Friday, April 22, 2011

கனிமொழி, தயாளு அம்மாள் கைது செய்யப்படுவார்களா?


வரும் திங்கட்கிழமையன்று ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான 2வது குற்றப்பத்திரிகையை தனி நீதிமன்றத்தில் சி.பி.ஐ தாக்கல் செய்ய உள்ளது. அதில் கலைஞர் டிவி 200 கோடி ரூபாய் பெற்ற விவகாரத்தில் கனிமொழி, தயாளு அம்மாள் மற்றும் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகிய மூவர் பெயரும் இடம் பெற்றுள்ளது. எனவே இந்த மூவரையும் கைது செய்ய வேண்டிய சூழ்நிலையில் சி.பி.ஐ உள்ளது. ஆனால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் முன்பு இவர்கள் கைது செய்யப்படுவார்களா? அல்லது பின்னால் கைது செய்யப்படுவார்களா? என்பது தெரியவில்லை

Tuesday, April 12, 2011

நல்வாழ்த்துக்கள்! உங்களுக்கு ஆப்பு நிச்சயம்!தமிழக வாக்கு பதிவு இயந்திரங்களே (வாக்காள பெருமக்களே)!. நாளைக்கு வாக்கு பதிவு நாள். நீங்கள் விரும்பும் நபருக்கு வாக்களிக்க போகிறீர்கள். அது எதிராளிக்கு வைக்கும் ஆப்பு! வரும் ஐந்து ஆண்டுகளுக்கு நீங்கள் கஷ்டப்பட உங்களுக்கு நீங்களே வைத்து கொள்ளும் ஆப்பும் கூட! கஷ்ட காலம். விதி யாரை விட்டது? நல்வாழ்த்துக்கள்Monday, April 11, 2011

கரை சேருமா லோக்பால் மசோதா? - ஒரு அலசல்.

காந்திய வழி போராட்டமே மக்களுக்கு வெற்றியை தேடித்தரும் என்பது இந்திய சுதந்திரத்தின் மூலம் உறுதியானது. பல நாடுகளில் இப்பாதை உதவியது. அதனால்த்தான் காந்தி உலக மக்களளால் மதிக்கப்படுகிறார். எகிப்தில் நடந்த மக்கள் புரட்சி வெற்றி பெற்றதன் மூலம் மீண்டும் காந்திய வழி போராட்டமே எக்காலத்திற்கும் சிறந்தது என நிரூபிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைமையில் அமைந்த கூட்டணி அரசில் 2G ஸ்பெக்ட்ரம் ஊழல், மகாராஷ்டிராவில் ஆதர்ஷ்  வீட்டு வசதி சங்க ஊழல், ராணுவ நில ஊழல், காமன் வெல்த் கேம் ஊழல், கருப்பு பண விவகாரம், இஸ்ரோவின் S-பாண்ட் ஊழல் என தொடர் ஊழல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆனால் ராஜாவை தவிர இந்த ஊழல்களில் தொடர்புடைய எந்த அரசியல்வாதியையும் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 2G வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிப்பதால்த்தான் வெறு வழியின்றி ராஜா கைது செய்யப்பட்டுள்ளார்.

சுதந்திரம் அடைந்ததிலிருந்து இன்றுவரை ஊழல் செய்த எந்த அரசியல்வாதியும், அதற்கு உடந்தையாக இருந்த உயர் அதிகாரியும் தண்டிக்கப்படவே இல்லை. காரணம் தாங்கள் தப்பித்துக்கொளும் வகையிலேயே இந்த ஊழல் அரசியல்வாதிகள் சட்டத்தை பல் பிடுங்கிய பாம்பாக ஆக்கியதே .

கடந்த நாற்பது ஆண்டுகாலமாக ஊழல் செய்யும் அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் தண்டிக்க  வகை செய்யும் சட்டத்திற்கான மசோதாவை சுமார் பத்து தடவை கொண்டு வந்து நிறைவேற்ற முடியாமல் போனது. இவர்கள் தயார் செய்த மசோதா வெறும் கண் துடைப்பே. ஊழல் செய்யும் அரசியல்வாதிகள், தங்களை தண்டிக்கும் வகையில்  ஒரு கடுமையான சட்டத்தை கொண்டு வருவார்களா?

