Thursday, January 20, 2011

ஏன் என்று சொல்லுங்கள் (2) - சட்டம் நம் கையில்

இந்தியா சுதந்திரம் அடைந்த பின், நம் நாட்டிற்கு ஏற்பட்ட சவால் மிகவும் கடினமானது. காரணம் அரசை அமைத்து நடத்தும் அனுபவம் கிடையாது. நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற உத்வேகம் இருந்ததே ஒழிய, அதற்கான பாதை பற்றிய தெளிவு இல்லை. இருப்பினும் நாட்டு நலனை மட்டுமே கருத்தில் கொண்டு  டிரையல் - எரர் முறையில் அரசு செயல்பட ஆரம்பித்தது

ஏற்கனவே பெரும்பாண்மை மக்களின் ஜீவாதாரமாக இருக்கும் விவசாயம், கால்நடை பராமரிப்பு, கிராமிய தொழிகள் இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில்மத்திய அரசு முதல் ஐந்தாண்டு திட்டத்தில் விவசாய வளர்சிக்கும், 2-ம் ஐந்தாண்டு திட்டத்தில் தொழிலுக்கும், மூன்றாம் ஐந்தாண்டு திட்டத்தில் இரண்டுக்கும் சம முக்கியத்துவம் கொடுத்து திட்டம் செயல்படுத்தப்பட்டது.

ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியனிலும், விவசாய அதிகாரியும், களப்பணியாளர்களாக கிராம சேவக்களும் நியமிக்கப்பட்டனர். கிராம சேவக்குகள் காலையில் தங்கள் பகுதியிலுள்ள விவசாயிகளை சந்தித்து அரசின் திட்டங்கள், தரமான விதைகள், உரம், பூச்சி கொல்லி மருந்து விபரங்களையும் கூறுவதுடன் கால்நடை பராமரிப்பு அதாவது அவற்றிற்கு வரும் நோய், பாதிப்பு பற்றி விளக்குவார்கள். இந்த நடைமுறை என் ஊரில் ( நெல்லை மாவட்டம் -செங்கோட்டையில்) 1985 வரை செயல்படுத்தப்பட்டு வந்தது. 1986 -ல் நான் சென்னைக்கு வந்துவிட்டதால் இன்றைய நிலை என்ன என்பது தெரியவில்லை. நிச்சயமாக இப்பொழுது அந்நிலை இருக்க வாய்ப்பு கிடையாது.

இதனால் கிராமப்பகுதிகளில், விவசாய கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்பட்டன. அவற்றின் மூலம் அங்கத்தினர்களுக்கு பயிர் கடன் வழங்கப்பட்டன. கால்நடை வளர்ப்போர் கூடுறவு சங்கங்கள், மற்றும் கிராமிய தொழில் கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்பட்டு கிராம மக்களின் வருமானம் பெருகி வாழ்க்கை தரம் உயர்ந்தது. இது நான் கண்கூடாக கண்ட விஷயம்.

உதாரணத்திற்கு என் ஊரையே எடுத்துக்கொள்ளலாம். எனது ஊர் திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை. எனது ஊரை சுற்றி பல கிராமங்கள்.அடிப்படை தொழில் விவசாயம் கால்நடை வளர்ப்பு மற்றும் கிராமிய தொழில்கள். இங்கு துவக்கப்பட்ட கூட்டுறவு சங்கங்கள்
1. விவசாய கூட்டுறவு சங்கங்கள். - இதில் சிறு விவசாயிகள் அங்கத்தினராகி விவசாயகடன் பெறுவர்.
2. கூட்டுறவு பால்பண்ணைகள். - கறவை மாடு வைத்திருக்கும் அனைவரும் இதில் அங்கத்தினராகி மாடு வாங்க கடன் பெறுவதுடன் உற்பத்தி செய்யப்படும் பால் சங்கத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டு, பணம் வாரா வாரம் பட்டுவாடா செய்யப்படும்.
3. கூடை முடைவோர் கூட்டுறவு சங்கம். - இத்தொழிலை செய்பவர்கள் குறவர் இனத்தை சேர்ந்தவர்கள். சுமார் 150-200 குடும்பங்கள் உண்டு. இவர்களின் தொழில் பன்றி வளர்ப்பு, தேங்காய் பறித்தல், மூங்கிலிலான அழுக்கு துணி போடும் கூடை, காய்கறி கூடை, பழக்கூடைகள். ஆகிவற்றை செய்தல்.
4. மட்பாண்டம் செய்வோர் கூட்டுறவு சங்கம்.- உள்ளூர் தேவைக்கு மட்டுமின்றி கேரளாவிற்கும் இங்கிருந்து லாரி மூலம் அனுப்பபடுகிறது.
5. பிரம்பு தொழில் செய்வோர் கூடுறவு சங்கம். - இச்சங்கம் பிரம்பிலான நாற்காலி, டீபாய், ஊஞ்சல், மற்றும் கலைபொருட்ட்களை உற்பத்தி செய்கிறது.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், தொழில் செய்பவர்கள் மட்டுமே அங்கத்தினராக இருந்தனர். அரசியல் தலையீடு கிடையாது. அதனால் எவ்வித ஊழலுமின்றி செயல்பட்டு, மக்கள் பயனடைந்தனர். விவசாயம், கிராமிய தொழில் வளர்ச்சியடைந்து கிராம பொருளாதாரம் முன்னேற ஆரம்பித்தது.

தொடரும்..........


2 comments:

  1. என்ன சார்,முன்ன மாதிரி பரபரப்பான பதிவுகளை காணோமே?

    ReplyDelete