்றை M/s. A shok Traders , 2nd Main Road, Anna Nagar West, Chennai -40 என்ற் டீலரிடம் 5-6-2009 ல் வாங்கியுள்ளேன். பில் நம்ம்பர். 5678 / 5-6-2009. மேற்படி மிஷின் இரண்டு மாத காலத்தில் மூன்று முறை பழுது ஏற்பட்டு, தங்கள் சர்வீஸ் செண்டரால் சரி செய்யப்பட்டுள்ளது. அதன் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. 25-6-2009 - சர்வீஸ் கால் நம்பர்: CHN 5660
2. 15 -7-2009 - சர்வீஸ் கால் நம்பர்: CHN 9078
3. 10-8-2009 - சர்வீஸ் கால் நம்பர்: CHN 10233
இதனால் என்னால் தொடர்ந்து உபயோகிக்க இயலவில்லை. இவ்விதம் அடிக்கடி பழுது ஏற்பட காரணம், எனக்கு விற்பனை செய்யப்பட்ட மெஷின் உற்பத்தி குறைபாடான ஒன்றாகும். எனவே உடனடியாக மேற்படி மெஷினுக்கு பதில், வேறு ஒரு மெஷின் மாற்றித்தரும்படி தங்களிடம் கூறியதற்கு மறுத்து விட்டீர்கள்.

எனவே, மேற்படி மெஷினை மாற்றி தர வேண்டும் என, தங்கள் நிறுவன்த்தின் மீது மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன். இதில் தங்களுக்கு ஏதாவது ஆட்சேபணை இருக்குமானால் , இந்த நோட்டீஸ் கிடைத்த பதினைந்து நாட்களுக்குள் தெரியப்படுத்த வேண்டும். அவ்விதம் தெரியப்படுத்தாத பட்சத்தில், மேற்படி குற்றசாட்டை ஒப்புக்கொள்வதாகவும் ஆனால் பிரசனையை சுமுகமாக தீர்க்க விரும்பவில்லை எனவும் முடிவு செய்து, முறைப்படி வழக்கு தாக்கல் செய்யப்படும் என்ற விபரம் இதன் மூலம் தெரியப்படுத்தப்படுகிறது.

இப்படிக்கு
( கையொப்பம்)
(எஸ். சுப்பிரமணியன்.)
நாள்:----------------

மீள்பதிவு
என்னை ஊக்கப்படுத்த பின்னூட்டமிடுங்கள். 
பலரையும் சென்றடைய வாக்களியுங்கள்.

Tuesday, June 29, 2010

எப்படி ஆப்பு வைக்கலாம்? - திரவிய நடராஜன்

CONSUMER PROTECTION ACT1986.

இச்சட்டம் தான் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் என அழைக்கப்படுகிறது. 1986 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ம் தேதியன்று அமுலுக்கு வந்தது. ஏற்கனவே அமுலில் உள்ள சட்டத்தின் மூலம் நிவாரணம் பெற வாய்ப்பு இருந்தும் தனியாக ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டதின் அடிப்படை நோக்கமே - எளிய முறையில், குறுகிய காலத்தில், செலவில்லாமல் நிவாரணம் பெற வேண்டும் என்பதே. சாதாரமாக, நுகர்வோர் வழக்குகள் பதிவு செய்யப்படும் பொழுது அது சிவில் வழக்காக மாறிவிடும். இதனால் வழக்கு, நீதிமன்ற நடைமுறைப்படியே நடை பெற்வதால் காலதாமதம் ஏற்படுவதுடன், பெரும் செலவும் ஏற்படும். பெரும் தொகை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் ஒரு சிலர் தவிர மற்றவர்கள் நீதி மன்றத்தை அணுகுவது இல்லை. இச்சட்டத்தின் மூலம் இந்த குறைபாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது. இனி அது பற்றி பார்க்கலாம்.

நுகர்வோர் நீதிமன்றங்களின் ( Consumer Court ) அமைப்பும், செயல்பாடும்:

கீழ் நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று இருப்பதை போலவே இச்சட்டப்படி - மாவட்ட அளவில் " மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றங்கள்", மாநில அளவில் "மாநில ஆணையம்", தேசிய அளவில் " தேசிய ஆணையம்" அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றம்:

20 லட்சம் ரூபாய் வரை நஷ்ட ஈடு கோரும் வழக்குகளை, மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் தான் பதிவு செய்ய வேண்டும். நீதிமன்ற கட்டணம் எதுவும் செலுத்தவேண்டியது கிடையாது. இதனால் வழக்கு தொடருவதற்கு தகுதியே இல்லாத பிரச்சனைக்கெல்லாம் வழக்கு தொடர ஆரம்பித்தனர். இதில் எதிர் தரப்பி னரை பிளாக் மெயில் செய்பவர்களும் அடங்கும். இது போன்ற வழக்குகளுக்கு அவர்கள் ஆஜராவது கிடையாது. இதனால் வழக்கு தள்ளுபடி ஆகும் நிலை ஏற்பட்டது. இதனால் தவ்றே செய்யாத எதிர் தரப்பினர்களுக்கு காலவிரயம் மற்றும் செலவு ஏற்படுவதையும், நீதிமன்றத்தின் நேரம் வீணாவதையும் கருத்தில் கொண்டு 2006 ம் ஆண்டில் கீழ் கண்டவாறு கட்டணம் நிர்ணயம் செய்ய்ப்பட்டு ள்ளது.

1 லட்சம் ரூபாய் வரை நஷ்ட ஈடு கோரும் வழக்குகளுக்கு = 100 /-
1லட்சத்திற்கு மேல் 5 லட்சம் வரை = 200 /-
5 லட்சத்திற்கு மேல் 10 லட்சம் வரை = 400 /-
10 லட்சத்திற்கு மேல் 20 லட்சம் வரை = 500 /-

வழக்கு தொடர தேவையான தகுதிகள்:

1. வழக்கு தொடருபவர் நுகர்வோராக இருக்கவேண்டும். வழக்கு அவர் சம்பந்தப் பட்டதாக் இருக்கவேண்டும்.
2. நுகர்வோர், எந்த நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட எல்லைக்குள் ( Jurisdiction) இருக்கிறாரோ அதில் தான் வழக்கு தொடரவேண்டும்.
3. புகாருக்கான ஆதாரங்கள் இருக்கவேண்டும்.
4. பிரச்சனை ஏற்பட்டதிலிருந்து 2 வருடங்களுக்குள் வழக்கு தொடர வேண்டும்.

யார் மீது வழக்கு தொடர முடியும்?

1. நமக்கு பொருட்களை விற்பனை செய்பவர்கள் அனைவரும். இதில் தனியார், அரசு நிறுவனம் என்ற பாகுபாடு கிடையாது. அனைவருமே இதில் உட்படுவர்.

உதாரணம்: மளிகை கடை, டிபார்ட்மெண்டல் ஸ்டோர், பேக்கரி, சைக்கிள் - பைக் - கார் - லாரி விற்பனையாளர், மெடிகல் ஷாப், ரேஷன் கடை போன்றவை.

2. பணம் வாங்கிக்கொண்டு வழங்கப்படும் சேவைகள், தனியார் மற்றும் அரசு துறை நிறுவனங்கள் அனைத்துமே இதில் அடங்கும்.

உதாரணம் : மின்சார வாரியம், குடிதண்ணீர் சப்ளை, இன்ஸூரன்ஸ் கம்பெனி, வங்கிகள், மருத்துவமனைகள், கியாஸ் கம்பெனிகள், சப்-ரிஜிஸ்டிரார் அலுவலகம், போன்றவைகள்.

எந்தெந்த துறைகள் எல்லாம் இதில் அடங்கும் என சட்டத்தில் பட்டிய்லிடப் படவில்லை. காரணம். சேவை என்ற வார்த்தைக்கு முழுமையான விளக்கம் கொடுக்க முடியாது. வார்த்தைக்கான விளக்கம், வழக்குக்கு வழக்கு விரிவடையும் என்பதே உண்மை. உதாரணத்திற்கு சப்-ரிஜிஸ்டிரார் ஆபீஸை எடுத்துக்கொள்ளலாம். இந்த சட்டம் வந்த பின்பு, பலர் இந்த அலுவலகத்தில் அவஸ்தை பட்டு வந்தாலும், இது அரசு அலுவலகம் என நினைத்து விட்டு விட்டனர். பல வருடங்கள் இப்படியே கழிந்தது.

