Saturday, October 30, 2010

கிள்ளுருண்டை - சமையல் பகுதி.

கிள்ளுருண்டை என்ற பெயரையும் நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். இது எங்க ஆச்சி (திருநெல்வேலி மாவட்டத்தில் பாட்டியை ஆச்சி என்றுதான் சொல்லுவோம்) காலத்திலிருந்து எங்க வீட்டில் செய்யப்படும் பலகாரமாகும். நான் சிறுவனாக இருந்த பொழுது பள்ளிக்கூடத்திலிருந்து மாலையில் வீட்டுக்கு வந்தவுடன் காப்பியுடன் சாப்பிட பண்டம் எதுவும் இல்லை என்றால் 
இன்ஸ்டண்ட் ஆக என் அச்சி இதை செய்து தருவாள். இது 50 வருடத்திற்கு முந்தய கதை. அது இப்பொழுதும் தொடருகிறது.  ஆச்சி, அதற்கு பின்  அம்மா ,இப்பொழுது மனைவி. அப்பொழுதெல்லாம் மதியம் 3 மணி அளவில்தான் தோசைக்கு அரைப்பார்கள்.


அந்தக்காலத்தில் கிரைண்டர், மிக்ஸி எல்லாம் கிடையாதே. ஆட்டுரலில் தான் அரைப்பார்கள். அரிசி, உளுத்தம் பருப்பு இவற்றை தனித்தனியே ஊற வைத்திருப்பார்கள். காரணம் உளுந்து மாவு நன்றாக அரைபட்டிருந்தால்தான் இட்டலி/ தோசை மிருதுவாக இருக்கும். அதே நேரம் அரிசியை நன்றாக அரைக்க கூடாது. ரஃப் ஆக இருக்க வேண்டும். இல்லை என்றால் இட்டலி/தோசை பசைபோல் இருக்கும். ஒவ்வொன்றையும் தனித்தனியே தேவைப்படும் பக்குவத்தில் அரைக்கவேண்டும். இப்பொழுதெல்லாம் பெரும்பாலும் அரிசியையும் உளுந்தையும் ஒன்றாகவே ஊற வைத்து அரைக்கிறார்கள்!.

தயார் செய்யும் முறை

தோசைக்கு உளுந்தை முதலில் அரைக்கும் பொழுது தண்ணிர் குறைவாக சேர்த்து அரைக்கவேண்டும். நன்றாக அரைபட்ட பின் ஒரு கை அளவு ( தேவையான  அளவு) மாவை எடுத்துக்கொள்ள வேண்டும்.

அரிசியையும் இதைப்பொலவே தண்ணீர் சேர்த்து அரைத்து பிரு பிரு என அரைபட்டவுடன் ஒரு கை அளவு  (தேவையான அளவு) மாவை எடுத்துக்கொள்ள வேண்டும்.

தேவைப்படும் பொருட்கள்.

1. உளுந்து மாவு   -  1 கப்.
2. அரிசி மாவு  - 1 கப்.
3. உப்பு  - தேவையான அளவு.
4. பச்சைமிளகாய் - 1
5. சிறிய வெங்காயம் - 4
6. கறிவேப்பிலை - தேவைப்பட்டால்.

அரிசி மாவையும் உளுந்து மாவையும் ஒன்றாக போட்டு நன்கு பிசையவும். அதில் உப்பையும் சேர்த்துக்கொள்ளவும். பின் பச்சைமிளகாய், வெங்காயத்தை சிறியதாக வெட்டிக்கொள்ளவும். விரும்பினால் ஒன்றிரண்டு கறிவேப்பிலை இலையையும் கிள்ளி எடுத்துக்கொள்ளவும். இவை அனைத்தையும் மாவுடன் நன்கு கலந்து கொள்ளவும்.

அடுப்பில் இருப்பு சட்டியை (கடாய்) வைத்து, அப்பளம் பொறிக்க எந்த அளவு எண்ணை ஊற்றுவோமோ அந்த அளவிற்கு ரீபைண்ட் ஆயிலை ஊற்றி சுடாக்கவும். எண்ணை நன்கு கொதித்தவுடன், உழுந்தவடை போட எப்படி கையால் மாவை எடுப்போமோ அதுபோல கையால் எடுத்து, சிறு சிறு உருண்டைகளாக  கொதிக்கும் எண்ணையில் போட்டு வேகவைக்க வேண்டும். அவ்வளவுதான். எழுத்து வடிவில் இது பெரியதாக இருந்தாலும் நொடியில் இதை எளிதாக செய்யலாம்.

இந்த பதிவிற்காக புகைப்படம் எடுக்க கிள்ளுருண்டை நேற்று செய்தோம்.

இதை செய்து சாப்பிட்டுவிட்டு உங்கள் அபிப்பிராயங்களை சொல்லுங்கள்.பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு!

"பல கோடி ரூபாய் ஊழல் செய்பவர்களை விட்டு விட்டு, அற்ப தொகையை வைத்திருப்பவர்களை பிடித்து பாடாய்படுத்துகிறது அரசு" என சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.


 ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டத்தை சேர்ந்தவர் அனந்த ராமுலு. கூட்டுறவுத் துறையில் ஆடிட்டராக பணியாற்றி வந்தார். 1996ம் ஆண்டு இவரது வீட்டை ஊழல் தடுப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தி, இரண்டு லட்சத்து 63 ஆயிரம் ரூபாயை கைப்பற்றினர். வருவாய்க்கு அதிகமாக இவர் சொத்து சேர்த்ததாக கைது செய்யப்பட்டார். மூன்றாண்டு சிறை தண்டனையும், இவர் மனைவி பெயரில் உள்ள இரண்டு வீடுகளை பறிமுதல் செய்து, அந்த வீட்டை விற்று பணத்தை அரசு கருவூலத்தில் சேர்க்கும் படி கீழ் கோர்ட் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து ராமுலு ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், ராமுலுக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை ஓராண்டாக குறைத்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ராமுலு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் மார்கண்டேய கட்ஜு, ஞான சுதாமிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. "நாட்டில் கோடி கோடியாக சுருட்டும் முதலைகளையும், திமிங்கலங்களை எல்லாம் விட்டு விடுகின்றனர். அவர்கள் சுதந்திரமாக உலாவி கொண்டிருக்கின்றனர். இரண்டு லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் வைத்திருந்ததாகவும் இந்த பணம் அவர் வருவாய்க்கு அதிகமாக சேர்த்த சொத்து எனக்கூறி ராமுலு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சிறிய தொகை வைத்திருந்ததற்காக ஒருவர் கைது செய்யப்பட்டால், நாட்டில் உள்ள எல்லா அரசு அதிகாரிகளையும் கைது செய்ய வேண்டியிருக்கும்' எனக்கூறி ராமுலு மீதான லஞ்ச குற்றச்சாட்டையும், ஓராண்டு சிறை தண்டனையும் தள்ளுபடி செய்தனர் நீதிபதிகள். 
நீதிபதிகள் என்ன வெளிநாட்டில் வசித்துக்கொண்டு, அங்கிருந்து நீதிமன்றத்திற்கு வருபவர்களா? இங்கு நடப்பது எதுவும் தெரியாமலிருக்க?  இங்குள்ள லட்சனம்தான் அவர்களுக்கு நன்கு தெரியுமே! அதான் இப்படி போட்டு கிழித்திருக்கிறார்கள்.