சமீப காலமாக கின்னஸ் சாதனை படைக்கும் அளவுக்கு லட்சம் கோடி என ஊழல்கள் விசுபரூபம் எடுக்க, வெறுத்துப்போன நாம் செய்வதறியாமல் அதிர்ச்சியில் ஆடிப்போய்விட்டோம். ஏற்கனவே பல முறை ஊழல் ஒழிப்புக்கான லோக்பால் மற்றும் லோக் அயுக்த்தா சட்டத்தை நிறைவேற்றுங்கள் என பொது மக்கள் சார்பாக காந்தியவாதியும் சமூக நல ஆர்வலருமாகிய அன்னாஹசாரே, முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியும் தற்பொழுது கர்நாடகாவில் லோக் அயுக்தாவின் தலைவருமான சந்தோஷ் ஹெக்டே மற்றும் பரிவர்த்தன் போன்ற பல பொது நல அமைப்புகள் மத்திய அரசிடம் கூறி வந்தன. ஆனால் அரசு தண்ணி காட்டி வந்தது. இந் நிலையில்தான் அன்னாஹசாரே, அர்விந்த் கெஜ்ரிவால், (RTI ACTIVIST) கிரன்பேடி (ஐ.பி.எஸ்) , சுவாமி அக்கினிவேஷ் ஆகியோர் ஒருங்கிணைந்து, லோக்பால் சட்டத்தை கொண்டுவர, அரசை வலியுறுத்தி "சாகும் வரை உண்ணாவிரதம்" என்ற போராட்டத்தை துவக்க போவதாக அறிவித்தனர். அதன்படி அன்னாஹசாரேயின் தலைமையில் நூற்றுக்கணக்கானவர்கள் உண்ணாவிரதத்தை ஏப்ரல் 5-ம் தேதியன்று டெல்லியில் ஜந்தர் மந்தரில் துவங்கினர்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெண்கள், ஆண்கள், முதியவர்கள் என சமுதாய அந்தஸ்து, ஜாதி, மத பாகுபாடு இன்றி ஆயிரக்கணக்கில் மக்கள்  உண்ணாவிரத போராட்டத்திற்கு அதராவாக அங்கு குவிந்தனர். எல்லா மாநிலங்களிலும் ஆதவாக மக்கள் மெழுகுவர்த்தி ஏற்றி ஆதரவு தெரிவித்தனர். வரைவு மசோதா தயாரிக்கும் குழுவில் சட்டப்படி அமைச்சர்களே பங்கேற்கமுடியும் என விதண்டா விவாதம் செய்த அரசு மக்களின் எழுச்சியை கண்டு தன் நிலைப்பாட்டை மாற்றி 10 நபர்கள் கொண்ட கமிட்டியில் 5 பொதுமக்களும் (சிவில் சொசைட்டியை சேர்ந்தவர்களும்), 5அமைச்சர்களும் பங்கேற்க சம்மதித்தது. மேலும் தாங்கள் சேர்மன் நியமிப்பதை போலவே, கோ- சேர்மனை நியமிக்க போராட்ட குழுவினர் (மக்கள்) நியமிக்கவும் சம்மதித்தது. அதன் படி ஏப்ரல் 9-ம் தேதி அரசாணை, கெஸட்டில் வெளியிட்டது. அதன் பின் அன்னாஹசாரே உண்ணாவிரதத்தை முடித்தார்.

வரைவு மசோதவை தயாரிக்கும் கமிட்டி அங்கத்தினர்கள்.

ஏற்கனவே தாங்கள் தயாரித்துள்ள வரைவு மசோதாவை அன்னா ஹசேராவுக்கு வழங்கியுள்ளது. அதைப்போலவே அன்னா ஹசேரா தங்கள் குழு தயாரித்துள்ள வரைவு மசோதவை அரசிடம் கொடுத்துள்ளது. அரசு தங்கள் தரப்பில் பிரனாப் முகர்ஜியை சேர்மன் ஆகவும், சிதம்பரம், வீரப்ப மொய்லி, கபில் சிபல், குர்ஷித் ஆகியோரை அங்கத்தினராகவும் நியமித்துள்ளது. அன்னா ஹசாரே பொதுமக்கள் தரப்பில் ஷாந்தி பூஷனை கோ-சேர்மனாகவும், பிரஷாந்த் பூஷன், அர்விந்த் கெஜ்ரிவால், சந்தோஷ் ஹெக்டே மற்றும் தான் உட்பட நால்வரை அங்கத்தினராகவும் அறிவித்துள்ளார். இந்த கமிட்டி ஜூன்30-ம் தேதிக்குள்  வரைவு மசோதாவை தயாரித்து, வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில்  அதை நிறைவேற்ற உள்ளது. இவைதான் இன்றைய நிலை.

