Monday, May 30, 2011

செங்கோட்டையும் கவி பாடும்!

’கடத்தை இடித்தால் தாண்டி
கடம் ஆகாசம் ஆகும் என்றாண்டி
புரத்தை இடித்தால் தாண்டி
பரிபூரணம் ஆகும் என்றாண்டி’
****** 

 ‘சப்த கோடி மந்திரம் சாஸ்திரங்கள் உள்ளதும் போச்சே
சத்துமயமான சாட்சியே நானென்ப தாச்சே’
******* 

ஜாதி வர்ணாசிரமம் போச்சே
வேத சாஸ்திரம் வெறும் பேச்சே’
 ******
‘காம குரோதமும் போச்சே
மோக இருளும் போச்சே’ 
 ******
‘கும்மியடி பெண்கள் கும்மியடி
அகோர சம்சார சாகரத்தில்
ஜென்மக் கடலைக் கடத்தினவர் பாதம்
சிந்தித்துக் கும்மியடியுங்கடி- தினம்
வந்தித்துக் கும்மியடியுங்கடி’ 
 ********
‘மனமும் பொய்யடியோ, குயிலே
மனக் கூடும் பொய்யடியோ
இனமும் பொய்யடியோ, குயிலே
தனமும் பொய்யடியோ!’
******** 

‘எச்சிலெச்சில் என்று புலம்புகிறாய் மானுடர்கள்
எச்சில் இல்லாத இடமில்லை- பராபரமே
சில்லெச்சில் மூர்த்தி கையில் ஈ எச்சில் தேனல்லவோ
என்றைக்கும் உண்ணும் தாய் முலை எச்சிலன்றோ- பராபரமே
மச்சமெச்சில் நீரில் வந்து மூழ்கும் மறையோர்கள் எச்சில்
பச்சைக் கிளி கோதும் பழம் எச்சில் அன்றோ- பராபரமே
தேரை எச்சில் தேங்காய் சிறு பூனை எச்சில்
தேசமெல்லாமே எச்சிலென்றறிவேன் - பராபரமே
நாதமெச்சில் பிந்து எச்சில் நால்மறையோர் வேதம் எச்சில்
மந்திரங்கள் சொல்லும் வாய் எச்சிலன்றோ- பராபரமே
அண்ட பிண்ட லோகமெல்லாம் அடங்கலும் எச்சிலாச்சே
வண்ட மத வாதிகட்கு வாயுண்டோ- பராபரமே
……….. ………………. ……………………
எச்சிலுன் வாயும் உடலும் ஏகமாயிருக்கையிலே
பாதம் எச்சிலென்று அலம்ப சுத்தமாச்சோ- பராபரமே’


விளக்கம் அடுத்த பதிவில்.............


சமச்சீர் கல்வி திட்டம் - ஒரு அலசல்.

சமச்சீர் கல்வி திட்டம் பற்றியும், சமச்சீர் கல்வி திட்டம் வேண்டுமா? வேண்டாமா? என்பதிலும் எல்லோரும் குழப்பத்திலேயே உள்ளனர். இதைப்பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாமல், வேண்டும் என ஒரு பிரிவினரும், வேண்டாம் என மற்றொரு பிரிவினரும் அதற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் மெட்ரிக் பள்ளிகளும் குரல் எழுப்பி வருகிறார்கள். உண்மை என்ன என்பதை தெளிவு படுத்தவே இந்த பதிவு.

தமிழ்நாட்டில் இருக்கும் கல்வி திட்டங்கள்:

மாநில கல்வி திட்டம் (State Board), மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் (இது பற்றி இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன்), சி.பி.எஸ்.சி (Central Board of Secondary Education) என 5 வகை கல்வி திட்டங்கள் நடப்பில் உள்ளது.

மாநில கல்வி திட்டத்தில் இயங்கும்  பள்ளிகள்:

அரசு பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் (Aided School), மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து பள்ளிகள் இவைகள் தான் அரசு கல்வித்திட்டத்தில் இயங்கும் பள்ளிகள். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த பள்ளிகளில்தான் சுமார் 90% மாணவர்கள் கல்வி கற்றனர்.  கல்வி துறை மீது அரசுக்கு ஆர்வம் குறைந்த காரணத்தினால், கல்வி தரம் குறைந்தது. ஆசிரியர் பற்றாக்குறை, அடிப்படை வசதியின்மை போன்ற காரணங்களால் மாணவர்களை மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் சேர்க்கும் நிலை ஏற்பட்டது. ஆசிரியர் பணி புனிதமானது என்று அரசு ஆசிரியர்கள் ஈடுபாட்டுடன் பணி புரிந்த நிலை மாறியது. ஓராசிரியர் ஆரம்பள்ளி, கூறை இல்லாத பள்ளி , மரத்தடி பள்ளி என மாற தொடங்கின.

மெட்ரிக்குலேஷன் பள்ளிகள்:

அதிகரித்து வரும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு பள்ளிகளும், மெட்ரிக் பள்ளிகளும் இல்லாத நிலையில், பெற்றோர்கள் மெட்ரிக் பள்ளியை நோக்கி படையெடுக்க, இதை சாதகமாக்கி  புற்றீசல் போல நாடு முழுக்க மெட்ட்ரிக்குலேஷன் பள்ளிகள் குடிசை தொழிலாக முளைக்க ஆரம்பித்தது. முறையான ஆசிரியர் பயிற்சியோ அல்லது கற்பிக்கும் அனுபவமோ இல்லாதவர்கள் ஆசிரியர்களாக இருந்தாலும், கல்விதரம் அரசு பள்ளிகளை காட்டிலும் உயர்ந்ததாக உள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் அரசு பள்ளி ஆசியரின் சம்பளத்தில் 4-ல்1 பங்குக்கும் குறைவாகவே மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் ஊதியமாக வழங்கப்படுகிறது. நன்கொடை, மிகவும் அதிகமான கல்வி கட்டணம் என பெற்றோர்களை பிழிந்தெடுக்கிறது.

தும்பை விட்டு வாலை பிடிக்கும் பெற்றோர்கள்: 

அடிப்படை கல்வி, மருத்துவ வசதி ஆகியவற்றை செய்து தரவேண்டிய பொறுப்பு இந்திய அரசியலமைப்பு சட்டப்படி அரசுக்கு உண்டு. தேவையான பள்ளிக்கூடங்களை ஏற்படுத்தவும், தரமான கல்வி வழங்கவும் வேண்டும் என அரசை நிற்பந்திக்க வேண்டிய பெற்றோர்கள், தனியார் பள்ளிகளின் கட்டணத்தை குறைக்க கோரினர். இதையடுத்து கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்ய அரசு கமிட்டி அமைத்துள்ளது. கமிட்டி நிணயித்த கட்டணத்தை ஏற்க பள்ளிகள் தயாராக இல்லை. ஆக இந்த கமிட்டி வாழ்நாள் கமிட்டியாகவே  இனி இருக்கும். பிரச்சனை தீர வாய்ப்பு கிடையாது. 

தனியார் பள்ளிகளுக்கு அரசு கட்டணம் நிணயிப்பது என்பது எந்த விதத்தில் நியாயம் என எனக்கு புரியவில்லை. ஒரு சிறிய உதாரணம். நியாய விலை கடைகளின் மூலம் மலிவு விலையில் உணவுப்பொருட்களை வழங்க வேண்டியது அரசு கடமை. ஆனால் அதை செய்யாமல், எல்லா மளிகைக்கடைக்காரர்களும் இனி நான் சொல்லும் விலைக்குத்தான்  அரிசி, கோதுமை, சர்க்கரை விற்க வேண்டும் என கூற முடியுமா?  அது நியாயமா?
 
சமச்சீர் கல்வி:

சமச்சீர் கல்வி என்றால், ஒவ்வொரு வகுப்புக்கும் தேவையான தரமான பாடத்திட்டத்தின் கீழ் பாடங்களை கற்பிப்பது ஆகும். சமச்சீர் கல்வி திட்டத்தை உருவாக்க அமைக்கப்படும் கமிட்டி எவ்வித விருப்பு, வெறுப்பின்றி செயல் படக்கூடிய கல்வியாளர்களை கொண்டிருக்க வேண்டும். பொதுவாக அரசு எந்த கமிட்டியை அமைத்தாலும், அது தன் விருப்பப்படி செய்யக்கூடியவர்களையே தேர்ந்தெடுக்கும் நிலை தான் உள்ளது. தரமான பாடத்திட்டத்தை தேர்ந்தெடுக்கும்போது, நடமுறையில் இருக்கும் அனைத்து  பாட திட்டங்களையும்  பரிசீலித்து அதில் சிறந்ததை தேர்வு செய்து,  அதை மேலும் சிறப்பாக ஆக்கி அதை அமுல்படுத்த அரசுக்கு சிபாரிசு செய்ய வேண்டும். தேசிய அளவில் சிறந்த சி.பி.எஸ்.சி கல்விதிட்டத்தை இந்த கமிட்டி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவே இல்லை. அதைப்போலவே, மெட்ரிக் கல்வி திட்டத்தையும் பரிசீலித்ததாக தெரியவில்லை. தாங்களாக பாடத்திட்டத்தை தயாரித்துள்ளனர். இது, கல்வித்திட்டத்தில் 2-ம் நிலையில் உள்ள மெட்ரிக் கல்வித்திட்டத்தை விட தரம் குறைந்ததாக உள்ளதாம். இத்திட்டத்தை மெட்ரிக் பள்ளிகளில் திணிப்பதை எப்படி மெட்ரிக் பள்ளிகள் ஏற்றுக்கொள்ளும்?

இது எப்படி இருக்கு என்றால், ஜட்டி மட்டும் போட்ட பையன், ஜட்டி போட்டு சட்டை, டிரவுசர் போட்ட பையன் ரெண்டுபேரையும் சமமாக்கபோறேன்னு சொல்லிட்டு, ஜட்டி போட்ட பையனுக்கு டிரவுசரை மாட்டிவிட்டுட்டு, இரண்டாவது பையனின் சட்டையை கழட்டி விட்டது மாதிரி இருக்கு.

திட்டத்தை அமுல்படுத்த தேவையான முன்னேற்பாடுகள்:

சரி விட்டு தள்ளுங்கள். மெட்ரிகுலேஷன் பள்ளியில படிக்கிற பசங்க தரம் குறைஞ்சு போனா போகட்டும். அரசாங்க பள்ளியில எப்படி இந்த திட்டத்தை செயல் படுத்துவது? வெறும் சமச்சீர் பாட புஸ்தகம்  மட்டும் போதுமா?  அதுக்கு வாத்தியார் வேண்டும். பாடதிட்டப்படி உள்ள பாடங்களுக்கு தேவையான கருவிகள், உபகரணங்கள் அடங்கிய பரிசோதனை கூடம் வேண்டும். இன்னும் இத்தியாதிகள் எத்தனையோ!  ஒட்டு மொத்த பள்ளிகளுக்கும் தேவையானவற்றை அரசாங்கம் செய்திருக்கா? இதெல்லாம் இல்லாம வெறும் கையால முழம் போட்டா வேலைக்கு ஆகுமா? 

சட்டசபை  கட்டிடம் கட்டி முடிக்க இன்னும் ஒரு வருடம் ஆகும் என்ற நிலையிலும், கட்டிடத்தின்  கூறையே போடப்படாத நிலையில் மூன்று கோடி தண்ட செலவு செய்து தோட்டா தரணியை கொண்டு செட்டிங்  போட்டு திறப்பு விழா நடத்தி தன் ஆசையை பூர்த்தி செய்தவரின் ஆட்சியில் இதையெல்லாம் எதிர் பார்க்க முடியுமா?

சமச்சீர் கல்வி திட்டம் ஒத்திவைப்பு:

இப்பொழுது பதவி ஏற்றிருக்கும் அரசு இத்திட்டத்தை அமுல்படுத்தவதை நிறுத்தி வைத்துள்ளது. புது கமிட்டி அமைத்து பரிசீலனை செய்யும் என கூறியுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள படி, தரமான கல்விதிட்டத்தை உருவாக்கவும் , பள்ளிகளுக்கு தேவையான வசதிகளையும் தேவையான ஆசிரியர்களை நியமித்து பயிற்சி அளிக்கவும் காலதாமதம் ஏற்படும் என்பதால் மாணவர் நலனை கருத்தில் கொண்டு, இத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக யாரும் நினைத்துவிடவேண்டாம். இது கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் உள்ள ஈகோ பிரச்சனை.

யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்?

வழக்கம் போல, வரிப்பணத்தில் 200 கோடி செலவிட்டு புத்தகம் அச்சிட்டது பயன்ற்று போவதால் மக்களுக்கு நஷ்டம். 


அச்சகத்தாரிடம் கமிஷன் வாங்கிய பிரமுகர்களுக்கு 10% கமிஷன் லாபம்.


இதைவிட தரமான பாடத்தில் படிக்கும் மெட்ரிக் மாணவர்கள் இந்த ஆண்டு தப்பித்துக்கொண்டார்கள். அதனால் அவர்களுக்கு லாபம்.


இத்திட்டத்தை அமுல்படுத்தாததினால் அரசு பள்ளிமாணவர்களுக்கு லாபம் இல்லை நஷ்டமும் இல்லை. அவர்களுக்குதான் அடிப்படை வசதிகள், தேவையான ஆசிரியர்கள் எண்ணிக்கை உட்பட, எதுவுமே கிடையாதே! ஆறு நிறைய தண்ணி போனாலும் நாய் நக்கித்தான் குடிக்கனும்?

வாழ்க துக்ளக் தர்பார்!


Saturday, May 28, 2011

சமச்சீர் கல்வி கொலையும்..... தப்பித்த மாணவர்களும்!