ஒரு சில வருடங்களுக்கு முன்பு ஒருவர் ஒரு சொத்து வாங்க முடிவு செய்து, அதற்கு சம்பந்தப்பட்ட சப்-ரிஜிஸ்டிரார் அலுவல்கத்தில் வில்லங்க சர்டிபிகேட்டிக்குரிய கட்டணத்தை செலுத்தி விண்ணப்பம் செய்தார். எந்த வில்லங்கமும் இல்லை என சர்டிபிகேட் கொடுத்து விட்டனர். அதை நம்பி, அவர் அந்த சொத்தை வாங்கி விட்டார். அதன் பின்பு தான், அதில் வில்லங்கம் இருப்பது தெரிய வந்தது. அதனால் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. தவறான வில்லங்க சர்டிபிகேட் டிப்பார்ட்மெண்ட் கொடுத்ததினால் தான் நஷ்டம் என்றும், வில்லங்க சர்டிபிகேட் வழங்குவது என்பது பணத்தை பெற்றுக்கொண்டு வழங்கப்படும் சேவை என்பதால், நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி குறைபாடான சேவை என்பது அவர் முடிவு. அவர் நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அரசு தரப்பில், நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி தங்கள் மீது வழக்கு தொடர முfடியாது என்றும், சர்டிபிகேட்டில் தவறுகள் இருந்தால் இலாகா பொறுப்பு அல்ல" என குறிப்பிட்டே வழங்கட்டுள்ளதால் தாங்கள் பொறுப்பல்ல என வாதம் செய்தனர். ஆனால் அவர்களின் ஆட்சேபனையை நிராகரித்த் நீதிமன்றம் மனுதாரருக்கு நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது. இது சட்டம் பற்றிய விளக்கம் விரிவடையக் கூடியது என்பதற்கு ஒரு உதாரணம்.

வழக்கு தொடர தேவையான முன் நடவடிக்கைகள்:

உதாரணத்திற்கு நாம் ஒரு கடைக்குப்போய் ஒரு பொருள் வாங்குகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அதன் பாக்கிங்கில் போடப்பட்ட விலைக்கு அதிகமாக பணம் வாங்கினாலோ, எடை மற்றும் அள்வு குறைவாக இருந்தாலோ அல்லது தரம் குறைவாக இருந்தாலோ உடனடியாக அதைப் பற்றி கடைக்காரரிடம் சுட்டிக்காட்டுங்கள். அவர் தவறை சரி செய்ய மறுத்தால், அவருக்கு நீங்களே " குறைபாடுகளை சுட்டிக்காட்டி அதை சரி செய்யா விட்டால் நுகர்வோர் வழக்கு தொடரப்படும்" என அத்தாட்சியுடன் கூடிய பதிவு தபாலில் நோட்டீஸ் அனுப்புங்கள். அவருக்கு நோட்டீஸ் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது என்பதற்கான் ஆதாரத்தை நோட்டீஸ் காப்பியுடன் வைத்துக்கொள்ளுங்கள். அதைப் போலவே பொருள் வாங்கியதற்கான ரசீதையும் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

விலை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால், விலை அச்சடிக்கப்பட்ட பாக்கிங் கவரை பத்திரமாக வைத்திருங்கள்.

தரம் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால், அதே பாக்கிங் கவருடன் பொருளை பாக் செய்ய்து வைத்துக்கொள்ளுங்கள்.

எடை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால், நீங்கள் பாக்கிங்கை பிரிப்பதற்கு முன்பே எடை குறைவு என்பதை ஊர்ஜிதம் செய்து விட்டு பாக்கிங்கை பிரிக்காமல் இருக்க வேண்டும். ஒரு வேளை பிரித்துவிட்ட பின்பு தான் எடை குறைவை கண்டு பிடித்தீர்கள் என்றால், பிரிக்கப்பட்ட பாக்கிங்கை ஆதாரமாக வைத்து வழக்கு தொடர முடியாது. எனவே மற்படியும் அதே கடைக்கு போய், அதே பொருளை, பில் போட்டு வாங்கிக்கொளுங்கள்.

இப்பொழுது சேவை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால், சேவைக்கான ரசீது இருக்கவேண்டும். முன்பு குறிப்பிட்டபடியே சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்புங்கள். எல்லா அத்தாட்சிகளையும் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.

Monday, June 28, 2010

போங்கடா நீங்களும் உங்கள்....

கிரிமினல்களின் ஆட்சி
குப்பை சட்டங்கள்
அரக்க குண அதிகாரிகள்
சொரணை கெட்ட மக்கள்
இது ஜனநாயக நாடாம்
சுதந்திர தேசமாம்.
நம்பித்தொலைக்க
நான் கேணையனா?
சுனாமி வந்து தாக்கட்டும்!
20 ரிக்டரில் பூகம்பம்
பூமி மாதா தராதா?
இந்த நாடு அழிய்
இயற்கையே கைகொடு!
தோன்றட்டும் புதிய பாரதம்!
காந்தி கனவு
நனவாகட்டும்.
காந்தி தேசம் என்னை
கைநீட்டிஅழைக்கிறது
விடை தாருங்கள்.....

இவர்களை அடையாளம் காட்டுகிறேன் - திரவிய நடராஜன்

ஒரு சில மாதங்களுக்கு முன்பு இரவில் நான், என்.டி.டி.வி 24/7 சானலை பார்த்து கொண்டிருந்தேன். அதில் காட்டப்பட்ட ஒரு இஸ்லாமிய தம்பதியரை பற்றிய செய்தி  என் கண்களில் நீரை வரவழைத்து விட்டது. வலை பக்கத்தில் பதிவிட்டு தங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என முடிவு செய்த பொழுது, அவர்கள் எந்த மாநிலத்தை சார்ந்தவர்கள், அவர்கள் பெயர் இதெல்லாம்  எனக்கு நினைவில் வரவில்லை. என்ன செய்ய என்று தலையை பிய்த்து கொண்டிருந்த பொழுது, தம்பி உண்மைதமிழனின் நினைவு வந்தது. அவர் எப்பொழுதும் கூகுல் சர்ச் எஞ்சினை "கூகிள் ஆண்டவர்" என்றுதான் குறிப்பிடுவார். எனக்கும் கூகிளார் நினைவுக்கு வந்து அவரை மனதார வேண்டிக்கொண்டேன். அவரும் இந்த பக்தனின் வேண்டுதலை ஏற்று எனக்கு தேவைப்பட்ட தகவல்களை தந்தார். இனி விஷயத்திற்கு வருவோம்.

அலகாபாத்தை சார்ந்தவர் தி கிரேட் /  தி ஹைனஸ்   குலாம் முகமது   (மதிப்பிற்கு உரிய / மாண்புமிகு என்ற வார்த்தைகள் தகுதியே இல்லா தவர்களை அழைக்க பயன்படுத்தப்படுவதால் நான் இவற்றை இங்கு பயன்படுத்தவில்லை). இவர் காண்டிராக்ட் தொழில் செய்து வருபவர். இவருடைய மனைவியின் பெயர் ரஷிதா பேகம். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் மட்டுமே உண்டு. 

பெண் குழந்தை ஒன்று தங்களுக்கு வேண்டும் என்ற அவாவினால், ஒரு பெண் குழந்தையை தத்து எடுக்க முடிவு செய்தனர். குழந்தையை தேடி கொண்டிருக்கும் பொழுது, பபிதா என்ற இந்து குழந்தையை தேர்வு செய்தனர். இது நடந்தது சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பு. பபிதாவின் தகப்பனார் 1994 ல் இறந்து விட்டார். அதை அடுத்து தாயாரும் நோய்வாய்ப்பட்டு விட்டார். இந் நிலையில், குலாம் முகமதுவும் அவர் மனைவியும் பபிதாவின் தாயாரை சந்தித்து, அவளது சம்மதத்தை பெற்று உடனடியாக தத்து எடுத்து கொண்டனர். அதன் பின் சிறிது காலத்திலேயே பபிதாவின் தாயார் இறந்து விட்டார்.

குலாம் முகமதுவும் ரஷிதா பேகமும் பபிதாவை தாங்கள் பெற்ற குழந்தையாகவே அன்பு செலுத்தி, அவளை இந்துவாகவே வளர்த்து வந்தனர்... ஒரு சில மாதங்களுக்கு முன் இத்தம்பதியினர், பபிதாவிற்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இச்சமயத்தில் தான் அவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது. பபிதாவிற்கு இந்து பையனை தேர்வு செய்வதா? அல்லது இஸ்லாமிய பையனை தேர்வு செய்வதா? என்று. இறுதியில், பபிதா தங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு மதிப்பளித்து இந்து மாப்பிள்ளையையே தேர்வு செய்வது என முடிவு செய்தனர். 

அப்பொழுதான் பிரச்சனையே ஆரம்பித்தது. மாப்பிள்ளை தேடும் படலத்தின் போது, இத்தம்பதியினர் பலருடைய கேள்வி கணைகளை சந்திக்க நேர்ந்தது. ஆறுதல்ளிக்கும் வகையில் ஒரு சில இந்து குடும்பங்கள் குலாம் முகமதுவை பாராட்டியதுடன், தங்கள் குடும்பத்துடன் வந்து, அவர் குடும்பத்தினருடன் இணைந்து இந்த திருமணத்தை நடத்துவதாக கூறி அவரை உற்சாகப்படுத்தினர்.

பராலி ( BARAULI ) என்ற கிராமத்தை சேர்ந்த கங்கா பிரஸாத் யாதவ் என்பவர் பபிதாவை தனது மகன் பப்லு யாதவிற்கு திருமணம் செய்து வைக்க சம்மதித்தார். குலாம் குடும்பத்தினர், இவர் இந்து மதத்தை சார்ந்தவர். திருமணத்தில், எந்த ஒரு மத சம்பிரதாயமும் விட்டு போய்விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்து திருமண ஏற்பாட்டை செய்தனர்.

