Monday, December 12, 2011

இவர்களால் தான் இந்தியா வாழ்கிறது!

தியாகத்திற்கு கண்ணீர் அஞ்சலி

ரெம்யா ராஜன், கோட்டயம், கேரளா.

வினீதா, கோட்டயம், கேரளா.


 சென்ற வெள்ளிக்கிழமை இரவு கல்கத்தாவில்,  AMRI மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் புகையால் ஏற்பட்ட மூச்சு திண்றி 91 பேர் இறந்து போனார்கள். அதில் ஆஸ்பத்திரி ஊழியர்கள் நான்கு பேர். இவர்களில் ரெம்யா, வினிதா என்ற நர்ஸ்கள், பொது வார்டில் டூட்டியில் இருந்தனர். அங்கு இருந்த 9 நோயாளிகளில் 8 பேர்களை காப்பாற்றினர். கடைசி நபரை காப்பாற்றும் முயற்சியின் போது அவர்களும் மரணமடைந்தனர். நர்ஸிங் பயிற்சி முடித்து  சில மாதங்களுக்கு முன் வேலையில் சேர்ந்த அந்த இளம் பெண்களின் உயிர் தியாகத்திற்கு நம் கண்ணீர் அஞ்சலி.

இந்தியா வாழ்வது சேரிகளில்!

காந்தி எதை வைத்து " இந்தியா கிராமங்களில் வாழ்கிறது" என்று சொன்னாரோ அது நமக்கு தெரியாது. ஆனால், பூகம்பம், வெள்ளம், சுனாமி, விபத்து என்று வரும் பொழுது அன்றாடம் கூலி வேலை செய்யும் சேரி மக்கள் தான் உயிரை பணயம் வைத்து காப்பாற்ற வருகிறார்கள் என்பது நிதர்சனம். இந்த ஆஸ்பத்திரியில் தீ விபத்து ஏற்பட்ட பொழுது, அருகாமையில் உள்ள சேரியை சேர்ந்த இளைஞர்கள் தான் உள்ளே சென்று நோயாளிகளில் பலரை காப்பாற்றினர். காம்பவுண்ட் கதவு பூட்டப்பட்டிருந்ததாலும், காம்பவுண்ட்க்கு மேல் பல அடி உயரத்திற்கு கம்பியிலானான முள் வேலி போடப்பட்டிருந்ததால், அதை தாண்டி உள்ளே நுழையா முடியாததால், காம்பவுண்ட் சுவரை உடைத்து உள்ளே சென்று, பூட்டியிருந்த அறைகளின் கண்ணாடி கதவை உடைத்து உள்ளே சென்று நோயாளிகளை காப்பாற்றினர்.  பாராளுமன்றத்திற்கும், சட்ட சபைக்கும் செல்ல வேண்டியவர்கள் சேரியில்! சேரியில் வசிக்க கூட தகுதியற்றவர்கள் அங்கே இருக்கிறார்கள்!. இந்தியாவின் கஷ்ட காலம்.  விதிமுறைகள் சரிவர பின்பற்றப்படுவதை கண்காணிக்காமல் லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கி கொண்டு ஆஸ்பத்திரியை செயல்பட அனுமதித்த அரசியல்வாதிகளும், அதிகாரிகளுமே இந்த கொடூர மரணங்களுக்கு காரணம். ஊழல்வாதிகளை நடுத்தெருவில் நிறுத்தி சுட்டு கொல்ல வேண்டும்.


Wednesday, November 30, 2011

சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு - இனி என்ன நடக்கும்?


 

அமெரிக்காவின் விருப்பத்தை நிறைவேற்றுவதே இந்திய அரசின் தலையாய கடமை. அதன் படி வால்மார்ட், டெஸ்கோ ஆகிய சில்லரை வணிகத்தில் கொடிகட்டி பறக்கும் திமிங்கிலங்களை இந்தியாவில் செயல்பட அனுமதிக்கும் முடிவை மத்திய அரசு எடுத்துவிட்டது.

இம்முடிவு, நான்கு கோடி சிறு வணிகர்களையும், அனைத்து விவசாயிகளையும் பாதிக்கும் என்பதால், எதிர் கட்சிகள் மட்டுமின்றி கூட்டணி மற்றும் காங்கிரஸ் எம்பிக்களிடையேயும் எதிர்ப்பை உண்டாக்கியிருந்தாலும், மன்மோஹன் சிங் இம்முடிவை மாற்றப்போவதில்லை என சொல்லிவிட்டார்.

எதிர்கட்சிகள் இந்த முடிவை மாற்ற வேண்டும் அல்லது ஓட்டு எடுப்புடன் கூடிய ஒத்தி வைப்பு தீர்மானத்திற்கு ஒப்புக்கொள்ள வேண்டும், அதுவரை பாராளுமன்றம் செயல் பட அனுமதிக்க மாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளனர்.

முடிவை மாற்றமுடியாது என்பதில் உறுதியாக இருப்பதால், ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு சம்மதிப்பதை தவிர அரசுக்கு வேறு வழியில்லை. ஓட்டெடுப்பில் வெற்றி பெற வேண்டும் என்பதால் கூட்டணிகளை தாஜா செய்ய கூட்டம் நடத்தப்பட்டதில் எதிர்பார்த்த படியே திமுக ஆதரவாக ஓட்டளிக்கும் என தெரிவித்து விட்டது.  திரிணாமுல் காங்கிரஸ் எதிர்த்து வாக்களிக்கும் என எதிர் பார்க்க முடியாது.

ஒரு வேளை ஓட்டு எடுப்பில் வெற்றி பெற முடியாது என்ற நிலை ஏற்படுமானால், அணு ஒப்பந்த்தின் போது எம். பி களுக்கு தலைக்கு ஒரு கோடி பணம் கொடுத்தது  போல இப்பொழுதும் பணம் கொடுத்து சமாளிக்கும். 

ஆக சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு உறுதியாகி விட்டது.

வால்மார்ட்டும், டெஸ்கோவும் வந்தால் இந்தியாவில் என்ன நடக்கும்?

1. விவசாய விளை பொருட்கள், விவசாயிகள் லாபமடையும் வகையில்  கொள்முதல் செய்யப்படும்.

2. அதே நேரத்தில், அடக்க விலைக்கும் குறைவாகவே உபயோகிப்பாளர்களுக்கு விற்கப்படும்.

3. இதனால், விவசாயிகள் ஆர்வத்துடன் இவர்களுக்கு சப்ளை செய்வார்கள். நுகர்வோரும் இவர்களிடமே பொருட்களை வாங்குவார்கள்.

4. சில காலம் இதே நிலை தொடரும். இவர்களுடன் போட்டி போட்டு நஷ்டத்தில் தொழில் செய்ய முடியாமல் சிறு வணிகர்கள் தொழிலை விட்டு விட்டு மாற்று வேலையை தேடி செல்ல வேண்டியிருக்கும்.

5. ஒட்டு மொத்த சிறு வணிகர்களும் அழிந்த பின், விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை இவர்களை தவிர வேறு யாருக்கும் விற்க முடியாது என்ற நிலை ஏற்படும். அதை போலவே  நுகர்வோர்களுக்கும்  இவர்களை விட்டால் நாதியில்லை என்ற நிலை ஏற்படும்.

6.  இந்நிலை ஏற்படும் வரை பொறுமையாக நஷ்டத்தில் வியாபாரம் செய்து விட்டு, விவசாயிகளிடம் அடி மாட்டு விலைக்கு கொள்முதல் செய்ய ஆரம்பிப்பார்கள். இவர்களை தவிர வேறு யாரும் வாங்க இல்லாததால், இவர்களிடமே பொருட்களை விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

7. போட்டி விற்பனையாளர்கள் இல்லை என்பதால், தாங்கள் வைத்தது தான் விலை என்ற நிலையில் அதிக விலை கொடுத்து பொருட்களை `நுகர்வோர் வாங்கியே தீர வேண்டும்.

ஆக, சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு மூலம் பலனடைய போவது வெளிநாட்டு நிறுவனங்களும், அவர்களிடம் லஞ்சம் அல்லது கட்சி நிதி பெறும் அரசியல்வாதிகளும், அதிகாரிகளுமே!

அதோடு, இந்நிறுவனங்களுக்கு வரி சலுகை வழங்கி மேலும் அரசுக்கு நஷ்டம் ஏற்படும். இதில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு நடை முறையில் உள்ள தொழிலாளர் நல சட்டத்திலிருந்தும் விதி விலக்கு அளிக்கப்படும்.

ஆக மொத்தத்தில் இம்முடிவு நாட்டின் நலனுக்கு எதிரானது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இதை அமுல்படுத்தியே தீருவேன் என ஒற்றைக்காலில் நிற்கும் மன்மோஹன் சிங் ஒரு ஏட்டு சுறைக்காய். ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளே வாழ்க்கையை நடத்தும் அவருக்கு இன்றைய இந்தியாவிற்கு எது தேவை என்பதை உணரும் சக்தி இல்லை. மேலும் இவரும் சரி, வணிக துறை அமைச்சரும் சரி, யாருமே தேர்தலில் நின்று ஜெயித்து வந்தவர்கள் அல்ல! அந்த அளவிற்கு மக்கள் செல்வாக்கு பெற்றவர்கள்.

வெளிநாட்டவரின் நேரடி முதலீட்டின் மூலம் தான் இந்தியாவின் பொருளாதாரம் கொழிக்கும் என்றால் மகாத்மா காந்தி வெள்ளைக்காரனை இந்தியாவிலிருந்து விரட்ட போராடியது முட்டாள் தனம். வெள்ளைக்காரனும் இதைத்தானே செய்தான்?

கழுதைக்கு வாக்குப்பட்டால் உதைக்கு பயப்படலாமா?  

போகிற போக்கை பார்த்தால், வெகு சீக்கிரத்தில் பாராளுமன்றத்திலும்  51% சதவிகிதம் வெளி நாட்டவர் பங்கேற்க சட்டம் கொண்டு வந்தாலும் ஆச்சரியப்பட தேவை இல்லை


Sunday, November 27, 2011

கொலைவெறி பாடல் - ரிமிக்ஸ்



எதோ ஒரு புண்ணியவான் இந்த வீடியோவை தயார் செய்து  யூ டியூப்பில் அப்லோட் செய்துள்ளார்.

Saturday, November 26, 2011

"இனிமேலும் அடிப்பேன்" - கர்ஜிக்கும் பஞ்சாப் சிங்கம்.

பஞ்சாப் மாநிலம் வீரத்திற்கும் தியாகத்திற்கும் விளை நிலம் ஆகும். நமக்கு தெரிந்து பதக் சிங்கிலிருந்து ஹர்விந்தர் சிங் வரை பல உதாரண புருஷர்கள் உண்டு. அது சரி யார் இந்த ஹர்விந்தர் சிங்?


இந்த படத்தில் சரத்த்பவாருக்கு அடுத்து இருப்பவர்தான் ஹர்விந்தர் சிங். டெல்லியில் இருக்கும் ஒரு சாதாரண லாரி டிரைவர். இவர் 24-ம் தேதியன்று டெல்லியில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய விவசாயத்துறை அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமாகிய சரத்பவாரின் கன்னத்தில் ஒரு செம அறை விட்டு, அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைவாசி ஏற்றத்தை கட்டுப்படுத்தாதது, ஊழல் இவற்றிற்கு எதிராக கோஷமிட்டார். பின் பாதுகாவலர்கள் அவரை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். 25-ம் தேதியன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்பொழுது தனக்காக வாதாட வக்கீல் தேவை இல்லை என நீதிபதியிடம் கூறிய அவர் மேலும் " இனியும் இவ்வாறு மீண்டும் நடந்து கொள்வேன்" என கூறினார். 

இவருக்கு மட்டும் ஏன் இந்த கொலைவெறி?. இவர் தனுஷின் கொலை வெறி பாடலை கேட்டு இவ்வாறு செய்யவில்லை. விலைவாசி உயர்வு, அரசியல்வாதிகள் செய்யும் ஊழல் இவற்றால் ஆத்திரமடைந்து இருக்கும் 120 கோடி பொது மக்களின் பிரதிநிதியாக தன்னால் முடிந்ததை செய்திருக்கிறார்.

இச்சம்பவத்திற்கு பாராளுமன்றமும் கண்டனம் தெரிவித்துள்ளது. பிரதமரோ " இது போன்ற சம்பவங்கள் தவறானவை என திருவாய் மலர்ந்துள்ளார். பிராணாப் முகர்ஜியோ, "இந்த நாடு எங்கே போய்க்கொண்டிருக்குது" என அச்சத்துடன் கூறியுள்ளார். ஆக மொத்தத்தில் இச்சம்பவத்திற்கான அடிப்படை காரணத்தை உணர்ந்து தங்கள் தவறை திருத்த வேண்டிய நேரம் வந்துவிட் டது என்பதை புரிந்து கொள்ளவில்லை. அதிக பாதுகாப்பு வழங்குவது பற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள். மக்களுக்கு எதிராக செயல்படும் அரசியல் வாதிகளுக்கு, அவர்களின் பாதுகாப்பே எமனாக முடியும் என்பதற்கு இந்திரா காந்தியின் முடிவே சிறந்த உதாரண்ம்.