இது 10-ம் வகுப்பு தமிழ் பாட நூல்.
இந்த பாடப்பகுதிகளுக்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம் என புரியவில்லை. உங்களுக்கு புரிகிறதா?


Friday, May 27, 2011

கருத்து கந்தசாமியின் ஐடியாக்கள்!

பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது என்ற கவலையா?  கவலையை விடுங்கள்!. நம்ம கருத்து கந்தசாமி ஐடியா தருகிறார்.

நீங்கள் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்பவரா? இது போன்ற வண்டியை தயார் செய்து ஓட்டுங்கள். உடம்புக்கும் நல்லது. பணமும் மிச்சம்!. சுற்று சூழலும் கெடாது.


ஷேர் ஆட்டோவுக்கு பதிலாக இந்த மாதிரி வண்டியை உபயோக படுத்தலாம்.

ஆட்டோ, டாக்சி இவற்றிற்கு பதிலாக இந்த மாதிரி குதிரை வண்டியையும் பயன் படுத்தலாம். சொந்த காருக்கு பதிலாகவும் பயன் படுத்தலாம்.


லோடு வேன், மினி லாரிக்கு பதிலாக ரெண்டு மாடு பூட்டப்பட்ட வண்டியை உபயோகிக்கலாம்.


ரயில் எஞ்சினை கழட்டி விட்டுட்டு 8 காளைமாடுகளை கட்டி ஒவ்வொரு ரயில் பெட்டியாக ஓட்டலாம்.

விபத்தில்லா பயணம், 100% எரி பொருள் சிக்கனம், சுற்று சூழலை பராமரித்தல் போன்ற பலவழிகளில் இத்திட்டம் பயன்படும்.

குறிப்பு:  இருக்கும் பெட்ரோல் நிலையங்களை எல்லாம் முதலில் வைக்கோல், புல், பருத்திக்கொட்டை புண்ணாக்கு விற்கும் நிலையங்களாக மாற்றவேண்டும்

எப்பூடி இருக்கு கருத்து கந்தசாமியின் ஐடியாக்கள்?மலை வாழ் மக்கள் & தலித்துகள் முன்னேற்றம் காணல் நீரா?.......

இதுவரை பதிவுலகிலும் சரி அச்சு ஊடகம் மற்றும் தொலை காட்சியிலும் சரி, மலை வாழ் மக்கள் மற்றும் தலித்துகளின் முன்னேற்றம் பற்றி தெளிவான திட்டம் பற்றி அரசோ, ஜாதிய கட்சிகளோ அல்லது சமூக ஆர்வலர்களோ இதுவரை விவாதித்ததாக தெரியவில்லை.

எனக்கு தெரிந்த வரை உயர் கல்வியில் இட ஒதுக்கீடு, அரசு வேலையில் இட ஒதுக்கீடு, ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு போன்றவற்றை கேட்டு ஜாதி கட்சிகள் போராடுவதும், அரசு உறுதி மொழி வழங்குவதும் தான் நடைபெற்று கொண்டிருக்கிறது.

ஒரு இன மக்களின் முன்னேற்றத்திற்கான காரணிகள் எவை என இதுவரை அறிவுப்பூர்வமாக சிந்தித்து, ஏன் அதை அவர்களுக்கு கிடைக்க  செய்யவில்லை?  அந்த காரணிகளை கண்டுபிடிக்க கம்ப சூத்திரம் ஒன்றும் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்கு மனச்சாட்சியும், சுயநலமற்ற சிந்தனையும் இருந்தால் போதும்.

காமராஜர் முதலமைச்சராக பதவி ஏற்றவுடன், அவர் அரசு வேலையாக ஒரு மாவட்டத்திற்கு காரில் அதிகாரிகளுடன் சென்றிருந்தார். அப்பொழுது கார் கிராமம் வழியாக சென்றது.  அப்பொழுது ஒரு பையன் கையில் குச்சியுடன் மாடு மேய்த்துக்கொண்டிருந்தான். காரை நிறுத்த சொல்லிய காமராஜ் அந்த பையனை அழைத்து " ஏண்டா பள்ளிக்கூடம் போகாம மாடு மேச்சிட்டிருக்க?" என்று கேட்டார். அவனோ ரெம்ப கூலாக அவரிடம் " கஞ்சி தண்ணிக்கே வழியில்லை, பள்ளிக்கூடம் எப்படி போறது" என்றான்.

சரி. பள்ளிக்கூடத்துக்கு சம்பளம் கட்ட வேண்டாம். அரசாங்கமே சாப்பாடு தரும். பள்ளிக்கூடம் போறீயா?" என்றார். "சரி . பள்ளிக்கூடம் போக சட்டை டிரவுசர் வேணுமே? அது வாங்க எங்ககிட்ட துட்டு இல்லை" என்றான். " அவ்வளவுதான? அரசாங்கமே அதுவும் தரும். இப்ப சரியா?" என்றார். மகிழ்ச்சியோடு அவன் தலையாட்டினான். அவனை தட்டி கொடுத்துவிட்டு, காரில் ஏறி  பயணத்தை தொடர்ந்தார்.

" ஸ்கூல் சம்பளம் கிடையாது, மத்தியானம் சாப்பாடு, ஃபிரியா யூனிபார்ம்! இதெல்லாம் நடக்க கூடியதா?" என மனதுக்குள் எண்ணிக்கொண்டே வந்தனர். அதிகாரிகள் அவர்களின் மன ஓட்டத்தை புரிந்து கொண்ட காமராஜர், அவர்களை பார்த்து புன் முறுவல் செய்துவிட்டு "இவர்களை எல்லாம் அப்படியே விட்டு விட முடியுமா?  நல்ல படிப்ப கொடுத்து, இவங்களையெல்லாம் ஆளாக்க வேண்டாமா?" என்று சொன்னாராம்.

அன்றே அதற்கான வேலைகளை துவங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் படி 300 நப்ர்கள் இருக்கும் ஒரு கிராமத்திற்கு ஒரு ஆரம்ப பள்ளி,..அருகாமையில் இருக்கும் படி நாலைந்து கிராமங்களுக்கு ஒரு நடு நிலை பள்ளி, 3 கி.மீ. -க்கு ஒரு ஒரு உயர் நிலை பள்ளி என பள்ளிக்கூடங்கள் உருவானது. கல்வி என்பது காணல் நீர் என நினைத்திருந்த கிராமப்பகுதி வாழ் தலித்துகளுக்கு கல்வி கிடைத்தது.

இப்பொழுது ஓய்வு பெறும் நிலையில் இருக்கும், சமீபத்தில் ஓய்வு பெற்றவர்களும் கிராமப்பகுதியை சார்ந்த தலித்களும், இதர பிற்படுத்தப்பட்டோரும் இவரால் துவங்கப்பட்ட பள்ளியில் படித்தவர்கள் என்பதை மறுக்க முடியாது.

இவரது ஆட்சிக்குப்பின் வந்த அரசுகள் இவர் செயல் படுத்தியதை பழுதின்றி செயல் படுத்தியிருந்தால், தமிழ் நாட்டில் 1995-லேயே தலித்துகள் எல்லோரும் கல்வி கற்றவர்களாக ஆகியிருப்பார்கள். அதனால் அவர்கள் வாழ்க்கை தரம் உயர்ந்திருக்கும்.

அவர் ஆட்சி காலத்தில் அரசுக்கு வருமானம் மிகவும் கம்மி. இந்த நிதி சுமையை சமாளிக்க, ஊர்மக்களை ஒருங்கிணைத்து குழு அமைத்து அவர்களை கல்விக்காக நிதியுதவி வழங்க செய்தார். இது அவர் நிர்வாக திறமைக்கு எடுத்துக்காட்டு.

அவருக்கு பின் வந்த ஆட்சியாளர்கள் இதை ஏன் தொடர்ந்து செயல் படுத்தவில்லை?

நோயாளி இருந்தால்தான் வைத்தியனுக்கு பொழைப்பு நடக்கும்?. அதைப்போலவே தலித்துகளும் பிற தாழ்த்தப்பட்டவர்களும் பின் தங்கிய நிலையில் இருந்தால் தானே அவர்களுக்கு சலுகைகளை தருகிறோம் என கூறி ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வர முடியும்!. இதுதான் இன்றைய அரசியல்வாதிகளின் லாஜிக்.

ஆரம்ப கல்வியே கற்க வாய்ப்பில்லாமல் இருக்கும் பெரும்பாண்மை  மக்களுக்கு பொறியியல் படிப்புக்கும், மருத்துவ படிப்புக்கும் இட ஒதுக்கீடு செய்வது  கேலிக்கூத்து. 

அதோடு மட்டுமா விட்டார்கள்? அரசு பணியில் ஒதுக்கீடு!. "ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துவது" போல, அரசில் பல ஆண்டுகளாக பணியிடங்கள் நிரப்ப படுவதில்லை. மக்கள் ஜனத்தொகைக்கு ஏற்ப ஊழியர் எண்ணிக்கையை உயர்த்தவே இல்லை. இந்த கொள்ளையில் இட ஒதுக்கீடு என்ன பயனளிக்கும்? மேலும் வேலை வாய்ப்பு அளிப்பதில் அரசு துறையின்  பங்கு 5%-க்கும் குறைவே!

அப்படியானால் அரசின் உயர் கல்வி ஒதுக்கீடு, வேலை வாய்ப்பு ஒதுக்கீடுகள் யாருக்கு போய் சேருகிறது?

கிராமப்புறத்தில் வசிக்கும் வசதி படைத்தவர்களுக்கும், டவுன் மற்றும் நகர் புறத்தில் வசிப்பவர்களுக்குமே போய் சேருகிறது. இவர்கள் ஏற்கனவே முன்ன்னேறிய நிலையில் உள்ளவர்கள்.

இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்த சலுகை அளித்தாலும் பொருளாதார நிலையில் பின் தங்கியிருக்கும் 90% தலித்துகளும், பிற்படுத்தப்பட்டவர்களும் முன்னேற்றம் அடையப்போவதில்லை.

அரசு இப்பொழுது என்ன செய்ய வேண்டும்?

கிராமப்பகுதியில் உள்ளவர்களுக்கு விவசாயம், கால்நடை பராமரிப்பு, மற்றும் கிராமியம் சம்பந்தப்பட்ட துறைகளில் வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும்.

கிராம பகுதியில் தேவையான பள்ளிக்கூடங்களை திறந்து, அவர்களுக்கு தரமான கல்வி வழங்க வேண்டும்.

தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொள்ள அரசியல்வாதிகள் என்ன முட்டாள்களா?. அதனால் அரசியல்வாதிகள் தாமாக செய்ய மாட்டார்கள்.

கிராம பகுதி மக்கள் ஒன்று திரண்டு போராடவேண்டும். அதுவும் ஜாதி கட்சி களின் சூழ்ச்சிகளை முறியடித்து ஒற்றுமையுடன் போராட வேண்டும். 

நடக்கும் என நம்புவோம். நம்பிக்கையே வாழ்க்கை!. 
Thursday, May 26, 2011

தேனம்மை லக்ஷ்மணன் அவர்களுக்கு கருத்து கந்தசாமியின் கடிதம்....

தேனம்மை லக்ஷ்மணன் அவர்களுக்கு,

தங்களின் வலைப்பக்கமான "சும்மா"-ல் தாங்கள் பதிவிட்டுள்ள "சமச்சீர் கல்வியும் கருத்து கந்தசாமிகளும்..." என்ற தலைப்பிட்ட தங்கள் பதிவிற்கு பதிலளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், தங்கள் அபிப்பிராயப்படி நானும் கருத்து கந்தசாமியாக மாறி இந்த பதிவை எழுதுகிறேன்.

பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் என்பது ஜனநாயக நாடாகிய இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கு வழங்கி இருக்கும் அடிப்படை உரிமையாகும். இதை நாம் கருத்து சுதந்திரம் என பொதுவாக எடுத்து கொள்ளலாம். 

அதன் அடிப்படையில் வலைப்பக்கத்தில், பதிவர்கள் சமச்சீர் கல்வி தொடர்பான தங்கள் கருத்துக்களை பதிய நியாயப்படியும் சட்டப்படியும் உரிமை உண்டு. 

நான் எந்த அரசியல் கட்சியை சார்ந்தவனோ அல்லது அனுதாபியோ கிடையாது. 

சமச்சீர் கல்வி என்றால் என்ன? இதுவே பலருக்கும் புரியவில்லை. நாடு முழுவதும் ஒரே மாதிரியான தரமான கல்வி ஒரே மொழியில் பயிற்றுவிக்கப்படுவது தான் சமச்சீர் கல்வியாகும். அந்த மொழி எதுவாக இருக்க முடியும்?. இன்றைய சூழலில்  வேலை வாய்ப்பு, தொழில் என்பது மாநிலம், நாடு என்பதையெல்லாம் கடந்து சர்வதேச அளவிற்கு மாறிவிட்டது. அதனால் ஆங்கில  வழி கல்வி தான்  ஒத்து வரக்கூடியது. 

ஆனால் இங்கு நடப்பது என்ன?  ஒரே பாட திட்டம். ஆனால் அது ஆங்கிலத்திலும் இருக்குமாம். தமிழிலும் இருக்குமாம். அதனால் தமிழில் படித்தவர்களும் ஆங்கிலத்தில் படித்தவர்களும் சமமாம்! என்ன கொடுமை இது?

பொறியியல் படிப்பிலோ அல்லது மருத்துவப்படிப்பிலோ  சேரும் தமிழ் வழி கல்வி கற்றவர்கள் படும் அவஸ்தையை கண்கூடாக காணலாம். பாடங்களை புரிந்து கொள்வதும், தேர்வை ஆங்கிலத்தில் எழுதுவது எல்லாமே சிரமமான காரியம். அதன் பின்பு வேலை தேடுவது, வேலை பார்ப்பது, அந்த துறையில் முன்னேறுவது எல்லாமே.......... அப்பப்பா !