Thursday, October 28, 2010

மசாலா காராமணி - பெண் பதிவர்களுக்கான பதிவு.

பயறு வகைகள் மிகவும் சத்து நிறைந்த ஒன்றாகும். தற்காலம் நவ நாகரீக உணவு முறையில் அவை பெரும்பாலும் தவிர்க்கப்பட்டு வருகிறது. பயறு வகைகளில் காராமணி அல்லது பெரும்பயறு -ஐ கொண்டு செய்யப்படும் மசாலா காராமணியின் செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இது கேரளாவில் " பயறு கறி" என கூறுவார்கள்.


  
தேவையான பொருட்கள்

1. காராமணி ( சிகப்பு)    -  1 கப்.
2. தேங்காய் பூ   -  1/4 கப்.
3. சிறிய வெங்காயம்    -  3
  ( சாம்பார் வெங்காயம்)
4. இஞ்சி   - 1 சிறிய துண்டு.
5. பூண்டு   -  2 பல் ( flakes)
6. பச்சை மிளகாய் - 1
7. மஞ்சள் பொடி - 1/2 டீ ஸ்பூன்.
8. மிளகாய் தூள் -  1/2 டீ ஸ்பூன்.
9. எண்ணை  - 1 டீ ஸ்பூன்.
10. கறி வேப்பிலை.
11. உப்பு - தேவையானது.

செய்முறை

காராமணியை நன்றாக சுத்தம் செய்துவிட்டு 1 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். அதன் பின் தண்ணீரை கொட்டிவிட்டு, காராமணியை குக்கரினுள் தேவையான தண்ணீரை சேர்த்து அதன் பின் சிறிது ( தேவையானது) உப்பை போட்டு வேகவைக்கவும். பின் இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு இவற்றை அரைத்துக்கொள்ளவும். சிறிய வெங்காயத்தை சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். வானலி அல்லது பேன் -ஐ அடுப்பில் வைத்து எண்ணையை ஊற்றி சூடு செய்யவும். அரைத்த இஞ்சி, பச்சமிளகாய், பூண்டு, வெட்டப்பட்ட வெங்காயம் இவற்றை அதில் போட்டு வதக்கவும். அதில் மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, தேங்காய் பூ இவற்ரையும் போட்டு வதக்கவும். பிறகு குக்கரில் வேகவைத்த காராமணியை அதில் போட்டு  கிளறி விடவும். இப்பொழுது மசாலா காராமணி ரெடி!.

Tuesday, October 26, 2010

டெஸ்டிங்

இன்று காலையில் தமிழ் மணத்தில் இணைத்த பதிவை காணோம்! தகவல் கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும்

நான் எடுத்த குறும்படம்

Monday, October 25, 2010

சாண்டில்யனின் கடல் புறா - மலரும் நினைவுகள்!

சாண்டில்யன் அவர்களின் சரித்திர நாவல் குமுதம் வாரப்பத்திரிகையில்  தொடராக வெளிவந்தது 1965-ல் அல்லது 1964 இறுதியில் என நினைக்கிறேன். அப்பொழுது நான் 9-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். எங்க வீட்டில் என் அண்ணன் மூத்தவன். எனக்கும் அவனுக்கும் 8 வயது வித்தியாசம். அடுத்து என் அக்கா. அவளுக்கும் எனக்கும் 3 வயது வித்தியாசம். நான் தான் கடைக்குட்டி. கடைக்கு போவது இது மாதிரி வேலையெல்லம் எனக்கு தான். ரெம்ப சந்தோஷமா செய்வேன்.நான் தான் பஸ்டாண்டில் இருக்கும் பேப்பர் கடைக்கு போய் வாங்கி வருவேன். மாலையில்  5-6 மணி வாக்கில் வரும். ஆனால் என்ன கிழமை என்பது நினைவில்லை. அனேகமாக வெள்ளிக்கிழமை என நினைக்கிறேன்.அப்பொழுது குமுதத்தின் விலை 25 காசுகள் தான். நம்ப முடியலையா? சந்தேகம் வேண்டாம் இந்த படத்தை பாருங்கள்!.கீழ் பக்கம் அதன் பிரசுர தேதியும், விலையும் போட்டிருக்குது.


 எங்க வீட்டிலிருந்து பஸ்டாண்டுக்கு நடந்து போக 15 நிமிஷம் ஆகும். வேக வேகமா போய் வாங்கிவிட்டு,  கடல்புறா தொடரை படித்துக்கொண்டே ஆடிஅசைந்து  நடந்து வீட்டுக்கு வருவேன். அதுக்குள்ளாக கடல்புறாவை படித்து முடித்துவிடுவேன். வீட்டுக்கு வந்தால்  குமுதம் உடனடியாக படிக்க கிடைக்காது. முதலில் எங்க அம்மா, அதன் பின் என் அண்ணன் என சீனியாரிட்டி கிரமத்தில் தான் கிடைக்கும். சனி, ஞாயிற்று கிழமையில் தான் என் டர்ன் வரும். யாரு பொறுமையா இருக்கிறது? அதான் இந்த குயூக்தி!.

20-25 இதழ்கள் சேர்ந்தவுடன், லீவு நாளில் உக்கார்ந்து, அதில் தொடர் வந்துள்ள பேப்பர்களை எல்லாம் புத்தகத்திலிருந்து கிழித்து எடுத்து இதழ் வாரியா அடுக்கி கட்டி வைத்துவிடுவேன். இதர தாழ்களை மட்டும் பேப்பர்காரனிடம் போட தனியாக வைத்துவிடுவேன். தொடர் முடிந்த பின்னோ அல்லது ஒரு பாகம் முடிந்த வுடன், அதை நானே பைண்டிங் செய்வேன். இது நானாக கத்துக்கிட்டது. பைண்டிங் அட்டையில் அந்த தொடரின் முதல் இதழ் அட்டை படத்தை ஒட்டிவிடுவேன். எப்படி நம்ம வேலை?

இப்படி பைண்டிங் செய்த, குமுதத்தில் வந்த கடல் புறா, யவணரானி ஆகியவைகள் இன்றும் என்னிடம் உள்ளது. மாதம் ஒரு முறையாவது இரண்டையும் படிப்பேன். கீழேயுள்ள படம் கடல் புறா முதல் பாகத்தின் முதல் அத்தியாயம்.கடல் புறா மொத்தம் மூன்று பாகங்கள். அதை நான்கு புத்தகங்களாக பைண்டிங் செய்துள்ளேன்.


எனக்கு அப்பப்ப கொஞ்சம் கொஞமா படித்தா, கதை படித்த மாதிரி இருக்காது. அதுனால, ராத்திரி 10 மணிக்கு கடல் புறாவை எடுத்து முதல் அத்தியாயத்தை படிக்க ஆரம்பித்தால், 3 அத்தியாயங்களையும் ஒரே மூச்சில் படித்துவிட்டுதான் தூங்குவேன். எப்படியும் இரவு 3-4 மணி ஆகிவிடும். 