தற்பொழுது பாராளுமன்ற கூட்டத்தொடர் நடை பெற்று வருகிறது. விலை உயர்வு, கருப்பு பண விவகாரம் இது தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதிக்க கோரி கடும் அமளி ஏற்பட்டு அவை ஒத்திவைக்கப்படும் நிலையில் உணவு பொருட்களின் விலைவாசி உயர்வு தொடர்பாக பதிலளிக்க வேண்டிய விவசாயத்துறை அமைச்சர் பாராளுமன்றத்தில் கலந்து கொள்ளாமல் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பொறுப்பற்ற செயல். இதை யாரும் கண்டிக்கவில்லை.

சரத்பவார் யாருக்காக அமைச்சராக இருக்கிறார்?  விவசாயிகளிடம், அறுவடைக்கு முன்பே அடிமாட்டு விலைக்கு உற்பத்தி பொருளை விலை பேசி முன்பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்து, அதை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் அடிக்கும் மண்டிக்காரர்கள், உணவுப்பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் மாபியாக்களுக்கு சாதகமாக அரசு செயல்பட நிர்பந்திப்பது போன்றவற்றிற்காகவே சரத்பவார் அமைச்சராக இருக்கிறார்.

எப்படியாவது ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தை மட்டுமே கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி, கூட்டணி கட்சிகளை சார்ந்த அம்மைச்சர்களின் செயல்களுக்கு ஆமாம் சாமி போடும் நிலையில் உள்ளது. UPA -1 ல் தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்த தி.மு.க வை சார்ந்த ராஜா ஸ்பெக்டரம் விற்பனையில் ஊழல் செய்து 1.76,000 கோடி ரூபாய் அரசுக்கு நஷ்டம் என்ற நிலை ஏற்பட்ட பின்பும் ம்றுபடியும் UPA -2 ல் அதே ராஜாவை அத்துறைக்கே அமைச்சராக்கியது உதாரணம் ஆகும்

சரத்பவார் அடிவாங்கிய விபகாரம் தொடர்பாக மீடியாக்கள் அன்னா ஹசாரேயிடம் கேட்டதிற்கு அவர் " ஒரு அடிதான் அடித்தாரா?" என பதிலளித்தார். தன்னை காந்தியவாதி என கூறிக்கொள்பவர் இப்படி கூறலாமா? என பலர் குரல் எழுப்பியுள்ளனர். குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் பிரதான அல்லக்கை திக்விஜயசிங் புலம்ப ஆரம்பித்து விட்டார். அன்னா ஹசாரே கேட்டதில் என்ன தப்பு?.

தனது கட்சிக்கு தேசியவாத காங்கிரஸ் என பெயர் வைத்திருக்கும் சரத்பவார் உண்மையான காந்தியவாதியாக இருந்திருந்தால் மறு கன்னத்தை காட்டியிருக்க வேண்டும். அதை தான் அன்னா ஹசாரே இப்படி கேட்டிருக்கிறார்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய மகாத்மா காந்தி ராணுவம், காவல் துறை, சிறை, தூக்கு தண்டனை இவற்றை சட்ட ரீதியான நடவடிக்கையாக ஏன் ஏற்றுக்கொண்டார்?

ராணுவத்தினருக்கு துப்பாக்கி, பீரங்கி இவற்றிற்கு பதிலாக பகவத்கீதையை கொடுத்திருக்கலாம். சிறை தண்டனை, தூக்குத்தண்டனை இவற்றிற்கு பதிலாக குற்றவாளிகளுக்கு கீதா உபதேசம் வழங்கலாம். ஏன் இதை காந்தி செய்ய சொல்லவில்லை? குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவது சரி என்பது தான் அவரது நிலை.

அடுத்ததாக சட்டத்தை தன் கையில் எடுக்கக்கூடாது என்ற வாதம் மறுபக்கம். இது எப்பொழுது பொருந்தும்?  சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நிலையில் சட்டம் தன் கடமையை பாரபட்சம் இல்லாமல் செய்யும் பட்சத்தில். இங்கு என்ன நிலை? 20 வருடங்களுக்கு முன்பு தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்த சுக்ராம் மீது உள்ள ஊழல் வழக்கு ஒரு சில தினங்களுக்கு முன்பு தான் விசாரணை முடிவுக்குக்கு வந்து அவர் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இனி அவர் மேல் முறையீடு என பல முறை நீதிமன்றங்களின் படியேறுவார். இறுதி தீர்ப்பு வழங்க இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம்.  இந்த சூழ்நிலையில் பாதிப்புக்கு உள்ளாகும் மக்கள் என்ன செய்ய முடியும்?

இச்சம்பவம் முடிவல்ல. ஆரம்பமே! இது ஊழல் அரசியல்வாதிகளின் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள கோபத்தை வெளிப்படுத்தும் சம்பவம் தான். ஒன்று மனசாட்சிக்கு பயப்படவேண்டும் அல்லது சட்டத்திற்கு பயப்படவேண்டும். எதற்குமே கட்டுப்படாதவர்களுக்கு இது சரியான தண்டனையே. அடி உதவுவது போல அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான் என்பது பழமொழி.



Thursday, November 24, 2011

இந்த அநியாயத்தை யாரிடம் சொல்லி அழ?

மூன்று நாள்களுக்கு முன்பு தில்லியில் உள்ள பெரும்பணக்காரர்கள் 22 பேர்களிடம் விசாரணை நடத்தி, அவர்கள் வருமானக் கணக்கில் காட்டாமல் மறைத்து, எச்.எஸ்.பி.சி. வங்கியில் சேமித்து வைத்திருந்த சுமார் ரூ.500 கோடிக்கு, ரூ.80 கோடி வரி விதித்திருக்கிறது வருமான வரித் துறை. வருமான வரித்துறை இதுவரை யார் எவர் என்கிற பட்டியலை வெளியிடவில்லை.  

இன்னும் விசாரணை முடியவில்லை. விசாரணை முறையாக நடத்தி முடிந்த பிறகு இவர்கள் பற்றி அறிவிக்கப்படும். இவர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதித்துறை செயலர் குஜ்ரால் கூறியிருக்கிறார். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது இருக்கட்டும். இந்தத் தகவலை அந்த பன்னாட்டு வங்கி அளிக்கவில்லை என்பதும், இதனை பிரெஞ்சு அரசு மூலமாகத்தான் இந்திய அரசு பெற்றுள்ளது என்பதும் ஆச்சரியம் தருவதாக இருக்கிறது.  எச்.எஸ்.பி.சி. வங்கியில் கணக்கு வைத்துள்ள 700 பேர் பற்றி பிரெஞ்சு அரசு அளித்த பட்டியலின் அடிப்படையில் கடந்த இரண்டு மாதங்களாக வருமான வரித்துறையினர் ஆய்வுகள் நடத்தி, கடைசியாக இந்த 22 பேரிடமும் நேரிடையாக விசாரணை நடத்தி, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் கூறிய பின்னர்தான், தாங்கள் கணக்கு காட்டாமல் வெளிநாட்டு வங்கியில் பணம் சேர்த்து வைத்திருப்பதை ஒப்புக்கொண்டார்கள். இவர்கள் கணக்கு காட்டாத பணத்துக்கு வரி விதித்திருப்பதுடன், முந்தைய இரண்டு ஆண்டுகளுக்கான இவர்களது வங்கிப் பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களை அளிக்க வேண்டும் என்றும் வருமானவரித் துறை உத்தரவிட்டுள்ளது.  இதுபோன்று வரிஏய்ப்பு செய்து, கணக்கில் காட்டப்படாத வருமானத்தைப் பல்வேறு வெளிநாட்டு வங்கிகளில் சேர்த்து வைத்திருப்பது தொடர்பான 9,900 தகவல்கள் வருமான வரித் துறைக்குக் கிடைத்திருக்கிறது. இதில் மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தும்பட்சத்தில் மேலும் சில நூறு கோடி ரூபாய் வரிஏய்ப்புகள் கண்டுபிடிக்கப்படும் என்பது உறுதி.                         

ஒரு வங்கியில் சாதாரண இந்தியக் குடிமகன் ரூ.25,000க்கு மேலாக இன்னொருவர் கணக்கில் ரொக்கமாகச் செலுத்த முடியாது. இதற்கு அடிப்படைக் காரணம், கறுப்புப் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதுதான். அதேபோல ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக பரிவர்த்தனை செய்பவர் தனது நிரந்தர வருமான வரிக் கணக்கு எண் (பான்) குறிப்பிட்டாக வேண்டும். அதற்குக் காரணம், யார் மூலம் யாருக்குப் பணம் கொடுக்கப்பட்டது என்கின்ற வழித்தடத்தையும் பணத்துக்கான ஆதாரத்தையும் தெரிந்து கொள்வதற்காக தான்.  இந்த 22 பேரும் சுமார் ரூ.500 கோடி வரை வெளிநாட்டு வங்கியில் சேமிக்க முடியும் என்றால், அதுபற்றிய தகவலை இந்தத் தனியார் வங்கி ஏன் உடனடியாகத் தெரிவிக்கவில்லை? அல்லது அவர்கள் தெரிவித்திருந்தும், பிரெஞ்சு அரசு வெளியிடும்வரை நடவடிக்கை எடுக்காமல் வருமான வரித்துறை இத்தனைநாள் காலம் கடத்தியது ஏன்? வங்கிகள் தங்கள் வணிக மேம்பாட்டுக்காக நுகர்வோரின் கறுப்புப் பணத்துக்கு இடம் அளித்தது என்றால், அந்த வங்கிக் கிளைகள் ஏன் இந்தியாவில் அனுமதிக்கப்பட வேண்டும்? அதன் கிளைகளை ஏன் மூடிவிடக்கூடாது?  இதுபற்றிக் கேட்டால், பன்னாட்டு வங்கிகள் மீது நடவடிக்கை எடுத்தால் அதனால் அன்னிய முதலீடு பாதிக்கப்படும் என்று ஓலமிடுவார்கள். அப்படியானால், பன்னாட்டு நிறுவனங்களும் வங்கிகளும் எது வேண்டுமானாலும் இந்தியாவில் செய்துகொள்ளலாம் என்பதுதான் எழுதப்படாத சட்டமா?                      

இந்தியாவில் கிளைகள் தொடங்கும் வெளிநாட்டைச் சேர்ந்த வங்கிகளின் முகவர்கள் இங்கே சேவை செய்ய வருவதில்லை. வியாபாரம் செய்து லாபம் சம்பாதிக்கத்தான் வருகிறார்கள். இவர்கள் கிளை தொடங்கியதும் வியாபார நிறுவனங்களை நடத்துபவர்களிடம் அவர்கள் வெளிநாட்டுக்குச் செல்லும்போது விருப்பம்போல செலவு செய்யலாம் என்றும், ஏற்றுமதி - இறக்குமதியாளர்களாக இருந்தால் அவர்களது வியாபாரத்துக்கு வசதியாக தங்கள் வங்கியில் பணம் போட்டு எடுக்கலாம் என்றும் ஆசை வார்த்தைகள் கூறுகின்றன.  இந்தியாவில் செலவு செய்வதைக் காட்டிலும் அமெரிக்க - ஐரோப்பிய நாடுகளில் தங்கள் கறுப்புப் பணத்தைக் கண்டபடி எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் செலவு செய்ய விரும்புபவர்கள் இந்த வங்கி முகவர்களின் ஆசை வார்த்தைக்குப் பலியாகிவிடுகிறார்கள். வெறும் சுற்றுலாச் செலவுக்காக அன்னிய வங்கிக் கணக்கை முறைகேடாகப் பயன்படுத்துவதில் தொடங்கி நிரந்தரமாக வரிஏய்ப்பு செய்வதோடு, கறுப்புப் பணத்தை பல நூறு கோடிகளுக்கு அதிகரிக்கும் அளவுக்கும் செல்கிறது.  