மொழி என்பது கருத்துக்களை அல்லது விஷயங்களை பிறருக்கு உணர்த்தும் ஒரு கருவிதான். இவ்வாறு கூறுவதால் நான் தாய் மொழி பற்று அற்றவன் என நினைக்கவேண்டாம். ஒவ்வொருவரும் தாய் மொழியை படிக்க வேண்டும். தாய் மொழி  இலக்கியங்கள், கவிதைகள் இவற்றை படிப்பதால், நம் கலாச்சாரங்கள், பண்பாடுகளை புரிந்து அதன் படி வாழ முடியும்.

இது கருத்து கந்தசாமியின் (என்னுடைய) கருத்து.

மற்ற கருத்து கந்தசாமிகளின் கருத்துகளையும் பார்க்கலாம்.

சிலர், சமச்சீர் கல்வி திட்டத்திற்கான பாடத்திட்டத்தை தயாரித்த குழு, கருணாநிதி விருப்ப படி கல்விக்கு சம்பந்தமில்லாத விஷயங்களை பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளது. உதாரணம் கருணாநிதியின் கவிதை, செம்மொழி பாடல் போன்றவை. அதனால் புதிய குழு அமைத்து  புதிய பாடத்திட்டம் தயாரித்த பின்பே சமச்சீர்  கல்வி முறையை அமுல் படுத்துவோம் என்ற ஜெயலலிதாவின் முடிவு சரி என்கிறார்கள். தங்கள் கருத்தை சொல்லுவது அவர்கள் உரிமை.

மற்றவர்கள், 200 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து பாட புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. அதனால், ஆட்சேபணைக்குரிய பகுதியை நீக்கி விட்டு புத்தகங்களை வழங்கி இந்த ஆண்டே நடைமுறை படுத்த வேண்டும் என கூறுகிறார்கள்.  இதை சொல்ல அவர்களுக்கும் உரிமை உண்டு.

"முதலில் எல்லாவற்றுக்கும் கண்டமேனிக்கு கருத்து சொல்லும் பழக்கத்தை விடுங்கள். தேவையானால் மட்டுமே சொல்லுங்கள்". என பதிவின் இறுதியில் சொல்லியுள்ளீர்கள். இதில் தான் உதைக்கிறது.

"கண்டமேனி" கருத்து என்றால் என்ன?  

பொதுவாக ஒருவிஷயத்தில் ஒருவர்,  இதுதான் சரி என முடிவு எடுத்திருக்கும் பொழுது, அதற்கு மாறுபட்ட கருத்துக்களை பிறர் சொல்லும் பொழுது, " கண்டமேனிக்கு கருத்து சொல்லாதே" என்பார். இதுதான் நடை முறை வழக்கம்.

 இது விஷயத்தில் தங்களுக்கு ஒரு கருத்து உண்டு. அதிலிருந்து மாறுபட்ட கருத்துக்களை கூறுபவர்களிடம் "நீங்கள் கண்டமேனிக்கு கருத்து சொல்லாதீர்கள்" என அறிவுரை வழங்குகிறீர்கள். இதுதானே உண்மை?

அதோடு நில்லாமல், "தேவையானால் மட்டுமே சொல்லுங்கள்" என கூறியுள்ளீர்கள். எந்தெந்த விஷயங்களில் அல்லது யார் யார் விஷயங்களில் அல்லது எந்தெந்த நேரங்களில் கருத்து சொல்வது தேவையானது என்பதை நிர்ணயம் செய்ய வழிகாட்டுதல் எதாவது உள்ளதா?  அப்படி இருந்தால் சொல்லுங்கள். பலருக்கும் பயன்படும்.

"ஆண் அரசாண்டால் எல்லாம் பெரியவருக்குத் தெரியும் என்றும் பெண் அரசாண்டால் சாமான்யன் கூட ராஜகுருவாய் அட்வைஸியாய் மாறுவதும் ஏன்.? இது இந்தியக் குடும்ப மனோபாவம். பெண் என்பவள் எல்லாவற்றையும் தன்னைக் கேட்டு தன் அனுமதி பெற்றுச் செய்யவேண்டும் என்பது." 

மேற்குறிப்பிடப்பட்டுள்ள தங்கள் வாசகங்கள் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதாக இருப்பதோடு, ஆண் பெண் என்ற பாலின வேறுபாட்டையும் கையில் எடுத்துள்ளது வேடிக்கையாக இருக்கிறது. இதற்கு தெளிவான பதிலை தருகிறேன்.

ஏதோ கருணாநிதி ஆட்சியிலிருக்கும் பொழுது, அவர் ஆண் என்பதால் எல்லோரும் அவரை தூக்கி மடியில் வைத்து கொஞ்சியது போலவும் இப்பொழுது ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் அவர் பெண் என்பதால்  சாமானியன் கூட அட்வைஸ் செய்ய ஆரம்பித்து விட்டார்கள் என வருத்தப்பட்டுள்ளீர்கள். கருணாநிதி ஆட்சி காலத்தில் தவறுகளை சுட்டி காட்டி எல்லா பதிவர்களும் கிழி கிழி என கிழித்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு "உண்மை தமிழன்" வலை தளத்திற்கு சென்று பாருங்கள்!

சாமானியன் என மிகவும் சாதாரணமாக குறிப்பிட்டுள்ளீர்கள். ஜனநாயக நாட்டில் சாமானியன் என்ன? பிச்சைக்காரனுக்கு கூட, ஆட்சியிலிருப்பவர்கள்  வரிப்பணத்தை விரயம் செய்தால் அதை ஆட்சேபிக்கும் உரிமை உண்டு. காரணம் அவன் வாங்கும் பீடியிலிருந்து குடிக்கும் டீ வரை அவனும் மறைமுகமாக அரசுக்கு வரி செலுத்துகிறான்.

அடுத்ததாக, "இது இந்தியக் குடும்ப மனோபாவம். பெண் என்பவள் எல்லாவற்றையும் தன்னைக் கேட்டு தன் அனுமதி பெற்றுச் செய்யவேண்டும் என்பது." என்று கூறி பெண் என்ற கேடயத்தை எடுத்துள்ளீர்கள். இதை எதற்காக இங்கு குறிப்பிடுகிறீர்கள் என புரியவில்லை. ஜெயலலிதா பெண் என்பதால் ஆண்கள் எல்லோரும், இந்திய குடும்ப மனோபாவத்தின் அடிப்படையில்  அவருடைய செயல்களை குறை கூறுவதாக பொருள் கொள்ளும் படி உள்ளது.

குடும்ப மனோபாவம் என்பது பற்றிய விஷயத்திற்குள் நான் வர விரும்பவில்லை. காரணம் இந்த பதிவு கிருபானந்த வாரியாரின் சொற்பொழிவை காட்டிலும் பெரிதாக ஆகிவிடும்.

குடும்பம், ஆட்சி என்பது வெவ்வேறு விஷயங்கள். குடும்பத்தில் ஒரு பெண் செய்யும் செயலால் வரும் கஷ்ட நஷ்டங்கள் அந்த குடும்பத்தை மட்டுமே சாரும். முதல்வர் பணி என்பது, வரிப்பணத்தில், மக்களுக்கு தேவையானவற்றை, விரயம் மற்றும் ஊழல் இல்லாமல் செய்யும் பணியாகும். அவர் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்  தன்னிஷ்டப்படி செயல்பட்டால் நாட்டிற்கே நஷ்டம்.

எனவே முதல்வர் பெண் என்பதால் தன்னிச்சையாக ஊறு விளைவிக்கும் வகையில் செய்யும் எந்த செயலை பற்றி விமர்சிக்க கூடாது என்ற தங்கள் பெண் உரிமை கருத்தை ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

"இதில் வேடிக்கை முகப்புத்தகத்தில்., அரசுப்பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்காதவர் கூட எல்லாருக்கும் சமச்சீர் கல்வி என்பது கானல்தானா என முதலைக் கண்ணீர் வடிப்பது" என குறிப்பிட்டுள்ளீர்கள்.

இதில் என்ன வேடிக்கை இருக்கிறது?  எல்லா பெற்றோர்களும் குறைந்த செலவில் தங்கள் பிள்ளைகளுக்கு தரமான கல்வி (சமச்சீர் கல்வி) கிடைக்க வேண்டும் என்று தான் விரும்புவார்கள். அக்கல்வி அரசு பள்ளிகளில் கிடைக்காத பொழுது அதிகம் செலவானாலும் பரவாயில்லை என தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பார்கள். இது இயற்கை. அரசு பள்ளிகளில் சமச்சீர் கல்வி வந்து அதை தரமாக செயல்படுத்திய பின்பு, இவர்கள் அரசு பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்ப்பார்கள். இதை எப்படி குற்றம் சொல்ல முடியும்?.

தங்களுக்கு, தங்கள் கருத்தை எழுத, எப்படி உரிமை இருக்கிறது என நினைக்கிறீர்களோ, அதே உரிமை மற்றவர்களுக்கும் உண்டு என்பதை மறுக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.

பின் குறிப்பு.  இது தங்கள் பதிவின் மீதான எனது கருத்து தான். பொதுவாக  இது போல பதிவிற்கு, பதில் பதிவு போடும் பழக்கம் எனக்கு கிடையாது. தவிர்க்கமுடியாத சூழ்நிலையில் பதிவிட்டுள்ளேன். தவறாக நினைக்க வேண்டாம்

Sunday, May 22, 2011

நானும் அரசியல்வாதிதான்.........

கடந்த காலத்தை நோக்கி என் பார்வை இப்பொழுது. நான் ஹைஸ்கூலில் படித்துக்கொண்டிருந்த நேரம். எங்க தொகுதியில் இடைத்தேர்தல். தி.மு.க சார்பாக கா.மு.கதிரவன் நின்றார். அவர் எங்க ஊர்க்காரர். முஸ்லீம் சமுதாயத்தை சார்ந்தவர். எங்க ஊரில் (செங்கோட்டையில்) ஜாதி மத பாகுபாடு இன்றி எல்லோரும் உறவினர் போலவே பழகுவோம். அவ்ர் ஹரிபோர்டு எஸ்டேட்டின் ஓனர் காஜா மொகைதீன் ராவுத்தர் அவர்களின் மகன்.

அண்ணாத்துரை, மதியழகன், நெடுஞ்செழியன், கருணாநிதி போன்றவர்களின் பேச்சாலும் எம்.ஜி.ஆரின் நடிப்பாலும் திமுக காரனாக மாறிய மாணவர்களில் நானும் ஒருவன். அதனால் அந்த இடைத்தேர்தலில் திமுகவிற்கு பிரச்சாரம் செய்வதென்று நானும் மற்ற மாணவர்களும் முடிவு செய்தோம்.

மேல பஜாரில் கடலை கடை வைதிருந்த அண்ணாமலை நாடாரின் மகன் மதியழகன் எனக்கு 1 வருடம் சீனியர். அவனும் நானும் தான் எங்கள் பள்ளியின் சார்பாக பேச்சுப்போட்டியில் கலந்து கொள்வோம். அவனை மாணவர் திமுக தலைவராக்கினோம்.

முக்கியமாக எங்கள் லட்சியம் அண்ணன் கா.மு.கதிரவனை அந்த இடைத்தேர்தலில் ஜெயிக்க வைக்கவேண்டும் என்பதுதான். இதை நாங்கள் அவரிடம் கூறிய பொழுது அவர் மிகவும் சந்தோஷப்பட்டார். தன் கணக்கப்பிள்ளையிடம் செலவுக்காக எங்களுக்கு பணம் கொடுக்க சொன்னார். நாங்கள் பணம் வாங்க மறுத்து விட்டோம். காரணம் அவர் ஊர்க்காரர்களிடம் அந்த அளவு நெருக்கமாக பழகுபவர். சுருக்கமாக சொன்னால் அவர் ஊர் மக்களுக்கு சொந்தக்காரர் போல.

முத்துசாமி கரையாளர் பார்க்கை ஒட்டியிருந்த "பத்மநாபா" தியேட்டர் அருகில் இருந்த ஒரு கடையின் மாடியை வாடகைக்கு எடுத்து அலுவலகமாக ஆக்கினோம். ஞாயிற்று கிழமை தோறும் கூட்டம் நடக்கும்.

ஆனால் கட்சி போர்டு கிடையாது. கட்சியிடமிருந்து அனுமதி எதுவும் பெறவில்லை. எல்லாம் எங்கள் சொந்த காசில் தான் செலவு செய்தோம். சுமார் 25 பேர் அங்கத்தினர்கள். 

தேர்தல் பொறுப்பை  தினத்தந்தி ஆதித்தனார் ஏற்றிருந்தார். பிரச்சாரத்திற்கு எங்களுக்கு ஒரு வேன் தந்திருந்தார். அதில் சென்று ஒவ்வொரு பகுதியாக சென்று, வீடு வீடாக பிரச்சாரம் செய்தோம். தேர்தல் நாள் நெருங்கியது. பிரச்சாரத்துக்கு வேண்டிய துண்டு பிரசுரம், கொடி இவை எங்களிடம் காலியாகிவிட்டதால், தி.மு.க தேர்தல் ஆபீஸிற்கு எங்களில் ஒருவன் சென்றான்

திரும்பி வந்தவன் வேனில் இருந்த எல்லாவற்றையும் கொண்டு வந்து எங்கள் ஆபீஸில் போட்டு விட்டு, எங்களை பார்த்து கோபத்துடன், கண்களில் நீர் வர "அப்பவே சொன்னேன். கேட்டீங்களா?  இந்த தே..........யா மவனுக நம்ம பேரை சொல்லி, ஆதித்தனாரிடம் துட்டு வாங்கிட்டிருக்கானுக. நமக்கு இது தேவையா?. கட்சியும் வேண்டாம் ஒரு மயிரும் வேண்டாம்" என்று கூப்பாடு போட்டான்.