சரி வேலை வெட்டி இல்லாம இருந்தால் இப்படி படிக்கலாம்ன்னு நீங்க முனுமுனுக்கிறது எனக்கு கேக்கத்தான் செய்ய்து. என்ன செய்ய? பழக்க தோஷம்!

இந்த பதிவுக்காக ப்த்தகத்தை எடுத்து போட்டோ எடுத்தப்பவே கண் உறுத்திச்சு. அனேகமா இன்னைக்கு ராத்திரி சிவராத்திரி தான்!

மீண்டும் சந்திப்போம்!


Sunday, October 24, 2010

யாராவது காப்பாத்துங்களேன்

இன்னைக்கு காலையிலிருந்து நான் பயர் பாக்ஸ் பிரவுசரை ஓபன் செய்தால் "USE INTERNET EXPLORER " I DNT HATE MOZILLA BUT USE IE OR ELSE"  என வருகிறது. என்ன செய்யலாம். சொல்லுங்கள்!

திரவிய நடராஜன்

Saturday, October 23, 2010

கொண்டை கடலை சுண்டல் - செய்து பாருங்கள்

கொண்டை கடலை சுண்டல்
தேவையானவை:

வெள்ளை கொண்டை கடலை - 1 கப்
காய்ந்த மிளகாய் - 3
எண்ணெய் - ஒன்றரை டேபிள் ஸ்பூன்
கடுகு -அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்துமல்லி - சிறிது
நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
துருவிய தேங்காய் - 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
பொடியாக நறுக்கிய மாங்காய் - கால் கப்
பொடியாக நறுக்கிய கேரட் - கால் கப்

செய்முறை:

முதல்நாள் இரவே வெள்ளை கடலையை நீரில் ஊறவைத்து விடவேண்டும். பின் மறுநாள் நன்றாகக் கழுவி குக்கரில் சிறிது உப்பு சேர்த்து கடலையை வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். தண்ணீரை வடித்துக்கொள்ளவும். பின் பச்சை மிளகாய், இஞ்சி, தேங்காய் துருவல் இவைகளை கரகரப்பாக அரைத்து வைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாள், பெருங்காயம் ஆகியவற்றைத் தாளித்து, வேகவைத்த கொண்டை கடலையை அதில் போடவும். சில நிமிடங்கள் வதக்கவும். பின்னர் சிறிது உப்பு, அரைத்த மசாலா சேர்த்து கலந்து கொள்ளவும். நறுக்கிய கேரட், மாங்காய், கொத்துமல்லி கறிவேப்பிலை ஆகியவற்றை தூவி இறக்கவேண்டும். கேரட் மாங்காய் கலந்த கலர்ஃபுல்லான சுண்டல் ரெடி.


உங்கள் வீடு, நிலம் உங்களுக்கு சொந்தமில்லை !

நீங்கள் கஷ்டப்பட்டு சேமித்த பணத்தில் வாங்கிய வீடு, நிலம் இவற்றை உங்கள் இஷ்டப்படி நெடுங்காலம் வைத்திருந்து அனுபவிக்கும், சட்ட ரீதியான அடிப்படை உரிமை உங்களுக்கு கிடையாது!. இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா?

தெரிந்திருக்க வாய்ப்பே கிடையாது. சட்டங்களை இயற்றும் பாராளுமன்றம், சட்ட சபை இவற்றின் உறுப்பினர்களுக்கே பெரும்பாலும் இவை தெரியாது. பிறகு எப்படி சாமானியனுக்கு தெரிந்திருக்கும்? உண்மை இதுதான்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் சொத்து உரிமை (Right to Property) என்பது இந்தியனின் அடிப்படை உரிமையாக (Fundamental Right) இருந்தது. அதன்படி பொது தேவைக்காக மட்டுமே அரசு, நில ஆர்ஜித சட்டப்படி தேவைப்படும் நிலத்தை கையகப்படுத்த முடியும். பொது தேவை என்பது, ரயில் பாதை அமைத்தல், சாலைகள், அரசு மருத்துவ மனை போன்ற எல்லா மக்களுக்கும் பயன்படும் விஷயங்கள் மட்டுமே.

எனவே, நிலத்தை கையகப்படுத்தும் பொழுது பாதிப்படையும் நில உரிமையாளர்கள், பெரும்பாலும் எவ்வித ஆட்சேபணையின்றி நிலத்தை கொடுத்துவிட்டு அதற்கான நஷ்ட ஈடு தொகையை பெறுவார்கள். அல்லது அதிகமாக நஷ்ட ஈடு கேட்பார்கள்.

இந்த நிலை 1978 க்கு முன்பு வரை இருந்தது. அதன் பின் மத்திய அரசு, இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 44 வது சட்டதிருத்தத்தின் மூலம்,  அடிப்படை உரிமையாக இருந்த சொத்து உரிமையை ரத்து செய்தது. அதன் படி அரசு விரும்பினால் எந்த ஒரு திட்டத்திற்காகவும் நிலத்தை கையகப்படுத்தலாம். என்ன கொடுமை!

நாட்டை அடமானம் வைத்து உலகவங்கியில் கடன் வாங்க ஆரம்பித்தார்கள். உலக வங்கியின் அடிப்படி நோக்கமே, வளரும் நாடுகளுக்கு கடனுதவி அளித்து, அவற்றை வளர்ந்த நாடுகளின் உற்பத்தி கேந்திரமாகவும், சந்தையாகவும் மாற்றுவது தான்.

அதற்கு ஏற்ப இந்திய அரசும் தாராளமய கொள்கைக்கு கதவை திறந்தது. அந்நிய முதலீடு என்ற பெயரில் வெளி நாட்டு கம்பெனிகள் இங்கு தொழில் துவங்க வருகின்றன. அவற்றுக்கு தேவைப்படும் நிலங்களை அரசாங்கம் கையகப்படுத்தி, சலுகை விலையில் வழங்குகிறது.

1978-ல் கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தத்தை ரத்து செய்ய கோரும் வழக்கு உச்ச நீதி மன்றத்தில் 2007 ஒரு சமூக நல அமைப்பால் தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி கபாடியா, ராதாகிருஷ்னன் அடங்கிய பென்ச்  ஒரு சில வாரங்களுக்கு முன் இந்த வழக்கை தள்ளுபடி செய்து விட்டது.

எனவே எந்த நேரத்திலும் உங்கள் சொத்து உங்களிடமிருந்து சட்ட ரீதியாக பறிக்கப்படலாம். எச்சரிக்கை!
 
 

Friday, October 22, 2010

தனியார் பள்ளிகளுக்கு நிணயிக்கப்பட்டுள்ள கட்டணங்கள்

எனது முந்தைய " விடைபெறுகிறேன்" பதிவிற்கு பின்னூட்டம் இட்டு தங்கள் கருத்தை வழங்கிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

தமிழ் நாடு அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி கோவிந்த ராஜன் கமிட்டி நிணயித்துள்ள கல்விக்கட்டணத்தை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டுள்ள நிலயில் தமிழ் நாட்டிலுள்ள பள்ளிகள் அந்த கட்டணத்தையே வசூலிக்க வேண்டும். அவை பற்றிய விபரங்களை கீழே தந்துள்ளேன்.