திருமண மண்டபமோ அல்லது அரங்கமோ எதையும் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யாமல், தங்கள் சொந்த வீட்டிலேயே திருமணத்தை நடத்த முடிவு செய்தனர். திருமண நாளாக 2-10-2009 வெள்ளி கிழமையை தேர்வுசெய்தனர். வினாயக பெருமான் படத்தை போட்டு,  அதில் திரு குலாம் முகமது, திருமதி ரஷிதா பேகம் தம்பதியினரின் புத்திரி திருவளர் செல்வி. பபிதா என குறிப்பிட்டு இரண்டாயிரம்  அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டன, குலாமின் உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் அழைப்பு அனுப்பபட்டன.

2-10-2009 அன்று வெள்ளிக்கிழமை சுப முகூர்த்த நேரத்தில், புரோகிதர்கள் வேதம் ஓத, குலாம் முகமதுவும், ரஷிதா பேகமும்  பபிதாவை தாரை வார்த்து கொடுக்க, மணமகன்  தாலிகட்ட திருமணம் இனிதே நடந்து முடிந்தது. பபிதாவின் புகுந்த வீட்டிற்கு அவள் செல்லும் பொழுது கொடுத்தனுப்ப வேண்டிய சீதன பொருட்ககளை அந்த பெற்றோர் பலமுறை சரி பார்த்தது வந்திருந்தவர்களை ஆச்சரியப்பட வைத்தது.

மகளை மணமகன் வீட்டிற்கு வழியனுப்பும் பொழுது கண்ணீர் மல்க நின்ற அந்த தம்பதியினரை உறவினர் ஆறுதல் கூறி சமாதானப்படுத்தினர். அவரின் பெருந்தன்மையை பாராட்டிய உறவினர் மற்றும் நண்பர்களிடம் குலாம் கூறிய வார்த்தைகள் இவை தான். "நான் என்ன பெரிதாக என் மகளுக்கு செய்து விட்டேன்? எல்லா தகப்பன்களும் காலம் காலமாக செய்து வருவதை தானே என் மகளுக்கு செய்திருக்கிறேன்."  

இவரை போன்றவர்களை அரசியல்வாதிகள் நிச்சயமாக பாராட்ட மாட்டார்கள். காரணம்  மத கலவரங்களை உருவாக்கி அதன் மூலம் ஆதாயமடையும் ஈன பிறவிகளாயிற்றே!

மதங்கள் மனித நேயங்களை வளர்ப்பதற்கே என்பதை நடைமுறையில் செயல் படுத்தி காட்டிய திரு குலாம், திருமதி ரஷிதா பேகம் ஆகிய இருவரையும், மற்றும் இவர்களுக்கு உறுதுணையாக இருந்த நண்பர்கள், உறவினர்களையும் மனப்பூர்வமாக பாராட்டுவோம்.

திரு குலாம், திருமதி ரஷிதா பேகம் ஆகிய இருவரும் சகல பாக்கியங்களையும் பெற்று நீண்ட காலம் வாழ , எல்லாம் வல்ல அல்லா வை  நான் பிரார்த்திக்கிறேன்.

வாழ்க மனித நேயமும், மத நல்லிணக்கமும்!.

திறமையை பாராட்டுவோம் - திரவிய நடராஜன்

 விஜை டிவி யின் ஏர்டெல் சூப்பர் சிங்கர் 2 ல் வெற்றி பெற்ற சிறுமி அல்கா அஜீத் -ன் சாஸ்திரிய சங்கீதத்தில் உள்ள தேர்ச்சியை அவர் பாடிய ( கொஞ்சும் சலங்கை திரைப்படத்தில், பிண்ணனி பாடகர் ஜானகி அவர்களால் பாடப்பட்ட) சிங்கார வேலனே தேவா" என்ற பாடல் ஒன்றின் மூலமே தெரிந்து கொள்ளலாம். அவர் திறமையை கண்டு ஆனந்த பட்டு எழுந்து நின்று பல பிரபல் பாடகர்கள் கைதட்டி ரசித்ததை காணுங்கள். நாமும் அச்சிறுமியை பாராட்டுவோம்!
Saturday, June 26, 2010

" ஆப்பு வைக்கனுமா ஆப்பு?" - பி.எஸ்.என்.எல் - க்கு ஆப்பு வச்ச கதை

பிராட்பேண்ட் அறிமுகப்படுத்திய பொழுது  BSNL  CHENNNAI  TELEPHONES ஒரு புதிய திட்டத்தை அறிவித்தது. அதாவது, பிராட்பாண்ட் இண்டெர்நெட் இணைப்பு பெறுபவர்களுக்கு, மாதாந்திர தொலைபேசி கட்டணம் கிடையாது. ஒரு அழைப்புக்கு 1 ரூபாய் செலுத்தினால் போதும் என்பதுதான் திட்டம். எனவே இத்திட்டத்தின் கீழ் பிராட்பேண்ட்க்கு விண்ணப்பித்தேன். விண்ணப்ப படிவத்தில், இணப்பு தொலைபேசி கருவியுடனா?, உட்புற வயரிங்குடனா? என கேட்கப்பட்டிருந்தது. தொலைபேசி கட்டணம்=250 ரூபாய், வயரிங் =500 ரூபாய்.  எனக்கு இரண்டுமே தேவையில்லை என்பதை படிவத்தில் குறிப்பிட்டு விட்டேன். ஆக இணைப்பு கட்டணமாக ரூபாய் 50 மட்டுமே நான் செலுத்தினால் போதும்.


பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை ஸெராக்ஸ் எடுத்து விட்டு, வின்ணப்பத்துடன், டெப்பாசிட் தொகைக்கான பாங்க் டிராப்டையும் இணைத்து அவர்கள் அலுவ்லகத்தில் கொடுத்து விட்டேன். பத்து பதினைந்து நாட்கள் கழித்து எக்சேஞ்சிலிருந்து ஜூனியர் என்ஜினீயர், லைன் மேன் உட்பட ஒரு பெரிய பட்டாளமே, கையில் வயர், புதிய தொலைபேசி கருவியுடன் வந்தது.என் வீட்டிற்கு பக்கத்திலேயே போஸ்ட்டும், டி.பி யும் இருந்ததால் அதில் வயரை இணைத்து, என் வீட்டின் ஜன்னல் வழியாக இணைப்பை கொண்டு வந்து, அதில் தொலைபேசி கருவியை இணைத்து செக் பண்ணினர்.


ஏற்கனவே, நான் ஒரு தொலைபேசி இணைப்பு வைத்திருந்த காரணத்தால், நான் சம்திங் கொடுக்கும் வழக்கம் எனக்கு கிடையாது என்பது அவர்களுக்கு தெரியும். எனவே அவர்கள் கிளம்பி விட்டார்கள். தொலைபேசி கருவியை அவர்கள் எடுக்கவில்லை. நான் தொலைபேசி கருவி, மற்றும்  உட்புற வயரிங்  இல்லாமல்தான் இனைப்பு வேண்டும் என விண்ணப்பித்துள்ளேன். எனவே  தொலைபேசி கருவியை  எடுத்துக்கொள்ளுங்கள்  என  ஜே. இ. யிடம் கூறினேன். அவரோ, தனக்கு  தொலைபேசி இணைப்பு கொடுக்குமாறு  ஆடர் வந்துள்ளது. அதன்படி இணைப்பு கொடுத்துவிட்டேன் என்றார்.   உடனே டி.ஜி.எம் அலுவலகத்தை தொடர்பு கொண்ட பொழுது, எக்சேஞ்சுக்கு வேறு ஆடர் அனுப்புவதாகவும், அதன் பின் அவர்கள் வந்து தொலைபேசியை எடுத்துக்கொள்வார்கள் என கூறிவிட்டனர்.


அதன் பின்பு பல நாட்களாகியும், தொலைபேசியை எடுக்க வரவே இல்லை. எனவே டி.ஜி.எம் அலுவலகத்திற்கு பேக்ஸ் மூலம் புகார் செய்தேன். அதற்கும் பலனில்லை. மொத்த தொகை ரூபாய் 800 க்கும் சேர்த்து பில் வந்தது. ஆப்பு வைக்காம இவங்க வழிக்கு வர மாட்டாங்கன்னு முடிவு செய்து, 750 ரூபாயை குறைவு செய்து திருத்தப்பட்ட பில் வழங்க வேண்டும் என்றும், அவ்விதம் வழங்கப்படாவிட்டால், இணைப்பு துண்டிப்பை தவிப்பதற்காக் பில் தொகை முழுவதும் செலுத்தப்படும் என்றும் அதனால் எனக்கு ஏற்படும் அனைத்து கஷ்ட நஷ்டங்களுக்கும் பி.எஸ்.என்.எல்-லே முழு பொறுப்பு என்றும் நோட்டீஸ் ஒன்றை பேக்ஸ் மூலம் டி.ஜி.எம்-க்கு அனுப்பினேன்.அதன் பின் எக்சேஞ்சிலிருந்து ஆட்கள் வந்து தொலைபேசியை எடுத்து சென்று விட்டனர்.