இந்திய அரசுடைமை வங்கிகள் பலவும் அனைத்து நாடுகளிலும் கிளைகள் வைத்திருந்தாலும், இத்தகைய பன்னாட்டு வங்கிகளை பலர் நாடுவதற்கு வேறு சிறப்பான சேவைகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.  இந்தப் பன்னாட்டு வங்கிகளை இந்தியாவில் செயல்பட அனுமதிப்பதற்குக் கூறப்பட்ட முக்கியமான காரணம், இந்த வங்கிகளுடன் ஏற்படும் வியாபாரப் போட்டியால் நமது அரசு வங்கிகள் சுறுசுறுப்படைந்து அவற்றின் சேவைகள் மேம்படும் என்பது. அப்படியொன்றும் சேவைகள் மேம்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால், இந்தப் பன்னாட்டு வங்கிகளின் பாதிப்பால், வாடிக்கையாளர்களுக்குச் சேவைசெய்வதை விட்டு விட்டு, அவர்களை எப்படியெல்லாம் ஏமாற்றிக் கட்டணம் வசூலிக்கலாம் என்பதை மட்டும் நம் வங்கிகள் கற்றுக்கொண்டுள்ளன.  ஆயுதக் கொள்முதலில் கமிஷன், வர்த்தக ஒப்பந்தங்களில் கமிஷன், பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் கிளை தொடங்கும்போது அதற்கும் கமிஷன் என்று பெற்று அவற்றை நேரடியாக ஸ்விஸ் வங்கியில் போடுகின்ற அரசியல்வாதிகள் ஒருபுறம்.  இந்தியாவில் இருந்துகொண்டு, இந்தியாவில் சம்பாதித்து, ஆனாலும் கணக்கு காட்டாத கறுப்புப் பணத்தை மறைத்து வைக்கும் பெரும் தனவந்தர்கள் இன்னொருபுறம்.  இத்தகைய "கறுப்பு'ச்சாமிகளை வெள்ளைச்சாமிகளாக நம் முன் நிறுத்திட முயலும் வெளிநாட்டு வங்கிப் பூசாரிகள் மற்றொருபுறம்.  இவர்கள்தான் பொருளாதார நெருக்கடிக்கு அதிமுக்கிய காரணிகள். ஆனால் இவர்களால் அவதிப்படுவதோ, இதுபற்றி ஒன்றுமே தெரியாத மிக சாதாரண நடுத்தர குடும்பங்கள். எந்த நாளிலும், பல்லக்கு தூக்கிகளுக்கு மட்டும்தானே தோள் வலி!

நன்றி:  தினமணி



Saturday, October 15, 2011

கம்பியூட்டரை பார்மேட் செய்து ஆபரேடிங் சிஸ்டத்தை இன்ஸ்டால் செய்வது எப்படி? ---1



பார்மேட் செய்து ஓ.எஸ் (Operating System Windows XP) இன்ஸ்டால் செய்ய தேவையானவை:

1. உங்கள் கம்பியூட்டரில் (டெஸ்க்டாப் & லேப் டாப்) உள்ள சி.டி டிரைவ் இயங்குகிறதா என்பதை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

2. Windows XP OS சி.டி & அதற்கான சி.டி கீ ( 25 இலக்க எண்கள்.)

3. உங்கள் கம்பியூட்டருடன் கொடுக்கப்பட்ட  மதர் போர்டுக்கான டிரைவர் சி.டி இல்லை என்றால் மதர் போர்டின் மாடல் நம்பரை பார்த்து இண்டர் நெட்டில், அதற்குறிய  ஆடியோ, வி.ஜி.ஏ, மோடம், ஈதர்நெட்,  போன்றவற்றிற்கான  டிரைவர்களை மதர் போர்டு தயாரிப்பாளர்களின் வெப்சைட்டில் இருந்து டவுன்லோட் செய்து தயாராக வைத்து கொள்ளுங்கள். அல்லது 

Right click My computer > Properties > Hardware > Device Manager போய்  ஒவ்வொன்றிற்கும் என்ன கம்பெனி டிரைவர், என்ன வெர்ஷன் டிரைவர் என்பதை குறித்து வைத்து, அந்த டிரைவர்களை இண்டெர்நெட்டில் தேடி டவுன் லோடு செய்யலாம். இது தலையை சுற்றி மூக்கை தொட்ட கதை.

செய்முறை:

1. சிஸ்டத்தை ஆன் செய்யுங்கள். டெஸ்க்டாப், மை டாக்குமெண்ட் ஆகியவற்றில் பைல்கள், படங்கள், வீடீயோக்கள் ஏதாவது சேமித்து வைக்கப்பட்டிருக்குமானால் அவற்றை காப்பி செய்து வேறு ஒரு பகுதியில்  (Partition D / E / F)  பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். அப்படி செய்யவில்லை என்றால் C-ஐ பார்மேட் செய்யும் பொழுது இவை அனைத்தும் போய்விடும்.

2. இனி விண்டோஸ் எக்ஸ்.பி  சிடி-யை சிடி டிரைவில் போட்டு சிஸ்டத்தை ரி- ஸ்டார்ட் செய்யுங்கள். இப்பொழுது  கீழ் காணும் படத்தில் உள்ளபடி  ஸ்கிரீன் தோன்றும். படம்:1

படம்:1

இந்த ஸ்கிரீன் தோன்றியவுடன் தாமதிக்காமல் ஏதாவது  ஒரு கீயை அழுத்திவிடுங்கள். இல்லையென்றால் ஒரு சில வினாடியில் சிஸ்டம் ஹார்டு டிஸ்க் மூலம் பூட் ஆகி கம்பியூட்டர் இயங்க தொடங்கிவிடும். எக்ஸ்.பி சிடி மூலம் பூட் ஆகாது. ஒருவேளை இந்த ஸ்கிரீன் தோன்றாமல் சிஸ்டம்  இயங்க தொடங்கினால்,  உங்கள் சிஸ்டத்தின்  BIOS SETUP -க்கு போய் Boot Menu -ல் CD-ROM Drive  என மாற்ற வேண்டும். மறுபடியும் சிஸ்டத்தை ரி-ஸ்டார்ட் செய்யுங்கள். ரீ ஸ்டார்ட் ஆகும் சமயத்தில் Bios Setup- க்கு போக அதற்குரிய கீயை அழுத்த வேண்டும். இந்த கீ மதர் போர்டை பொறுத்து வேறுபடும். இவற்றுக்கான கீ  - F1 / F2 / F10 / F12 / DELETE  ஆகியவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கும். இந்த கீயை அழுத்தியவுடன்  கீழே காண்பிக்கப்பட்டுள்ள ஸ்கிரீன் தோன்றும். படம்: 2

படம்:2

கீ போர்டில் உள்ள UP & DOWN கீயை உபயோகித்து CD-ROM Drive -ஐ செலக்ட் பண்ணிவிட்டு  Enter கொடுங்கள். சிஸ்டம் ரி-ஸ்டார்ட் ஆகி "Press any key to boot from CD"  என்ற ஸ்கிரீன் ஓபன் ஆகும். தாமதிக்காமல் ஏதவது ஒரு பட்டனை அழுத்துங்கள்.

இனி சிஸ்டம் ரீ-ஸ்டார்ட் ஆகி கீழே காட்டப்பட்டுள்ள ஸ்கிரின் (படம்:3) ஓபன் ஆகும். 

படம்: 3

செட்டப் தேவையான பைல்களை இப்பொழுது லோடு செய்யும். லோடு செய்த பின் அடுத்த ஸ்கிரீன் தோன்றும். படம் : 4

படம்: 4

இப்பொழுது ENTER கீயை அழுத்துங்கள்.

இனி கீழே உள்ளபடி Windows XP Licensing Agreement  ஸ்கிரீன் (படம்:5) தோன்றும்.

படம்:5

F8 கீயை அழுத்துங்கள். அடுத்த ஸ்கிரீன் (படம்:6.)தோன்றும்.

படம்:6

ஏற்கனவே உங்கள் கம்பியூட்டரில் Partition C-ல் Windows XP இன்ஸ்டால் செய்திருப்பதை காட்டுகிறது. அதை ரிப்பேர் செய்யாமல் முற்றிலுமாக நீக்கிவிட்டு புதிதாக இன்ஸ்டால் செய்ய வேண்டியுள்ளதால், ESC கீயை அழுத்துங்கள். இனி புதிதாக ஒரு ஸ்கிரீன் (படம: 7) தோன்றும்.

 படம்: 7

இந்த ஸ்கிரினீல் C, D, E என்ற மூன்று Partition -களை காட்டுகிறது. காரணம் இந்த கம்பியூட்டரின் ஹார்டு டிஸ்க் மூன்றாக பிரிக்கப்பட்டு அதில் C-ல் Windows XP இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. பொதுவாக ஹார்டு டிஸ்க்குகள் சமமாக நான்காக C, D, E, F என பிரிக்கப்படுவது வழக்கம்.  உங்கள் கம்பியூட்டர் ஹார்டு டிஸ்க் பிரிக்கப்பட்டுள்ளதை  இந்த ஸ்கிரீனில் காட்டும். பொதுவாக  Partition-C ல் தான் ஓ.எஸ் (O.S) இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும். எனவே இந்த ஸ்கிரீனில் " C:  Partition 1 (NTFS) " செலெக்ட் செய்யப்பட்டு ஹைலைட் செய்து காட்டும். இந்த ஸ்கிரீனின் கீழ் பக்கத்தில்  ENTER =  Instal , D= Delete Partition, F3 = Quit என இருக்கும். படம்: 8-ஐ பார்க்கவும்

படம் 8

நாம் Partition C -ஐ பார்மேட் செய்ய கீபோர்டின் D பட்டனை கிளிக் செய்ய வேண்டும். (முக்கிய குறிப்பு: டிபால்ட் ஆக நீங்கள் ஓஎஸ் இன்ஸ்டால் செய்துள்ள Partition C தான் செலெக்ட் ஆகி ஹைலைட் பண்ணி காட்டும். நீங்கள் கீ போர்டின் UP, DOWN  கீயை அழுத்தி வேறு எதையும் செலெக்ட் செய்துவிடாதீர்கள். நாம் ஓ.எஸ் இன்ஸ்டால் செய்துள்ள பார்ட்டிஷனை மட்டுமே பார்மேட் செய்ய வேண்டும்).  D கீயை அழுத்தியவுடன் கீழே உள்ள படம் 9 -ல் உள்ளபடி ஸ்கிரீன் தோன்றும்.

 படம் 9

நீங்கள் இப்பொழுது ENTER கொடுத்து விடுங்கள். இப்பொழுது படம் 10 உள்ளபடி ஸ்கிரீன் தோன்றி பார்டிஷனை பார்மேட் செய்ய ஆரம்பிக்கும்.

படம்10.

100% பார்மேட் ஆனவுடன்  தானாகவே அடுத்த ஸ்கிரீன் தோன்றும். படம்11

படம் 11

இப்பொழுது தேவையான கோப்புகளை (Files) செட்டப் ஹார்டு டிஸ்க்கில் காப்பி செய்ய ஆரம்பிக்கும். காப்பி செய்து முடிந்தவுடன் தானாகவே சிஸ்டம்  ரீபூட் (Reboot) ஆகும். படம் 12

படம் 12

ரீபூட் ஆனவுடன் படம் 13-ல் காட்டப்பட்டுள்ள ஸ்கிரீன் தோன்றும். 

படம்13
இந்த ஸ்கிரீன் தோன்றியவுடன் நீங்கள் எந்த கீயையும் அழுத்தக்கூடாது.அதுவாகவே 5 வினாடிகள் கழித்து அடுத்த செட்டப்புக்கு போய்விடும். நீங்கள் கீயை அழுத்திவிட்டால் ஆரம்ப நிலைக்கு போய் மறுபடியும்  இதுவரை செய்தவற்றை திரும்ப செய்ய வேண்டியிருக்கும். கவனம்.  இப்பொழுது தானாகவே அடுத்த செட்டப்புக்கு போய் புது ஸ்கிரீன் தோன்றும். படம் 14.

படம்14

இப்பொழுது தேவையான டிவைஸ்களை இன்ஸ்டால் செய்ய ஆரம்பிக்கும். முடிந்தவுடன் "Regional and Language Option" என்ற ஸ்கிரீன் தோன்றும். படம் 15.

படம்15

Next என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது அடுத்த ஸ்கிரீன் தோன்றும். படம் 16.

படம் 16

இதில் Name என்பதில் உங்கள் பெயரை டைப் செய்து Next கொடுங்கள். அடுத்ததாக தோன்றும் ஸ்கிரீனில் உங்கள் விண்டோஸ் சி.டி யின் கீயை டைப் செய்யுங்கள். படம் 17

படம் 17

Next பட்டனனை அழுத்துங்கள். அடுத்த ஸ்கிரீன் வரும். படம் 18

 படம்18

Next கொடுங்கள். அடுத்த ஸ்கிரீன் தோன்றும். படம் 19.
படம் 19
இந்த Networking Setting  ஸ்கிரீனில் Next  கொடுங்கள். இப்பொழுது உங்கள் கம்பியூட்டர்  ரீபூட் ஆகும் நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம். சிறிது நேரத்தில் "Welcome to Microsoft  Windows"  என்ற ஸ்கிரீன் தோன்றும். படம்20.