அவன் நிதானத்துக்கு வந்தவுடன் அவனிடம் விசாரித்த போது, தேர்தல் வேலை பார்த்து வந்த உள்ளூர் தி.மு.க.காரர் ஒருவர், எங்களுக்கு பொறுப்பானவராக ஆதித்தனார் அவரை நியமித்துள்ளதும், எங்களுடைய செலவுக்கான பணத்தை அவர் ஆதித்தனாரின் மேனேஜரிடமிருந்து வாங்கி எங்களுக்கு கொடுப்பதும் அவர் வேலை என தெரிந்தது. நாங்கள் எங்கள் சொந்த செலவில் பிரச்சாரம் செய்வோம், பணம் வேண்டாம் என அண்ணன் கதிரவனிடம் நாங்கள் கூறிய விபரம் அவருக்கு தெரியும். எனவே தினமும் எங்கள் செலவு கணக்கெழுதி, பணத்தை வாங்கி சுருட்டியுள்ளார்.

இது எக்களுக்கு அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. இந்த விஷயம் எந்த விதத்திலும் நாங்கள் செய்து வரும் தேர்தல் பிரச்சாரத்தை பாதிக்க கூடாது என முடிவு செய்து, அமைதியானோம். ஆனால் இந்த சம்பவம் எங்கள் மனதில், தி.மு.க வின் மீதிருந்த மதிப்பை தவிடு பொடியாக்கியது. "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்பது போல, இவரைப்போலத்தான் மற்ற கட்சிக்காரர்களும் இருப்பார்கள் என்ற முடிவுக்கு நாங்கள் வந்தோம்.

மீதி அடுத்த பதிவில்.............Thursday, May 19, 2011

அரசு கல்விக்கடன் மாணவர்களின் உரிமை - ஒரு விளக்கம்.

மத்திய அரசின் கல்விக்கடன் திட்டம்.

திட்டத்தின் நோக்கம் :  பொருளாதார நிலைய்ல் பின் தங்கியுள்ளவர்கள் என்ற காரணத்திற்காக, எந்த ஒரு மாணவனுக்கும் அல்லது மாணவிக்கும் உயர் கல்வி மறுக்கப்படக்கூடாது. அவர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற்காக  கொண்டு வரப்பட்டதே இத்திட்டம்.

வங்கிகளின் பங்கு ( ROLE ) :  எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அதை அரசு நேரடியாக மேற்கொள்ள முடியாது. எனவே இத்திட்டம்  அரசு வங்கிகளின் மூலம் செயல் படுத்தப்படுகிறது. இத்திட்டத்தை பொறுத்த வரையில் வங்கிகள் தாமாக நிபந்தனைகளை  விதிக்கவோ அல்லது  தன் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப  செயல்படவோ முடியாது.  மொத்தத்தில்  கல்விக்கடனை பொறுத்த வரையில், அதை செயல்படுத்தும் வெறும் ஏஜெண்ட் தான்  அரசு வங்கிகள்.

கடன் உதவி பெற தேவையான தகுதிகள் : 

1. மாணவர்  அல்லது மாணவி  இந்திய பிரஜையாக இருக்கவேண்டும்.

2.  தொழில் படிப்பு  ( PROFESSIONAL COURSE) அல்லது  தொழில் நுட்ப படிப்பில் ( TECHNICAL COURSE)  நூளைவுத்தேர்வு மூலமாக சேர்ந்திருக்க வேண்டும். இது வெளிநாடு மற்றும் இந்தியாவில்  கல்வி பயிலும் மாணவர்களுக்கு பொதுவானவை.

3.  இந்தியாவில் கல்வி கற்க 10 லட்சம் ரூபாயும், மெரிட் உள்ளவர்கள் மற்றும் அத்தியாவசிய தேவை உள்ளவர்களுக்கு அதிகபட்சமாக 15 லடசம் ரூபாயும், வெளிநாட்டில் பயிலும் மாணவர்களுக்கு  20 லடசம் ரூபாயும்,  25 லட்சம்  ரூபாயும்  வழங்கப்படும்.

 
4.  கல்விக்கட்டணம் , தங்கும் விடுதி கட்டணம், தேர்வு கட்டணம், புத்தகங்கள், கருவிகள், கணனி  ஆகியவற்றிற்கு தேவைப்படும் தொகையை மட்டுமே கடனாக பெற இயலும். வெளி நாட்டில் படிப்பவர்கள்  இத்துடன் பயண கட்டணத்தையும் செர்த்துக்கொள்ளலாம்.

5. முன் செலுத்த வேண்டிய தொகை (  MARGIN): 4 லட்சம் வரையான தொகைக்கு  எதுவும் செலுத்த வேண்டியது இல்லை.  அதற்கு மேற்பட்ட தொகைக்கு  இந்தியாவில் கல்வி பயிலுபவர்கள் 5% , வெளிநாட்டில் பயிலுபவர்கள்  15% செலுத்த வேண்டும்.

 
6. செக்யூரிட்டி ( SECURITY ) :  4 லட்சம் வரையிலான தொகைக்கு  மாண்வருடன் சேர்ந்து பெற்றோரும்  கடனுக்கு விண்ணப்பிக்க வேண்டும். (COOBLIGATION).  4 லட்சத்திற்கு மேல் 7.5 லட்சம் வரை  பெற்றோருடன் பொருத்தமான மூன்றாம் நபர்  ஜாமின் தேவை. 7.5 லட்சத்திற்கு மேல்  கடன் தொகைக்கு தாகுந்தவாறு  சொத்து ஜாமின் தேவை.

 
7. கடனை திருப்பி அளிக்கவேண்டிய காலம் ( REPAYMENT  PERIOD):  படிப்பு காலம் ( COURSE PERIOD) முடிந்ததிலிருந்து  ஒருவருடம் , அல்லது வேலை பார்க்க ஆரம்பித்ததிலிருந்து ஆறு மாதம். இதில் எது முன்பாக வருகிறதோ அதன்படி.
 
8.  குடும்ப வருமானம் :  இவ்வளவு வருமானம் இருக்கவேண்டும்  என்ற நிபந்தனை எதுவும் இல்லை.

 
9. மாணவர் வசிக்கும் இடத்திற்கு அருகாமையில் உள்ள வங்கி கிளையில் விண்ணப்பிக்க வேண்டும்.

10. கடனுதவி பெற அங்கிகரிக்கப்பட்ட படிப்புகள் :  இந்தியாவில்  - டிப்ளமோ, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு,  மற்றும்  மின்னனு துறையால் அங்கீகரிக்கப்பட்ட  கணனி படிப்புகள். வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு - Course of study abroad : Job-oriented professional/technical courses offered by reputed universities, MCA,MBA, MS etc.Courses conducted by CIMA - London, CPA in USA etc

11. வயது வரம்பு :   இந்தியாவில் பயிலும் மாணவர்களுக்கு  15 - 30 வயது. வெளிநாட்டில் பயிலும் மாணவர்களுக்கு  18 - 35 வயது.

இவைதான் கல்விக்கடன் பெற தேவையான தகவல்கள். இதில் குறிப்பிடப்பட்டு உள்ள அனைத்து நிபந்தனைகளும் எல்லா வங்கிகளுக்கும் பொதுவான ஒன்று.

முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு, தேவையான ஆவணங்களுடன்  விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்ப படிவங்களை பரிசீலித்து முடிவெடுக்க வங்கிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள  காலக்கெடு -  15 நாட்களிலிருந்து 30 நாட்கள் .

Wednesday, May 18, 2011

கருணாநிதிக்கு ஒரு பகிரங்க கடிதம் - பழ. நெடுமாறன்.

மதிப்புக்குரிய தலைவர் கருணாநிதி அவர்களுக்கு, வணக்கம்.

 "எப்படி இருந்தவர்கள் இப்படி மாறிவிட்டார்களே' என்ற தலைப்பில் மிகுந்த ஆதங்கத்துடன் எனது பழைய கடிதம் ஒன்றை எடுத்து மேற்கோள்காட்டி விடுத்திருந்த அறிக்கையைப் படித்துப் பார்த்தேன்.

 தேர்தல் முடிவுகள் வெளிவரும் நாளில் அதைப்பற்றிக்கூட கவலைப்படாமல், எனது கடிதம் குறித்து அறிக்கை வெளியிடும் அளவுக்கு உங்கள் மனநிலை இருந்திருக்கிறது என்பது புரிகிறது.

 "பொடா' சிறையில் நான் இருந்தபோது, நீங்கள் எழுதிய "தொல்காப்பியப் பூங்கா' நூலைக் கையெழுத்திட்டு எனக்கு அனுப்பி வைத்தீர்கள். நானும் அதைப் படித்துப் பார்த்துவிட்டுத் தங்களுக்கு ஒரு பாராட்டுக் கடிதம் அனுப்பினேன்.

 ஆனால், தாங்கள் செய்த, செய்துவரும் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதற்கும் தங்களது இலக்கியத்தைப் பாராட்டுவதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை நன்கு அறிந்திருந்தும் திசை திருப்புவதற்கு முயற்சி செய்திருக்கிறீர்கள். இப்போது மட்டுமல்ல, நீண்டகாலமாகவே இவ்வாறு செய்து வருகிறீர்கள்.

 1969-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியில் முதல்முதலாக என் மீது பொய் வழக்குத் தொடுக்கப்பட்டது. ஆனாலும், முதலமைச்சராக அண்ணா இருந்தவரை, அந்த வழக்கு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், நீங்கள் முதலமைச்சரான உடனேயே என்னைக் கைது செய்து சிறையில் அடைக்க ஆணை பிறப்பித்தீர்கள். 6 மாத நன்னடத்தை ஜாமீன் கொடுத்துவிட்டு வீட்டுக்குப் போகலாம் என நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பை எனது மனசாட்சி ஏற்க மறுத்தது.

 எந்தக் குற்றமும் செய்யாதபோது நன்னடத்தை ஜாமீன் எழுதிக்கொடுப்பதை நான் ஏற்கவில்லை. அதன் விளைவாக, ஆறு மாதம் சிறையில் இருக்க நேர்ந்தது. காமராஜ் மதுரை சிறைக்கே வந்து என்னைப் பாராட்டினார். அதைவிடச் சிறந்த பாராட்டு வேறு இல்லை. இதன் விளைவாக, தமிழகம் முழுவதற்கும் நான் அறிமுகமானேன். இதற்குக் காரணம் நீங்களே என்பதை இன்றும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்.

 1978-ம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இந்திரா காந்தி மதுரைக்கு வந்தபோது, அவருக்குக் கறுப்புக் கொடி காட்டுவது என்ற பெயரில் உங்கள் தொண்டர்கள் அவரது உயிருக்கு உலை வைக்க முயன்றார்கள். உங்களால் ஏவி விடப்பட்டவர்களின் கொடூரமான தாக்குதல்களிலிருந்து இந்திராவைக் காப்பாற்றிய பேறு எனக்குக் கிடைத்தது. அதன் மூலம் அகில இந்திய அளவில் அறிமுகமானேன். இதற்கும் நீங்களே காரணம் என்பதை உணர்ந்து உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

 1985-ம் ஆண்டில் விடுதலைப் புலிகளின் துணையுடன் இலங்கைத் தமிழர் பகுதியில் ரகசியச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்கு சிங்கள ராணுவம் இழைத்து வரும் கொடுமைகளை ஆதாரப்பூர்வமாக அறிந்துவந்து வெளியிட்டபோது, நீங்கள் முரசொலி இதழில் என்னைப் பாராட்டி முழுப்பக்க அளவில் கட்டுரை எழுதினீர்கள். இப்போதும் அதை நன்றியோடு நினைவுகூர்கிறேன். ஆனால், நாம் ஒன்று கூடி உருவாக்கிய "டெசோ' அமைப்பை நீங்கள் தன்னிச்சையாகக் கலைத்தீர்கள்.

 ஈழத் தமிழர் பிரச்னையில் உங்களுக்கு உண்மையான ஈடுபாடு இல்லாமல் அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறீர்கள் என்பதை உணர்ந்தபோது, உங்களுக்கு எதிர்நிலை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

 காமராஜரோடு உங்களை ஒப்பிட்டும், உங்கள் ஆட்சியை காமராஜ் ஆட்சி என வருணித்தும் காங்கிரஸ்காரர்கள் சிலர் பேசுகிறார்கள். புரிந்து பேசுகிறார்களா அல்லது புரியாமல் பேசுகிறார்களா என்பது உங்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாகும்.

 காமராஜ் மக்கள் தொண்டுக்காகத் திருமணத்தைத் துறந்தவர். பெற்ற தாயைக்கூட தன்னுடன் வைத்துப் பேணாதவர்.

 ஒன்பது ஆண்டுகள் ஆங்கிலேயரின் கொடுமையான சிறையில் வாடியபோதும் அதுகுறித்து ஒருபோதும் பேசாதவர். மறையும்போது தான் உடுத்தியிருந்த துணிகளைத் தவிர, வேறு சொத்து இல்லாதவர். ஆனால், நீங்களோ மனைவி, துணைவி என பல்கிப் பெருகிய குடும்பங்களுடன் வாழ்பவர். அது மட்டுமல்ல, ஏழைக் குடும்பமான உங்கள் குடும்பம், இன்று ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரக் குடும்பங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

 தனது தாய் உள்பட, தனது குடும்பத்தவர் எவரையும் அரசியலில் அனுமதிக்காதவர் காமராஜ். அதைப்போலவே தான் உருவாக்கிய தி.மு. கழகத்தில் அண்ணா, தனது பிள்ளைகள் எவரையும் வாரிசாக அறிமுகப்படுத்தவில்லை. ஆனால், நீங்கள் செய்ததை நாடறியும். 1970-களில் உங்களது மூத்த மகன் மு.க. முத்துவை எம்.ஜி.ஆருக்குப் போட்டியாகத் திரையுலகில் களமிறக்கினீர்கள். கட்சிக்காரர்களைத் தூண்டிவிட்டு ரசிகர் மன்றங்களை உருவாக்கினீர்கள். இறுதியில் மு.க. முத்துவை நிலைநிறுத்தவும் முடியவில்லை. எம்.ஜி.ஆரை கழகத்தில் நீடிக்க வைக்கவும் முடியவில்லை.