அதற்கு பின்னும் திருத்தப்பட்ட பில் அனுப்பப்படவில்லை. எனவே பில்படியுள்ள தொகையை செலுத்திவிட்டேன். அதிகப் படியாக என்னிடம் வசூலிக்கப்பட்ட தொகை, அதற்கு பின் அனுப்பட்ட பில்களில் குறைவு செய்யப்படவில்லை. இதற்குள் சுமார் 4-5 மாதங்கள் ஆகிவிட்டது.எனவே  கன்சியூமர் கோர்ட்டில் வழக்கு தொடரப்போவதாக  நோட்டீஸ் அனுப்பினேன்.காலையில் பேக்ஸ்-ஐ பெற்றவர்கள் அன்று மாலையே ரூபாய் 750 க்கு காசோலையை எனக்கு ஸ்பீடு போஸ்ட்டில் அனுப்பி வைத்தனர். மறு நாள் எனக்கு கிடைத்து. உடனே அந்த காசோலையை திருப்பி அனுப்பிவிட்டேன்.


பி.எஸ்.என்.எல் தனது  குறைபாடான செவைக்காக ரூபாய் 5000 நஸ்ட ஈடு வழங்குவதுடன், நீதிமன்ற செலவு மற்றும்  அதிகப்படியாக வசூலிக்கப்பட்ட தொகையையும் வழங்கவேண்டும் என மாவட்ட கன்சியூமர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.  

வழக்கறிஞர்  இல்லாமல் நானே வழககை தமிழில் தாக்கல்  செய்து  வாதாடினேன். என் தரப்பு நியாயத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம்,  அதிகப்படியாக வசுலிக்கப்பட்ட தொகை ரூபாய் 750-ஐ திருப்பி அளிக்க வேண்டும் எனவும், நஷ்ட ஈடாக ரூபாய் 2000, மற்றும்  நீதிமன்ற செலவாக ரூபாய்  500 வழங்கவேண்டும் என தீர்ப்பு வழங்கியது. 

இந்த தீர்ப்பை எதிர்த்து பி.எஸ்.என்.எல் மேல் முறையீடு செய்தது. அதிலும் எனக்கே வெற்றி!  அதன் பின் வாடிக்கையாளர்கள பிரச்சனையை தீர்ப்பதில் சில முன்னேற்றம் காணப்பட்டது. என்னை பொறுத்தவரை, என் பெயரை சொன்னாலே  சீப் ஜெனரல் மேனேஜர் அலுவலகம் கூட அலறும். காரணம் இந்த ஒரு வழக்கு மட்டுமல்ல. இதோடு சேர்த்து மொத்தம் மூன்று வழக்குகளை ஒரே சமயத்தில் போட்டு அவர்களை திக்கு முக்காட வைத்தது தான். இது ஒரு ரிக்கார்டு பிரேக்! 

Friday, June 25, 2010

எனக்கு நீங்கள் உதவ முடியுமா?

பல பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு வரும் நான், ஒரு விஷயத்தில் தீர்வு காண முடியாமல் திண்டாடுகிறேன். வலையுலக நண்பர்கள் உதவுவீர்கள் என நம்புகிறேன்.

னது பதிவுகளை தமிழ்மணத்தில் இணைத்தால், பதிவின் தலைப்பும் பதிவின் முதல் சில வரிகளும் மட்டுமே வருகிறது.


ஆனால் பலருடைய பதிவுகள் தமிழ் மணத்தில் சேர்க்கப்படும் பொழுது கீழ் கண்டவாறு  வ்ருகிறது.   

"ஒரு முத்தத்தின் விலை சில சிகரெட்டுகள் 
வினையூக்கி / சிறுகதை / அனுபவம் 
கைபேசி இரவு ஒன்பதரை என காட்டியது.மதுபான விடுதிகளில் "
                                                                                    
இவ்விதம் வர, நான் என்ன செய்ய வேண்டும்? உதவ முடியுமா?
என் இமெயில்: thiravianatarajan@gmail.com.

சொன்னா கேளுங்க. பிரச்சனை பண்ணாதீங்க!

"அது என்னங்க ஏண்டயே பிரச்சனை பண்றீங்க! எல்லார்ட்டையும் கொஞ்சுத வேலையை ஏன் கிட்ட வைச்சுக்கிடாதீங்க! நானே வம்ப வில கொடுட்த்துவாங்கிறவன்."

என்னாது நீங்க செண்ட்ரல் கவர்மெண்ட் ஆபீஸ்ரா? உங்கள ஒன்னும் செய்ய்ய முடியாதா? பொத்திட்டு போகனுமா?"

சொந்த செலவுல ஆப்பு வாங்கனுமுன்னு நீங்க விருப்பப்பட்டா நான் என்ன செய்ய? உங்களுக்கு ஏழ்ரை நாட்டு சனி ரிக்கார்டு போட்டு  டான்ஸ் ஆடுது. இந்தா வந்துட்டேன்."

இப்படிதாங்க அவனவன் தானா வந்து ஏண்ட ஆப்பு வாங்கிட்டு போறான். கேட்டா நான் வம்பனு சொல்றாங்க! நீங்க்களே சொல்லுங்க. அவனுகளா வந்தா நான் என்பண்றது?

Thursday, June 24, 2010

கல்விக்கடன் மாணவர்களின் உரிமை - ஒரு விளக்கம்.

வ்ணக்கம் வலையுலக நண்பர்களே! எனது முந்தைய பதிவுக்கு பின்னூட்டம் போட்டதுடன் வாக்கும் போட்டு என்னை ஊக்கப்படுத்தியுள்ள உங்கள் அனைவருக்கும் நன்றி. அந்த பதிவை பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை 686 ஆகும் . 21 வாக்குகள் , புதிதாக என்னை பின் தொடரும்  நண்பர்கள் 12. என்னால் நம்பவே முடியவில்லை! இதை எனக்கோ அல்லது எனது எழுத்துக்கோ கிடைத்த அங்கீகாரமாக நான் கருதவில்லை. என்னுடன் சேர்ந்து அநீதியை எதிர்ப்பவர்களின் எண்ணிக்கையாகவே நினைக்கிறேன். மீண்டும் நன்றி!.

 மத்திய அரசின் கல்விக்கடன் திட்டம்.

திட்டத்தின் நோக்கம் :  பொருளாதார நிலைய்ல் பின் தங்கியுள்ளவர்கள் என்ற காரணத்திற்காக, எந்த ஒரு மாணவனுக்கும் அல்லது மாணவிக்கும் உயர் கல்வி மறுக்கப்படக்கூடாது. அவர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற்காக  கொண்டு வரப்பட்டதே இத்திட்டம்.

வங்கிகளின் பங்கு ( ROLE ) :  எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அதை அரசு நேரடியாக மேற்கொள்ள முடியாது. எனவே இத்திட்டம்  அரசு வங்கிகளின் மூலம் செயல் படுத்தப்படுகிறது. இத்திட்டத்தை பொறுத்த வரையில் வங்கிகள் தாமாக நிபந்தனைகளை  விதிக்கவோ அல்லது  தன் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப  செயல்படவோ முடியாது.  மொத்தத்தில்  கல்விக்கடனை பொறுத்த வரையில், அதை செயல்படுத்தும் வெறும் ஏஜெண்ட் தான்  அரசு வங்கிகள்.
கடன் உதவி பெற தேவையான தகுதிகள் : 

1. மாணவர்  அல்லது மாணவி  இந்திய பிரஜையாக இருக்கவேண்டும்.

2.  தொழில் படிப்பு  ( PROFESSIONAL COURSE) அல்லது  தொழில் நுட்ப படிப்பில் ( TECHNICAL COURSE)  நூளைவுத்தேர்வு மூலமாக சேர்ந்திருக்க வேண்டும். இது வெளிநாடு மற்றும் இந்தியாவில்  கல்வி பயிலும் மாணவர்களுக்கு பொதுவானவை.

3.  இந்தியாவில் கல்வி கற்க 10 லட்சம் ரூபாயும், மெரிட் உள்ளவர்கள் மற்றும் அத்தியாவசிய தேவை உள்ளவர்களுக்கு அதிகபட்சமாக 15 லடசம் ரூபாயும், வெளிநாட்டில் பயிலும் மாணவர்களுக்கு  20 லடசம் ரூபாயும்,  25 லட்சம்  ரூபாயும்  வழங்கப்படும்.

4.  கல்விக்கட்டணம் , தங்கும் விடுதி கட்டணம், தேர்வு கட்டணம், புத்தகங்கள், கருவிகள், கணனி  ஆகியவற்றிற்கு தேவைப்படும் தொகையை மட்டுமே கடனாக பெற இயலும். வெளி நாட்டில் படிப்பவர்கள்  இத்துடன் பயண கட்டணத்தையும் செர்த்துக்கொள்ளலாம்.