இனி அரசின் வரைவு மசோதாவிற்கும் பொதுமக்கள் தரப்பில் தயாரிக்கப்பட்டுள்ள மசோதாவிற்கும் உள்ள வேறுபாடுகளை கீழே பார்ப்போம்.

அரசின் வரைவு மசோதா.

1.  பொதுமக்கள் மத்திய அரசு சம்பந்தப்பட்ட புகார்களை பாராளுமன்ற சபாநாயகருக்கு (லோக் சபா / ராஜ்ய சபா) அனுப்பவேண்டும். அவர் விருப்பப்பட்டால் அந்த புகார் விசாரணைக்கு லோக்பால் அமைப்புக்கு அனுப்பப்படும். 

(நம் பாராளுமன்ற நடைமுறையின் படி ஆளும் கட்சி எம்.பி-யே சபாநாயகராக இருப்பார். அவர் ஆளும் கட்சிக்கு சாதகமாகவே செயல்படுவார்)

2. லோக்பால் ஒரு ஆலோசனை கூறும் அமைப்பு மட்டுமே. தன் விசாரணை அறிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு அனுப்பவேண்டும். அதன் மீது நடவடிக்கை எடுப்பதும் புறக்கணிப்பதும் அவர் அதிகாரத்திற்குட்பட்டது. அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட புகார்களுக்கு பிரதமர் தான் முடிவெடுப்பார். பிரதமர் மற்றும் எம்.பிக்கள் சம்பந்தப்பட்ட புகார்களுக்கு சபாநாயகர் முடிவெடுப்பார்.

(அமைச்சர்கள் அனைவரும் ஆளும் கட்சி அல்லது கூட்டணியை சார்ந்தவர்களாகவே இருப்பர். எனவே  பிரதமர் நடவடிக்கை எடுக்க வாய்ப்பே கிடையாது.) 


3.லோக்பால் அமைப்பிற்கு, முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்யும் (காவல்துறைக்குள்ள) அதிகாரம் கிடையாது.


யார் முதல் தகவல் அறிக்கையை (FIR) பதிவு செய்வார்கள்?, அந்த வழக்குக்காக வழக்கறிஞரை நியமிப்பது யார்? அந்த வழக்கை நடத்த வேண்டியவர் யார் என்பது பற்றி விளக்கம் இல்லை.  இது சட்டமாக்கப்பட்ட பின் சி.பி.ஐ எப்படி செயல்படும்?, ஒரே வழக்கை சி.பி.ஐ மற்றும் லோக்பால் இரண்டுமே புலனாய்வு செய்யும் அதிகாரம் உண்டா? என்பது பற்றிய தகவல் இல்லை. 

4. லோக்பால் சட்டத்தின் கீழ் அனுப்பப்படும் புகார் தவறானதாக இருக்கும் பட்சத்தில் மனுதாரருக்கு சிறைத்தண்டனை வழங்கும் அதிகாரம் லோக்பாலுக்கு உண்டு. அதே நேரத்தில் புகார் சரியானது என நிருபிக்கப்பட்டால் ஊழல் செய்தவரை தண்டிக்கும் அதிகாரம் லோக்பாலுக்கு கிடையாது.


இந்த சட்டத்தின் மூலம் லோக்பால் அமைப்பு, ஊழல்வாதியை தண்டிக்க முடியாது. அதேசமயம் ஊழலுக்கு எதிராக போராடுபவர்களின் ஊக்கத்தையும் நடவடிக்கையையும் சிதைக்கும் வகையில் அவர்களுக்கு சிறைதண்டனை வழங்கும். இது அச்சுறுத்தல் நடவடிக்கையே! 

5. இந்த சட்டத்தில் பிரதமர், அமைச்சர்கள், எம்பிக்கள் மீதான புகார்களை மட்டுமே விசாரிக்கும் அதிகாரம் லோக்பால் அமைப்புக்கு உண்டு. இதில் அதிகாரிகள் உட்படமாட்டார்கள்

பெரும்பாலும், அரசியல்வாதிகளும் உயர்மட்ட அதிகாரிகளும் சேர்ந்தே ஊழல் செய்ய முடியும். இதுபோன்ற வழக்குகளில் லோக்பால் அரசியல் வாதிகளையும், சி.வி.சி அதிகாரிகளையும் விசாரிக்கவேண்டும். ஆனால் லோக்பாலுக்கும் சிவிசிக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. ஒரே வழக்கில் இவ்விரண்டு அமைப்பும், புலன்விசாரணைக்கு பின் எதிரும் புதிருமாக  முடிவெடுத்தால் அந்த வழக்கே செத்துவிடும்.