படம் 20

இதில் Next  கொடுங்கள். அடுத்ததாக  உங்கள் கம்பியூட்டரின்  திரை தோன்றும். படம் 21

படம்21

இப்பொழுது உங்கள் கம்பியூட்டரை பார்மேட் செய்து, புதிதாக Windows XP -ஐ இன்ஸ்டால் செய்துவிட்டீர்கள்.  இனி மதர்போர்டுக்கான டிரைவர்களை இன்ஸ்டால் செய்ய வேண்டும்.  அதைப்பற்றி அடுத்த பதிவில் விபரமாக பார்ப்போம்.

இந்தப்பகுதியில் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் பின்னூட்டம் இடுங்கள். விளக்கம் தருகிறேன்.




Thursday, October 13, 2011

கூடாங்குளம் அணுமின் நிலையம் இலங்கைக்கு மின்சாரம் வழங்கவே!

கூடாங்குளம் அணு மின்நிலைய ப்ணியை முடித்து உற்பத்தியை துவங்க தமிழக முதல்வர் உதவவேண்டும் என மன்மோஹன் சிங் முதல்வருக்கு மறுபடியும் கடிதம் எழுதியுள்ளார்.  இம்மின் நிலையம் தமிழகத்தின் மின் பற்றாக்குறையை தீர்க்கும் என அவர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தாலும், உண்மையிலேயே  கூடாங்குளத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம்  இலங்கைக்கு வழங்கவே முடிவு செய்யப்பட்டுள்ளது. 

 ஏற்கனவே கடல் மூலம் கேபிள் அமைத்து இலங்கைக்கு தமிழகத்திலிருந்து மின்சாரத்தை கொண்டு செல்ல கடலில் ஆய்வு பணிகளை மத்திய அரசு துவக்கிவிட்டது.  இத்திட்டம் தடைபட்டுவிட்டால் இலங்கைக்கு மின்சாரம் வழங்க முடியாதே என்ற ஆதங்கத்தில் தான் மன்மோஹன் சிங்  கடிதம் எழுதியுள்ளார்.

இன்று கூடாங்குளத்தில் உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதுடன், சுமார் 5000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று கூடி, ஒப்பந்த தொழிலாளர்களையும், 700 மேற்பட்ட விஞ்ஞானிகளை அணுமின் நிலையம் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இச்செய்தி தமிழ் பத்திரிகளிலும், தொலைக்காட்சிகளிலும் இருட்டடிப்பு செய்ய பட்டுள்ளது. 24/ 7 என்.டி.டி.வியில் மட்டுமே வந்துள்ளது.

கூடாங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு குழுவினர்க்கு ஆதரவு கொடுப்போம்.


Wednesday, October 12, 2011

இந்த பதிவு உங்களுக்கு தேவையா?

ஒரு சில மாதங்களுக்கு முன் ஒரு பதிவர் தன் பதிவில்"  கணினியில் வைரஸ் வந்துவிட்டால், ஹார்ட் டிஸ்க்கை பார்மேட் செய்து ஓ.எஸ் இன்ஸ்டால் செய்ய 1000 ரூபாய்க்கு மேல் தண்டம் அழவேண்டியுள்ளது" என எழுதியிருந்தார். அவர் இலங்கையை சார்ந்தவர் என நினைக்கிறேன். அதில்  நான் " பார்மேட் செய்து ஓஎஸ் இன்ஸ்டால் செய்வது எளிது. பெரிய கம்ப சூத்திரம் ஒன்றும் கிடையாது. நான் அது பற்றி பதிவு போடுகிறேன்" என பின்னூட்டம் போட்டிருந்தேன். ஆனால் மறந்து விட்டேன். ஒரு சில தினங்களுக்கு முன், அந்த பின்னூட்டத்தை பார்த்த  ஒரு நண்பர் எனக்கு ஏன் இன்னும் பதிவு போடவில்லை. போடுங்கள். யாருமே இதைப்பற்றி பதிவு போடவில்ல. நீங்கள் போட்டால் எல்லோருக்கும் உதவியாக இருக்கும் என மெயில் அனுப்பியிருந்தார்.

உண்மையிலேயே இப்பதிவை போட்டால் எல்லோருக்கும் உதவியாக இருக்குமா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ஆறேழு வருடங்களுக்கு முன்பு, பார்மேட் செய்து ஓஎஸ் இன்ஸ்டால் செய்ய வருடத்துக்கு மூன்றுமுறையாவது ஒவ்வொருதடவையும் 500 ரூபாய் மொய் எழுதியிருக்கிறேன். வெறுத்து போன ஹார்ட்வேர்ட் இஞ்சினியர்  எனக்கு சொல்லிக்கொடுத்தார். இப்பொழுது 2 மாதத்துக்கு ஒருமுறை நானே செய்து வருகிறேன்.

இதைப்பற்றி படங்களுடன் பதிவு போடட்டுமா? நீங்களே சொல்லுங்கள்.



Saturday, October 8, 2011

சுகேஷ் குட்டன் - ஆண்டவனின் அற்புத படைப்பு !

 துபாயில் பெற்றோருடன் வசித்து வரும்  கேரளாவை சார்ந்த 23 வயது நிரம்பிய சுகேஷ் குட்டன் ஆண்டவனின் அற்புத படைப்பு. அவனை உலகின் பார்வைக்கு கொண்டுவந்த ஏசியா நெட் டிவி சேனலுக்கு நன்றி.

ஆட்டிஸம் (AUTISM) என்ற விசித்திரமான் நோயால் தாக்கப்பட்டவன். சாதாரணமாக இதை மூளைவளர்ச்சி குறைபாடு (Downsyndrome) என எடுத்துக்கொள்ளலாம். இவனால் நிழல் போல் தன்னுடனே இருக்கும் தன் தாயைதவிர யாரையும் அடையாளம் காண இயலாது.  அடுத்தபடி சங்கீதத்தை இவனால் உணரமுடியும். 

ஏசியாநெட் " ஐடியா சூப்பர் சிங்கர் சீஸ்ன் -6 ல் தற்பொழுது போட்டியாளராக கல்ந்து கொள்ளும் இவன் முதல் சுற்றில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளதுடன்  நடுவர்களான பின்னனி பாடகி சித்திரா, ஹரிஹரன், மலையாள பின்னனி பாடகர்  எம்.சி .ஸ்ரீகுமார், மலயாள இசை அமைப்பாளர் ஜெய சந்திரன் ஆகியோரை வியப்பில் ஆழ்த்தி பெரும் பாராட்டை பெற்றான்.

இவனுடைய சிறந்த குணம் ,தன் தவறை உணர்ந்தவுடன், அதை மற்றவர்களிடம் ஒப்புக்கொள்ளும் மனப்பாண்மை, இதை சித்திரா தன்னுடைய கமெண்டை கூறியவுடன் , தான் பாடியதில் உள்ள வார்த்தை தவறுகளை தானே ஒப்புக்கொள்ளுவதை  காணலாம்.. இந்த அற்புதமான இளைஞனை  உங்களுக்கு அறிமுகப்படுத்த இந்த விடீயோவை கீழே தருகிறேன். அவன் இந்த நோயிலிருந்து பூரண குணமடைய ஆண்டவனை பிரர்த்திப்போம்.

இந்த நோய் பற்றி தெரிந்து கொள்ள இதை கிளிக் செய்யவும்




Friday, October 7, 2011

கஷ்ட காலம்

1. நம் நாட்டில் ஐந்தாண்டு திட்டங்களை தீட்ட பல துறைகளிலும் சிறந்தவர்களை தேர்வு செய்து அவர்களை திட்ட குழுவில் சேர்க்கும் வழக்கம் இருக்கிறது. இப்பொழுது திட்டக்குழுவின் தலைவராக மன்மோஹன் சிங்கும், உப தலைவராக மாண்டெக் சிங் அலுவாலியாயும் உள்ளனர்.


சர்தார்ஜிகள் ஜோக் பிரசித்தி பெற்றவை. சமீபத்தில் உச்ச நீதிமன்றம் மத்திய அரசை" எதன் அடிப்படையில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் என நிர்ணயம் செய்கிறீர்கள் " என்பதை தெளிவுபடுத்துமாறு உத்தரவிட்டது. இதற்கு பதிலளிக்கும் வகையில் திட்டகமிஷன் ( அலுவாலியா) " கிராமப்பகுதியை சார்ந்தவ ஒரு நபர் மாதம் 25 ரூபாய்க்கு மேலும், 31 ரூபாய்க்கு மேல் நகர்புறத்தை சார்ந்த ஒருவர்  உணவு, இருப்பிடம், மருத்துவம், கல்வி ஆகியவற்றிற்கு செலவு செய்தால் அவர் வசதி படைத்தவர். அதற்கு கீழாக செலவு செய்பவரே வறுமையில் வசிப்பவர்" என பதில் அளித்துள்ளது. இவர்கள் சொல்லும் தொகையில் இன்றைய விலைவாசியில் பிச்சைக்காரன் கூட  வாழ முடியாது. வசதியான குடும்பத்தில் பிறந்து கான்வெண்டில் படித்து, அமெரிக்காவில் பொருளாதரம் படித்து அரசு பணத்தில் திருவிழா கொண்டாடும் இந்த சர்தார்ஜிக்களுக்கு  யதார்த்த இந்திய மக்கள் வாழ்க்கையை தெரிந்து கொள்ளவா முடியும்? ஏட்டு சுறைக்காய் கறிக்கு உதவாது என்ற பழமொழி சரிதான். இதுதான் சர்தார்ஜிகளின் ஜோக்குகளிலேயே நம்பர் ஒன்னு!

2.சமீபத்தில் பத்திரிகைகளிலும்,டிவிக்களிலும் பெருமளவில் பேசப்பட்ட விவகாரம். நிதி அமைச்சகம் ,2ஜி விஷயத்தில், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நினைத்திருந்தால் ராஜாவை தடுத்து நிறுத்தி நஷ்டம் ஏற்படாமல் செய்திருக்க முடியும் என ஆதாரங்களை பட்டியலிட்டு சமீபத்தில் பிரதமர் அலுவலகத்திற்கு ஒரு கதிதம் அனுப்பியது, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்தகடிதம் ஒரு சமூக நல அலுவலரால் பெறப்பட்டு, அது வெளியிடப்பட்டது.


இது பெரிய பூகம்பத்தை காங்கிரஸ் மத்தியில் ஏற்படுத்தியது. சிதம்பரத்திற்கும் பிரணாப் முகர்ஜிக்கும் பெரிய மோதலை ஏற்படுத்தியது. அதன் பின் சோனியா தலையிட்டார். வழக்கம் போல எல்லோரும் பெட்டி பாம்பாக அடங்கினர். "இந்த கடிதம் பல அமைச்சகத்தின் குறிப்புகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது .என்னுடைய அபிப்பிராயம் அல்ல" என பிரணாப் கூற, சிதம்பரமும் தான் திருப்தி அடைந்து விட்டதாக கூறினார். ஆக சிதம்பரம் ஏன் தடுத்து நிறுத்தவில்லை என்ற மக்களின் கேள்விக்கு யாரும் பதில் சொல்லவில்லை. ஏதோ சக்களத்தி சண்டை போல சமரம் செய்துவிட்டார்கள். வழக்கம் போல மக்கள் முட்டாளாக்கப்பட்டுள்ளனர்.


3. இன்று கூடாங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு குழு பிரதிநிதிகள் மன்மோஹன் சிங்கை சந்தித்தனர். அவர் பாதுகாப்பு பற்றிய விஷயங்களை மக்களுக்கு விளக்க உயர்மட்ட நிபுணர் குழுவை அனுப்புவதாக கூறிவிட்டார். அதாவது அணுமின் நிலைய வேலைகள் முடிக்கப்பட்டு  மின் உர்பத்தி துவங்கும் என்பதை மறைமுகமாக கூறிவிட்டார். ஆக திருநெல்வேலிக்கே 


அல்வா கொடுத்தாகிவிட்டது. பாவம் மக்கள்.  மன்மோஹன் சிங்கை பிரதமர் என்ற பதவியில் உட்காரவைத்து  ஆட்சி செய்வது "மன்னார் & கம்பெனி உரிமையாளர் சோனியா என்பதையும் மன்மோஹன் சிங் ஒரு டம்மி பீஸ் என்பதையும் புரியாமல் தில்லி சென்றது திருநெல்வேலி மக்களின் தவறு. 



Sunday, September 4, 2011

நீங்களும் காளான் வளர்க்கலாம் ....2

முதல் பகுதியை படிக்காதவர்கள் இதை கிளிக் செய்து படித்துவிட்டு பின் இந்த பதிவை படிக்கவும்

எப்படி படுக்கைகளை தயார் செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொள்ளும் வகையில் கீழே இரண்டு வீடியோக்களை இணைத்துள்ளேன். இதில் வரும் சேகரன் என்பவர் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர். காளான் வளர்ப்பில் முன்னனியில் உள்ளவர். அவர் எப்படி படுக்கையை தயார் செய்கிறார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

பகுதி-1



பகுதி-2

தொடரும் ..........