5. முன் செலுத்த வேண்டிய தொகை (  MARGIN): 4 லட்சம் வரையான தொகைக்கு  எதுவும் செலுத்த வேண்டியது இல்லை.  அதற்கு மேற்பட்ட தொகைக்கு  இந்தியாவில் கல்வி பயிலுபவர்கள் 5% , வெளிநாட்டில் பயிலுபவர்கள்  15% செலுத்த வேண்டும்.


7. செக்யூரிட்டி ( SECURITY ) :  4 லட்சம் வரையிலான தொகைக்கு  மாண்வருடன் சேர்ந்து பெற்றோரும்  கடனுக்கு விண்ணப்பிக்க வேண்டும். (COOBLIGATION).  4 லட்சத்திற்கு மேல் 7.5 லட்சம் வரை  பெற்றோருடன் பொருத்தமான மூன்றாம் நபர்  ஜாமின் தேவை. 7.5 லட்சத்திற்கு மேல்  கடன் தொகைக்கு தாகுந்தவாறு  சொத்து ஜாமின் தேவை.

7. கடனை திருப்பி அளிக்கவேண்டிய காலம் ( REPAYMENT  PERIOD):  படிப்பு காலம் ( COURSE PERIOD) முடிந்ததிலிருந்து  ஒருவருடம் , அல்லது வேலை பார்க்க ஆரம்பித்ததிலிருந்து ஆறு மாதம். இதில் எது முன்பாக வருகிறதோ அதன்படி.
 
8.  குடும்ப வருமானம் :  இவ்வளவு வருமானம் இருக்கவேண்டும்  என்ற நிபந்தனை எதுவும் இல்லை.

9. மாணவர் வசிக்கும் இடத்திற்கு அருகாமையில் உள்ள வங்கி கிளையில் விண்ணப்பிக்க வேண்டும்.

10. கடனுதவி பெற அங்கிகரிக்கப்பட்ட படிப்புகள் :  இந்தியாவில்  - டிப்ளமோ, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு,  மற்றும்  மின்னனு துறையால் அங்கீகரிக்கப்பட்ட  கணனி படிப்புகள். வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு - Course of study abroad : Job-oriented professional/technical courses offered by reputed universities, MCA,MBA, MS etc.Courses conducted by CIMA - London, CPA in USA etc

11. வயது வரம்பு :   இந்தியாவில் பயிலும் மாணவர்களுக்கு  15 - 30 வயது. வெளிநாட்டில் பயிலும் மாணவர்களுக்கு  18 - 35 வயது.


இவைதான் கல்விக்கடன் பெற தேவையான தகவல்கள். இதில் குறிப்பிடப்பட்டு உள்ள அனைத்து நிபந்தனைகளும் எல்லா வங்கிகளுக்கும் பொதுவான ஒன்று.


முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு, தேவையான ஆவணங்களுடன்  விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்ப படிவங்களை பரிசீலித்து முடிவெடுக்க வங்கிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள  காலக்கெடு -  15 நாட்களிலிருந்து 30 நாட்கள் .

Wednesday, June 23, 2010

வயிறு பத்தித்து எரியுது! சத்தியமா உருப்பட மாட்டீங்க!

நேற்று இரவு ஏஸியாநெட் மலையாள சானலை பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் காட்டப்பட்ட ஒரு செய்தி தான் என்னுடைய இந்த ஆக்ரோஷத்திற்கு காரணம்.

 21-06-2010 அன்று, கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில், கோடன்சேரிக்கு அருகாமையில் உள்ள கல்லந்தாராமேடு என்ற இடத்தில், ஒரு பி.எஸ்.சி நர்ஸிங் மாணவியின் தந்தை  விஷத்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார். அதிர்ஷ்டவசமாக அவர் உடனடியாக கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு,  காப்பாற்றப்பட்டுள்ளார். தற்கொலை முயற்சிக்கு காரணம், அவர் மகள் படிப்புக்காக,  கோடன்சேரியில் உள்ள ஸ்டேட் பாங் ஆப் இந்தியாவின் கிளையில் கல்விக்கடனுக்காக விண்ணப்பிருந்தார். பல மாதங்களுக்கு பின் எவ்வித காரணமும்  காரணமும் காட்டாமல்  அவர் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

கல்விக்கடன் பெற சட்டப்படியான தகுதிகள் இருந்தாலும் அவர்களுக்கு வழங்கப்படுவது இல்லை. கழிந்த ஆண்டு கேரளாவில், சலவை தொழிலாளியின் ஒரே பெண்ணும், பொறியியல் மாணவியுமாகிய  ஒரு இளைஞி, அரசு அலுவலக பல மாடி கட்டிடத்திலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாள். புண்ணியத்தை தேடிக்கொண்ட வங்கி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி. இப்படி பல சம்பவங்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது!

இது போன்ற சம்பவங்களை கேள்விப்படும் போது என்னை அறியாமலேயே எனக்கு ஆத்திரமும் எரிச்சலும் ஏற்படுகிறது. இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள இயலவில்லை.

மக்கள் வரிப்பணத்தை மூலதனமாக கொண்டு, அரசின் கட்டுப்பாட்டில் இயங்குபவை தான் அரசு வங்கிகள். அரசு என்ன சொல்ல்கிறதோ அதை செய்யவேண்டியது மட்டுமே வங்கிகலின் வேலை.

இன்னன்ன தகுதிகள் உள்ள மாணவ, மாணவியருக்கு உயர் கல்விக்கு கடன் வழங்குங்கள் என திட்டத்தை கொடுத்திருக்கும்பொழுது, எப்படி இவர்கள் மறுக்க முடியும்?

அரசாங்கத்தை மீறி செயல் பட இவர்களுக்கு சூப்பர் பவர் எங்கிருந்து வந்தது?

தகுதியுடைய மாணவர்களுக்கு கடன் ஏன் மறுக்க வேண்டும்? இவரகள் அப்பன் வீட்டு பணத்திலிருந்தா கடன் கேட்கிறார்கள்?

வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாதவர்களுக்கு கடனை கொடுத்தால், அதற்கு நாங்கள் அல்லவா பொறுப்பு என்று இவர்கள் சொல்லவும் முடியாது. காரணம் அரசால் விதி முறைகள் வகுக்கப்பட்டு, வங்கியால் செயல் படுத்தப்படும் திட்டமாகும். எனவே வங்கிகளுக்கு பொறுப்பு கிடையாது.

இல்லாத ஒரு அதிகாரம் தனக்கு இருப்பதாக நினைத்துக்கொண்டு ஏன் இந்த ஆட்டம் ஆடுகிறீர்கள்?

மக்கள் வரிப்பணத்தை சம்பளமாக வாங்கும் நீங்கள், உங்கள் கடமையை சரியாக செய்ய துப்பில்லை. இந்த லட்ச்சனத்தில்,
 
" ஊதிய உயர்வு கொடு"

' வெளிநாட்டு வங்கிளுக்கு அனுமதி கொடுக்காதே. மக்கள் பாதிக்க படுவார்கள்"

என்று வருடந்தோறும் தீபாவளி, பொங்கல், கிருஸ்துமஸ் எனபது போல, ஆண்டுக்கு இரண்டு மூன்று முறை வேலை நிறுத்தம்!

வெட்க்கமா இல்லை?

பாதிக்கப்பட்ட மாணவர்கள் உயர் நீதிமன்றத்தை அணுகிய பொழுது, வங்கியின் செயல்பாட்டை கண்டித்து கிழி கிழி என்று கிழித்தும் இவர்களுக்கு அறிவு வரவில்லை!

வலையுலக நண்பர்களே! கழிந்த மூன்று வருடங்களாக பதிக்கப்படும் மாணவர்களுக்காக சட்ட ரீதியாக குரல் கொடுத்து அவர்கள் பிரச்சனையை தீர்த்து வருகிறேன். கழிந்த வருடம், சேலம் வட்டத்தில் செயல்படும்  வங்கி ஒன்று, தன் கிளைகளில் பெறப்பட்ட நூற்றுக்கணக்கான விண்ணப்பங்களை, நிராகரித்த விஷயம் என் பார்வைக்கு வந்தது. அதில் ஒரு மாணவர் எனக்கு தெரிந்தவரின் உறவினர். அவரிடமிருந்து தகவல்களை பெற்று,  ரிஸர்வ் வங்கிக்கும், சம்பந்தப்பட்ட வங்கியின் தலைமை அலுவலகத்திற்கும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எதற்காக விணணப்பங்கள் நிராகரிக்கப்பட்டூள்ளது என்பதற்கான காரணத்தை கேட்டேன். அத்துடன் ஏன் பொது நல வழக்கு தொடரக் கூடாது என நோட்டீசும் அனுப்பினேன்.

அதன் பின் நிராகரிக்கப்பட்ட விணப்பங்களுக்கு ( சட்டப்படி தகுதியுள்ள) கடன் வழங்கப்பட்டது.

எனவே வலையுலக நன்பர்களே! தயவு செய்து, உங்கள் பகுதியில் உள்ள தகுதியான மாணவ மாணவியர்களுக்கு, கடனுதவி பெறுவதில் பிரச்சனை இருக்குமானால், எனக்கு தெரியப்படுத்துங்கள்.

