Thursday, November 11, 2010

என்கவுண்டரும் தப்பு தாளங்களும்! - சட்டம் நம் கையில்

கோயம்புத்தூரில் போலீஸாரால் சுட்டு கொல்லப்பட்ட மோகன்ராஜ் விஷயம் பத்திரிகைகளிலும், வலையுலகிலும் உலா வந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பாக "உண்மைதமிழன்", "வினவு", "சவுக்கு" ஆகிய பிளாக்குகளில் வந்துள்ள பதிவுகளுக்கு கிடைத்துள்ள மைனஸ் ஓட்டு மற்றும் எதிர் கருத்து கொண்ட பின்னூட்டங்கள், பெரும்பாலான பதிவர்களின்/ வாசகர்களின் மன நிலையை தோலுறித்து காட்டுவதாகவே உள்ளது.

 போலீஸாரால் குற்றம் சாட்டப்பட்ட மோஹன்ராஜ் செய்த குற்றத்தை பற்றி இங்கு குறிப்பிட்டு மனதை ரணமாக்கி கொள்ள விரும்பவில்லை.

மோஹன்ராஜ் உண்மையான குற்றவாளி என்றால் அவன் கடுமையாக தண்டிக்கப்படவேண்டியவனே. அதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை. இருக்கவும் முடியாது.

பிஞ்சு குழந்தைகளை கொலை செய்த பாதகனை போலீஸ் சுட்டு கொன்றது சரிதான் என மேலோட்டமாக உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு முடிவுக்கு வருமுன், சில விஷயங்களை பற்றி சிந்திப்பது அவசியம். பாதிக்கப்பட்ட அந்த பிஞ்சுகளின் பெற்றோர்களால் இது முடியாது. காரணம் அவர்களுக்கு நேரடி பாதிப்பு. ஆனால் நம்மால் முடியும். நாம் சிந்திக்க வேண்டும்.

இனி அடுத்த கட்டத்திற்கு வருவோம். பத்திரிகையாளர்களுக்கு காவல்துறை அளித்த பேட்டியில் என்ன கூறியிருக்கிறார்கள் என பார்க்கலாம்

"கோவையில் 2 குழந்தைகளை கடத்திக்கொன்ற மோகன், மனோகரன் ஆகியோரை கைது செய்து ஜெயிலில் அடைத்தோம். அவர்களிடம் விசாரணை நடத்த கோர்ட்டில் மனுதாக்கல் செய்து 3 நாள் காவலில் வெளியே எடுத்தோம். இன்று காலை கொலை நடந்த இடத்திற்கு 2 பேரையும் தனித்தனி வாகனங்களில் அழைத்து சென்றோம்.
ஈச்சனாரியில் ரெயில்வே கேட் அடைக்கப்பட்டு இருந்ததால் மாற்று பாதையான போத்தனுர் வழியாக அழைத்து செல்லப்பட்டனர். குப்பைமேடு என்ற இடத்தில் சென்றபோது கைதி மோகன் சப்- இன்ஸ்பெக்டர் ஜோதியின் துப்பாக்கியை பறித்து கொண்டு பொள்ளாச்சி செல்லவேண்டாம், கேரளா அழைத்து செல்லுங்கள் என துப்பாக்கி முனையில் மிரட்டி அதகாரிகளை கடத்தி செல்ல முயன்றான்.
உஷாரான போலீஸ் அதிகாரிகள் துப்பாக்கியை பறிக்க முயன்றனர். உடனே சப்- இன்ஸ்பெக்டர்கள் 2 பேரை சுட்டுவிட்டு மோகன் தப்பி ஓடமுயன்றான். இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை துப்பாக்கியால் கைதி மோகனை சுட்டார். சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாலை 2 முறை அவனை சுட்டார். 3 குண்டு பாய்ந்து அவன் சம்பவ இடத்தில் இறந்தான்." என தகவல் தரப்பட்டுள்ளது.