Tuesday, August 30, 2011

அர்விந்த் கெஜ்ரிவாலுடன் ஓர் சந்திப்பு.



ஊடகத்தை தொடர்ந்து கவனித்து வரும் எவரும் இவரின் தீர்க்கமான குரலை கேட்காமல் இருக்க முடியாது .அவர் ஹரியானாவை சேர்ந்த 42 வயது அரவிந்த் கேஜ்ரிவால் .முனைப்போடு தொடர்ந்து ஊழலுக்கு எதிராக செயல்பட்டு வரும் இவர் ,இந்தியாவில் பெறும் மாற்றத்தை உருவாக்க போராடுகிறார் .

அரவிந்த் ஒரு ஐ.ஐ .டியில் படித்த மெக்கானிக்கல் பொறியியலாளர் ,அவர் 1995 ஆம் ஆண்டு இந்திய வருவாய் துறையில் (indian revenue service-IRS) இனைந்து ,ஐந்தாண்டுகளில் அந்த பணியை துறந்தார் .டெல்லி வருமானவரி துறையில் கூடுதல் ஆணையராக அவர் பனி புரிந்து கொண்டிருந்த சமயத்தில்,மக்களுக்காக "பரிவர்தன் "( பொருள் -மாற்றம் ) எனும் சிறிய பதிவு செய்ய படாத அமைப்பை ஒத்த மனமுடைய நண்பர்களோடு இனைந்து தொடங்கினார் .சில சமூக அக்கறை கொண்ட இளைஞர்கள் இனைந்து பலஆயிர மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான குடும்ப அட்டை பெறுதல் , புதிய மின் இணைப்புகளை பெறுதல் ஆகியவைகளை லஞ்ச லாவண்யமின்றி பெறுவதற்கு உதவினர் .மேலும் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்தும் அதன் நடைமுறை சிக்கல்கள் குறித்தும் பல்வேறு கோணங்களில் இந்த அமைப்பு ஆய்வு செய்து வருகிறது .மத்திய அரசு கொண்டு வந்த தகவல் அறியும் உரிமை சட்டத்திற்காக போராடியதில் இவருக்கும் ஒரு முக்கிய பங்குண்டு .2006 ஆம் ஆண்டு வளரும் தலைமை பண்புகளுக்கான ராமன் மகசேசே விருது பெற்றார் கேஜ்ரிவால் .

தொடர்ந்து சமூக நலனுக்காக பணியாற்றிவரும் இவர் சில நேரங்களில் குடும்பத்திற்கு என்று நேரம் ஒதுக்க முடியாமல் போவதால் வருந்தவும் செய்கிறார் .அரவிந்த் அவரது மனைவி (இவரும் ஒரு IRS,அரவிந்தின் சக ஊழியரும் கூட) மற்றும் அவரது இரண்டு குழந்தைகளுடன் டெல்லியிலிருந்து சற்று தொலைவில் வசிக்கிறார் .
ரீடர்ஸ் டைஜெஸ்ட் இதழ் அவரை மார்ச் மாதம் முதல் வாரத்தில் சந்தித்து பேட்டி எடுத்தது. அதாவது சாதாரண குடிமகன் கூட ஊழலுக்கு எதிராக போராட வழிவகை செய்யும் ஜன லோக்பால் சட்டத்தை அமல்படுத்த கோரி தனது உண்ணாவிரதத்தை அண்ணா தொடங்கிய ஒரு மாதத்திற்கு முன். 
பலவருடங்களாக இழுத்தடிக்கப்படும் இந்த சட்டம்,நிறைவேறுமா எனும் நிராசையில் உழன்ற அரவிந்த் மற்றும் அவரது சகாக்கள் இந்த ஜன லோக்பால் சட்ட வரையறையை வகுத்தனர் .பரிவர்தன் அமைப்பில் அவரது அனுபவமும் இதற்கு கணிசமாக உதவியது .ஊடகங்களை அவர் சந்திக்கும் முன்னர் ரீடர் டைஜஸ்ட் அவரிடம் கேட்டது " இந்தியா மட்டுமல்லாது ,உலகெங்கிலும் உள்ள இந்தியர்களிடமிருந்து இத்தகைய ஒருமித்த ஆதரவை எதிர்பார்த்தீர்களா ?" "உண்மையில் ,இல்லை " "அதனால் தான் என்னவோ இத்தகைய ஆதரவு பெரும் ஊக்கத்தை அளிக்கிறது "

ரீ .டை - "உங்களது பிரதான போராட்டம் ஊழலுக்கு எதிராக ,இத்தருணத்தில் ஊழல் குற்றசாட்டுக்களில் சிக்கியுள்ளவர்களான தபால் துறை தலைவர் ,முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ,காவல்துறை உயரதிகாரி ,வருமானவரி துறை அதிகாரி போன்றவர்கள் அடக்கம் ,இது எத்தகைய முரண் அல்லவா ?"

அ.கே -இதற்கு காரணம் நமது அமைப்புகள் ஊழலுக்கு துணை நிற்பது தான் ,மேலும் அவர்கள் நேர்மையற்றவர்களாகவும், சக்திமிக்கவர்களாகவும் உருவாகிவருகின்றனர் ,இவர்களுடைய இத்தகைய நடத்தை நம்மை நோக்கி, நம் சமூகத்தை நோக்கி பெரும் சவலாக விரிகிறது ,"நாங்கள் இப்படி தான் இருப்போம் ,உன்னால் முடிந்ததை செய்து பார் " எனும் அறைக்கூவல் ,நமது இன்றைய தேவை நேர்மையை ஊக்குவிக்கும், மற்றும் ஊழலை கைகழுவும் ஒரு அமைப்பே ஆகும் .
ரீ .டை -உங்களது இந்த ஊழலுக்கு எதிரான இந்த போராட்டம் உங்களது மாணவ பருவத்திலயே தொடங்கியதா ?

அ.கே-இல்லை அப்பொழுது எனக்கு படிப்பை தவிர வேறு எதிலும் நாட்டமில்லை ,அதனாலயே நான் ஐ.ஐ.டி காரக்பூர் செல்ல முடிந்தது .

ரீ.டை - மேலும் நீங்கள் ஏன் பெரும்பான்மையான ஐ.ஐ.டி காரர்கள் போல் வெளிநாடு செல்லவில்லையா ?

அ.கே- ஆம் ,ஒரு வகுப்பின் 80-90% ஐ.ஐ.டி மாணவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வது உண்டு ,நான் டாட்டா குழுமத்தில் இணைந்தேன் ஆனால் வெறும் பொறியியல் படிப்புகள் உதவாது என்று உணர்ந்தேன் ,என் முன் மூன்று வாய்ப்புக்கள் இருந்தன ,மேலாண்மை துறை ,வெளிநாடு,அல்லது சிவில் செர்வீஸ் ,நான் சிவில் செர்வீசை தேர்ந்தெடுத்தேன் ,முனனுபவம் எதுவும் இல்லை என்றாலும் ,மக்களுக்கு ஏதேனும் செய்யவேண்டும் எனும் உந்துதல் இருந்தது ,அதற்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று நம்பினேன் .

ரீ.டை -பின்னர் உங்கள் பொதுவாழ்க்கை எவ்வண்ணம் தொடங்கியது ?
 
அ.கே- நேர்முக தேர்வு அழைப்புக்காக காத்து இருந்த சமயம்,டாட்டாவில் எனது வேலையை துறந்து ,ஒரு ஆறு மாதம் இந்தியா முழுவதும் பயணித்தேன் ,கொல்கத்தா சென்று வரிசையில் நின்று மதர் தெரசா அவர்களை சந்தித்து " நான் உங்களோடு பணிபுரிய விரும்புகிறேன் " என்று தெரிவித்தேன் ,எனது கரங்களை பற்றிக்கொண்டு "காளிகாட்டுக்கு சென்று செயல் படு " என்றார் .
 
ரீ.டை - அங்கு நீங்கள் செய்த பணி என்ன?
 
அ.கே- கொல்கத்தா முழுவதும் அலைவோம் ,எங்கும் என்னை சுற்றி வறுமை நிறைந்து இருந்தது ,நோய்மை மலிந்து இருந்தது ,பலரையும் காண்போம் ,உடலெங்கும் ஆறாத புண்களோடு சாலைகளில் தவிப்பதை கண்டிருக்கிறேன் .அவர்களை காளிகாட்டிற்கு கொண்டுவந்து அந்த புண்களுக்கு சிகிச்சை செய்வோம்,சிலர் இறக்க கூடும்,மதர் தெரேசா அவர்களின் விருப்பபடி அவர்களை உரிய கௌரவத்தோடு உயிர் துறக்க விடுவோம் ,அவர்களுடன் எப்போதும் நாங்கள் யாரேனும் இருப்போம் .

ரீ.டை - வேறு எங்கு பயணம் செய்தீர்கள் ?
 
அ.கே- மதர் தெரேசா அவர்களின் இடத்தில் ஒரு இரண்டு மாதங்கள் சென்றது ,அதற்கு முன்பே போடோலாண்டின் உட்பகுதிகளுக்கு சென்றுள்ளேன் ,பின்னர் நான் ராமகிருஷ்ண மிஷனில் இணைந்தேன் ,சிறிது காலத்தில் நேரு யுவ கேந்த்ரா அமைப்பிலும் இனைந்து ஹரியானா முழுவதும் பயணித்தேன் ,பின்னர் நேர்முக தேர்வுக்கான அழைப்பு வந்ததும் வீட்டிற்கு திரும்பினேன்,என் வாழ்வின் இந்த பகுதியை நான் நேசித்தேன் ,நான் ஐ.ஆர் .எஸ் இல் இணைவதற்கு முன் பல்வேறு மக்களை தொடர்ந்து சந்தித்து அவர்களோடு உரையாடி இருக்கிறேன் ,

 
ரீ.டை -உங்களது இந்த பயணத்தை உங்கள் தந்தை வகுத்தாரா ?
 
அ.கே- இல்லை ,அவர் பெரிதும் கவலை பட்டார் ,நான் அந்த காலங்களில் அவர்களின் தொடர்பு வட்டத்திலிருந்து விலகி இருந்தேன் ,அப்பொழுது செல்போன்களும் இல்லை ,நேற்று வரை நன்றாக தானே இருந்தான் இப்பொழுது என்ன ஆயிற்று திடிரென்று ? என்று வருந்தினர் .

ரீ.டை -உங்களது ஐ.ஆர்.எஸ் நாட்களை பற்றி சொல்லவும்
 
அ.கே- இத்தகைய பயணங்களுக்கு பின் இது எனக்கு ஒரு திடீர் மாற்றமாக உறைத்தது,எனக்கு ஏதுவான துறை இது இல்லை என்றே எண்ணிவந்தேன் ,பயிற்சி காலத்தின் பொழுது அதாவது 1995 ஆம் ஆண்டு ,இதில் நான் மகிழ்ச்சியாக இருக்கபோவதில்லை ,நான் இந்த வேலைக்கு தகுதி இல்லாதவன் என்றும் இதை தொடர வேண்டுமா என்றே நான் எனது பேராசிரியர்களிடம் கூறி வந்தேன் ,அவர்கள் இந்த பணியில் தொடர்ந்து நீடிக்க சொல்லியும் ,அவசரப்படவேண்டாம் என்றும் அறிவுரித்தினர் .
ரீ.டை - அப்பொழுதே இது ஒரு ஊழல் மலிந்த அமைப்பு என்பதை புரிந்துகொண்டீர்களா ?
 
அ.கே-இல்லை ,நான் ஐ.ஆர்.எஸ் ஆக எனது பணியை முழுவதும் நேசித்தேன், நான் வேலைசெய்த வருமானவரி துறை நல்ல வாய்ப்புக்களை கொடுத்தது ,நான் அதில் என்றுமே ஊழலுக்கு பலியாகவில்லை

ரீ.டை - நீங்கள் பலிகடா ஆகவில்லை என்று கூறுகிறீர்கள் ,நீங்கள் சொல்ல வருவது என்ன ,புரியவில்லை
அ.கே- மற்ற துறைகளை பற்றி தெரியவில்லை ,ஆனால் எனது துறையான வருமான வரி துறையை பொறுத்த வரை ,நாம் நேர்மையாக இருந்தால் நமக்கு எந்த பிரச்சனையும் கிடையாது .பொதுவில் அரசாங்க பணியில் நேர்மையாக இருந்தால் அவர்கள் பலிகடா ஆக்கபடுவார்கள் என்று ஒரு நம்பிக்கை உண்டு .எனக்கு நல்ல பணி கிடைத்தது ,நிறைவாகவே செய்தேன் ,நான் அந்த பணியில் மகிழ்ச்சி இல்லாமல் அங்கிருந்து வரவில்லை ,நான் அந்த பணியை முழுமூச்சுடன் நேசித்தேன் .