அவர்களுக்காக சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு, சட்ட ரீதியான ஆப்பு வைக்க தயாராகவுள்ளேன்.

அடுத்த பதிவில் கல்விக்கடன் பற்றிய முழு தகவல்களையும் தருகிறேன்.

நன்றி


Tuesday, June 22, 2010

நான் ரெம்ப மோசமானவன்! கோபம் வந்தா அசிங்கம் அசிங்கமா திட்டிப்புடுவேன். ஜாக்கிரதை!

யோவ் நீங்கள் எல்லாம் இந்த ஜென்மத்துல திருந்தவே மாட்டீங்களா? அது என்னையா கோர்ட்டில செருப்படி வாங்கினாலும் சுரணையே இல்லியே. ஏன்? வருஷா வருஷம்  ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில ஏன் இந்த கொலை வெறி வந்து, பாவம் மாணவ மாணவியர் ரத்தத்தை குடிக்கிறீங்க? அடங்கி போங்க. இல்லேனா என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது.

என்ன நண்பர்களே, தலையுமில்லாம வாலுமில்லாம புலம்பறானேன்னு பாக்கிறீங்களா என் நிலமை. என்ன செய்ய? இன்னும் புரியலையா? கொஞ்ச நேரம் காத்திருங்க விலா வாரியா சொல்றேன். என்ன?

Monday, June 21, 2010

நீங்களும் ருசியாக சமைக்கலாம்! - ஆண்களுக்கான சமையல் பகுதி - 2

ருசியான மணம் நிறந்த தேநீர் தயாரிப்பது - செய்  முறை விளக்கம்

வணக்கம் நண்பர்களே! இந்த பதிவில் சுவை, மணம் நிறைந்த தேநீர் போடுவது எப்படி என்பதை விளக்கப்போகிறேன்.

தேவையான பொருட்கள்;

1.  தேயிலை ( டீ தூள்)
2. சர்க்கரை ( சீனி)
3. ஏலக்காய் & கிராம்பு
4. காய வைக்கப்பட்ட கமலா ஆரஞ்சு தோல்

காய்ச்சப்பட்ட பால் ஒன்றரை ( 1 1/2 ) கப் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் பாதி கப் தண்ணீர் சேர்த்துக்கொள்ளுங்கள். இப்பொழுது இரண்டு கப் தண்ணீர் சேர்க்கப்பட்ட பால் இருக்கும். அதை பாத்திரத்தில் ஊற்றில், அடுப்பில் வைத்து சூடாக்குங்கள். இப்பொழுது ஒரு ஸ்பூன் தேயிலையை அதில் போடுங்கள். நன்றாக கொதித்து, பால் மேல் நோக்கி வர ஆரம்ம்பிக்கும் பொழுது, அடுப்பை அணைத்து விடுங்கள். ஒரு தட்டால் பாத்திரத்தை நன்றாக மூடி விடுங்கள்.

ஐந்து  நிமிடங்கள் கழித்து தட்டை எடுத்து விட்டு, பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி விடுங்கள். தேயிலை சல்லடை ( டீ பில்டர்) மூலம் வடிகட்டுங்கள். ஒரு கப் டீ க்கு ஒன்றரை ஸ்பூன் என்ற கணக்கில் 3 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கொள்ளுங்கள். இப்பொழுது சாதா டீ ரெடி!

உங்களுக்கு ஏலக்காய் டீ வேண்டும் என்றால், பால் கொதித்தவுடன் ஒரு ஏலக்காய மற்றும் ஒரு கிராம்பை  நன்றாக சிதைத்து அதில் போடுங்கள்.பின் தட்டால் மூடி விட்டு ஐந்து நிமிடம் கழித்து அதை வடி கட்டுங்கள். பின் மேலே குறிப்பிட்டுள்ள படி சர்க்கரையை சேர்த்துக்கொள்ளுங்கள். இப்பொழுது ஏலக்காய் டீ ரெடி!

உங்களுக்கு ஆரஞ்சு மணம் கொண்ட டீ வேண்டு மென்றால்  காய வைக்கப்பட்ட கமலா ஆரஞ்சு தோலில் சிறிதளவு எடுத்து அதை கையால் தூளாக்கி  ஏலக்காய்க்கு பதிலாக போட்டு விடுங்கள். இப்பொழுது  ஆரஞ்சு டீ ரெடி!

போட்டு குடித்து விட்டு உங்கள் அபிப்பிராயத்தை சொல்லுங்கள்.
நன்றி.

Sunday, June 20, 2010

ஆஸ் திரேலிய புகைப்படங்கள் - பகுதி 1

2009 ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடை பெற்ற  V8 சூப்பர் கார் பந்தயத்தின் போது  எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு

இனி என்ன கவலை?
இனி என்ன கவலை எங்களுக்கு? செம்மொழி  சோறு போடாதா என்ன!

Saturday, June 19, 2010

நீங்களும் ருசியாக சமைக்கலாம்! - ஆண்களுக்கான சமையல் பகுதி - (பெண்களுக்கு அனுமதி இல்லை)

கழிந்த ஒருமாத காலமாக, என்னை தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலம் நூற்றுக்கணக்கான  ஆண்பதிவர்கள் தொடர்பு கொண்டு வருகின்றனர். ஆண்பதிவர்களில் வயது, அனுபவம் இவற்றில் சீனியர் (?) என்பதால் அவர்களுக்கு நான் உதவ வேண்டுமாம். என்ன செய்ய? நான் பாரி மன்னன் பரம்பரையில் வந்தவனாயிற்றே!

குமார் ( உண்மை பெயர் மாற்றப்பட்டுள்ளது ) என்ற பதிவர் கூறுவதை கேளுங்கள். " அய்யா, எனக்கு திருமணம் ஆகி மூன்று மாதம் ஆகிறது. இப்பொழுது சென்னைக்கு குடித்தனம் வந்து விட்டோம். என் மனைவி போடும் காப்பி, நாயர் கடையில் டீ கிளாஸை கழுவி கீழே கொட்டுவார்களே, அதைவிட கேவலமாக இருக்கும். வேறு வழியில்லையே என்று குடித்து விடுவேன். இந்த லட்சனத்தில் "காப்பி எப்படி?" என்று அவள் பெருமையாக கேட்கும் பொழுது  சூப்பர் என   சி.பி. ஐ. மாதிரி சர்ட்டிபிகேட் வேற கொடுப்பேன். இதிலிருந்து மீள ஏதாவது வழி சொல்லுங்களேன்."

நண்பரே,  விதி யாரை விட்டது என மனதை தேற்றிக்கொள்ளுங்கள். இதற்கு ஒரே வழி நீங்கள் சுவையான காப்பி போட கற்றுக்கொள்வதுதான். தரமான காப்பியை நீங்கள் தயாரித்து உங்கள் மனைவிக்கு கொடுங்கள். அதை ருசிபார்த்த பின் அவர் தன் தவறை உணர்ந்து, நல்ல காப்பியை போட முயற்சிக்கலாம். அதே நேரத்தில் இன்னொரு ஆபத்தும் உண்டு. ஆகா! நன்றாக காப்பி போடுகிறீர்கள். இனி நீங்களே போடுங்கள் என கழன்று கொள்ளவும் வாய்ப்பு உண்டு. அப்படி ஒரு நிலை ஏற்பட்டாலும் சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளுங்கள். கழனி தண்ணி போன்ற காப்பியை குடிப்பதை காட்டிலும் காப்பி போடுவது மேல் அல்லவா?

 காப்பி போடுவது எப்படி? - செய்முறை விளக்கம்.

தேவைப்படும் பொருட்கள்:
1.  பால்
2. காப்பித்தூள்.
3. சர்க்கரை ( சீனி)

முதலில் பால் பாக்கட்டை குளிர்சாதன பெட்டியிலிருந்து வெளியே எடுத்து வைத்து விடுங்கள். அது ரூம் டெம்பரேச்சருக்கு வர 10 அல்லது 15 நிமிடங்கள் ஆகும். அதுவரை காத்திருங்கள். குளிந்த நிலையில் இருக்கும் பாலை அப்படியே காய்ச்சினால், குளிர் நிலையிலிருந்து திடீர் என வெப்ப நிலைக்கு மாறும் பொழுது பால் கெட்டுவிட வாய்ப்பு உண்டு. மேலும் குளிர் நிலையிலிருந்து கொதி நிலைக்கு வர அதிக நேரம் எடுக்கும் இதனால் காஸ் அதிகமாக செலவாகும்.

பால் பாக்கட்டை எடுத்து அதன் ஒரு முனையில் சிறிதாக ஓட்டை ஏற்படும் வகையில் கத்தரியால் வெட்டுங்கள். பின் நன்காக கழுவப்பட்ட மில்க் குக்கர் அல்லது பாத்திரத்தில் ஊற்றுங்கள். பி. கு. குக்கர் என்றால் அது விசில் அடிப்பதற்கு தேவையான நீர் உள்ளதா என்பதை, குக்கரை குலுக்கி பார்த்து விட்டு, அதன் பின் பாலை ஊற்றுங்கள். பால் கவ்ரினுள் அரை தம்ளர் தண்ணீரை ஊற்றி நன்றாக குலுக்கி அந்த தண்ணீரையும் பாலுடன் சேர்த்து விடுங்கள்.