 இதன் விளைவாக, 13 ஆண்டுகள் நீங்கள் பதவி இல்லாத இருளில் தடுமாற நேர்ந்தது. ஆனாலும் நீங்கள் பாடம் கற்கவில்லை. இப்போது இளம் நடிகர்கள் விஜய், சூர்யா ஆகியோருக்குப் போட்டியாக உங்கள் பேரன் அருள்நிதியை கலை உலகில் இறக்கியிருக்கிறீர்கள். விஜய்யின் படங்களுக்கு பல முட்டுக்கட்டைகளைப் போட்டுத் தடுக்க நடைபெற்ற முயற்சி வெற்றி பெறவில்லை. விஜய்யின் பகையைத் தேடிக் கொண்டதுதான் மிச்சம். திரையுலகைக் கபளீகரம் செய்ய உங்கள் வாரிசுகள் செய்த முயற்சியின் விளைவாக, ஒட்டுமொத்தத் திரையுலகமும் உங்களுக்கு எதிராகத் திரும்பிவிட்டதே!

 கடைசிவரை அண்ணா காங்கிரஸ் எதிர்ப்பாளராகவே திகழ்ந்தார். மதுவிலக்குக் கொள்கையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால், அண்ணா மறைந்த உடனேயே நீங்கள் மதுக்கடைகளைத் திறந்து இளைய தலைமுறையின் சீரழிவுக்குக் காரணமானீர்கள். அதைப்போல 1971-ம் ஆண்டில் காங்கிரஸýடன் கைகோக்கத் தொடங்கி இன்றுவரை அந்த உறவை நீட்டிப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறீர்கள்.

 நேரு குடும்பத்துக்கும் தனக்கும் உள்ள உறவை யாரும் பிரித்துவிட முடியாது எனத் தம்பட்டம் அடிக்கிறீர்கள்.

 1959-ம் ஆண்டு சென்னைக்குப் பிரதமர் நேரு வந்தபோது கறுப்புக் கொடி என்ற பெயரில் அவர் மீது உங்களது தம்பிகள் செருப்புகளை வீசினார்கள்.

 1978-ல் மதுரைக்கு இந்திரா காந்தி வந்தபோது கொலை முயற்சி நடைபெற்றது. அது மட்டுமல்ல, பாட்னாவில் வி.பி. சிங் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் எதிர்ப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும்போது, நான் வெளிநாட்டுப் பெண்ணை மணந்தவன் இல்லை என ராஜீவைச் சாடினீர்கள். நேரு குடும்பத்தின்மீது நீங்கள் வைத்திருக்கிற அளவற்ற அன்பின் அறிகுறிகள் இவை.

 பல கட்டங்களில் காங்கிரஸ் தலைமையை மிரட்டிப் பணியவைக்க நீங்கள் முயற்சி செய்தீர்கள். மத்திய அமைச்சரவையில் மகனுக்கும், மகளுக்கும் இடம்கேட்டு நீங்கள் நடத்திய மிரட்டல் நாடகமும், சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸýக்கு எதிராக விடுத்த மிரட்டலும் கடைசியில் உங்களின் சரணாகதியில்தான் முடிந்தது.

 1971-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் நாடாளுமன்றத்துக்கு ஒன்பது இடங்களுக்கு மேல் தர முடியாது. சட்டமன்றத்தில் ஓரிடம்கூட கிடையாது என இந்திராவையே மிரட்டிப் பணியவைத்த நீங்கள், இன்று சோனியாவிடம் ஒவ்வொரு முறையும் சரணடைவதைப் பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது.

 அதிகாரம், பணம் ஆகியவற்றின் பலத்தோடு உங்கள் மகன் அழகிரி திருமங்கலம் இடைத்தேர்தலில் கையாண்ட தில்லுமுல்லுகள் உங்கள் ஆசியோடுதானே நடைபெற்றன. அதைத்தொடர்ந்து நடைபெற்ற அத்தனை இடைத்தேர்தல்களிலும் திருமங்கலம் சூத்திரத்தின் அடிப்படையில்தானே நீங்கள் வெற்றிபெற முடிந்தது. இதைக் கண்டு மகிழ்ந்து மகனை உச்சிமுகர்ந்து பாராட்டினீர்கள். ஆனால், தேர்தல் ஆணையம் விழிப்படைவதற்கு இவை காரணமாயிற்று என்பதை அப்போது நீங்கள் உணரவில்லை. சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையம் மிகுந்த கவனத்துடன் எடுத்துக்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாகத்தானே உங்களால் முறைகேடுகளை அரங்கேற்ற முடியவில்லை.

 தேர்தல் முடிந்த பிறகு தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி விடுத்த அறிவிப்பு நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாக நாடு முழுவதும் ரூ. 70 கோடி கைப்பற்றப்பட்டது. இதில் ரூ. 60 கோடி தமிழ்நாட்டில் மட்டும் கைப்பற்றப்பட்டது. நாங்கள் ஒரு கோடி ரூபாயைக் கைப்பற்றியிருக்கிறோம் என்றால் 40 முதல் 50 கோடி ரூபாயை விநியோகிக்கவிடாமல் தடுத்து இருக்கிறோம் என்று பொருள் எனக் கூறியுள்ளார்.

 அவர் கூற்றுப்படி பார்த்தால் தமிழ்நாட்டில் ரூ. 2,400 கோடி முதல் ரூ. 3,000 கோடி வரை பணம் விநியோகிக்கவிடாமல் தடுக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. ஜனநாயகத்தைச் சீரழிக்கத் தமிழ்நாட்டில் உங்கள் கட்சியினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி குறித்து நீங்கள் இதுவரை வெட்கமடையவில்லையே, அது ஏன்?

 நீங்கள் உள்பட கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் தொகுதி மாறி போட்டியிட்டும் பயனில்லாமல் போனது ஏன்?

 தி.மு.க. வரலாறு காணாத வகையில் மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது ஏன்? மூத்த அமைச்சர்களும் கூட்டணித் தலைவர்களும் படுதோல்வி அடைந்தது ஏன்? நீங்கள் சிந்தித்தது உண்டா? இனிமேலாவது சிந்திப்பீர்களா?

 இலவசங்களை அள்ளித் தந்தும், பல ஆயிரம் கோடி ரூபாய்களை வாரியிறைத்தும் பலமான கூட்டணி அமைத்தும் களம் இறங்கியபிறகு தோல்வியைத் தழுவியது ஏன்? இலங்கையில் நடைபெற்ற போரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்யப்பட்டபோது, அவர்களைக் காப்பாற்றுவதற்கு எந்த முயற்சியும் செய்யாமல் உண்ணாவிரத நாடகத்தை நடத்தி காங்கிரஸýக்குத் துணை போனது இந்தத் தோல்விக்குரிய முக்கிய காரணமென்பதை இப்போதாவது உணர்கிறீர்களா?

 முள்ளிவாய்க்கால் போரின் இறுதிக்கட்டத்தில் மக்களைக் காப்பதற்காக தனது மகனையே களமுனைக்கு அனுப்பிக் காவுகொடுக்க ஒரு தலைவன் முன்வந்தான். அதே காலகட்டத்தில் தில்லியில் தனது மகனுக்கும், மகளுக்கும் பதவி பெறுவதற்காக மடிப்பிச்சை ஏந்தி நின்றார் ஒரு தலைவர் என்ற தீராத பழிக்கு ஆளாகிவிட்டீர்களே!

 உங்களின் கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள், இயற்கை வளங்கள் கொள்ளை, மோதல் சாவுகள், உயர் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல், அன்னிய நிறுவனங்களுக்குத் தடையில்லாத மின்சாரத்தை வழங்கிவிட்டு மக்களுக்கு மின்சாரத் தடை ஏற்படுத்திய கொடுமை போன்றவற்றை விரிக்கின் பெருகும். உங்கள் தோல்விக்கு இவையெல்லாம் துணை நின்றன.

 திரைப்படங்களுக்கு வசனம் எழுதுவதில் வல்லவர் நீங்கள் என்பதை நான் மறுக்கவில்லை. நீங்கள் எழுதிய வசனங்களிலேயே என் மனதில் இன்னமும் நிற்பது "மனசாட்சி உறங்கும்போதுதான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பி விடுகிறது' என பூம்புகார் படத்தில் நீங்கள் எழுதிய வசனம் உங்களுக்கு இன்று எல்லா வகையிலும் பொருத்தமாகிறது.

 ஈழத் தமிழர்களை மட்டும் நீங்கள் கைவிடவில்லை. தமிழக மீனவர்களையும் கைவிட்டீர்கள். ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க எதுவும் நீங்கள் செய்யவில்லை.

 உங்கள் மகள் கனிமொழி, ஆ. ராசாவுடன் கூட்டுச்சேர்ந்து நடத்திய ஸ்பெக்ட்ரம் ஊழலை மூடிமறைக்க நீங்கள் செய்த முயற்சி எதிர்விளைவை அல்லவா ஏற்படுத்தி விட்டது. ஈழத் தமிழர் பிரச்னையில் துரோகம் செய்த மத்திய அரசுக்கு ஆதரவாக நீங்கள் நடந்து கொண்டதற்குக் கிடைத்த கைமாறுதானே ஸ்பெக்ட்ரம். குடும்ப நலனைக் காப்பாற்ற காங்கிரஸ் தலைமையுடன் பணிந்து போனீர்கள். ஆனால், தமிழக மக்கள் உங்களையும் காங்கிரûஸயும் கூட்டணி சேர்ந்த கட்சிகளையும் கூட்டாகத் தண்டித்து விட்டார்கள்.

 மதம், ஜாதி, பிராந்திய வேறுபாடுகள் இல்லாமலும் ஒட்டுமொத்த தமிழகமும் உங்களுக்கு எதிராகத் திரண்டது ஏன்? பல காலம் உங்களின் அசைக்க முடியாத கோட்டையாகத் திகழ்ந்த சென்னை தவிடு பொடியானது ஏன்? அண்ணா வளர்த்த கட்சி, கடைசிக் கட்டத்தில் வடிவேலுவையும், குஷ்புவையும் நம்பி நிற்க வேண்டிய அவலத்துக்கு யார் பொறுப்பு?

 கடந்த ஐந்தாண்டு காலத்தில் எந்த மாநில முதலமைச்சரும் சந்தித்திராத பாராட்டு விழாக்களை நடத்தி, இதுவரை யாரும் பெற்றிராத விருதுகளையும் உங்கள் துதிபாடிகள் உங்களுக்கு அளித்தபோது கூச்சமின்றி அவற்றை ரசித்து ஏற்றீர்களே, இன்றைக்கு அந்தத் துதிபாடிகள் உங்களைத் தனிமையில் விட்டுவிட்டு, "அற்ற குளத்து அறுநீர் பறவைகளாக'ப் பறந்துவிட்டார்களே.

 அகில இந்திய காங்கிரஸ் தலைவராகப் பதவி வகித்து உயர்ந்த நிலையில் இருந்த காமராஜ் 1967-ம் ஆண்டு தேர்தலில் தோற்றபோது மக்கள் தீர்ப்பை மதித்து ஏற்கிறேன் என்று கூறினார். அவருக்கு இருந்த ஜனநாயகப் பண்பு உங்களிடம் காணப்படாதது ஏன்? "மக்கள் ஓய்வளித்து விட்டார்கள்' என்று நீங்கள் கூறியதன் மூலம் ஜனநாயகத்தையும் பொது வாழ்க்கையையும் மாசுபடுத்தி விட்டீர்கள்.

 பொது வாழ்க்கைக்கு வருகிறவர்கள் கடைசிவரை மக்களுக்குத் தொண்டாற்றுவதையே கடமையாகக் கொண்டு செயல்படுவார்கள். பதவியில் இருந்தால் மக்கள் தொண்டு, பதவியில் இல்லாவிட்டால் ஓய்வு என்று சொல்பவர் உண்மையான மக்கள் தொண்டராக இருக்க முடியாது.

 தமிழ்நாட்டில் காங்கிரஸ் தோல்விக்குப் பொறுப்பேற்றுப் பதவி விலகும் பக்குவம் தங்கபாலுவுக்குக்கூட இருக்கிறது. ஆனால், பொது வாழ்க்கைக்குப் பொன் விழா கொண்டாடிய உங்களுக்கு இன்னமும் அந்தப் பக்குவம் வராதது ஏன்? இந்தக் கட்டத்திலேயாவது பிறரிடம் இல்லையென்றாலும் உங்கள் வாரிசிடமாவது எல்லாவற்றையும் ஒப்படைக்கலாம் என நீங்கள் எண்ணியதுண்டா?

 ஒருவரின் பெருமைக்கும் சிறுமைக்கும் அவரவர்கள் செயல்பாடே அடிப்படை என்பதை வள்ளுவர் கூறுகிறார். குறளோவியம் தீட்டிய தாங்கள், இதை உணராதது ஏன்?

 "பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்'' 

Monday, May 16, 2011

மே 13 - தமிழர் தீபாவளி!


இந்த ஆண்டு இரண்டு தீபாவளி பண்டிகை. மே.13 அன்று சிறப்பாக தீபாவளி பண்டிகையை கொண்டாடினேன்.Saturday, May 14, 2011

ஐயையோ யாராவது காப்பாத்த வாருங்களேன்!