ரீ.டை -நீங்கள் இந்த அமைப்பில் உள்ள ஊழலின் பால் வெறுப்பு கொண்டு இங்கிருந்து வெளியில் வந்ததாக நான் எங்கோ வாசித்தேன் ..
 
அ.கே- இல்லை ,நான் எங்கும் ஊழல் திளைத்து இருப்பதை கண்டேன் ,மேலும் அரசின் ஒரு பங்காக இருந்து கொண்டே இந்த ஊழலுக்கு எதிராக எதுவும் செயலாற்ற முடியாது என்பதையும் நான் உணர்ந்தே இருந்தேன் .நான் பல்வேறு வழிகளில் ஊழலுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளில் கவனம் கொள்ள தொடங்கினேன் ,ஆனால் அது எனது சகாக்களுக்கோ ,சீநியர்களுக்கோ தெரியாது .

ரீ.டை - ஒரு உதாரணத்திற்கு ,நீங்கள் என்ன மாதிரி செயலாற்றி வந்தீர்கள் ?
 
அ.கே- ஐ .ஆர் .எஸ் வட்டத்தை தாண்டி எனக்கு பல நண்பர்கள் உண்டு ,2000 ஆம் வருடம் ஒரு டின்னரின் பொழுது "பரிவர்தன் " தொடங்குவதாக முடிவு செய்ய பட்டது ,எனது மாமாவும் சகோதரனும் அவர்களால் ஆனதை நன்கொடையாக அளித்தனர் ,ஒரு 50,000 ரூபாய் கொண்டு டெல்லி முழுவதும் துணி பதாகைகளும் ,துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டது ,அதில் " வருமானவரிதுறையில் எந்த லஞ்சமும் கொடுக்காதீர்கள் ,உங்களுக்கு எதுவும் சிக்கல் என்றால் பரிவர்த்தனை தொடர்பு கொள்ளுங்கள் ,நாங்கள் இலவசமாக தீர்த்து வைக்கிறோம் " என்று எழுதினோம் ,அத்தோடு எங்களது தொலைபேசி எண்களையும்,மின் அஞ்சல்களையும் கொடுத்தோம் .

ரீ.டை - இப்படி துவங்குவதற்கு ,ஏதும் குறிப்பிட்ட சம்பவங்களோ ,காரணங்களோ பின்புலத்தில் உண்டா ?
 
அ.கே- இல்லை ,ஊழலுக்கு எதிரான எங்கள் போராட்டம் எங்கிருந்தாவது தொடங்க வேண்டும் இல்லையா ,அதனால் வருமான வரித்துறையில் தொடங்கினோம் ,ஏனெனில் நான் அத்துறையில் இருந்தேன் அதன் விதிகள்,நடைமுறைகள் ,முடுக்குகள் அனைத்தும் எனக்கு அத்துபடி ,வேறொரு துறை என்றால் அதன் விதிகள்,கொள்கைகள் பற்றிய புரிதல் தேவை படும் இல்லையா.

ரீ.டை - உங்களது சக ஊழியர்களுக்கு இது எப்பொழுது தெரிந்தது ?
 
அ.கே- ஒரு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு,நான் அதிகம் விடுப்பு எடுக்க தொடங்கினேன் ,ஊதிய இழப்புடன் உள்ள விடுப்புகள் கூட போக போக எடுக்க தொடங்கினேன் ,சில தன்னார்வலர்கள் தொடர்ந்து இயங்கி வந்தனர்,நான் வெறுமே பின்புலத்தில் உதவிகளை செய்து வந்தேன்.

ரீ.டை - இந்த செயல்பாட்டின் விளைவுகள் எவ்வாறு அமைந்தது ?
 
அ.கே- மக்கள் எங்களை நோக்கி வர தொடங்கினர் ,ஒரு 18 மாதங்களில் 800 கேஸ்களை முடித்தோம் .பின்னர் வருமானவரிதுறையில் அமைப்பு ரீதியாக சில மாற்றங்களை கோரி பொது நல மனு ஒன்றையும் நாங்கள் தாக்கல் செய்தோம் ,அதே சமயத்தில் மின்சார துறையிலும் இதை தொடங்கினோம் .வருமான வரித்துறை சிக்கல்கள் அதிகமாக தங்களை தாங்களே தற்காத்துகொள்ளும் வல்லமை கொண்ட உயர் வர்கத்தினருக்கோ ,உயர்-மத்ய வர்கத்தினருக்கோ வரும் சவால்கள் ,மேலும் இங்கு ஊழலானது இரு பக்கமும் நிறைந்து இருப்பது ஆகும் . ஆனால் மின்சார துறை அனைத்து வர்கத்தினருக்கும் பொதுவானது ,சேரியில் வாழும் ஒருவர் எங்களிடம் வந்து அழுது முறையிட்டார் ,ஒரே ஒரு மின்விசிறியும் சில விளக்குகளும் உள்ள அவரது மின் இணைப்பிற்கு 8 லட்ச ரூபாய் கட்டணம் வந்துள்ளது ,இதற்கு காரணம் அங்கு நடந்த எளிய தவறு தான் ,ஆனால் அவரது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது ,நாங்கள் இன்ஹ்ட பிரச்சனையை முடித்து வைத்தோம் ,அவரது கட்டணம் 800 ஆக குறைக்கப்பட்டது .இம்மாதிரியான ஆட்கள் எங்களை தேடி வந்தார்கள்,பின்னர் பொதுவிநியோக துறையை நோக்கி திரும்பினோம் ,ஆனால் இப்படியே எத்தனை காலம் இது தொடர்வது என்று ஐயம் ஏற்பட்டது ,இதற்கு நிரந்தர தீர்வு தான் என்ன ? முன்னர் மக்கள் சில குண்டர்களை நம்பினார் ,இப்பொழுது எங்களை ,ஒரு வேளை பரிவர்தன் நாளை இல்லாமல் ஆகிபோனால் ,இவர்கள் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பிவிடுவர் .இது தான் எனது கவலையாக இருந்தது ,அப்பொழுது டெல்லி அரசு தகவல் அறியும் உரிமை சட்டத்தை நிறைவேற்றியது -2001 ல் .

ரீ.டை -நீங்கள் அதற்காகவும் குரல் கொடுத்தீர்களா ?
 
அ.கே-இல்லை ,ஆனால் மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்திற்கு நாங்கள் போராடி இருக்கிறோம் ,டெல்லி அரசு இயற்றிய இந்த சட்டத்தை பற்றி எதேச்சயாக ஒரு நாளிதழில் சிறு செய்தி குறிப்பாக கண்டேன் ,அரசு இதிலும் சிறிய நாடகம் ஆடியது ,சட்டத்தை நிறைவேற்றிய அரசு,அதை அனைத்து துறைகளுக்கும் அறிவிக்கவே இல்லை ,நாங்கள் இந்த சட்டத்தை பயன்படுத்தி சில துறைகளில் விண்ணப்பித்தோம் ,ஆனால் அவர்களோ "இப்படி ஒன்று இருப்பதே தெரியாது " என்று கைவிரித்தனர் ,பின்னர் நாங்கள் தர்ணாவில் ஈடுபட்டு ,முதல்வருக்கு கடிதங்கள் எழுதி பின்னர் அனைத்து துறைகளுக்கும் உரிய முறையில் தெரியபடுத்தபட்டது .
 
ரீ .டை - நீங்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தை எப்படி பயன்படுத்தினீர்கள் ?
 
அ.கே - தகவல் அறியும் உரிமை சட்டம் பயன்படுத்துவது என்பது நமது அடிப்படை உரிமையில் ஒன்றாகும் ,இந்திய அரசியலமைப்பு சட்டம் எண் 19 ன் நீட்சியாகும் .அசோக் குப்தா என்று ஒருவர் எங்களை தொடர்பு கொண்டார் ,புதிய மின் இணைப்பு கேட்டு இரண்டாண்டுகளுக்கு முன் விண்ணப்பித்த அவரிடம் 50,000 லஞ்சம் கேட்கப்பட்டது ,"நான் அவர்கள் கேட்டதை கொடுக்கமாட்டேன் என்பதில் உறுதியாக உள்ளேன் ,நான் இப்பொழுது என்ன செய்வது என்று சொல்லுங்கள் ,நீங்கள் இந்த மாதிரி சிக்கல்களை தீர்த்து வைக்கிறீர்கள் என்று அறிந்தேன் " என்று சொன்னார் ,நாங்கள் " மன்னிக்க வேண்டும் ,இந்த பிரச்சனையை எங்களால் எதுவும் செய்ய முடியாது ,இதை நாங்கள் எடுத்துகொள்ள போவதில்லை " என்று சொன்னோம் . ஆனாலும் நாங்கள் எங்களின் முதல் ஆர்.டி. ஐ முயற்சியை அங்கு தொடங்கினோம் ,சில அடிப்படை கேள்விகளை கேட்டு மின்வாரியத்துக்கு விண்ணப்பித்தோம் ,ஒரு 10 நாட்களிலையே குப்தாவிற்கு மின் இணைப்பு கிட்டியது .

ரீ.டை - அப்பொழுது எப்படி உணர்ந்தீர்கள் ?
 
அ.கே - இந்த சட்டம் மிகவும் சக்திவாய்ந்தது என்பதை புரிந்து கொண்டோம் ,இந்த சட்டத்தை பற்றி மக்களிடம் எடுத்து சென்று ,இதை எப்படி பயன்படுத்துவது என்று கற்றுகொடுத்தால் ,மக்கள் நேரடியாக தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும் ,நடுவில் எங்கள் தலையீடு தேவை படாது ,மக்களுக்கு ஒரு விழிப்புணர்ச்சி கிடைக்கும் .

ரீ.டை - நீங்கள் "பரிவர்த்தனை " தொடங்கிய பின் உங்களுக்கு அதிக சவால்கள் இருந்திருக்கும் என்று எண்ணுகிறேன் ,அதாவது உங்கள் ஆட்கள் ஏதேனும் அரசு அலுவலங்களுக்குள் வருவதை அவர்கள் விரும்பி இருக்க மாட்டார்கள் இல்லையா ?
 
அ.கே - அநீதிக்கு எதிராகவும் ,ஊழலுக்கு எதிராகவும் நாம் குரல் கொடுக்கும் பொழுது ,போராடும் பொழுது நாம் பலரின் பயங்கர வெறுப்புக்கு இலக்காகிறோம் ,இது அனைவரும் அறிந்ததே ,தொடர் தாக்குதல்கள் ,சில வன்முறை சம்பவங்கள் கூட நடந்தேறியுள்ளன ,அதுவும் பொது விநியோக முறைகளில் உள்ள முறைகேடுகளை நோக்கி நாங்கள் திரும்பிய பொழுது அவர்களின் எதிர்வினை மிக்க வீரியத்துடன் இருந்தது ,ஒரு ரேஷன் கடைக்காரார் எங்கள் ஆட்களில் ஒருவரின் கழுத்தை கீறிய சம்பவம் கூட நடந்தது .

ஆனால் இவை அனைத்தையும் காட்டிலும் ,மிக பெரிய தடையாக நான் உணர்ந்தது ,மக்களின் அவநம்பிக்கை மற்றும் விட்டேந்தி மனப்பான்மை தான் .அதை எப்படி தகர்ப்பது என்பதே மிக பெரிய சவால் .நாம் நம் மக்களை வெவ்வேறு போராட்டங்களில் எப்படி பங்குகொள்ள செய்வது ? தடைகளை பற்றி யோசிக்கையில் இதுவே மிக பெரிய தடையாகும் "நீங்களும் இதில் பங்குகொள்ளலாமே ? நிச்சயம் இது உங்களுக்கு உதவும் " என்று மக்களை நோக்கி சொல்வதே அது .

ரீ .டை - நீங்கள் ஒரு பொது நல ஆய்வு அமைப்பு ஒன்றை துவக்கி நடத்தி வருவதாக அறிகிறோம் ..?
 
அ.கே - ஆம் ,எனக்கு 2006 ல் மகசேசே விருது கிடைத்தது ,அதில் வந்த பரிசு தொகை சுமார் 50,000$ களை கொண்டு ஒரு அமைப்பை உருவாக்கினோம் ,இங்கு சரியான முறையில் இந்த துறையில் ஆய்வுகள் இதுவரை நடைபெறவில்லை என்பதை உணர்ந்தோம் .ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள தகவல் ஆணையர்கள் கொடுக்கும் பல ஆயிரம் ஆணைகளை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம் .மேலும் சுய நிர்மாணம் குறித்தும் பெரிய அளவில் ஆய்வுகள் செய்து வருகிறோம் .

ரீ.டை- இப்பொழுது வரை நீங்கள் பல கேஸ்களை ஆய்வு செய்து இருக்கிறீர்கள் ,இதன் மூலம் நீங்கள் அறிந்து கொண்டது என்ன ?
 