கேஸ் அடுப்பை பற்ற வையுங்கள். அதில் பால் பாத்திரத்தை (அல்லது குக்கர்) வையுங்கள். அடுப்பில் பாத்திரம் சரியாக அமர்ந்திருக்கிறதா என்பதை ஊர்ஜிதம் செய்து கொள்ளுங்கள். அதற்குள், காப்பி பொடி, சர்க்கரை, டம்ளர், காப்பி போட பாத்திரம் இவற்றை எடுத்து ரெடியாக வைத்துக்கொள்ளுங்கள். பால் காய்ச்சுவது பாத்திரத்தில் என்றால், பாத்திரத்தையே கவனித்து கொண்டு இருங்கள். பால் சூடு ஏற ஏற சிறிது சிறிதாக முட்டை முட்டையாக (பபிள்ஸ்)
தோன்ற ஆரம்பிக்கும். அதன் பின் வேகமாக மேல் நோக்கிவரும். அதவது இப்பொழுது பால் காய்ந்து விட்டது. கொதி நிலைக்கு வந்து விட்டது என அர்த்தம்.  குக்கராக இருந்தால் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. விசில் அடித்து விட்டால், பால காய்ந்து விட்டது என அர்த்தம்.உடனே அடுப்பை அணைத்து விடுங்கள்.

இப்பொழுது அடுப்பிலிருந்து, பாலை கீழே இறக்கி விடுங்கள். ஒரு தம்ளர் காப்பி என்றால், முக்கால் தம்ளர் பாலையும், கால் தம்ளர் தண்ணீரையும் சேர்த்து காப்பி பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்குங்கள். பின் அதை இறக்கி வைத்து விட்டு. அதில் ஒன்றரை ஸ்பூன் சர்க்கரையையும், ஒரு அரை ஸ்பூன் காப்பித்தூளையும் ( சன்ரைஸ், புரு) சேர்த்து நன்றாக கலக்குங்கள். இப்பொழுது மணம், சுவை நிறைந்த காப்பி ரெடி!

போடுவதுதான் போடுகிறீர்கள் இரண்டு தம்ளர் ஆக போட்டு உங்கள் மனைவிக்கும் கொடுங்கள்!.

பல மணங்களில் ருசியான டீ போடுவது பற்றிய பதிவில் உங்களை சந்திக்கிறேன்

Friday, June 18, 2010

எனது பார்வையில் இது தான்!

என் பார்வையில் மதம் என்பது இதுதான்!


எந்த சட்டை போட்டாலும் மனுஷன் மனுஷன் தானே?  இது தான் என் பாலிசி. நீங்க என்ன சொல்ல்றீங்க?

Thursday, June 17, 2010

எங்க ஊருக்கு வாரீகளா?

குற்றாலம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்ய தொடங்கிவிட்டதால், குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்ட தொடங்கிவிட்டது. அதாவது சீஸன் ஆரம்பித்து விட்டது. 
Tuesday, June 15, 2010

சட்டம் - பாஸ்போர்ட் - கேள்வி, பதில்.1

பாஸ்போர்ட் சம்பந்தமான்  கேள்வி - பதில் 

கேள்வி:1. என் பெயர் நந்தகுமார். நான் ஆப்கானில் ஒரு அமெரிக்க நிறுவனத்தில் பணிபுரிகிறேன்.அய்யா என்னுடைய பாஸ் போர்ட் முன்பக்க அட்டையில் உள்ள lamination முழுவதுமாக வெளியே வந்துவிட்டது.ஆனால் என்னுடைய பாஸ்போர்டில் உள்ள என்னுடைய படம் மற்றும் அனைத்து விவரங்களும் சேதாரமாகாமல் உள்ளன. இதன் காரணமாக நான் மீண்டும் இந்தியா செல்லும் போது ஏதும் பிரச்னை வருமா? நான் இந்தியா சென்று புதிய பாஸ்போர்ட் எடுக்க உத்தேசித்து உள்ளேன் .அல்லது நான் இங்கேயே எடுக்க வேண்டுமா? ஆனால் என்னுடைய பாஸ்போர்ட் போட்டோ ஸ்கேன் பாஸ்போர்ட்.அதனால் பிரச்சினை இல்லை என்று நான் நினைக்கிறன். அல்லது நான் ஏதும் முனஎச்சரிக்கை ஏதும் எடுக்க வேண்டுமா எனக்கு நல்ல ஆலோசனை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 

பதில்:  உங்கள் பாஸ்போட்டில் உள்ள எழுத்துக்கள் (வார்த்தைகள்) அழியாமல் இருக்கும் பட்சத்தில் கவலைப்பட தேவையில்லை.அது செல்லுபடியாகும் காலம் இன்னும் எத்தனை வருடங்கள் என்பதை பார்த்துக்கொள்ளுங்கள். பாஸ்போர்ட்டின் முன் பக்க லாமினேஷன்  முழுவதுமாக வெளியே வந்து விட்டது என்பதற்காக நீங்கள் அதை மாற்ற விரும்பினால், டூப்பிளிகேட் பாஸ்போர்ட்க்கு விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான கட்டணம் ,
1. Duplicate Passport (36 Pages) in lieu of lost, damaged, or stolen passport  - Rs.2,500 /-
2. Duplicate Passport (60 Pages) in lieu of lost, damaged, or stolen passport - Rs.3,000 /-
டூப்ளிகேட் பாஸ்போர்ட்க்கு நீங்கள் ஆப்கான் அல்லது இந்தியாவில் விண்ணப்பிக்கலாம். இது தங்கள் வசதியை பொருத்தது.

கேள்வி 2.  
Anonymous said... Hi.. I need a clarification. I have my passport issued from Chennai. Right now for the last one year I work in Delhi. I will be back to TN in another 4 months.

My passport has expired..
1. Where should I apply? In chennai or in Delhi?
2. Do I need to go personally to apply?
3. Can I apply saying I am still in TN? 


பதில்:  நீங்கள் டெல்லி அல்லது சென்னையில் பாஸ்போர்ட் புதுப்பிக்க விண்னப்பிக்கலாம். அதற்கான படிவம். Application Form No.1 (EAP-1).காலாவதியாகி 1 வருடம் ஆகியிருப்பதால், போலீஸ் வெரிபிகேஷன் தேவைப்படலாம்.

நேரடியாக சென்றால் உங்களின் டாக்குமெண்ட்களை சரிபார்த்து விட்டு திருப்பி தந்து விடுவார்கள். நீங்கள் தபாலில் விண்ணப்பித்தால், எல்லாவற்றிற்கும்  கெஸ்டட் (Gazzetted) அதிகாரியால் சான்றளிக்கப்பட்ட இரு பிரதிகளை இணைக்க வேண்டும்.


இத்ற்காக நீங்கள் பாஸ்போர்ட் அலுவலகம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பெரும்பாலான தபால் அலுவலகங்களில் இதற்கான கவுண்டர்கள் உண்டு.


எப்படியும் 1 மாத காலமாகும். சென்னையில் 1 மாதகாலத்திற்கு மேல் தங்கி யிருந்தால், டெல்ல்யில் தற்காலிகமாக வசிப்பதை பற்றி குறிப்பிட வேண்டாம். அவ்வாறு குறிப்பிட்டால் டெல்லி முகவரிக்கான அத்தாட்சி கொடுக்கவேண்டும்


டெல்லியில் விண்ணப்பித்தால், தற்காலிக முகவரிக்கு அத்தாட்சி கொடுக்க வேண்டியிருக்கும். அங்குள்ள காவல் துறை மூலமாக வெரிபிகேஷன் செய்வார்கள்.
 
இதில் எந்த ஊர் வசதியோ அங்கு புதுப்பித்து கொள்ளுங்கள்


நன்றி

 

தகவல் அறியும் உரிமை சட்டம் - RTI Act

சட்டம் என்பது பல தரப்பட்ட விஷயங்களை உள்ளடக்கிய ஒன்று. உதாரணத்துடன் சொல்லப்போனால், மருந்து பாட்டிலில் ஒட்டப்பட்டிருக்கும் லேபிள் மாதிரி. அதில், என்னென்ன மூலப்பொருட்கள் கலந்துள்ளது, அதன் விகிதாச்சாரம், உபயோகப்படுத்தும் முறை, பதுகாப்பு, உற்பத்தி செய்த தேதி மற்று காலாவதியாகும் தேதி, விலை, உற்பத்தியாளர் விபரம் போன்றவை இருக்கும். உபயோகிக்கப்போகும் நமக்கு தேவையானது  உபயோகிக்கும் முறை ( DOSAGE  ) ,  காலாவதியாகாத மருந்தா? என்ற விபரங்கள் மட்டுமே. சட்டத்தில் இருக்கும் எல்லா விபரங்களும் நம்மை போன்றவர்களுக்கு தேவை இல்லாத ஒன்று. எனவே இச்சட்டத்தின் மூலம் என்னென்ன  தகவல்களை யாரிடமிருந்து  எப்படி பெறலாம் என்பதை மட்டும் புரியும் விதத்தில் எளிமையாக கீழே தரப்பட்டுள்ளது.