அதை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

பி. திரவிய நடராஜன்


Wednesday, October 20, 2010

விடை பெறுகிறேன்!

" ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துவது போல " சமீபகாலமாக நான் பதிவு போட்டு வருகிறேன். 117 பாலோயர்கள் எனக்கு உண்டு. பதிவே போடாத நாளில் கூட நூறுக்கு மேற்பட்டவர்கள் தினமும் எனது பிளாக்கை பார்வையிட்டு செல்லுகிறார்கள். ஆனால் பின்னூட்டங்கள் மட்டும் இல்லை. ஒருவேளை இதற்கு காரணம் எனக்கென்று ஒரு நண்பர்கள் வட்டத்தை உருவாக்கி கொள்ளாதது காரணமாக இருக்கலாம்!.

இதுவரை என் பிளாக்குக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி. யாருமே விரும்பாத பதிவுகளை போடுவதால் யாருக்கும் பிரயோஜனம் இல்லை என்பதால் இனி பதிவு போடுவது இல்லை என முடிவு செய்துள்ளேன்.

மிக்க நன்றி!. விடைபெறுகிறேன்.

திரவிய நடராஜன்.

ஊழலுக்கு மரியாதை!

காங்கிரஸ் கட்சி ஆட்சி ஊழலுக்கு மரியாதை செய்யும் அவலம் இது. சி.வி.சி என அழைக்கபடும் சென்டிரல் விஜிலியன்ஸ் கமிஷனின் தலைவராக பி. ஜே. தாமஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் நியமனம் விதிமுறைகளை மீறியது என்பது மட்டுமல்ல, முழுக்க முழுக்க காங்கிரஸ் தங்கள் ஊழலை மூடி மறைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சியாகும்.

யார் இந்த பி.ஜே. தாமஸ்?  விரிவாக பார்ப்போம்.

1992-ல் இவர் கேரளாவில் செயலாளராக பணிபுரிந்த பொழுது, சிங்கப்பூர் நிறுவனம் மூலமாக கேரள அரசு பாமாயில் இறக்குமதி செய்ததில் பெரும் ஊழல் நடந்தது. அப்பொழுது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. கருணாகரன் முதலமைச்சராக இருந்தார். இந்த ஊழல் வழக்கில் குற்றவாளிகள் பட்டியலில் தாமஸ்சேர்க்கப்பட்டு, வழக்கு நிலுவையில் உள்ளது.

திருவனந்தபுரத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. 2003 ஏப்ரல் 2-ம் தேதி பி.ஜே. தாமஸ் ஆஜராகி, ஜாமின் பெற்றார். இந் நிலையில், இன்னொரு குற்றவாளியான கருணாகரன் உச்சநீதி மன்றத்திலிருந்து, வழக்கை விசாரிக்க தடை உத்தரவை பெற்றார். ஆக வழக்கு நிலுவையில் உள்ளது.

அதன் பின் கேரள அரசின் தலைமை செயலாளராகவும் பணிஆற்றினார். அதன் பின் மத்திய அரசு பணிக்கு சென்றார். 2009 -ல் தொலை தொடர்பு துறைக்கு செயலாளர் ஆனார். அப்பொழுதுதான் சுமார் 70,000 கோடிக்கு 2-G ஸ்பெக்ட்ரம் ஊழல் நடைபெற்றது. சி.வி.சி  இது தொடர்பாக வழக்கு தொடர சி.பி.ஐ க்கு உத்தரவிட்ட பொழுது, கடுமையாக ஆட்சேபித்தவர் இவர். அதாவது ஊழலுக்கு மிகவும் ஆதரவாக இருந்தவர்.

பிரதமர், உள்துறை அமைச்சர், மற்றும் பாராளுமன்ற எதிர் கட்சி தலைவர் ஆகிய மூவரை கொண்ட கமிட்டியில், பி.ஜே.பி  சுஸ்மாஸ் சுவராஜ் இவர் நியமனத்திற்கு கடும் ஆட்சேபணை தெரிவித்தும், மன்மோஹன் சிங்கும்,         சிதம்பரமும் இவரை தேர்வு செய்தனர்.

அரசு கட்டுபாடு இன்றி தன்னிச்சையாக செயல்படும் அதிகாரம் கொண்ட அமைப்பு சி.வி.சி. இதன் தலைவராக தாமஸை நியமித்ததின் மூலமாக காங்கிரஸ்  2-G ஸ்பெக்ட்ரம் ஊழல் மற்றும் காமன் வெல்த் கேம் ஊழல் ஆகிய இரண்டிலிருந்தும் தப்பிக்கும் முயற்சியாகும்.

 CPIL என்ற தன்னார்வ தொண்டு நிறுவனமும் இதர சில அமைப்புகளும்  சேர்ந்து கூட்டாக 17-ம் தேதியன்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளது. அதில் பி.ஜே. தாமஸ் நியமனம் சட்டத்திற்கு புறம்பானது என்றும் எனவே அவர் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மனு விசாரனைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

உலகத்திலேயே, ஊழல் வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜாமின் பெற்று வெளியே இருக்கும் ஒரு நபரை   உழல் கண்காணிப்பு வாரியத்தின் தலைவராக நியமித்த பெருமை காங்கிரஸையே  சேரும்.

பேய்கள் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாஸ்திரங்கள்!Sunday, October 17, 2010

சபாஷ் தமிழா!"மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி' என்ற பெயரில் விலாசம் இல்லாமல் வினியோகிக்கப்படும் நோட்டீசால் பரபரப்பு ஏற்பட்டது.நகர பகுதிகளில் கடந்த இரு தினங்களாக "இன்றைய தமிழகம்' என்ற தலைப்பிட்டு முகவரியில்லாமல் சில மர்ம நபர்களால் நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டு வருகிறது.                                                                                                        

"ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம் ஒருவர் கேட்டார், எதற்காக இத்தனை கஷ்டப்படுகிறாய்?' "நான் கேட்டேன், கஷ்டப்படாமல் எப்படி வாழ்க்கை ஓட்ட முடியும்?' அவர் சிரித்தபடி சொன்னார், "என்னை பார் ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு விட்டு உறங்கி விடுவேன். போரடித்தால் வண்ணத் தொலைக்காட்சியில் திரைப் படம் பார்த்திடுவேன். உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடுவேன். உயர் சிகிச்சை பெற்றிடுவேன், ராஜமரியாதையுடன். நான் யார் தெரியுமா? தமிழ் நாட்டு குடிமகன்!'