அ.கே - ஒவ்வொரு ஆண்டும் பல புதிய விஷயங்கள் எங்களுக்கு புலபடுகிறது .நாங்கள் ,நன்றாக பணிபுரிந்த தகவல் ஆணையர்களையும் ,குடிமகன்களையும் ஒவ்வொரு வருடமும் கௌரவித்து வருகிறோம் .எங்களது மற்றொரு ஆய்வு -சுய ஆளுகை தொடர்பானது ,பஞ்சாயத் ராஜ் .அரசியல் அதிகார பரவியலாக்கம் முழுவதுமாக நடந்து ,முடிவுகள் எடுக்கும் அதிகாரம் மக்களிடம் வருவதே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாகும் .சொல்வதற்கு எளிதாக இருந்தாலும் ,இதை நடைமுறையில் அமல்படுத்துவது எப்படி ? அதனால் ஆளுகை தொடர்பாக உலக வரலாற்று பின்னணியிலும் ,நமது இந்திய பின்புலத்திலும் ஆய்வுகள் மேற்கொள்கிறோம் ,இப்பொழுது தான் "ஸ்வராஜ் " எனும் ஒரு புத்தகத்தை முடித்து உள்ளோம் -அதில் அரசில் என்னென்ன சீர்திருத்தங்கள் தேவை என்பதை பற்றி விவாதித்து உள்ளோம் .முடிவெடுக்கும் அதிகாரம் படிப்படியாக நம் மக்களுக்கு சென்றடைய வேண்டும் ,அதிகார வர்க்கமும் ,அரசியல்வாதிகளும் அந்த முடிவை செயல்படுத்தும் துணை அமைப்புகளாக இருக்க வேண்டும்.நாங்கள் சில சட்ட வரையறை மாதிரிகளை உருவாக்கி உள்ளோம் ,இந்த சுட்டியில் அதை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளலாம் ,

ரீ.டை - இத்தகைய சுய ஆளுகை ,நடைமுறையில் மிகுந்த சிரமம் இல்லையா ?
 
அ.கே - இல்லை ,இதுவே மிக சுலபமான ,நடைமுறையில் சாத்தியமான முறையாகும் .இன்றைய நமது ஜனநாயகம் இயங்கும் முறை மிகுந்த சிக்கலானது.ஒரு எளிய உதாரணம் ,நாங்கள் ஜார்கண்ட் மாநிலத்தில் ,தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் -அங்கு எத்தனை பள்ளிகள் உள்ளது ,எத்தனை மாணவர்கள் படிக்கிறார்கள்,எத்தனை ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்று கேட்டு விண்ணப்பித்தோம் .பல பள்ளிகளிலும் சுமார் 800-900 மாணவர்களும்,ஆனால் அங்கு ஒரே ஒரு ஆசிரியரோ ,அல்லது அதுவும் இல்லாத நிலையே அங்கு உள்ளது.இன்றைய சூழலில் மக்கள் ,கல்வி அதிகாரிகளுக்கும்,கல்வி மந்திரிக்கும் தயவு செய்து ஆசிரியர் பணியிடங்களை நிரப்புங்கள் என்று கோரிக்கை எழுப்ப முடியும் ,ஆனால் கல்வி துறை இயக்குனருக்கோ ,அமைச்சருக்கோ வேறு பல சிக்கல்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியது இருக்கும் ,அதை விடுத்து எங்கோ ஒரு மூலையில் உள்ள ஒரு பள்ளிக்கு ஆசிரியர் நியமனம் செய்யமாட்டார்கள் ,அப்படியே செய்தாலும் அதற்கு லஞ்சம் பெறுவார்கள் .

மைய்யபடுத்தபட்ட அதிகார அமைப்பு மூலம் ஆசிரியர்கள் நியமனம் என்பது ஆசிரியர்களின் தகுதிகளை காட்டிலும் அவர்கள் கொடுக்கும் லஞ்ச தொகையால் நிர்ணயிக்கபடுகிறது ,நாங்கள் முன்வைப்பது என்னவென்றால் ,இதை ஏன் மாநில தலைமைதான் செய்ய வேண்டும் என்கிறோம் ? சட்டபூர்வமான அந்த கிராமத்து பஞ்சாயத்து அமைப்பு அமர்ந்து பேசி அவர்களுக்கு எத்தனை ஆசிரியர்கள் தேவைபடுவார்கள் என்று முடிவெடுத்து வேலையில் அமர்த்தட்டுமே ?

ரீ.டை - இது மீண்டும் கல்வித்துறை இயக்குனருக்கே செல்லுமா ?
 
அ.கே - இல்லை,ஒரு ஆசிரியர் அவரது பணியை சரியாக செய்யவில்லை என்றால் அவரை அந்த கிராம சபையே பணி நீக்கம் செய்யலாமே ,அவர்களின் பிள்ளைகள் தானே அங்கு பயில்கிறார்கள் ,ஏன் ஆசிரியர்களை ராஞ்சியோ,லக்நோவோ இல்லை டெல்லியோ பணியில் அமர்த்த வேண்டும் ?

இப்பொழுது நகரங்களையே எடுத்து கொள்ளுங்கள் ,நான் கெளசாம்பியில் உள்ளேன் ,எனது பகுதியில் சுமார் 4000 குடும்பங்கள் வசிக்கின்றன ,சுமார் 1.3 கோடி ரூபாய் வீட்டுவரியாக வசூலிக்க படுகிறது ,ஆனால் நல திட்டங்கள் பற்றி நாங்கள் சொல்வது எதுவுமே காதில் விழுவதில்லை ,இவர்களுடைய செயல்பாடு சரியாக இல்லை என்பதை உணர்ந்தேன் ,நான் ஆர்.டி.ஐ மூலம் எனது வீட்டிற்கு முன் உள்ள சாலை ஏன் இப்படி மேடுபள்ளங்களாக இருக்கிறது என்று கேட்டேன் .சொல்லபோனால் அது சாலையே இல்லை ,மேலும் எங்கள் - கெளசாம்பி பகுதிக்காக கடந்த இரண்டு ஆண்டுகளில் என்ன செலவுகள் செய்யப்பட்டுள்ளன என்று கேட்டேன் .உண்மையில் நான் பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளானேன் ,எனது வீட்டிற்கு முன் சாலைக்கு 42 லட்சம் செலவு செய்ததாக அதில் இருக்கிறது ,ஆனால் அங்கு சாலையே இல்லை !

ரீ-டை- அப்படி என்றால் அந்த பணம் எங்கு சென்றது ?
 
அ.கே- அவர்கள் ரசீதுகள் மற்றும் அளவீடுகளின் நகல்களை எனக்கு அளித்தனர் ,அதை வைத்துகொண்டு நான் இனி என்ன செய்ய முடியும் ? ஆர்.டி ஐ இங்கு ஸ்தம்பித்து நின்றுவிடும் ,இதற்கு மேல் செல்ல முடியாது .இதன் மொத்த செயல்பாட்டில் நமது கட்டுப்பாடில் சில விஷயங்கள் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தோம் முதலில் எங்கள் பகுதியில் வசூலிக்கப்படும் இந்த பணம் எங்கு செல்ல வேண்டும் என்பதை முடிவெடுக்கும் உரிமை வேண்டும் ,பிறகு இராண்டாவதாக வேலைகளில் எங்களுக்கு திருப்தி ஏற்பட்டால் ஒழிய ஒப்பந்தகாரர்களுக்கு பணம் முழுவதும் கொடுக்க கூடாது .

அரசு இந்த 1.3 கோடிகளில் ஒரு 30 லட்சத்தயாவது மக்களின் தேவைகளுக்கேற்ப அவர்களின் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து செயல்பட்டால் மக்கள் மகிழ்ந்து இருப்பார்கள் .பிறகு மற்றுமொரு பிரச்சனை ,அதிகாரிகள் எல்லார் வீடுகளிலும் வீட்டு வரி வசூலிக்கவில்லை என்பது தெரிந்தது ,ஆய்வாளர் நமது பகுதிக்கு வந்து நம் மக்களுக்கு எவ்வண்ணம் வரி கட்டாமல் தப்பிப்பது என்பதை கற்றுகொடுத்துவிட்டு செல்வார்கள் .பத்து வருடங்களாக வரி கட்டாத குடும்பங்களை கூட நாங்கள் சந்தித்தோம் ,ஏன் என்றால் ஆய்வாளர் வந்து " எனக்கு ஒரு 2000 கொடுங்கள் உங்களது கோப்பை கானமலடித்துவிடுகிறேன் " எனும் உத்திரவாதம் .பின்னர் நாங்கள் வீடுவீடாக சென்று நூறு சதவிகித வரியை வசூலித்தோம்.

ரீ.டை- ஆக இந்த பணத்தை நீங்கள் அரசாங்கத்திற்கு திருப்பி அளித்தீர்களா ?
 
அ.கே -நாங்கள் அவர்களிடம் சொன்னது " அனைவரின் காசோலைகளும் எங்களிடம் உள்ளது ,எங்களுக்கு முடிவெடுக்கும் உரிமை வழங்கப்படவில்லை என்றால் நாங்கள் யாரும் வீட்டு வரி செலுத்தபோவதில்லை" கொஞ்ச காலம் கழித்து நகராட்சி ஆணையர் எங்கள் பகுதிக்கு வந்தார் "அரவிந்த்ஜி நமக்குள் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு கொள்வோம் ,நானும் கையெழுத்து இடுகிறேன்,அந்த உரிமையை உங்களுக்கே தருகிறேன் தயவு செய்து இப்பொழுது காசோலைகளை கொடுத்து விடுங்கள் " ,நாங்கள் நம்பிக்கையோடு காசோலைகளை கொடுத்தோம் ,ஆனால் மறுநாளே அவரது நிலைப்பாடு அப்படியே மாறியது "இதற்கு எனக்கு அதிகாரம் இல்லை " என்றார் ,மக்கள் மீண்டும் சோர்வடைந்துவிட்டனர்.

எங்கள் பகுதியில் பல சாலைகள் பொத்தலாக இருக்கிறது ,அனைத்து சாலைகளையும் சீர் செய்ய சுமார் 30-40 லட்சம் தேவைப்படும் என்று கணக்கிட்டோம் ,ஆனால் அரசோ அந்த சாலைகளை சீர் செய்துவிட்டதாக கணக்கு காண்பிக்கிறது .ஆக மக்களிடம் இந்த முடிவெடுக்கும் அதிகாரம் இருந்தால் ,பிராந்திய பிரச்சனைகளுக்கு சரியாக முன்னுரிமை அளிக்கப்படும் ,மேலும் செலவீனங்கள் வெகுவாக குறையும் ,ஊழலும் இல்லாமல் போகும்
பாகிஸ்தானோடு நமது உறவு எப்படி இருக்க வேண்டும் என்று முடிவெடுக்கும் உரிமையை நான் கோரவில்லை ,நமது அன்றாட தேவைகளான குடிநீர்,சாலைகள்,ஆசிரியர் ,மின்சாரம் போன்றவற்றை பற்றியே பேசுகிறேன் .இன்று இந்த தேவைகளை எல்லாம் எடுத்து சொல்ல சரியான தளங்கள் இல்லை ,எங்கோ சம்பந்தமே இல்லாமல் ஓரிடத்தில் எடுக்கப்படும் முடிவுகள் நம்மீது திணிக்கபடுகிரதே என்பதே என் வருத்தம்.

ரீ.டை - இந்த மாற்றங்கள் மாறினால் நிச்சயம் ஊழல் குறையும் ..
 
அ.கே- ஊழலே மிக பெரிய பிரச்சனை என்று நாங்கள் எண்ணினோம் ,அதை தீர்க்க வேண்டும் என்று முயற்சித்தோம் ,ஆனால் உண்மையில் ஊழல் உள்ளே இருக்கும் நோயின் ஒரு அறிகுறியே என்பதை புரிந்துகொண்டோம் .உணமையான நோய் என்பது - மக்களுக்கு இந்த அமைப்பில் சுத்தமாக அதிகாரம் என்பதே இல்லை என்பதே,அவர்களின் கருத்துக்களுக்கு எந்தவித முக்கியத்துவமோ மதிப்போ இல்லை .

ரீ .டை - உலகெங்கிலும் நடக்கும் ஊழலை கண்காணிக்கும் அமைப்பான "டிரான்ஸ்பறேன்சி இன்டெர்நேஷனல்" போன்ற அமைப்புகளின் கூற்று படி ,அதிக ஊழலில் ஈடுபடும் நாடுகள் அனைத்துமே ஏழ்மையில் மூழ்கி உள்ளதே ,ஏன் இப்படி ?
 