என்கவுண்டர் என்பது, ஒருவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில்  மற்றவர் தாக்கும் பொழுது, தற்காப்புக்காக திருப்பி தாக்குவது. இதில் எதிராளி மரணம் அடைந்தால் அது சட்டப்படி கொலை குற்றமாகாது. இது காவல்துறைக்கு மட்டுமல்ல, அனைத்து இந்திய குடிமக்களுக்கும் பொருந்தும்.

என்கவுண்டரா இல்லை திட்டமிட்டு செய்த படுகொலையா?

பொதுவாக குற்றவாளிகளை வெளியில் கொண்டு செல்லும் பொழுது, கைவிலங்கு மாட்டும் வழக்கம் உண்டு. சாதரண பிக்பாக்கட், வழிப்பறி குற்றவாளிகளுக்கு கூட விலங்கு மாட்டி அல்லது துண்டு / சட்டையால் கையை கட்டி அழைத்து செல்லுவதை நாம் தினந்தோறும் பார்க்கிறோம். அப்படியிருக்கும் பொழுது மிக கடுமையான குற்றம் செய்த நபருக்கு ஏன் இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை?

போலீஸ் வேனில் குற்றவாளியை அழைத்து செல்லும் பொழுது, முன்பக்கத்தில் டிரைவருக்கு அருகில் இன்ஸ்பெக்டர்/ அதிகாரிகள் இருப்பார்கள். பின்புறத்தில் ஆயுதம் ஏந்திய காவலருடன் குற்றவாளி இருப்பார். இதுதான் நடைமுறை. ஆனால் இந்த கதையில் எல்லாமே மாறுபட்டுள்ளது. ஆயுதபடை பிரிவை சார்ந்த பாதுகாவலர்கள் இல்லை. மேலும் மோஹன்ராஜ் பரம்பரை கிரிமினல் இல்லை. அவனுக்கு ரிவால்வாரை எடுத்து குறி பார்த்து சுடும் அளவிற்கு அனுபவம் இருக்க வாய்ப்பே இல்லை! அதுவும் ரிவால்வாரில் இருக்கும் சேப்டி கேட்ச்சை ரிலீஸ் செய்த பின் தான் சுட முடியும்!

உடம்பில் ஒரு குண்டு பாய்ந்தாலே மனிதன் செயல் இழந்துவிடுவான். இந்நிலையில் மூன்று முறை சுடவேண்டிய அவசியம் என்ன? அவன் என்ன தமிழ் சினிமாவில் வரும் கதாநாயகனா,  குண்டை உடம்பில் வாங்கியும் அரை மணி நேரம் பிறரை தாக்க?


மோகன்ராஜால் சுடப்பட்ட சப் இன்ஸ்பெக்டர்கள் இருவருமே உளவு பிரிவை சார்ந்தவர்களாம். இவர்கள் ஏன் கைதியுடன்  பாதுகாப்புக்கு செல்ல வேண்டும்?


இதற்கெல்லாம்  பதில கிடைக்காதவரை இது திட்டமிடப்பட்டு செய்யப்பட்ட படுகொலைதான். 


என்கவுண்டர் கொலைகள் - சரியா, தப்பா?

இது மிகவும் சிந்திக்கப்படவேண்டிய விஷயம். நீதி மன்றத்தை தவிர எந்த ஒரு மனிதனுக்கும் அல்லது அரசு இலாகாவிற்கும் குற்றவாளிக்கு தண்டனையை வழங்கும் உரிமை கிடையாது. 

"பெரும்பாலும் குற்றவாளிகளை  நீதிமன்றம் தண்டிப்பது இல்லை. வழக்கு முடிய 20-25 வருடங்கள் ஆகிறது. அதனால் குற்றவாளிகளை என்கவுண்டரில் கொல்லுவதில் தவறு இல்லை." என்ற வாதம் சர்வாதிகாரத்திற்கு சிவப்பு கம்பளம் விரிப்பதாகும். நீதிமன்றத்தின் மேல் கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையே!. ஆனால் அதற்கு யார் காரணம் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.