"என் நாட்டில் உணவுக்கு அரிசி ஒரு ரூபாய், சமைப்பதற்கு காஸ் அடுப்பு இலவசம், பொழுதுபோக்கிற்கு வண்ணத் தொலைகாட்சி மின்சாரத்துடன் இலவசம். எதற்காக உழைக்க வேண்டும்? மனைவி, பிள்ளை பெற்றால் 6,000 ரூபாய் இலவச சிகிச்சையுடன். குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில். படிப்பு, சீருடை, முட்டையுடன் மதிய உணவும் இலவசம். பாடப்புத்தகம் இலவசம். படிப்பும் இலவசம். பள்ளி செல்ல பஸ் பாஸ் இலவசம். தேவையென்றால் சைக்கிளும் இலவசம். "பெண் பருவமடைந்தால் திருமண உதவித் தொகை 25,000 ரூபாய் இலவசம், ஒரு சவரன் தாலியுடன், திருமண செலவும் இலவசம். தேவையென்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம். மகள் பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும் அவள் வாழ்க்கை யிலும். நான் எதற்கு உழைக்க வேண்டும்!'


"இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு, ஒன்று கையூட்டு, மற்றொன்று பிச்சை. இதில் நீ எந்த வகை? எதை எடுத்து கொள்வது? உழைக்காமல் உண்டு சோம்பேறியாகிறாய். இலவசம் நின்று போனால் உன் நிலை? உழைப்பவர் சேமிப்பை களவாடத் தலைப்படுவாய்? இதே நிலை தொடர்ந்தால், இலவசம் வளர்ந்தால், அமைதிப் பூங்காவாம் தமிழகம், கள்வர் பூமியாய் மாறும் நிலை, இன்னும் வெகு தொலைவில் இல்லை. தமிழா விழித்தெழு, உழைத்திடு, இலவசத்தை வெறுத்திடு, அழித்திடு, தமிழகத்தை தரணியில் உயர்த்திடு. நாளைய தமிழகம் நம் கையில், உடன் பிறப்பே சிந்திப்பாயா? மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி!'                                                                                                                                           
இவ்வாறு அந்த நோட்டீசில் அச்சிடப்பட்டுள்ளது.

நன்றி : தினமலர்.

Saturday, October 16, 2010

பிரதமர் மன்மோகன் சிங்கிடம் ஒரு(கற்பனை) பேட்டி! - திரவிய நடராஜன்

நிருபர்: வணக்கம் பிரதமர் அவர்களே.

பிரதமர்: வணக்கம்.

நிருபர்: தமிழ் வலையுலகம் சார்பாக தங்களை பேட்டி காண வந்துள்ளோம்.

பிரதமர்: நல்லது.

நிருபர்: காமன் வெல்த் கேம் ஊழல் பற்றி விசாரிக்க நீங்கள் ஒரு கமிட்டி அமைத்திருக்கிறீர்களே. அதை பற்றி சொல்லுங்கள்.

பிரதமர்: சோனியா அம்மையார் சொன்னார். நான் அமைத்தேன். அவ்வளவுதான்.

நிருபர்: இந்த கமிட்டி எப்படி செயல்படும்?

பிரதமர்: சி.பி.ஐ போல பாரபடசமில்லாமல் நடு நிலையோடு, நாங்கள் சொல்லுவது போல செயல்படும்.

நிருபர்: எவ்வளவு நாட்களில் விசாரித்து அறிக்கை அளிக்கும்?

பிரதமர்:  நாங்கள் நிறுத்த சொல்லும் வரை விசாரித்துக்கொண்டே இருக்கும்.

நிருபர்: அப்படின்னா?

பிரதமர்:  நாங்க ஆட்சியிலிருக்கும் வரை விசாரித்துக்கொண்டே இருக்கும்.

நிருபர்: ஒருவேளை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டால், என்ன செய்வீர்ர்கள்?

பிரதமர்: ஊழல் செய்வது என்பது ஆட்சியாளர்களின் கொள்கை முடிவு. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது!

நிருபர்: ஒருவேளை இக்கட்டான சூழ் நிலை ஏற்பட்டால்?

பிரதமர்: சுரேஷ் கல்மாடிதான் பலிக்கடா!

நிருபர்: அதாவது  ஐ.பி.எல் கேசில்  ஷரத் பவாரை விட்டுட்டு சசிதரூரை பலிக்கடா ஆக்கினமாதிரி

பிரதமர்: ஆமாம்.

நிருபர்:  அதுக்கு பின்?

பிரதமர்:  காங்கிரஸ் பாலிசி தான்!

நிருபர்: புரியல

பிரதமர்: நீ எல்லாம் ஒரு இந்தியனா இருக்கவே லாயக்கில்லை. சி.பி.ஐ முதலில் வழக்கு பதிவு செய்யும். அதுக்கு பின் முகாந்திரம் இல்லைன்னு அந்தர் பல்டி அடித்து, கல்மாடிக்கு கிளீன் சிட் கொடுத்திடும். முடுஞ்சிது விஷயம்!

நிருபர்: இந்திய பிரதமராக இருந்தும் எவ்வளவு அடக்கமாக பதிலளிக்கிறீர்கள்!

பிரதமர்: யார் சொன்னது நான் பிரதமர் என்று?  காங்கிரஸ் ஆட்சியில் பிரதமர் என்பது சோனியா அம்மையாரின் H M V ரிக்கார்டு மாதிரி. அவங்க குரலை மட்டுமே ஒலிப்பேன்! அவ்வளவுதான்.

நிருபர்: அப்படியா?

பிரதமர்: எனக்கு சாப்பாட்டுக்கு நேரமாகிவிட்டது. அம்மையாரிடம் அனுமதி வாங்கவேண்டும். அதனால இதோடு பேட்டியை முடித்துக்கொள்வோம்.

நிருபர்: நல்லது பிரதமர் அவர்களே!  மீண்டும் சந்திப்போம். நன்றி!Wednesday, October 13, 2010

இவர்கள் அங்கு எதை புடுங்குகிறார்கள்? - சட்டம் நம் கையில்.

கேரளாவை சேர்ந்த பீபி லுமாடா என்ற 40 வயது பெண், மஸ்கட்டில் வேலை பார்த்து வந்தார். அவர் அந்த வேலை வேண்டாம், ஊருக்கு திரும்பி வந்து விடலாம் என முடிவு செய்து, மஸ்கட்டில் தங்கி இருப்பதற்கான தனது விசாவை ரத்து செய்து விட்டு, தோகா வழியாக சென்னை வரும் "கட்டார் ஏர்வேய்ஸ்" விமானத்தில் பயணம் செய்தார். வரும் வழியில் தோகாவில்அவரது பாஸ்போர்ட் தொலைந்து போனதால், அவர் தோகா விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டார். சென்னை வர அனுமதிக்கப்படவில்லை. அதன் பின் விதிமுறைகளின் படி அந்த பெண் வேறு விமானத்தில் மஸ்கட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். அவரிடம் பாஸ்போர்ட் இல்லாததாலும், அவருக்கு, வழங்கப்பட்டிருந்த தங்கும் விசாவை அவர் ரத்து செய்து விட்டபடியாலும் அவரை மஸ்கட்டினுள் நுழைய அதிகாரிகள் அனுமதி மறுத்து விட்டனர்.