அ.கே-இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று மிகவும் நெருங்கியது என்பதே என் கருத்து ,ஊழல் மலிந்து இருப்பதாலையே நாம் ஏழ்மையில் இருக்கிறோம் ,ஒன்றுக்கு மற்றொன்று உணவாக ஆகி வளர்கிறது .இது கோழியையும் ,முட்டையையும் போல, ஏழ்மை மக்களை பலவீனமாக்குகிறது ,அதனால் அது மேலும் ஊழலை உருவாக்குகிறது .

ரீ.டை -நீங்கள் மக்களுக்காக இவ்வாறு தொடர்ந்து செயல்பட்டுவருகிரீர்கள் ,நீங்கள் வித்தியாசமானவர் தான் ,உங்கள் நட்பும் சொந்தமும் உங்களை எப்படி பார்க்கிறார்கள் ?
 
அ.கே- உண்மையில் ,சிலருக்கு மின் இணைப்பு பெற்று தருவது,சிலருக்கு பணத்தை மீட்டு தருவது போன்ற எளிய காரியங்களை செய்வதை பார்த்து , பலரும் எனக்கு மூளை குழம்பிவிட்டது என்றே எண்ணினார்கள் .மகசேசே விருது பெற்ற பின் என்னுடைய மாமா ஒருவர் சொன்னார் " இவன் அதிகமாக படித்து தன்னை கெடுத்து கொண்டான் என்றே எண்ணினேன் ,ஆனால் அவனுக்கு விருது கிடைத்துள்ளது ,ஏதோ உருப்படியாக செய்து வருகிறான் என்றே தோன்றுகிறது "

ரீ .டை -இந்த நாட்டின் எதிர்காலம் எப்படி இருக்கிறது ?
 
அ.கே -நம் மக்கள் துவளாமல் உற்சாகத்தோடு செயல்படும் வரை எதிர்காலம் நிச்சயம் ஒளிமயமாகவே இருக்கிறது .

 

Monday, August 29, 2011

உரிமை பிரச்சனை - ஒரு வெட்க கேடு !

எம்பிக்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக நடிகர் ஓம்புரி மற்றும் கிரண்பேடி ஆகியோருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் உரிமைமீறல் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.இந்த தீர்மானம் மாநிலங்களவையில் இன்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.                                                             

அரசியல்வாதிகளை படிக்காதவர்கள் என்று நடிகர் ஓம்புரி ராம்லீலா மைதானத்தில் வெள்ளிக்கிழமையன்று தெரிவித்திருந்தார். படிக்காத ஒரு தலைவரை ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் வணங்கும்போது நான் அவமானமாக  உணர்ந்தேன் என ஓம்புரி தெரிவித்திருந்தார்.                         
எம்பிக்கள் இரட்டை வேடம் போடுகின்றனர் என கிரண்பேடியும் விமர்சனம் செய்திருந்தார். ஒரு முகமூடிக்குப் பின்னால் நமது அரசியல்வாதிகள் ஒளிந்துகொண்டுள்ளனர் என்ற ரீதியில் அவர் பேசியிருந்தார்.                          

இந்த பேச்சுக்களுக்காக சமாஜவாதி கட்சியைச் சேர்ந்த எம்பி ராம் கோபால் வர்மா மற்றும் சுயேச்சை எம்பி முகமது ஆதீப் ஆகியோர் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.

வாழ்க பாராளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகள்!

அன்னா ஹசாரே ஒரு மாவோயிஸ்ட், தீவிரவாதி, தலைமுதல் கால் வரை ஊழலில் ஊறிப்போனவர் என ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறினார் காங்கிரஸ் எம்பி மணீஸ்திவாரி. இப்படி பேசுவதும் உறுப்பினர்களின் உரிமையோ?

2G வழக்கு, காமன் வெல்த் கேம் ஆகியவற்றில்  ராஜா, கனிமொழி, கல்மாடி ஆகியோரின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. திகார் ஜேயிலில் உள்ளனர். இவர்கள் மூவரும் எம்பிக்கள்.  தங்கள் மீது வழக்கு தொடர்ந்து ஜெயிலில் அடைத்தது  உரிமை மீறல் என  பாராளுமன்றத்தில்  பிரச்சனையை  கொண்டு வந்தாலும் ஆச்சரியமில்லை!

அன்னா ஹசாரே போன்று ஆயிரம் இந்தியன் தாத்தாக்கள் வந்தாலும் இவர்கள் திருந்தப்போவதில்லை!

 

Friday, August 12, 2011

நீங்களும் காளான் வளர்க்கலாம் ............1

காளான்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதுடன், பல வியாதிகளுக்கு இயற்கை மருந்தாகவும் இருப்பதால், இது மக்களால் விரும்பி சாப்பிடப்படும் பொருளாகிவிட்டது. வெளி நாடுகளில், வீடுகளில் தங்கள் தேவையை பூர்த்தி செய்யவும் பொழுதுபோக்காவும் செய்யப்படுவதுடன் பெரிய நிறுவனங்கள் தானியங்கி கருவிகளை உபயோகித்து தொழில் ரீதியாகவும் செய்கின்றன. குறைந்த முதலீடு, அதிக லாபம் தரும் தொழில். காலி இடம் இருப்பவர்கள் ஷெட் அமைத்து செய்யலாம். அல்லது வீட்டின் ஒரு அறையில் வளர்க்கலாம். இதை வளர்க்க தண்ணீர், உரம் இவை எதுவுமே தேவை இல்லை.

காளான்களில் பல வகைகள் இருந்தாலும் சாப்பிடக்கூடிய ரகங்கள் சில மட்டுமே. அவற்றில் நம் நாட்டின் சீதோஷ்ண நிலையில் வளர்க்க கூடிய ரகங்களான சிப்பி காளான், பால் காளான் இவற்றில் சிப்பி காளான் மட்டுமே ஆண்டு முழுவதும் வளர்க்கக்கூடியது. அதிக பலன் தரக்கூடியது என்பதால் அதைப்பற்றி பார்க்கலாம்.

 சிப்பி காளான் (Oyster Mushrooms)

மற்ற தாவரங்களைப்போல காளானுக்கு விதை கிடையாது. ஸ்போர்ஸ் (Spores ) எனப்படும் நுண்ணுயிர் விதைகள் மட்டுமே உண்டு. இதை சேகரிப்பதும் அதன் மூலம் வளரச்செய்வதும் கடினம் என்பதால் டிஷ்யூ கல்சர் எனப்படும் திசு வளர்ப்பின் மூலம் செய்யப்படுகிறது. முதலில் பி.டி.ஏ எனப்படும்  கடல்பாசி ஊடகத்தில் வளர்க்கப்பட்டு பின் அது தானியத்தில் வளர்க்கப்படுகிறது. இறுதியாக இது வைக்கோலில் வளர்க்கப்பட்டு, காளான் அறுவடை செய்யப்படுகிறது. காளான் வளர்ப்பை இரண்டு பிரிவாக பிரிக்கலாம்.

1. திசு வளர்ப்பு செய்து அதன் மூலம் படுக்கை வித்தை தயார் செய்தல்.

பி.டி.ஏ  ஊடகத்தை தயர்ர் செய்தல்
காளான் திசுவை ஊடகத்தில் வளர்த்தல்
தாய் வித்து தயாரித்தல் (Mother spawn)
படுக்கை வித்து தயாரித்தல் (Bed spawn)

2. காளான் வளர்ப்புக்கு தேவையான படுக்கையை தயார் செய்து அதில் படுக்கை வித்துகளை தூவி காளானை வளர்த்து அறுவடை செய்து விற்பனை செய்தல்.

வைக்கோலை பக்குவப்படுத்துதல்
படுக்கை தயாரித்தல்
வளர்ப்பு
அறுவடை செய்து விற்பனை செய்தல்

நாமே படுக்கை வித்தை தயார் செய்து காளான் வளர்ப்பது என்பது இத்தொழிலுக்கு புதிதாக வருபவர்களுக்கு சிரமமான காரியம். எனவே படுக்கை வித்தை வாங்கி காளான் வளர்ப்பதை பற்றி முதலில் விரிவாக பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

1. படுக்கை வித்து (Bed Spawn) = 5 பாக்கெட்
2. வைக்கோல் =  10 கிலோ
3. பிளாஸ்டிக் பை ( 30 cm X 60 cm )  = 10 
முதலில் வைக்கோலை எடுத்து நன்றாக உதறி சுத்தம் செய்துவிட்டு அதை 3-4 அங்குலம் நீளமுள்ளதாக சிறு துண்டுகளாக வெட்ட வேண்டும். அதன் பின் தண்ணீரில் சுமார் 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பின் அதை எடுத்து தண்ணீர் உள்ள பாத்திரத்தில் போட்டு சுமார் அரை மணி நேரம் வேகவிடவும். பின் தண்ணீரிலிருந்து எடுத்து நிழலில், சுத்தமான தரையில் பிளாஸ்டிக் பேப்பரில் உதிரியாக பரப்பி காயவிடவும். 50% ஈரப்பதம் வரும் வரை அதை உலரவிட்டு எடுக்கவும். அதாவது வைக்கோலை கையால் எடுத்தால் ஈரம் இருக்கவேண்டும். ஆனால் அதை பிழிந்தால் தண்ணீர் சொட்டக்கூடாது. இதுதான் சரியான பக்குவம்.  இவ்வாறும் படுக்கைக்கு வைக்கோலை தயார் செய்யலாம். அல்லது ரசாயன பொருளை பயன்படுத்தியும் தயார் செய்யலாம்.

100 லிட்டர் தண்ணீருக்கு 7.5 கிராம் கார்பெண்டாசிம் (Carbendazim) பவுடர், 50 மி.லி பார்மாலின் திரவம் என்ற கணக்கில் தண்ணீரில் கலந்து சுமார் 12 மணி நேரம் அதில் வைக்கோலை ஊற வைக்க வேண்டும். அதன் பின் அதை எடுத்து முன்பு கூறிய படி 50% ஈரப்பதம் வரும் வரை நிழலில் உலர விட வேண்டும். வைக்கோல்  தயார் நிலைக்கு வந்தவுடன், படுக்கையை தயார் செய்து விட வேண்டும்.  வைக்கோல் காய்ந்துவிட்டால் அதை உபயோகிக்க முடியாது.

 பிளாஸ்டிக் பையை (30 cm X 60 cm) எடுத்து அதன் அடிப்பக்கத்தை சனல் அல்லது ரப்பர் பேண்ட் போட்டு கட்டிவிடவும். பின்  வெளிப்பக்கம் உள்ளே வருமாறு பையை திருப்பி விடவும் .இவ்வாறு செய்வதால் படுக்கை உருளை வடிவில் கிடைக்கும்.

படுக்கை வித்து பையிலிருந்து வித்தை வெளியே எடுக்கவும். இது ஒரு கட்டி போல இருக்கும். அதை இரண்டாக உடைத்து கொள்ளவும். ஒரு பாக்கெட் வித்தையை இரண்டு படுக்கைகளுக்கு உபயோகிக்கலாம். உடைத்த ஒருபகுதியை  உதிர்த்து வைத்துக்கொள்ளவும்.

அதனுள் வைக்கோலை போட்டு நன்கு அழுத்தவும்.சுமார் 3 அங்குலம் உயரம் வந்த பின் உத்தேசமாக நாம் உதிர்த்து வைத்திருக்கும் விதையில் ஐந்தில் ஒருபகுதியை கையில் எடுத்து  பையின் ஓரத்தில் வைக்கோலின் மீது பரவலாக தூவவும். அதன் பின் முன்பு செய்தது போலவே 3 அங்குலத்திற்கு வைக்கோலை நிரப்பி வித்தை தூவவும். இவ்வாறு ஐந்து அடுக்குகள் வைக்கோலை நிரப்ப வேண்டும். பின் பையின் வாயை வைக்கோல் இருக்கமாக இருக்கும் படி கயிற்றால் கட்டி விடவேண்டும்.

அதன் பின் பையில் பரவலாக நிறைய ஓட்டைகளை  சுத்தமான ஊசியால் போடவேண்டும். இவ்வாறு செய்வது பையினுள் இருக்கும் காளான் விதையின் மேல் படர்ந்திருக்கும் மைசீலியம் என்ற வெள்ளை நிறப்பொருள்  காளானாக வளர்வதற்கு தேவையான காற்றை பெறுவதற்கு ஆகும். இப்பொழுது படுக்கை தயாராகி விட்டது.

இது போலவே இதர படுக்கைகளையும் தயார் செய்ய வேண்டும்.

படுக்கை வித்து:  இது தமிழ் நாடு விவசாய கல்லூரியில் (கோயம்புத்தூர்) கிடைக்கிறது. 300 கிராம் எடை கொண்ட வித்து பையின் விலை 30 ரூபாய். காளான் வளர்ப்பவர்களில் பலர் சொந்த உபயோகத்திற்காகவும், விற்பனைக்காகவும் படுக்கை வித்து தயார் செய்கிறார்கள். அவர்களிடமிருந்தும் பெறலாம்.

தொடரும் ...................