6. லோக்பால் அமைப்பின் உருப்பினர்கள் மூவர். இவர்கள் அனைவரும் ஓய்வு பெற்ற நீதிபதிகள்.

ஓய்வு பெற்ற நீதிபதிகளை மட்டுமே தேர்வு செய்வதற்கான காரணம் கூறப்படவில்லை. மேலும் இது போன்ற பதவிகளை ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு உருவாக்குவதன் மூலம், ஓய்வு பெறும் முன்பே , நீதிபதிகள் இப்பதவிகளை பெறுவதற்காக பணிகாலத்திலேயே அரசின் விருப்பப்படி நடக்கும் நிலை ஏற்படும்.

7. இவர்களை தேர்ந்தெடுக்கும் கமிட்டி உப ஜனாதிபதி, பிரதமர், இரு அவைகளின் சபாநாயகர்கள், இரு அவைகளின் எதிகட்சி தலைவர்கள், சட்ட அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர்களை கொண்டதாக இருக்கும்.     


இந்த கமிட்டியில் உபஜனாதிபதியை தவிர அனைவரும் அரசியல்வாதிகளே!. இவர்கள் தேர்ந்தெடுக்கும் நபர்கள் அரசியல்வாதிகளுக்கு சாதகமாக செயல்படுபவராகவே இருக்க வாய்ப்பு உண்டு. இது இச்சட்டத்தின் அடிப்படை நோக்கத்திற்கு எதிரானது.

8.  லோக்பால் அமைப்புக்கு பிரதமரை விசாரிக்கும் அதிகாரம் கிடையாது.

இதனால் வெளியுறவு, பாதுகாப்பு, ராணுவம் சம்பந்தப்பட்ட ஊழல் புகார்களை விசாரிக்க லோக்பாலுக்கு அதிகாரம் இல்லை. 

9. ஆறு மாதத்திலிருந்து ஒரு வருடத்துக்குள் வழக்கு விசாரணை முடிய வேண்டும். 

எவ்வளவு காலத்திற்குள் வழக்கை முடிக்க வேண்டும் என்ற கால கெடு நிர்ணயிக்கப்படவில்லை.

அரசின் இந்த வரைவு மசோதா சட்டமாக்கப்படுவதன் மூலம் 1% ஊழலை கூட ஒழிக்க முடியாது. இது அரசியல் வாதிகளின் கண் துடைப்பு நாடகமே!

 அன்னாஹசாரேயின் வரைவு மசோதா

1. பொதுமக்கள் புகாரை நேரடியாக பெற்று அல்லது செய்திகளின் அடிப்படையில் தாமாகவே (suo moto) வழக்கை விசாரிக்கும் அதிகாரம் லோக்பாலுக்கு உண்டு.

2. உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் போன்று லோக்பால், அரசு கட்டுப்பாட்டில் இல்லாத தனி அமைப்பு.  முறையான இன்வெஸ்டிகேஷனுக்கு பின்  எந்த ஒரு அரசு அதிகாரியின் மீதும் ஒழுங்கு நடவடிக்கைக்கு உத்தரவிடும் அதிகாரம் உண்டு. அதைப்போலவே கைது செய்யும் அதிகாரமும் உண்டு.

3.   லோக்பாலுக்கு காவல் துறைக்கு  இருப்பதை போலவே முதல் தகவல் அறிக்கையை  பதிவு செய்யவும், நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் அதிகாரம் உண்டு.

4. சி.பி.ஐ யின் லஞ்ச ஒழிப்பு பிரிவு லோக்பாலுடன் இணைக்கப்படும்.

5. பொய்யாக புகார் செய்தால் புகார்தாரருக்கு அபராதம் விதிக்கும் அதிகாரமும் உண்டு.

6. லோக்பால் அமைப்புடன் சி.வி.சி-யும் இதர அரசின் விஜிலியன்ஸ் அமைப்புகளும் இணைக்கப்படும். அரசியல்வாதிகள், அதிகாரிகள், நீதிபதிகள் ஆகியோர் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் அதிகாரம் உண்டு.