இந்நிலையில், விமான நிறுவனம், இந்திய தூதரகத்திற்கு இது பற்றி பலமுறை தகவல் கொடுத்தும், விமான நிலையத்திற்கு வந்து அந்த பெண்ணை சந்திக்கவே இல்லை. விமான நிலைய பகுதிக்குள் (Transit Area) ஹோட்டல் எதுவும் இல்லாததால் விமான நிறுவன அதிகாரிகள், அவருக்கு, உணவு, தண்ணீர், போர்வை போன்றவற்றை வழங்கியுள்ளனர்.

ஐந்து நாட்கள் ஆகியும், பல தடவை  இந்திய தூதரகத்திற்கு தகவல் கொடுத்திருந்தும் தூதரக அதிகாரிகள் யாரும் வரவில்லை. அவருக்கு உடல் நலக்குறைவு  ஏற்பட்டது. உடனடியாக அவரை விமான கம்பெனி விமான நிலையத்திலிருந்த கிளினிக்கிற்கு கொண்டு சென்றனர். அவர் நிலை மேலும் மோசமானதால் அவர் ஆம்புலன்ஸ் மூலமாக "Bin Sina Psychiatric Hospital" -க்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் இறந்து விட்டதாக, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அதிகப்படியான மன அழுத்தத்தின் காரணமாக, ஹார்ட் அட்டாக் ஏற்பட வாய்ப்பு உண்டு எனவும். அதன் காரணமாகவே அவர் இறந்துவிட்டார் என்வும் உயர் நிலை மருத்துவர் கூறியுள்ளார்.

சிறிது கூட வெட்கமோ, மனட்சாட்சியோ இல்லாமல், இந்தியன் அம்பாஸிடர் அனில் வத்வா, பின்பற்றப்படவேண்டிய வழிமுறைகளே காலதாமத்திற்கு காரணம் என செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். அதோடு, அவர் உடல் மரியாதையுடன் அனுப்பி வைக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

மீடியாக்களால் இச்சம்பவம் வெளிப்படுத்தப்பட்ட பின், வெளியுறவுத்துறை அமைச்சர், இதுபற்றி விசாரிக்க உயர் அதிகாரி ஒருவர் அங்கு அனுப்பப்படுவார் என தெரிவித்துள்ளார்.

சில சந்தேகங்கள்.

மக்களுக்காக சட்டங்களும், நடைமுறை விதிகளுமா? அல்லது சட்டங்கள், நடைமுறை விதிகளுக்காக மக்களா?

இதைப்போலவே, சோனியா காந்தி தனது பாஸ் போர்ட்டை தொலைத்துவிட்டு, ஏர்போர்ட்டில் அம்போ என நின்றிருந்தால், இந்த தூதர் நடைமுறை விதியை காரணம் காட்டி இது போலவே, அங்கு சென்று உதவி செய்யாமலிருந்திருப்பாரா? அல்லது தன் மனைவி மக்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருந்தால் இப்படி செய்திருப்பாரா?

வெளி நாட்டில் பாஸ் போர்ட்டை தொலைத்துவிட்டு. விமான நிலையத்தில் அம்போ என பரிதவித்த  ஒர் இந்திய பெண்மணிக்கு, இந்தியா திரும்ப வழி செய்ய முடியாத ஒரு தூதர் தேவையா? 

இதைக்கூட செய்யாமல், தூதரும் அவர் அலுவலக அதிகாரிகளும் மஸ்கட்டில் என்னத்தை அங்கு புடுங்கி கொண்டிருக்கிறார்கள்? உங்களை புல் புடுங்கவா தண்ட சம்பளம் கொடுத்து அங்கே அனுப்பியிருக்கிறோம்?

பேய்கள் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாஸ்திரங்கள்!

அட போங்கடா நீங்களும் உங்கள் சட்டமும்!

Sunday, October 10, 2010

தி கிரேட் காமராஜர் ! - திரவிய நடராஜன்


இதழ் -1

மனிதகுல முன்னேற்றத்திற்க்கு முக்கிய சொத்தாக இருக்கின்ற அறிவுக்கு தமிழகத்தில் அடித்தளமிட்டு, தமிழனின் வாழ்வுக்கு அச்சாரம் இட்டவர் காமராஜ். கல்வியில் சிறந்தது தமிழ் நாடு, அதை தமிழனுக்குச் சிறந்த, உரிய முறையில் அளித்தவர் காமராஜ்.

காமராஜ் பொறுப்பேற்ற ஆண்டில், கல்வி அமைச்சர்  "சட்ட சபை கூற்றுப்படி குறைந்த பட்ச தொடக்க கல்விக்கே 10 - 12 கோடி ரூபாய் புதிய பள்ளிகளுக்கும், 6 கோடி ரூபாய் ஆசிரியர்களுக்கும் தேவை. மாகானத்தின் தற்போதைய நிதி வசதிகளை கொண்டு இவ்வளவு பெரிய நிதிச்சுமையை சமாளிக்க முடியுமா என சபை ஆராய வேண்டும்" என கூறினார். ஆனால் அது மட்டும் பிரச்சனையாக இருக்கவில்லை, பள்ளிக்கு குழந்தைகள் வருகை, வந்தாலும் குறைந்த பட்ச ஆரம்ப கல்வி வரையிலாவது நீடிப்பது, பள்ளி செல்ல குழந்தைகள் செல்ல வேண்டிய நீண்ட தூரம், பள்ளி கூடங்களில் நிலவிய ஏற்றத் தாழ்வுகள் என இப்படியும் பிரச்சனைகள். கல்வி மேம்பாடு என்பது ஒரு இரவில் நடைபெறக் கூடிய செயலல்ல.

1954-ல் தொடக்க கல்வியின் நிலையறிய அரசு ஒரு குழுவை டாக்டர்.அழகப்ப செட்டியார் தலைமையில் நியமித்தது. அக்குழுவின் பரிந்துரைக்குபின் கல்வி திட்டங்கள் தீட்டலாமென்று எண்ணாமல், காமராஜ் முதலமைச்சராக பொறுப்பேற்ற அதே கல்வி ஆண்டில் இயன்ற அளவு தொடக்க பள்ளிகள் திறந்திட அனைத்து முயற்சியுகளும் மேற்கொள்ளப்பட்டன.                                

ராஜாஜி கொண்டுவந்த குலக் கல்வித் திட்டத்தை தற்கொலைத் திட்டமாகக் கருதி கல்லறை கட்டினார், ராஜாஜி இழுத்து மூடிய 6000 ஆரம்பப் பள்ளிகளை மீண்டும் திறக்க உத்தரவு பிறப்பித்தார். பள்ளி தொடங்க நடைமுறைகள் எளிமை படுத்தப்பட்டன (1954- 55). பள்ளிகள் திறப்பதற்கு யாரும் விண்ணப்பம் அளிக்க வேண்டியதில்லை. அதிகாரிகளே ஊர் ஊராக சென்றனர். எங்கெல்லாம் 500 பேர் வாழும் ஊர் உண்டோ அங்கே சென்றனர். ஒரு பள்ளிக்கூடத்திலிருந்து ஒரு மைல் கல் தொலைவில் இன்னொரு பள்ளி வருமாறும் பார்த்துக் கொண்டணர். இந்த இரண்டு அடிப்படை கொண்டு, 500 பேர் வாழும் சிற்றூர் தோறும் பள்ளிகள் நிறுவப்பட்டன. 500, அதற்க்கு மேல் மக்கள்தொகை கொண்ட கிராமங்கள், சிறு நகரங்கள் கணக்கெடுக்கப்பட்டு, 12,967 புதிய பள்ளிகள் நிறுவப்பட்டன. 