கழிந்த சனிக்கிழமைக்கு முந்திய சனிக்கிழமை அன்று மதியம் 3 மணி அளவில் என் வீட்டின் காலிங் பெல் ஒலித்தது. வெளியே சென்று பார்த்தபொழுது 25 வயது மதிக்கதக்க ஒரு இளைஞர் கையில் புல்ஸ்கேப் பைண்ட் செய்த நோட்டுடன் நின்று கொண்டிருந்தார். கருப்பு கலர் கட்டம் போட்ட சட்டையும், நாலு முழ வேஷ்டியும், காலில் ஹவாய் சப்பலும் அணிந்திருந்தார். அவருடன் பதினெட்டு வயது மதிக்க தக்க ஒரு பையனும் நின்றிருந்தான்.

அவர்களிடம் என்ன வேண்டும் என கேட்டபொழுது " உங்கள் பெயர் திரவிய நடராஜன் தானே?" என்றார்.

" ஆமாம்"

" உங்கள் வீட்டில் நீங்கள், xxxxxxxxxxxxx , xxxxxxxxxxx, xxxxxxxxxx ஆக 4 ஓட்டுக்கள் இருக்கிறது. நீங்கள் ஏன் ஓட்டு போடவில்லை?"

எனக்கு ஜிவ்வென்று கோபம் தலைக்கு ஏறியது. அதை அடக்கி கொண்டு அவரிடம் கேட்டேன்,

"நீங்கள் யார்?"

" நான் எலெக்க்ஷன் ஆபீஸ் ஆள்"

அவர் தோற்றத்திற்கும் அவர் கூறிய பதிலுக்கும் சம்பந்தமே இல்லை என்பது தெரிந்தது. அவர் கட்சிகாரர் என்பது அப்பட்டமாக தெரிந்தது. இருந்தாலும் பொறுமையாக அவரிடம்,

" உங்க ஐ.டி கார்டை காட்டுங்கள்" என்றேன். சுதாரித்துக்கொண்ட அவர்,

" நான் கட்சி ஆபிஸீலிருந்து வாரேன்" என பல்டி அடித்தார்.

" ஏன் ஓட்டு போடலை என்பதை நீங்க ஏன் கேட்கனும்?"

" என்ன பிரச்சனை என்பதை தெரிந்து கொள்ளத்தான்"

" ஓட்டு போடுவதும், போடாம இருப்பதும் என் விருப்பத்தை பொறுத்தது. அதற்கான காரணங்களை கட்சிக்காரனிடம் கூற வேண்டிய அவசியம் கிடையாது. எலெக்சனை நடத்தும் எலக்சன் கமிஷன் தான் இதை கேட்க முடியும். ஆமாம் நீங்க எந்த கட்சி?" 

பதில் எதுவும் சொல்லாமல் அடுத்தவீட்டிற்கு சென்று விட்டார். அவர் எந்தக்கட்சியிலிருந்து வந்திருக்கார் என்பதை நீங்கள் கூட யூகிக்க முடியும். இதை சும்மா விட்க்கூடாது என்ற முடிவோடு கேட்டை பூட்டிவிட்டு வீட்டிற்குள் வந்தேன். 

சிஸ்டத்தை ஆன் செய்து எலெக்சன் கமிஷன் வெப் சைட்டை சர்ச் செய்தேன். அதிலிருந்து தேர்தல் கமிஷ்னரின் தொலைபேசி எண்ணை நோட் பண்ணினேன். (044) 2567 0390.
அவர் எண்ணை டயல் செய்தேன். மூன்று ரிங்குகள் சென்ற உடனேயே தொலைபேசியை எடுக்கப்பட்டது. பேசியவர், தலைமை தேர்தல் அதிகாரி திரு. பிரவீன் குமார் ஐ.ஏ எஸ் அவர்களின் பெண் உதவியாளர். அவர்களிடம் இது பற்றி புகார் செய்தேன். அவர்,

" ஏன் ஓட்டு போடவில்லை என ஒரு கட்சிக்காரர் வாக்காளரிடம் கேட்பது மிரட்டுவது போலாகும். இது சட்டப்படி குற்றம். எனவே இது பற்றி போலீசில் புகார் செய்து விட்டு அதைப்பற்றி எங்களுக்கும் புகார் செய்யுங்கள்" என கூறி என் பகுதி காவல் நிலைய தொலை பேசி எண்ணையும் கொடுத்தார்.

சாதாரனமாக அரசாங்க அலுவலகத்திற்கு போன் செய்தால் எளிதில் லைன் கிடைக்கது. அப்படியே கிடைத்தாலும் பியூன் எடுப்பார். "அய்யா இல்லை" என கூறிவிட்டு நாம் பதில் சொல்லுவதற்குள்ளாகவே இணைப்பை துண்ண்டித்து விடுவார். அப்படி இருக்கும் பொழுது தலைமை தேர்தல் அதிகாரி அலுவகத்தின் செயல் என்னை பிரமிக்க வைத்தது.

வம்பை விலை கொடுத்து வாங்குவானேன் என முடிவு செய்து, போலீசில் புகார் செய்யவில்லை. எனது தொகுதி முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின்  போட்டியிட்ட  கொளத்தூர் தொகுதியாகும்.

எப்படியோ 3 ஓட்டு இயந்திரங்கள் பழுது அடைந்து வாக்குகளை எண்ண முடியாத நிலை நேற்று இரவு வரை நீடித்தாலும், இயந்திரங்களின் வரிசை எண் மாறியுள்ளது என எதிர் வேட்பாளர் சைதை துறைசாமியின் முகவர்களின் ஆட்சேபனையையும் மீறி 2800 வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்டாலின் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எம்.பி. தேர்தலில் சந்தேகத்திற்கிடமான முறையில் வெற்றி பெற்றது போலவே இதுவும் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழனென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா!

தமிழகத் தேர்தல் முடிவு இன்ப அதிர்ச்சியை அளித்திருக்கிறது. அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறப்போகிறது என்று நாம் முன்பே எதிர்பார்த்தோம் என்றாலும் இந்த அளவுக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியை மக்கள் அதிமுகவுக்கு அளிப்பார்கள் என்பதை நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. எதிர்க்கட்சி அந்தஸ்துக்குக்கூட அருகதை இல்லாத அளவுக்கு திமுக தோல்வியைத் தழுவி இருக்கிறது என்றால் எந்த அளவுக்கு மக்கள் திமுக ஆட்சியின்மீது வெறுப்படைந்திருந்தனர் என்பது தெளிவாகிறது.
 
இதை ஜெயலலிதா தலைமையிலான அஇஅதிமுக கூட்டணியின் அமோக வெற்றி என்று கூறுவதைவிட, திமுக தலைமையிலான கூட்டணிக்கு எதிராக எழுந்த மக்களின் மௌனப் புரட்சி என்று கூறுவதுதான் சரியாக இருக்கும். தமிழகம் முழுவதும் திமுகவுக்கு எதிராக ஒரே மாதிரியான மனோபாவம் காணப்பட்டிருப்பது புதியதொன்றும் அல்ல. தமிழக மக்கள் கடந்த 2006 சட்டப்பேரவைத் தேர்தலைத் தவிர, ஏனைய தேர்தல்களில் எல்லாம் ஏதாவது ஒரு கட்சிக்குப் பேராதரவு அளித்துத் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வாக்களித்து வந்திருக்கிறார்கள் என்பதுதான் சரித்திர உண்மை.
 
1967-லும், 1977-லும், 1996-லும் காணப்பட்ட எழுச்சியை இந்தத் தேர்தலிலும் காண முடிகிறது. பெருந்திரளாக மக்கள் வாக்குச்சாவடியை நோக்கிப் படையெடுத்ததை, ஆளும் கட்சியினர் தங்களது பணப் பட்டுவாடாவின் விளைவு என்று தப்புக்கணக்குப் போட்டனர் என்றால், பல தேசியத் தொலைக்காட்சி சேனல்களின் கருத்துக் கணிப்புகளும்கூட அல்லவா, எதார்த்த நிலைமையைப் புரிந்துகொள்ளாமல் திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்புக்குக் கட்டியம் கூறின? குழப்பம் ஆட்சியாளர்களிடமும், ஊடகங்களிடமும் இருந்ததே தவிர, மக்களிடம் இருக்கவில்லை.
 
 மின் வெட்டு, விலைவாசி உயர்வு, ஊழல் போன்ற பிரச்னைகள் திமுக ஆட்சியினர்மீது மக்களுக்குப் பரவலான அதிருப்தி ஏற்படுவதற்குக் காரணிகள் என்றாலும், திமுகவைத் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓட ஓட விரட்டியது என்னவோ "குடும்ப ஆட்சி' என்கிற அருவருப்பான விஷயம்தான். ஜெயலலிதா தலைமையில் அமைய இருக்கும் அதிமுக ஆட்சியில் சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் இல்லாவிட்டாலும் நிச்சயமாகத் தலையீடு தவிர்க்க முடியாதது என்பது தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும். அது நன்றாகத் தெரிந்திருந்தும் வாக்களித்திருக்கிறார்கள் என்றால் அதற்கு என்ன காரணம்?
 
கருணாநிதியின் தலைமையிலான திமுக ஆட்சியில், அவரது மனைவி மட்டுமோ அல்லது அவரால் வாரிசு என்று அடையாளம் காட்டப்பட்ட துணை முதல்வர் மு.க. ஸ்டாலினின் குடும்பம் மட்டுமோ ஆதிக்கம் செலுத்தி இருந்தால்கூட மக்கள் இந்த அளவுக்குக் கோபமும் வெறுப்பும் அடைந்திருக்க மாட்டார்கள். கருணாநிதியின் குடும்பம் என்கிற பெயரில், மனைவி, துணைவி, மக்கள், பேரக் குழந்தைகள் என்று ஒரு டஜன் குடும்பங்களின் ஆதிக்கமல்லவா நடந்தது?
 
  அதைக்கூடப் பொறுத்துக் கொண்டிருப்பார்கள். மாவட்டத்துக்கு மாவட்டம், தொகுதிக்குத் தொகுதி, ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு என்று அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள், சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினர்கள், வட்டச் செயலர்கள் என்று பல நூறு குடும்பங்கள் செலுத்திய ஆதிக்கமும், அரங்கேற்றிய அட்டகாசங்களும் கொஞ்சமா நஞ்சமா? அத்தனை அடாவடிப் பேர்வழிகளுக்கும் வாக்குச் சீட்டின் மூலம் தக்க பாடம் புகட்டி இருக்கிறாôர்கள்.
 
தமிழனை நினைத்தால் பெருமிதமாக இருக்கிறது. தமிழன் இந்தியாவையும், மக்களாட்சியையும் காப்பாற்றி இருக்கிறான். அதற்காக அவனுக்குத் தலைவணங்க வேண்டும் போலிருக்கிறது. நடந்து முடிந்த தேர்தலில், நாங்கள் முறையாகப் பணம் விநியோகம் செய்திருப்பதால் வெற்றிபெற்று விடுவோம் என்றும், எங்களது இலவசத் திட்டங்கள் சென்றடையாத வீடுகளே இல்லை அதனால் வெற்றி பெற்று விடுவோம் என்றும் எத்தனை திமிராகத் திமுகவினர் பேசினார்கள்.
 
யோசித்துப் பாருங்கள். இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றிருந்தால், திருமங்கலம் ஃபார்முலா, இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களிலும் அந்தந்த ஆளும் கட்சியினராலோ, எதிர்க்கட்சியினராலோ, அரங்கேற்றப்பட்டிருக்காதா? மக்களின் நியாயமான உணர்வுகள் தேர்தலில் பிரதிபலிக்காமல் போனால், வாக்குகள் விலைக்கு வாங்கப்படும் அவலம் இந்தியா முழுவதும் அரங்கேறினால், அதன் தொடர்விளைவு அராஜகத்திலும், தீவிரவாதத்திலும் அல்லவா முடிந்திருக்கும்? இந்தியா தமிழனுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறதா, இல்லையா?
 
 முன்னாள் அமைச்சர் ஒருவரின் தொகுதியில் ஏறத்தாழ 10,000 வாக்காளர்களுக்கு, அதுவும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஏழை வாக்காளர்களுக்கு, டோக்கன் வழங்கப்பட்டு மாவட்டத் தலைநகரிலுள்ள ஷோரூமிலிருந்து டிவிஎஸ் 50 இலவசமாக எடுத்துச் செல்லும்படி பணித்தார்கள். எட்டே எட்டுபேர் மட்டும்தான், டிவிஎஸ் 50 எடுத்துச் சென்றார்கள். ஏனையோர் அந்த டோக்கனைக் கிழித்துப் போட்டுவிட்டு வாக்களித்திருக்கிறார்கள். பல இடங்களில் நரிக்குறவர்களின் காலனியில் பண விநியோகம் செய்தவர்களை விரட்டி அடித்திருக்கிறார்கள்.
 
 பட்டணத்தில் படித்தவர்கள் காரில் வந்து இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை வெட்கமில்லாமல் கேட்டுச் செல்லும்போது, பல கிராமத்து ஏழைத் தமிழர்கள் தங்களை விலைபேச வந்தவர்களை விரட்டி அடித்திருப்பதைப் பற்றிக் கேள்விப்படும்போது மேனி சிலிர்க்கிறது. இனிமேல், அரசியல்வாதிகள் பணம் கொடுத்து வாக்குகளைப் பெற முயற்சிக்க மாட்டார்கள். பண விநியோகத்தால் மட்டுமே வெற்றி உறுதி செய்யப்படாது என்பதால், தங்கள் கைப்பணத்தை விரயமாக்கத் தயாராக மாட்டார்கள்.
 