7.  லோக்பால் அமைப்பில் 11 அங்கத்தினர் இருப்பார்கள். அதில் ஒருவர் தலைவர். இவர்களில் குறைந்த பட்சம் நான்கு அங்கத்தினராவது சட்ட அறிவு பெற்றவராக இருக்கவேண்டும். எஞ்சியவர்கள் எந்த துறையை சார்ந்தவராகவும் இருக்கலாம். 

 8. லோக்பால் அங்கத்தினர்களை தேர்வு செய்யும் கமிட்டியில் சட்ட பின்னனி உடையவர்கள், தலைமை தேர்தல் அதிகாரி, சி.ஏ.ஜி,  நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள், மேக்சேசே அவார்டு பெற்ற இந்தியாவில் வசிக்கும் இந்தியர்கள் போன்றவர்கள் பங்கேற்பார்கள். இவர்களின் தேர்வு வெளிப்படையானதாக இருக்கும்.     

9.  லோக்பால் வழக்கின் புலன் விசாரணையை ஒரு ஆண்டுக்குள் முடித்து, நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்து அடுத்த ஒரு ஆண்டுக்குள் வழக்கை முடிக்க வேண்டும்.

10. புகார்தாரகளுக்கு சட்டப்படி பாதுகாப்பு வழங்க வழி உண்டு.

11.  ஊழலால் அரசுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை குற்றவாளியிடமிருந்து ஈடாக்கும்.

12.  குற்றத்தின் அடிப்படையில் குற்றவாளிகளுக்கு  ஐந்து ஆண்டு முதல் ஆயுட்கால தண்டனை வரை வழங்க இந்த சட்டம் வழி செய்யும்.

எங்களுக்கு நாங்களே ஆப்பு வைக்க நாங்கள் என்ன முட்டாள்களா? என்று கண்துடைப்பாக சட்டம் இயற்ற விரும்பும் அரசு - ஊழல் செய்பவன் எவனாக இருந்தாலும் தண்டிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட வரைவு மசோதாவை ஏற்கவேண்டும் என உறுதியாக இருக்கும் அன்னாஹசாரே தலைமையிலான மக்கள் இயக்கம். ஆக இந்த பிரச்சனை அவ்வளவு சுலபத்தில் முடிந்துவிட வாய்ப்பு இல்லை. 

மக்கள் இயக்கத்தின் வரைவு மசோதாவை ஏற்று அதை சட்டமாக்காத பட்சத்தில்,  மக்களின் காந்திய வழி கொந்தளிப்பு போராட்டத்தை அரசு சந்திக்க நேரிடும்.

இதற்கிடையில் 92 வயதான "ஷாம்பு தத்தா" என்ற காந்தியவாதி (இந்தியன் தாத்தா) கழிந்த 15 ஆண்டுகளாக இந்த சட்டத்திற்காக போராடி வருகிறார். 11 ஆண்டுகளுக்கு முன் அனைத்து எம்பிகளுக்கும் கேள்வி-பதில் (Questionnaire)  வடிவில் தபால் கார்டில் எழுதி அனுப்பியிருந்தார். மன்மோகன் சிங் உட்பட 100 எம்பிக்கள் ஆதரவளித்து பதில் அனுப்பினர். ஆனால் பலனில்லை. இப்பொழுது இவரும் களம் இறங்கப்போவதாக அறிவித்துள்ளார்.

இவர் ஆங்கிலேயர் காலத்தில் 'வெள்ளையனே வெளியேறு" இயக்கத்தில் சேர்வதற்காக தன் வேலையை துறந்து சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டவர். இந்திரா காந்தியின் அவசரகால நிலை (எமெர்ஜென்ஸி) யின் போது கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தவர். 


Thursday, April 7, 2011

தேர்தல் அறிக்கை

வாக்காள பெருமக்களே வணக்கம். எங்களுக்கு ஏன் நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்பதற்கான விளக்கம் தருகிறோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம்? இதோ தேர்தல் அறிக்கை!

1. 50% மானிய விலையில் மது வழங்குவோம்.

2. குடிப்பவர்களுக்கு இலவச காப்புறுதி திட்டம்.

3.  இலவச ஈமச்சடங்கு.

4. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு அரசே இலவசமாக வப்பாட்டி வழங்கும்.

5. அரசாங்கமே விபச்சார விடுதிகளை மலிவு கட்டணத்தில் நடத்தும்.

6. நாங்கள் சொன்னதை மட்டுமல்ல சொல்லாதவற்றையும் செய்வோம். எனவே உங்கள் வாக்குகளை எங்களின் வேட்பாளர்களுக்கு மண்டை ஓட்டு சின்னத்தில் வாக்களியுங்கள்.