காலதாமதமான தீர்ப்புகள்: இதற்கு முக்கிய காரணங்கள், ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் நீதிமன்றங்களின் எண்ணிக்கையும், நீதிபதிகளின் எண்ணிக்கையுமே காரணம். ஒவ்வொரு பாராளுமன்ற கூட்டத்திலும், சட்டமன்ற கூட்டத்திலும் பல மசோதாக்கள் கொண்டுவரப்பட்டு சட்டமாக்கப்படுகிறது. வழக்குகள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஆனால் நீதிமன்றங்கள் அதிகரிகப்படவில்லை. அதிலும் கொடுமை காலியாக இருக்கும் இடங்களுக்கு கூட  நீதிபதிகளை நியமிப்பது இல்லை. இதை செய்ய வேண்டியது அரசின் வேலையாகும். ஆனால் அரசு சுயலாபத்திற்காகவே  நீதித்துறையை பலவீனப்படுத்தி வருகின்றன என்பது தான் உண்மை. எனவே தீர்ப்புகள் காலதாமதமாவதற்கு நீதிமன்றங்கள் பொறுப்பு இல்லை.

நீதிமன்றத்தால் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லை: இந்த குற்றச்சாட்டு உண்மையானதே!. ஏன் என்பதற்கான விளக்கம் இதோ. குற்றம் செய்பவர்களை பிடித்து அவர்கள் மீது வழக்கு தொடருவது காவல்துறையின் வேலை. குற்றவாளிகளை பிடிப்பது காவல் துறையின் வேலை. அவர்களின் மீது உரிய சட்டப்பிரிவின் கீழ் வழக்கு தொடரவேண்டியது தனி அமைப்பான பிராக்ஸ்சிகியூஷனின் வேலை. பெரும்பாலான நாடுகளில் இந்த முறை அமுலில் உண்டு. ஆனால் இந்தியாவில் இது போன்ற தனி அமைப்பு கிடையாது. ஆட்சிக்கு யார் வருகிறார்களோ, அவர்கள் தங்கள் கட்சியை சார்ந்த வழக்கறிஞர்களை  பப்ளிக் பிராக்ஸிகியூட்டர்களாக நியமித்து கொள்வார்கள். ஆக அரசு வழக்கறிஞர்களாக இருப்பவர்கள் கட்சி அனுதாபியாக மட்டுமே இருப்பார்களே ஒழிய பாரபட்சமின்றி வழக்குகளை நடத்தும் திறமையானவர்களாக இருப்பதில்லை. அதனால் பணம் படைத்த அல்லது அரசியல் செல்வாக்கு கொண்டவர் மீது தொடரப்படும் வழக்குகள், பலவீனமானதாகவும், நீதிமன்றத்தால் நிரபராதி என விடுவிக்கப்படும் அளவிற்கு ஆயிரம் ஓட்டை உடைசல்களுடன் வழக்கு தாக்கல் செய்யப்படும். குற்றவாளி நீதிமன்றத்திற்கு டாடா காட்டிவிட்டு வந்து விடுவார்!. நீதிமன்றத்தின் வேலை குற்றவாளி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களுக்கான ஆதாரங்களை, சாட்சிகளை விசாரித்து தீர்ப்பு வழங்குவதுதான். ஆக இந்த குற்றச்சாட்டுக்கும் நீதிமன்றம் பொறுப்பு கிடையாது. வழக்கை தொடரும் காவல்துறைதான் முழு பொறுப்பு. காவல் துறை அரசின் எடுபிடியாக இல்லாமல், தன்னிச்சையாக சட்டப்படி செயல்படும்  ஒரு அமைப்பாக மாறாதபட்சத்தில் இதே நிலைதான் தொடரும். கருணாநிதி ஆட்சியில் ஜெயலைதா மீது வழக்கு போடுவது, ஜயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் அந்த வழக்குகளை வாபஸ் பெறுவது அல்லது ஏனோ தானோ என வழக்கை நடத்தி ஒன்றுமில்லாமல் ஆக்குவது, அதன் பின் கருணாநிதி மீது வழக்கு போடுவது. கருணாநிதி ஆட்சிக்கு வந்தவுடன் அந்தவழக்கை வாபஸ் பெறுவது.......... ஆக இதே வேலையை தொடர்ச்சியாக செய்துவரும் காவல் துறையின் பரிதாப நிலையைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோமே!