500 பேருக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட சிற்றூரிலும் பள்ளிக்கூடம் திறக்க வேண்டும் என காமராஜிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டது. அவர்களின் வேண்டுகோள் நியாயமாக இருந்ததைக் கருதி, 1962- 63-ல் காமராஜ் அரசு 300 மக்கள் தொகை கொண்ட எல்லா சிற்றூரிலும் பள்ளிகள் துவங்கலாமென காமராஜ் அறிவித்து செயல்படுத்தினார். இதனால் தமிழகத்தின் அனைத்து சிற்றூரிலும் பள்ளிக்கூடம் துவங்கப்பட்டது, பள்ளிகளின் எண்ணிக்கை 30,000 தாண்டியது. பதவி ஏற்ற சுமார் 8 ஆண்டுகளில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை காமராஜின் கல்வித்திட்டத்தால் இரு மடங்காகியது.

இந்திய அரசியலமைப்ப்புச் சட்டத்தில் கண்டுள்ளவாறு, தம் ஆளுகையின் கீழிருந்த தமிழ் நாடு மாநிலத்தில் பதினான்கு வயதுடைய பிள்ளைகளுக்குக் கட்டாய இலவச கல்வித் திட்டத்தைச் செயல்படுத்தினார். இந்திய அரசு, கிராமப்புறம் சார்ந்த பகுதிகளில் ஓராசிரியர் பள்ளியை உருவாக்கி தொடக்கக் கல்வியை மேம்படுத்தக் கொண்டுவந்த திட்டத்தைக் காமராஜ் அரசு எற்று உடனே செயல்படுத்தியது. தொடக்கப் பள்ளிகளே இல்லாத பகுதிகளில் இத்திட்டத்தை பயன்படுத்தி, அதிகமான ஓராசிரியர் பள்ளிகளை காமராஜ் அரசு உறுவாக்கியது.

இதனால் 1954- 55-ல் 19 லட்சமாக இருந்த செலவு 1962-ல் இருமடங்காகி 38 லட்சம் ஆனது. இவ்வளவு திட்டங்களை செயல்படுத்தியும் கல்வியின் சிறப்பை உணராத மக்கள், இளம் பிள்ளைகளைக் கல்வி கற்க அனுப்பாததை கண்டு காமராஜ் வருத்தமுற்றார். எனவே கிராமந்தோறும் பிரச்சாரக் கமிட்டிகளை அமைத்துக் குழந்தைகளைப் பள்ளியில் சேரக்க வழி செய்தார்.

தொடக்க கல்வி பயின்ற பிள்ளைகளின் எண்ணிக்கை பெருகியதால், உயர்நிலைப் பள்ளிகளின் தேவை அவசியமானது. ஆகவே, காமராஜ் அரசு மாநிலம் முழுவதும் பரவலாக உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுத்தது. இதன் காரணமாக கிராம பகுதிகளில் பல உயர்நிலைப் பள்ளிகள் தோன்றியது.

உயர்நிலைப் பள்ளி அளவிலேயே, ஏட்டுக் கல்வியோடு தொழி துறை சார்ந்த கல்வியை கற்பிக்க "தொழில்சார் கல்விமுறை" அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதிய கல்வித் திட்டத்தால் உயர்நிலை பள்ளி அளவிலேயே - எஞ்னியரிங், அக்ரிகல்ச்சர், செக்ரடேரியல் கோர்ஸ், டெக்ஸ்டைல் டெக்னாலஜி முதலான தொழில் சார் கல்வி கற்க வழி வகுத்தார். கல்வியை கற்பிக்கத் தரமான ஆசிரியர்கள் தேவை என்பதை உணர்ந்த காமராஜ் அரசு, திறமை மிக்க ஆண்,பெண் ஆசிரியர்களை உருவாக்க ஆசிரியர் பயிற்ச்சிப் பள்ளிகளை அதிகமாக திறக்க முன் வந்தது.

தொடரும்.........

Saturday, October 9, 2010

என் சோக கதை ! - சட்டம் நம் கையில்


தனியொருவனுக்கு
உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்!
பாடி கெடுத்தான் பாரதி.
இங்கே எங்களுக்கு
இருக்க இடமில்லை
உடுக்க உடையில்லை
உண்ண உணவில்லை.
அழித்திடட்டுமா ஜகத்தினை?
இல்லை இல்லை 
இந்த பாரதத்தை!
காமன் வெல்த் கேமாம்!
கோவணத்தை கழற்றி
தலைப்பாகு கட்டலாமா?
சோத்துக்குவழியில்லை
எழுபதாயிரம் கோடியில்
ஊழல் விளையாட்டு!
வீணாபோகும் உணவுப்பொருள்
எங்களுக்கு கொடுக்கலாம்
சொன்னது நீதிமன்றம்
வந்ததே கோபம் பிரதமருக்கு!
வீணாக்குவது அரசு கொள்கையாம்.
காந்தி இங்குவந்தால்
கையில் இருக்காது
கைத்தடி!
அவரும் மாறிவிடுவார்
தீவிரவாதியாக


Friday, October 8, 2010

அறிவு கெட்ட முண்டம்

செங்கோட்டையில் பிறந்து, பள்ளியில் படித்து பின் தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் படித்த நான் அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தை " அறிவு கெட்ட முண்டம்" - இது முட்டாள் என்ற சொல்லுக்கு மாற்று. 1986-ல் நான் சென்னைக்கு வந்து குடியேறும் வரை நெல்லை மாவட்டத்தில்( தூத்துக்குடி உட்பட) புழக்கத்தில் இருந்த ஒரு செல்லமான சொல். இபொழுது அங்கு புழக்கத்தில் உள்ளதா என தெரியவில்லை.

நான் சென்னைக்கு வந்த புதிதில் நடந்த ஒரு சம்பவம் இது. ஒரு நாள் காலை நான் டூ வீலரில் மவுண்ட் ரோடு சென்றிருந்தேன். அப்பொழுது எனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு பியெட் கார், எந்த அறிவிப்புமின்றி சட் என நிற்க, பின்னால் வந்த நான் அதில் மோதி கீழே விழுந்தேன். நல்ல வேளையாக பெரிய காயம் ஒன்றும் ஏற்படவில்லை. காலிலும், கையிலும் சிறு சிராய்ப்புதான். அதற்குள் கூட்டம் கூடிவிட்டது. காரை ஓட்டிவந்தவர் கீழே இறங்கினார்.