கொள்ளைக்காரர்கள் முன்னேற்ற கழகம்,
12, காந்தி இல்லம்
திருவள்ளுவர் காலணி
கன்ணகி நகர்.
சென்னை

Monday, April 4, 2011

தேவை ஆட்சி மாற்றமா அல்லது சட்ட திருத்தமா?....2

உண்மையிலேயே காந்தி முக்காலமும் உணர்ந்த தீர்க்கதரிசி தான். இல்லையென்றால் அரசியல் கட்சி இல்லாத மக்கள் ஆட்சியே நாட்டுக்கு சிறந்தது என சொல்லியிருக்க மாட்டார். இனி அவர் எப்படிப்பட்ட மக்கள் ஆட்சியை விரும்பினார் என்பதை பார்ப்போம்.

கிராம சுயராஜ்யம் என்பதே மகாத்மாவின் கொள்கை. இந்திய ஜனத்தொகையில் கிட்டதட்ட 70% மக்கள் வாழ்வது கிராமங்களில். அவர்கள் எல்லோரும் விவசாயம் மற்றும் கால்நடை பராமரிப்பு போன்ற தொழில்களையே செய்பவர்கள் அதனால் இந்தியாவின் முன்னேற்றம் என்பது கிராமங்களின் முன்னேற்றத்தை சார்ந்தே அமையும் என்பதால், அமையும் அரசு கிராமமக்களின் அரசாக இருக்கவேண்டும் என மகாத்மா விரும்பினார்.

அரசியல் கட்சிகள் என்ற அமைப்பே இருக்கக்கூடாது.

கிராமங்கள் நகராட்சி, மாநகராட்சி ஆகிய பகுதியை சார்ந்தவர்கள்  எல்லோரும் முறையே தங்கள் உள்ளாட்சி அமைப்பிற்கான பிரதிநிதிகளை இப்பொழுது செய்வதை போலவே தேர்ந்தெடுக்க வேண்டும். அதன்பின் தங்கள் அமைப்பின் தலைவரை தேர்ந்தெடுப்பார்கள்.  

சட்டமன்ற தேர்தலில் நேரடியாக யாரும் போட்டியிட முடியாது. அதாவது அந்த தொகுதிக்குட்பட்ட கிராம பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி போன்றவற்றின் அங்கத்தினர்கள் மட்டுமே போட்டியிட முடியும். அவ்வாறு போட்டியிடுபவர்களில் ஒருவரை தங்கள் தொகுதியின் வேட்பாளராக  மற்ற  பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கவேண்டும்.

இதனால் நேரடியாக யாரும் தங்கள் பண பலம் அல்லது அடியாள் பலம் இவற்றால் எம்.எல்,ஏ வாகவோ, மந்திரியாகவோ அல்லது முதலமைச்சராக ஆக முடியாது.

அரசியல் கட்சிகள் கிடையாது. இதனால் குடும்ப கட்சிகள், ஆட்சி மூலம் நாட்டை கொள்ளையடிக்க முடியாது. நேரடியாக திடீர் அமைச்சர்கள் உருவாக முடியாது. .எம்.எல்.ஏ ஆக தங்களில் ஒருவரை தேர்ந்தெடுக்கும் கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் அல்லது கவுன்ஸ்சிலர்கள், தங்கள் பகுதி மக்களின் விருப்பத்தை அறிந்தே  எம்.எல்.ஏ பதவிக்கு போட்டியிடும் வேட்பாளருக்கு வாக்களிக்கும் நிலை ஏற்படும்.

இவ்விதம் தேர்ந்தெடுக்கப்படும் எம்.எல்.ஏக்கள் தங்களில் ஒருவரை முதலமைச்சராகவும் இதர அமைச்சர்களையும் தேர்ந்தெடுத்து அரசு அமைப்பார்கள். அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் பெரும்பாண்மை மக்களின் விருப்பத்தை பிரதிபலிப்பதாகவே இருக்கும். இதுதான் காந்தி விரும்பிய மக்களாட்சி!

