Monday, June 28, 2010

இவர்களை அடையாளம் காட்டுகிறேன் - திரவிய நடராஜன்

ஒரு சில மாதங்களுக்கு முன்பு இரவில் நான், என்.டி.டி.வி 24/7 சானலை பார்த்து கொண்டிருந்தேன். அதில் காட்டப்பட்ட ஒரு இஸ்லாமிய தம்பதியரை பற்றிய செய்தி  என் கண்களில் நீரை வரவழைத்து விட்டது. வலை பக்கத்தில் பதிவிட்டு தங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என முடிவு செய்த பொழுது, அவர்கள் எந்த மாநிலத்தை சார்ந்தவர்கள், அவர்கள் பெயர் இதெல்லாம்  எனக்கு நினைவில் வரவில்லை. என்ன செய்ய என்று தலையை பிய்த்து கொண்டிருந்த பொழுது, தம்பி உண்மைதமிழனின் நினைவு வந்தது. அவர் எப்பொழுதும் கூகுல் சர்ச் எஞ்சினை "கூகிள் ஆண்டவர்" என்றுதான் குறிப்பிடுவார். எனக்கும் கூகிளார் நினைவுக்கு வந்து அவரை மனதார வேண்டிக்கொண்டேன். அவரும் இந்த பக்தனின் வேண்டுதலை ஏற்று எனக்கு தேவைப்பட்ட தகவல்களை தந்தார். இனி விஷயத்திற்கு வருவோம்.

அலகாபாத்தை சார்ந்தவர் தி கிரேட் /  தி ஹைனஸ்   குலாம் முகமது   (மதிப்பிற்கு உரிய / மாண்புமிகு என்ற வார்த்தைகள் தகுதியே இல்லா தவர்களை அழைக்க பயன்படுத்தப்படுவதால் நான் இவற்றை இங்கு பயன்படுத்தவில்லை). இவர் காண்டிராக்ட் தொழில் செய்து வருபவர். இவருடைய மனைவியின் பெயர் ரஷிதா பேகம். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் மட்டுமே உண்டு. 

பெண் குழந்தை ஒன்று தங்களுக்கு வேண்டும் என்ற அவாவினால், ஒரு பெண் குழந்தையை தத்து எடுக்க முடிவு செய்தனர். குழந்தையை தேடி கொண்டிருக்கும் பொழுது, பபிதா என்ற இந்து குழந்தையை தேர்வு செய்தனர். இது நடந்தது சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பு. பபிதாவின் தகப்பனார் 1994 ல் இறந்து விட்டார். அதை அடுத்து தாயாரும் நோய்வாய்ப்பட்டு விட்டார். இந் நிலையில், குலாம் முகமதுவும் அவர் மனைவியும் பபிதாவின் தாயாரை சந்தித்து, அவளது சம்மதத்தை பெற்று உடனடியாக தத்து எடுத்து கொண்டனர். அதன் பின் சிறிது காலத்திலேயே பபிதாவின் தாயார் இறந்து விட்டார்.

குலாம் முகமதுவும் ரஷிதா பேகமும் பபிதாவை தாங்கள் பெற்ற குழந்தையாகவே அன்பு செலுத்தி, அவளை இந்துவாகவே வளர்த்து வந்தனர்... ஒரு சில மாதங்களுக்கு முன் இத்தம்பதியினர், பபிதாவிற்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இச்சமயத்தில் தான் அவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது. பபிதாவிற்கு இந்து பையனை தேர்வு செய்வதா? அல்லது இஸ்லாமிய பையனை தேர்வு செய்வதா? என்று. இறுதியில், பபிதா தங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு மதிப்பளித்து இந்து மாப்பிள்ளையையே தேர்வு செய்வது என முடிவு செய்தனர். 

அப்பொழுதான் பிரச்சனையே ஆரம்பித்தது. மாப்பிள்ளை தேடும் படலத்தின் போது, இத்தம்பதியினர் பலருடைய கேள்வி கணைகளை சந்திக்க நேர்ந்தது. ஆறுதல்ளிக்கும் வகையில் ஒரு சில இந்து குடும்பங்கள் குலாம் முகமதுவை பாராட்டியதுடன், தங்கள் குடும்பத்துடன் வந்து, அவர் குடும்பத்தினருடன் இணைந்து இந்த திருமணத்தை நடத்துவதாக கூறி அவரை உற்சாகப்படுத்தினர்.

பராலி ( BARAULI ) என்ற கிராமத்தை சேர்ந்த கங்கா பிரஸாத் யாதவ் என்பவர் பபிதாவை தனது மகன் பப்லு யாதவிற்கு திருமணம் செய்து வைக்க சம்மதித்தார். குலாம் குடும்பத்தினர், இவர் இந்து மதத்தை சார்ந்தவர். திருமணத்தில், எந்த ஒரு மத சம்பிரதாயமும் விட்டு போய்விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்து திருமண ஏற்பாட்டை செய்தனர்.

திருமண மண்டபமோ அல்லது அரங்கமோ எதையும் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யாமல், தங்கள் சொந்த வீட்டிலேயே திருமணத்தை நடத்த முடிவு செய்தனர். திருமண நாளாக 2-10-2009 வெள்ளி கிழமையை தேர்வுசெய்தனர். வினாயக பெருமான் படத்தை போட்டு,  அதில் திரு குலாம் முகமது, திருமதி ரஷிதா பேகம் தம்பதியினரின் புத்திரி திருவளர் செல்வி. பபிதா என குறிப்பிட்டு இரண்டாயிரம்  அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டன, குலாமின் உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் அழைப்பு அனுப்பபட்டன.