   பணத்துக்கு ஆசைப்பட்டும், இலவசங்களில் மயங்கியும் தனது வாக்குகளை விலைபேசத் தயாராக இல்லை என்பதைத் தெள்ளத் தெளிவாக உணர்த்தி விட்டிருக்கிறான் தன்மானத் தமிழன். ஆட்சியாளர்கள் என்னதான் இலவசங்களை அள்ளிக் கொடுத்தாலும், அடிப்படை நிர்வாகம் இல்லாமல் போனால், மின் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு போன்ற மக்கள் பிரச்னைகளைத் தீர்க்காமல் போனால், வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தாவிட்டால், அந்த ஆட்சியைத் தூக்கி எறியத் தயங்க மாட்டோம் என்பதை அழுத்தம்திருத்தமாகத் தெளிவாக்கி இருக்கிறார்கள் தமிழக வாக்காளப் பெருமக்கள். என்னவொரு அரசியல் முதிர்ச்சி, பெருமிதமாக இருக்கிறது!
 
ஈரோட்டில் முத்துசாமி, முதுகுளத்தூரில் சத்தியமூர்த்தி, கிணத்துக் கடவில் மு. கண்ணப்பன், ஆர்.கே. நகரில் சேகர்பாபு என்று கடைசி நேரத்தில் கட்சி மாறிய அத்தனை சந்தர்ப்பவாதிகளும் தோல்வியைத் தழுவி இருக்கிறார்கள். ஜாதிக் கட்சிகளான பாமக, விடுதலைச் சிறுத்தைகள், கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் என்று சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்தவை மண்ணைக் கவ்வி இருக்கின்றன. காங்கிரûஸப் பற்றி சொல்லவே வேண்டாம். வாக்காளர்களிடம்தான் என்னவொரு தெளிவு...
 
 கடந்த மக்களவைத் தேர்தலில், சிவகங்கை தொகுதியில் ஒரு மிகப்பெரிய மோசடி நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது. பூத் வாரியான வாக்குகளைப் பதிவு செய்து காட்டுகின்ற படிவம் 20-ல் அதிமுக வேட்பாளர் ராஜகண்ணப்பனுக்குக் கிடைத்த வாக்குகளைக் காங்கிரஸ் வேட்பாளரான மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்துக்கும், அவரது வாக்குகளை ராஜகண்ணப்பனுக்கும் மாற்றி எழுதி, காங்கிரஸ் வேட்பாளர் ப. சிதம்பரம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது என்கிற குற்றச்சாட்டை எழுப்பி இருக்கிறார் முதல்வராகப் பதவி ஏற்க இருக்கும் ஜெயலலிதா. யார் கண்டது, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக அணியின் முழு வெற்றியே இப்படி ஒரு தில்லுமுல்லால் பெறப்பட்டதுதானோ என்னவோ? சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அப்படி ஓர் ஐயத்தை எழுப்புகிறதே...
 
தேர்தல் முடிவுகள் திமுகவுக்கும் அதன் தோழமைக் கட்சிகளுக்கும் தரப்பட்டிருக்கும் தண்டனை என்றால், திறமையான அதேநேரத்தில் நேர்மையான நிர்வாகம், மக்களின் உணர்வுகளையும், பிரச்னைகளையும் பிரதிபலிக்கும் ஆட்சி, கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய குடும்ப ஆதிக்கமும், தலையீடும் இவையெல்லாம் இல்லாமல், கேவலம், பணத்தையும், இலவசங்களையும் காட்டி இனிமேலும் யாரும் எங்களை ஏமாற்ற முடியாது என்பது அதிமுகவுக்கும், மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க இருக்கும் செல்வி. ஜெயலலிதாவுக்கும் அவர்கள் உணர்த்தும் பாடம்.
 
 "தமிழனென்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா!'' என்கிற நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் வரிகளுக்கு உயிர் கொடுத்திருக்கும் தமிழக வாக்காளப் பெருமக்களை ""தினமணி'' பெருமிதத்துடன் தலைவணங்கிப் பாராட்டுகிறது!
 
நன்றி: தினமணி  
 
 
   

Thursday, May 12, 2011

செய்தி கதம்பம்

பினாயிலை டானிக் என கொடுத்த அரசு மருத்துவமனை!
மகாராஷ்டிராவில், அமராவதியில் மகப்பேறு மருத்துவமனியில் ஒரு சில தினங்களுக்கு முன் குழந்தை பெற்றெடுத்த தாய்க்கு டானிக் பாட்டிலில் ஊற்றி வைக்கப்பட்டிருந்த பினாயிலை டானிக்க் என கொடுத்துள்ளனர். நல்ல வேளை அப்பெண்ணுக்கு எதுவும் ஆகவில்லை

கருத்து: பணி நியமனத்தில் தகுதியை பார்க்காமல் காசை வாங்கிக்கொண்டு அரசியல்வாதிகள் வேலை கொடுத்தால் இப்படித்தான் நடக்கும்!               

காமெடி செய்யும் ராகுல் காந்தி - குரு பெயர்ச்சி - நேரம் சரியில்லை! 
உத்தர பிரதேசத்தில்  பட்ட பார்சால் என்ற கிராமத்தில் மாயாவதி அரசால் கையகப்படுத்திய நிலத்திற்கு அதிக நஷ்ட ஈடு கேட்டு போராடிவரும் கிராம மக்களை  சந்திக்க ராகுல் டூ வீலரில் சென்றார். பாதுகாப்பாளருக்கு இது தெரியாது. விவசாயிகளிடம் டீவாங்கி குடித்து, அவர்களுடன் பல மணி நேரம் அளவளாவினார். திக் விஜய சிங்கும் கலந்து கொண்டார். அங்கு ஏற்கனவே 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.  அதன் பின் கைது செய்யப்பட்டார். அவருக்கு அருகாமையில்  நாட்டு துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்த ஒரு இளைஞரை உ.பி. போலீசார் கைது செய்தனர்.கருத்து:  ஏன் இந்த கேவலமான விளம்ம்பர நாடகம்? இது நியாயம் என்றால் மஹாராஷ்டிராவில் அணு மின் உலை அமைக்க ஜெய்டாபூரில் இடம் எடுத்த விவகாரத்தில் அங்கேயும் விவசசாயிகள் போராடுகிறார்கள். அங்கே ஏன் போகவில்லை. அங்கு காங்கிரஸ் ஆட்சி!. துப்பாக்கியுடன் இளைஞன் - இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி பாதையை பின் பற்றுகிறாரோ? விதி யாரை விட்டது.

பொறுப்பற்ற கர்நாடகா காவல் துறை.
மைசூர் - பெங்களூர் ஹைவேய்ஸ்-ல் உள்ள  புயல் மழை நீர் செல்லும் ஓடையில் ஒரு சடலம் கிடந்தது. இதைப்பற்றி போலீஸில் மக்கள் புகார் செய்தனர். ஆனால் அந்த சடலம் 5 நாட்களாக எடுக்கப்படாமல் அழுகியது. காரணம் அந்த இடம் பிடாடி காவல் நிலைய எல்லைக்குள் உள்ளதா அல்லது தலகாடுபுரா காவல் நிலைய எல்லைக்குள் உள்ளதா என்ற பிரச்சனை. கடைசியில் மக்கள் போராட்டம் நடத்திய பின் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு வந்து உடல் அப்புறப்படுத்தப்பட்டது.

கருத்து: ஏற்கனவே உச்ச நீதிமன்றம் யார் எல்லைக்கு உட்பட்டது என ஆராய்ச்சி செய்யாமல் வழக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. பொய் கேஸ் போடுவது லஞ்சம் வாங்குவதிலேயே குறியாக இருக்கும் இவர்களுக்கு உச்ச நீதிமன்ற உத்தரவை தெரிந்து கொள்ள நேரம் ஏது?

திறமைக்கு வந்த சோதனை!

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான இறுதிக்கட்ட தேர்வில், தமிழக மாணவர்கள் அபார சாதனை படைத்துள்ளனர். நேற்று வெளியான தேர்வு முடிவில், அகில இந்திய அளவில் முதல் மூன்று இடங்களை தமிழக மாணவர்கள் பிடித்ததுடன் இல்லாமல், ஒட்டுமொத்தத்தில் 100க்கும் மேற்பட்டோர் தேர்வு பெற்று சாதித்துள்ளனர்.
 கருத்து: நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற கனவுகளுடன் தேர்வு பெற்றிருக்கும் இந்த இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள்.  ஆனால் ஒரு வருத்தம். நாட்டுக்கு நல்லது செய்வது இருக்கட்டும். தன்மானத்துடனும். கவுரவத்துடனும்  பணியாற்ற முடியுமா இந்த சூழ் நிலையில் என்பது கேள்விக்குறியே!  சகாயம், உமாசங்கர் போல் ஓரம் கட்டப்பட்டால் தாங்கிக்கொள்வார்களா? அல்லது  கிரிமினல் அரசியல்வாதிகளின் எடுபிடியாக மாறி  அரசின் விருப்ப ஒதுக்கீட்டில் வீட்டு மனை அல்லது வீட்டை அடிமாட்டு விலைக்கு வாங்குவார்களா என்பதை காலம் தான் நிர்ணயிக்கும்.
சபாஷ்டா செல்லம்!
ஈரோடு பெண் போலீஸ் வள்ளியின் கணவர் கடத்தப்பட்ட விவகாரத்தில், போலீசார் எடுத்த நடவடிக்கைகள் குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விவரம் கேட்டு, அவரதுஒன்பது வயது மகன் மனு கொடுத்துள்ளார்.ஈரோடு பெரியார் நகரைச் சேர்ந்தவர் பெண் போலீஸ் வள்ளி (35); ஈரோடு எஸ்.பி., அலுவலக, "ஸ்டோர் ரூமில்' பணிபுரிகிறார். உயர் அதிகாரிகளால், "செக்ஸ்' தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டதாகவும், பெண் போலீசாருக்கு நடக்கும் செக்ஸ் தொந்தரவு பற்றிய புகார்களை விசாரிக்க, குழு ஒன்று நியமிக்கவும் கோரி, ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.அமைச்சருக்கான ஒதுக்கீட்டில், வீட்டுவசதி வாரிய வீட்டை, ஈரோடு மாநகராட்சி மேயர் குமார் முருகேஷ் மூலம் பெற்றுத் தருவதாக கூறி, ஈரோட்டை சேர்ந்த சந்திரசேகரன், ரேவதி ஆகியோர், 15 லட்சம் ரூபாய் அளவுக்கு, தன் கணவர் சீனிவாசனை மோசடி செய்ததாக, வள்ளி புகார் கூறினார்.
மகன் அஜய் கிருஷ்ணராஜ் (வயது 9) ஈரோடு ஏ.டி.எஸ்.பி., மகேந்திரனிடம், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் நேற்று ஒரு மனு கொடுத்தார்.அம்மனுவில் "என் தந்தை சீனிவாசன் கடத்தப்பட்டு, பல நாள் கழித்து தப்பித்து வந்துள்ளார். இது தொடர்பாக என் தாய் வள்ளி, சென்னை ஐகோர்ட்டில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அப்போது, விசாரணை அதிகாரிகள், தனிப்படை அமைத்து, பல்வேறு இடங்களில் தேடியதாக, ஐகோர்ட்டில் கூறியுள்ளனர்.ஆனால், தேடுதல் நடத்திய அதே நாட்களில், இதே போலீசார், வேறு இடத்தில் பணி பார்த்ததாக, பயணப்படி வாங்கியுள்ளனர். இதற்குரிய ஆவணங்கள் கொடுக்க வேண்டும். என் தாயின் நடத்தை சரியில்லை என குற்றம்சாட்டி, போலீசார் பலரிடம் புகார் மனு பெற்றதற்கான முகாந்திரம் என்ன என்பதை தெரிவிக்க வேண்டும். ஐகோர்ட் உத்தரவின்படி, என் தந்தையை கடத்திய நபர்கள் மீது, போலீசார் என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பதை தெரிவிக்க வேண்டும்" என தகவல் கேட்டுள்ளான்.

கருத்து: சபாஷ்டா செல்லம்! தகவல் அறியும் சட்டத்தை அதுவும் 9 வயதில் ஆயுதமாக கையில் எடுத்ததற்கு வாழ்த்துக்கள்! வாய்மையே வெல்லும். விளையாடுடா கண்ணா, விளையாடு!Tuesday, May 10, 2011

வி.ஐ.பி மாளிகையாக மாறும் திகார் ஜெயில்!

நாங்கள் என்ன செய்தாலும் எங்களை ஒன்னும் செய்ய முடியாது என்று காலரை தூக்கிவிட்டு அலைந்த அரசியல்வாதிகளுக்கும், அதிகாரவர்க்கத்திற்கும் இன்று திகார் ஜெயில் சரணாலயமாக ஆகி விட்டது.


இது தான் திகார் ஜெயிலின் நுழைவு வாசல். இந்த ஜெயிலின் முக்கியத்துவம் என்னவென்றால், இங்கு கைதிகளுக்கு முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு போன்ற பாகுபாடே கிடையாது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது இந்தியாவிலேயே இந்த ஒரு இடத்தில் மட்டும் தான் கடை பிடிக்கப்படுகிறது.

இங்கு சாதரண பிக்பாக்கெட் திருடன் முதல் லட்சம் கோடி திருடிய அரசியல்வாதிவரை-சாதாரண குற்றவாளியிலிருந்து, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் குற்றவாளிகள் வரை எல்லோருமே  கலைஞரின் சமூகநீதிப்படி இங்கு வாழ்க்கை நடத்துகிறார்கள்.

இங்கு இருக்கும் மிக முக்கிய வி.வி.ஐ.பி பட்டியலை பாருங்கள்.

 முன்னாள் அமைச்சர் ஏ. ராஜா - ஸ்பெக்ட்ரம் ஊழல்


 ஆர். கே. சர்மா ( முன்னாள் ஐ.பி.எஸ்)  - பத்திகையாளர் ஷிவானி பட்நகர் கொலையில் ஆயுள் தண்டனை பெற்றவர். சுரேஷ் கல்மாடி -  காமன்வெல்த் கேம்.