1.    தகவல்கள் (  Information ) என்றால் என்ன? 

SEC 2.  ( f ) "information" means any material in any form, including records, documents, memos, e-mails, opinions, advices, press releases, circulars, orders, logbooks, contracts, reports, papers, samples, models, data material held in any electronic form and information relating to any private body which can be accessed by a public authority under any other law for the time being in force;
அதாவது, கிட்டத்தட்ட நமக்கு தேவையான எல்லா தகவல்களையும் இச்ச்ட்டப்படி பெற முடியும்.

2.  யாரிடமிருந்தெல்லாம் பெறமுடியும்? 

பொது அதிகார அமைப்பு  எனப்படும்  PUBLIC AUTHORITY.
எதெல்லாம் பொது அமைப்பு என்ற கேள்வி எழுவது சரியே. சட்டம் என்ன சொல்கிறது?
2. ( h ) "public authority" means any authority or body or institution of self- government established or constituted— (a) by or under the Constitution; (b) by any other law made by Parliament; (c) by any other law made by State Legislature; (d) by notification issued or order made by the appropriate Government, and includes any— (i) body owned, controlled or substantially financed; (ii) non-Government organisation substantially financed, directly or indirectly by funds provided by the appropriate Government;
அதாவது, அரசு அலுவலகங்கள், அரசு துறை நிறுவனங்கள், அரசின் நியுதவி பெறும் அமைப்புகள், மற்றும் அரசு கட்டுப்பாட்டில் உள்ளவைகள்.

3.  யாரிடம் தகவல் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும்? 

 மத்திய அரசு மற்றும் மாநில அரசின்  ஒவ்வொரு துறையும்  பொது அதிகார அமைப்பு ஆகும்.  இச்சட்டப்படி ஒவ்வொரு அதிகார அமைப்பும் " பொது தகவல் அதிகாரி ( PUBLIC INFORMATION OFFICER)" மற்றும்  " மேல் முறையீட்டு அதிகாரி  ( APPELLATE AUTHORITY )"  களை நியமித்துள்ளது.
உதாரணம் 1   
நீங்கள் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து பல மாதங்க்ளாகியும் வழங்கப் படவில்லை என வைத்துக்கொள்வோம். அது பற்றிய தகவல் அறியவேண்டும். இது மாநில அரசு சம்பந்தப்பட்டது என்பதால், தமிழக அரசின் சிவில் சப்ளை இலாகாவே பொது அதிகார அமைப்பாகும். எனவே இந்த இலாகாவின் பொது தகவல் அதிகாரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். அவர் 30 நாட்களுக்குள் தகவல் தரவேண்டும். அப்படி தரவில்லையெனில், அந்த இலாகாவின் மேல் முறையீட்டு அதிகாரிக்கு மேல் முறையீடு செய்ய வேண்டும். அதன் பின்பும் தகவல் வழங்கப்படவில்லை என்றால் மாநில தகவல் ஆணைய்த்திடம் 2-ம் மேல் முறையீடு செய்ய வேண்டும்.
உதாரணம் :2
அரசுடமை ஆக்கப்பட்ட வங்கியிடமிருந்து தகவல் பெறவேண்டும் என வைத்துக்கொள்வோம். இது மத்திய அரசு சம்பந்தப்பட்டது. வங்கியில் பொது தகவல் அதிகாரி மற்றும் மேல் முறையீட்டு அதிகாரி இருப்பார். அதற்கு மேல் மத்திய தகவல் ஆணையம் உண்டு.

வெப் சைட்டில் சம்பந்தப்பட்ட துறையின் பொது தகவல் அதிகாரி மற்றும் அப்பீலேட் அதாரிட்டி பற்றிய விபரங்களை பார்த்துக்கொள்ளலாம். இத் தகவல்கள்  சம்பந்தப்பட்ட  அலுவலகங்களிலேயே  அறிவிப்பு பலகையில் போடப்பட்டிருக்கும்.

மீதி, அடுத்த பதிவில் ............ 

Monday, June 14, 2010

பாஸ்போர்ட் தொடர்பான விளக்கம்

 பாஸ்போர்ட்டில் எழுத்து பிழை - என்ன செய்ய வேண்டும்?

"சார் நான் இப்போது UAE- ல்.என் மனைவியின் பாஸ்போர்டில் என் பெயரில் எழத்து பிழை உள்ளது அதனால் என் மகனுக்கு பாஸ்போர்ட் எடுப்பதில் சிக்கல் வருமா?என் மனைவியின் பாஸ்போர்ட் மட்டும் வைத்து என் மகனுக்கு விண்ணப்பிக்க முடியமா?அல்லது என் பாஸ்போர்டும் தேவைபடுமா?" என நண்பர் FAIDH விளக்கம் கேட்டு பின்னூட்டம் போட்டிருந்தார். அவருக்கு கூறும் ஆலோசனையே இப்பதிவு. அவர் பின்னூட்டத்திலிருந்து அவர் குடும்பம், அதாவது மனைவியும், மகனும் இந்தியாவில் உள்ளனர் என தெரிகிறது.

1. அவர் தன் மகனுக்கு பாஸ்போர்ட் எடுக்க வேண்டுமானால், மகன் பெயருக்கு தனியாக விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான படிவம்  "Application Form No.1"   -ல் விண்ணப்பிக்க வேண்டும். அதில்  3-வது பக்கத்தில்  வரிசை எண் 16 ஐ பூர்த்தி செய்யும் பொழுது, தாய் தந்தை பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் என்றால் பாஸ்போர்ட் எண் மற்றும் அது வழங்கப்பட்ட நாள், இடம் இவற்றை குறிப்பிடவேண்டும். அல்லது விண்ணப்பித்திருந்தால்,  பைல் எண், நாள், விண்ணப்பித்த அலுவலகம் (இடம்) குறிப்பிடவேண்டும். அவ்வளவுதான். நண்பருடைய மகன் 18 வயதுக்கு உட்ட்பட்டவராக இருந்தால்,  கீழ் கண்டவாறு  ANNNEXURE - H ல் குறிப்பிட்டுள்ளபடி வெள்ளை காகிதத்தில்  தாயாரோ அல்லது தந்தையோ அல்லது லீகல் கார்டியனோ ஒப்புதல் கடிதம் வழங்க வேண்டும்.
ANNEXURE - H

DECLARATION OF APPLICANT PARENT OR GUARDIAN IF PASSPORT IS FOR MINOR: ON PLAIN PAPER
                              I/We affirm that the particulars given above are in respect of (name of the child) …………………………………… son/daughter of Shri. ………………………………………………… and  Shrimati ……………………………………………………… of whom I/we am/are the Parents/Single Parents/Applicant Parent/Guardians. He/She is a Citizen of India. His/Her date of birth/place of Birth is ----------. I/We undertake the entire responsibility for his/her expenses.  I/We solemnly declare that he/she has not lost, surrendered or been deprived of his/her citizenship of India and that the information given in respect of him/her in this application is true.  It is also certified that I/we am/are holding/not holding valid Indian passport(s) and the name of the child mentioned is not included in Passport of either parent.                 
_____________          /                 _________________            OR___________________
Father (Signature)                       Mother (Signature)             Legal Guardian (Signature)

************
அவருடைய மகனுக்கு வழங்கப்படும் பாஸ்போர்ட், விண்ப்பத்துடன் கொடுக்கப்படும் ஆவணங்களின் அடிப்படையிலேயே. எனவே நண்பரின் மனைவி பாஸ் போர்ட்டில், குறிப்பிடப்பட்டுள்ள நண்பரின் பெயரில் உள்ள எழுத்துப்பிழை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வாய்ப்பில்லை.

அவர் மனைவியின் பாஸ்போர்ட் வழங்கப்பட்டவுடனேயே, அந்த எழுத்து பிழை ஏற்பட்டது,பாஸ் போர்ட் அவுவலகத்தின் தவறாக இருக்குமானால் (விண்ணப்பத்தில் பெயரில் எழுத்துப்பிழை இல்லாமல் பூர்த்தி செய்யப்பட்டிருந்தால்) அதை சுட்டிக்காட்டி திருத்தப்பட்ட பாஸ்போர்ட் வழங்குமாறு விண்ணப்பித்து இருக்கலாம் எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டியிருந்திருக்காது. ஆனால் இப்பொழுது அதை சரி செய்ய வேண்டுமானால் மீண்டும் பாஸ்போர்ட் கட்டணத்தொகை ரூ.1000 செலுத்த வேண்டும்.
இந்த தகவல் நண்பருக்கு போதுமானது என நினைக்கிறேன்.

நன்றி
பி. திரவிய நடராஜன்.

Friday, June 11, 2010

புகைப்படம் என்ன சொல்லுகிறது?


மனித நேயத்தை கீழே விட்டுவிட்டு ஆணவம், சுய நலம், ஜாதி மதவெறி இவற்றை தலையில் வைத்து கொண்டாடும் நம் நிலையைத்தான் சுட்டி காட்டுகிறதோ?

சிந்திப்போம்!