2-10-2009 அன்று வெள்ளிக்கிழமை சுப முகூர்த்த நேரத்தில், புரோகிதர்கள் வேதம் ஓத, குலாம் முகமதுவும், ரஷிதா பேகமும்  பபிதாவை தாரை வார்த்து கொடுக்க, மணமகன்  தாலிகட்ட திருமணம் இனிதே நடந்து முடிந்தது. பபிதாவின் புகுந்த வீட்டிற்கு அவள் செல்லும் பொழுது கொடுத்தனுப்ப வேண்டிய சீதன பொருட்ககளை அந்த பெற்றோர் பலமுறை சரி பார்த்தது வந்திருந்தவர்களை ஆச்சரியப்பட வைத்தது.

மகளை மணமகன் வீட்டிற்கு வழியனுப்பும் பொழுது கண்ணீர் மல்க நின்ற அந்த தம்பதியினரை உறவினர் ஆறுதல் கூறி சமாதானப்படுத்தினர். அவரின் பெருந்தன்மையை பாராட்டிய உறவினர் மற்றும் நண்பர்களிடம் குலாம் கூறிய வார்த்தைகள் இவை தான். "நான் என்ன பெரிதாக என் மகளுக்கு செய்து விட்டேன்? எல்லா தகப்பன்களும் காலம் காலமாக செய்து வருவதை தானே என் மகளுக்கு செய்திருக்கிறேன்."  

இவரை போன்றவர்களை அரசியல்வாதிகள் நிச்சயமாக பாராட்ட மாட்டார்கள். காரணம்  மத கலவரங்களை உருவாக்கி அதன் மூலம் ஆதாயமடையும் ஈன பிறவிகளாயிற்றே!

மதங்கள் மனித நேயங்களை வளர்ப்பதற்கே என்பதை நடைமுறையில் செயல் படுத்தி காட்டிய திரு குலாம், திருமதி ரஷிதா பேகம் ஆகிய இருவரையும், மற்றும் இவர்களுக்கு உறுதுணையாக இருந்த நண்பர்கள், உறவினர்களையும் மனப்பூர்வமாக பாராட்டுவோம்.

திரு குலாம், திருமதி ரஷிதா பேகம் ஆகிய இருவரும் சகல பாக்கியங்களையும் பெற்று நீண்ட காலம் வாழ , எல்லாம் வல்ல அல்லா வை  நான் பிரார்த்திக்கிறேன்.

வாழ்க மனித நேயமும், மத நல்லிணக்கமும்!.

12 comments:

 1. மதங்கள் மனித நேயங்களை வளர்ப்பதற்கே என்பதை நடைமுறையில் செயல் படுத்தி காட்டிய திரு குலாம், திருமதி ரஷிதா பேகம் ஆகிய இருவரையும், மற்றும் இவர்களுக்கு உறுதுணையாக இருந்த நண்பர்கள், உறவினர்களையும் மனப்பூர்வமாக பாராட்டுவோம்.

  .... வாழ்க மனித நேயமும், மத நல்லிணக்கமும்!. :-)

  ReplyDelete
 2. வாருங்கள் சித்ரா! இது எவ்வளவு சந்தோஷமான விஷயம்.

  ReplyDelete
 3. அவர்களை நினைத்தால் பெருமையாய் இருக்கிறது.
  வாழ்க வளமுடன்

  thx 4 sharing !

  ReplyDelete
 4. உண்மைதான் யூர்கன் க்ருகியர்!

  ReplyDelete
 5. "ம‌த‌ங்க‌ள் ம‌னித‌ உற‌வின் பால‌ங்க‌ள்" என்ப‌தை ம‌ற‌ந்து விட்டோம்... இந்த‌ த‌ம்ப‌தியின் செய‌ல் அள‌பெரிய‌து... வாழ்த்துக்க‌ள். ப‌கிர்விற்கு ந‌ன்றி..

  ReplyDelete
 6. உண்மையில் ஒரு அற்புதமான விஷயத்தை கூறி இருக்கிறீர்கள். இது போன்ற நல்ல விசயங்களை பெரிதாக வெளியிடும் பழக்கம் தான் நம் பத்திரிக்கைகளுக்கு இல்லையே. மத நோய் பிடித்தவர்களுக்கு, இந்த தம்பதிகளின் வாழ்க்கை ஒரு மருந்தாக இருக்கட்டும்.

  //இவரை போன்றவர்களை அரசியல்வாதிகள் நிச்சயமாக பாராட்ட மாட்டார்கள்.//

  சந்தனத்திற்கு சாக்கடைகளின் பாராட்டு எதற்கு.
  அனைவரும் இவர்களது வாழ்கையை ஒரு பாடமாக எடுத்து கொள்வது அவசியம்.

  //திரு குலாம், திருமதி ரஷிதா பேகம் ஆகிய இருவரும் சகல பாக்கியங்களையும் பெற்று நீண்ட காலம் வாழ , எல்லாம் வல்ல அல்லா வை நான் பிரார்த்திக்கிறேன்

  உங்களுடன் இணைந்து நானும் அவர்களுக்காக இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  M. Edmand Newman
  Kanyakumari

  ReplyDelete
 7. வருகைக்கு நன்றி திரு எட்மண்ட் நியூமேன் !

  ReplyDelete
 8. வருகைக்கு நன்றி நாடோடி

  ReplyDelete
 9. நல்ல செய்தி.

  ReplyDelete
 10. fine. we av to appreciate them

  ReplyDelete
 11. நல்ல விஷயத்தை திரட்டிகளுக்கு தரலாமே அன்னும் அதிகமானவர்கள் படிப்பார்கள்.

  ReplyDelete
 12. வாருங்கள் நீச்சல்காரன்! தமிழ்மணத்தில் இணைதுள்ளேனே! ஆனால் யாரும் படிப்பதாக் தெரியவில்லை

  ReplyDelete