ஆக காவல்துறையின் நடவடிக்கைகள் ஆட்சியிலிருப்பவர்களின் விருப்பத்திற்கேற்ப தான் இருக்கும் என்பதுதான் உண்மை. காவல் துறை அதிகாரிகளில் இரண்டு வகை உண்டு. 1. நான் சட்டப்படியும் மனசாட்சி படியும் தான் வேலை செய்வேன் என்ற ரகம். இவர்கள் பெரும்பாலும் யார் ஆட்சிக்கு வந்தாலும் ஓரம் கட்டப்பட்டு, அம்போ என எங்கேயோ ஒரு மூலையில் இருப்பார்கள். 2. எது வேண்டுமானாலும் செய்கிறேன். எனக்கு லாபம் கிடைத்தால் போதும் என்ற ரகம்.  இவர்களின் கைதான் மேலோங்கி நிற்கும்.


மறுபடியும் சொல்கிறேன் மோகன்ராஜ் குற்றவாளி என்றால் தயவு தாட்சனையின்றி சட்டப்படி கடுமையாக தண்டிக்கப்படவேண்டியவனே.

இதை மற்றொரு கோணத்தில் பார்ப்போம். மோகன்ராஜ் குற்றம் சாட்டப்பட்டவரே ஒழிய குற்றவாளி என நிருபிக்கப்பட்டவர் அல்ல. ஒருவேளை அந்த குழந்தைகளின் பெற்றோர்களின் விரோதிகள் இதை  வேறு ஒரு நபர் மூலம் செய்திருக்கலாம். அவர்கள் வி.ஐ.பி அல்லது அரசியல் பலம் கொண்ட நபராக  இருந்தால், தான் தப்பிப்பதற்காக  தனது செல்வாக்கால் இந்த கதையை ஜோடித்திருக்க வாய்ப்பு உண்டு. அதை போலவே  மோகன்ராஜை பயன்படுத்தி  கொலை செய்திருக்கலாம். மோகன்ராஜ் உயிரோடு இருந்தால் தனக்கு ஆபத்து என இந்த நாடகத்தை அரங்கேற்றியிருக்கலாம்.  இந்நிலையில் அவன் கொலை செய்யப்பட்டுள்ளது சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.

காவல்துறையின் நடவடிக்கைகள் பெரும்பாலும் சந்தேகத்திற்கு உரியதே!.இன்னிலையில்  ஏதோ ஒரு கோணத்தில் பார்த்துவிட்டு, அவர்கள் செய்யும் என்கவுண்டர்களை ஆதரிப்பது ஜனநாயகத்திற்கு வைக்கும் ஆப்பு ஆகும். இதனால் கஷ்டப்படபோவது பொதுமக்களே!. 


இனி என்ன நடக்கும்? கண் துடைப்பிற்காக ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்திரவிடப்படலாம். மாவட்ட ஆட்சித்தலைவ்ரை விட குறைவான அதிகாரம் கொண்ட, அரசின் கீழ் பணிபுரியும் அவர் மட்டும் எப்படி உண்மையை கண்டுபிடித்து விசாரணை அறிக்கை தருவார்?