சிலர் என் டூவிலரை எடுத்து ரோட்டின் சைடில் நிறுத்த, ஒருவர் என்னை கைத்தாங்கலாக, அங்கு அழைத்து சென்றார். காரை ஓட்டி வந்தவர் என்னிடம்    "அடி ஒன்னும் பலமா படவில்லையே?" என்றார். எனக்கொ பத்திக்கிட்டு வந்தது. " அறிவு கெட்ட முண்டம். வண்டிய நிறுத்த போறேனா, சிக்னல் காட்ட வேண்டியதுதானே?" என, உடம்பில் ஏற்பட்ட சிராய்ப்பினால் ஏற்பட்ட எரிச்சலில் கடுப்பில் இருந்த நான் அவரிடம் கத்தினேன்.

இதற்குள், வந்தவன் போனவன் எல்லாம் பஞ்சாயத்திற்கு தயாரா கூடிட்டானுக. தூரத்தில் நின்று கொண்டிருந்த டிராபிக் மாமாவும் வந்துவிட்டார். அவர் காரை ஓட்டிவந்தவரை, காரை ஓரங்கட்ட சொன்னார். காரும் ஓரங்கட்டப்பட்டு விட்டது. 

அடுத்தகட்ட சடங்குக்கு தயாரான மாமா, டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி, டோக்கன், இன்ஸ்யூரன்ஸ் எல்லாத்தையும் செக் பண்ண ஆரம்பித்தார். நான் வண்டியை பார்த்தேன். வண்டிக்கு எதுவும் ஆகவில்லை. ஸ்டார்ட் ஆனது. ஹெட் லைட் கிளாஸ் மட்டும் உடைந்து போயிருந்தது. காரை ஓட்டிவந்தவர், " கார் இஞ்சின் ஆஃப் ஆகிவிட்டது. நான் நிறுத்தவில்லை. திரும்ப ஸ்டார்ட் பண்றதுக்குள்ள, நீங்க வந்து மோதிட்டீங்க" என கூறிவிட்டு, தான் ஜி.ஹெச்-ல் டாக்டர் என்று கூறி, தன் விசிட்டிங் கார்டை தந்தார்.  காரிலிருந்து, ஆயில்மெண்ட், பிளாஸ்டர் எடுத்துவந்து, என் சிராய்ப்புகளை கிளீன் செய்து, மருந்து போட்டார். அப்பொழுது சிரித்துக்கொண்டே என்னிடம் "உங்களுக்கு திருநெல்வேலியா? என்றார். ஆமாம் எப்படி கண்டுபிடித்தீர்கள் என கேட்டேன். " அறிவு கெட்ட முண்டம் நம்ம ஊரு சொல்லாச்சே" என்றார். உண்மைதான். சென்னையில் திருநெல்வேலிக்காரர்களை தவிர வேறு யாரும் இந்த சொல்லை உபயோகித்து நான் கேட்டதில்லை.

நாங்க ரெண்டுபேரும் ராசியானதை பார்த்த போலீஸ் மாமா, கடுப்பாகி போய், கேஸ் புக் பண்ணனும் என்றார். கார் எஞ்சின் ஆஃப் ஆனா அவர் என்ன செய்வார்? நானும் அதை கவனிக்கல. இதுக்கு கேஸ் எல்லாம் வேண்டாம் என கூற, சரியான சாவு கிராக்கி என முனுமுனுத்துவிட்டு போய்விட்டார்.

இந்த சம்பவம் அடிக்கடி என் நினைவுக்கு வரும்.


Tuesday, October 5, 2010

இவங்களுக்கு ஆப்பு வைச்சாலும் ஏன் அறிவு வரல? - சட்டம் நம் கையில்.

இந்தியாவின் சாபக்கேடு சுயநல, ஊழல்வாதிகள் ஆட்சிக்கு வருவது. அதிலும் கொடுமை மக்களின் வரிப்பணத்தை மூலதனமாக கொண்டு இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடு. குறிப்பாக வங்கிகள்!. இதில் பணிபுரிபவர்களுக்கு , ஏதோ தாங்கள் கொம்பு முளைத்தவர்கள் என்ற நினைப்பு.

சென்னை முகப்பேரில் வசிக்கும் மாணவர் எஸ். மாறன். இவர் தலித் இனத்தை சார்ந்தவர். இவர் சென்னை பூந்தமல்லியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் குடும்பத்தில் முதலாவதாக கல்லூரியில் படிப்பவர். கல்விக்கடன் பற்றி விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், இவர் பெற்றோகள் மிகவும் சிரமப்பட்டு முதலாமாண்டு கல்லூரி கட்டணத்தை செலுத்திவிட்டனர். வேறு வழி இல்லாத நிலையில், கல்விக்கடன் பெற முகப்பேரிலுள்ள ஸ்டேட் பாஃங் ஆஃப் திருவிதாங்கூர் வங்கி கிளையில் இந்த ஆண்டு (2-ம் ஆண்டு) விணப்பித்தார். எவ்விதமான பதிலும் வங்கி தெரிவிக்காததால் இந்த ஆண்டுக்குரிய கல்விக்கட்டணத்தை கடன் வாங்கி கல்லூரியில் செலுத்திவிட்டார். இந் நிலையில் அவரது விண்ணப்பத்தை மேற்படி வங்கி நிராகரித்து விட்டது.

இதை ஆட்சேபித்து இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 
நீதிமன்றத்தில் வங்கி, மெரிட் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே கல்விக்கடன் வழங்கவேண்டும் என்ற " இந்தியன் அசோசியேஷன் ஆஃப் பேங்க்ஸ்" ( ஐ.பி.ஏ) -ன் அறிவுரையின் படி, இந்த மாணவர் தகுதி பெறவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதை கடுமையாக நீதிமன்றம் ஆட்சேபித்தது.

"பரோடா மன்னரின் உதவியை பெற்று படித்து வந்த டாக்டர் அம்பேத்கார் பள்ளியிறுதி தேர்வில் 750 மார்க்கு 287 மார்க் மட்டுமே பெற்று தேர்ச்சி பெற்றார். இருப்பினும் மன்னர் அவருக்கு தனது உதவியை தொடர்ந்ததால், அம்பேத்கார் என்ற சட்ட நிபுணரை நம்மால் பெற முடிந்தது" என குறிப்பிட்ட உயர்நீதிமன்றம்,  நலிவுற்ற நிலையில் உள்ள பிரிவினர் கல்வி பெறவேண்டும் என்ற நோக்கில் கொண்டுவரப்பட்ட இத்திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிப்பவர்களை ஏதாவது ஒரு காரணம் காட்டி புறக்கணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே வங்கி இன்னும் 4 வார காலத்திற்குள் கடன் அனுமதிக்க வேண்டும் எனவும், கல்லூரி நிர்வாகம் மாணவரிடமிருந்து பெற்றுக்கொண்ட 2-ம் ஆண்டுக்குரிய கட்டணத்தை திருப்பி அளிக்கவேண்டும் எனவும் உத்தவிட்டுள்ளது.Friday, October 1, 2010

அறிவிப்பு!

எனது வலைபக்கத்திற்கு வருகை தந்து எனக்கு பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்தும் நண்பர்களை சில காலமாக காணவில்லை. அவர்கள் பற்ரிய தகவல் கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும்.