இதைப்போலவே மக்களின் அடிப்படை பிரதிநிதிகளாகிய பஞ்சாயத்து உறுப்பினர்கள், கவுன்சிலர்கள்  மட்டுமே எம்.பி தேர்தலில் நிற்க முடியும். சட்டசபைக்கு எம்.எல்.ஏக்களை தேர்ந்தெடுத்தது போலவே  எம்பி தொகுதிக்குட்பட்ட பகுதியிலிருக்கும் பஞ்சாயத்து உறுப்பினர்களும், கவுன்சிலர்களும் தங்களில் ஒருவரை  எம்பியாக தேர்ந்தெடுப்பார்கள். அதன் பின் எம்பிக்கள் அமைச்சர்களையும், பிரதமரையும் தேர்ந்தெடுப்பர். எப்படி இருக்கிறது இம்முறை? இதுதான் மக்களாட்சி! மீதியை அடுத்த பதிவில் பார்ப்போம்.
Friday, April 1, 2011

தேவை ஆட்சி மாற்றமா அல்லது சட்ட திருத்தமா?

ஊழலற்ற உண்மையான ஜனநாயக ஆட்சிக்கு தேவை ஆட்சி மாற்றமா அல்லது சட்ட திருத்தமா என்பது பற்றி நாம் இன்று வரை சிந்திக்கவே இல்லை!.

கருணாநிதியா? ஜெயலலிதாவா என்ற வளையத்துக்குள்ளேயே  நாம் சிந்தித்து வருகிறோம். அதனால்தான் இந்த பதிவு.

வரும் 13-ம் தேதியன்று தமிழகத்தில் தேர்தல். அன்று ஒட்டு போட வேண்டும். ஓட்டு போடும் வாக்காளரில் 95% பேர் யாருக்கு ஓட்டு போடவேண்டும் என இப்பொழுதே முடிவு செய்திருப்பார்கள்.

சரி இப்பொழுது சில உண்மைகளை பார்க்கலாம். சராசரியாக பதிவாகும் ஓட்டுக்களின் எண்ணிக்கை 65%.. அதாவது 35%  வாக்காளர்களுக்கு  எந்த வேட்பாளரும் தகுதியானவராக தெரியவில்லை. அதனால் அவர்கள் ஓட்டு போடுவதில்லை. இவர்களில் 5% மட்டுமே கடை நிலை மக்கள். சந்தர்ப்ப சூழ்நிலையால் ஓட்டு போட முடியாமல் போனவர்கள். மீதி 30% மக்கள் நடுத்தர மற்றும் மேல்தட்டு மக்கள். ஆக மூன்றில் ஒரு பகுதி மக்களால், தேர்தல் புறக்கணிக்கப்படுகிறது.

ஓட்டு போடும் (65%) மக்களை பார்ப்போம். யார் ஆட்சிக்கு வந்தாலும் ஊழலற்ற ஆட்சி வரப்போவதில்லை. ஓட்டு போடுவது ஜனநாயக கடமை அதனால் எந்த கட்சி குறைவாக நாட்டை கொள்ளையடிக்கும் என முடிவு செய்து அதற்கு ஓட்டு போடுபவர்கள் 35%.                                                                                                          

இது அண்ணாத்துரை கட்சி, கருணாநிதி என்ன கொள்ளையடித்தாலும் அதுக்குதான் ஓட்டு போடனும் அல்லது இது எம்.ஜி.ஆர் கட்சி ஜெயலலிதா என்ன ஊழல் செய்தாலும் அ.தி.மு.க -வுக்குதான் ஓட்டு போடனும் என கண்மூடித்தனமாக ஓட்டு போடும் கட்சி விசுவாசிகள். இதை போலவே இதர கட்சிகளுக்கும் உண்டு. இப்படிப்பட்டவர்கள் வாக்காளர்களில் 20 %

மீதி இருக்கும் 10% வாக்காளர்கள் ஓட்டுக்கு பணம், இலவசம் போன்றவற்றிற்காக வாக்களிப்பவர்கள்.

ஆக இந்த தேர்தல்களில் விரும்பி வாக்களிப்பவர்கள் மொத்த வாக்காளர்களில் 30%. அதாவது வாக்காளர்களில் மூன்றில் ஒரு பகுதியினர். இவர்களால் தான் அரசு தேர்ந்தெக்கப்படுகிறது. என்ன அநியாயம் இது!. ஜனநாயகம் என்றாலே பெரும்பாண்மையினரின் விருப்பம் ஏறுக்கொள்ளப்பட வேண்டும். இங்கே பெரும்பான்மையினரால் புறக்கணிக்கப்பட்ட அரசியல்வாதிகளே தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி அமைக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில் இப்பொழுது நடக்கவிருக்கும் தேர்தல் மூலம் ஆட்சி மாற்றம் வரலாம் அல்லது வராமலும் போகலாம். ஆனால் ஆட்சியாளர்களின் செயல்களில் எவ்வித மாற்றமும் வரபோவதில்லை. அதனால் ஊழல் ஒழியப்போவதில்லை. நாட்டில் வளர்ச்சி ஏற்பட போவதில்லை. இதற்கு தேர்தலே தேவையில்லை பேசாமல்  சீட்டு குலுக்கி போட்டு  கட்சியை தேர்ந்தெடுத்து விடலாம். அட்லீஸ்ட் தேர்தலுக்காக மக்கள் வரிப்பணத்தை செலவு செய்வது மிச்சமாகும்.