ஒருவேளை நீதிமன்றம் தலையிட்டு, சி.பி.ஐ விசாரணைக்கு உத்திரவிடலாம். சி.பி.ஐ தன் தனித்துவமான செயல்பாட்டை இழந்து, காங்கிரஸ் கட்சியின் விருப்பப்படி செயல்படும் ஒரு அங்கமாக மாறிவிட்டது. மாநில காவல்துறையின் நிலையை விட மிகவும் பரிதாபம்தான். இப்பொழுது அதன் முக்கிய வேலையே, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியினரின் மீதுள்ள வழக்குகளில் அவர்களுக்கு " கிளீன் சிட்" வழங்குவது தான்.


இச்சூழ் நிலையில் ஜனநாயத்தை காக்க கூடியது நீதிதுறையே!. ஒரு சில நீதிபதிகள் நேர்மை அற்றவர்களாக இருப்பதால், ஒட்டு மொத்த நீதி துறையையே சந்தேக கண் கொண்டு பார்ப்பது தவறு. நீதிபதிகளை நியமிப்பது ஆட்சியிலிருக்கும் அரசியல்வாதிகளே.

இந்திய வரலாற்றிலேயே முதலிடம் பெற்றுள்ள 2G ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராஜா குற்றவாளி என்பற்கான ஆதாரங்கள் வெளிவந்தும், தங்கள் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள அவர் மீது எந்த நடவடிக்கை எடுக்க்காதுடன், தொடர்ந்து அமைச்சராக அவர் நீடிக்க அனுமதி அளித்துள்ளது காங்கிரஸ் கட்சி.  முதலில் 70,000 கோடி என மதிப்பிடப்பட்ட ஊழல், ஒரு சில தினங்களுக்கு முன் மத்திய தணிக்கை குழுவால் ஜனாதிபதிக்கும் நிதி அமைச்சகத்திற்கும் அனுப்பபட்டுள்ள இறுதி அறிக்கையில் 1,70,000 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இது தொடர்பாக பல பொது நல வழக்குகளை விசாரணைக்கு ஏற்றுள்ளது உச்ச நீதிமன்றம்.  வேறு வழியில்லாமல் அடையாளம் தெரியாத நபர் மீது, சி.பி.ஐ வழக்கை பதிவு செய்துள்ளது. ஆனால் வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இதை சுட்டிக்காட்டி, கடுமையான ஆட்சேபணையை நீதிமன்றம் தெரிவித்ததுடன் கால கெடுவும் நிணயித்துள்ளது. இதிலிருந்தே ஜன நாயகத்திற்கு நீதித்துறையின் முக்கிய பங்களிப்பை உணர்ந்து கொள்ளலாம்.


எனவே சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டு, நீதித்துறை வலுப்படுத்துவதே முக்கியமாகும். குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவருக்கு காவல்துறையே தண்டனை அளிப்பதை நாம் வரவேற்பது என்பது, நீதித்துறையின் அதிகாரத்தை காவல்துறையினருக்கு வழங்குவதற்கு சமமாகும். இது சர்வாதிகாரத்திற்கு வழி வகுக்கும் செயல். 


குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு காவல்துறை என்கவுண்டர் மூலம் தண்டனை வழங்குவதை நாம் சரியென ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், அதை காவல்துறையை ஏன் செய்ய அனுமதிக்க வேண்டும்? நாமே செய்யலாமே? 


குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும். அது நீதிமன்றத்தின் மூலமே!. அந்த தண்டனையை காவல்துறை வழங்கினால் காவல் துறையும் குற்றவாளியே. சிந்திப்போம்!  நன்றி.17 comments:

 1. அருமையாக கையாளப் பட்டிருக்கிறது.
  தயை செய்து எனது பதிவினைப் பாருங்கள். உங்களது கருத்து வேண்டி.

