Wednesday, October 20, 2010

ஊழலுக்கு மரியாதை!

காங்கிரஸ் கட்சி ஆட்சி ஊழலுக்கு மரியாதை செய்யும் அவலம் இது. சி.வி.சி என அழைக்கபடும் சென்டிரல் விஜிலியன்ஸ் கமிஷனின் தலைவராக பி. ஜே. தாமஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.



இவர் நியமனம் விதிமுறைகளை மீறியது என்பது மட்டுமல்ல, முழுக்க முழுக்க காங்கிரஸ் தங்கள் ஊழலை மூடி மறைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சியாகும்.

யார் இந்த பி.ஜே. தாமஸ்?  விரிவாக பார்ப்போம்.

1992-ல் இவர் கேரளாவில் செயலாளராக பணிபுரிந்த பொழுது, சிங்கப்பூர் நிறுவனம் மூலமாக கேரள அரசு பாமாயில் இறக்குமதி செய்ததில் பெரும் ஊழல் நடந்தது. அப்பொழுது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. கருணாகரன் முதலமைச்சராக இருந்தார். இந்த ஊழல் வழக்கில் குற்றவாளிகள் பட்டியலில் தாமஸ்சேர்க்கப்பட்டு, வழக்கு நிலுவையில் உள்ளது.

திருவனந்தபுரத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. 2003 ஏப்ரல் 2-ம் தேதி பி.ஜே. தாமஸ் ஆஜராகி, ஜாமின் பெற்றார். இந் நிலையில், இன்னொரு குற்றவாளியான கருணாகரன் உச்சநீதி மன்றத்திலிருந்து, வழக்கை விசாரிக்க தடை உத்தரவை பெற்றார். ஆக வழக்கு நிலுவையில் உள்ளது.

அதன் பின் கேரள அரசின் தலைமை செயலாளராகவும் பணிஆற்றினார். அதன் பின் மத்திய அரசு பணிக்கு சென்றார். 2009 -ல் தொலை தொடர்பு துறைக்கு செயலாளர் ஆனார். அப்பொழுதுதான் சுமார் 70,000 கோடிக்கு 2-G ஸ்பெக்ட்ரம் ஊழல் நடைபெற்றது. சி.வி.சி  இது தொடர்பாக வழக்கு தொடர சி.பி.ஐ க்கு உத்தரவிட்ட பொழுது, கடுமையாக ஆட்சேபித்தவர் இவர். அதாவது ஊழலுக்கு மிகவும் ஆதரவாக இருந்தவர்.

பிரதமர், உள்துறை அமைச்சர், மற்றும் பாராளுமன்ற எதிர் கட்சி தலைவர் ஆகிய மூவரை கொண்ட கமிட்டியில், பி.ஜே.பி  சுஸ்மாஸ் சுவராஜ் இவர் நியமனத்திற்கு கடும் ஆட்சேபணை தெரிவித்தும், மன்மோஹன் சிங்கும்,         சிதம்பரமும் இவரை தேர்வு செய்தனர்.

அரசு கட்டுபாடு இன்றி தன்னிச்சையாக செயல்படும் அதிகாரம் கொண்ட அமைப்பு சி.வி.சி. இதன் தலைவராக தாமஸை நியமித்ததின் மூலமாக காங்கிரஸ்  2-G ஸ்பெக்ட்ரம் ஊழல் மற்றும் காமன் வெல்த் கேம் ஊழல் ஆகிய இரண்டிலிருந்தும் தப்பிக்கும் முயற்சியாகும்.

 CPIL என்ற தன்னார்வ தொண்டு நிறுவனமும் இதர சில அமைப்புகளும்  சேர்ந்து கூட்டாக 17-ம் தேதியன்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளது. அதில் பி.ஜே. தாமஸ் நியமனம் சட்டத்திற்கு புறம்பானது என்றும் எனவே அவர் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மனு விசாரனைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

உலகத்திலேயே, ஊழல் வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜாமின் பெற்று வெளியே இருக்கும் ஒரு நபரை   உழல் கண்காணிப்பு வாரியத்தின் தலைவராக நியமித்த பெருமை காங்கிரஸையே  சேரும்.

பேய்கள் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாஸ்திரங்கள்!



No comments:

Post a Comment