எனவே தேர்தல் என்பதே இன்றைய சூழலில் ஒரு காமெடி நிகழ்ச்சிதான்! சரி இனி அடுத்த கட்டத்திற்கு வருவோம்.

சுதந்திர இந்தியாவில் ஜனநாயகம் எப்படி இருக்கவேண்டும் என தீர யோசித்து அரசியல் அமைப்பு சட்டம் இப்படித்தான் இருக்கவேண்டும் என முடிவெடுத்த மகாத்மா காந்தியோ அல்லது அதற்கு சட்ட வடிவம் கொடுத்த டாக்டர் அம்பேத்காரோ முட்டாள்கள் அல்ல. உல்கில் உள்ள ஜனநாயக நாடுகளில் உள்ள அரசியல் அமைப்பு சட்டங்களிலேயே மிகவும் சிறப்பானது நம் நாட்டின் சட்டம் தான்!. பின் ஏன் இந்த நிலை?

1948 ஜனவரி 30-ல் மகாத்மா காந்தி மறைந்தார். அவரால் உருவாக்கப்பட்ட  அரசியலமைப்பு சட்டம் 1950 ஆண்டு ஜனவரி 26 -ம் தேதியன்று அமுலுக்கு வந்தது. இதில் எந்த பகுதியிலும் அரசியல் கட்சி என்ற அல்லது கட்சி ஆட்சி என்ற வார்த்தையோ வரவே இல்லை. அதாவது மக்கள் பிரதிநிதி, மக்கள் பிரதிநிதிகளால் அமைக்கப்பட்ட அரசு என்ற வார்த்தைகள் தான் உண்டு. மகாத்மா காந்திக்கு கட்சி ஆட்சி முறையில் விருப்பம் இல்லாததையே இது காட்டுகிறது. இச்சட்டத்தை பற்றி தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்யவும.

அதற்கு பின் கொண்டுவரப்பட்ட " The representation of People Act 1951" என்ற மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ம் ஆண்டு ஜூலை மாதம் 17 ம் தேதி கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தை பற்றி தெரிந்து கொள்ள  இதை கிளிக் செய்யவும். இதில் தான் அரசியல் கட்சி என்ற வார்த்தையே வந்துள்ளது.

இச்சட்டம் காந்தி விருப்பத்திற்கு மாறானது என தோன்றினாலும், அன்றைய சூழலில் எவ்வித அமைப்பையும் சாராத மக்கள் பிரதிநிதிகளால் ஒரு அரசை அமைத்து செயல்படுத்த முடியும் என்ற என்ற நம்பிக்கை அன்றைய தலைவர்களுக்கு ஏற்படாதே முக்கிய காரணம். மேலும் அந்த காலகட்டத்தில் இருந்த அரசியல்வாதிகள் நாட்டுப்ப்ற்று கொண்டவர்களாகவும், நாட்டிற்காக தியாகம் செய்தவர்களாக இருந்ததாலும், எதிர்காலத்தில்  தங்களை போன்றவர்களே வருவார்கள் என்ற நம்பிக்கையாலும், அரசியல் கட்சி என்ற பெயரில் குடும்பக்கட்சியை உருவாக்கி நாட்டை கொள்ளையடிக்கும் கிரிமினல்கள் தோன்றுவார்கள் என அவர்கள் நினைத்து பார்க்காததாலும் அர்சியல் கட்சிகளின் ஆட்சிக்கு வழிவகுக்கும் இந்த சட்டதை கொண்டுவந்தனர். இன்று அது பிள்ளையார் பிடிக்க குரங்கான கதையாக மாறிவிட்டது

காந்தி விரும்பிய மக்கள் பிரதிநிதிகளால் அமைக்கப்படும் அரசு என்பது என்ன? அதன் நன்மைகள் போன்றவற்றை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

தொடரும்.......

.