  பதிவின் தலைப்பு: 'கொண்டு வரச்சொன்னால் கொன்று வரலாமா?'
  http://vettipaechchu.blogspot.com/2010/11/blog-post_10.html

  மக்களின் உணர்ச்சிகளை மட்டுமே இந்த செய்தியில் பார்க்க முடிகிறது. அத்தனை யும் மதிக்கத் தக்கதே. இருப்பினும் தெளிவான சிந்தனையை இழக்கலாகாது என்பது எனது எண்ணம்

  ReplyDelete
 2. //என்கவுண்டர் என்பது, ஒருவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் மற்றவர் தாக்கும் பொழுது, தற்காப்புக்காக திருப்பி தாக்குவது. இதில் எதிராளி மரணம் அடைந்தால் அது சட்டப்படி கொலை குற்றமாகாது. இது காவல்துறைக்கு மட்டுமல்ல, அனைத்து இந்திய குடிமக்களுக்கும் பொருந்தும்.
  //

  மிக விழிப்பான பார்வை.

  ReplyDelete
 3. ஆனால் இந்தியாவில் இது போன்ற தனி அமைப்பு கிடையாது. ஆட்சிக்கு யார் வருகிறார்களோ, அவர்கள் தங்கள் கட்சியை சார்ந்த வழக்கறிஞர்களை பப்ளிக் பிராக்ஸிகியூட்டர்களாக நியமித்து கொள்வார்கள். ஆக அரசு வழக்கறிஞர்களாக இருப்பவர்கள் கட்சி அனுதாபியாக மட்டுமே இருப்பார்களே ஒழிய பாரபட்சமின்றி வழக்குகளை நடத்தும் திறமையானவர்களாக இருப்பதில்லை. அதனால் பணம் படைத்த அல்லது அரசியல் செல்வாக்கு கொண்டவர் மீது தொடரப்படும் வழக்குகள், பலவீனமானதாகவும், நீதிமன்றத்தால் நிரபராதி என விடுவிக்கப்படும் அளவிற்கு ஆயிரம் ஓட்டை உடைசல்களுடன் வழக்கு தாக்கல் செய்யப்படும். குற்றவாளி நீதிமன்றத்திற்கு டாடா காட்டிவிட்டு வந்து விடுவார்!.


  ...... இந்த நிலை மாற வழியே இல்லையா?

  ReplyDelete
 4. //எனவே சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டு, நீதித்துறை வலுப்படுத்துவதே முக்கியமாகும். குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவருக்கு காவல்துறையே தண்டனை அளிப்பதை நாம் வரவேற்பது என்பது, நீதித்துறையின் அதிகாரத்தை காவல்துறையினருக்கு வழங்குவதற்கு சமமாகும். இது சர்வாதிகாரத்திற்கு வழி வகுக்கும் செயல்.


  குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு காவல்துறை என்கவுண்டர் மூலம் தண்டனை வழங்குவதை நாம் சரியென ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், அதை காவல்துறையை ஏன் செய்ய அனுமதிக்க வேண்டும்? நாமே செய்யலாமே//

  மிகத் தெளிவான சிந்தனை.

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. சிறப்பான பகிர்வு..

  ReplyDelete
 6. வெட்டிப்பேச்சு said..
  /// குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு காவல்துறை என்கவுண்டர் மூலம் தண்டனை வழங்குவதை நாம் சரியென ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், அதை காவல்துறையை ஏன் செய்ய அனுமதிக்க வேண்டும்? நாமே செய்யலாமே//

  மிகத் தெளிவான சிந்தனை///

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 7. குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும். அது நீதிமன்றத்தின் மூலமே!. அந்த தண்டனையை காவல்துறை வழங்கினால் காவல் துறையும் குற்றவாளியே. சிந்திப்போம்! நன்றி.

  உங்கள் நீதிமன்றம் மூலம் இந்த கேசில் அவனுக்கு ஆயுள் தண்டனை தான் கிடைக்கும் ...ஒரு பாவமும் அறியாத அந்த பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதற்கு ஆயுள் தண்டனை மட்டும் போதுமா..இந்த மாதிரி குற்றங்களுக்கு நாம் என்கௌன்ட்டர் ஐ விதி விளக்காக எடுத்து கொள்ள வேண்டும் . உங்கள் வீட்டு குழந்தைகளாக இருந்திருந்தால் இப்படி சிந்தித்திருக்க மாட்டிர்கள் என நினைக்கிறேன் ....தச்சை கண்ணன்

  ReplyDelete
 8. உங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்
  தமிழ்
  ஆங்கிலம்

  ReplyDelete
 9. Chitra said.
  ..... இந்த நிலை மாற வழியே இல்லையா? //

  இதற்கென்று அமைக்கப்பட்ட கமிஷன்கள் தெளிவான ஆலோசனைகளை வழங்கியுள்ளன. ஆனால் செயல் படுத்த யாரும் தயாரில்லை

  ReplyDelete
 10. சென்ஷி said...

  சிறப்பான பகிர்வு.//

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 11. murugan said...

  குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும். அது நீதிமன்றத்தின் மூலமே!. அந்த தண்டனையை காவல்துறை வழங்கினால் காவல் துறையும் குற்றவாளியே. சிந்திப்போம்! நன்றி.

  உங்கள் நீதிமன்றம் மூலம் இந்த கேசில் அவனுக்கு ஆயுள் தண்டனை தான் கிடைக்கும் ...ஒரு பாவமும் அறியாத அந்த பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதற்கு ஆயுள் தண்டனை மட்டும் போதுமா..இந்த மாதிரி குற்றங்களுக்கு நாம் என்கௌன்ட்டர் ஐ விதி விளக்காக எடுத்து கொள்ள வேண்டும் . உங்கள் வீட்டு குழந்தைகளாக இருந்திருந்தால் இப்படி சிந்தித்திருக்க மாட்டிர்கள் என நினைக்கிறேன் ///

  நீங்கள் இந்தபதிவை மேலோட்டமாகவே படித்திருக்கிறீர்கள்!

  ReplyDelete
 12. Dr.Rudhran said...

  /// well written ///

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 13. யார்ன்னு பார்க்காமலே எழுத்தில் மூழ்கி விட்டேன்.
  நீங்கதானா!யாரும் கண்டுக்கிறதில்லைன்னு:)

  தெளிவான பார்வை.

  ReplyDelete
 14. ராஜ நடராஜன் said..

  /// தெளிவான பார்வை ///

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 15. சார் இது ஓகே .. ஈரோடு பக்கத்துல ஒரு வீட்டில் இருந்த சந்தன மரத்தை வெட்டிய காரணத்தினால் ஒருவரை அந்த மரத்தின் சொந்தகாரர் துப்பாகியால் சுட்டு கொன்றாரரே அதுக்கு குற்றவியல் நடைமுறை சாசனத்தில் என்ன தண்டனை ??

  ReplyDelete
 16. ♥ RomeO ♥ said..
  சார் இது ஓகே .. ஈரோடு பக்கத்துல ஒரு வீட்டில் இருந்த சந்தன மரத்தை வெட்டிய காரணத்தினால் ஒருவரை அந்த மரத்தின் சொந்தகாரர் துப்பாகியால் சுட்டு கொன்றாரரே அதுக்கு குற்றவியல் நடைமுறை சாசனத்தில் என்ன தண்டனை ?? ///

  நல்ல கேள்வி.அந்த செய்தியை பார்த்துள்ளேன். அவர் ஸ்டேட்மெண்டில்" அவர்கள் என்னை தாக்க வந்ததால் தற்காப்புகாக வனத்தை நோக்க்யும் அதன் பின் அவர்களை நோக்கியும் சுட்டேன். அதில் சாவு ஏற்பட்டது என கூறினார் என் நினைக்கிறேன். அவர் சுட்டது தற்காப்புக்குதான் என நிருபித்தால் அவருக்கு தண்டனை கிடையாது.

  ReplyDelete