 லலித் பானட் - காமன்வெல்த் கேம் ( ஓ.சி - செக்ரெட்டரி ஜெனரல்)


மனு ஷர்மா -  புகழ் பெற்ற ஜெஸிகா லால் கொலைவழக்கில் ஆயுள் தண்டனை குற்றவாளி. வினோத் சர்மா என்ற  முக்கிய காங்கிரஸ் தலையின் செல்ல பிள்ளை.


வினோத் கோயங்கா - டி.பி. ரியாலிட்டியின் எம்.டி - 2G ஸ்பெக்ட்ரம் வழக்கு


 சஞ்சை சந்திரா - எம்.டி, யுனிடெக் - 2G ஸ்பெக்ட்ரம்.


கவுதம் ஜோசி - எம்.டி, ரிலயன்ஸ். 2G ஸ்பெக்ட்ரம்.


வி.கே வர்மா- டைரக்டர் ஜெனரல்,ஓ.சி - காமன்வெல்த் கேம்.


சாகித் பல்வா - டி.பி ரியாலிட்டி - 2G ஸ்பெக்ட்ரம்

இன்னும் பல்ர். ஜெயில் எண்1 வார்டு எண்4-ல், கைது செய்யப்பட்ட  ராஜா 15 க்கு 10 அடி அளவுள்ள ஜன்னல் இல்லாத அறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு கட்டில் எதுவும் கிடையாது. குண்டும் குழியுமாக உள்ள தரையில் பெட்ஷீட்டை விரித்து படுக்கவேண்டும். தலையணை கிடையாது. ராஜா தனக்கு வழங்கப்பட்ட பெட்ஷீட் ஒன்றை சுருட்டி தலையனையாகவும், அடுத்ததை விரிப்பாகவும் மற்றதை போர்த்திக்கொள்ளவும் உபயோகப்படுத்தவேண்டும். அந்த அறையோடு இணைந்த ஒரு சிறிய டாய்லெட் உண்டு.

ஜெயில் வளாகத்தில் ஒரு நூல் நிலையம் உண்டு. ஆனால் அங்கு செல்ல அனுமதி கிடையாது. வார்டுக்குள் காலார நடந்து செல்ல அனுமதி உண்டு. பத்திகைகள் படிக்க வழங்கப்படும். ராஜா தனக்கு தமிழ் பத்திரிகை வேண்டும் என கேட்டதால் அவருக்கு வழங்கப்பட்டு வருகிறது.

காலை ஆறு மணிக்கும் இரவு 7 மணிக்கும் ரோல் கால் எனப்படும் கணக்கெடுப்புக்கு வெளியே வந்து வரிசையில் நிற்கவேண்டும்.

காலையில் 9.30 மணிக்கு சாதம், ரொட்டி, தால் வழங்கப்படும். மதியம் 3.30 மணிக்கு 2 பிஸ்கட்டுகளும் டீயும் வழங்கப்படும். மாலை6மணிக்கு  காலையில் வழங்கப்பட்டது போலவே உணவு வழங்கப்படும்.

மாலை 6.30 மணியிலிருந்து 11 மணி வரை புத்தகம் படிக்க அல்லது  டி.வி பார்க்க அனுமதிக்கப்படுவார்கள்.11மணிக்கு" விளக்கை அணைக்கவும்" என்ற அறிவிப்பு கொடுக்கப்படும். விளக்கை அணைத்து விட்டு தூங்கவேண்டும்.

ராஜா கல்மாடி போன்றவர்கள் விசாரணை கைதிகள் என்பதால் அவர்களுக்கு வேலை எதுவும் ஒதுக்கப்படவில்லை. காண்டீனில் இருந்து ஆம்லெட் வாங்க ரூ.500 கொடுத்து ஆம்லெட் கூப்பன் ராஜா வாங்கியுள்ளார்.

இதுதான் முன்னாள் அமைச்சர் ராஜாவின் திகார் வாழ்க்கை.


Monday, May 9, 2011

சோனியாவுக்கு சுப்பிரமணிய சாமி வைத்திருக்கும் சூப்பர் ஆப்பு!

 யாராலும் நெருங்க முடியாதவர்கள் என்று கருதப்பட்டவர்கள், தீண்ட முடியாதவர்கள் என்று நினைக்கப்பட்டவர்கள் நீதித்துறையின் நெடிய கரங்களில் சிக்க ஆரம்பிக்கின்றனர்.
அப்படி இப்போது சிக்கியிருக்கும் மிகப்பெரிய விலாங்கு மீனாக இருப்பவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி. ஃபோர்பஸ் பத்திரிகையில் வந்துள்ள கட்டுரைப்படி பார்த்தால் உலகிலேயே மிகவும் செல்வாக்கான மனிதர்கள் வரிசையில் ஒன்பதாவது இடத்தில் இருப்பவர்.
ஹஃபிங்டன் போஸ்ட் செய்தி இணையதளத்தில் எழுதுகிறவர் கிளியோ பாஸ்கல். அவர்தான் கூறுகிறார் சோனியா காந்தி மீது ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறது என்று. "உலகின் செல்வாக்கான மனிதர்கள் வரிசையில் ஒன்பதாவது இடத்தில் இருப்பவர் மீதுதான் ஊழல் குற்றச்சாட்டு கூறப்படுகிறது - அவர் வீழ்ச்சி அடைவாரா?'' என்று.  ஹஃபிங்டன் போஸ்டில் 2011 ஏப்ரல் 25-ம் தேதி அவர் இதை எழுதியிருக்கிறார்.

இவர் சிறந்த பத்திரிகையாளருக்கான விருதுகளைப் பெற்றவர். லண்டனில் உள்ள சர்வதேச விவகாரங்களுக்கான ராயல் கழகத்தில் அவர் உறுப்பினர். அமெரிக்க வெளியுறவுத்துறையில் கெüரவமிக்க உறுப்பினர்.  அமெரிக்க எரிசக்தித்துறை, அமெரிக்க ராணுவக் கல்லூரி, பிரிட்டிஷ் ராணுவத்துறை, பிரிட்டிஷ் வெளியுறவு, காமன்வெல்த் அலுவலகம், பிரிட்டிஷ் ராணுவ அகாதெமி, ஐரோப்பிய யூனியன், நேடோ, பாதுகாப்பு-ஒத்துழைப்புக்கான ஐரோப்பிய அமைப்பின் ஆலோசகர். 
"கணவருக்கு அடங்கிய, குடும்ப பாரத்தை விரும்பிச் சுமக்கிற இந்திய மருமகளாக, இப்போது கணவரை இழந்த பெண்ணாகத் திகழ்கிறார்.  சந்தேகிக்கத்தக்க சில வர்த்தக நடவடிக்கைகள் மூலம் சோனியா காந்தியுடைய, அவருடைய குடும்பத்தாருடைய சொத்துகளின் மதிப்பு பல மடங்காக உயர்ந்து வருவது குறித்து ஆங்காங்கே முணுமுணுப்புகள், புருவ நெறிப்புகள், கேள்விக்கணைகள் எழுந்துள்ளன.
1995-ம் ஆண்டிலேயே எம்.டி. நளப்பாட் என்கிற பத்திரிகையாளர் "தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளேட்டில் சோனியா காந்தி குறித்து திடுக்கிடவைக்கும் சில கட்டுரைகளை எழுதினார்.  எதுவுமே தெரியாத சாதாரண குடும்பப் பெண் போல அவர் காட்சி தருவதெல்லாம் வெறும் வெளிவேஷம், அவருக்குள் தீவிரமான அரசியல் அபிலாஷைகள் இருக்கின்றன என்று அப்போதே அவர் எழுதினார். பின்னாளில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை சோனியா ஏற்றபோது நளப்பாட் எழுதியது வெறும் வார்த்தைகள் அல்ல என்று நிரூபணம் ஆயின.

காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை அவர் ஏற்றதற்குக் காரணம் தன்னுடைய கணவரின் தாய் நாடு வளம் பெற்று முன்னேற வேண்டும் என்ற பொதுநல நோக்கு அல்ல என்பது அவருடைய தனிப்பட்ட சொத்தும், அவருடைய குடும்பத்தாருடைய சொத்துமதிப்பும் ராஜீவ் காந்தி பிரதமராகப் பதவியேற்ற பிறகு 1984-ல் இருந்து கற்பனைக்கு எட்டாத வேகத்தில் அதிகரித்தபோது நிரூபணம் ஆயின.  நளப்பாட் எழுதிய அரசியல் கட்டுரைகளில் யாரும் குறை சொல்ல முடியாதபடி இருந்தாலும் 1998-ல் பத்திரிகைத் தொழிலைவிட்டே நளப்பாட் விலக நேர்ந்தது. சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரானார்.
போஃபர்ஸ் பீரங்கி பேரத்தில் சுவீடன் நாட்டின் அரசு தலைமை வழக்கறிஞராக இருந்த ஸ்டென் லிண்ட்ஸ்ட்ராம் நடத்திய விசாரணை அடிப்படையில் எழுந்த பல அடிப்படையான கேள்விகளை பாஸ்கல் தொட்டுக்காட்டுகிறார்.
 போஃபர்ஸ் பீரங்கி பேரத்துக்குப் பிறகு ஆட்டோவியோ குவாத்ரோச்சியின் நிறுவனங்களுக்கு எப்படிப் பெரும் தொகை கிடைத்தது என்பதை காந்திகள் - அதிலும் குறிப்பாக சோனியா காந்தி - விளக்க வேண்டும் என்று கேட்கிறார். சோனியா காந்தி குடும்பத்தாருக்கும் குவாத்ரோச்சிக்கும் என்ன உறவு என்று கேட்கிறார் லிண்ட்ஸ்ட்ராம். குவாத்ரோச்சியையும் அவருடைய ஏ.இ. சர்வீசஸ் என்ற நிறுவனத்தையும் போஃபர்ஸ் பீரங்கி பேர நிறுவனத்துக்கு அறிமுகப்படுத்தி வைத்தது யார் என்றும் லிண்ட்ஸ்ட்ராம் கேட்கிறார்.  இதிலிருந்து ஒரு விஷயம் நிச்சயமாகத் தெரிகிறது. பீரங்கி பேர கமிஷனின் ஒரு பகுதி குவாத்ரோச்சிகளுக்குக் கிடைத்திருக்கிறது. அதற்குக் காரணம் சோனியா காந்தி என்று எல்லா ஆவணங்களும் சுட்டுகின்றன என்று லிண்ட்ஸ்ட்ராம் கூறுகிறார்.
அர்த்தமுள்ள இந்தக் கேள்விகளுக்கு சோனியா காந்தி இதுவரை பதில் அளிக்கவில்லை; அது மட்டும் அல்ல, இந்த விவகாரத்தில் கமிஷன் வாங்கியது குவாத்ரோச்சிதான் என்பது சந்தேகம் அறத் தெரிந்துவிட்ட போதிலும் அவரால் இந்தியாவில் வழக்கைச் சந்திக்காமல் தப்பிக்க முடிகிறது. மேலும் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதால் முடக்கிவைக்கப்பட்ட அவருடைய வங்கிக் கணக்கையும் திறக்க உத்தரவிடப்பட்டு அவர் கணக்கில் இருந்த பணத்தையும் அவரால் எடுத்துக்கொள்ள முடிந்திருக்கிறது.
ஆனால் சோனியா காந்திக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் இப்போது பிரதமரின் மேஜை மேலே காத்துக் கொண்டிருக்கிறது. ஊழலுக்காக சோனியா காந்தி மீது வழக்குத் தொடர பிரதமர் மன்மோகன் சிங்கின் ஒப்புதலைக் கேட்டு சுப்பிரமணியன் சுவாமி அளித்திருக்கும் மனுதான் அந்த அச்சுறுத்தல்.

சுப்பிரமணியன் சுவாமி அளித்திருப்பது வெறும் அனுமதி கோரும் கடிதம் அல்ல; மிகவும் நுணுக்கமாகத் தகவல்களைச் சேகரித்து ஆராய்ந்து எழுதப்பட்ட 200 பக்கங்களுக்கும் மேற்பட்ட ஆவணங்களைக் கொண்டது அந்தக் கடிதம். 1972 முதல் இந்தியாவில் நடந்த ஊழல்களில் சோனியா காந்திக்கு உள்ள பங்குகள் எவை என்று தோலுரித்துக் காட்டும் ஆவணங்கள் அவை. 
1986-ல் போஃபர்ஸ் பீரங்கி பேர விவகாரத்தில் தனிப்பட்ட முறையில் சோனியா காந்தி அடைந்ததாகக் கருதப்படும் பணப் பயன்கள் பற்றிய தகவல்களும் அதில் உள்ளன.
1991-ம் ஆண்டு முதல் பல நூறு கோடி ரூபாய்கள் இந்தியாவைச் சேராத வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளன. இராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்தபோது உணவுக்குப் பதில் கச்சா பெட்ரோலிய எண்ணெய் என்ற திட்டத்தின் கீழ் இராக்கிலிருந்து கச்சா பெட்ரோலிய எண்ணெயை வாங்கி விற்ற விதத்தில் சோனியா காந்தி கோடிக்கணக்கான ரூபாய்களைச் சம்பாதித்ததாகக் கூறப்படுகிறது.
  அமெரிக்காவுக்கும் ரஷியாவுக்கும் பனிப்போர் நடந்த காலத்தில் ரஷியாவின் கே.ஜி.பி. என்ற உளவு அமைப்பு மூலம் பணம் பெற்ற தகவல்களும் கிடைத்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.
 பிரதமரின் மேஜை மீதுள்ள புகார் மனுவை பாஸ்கல் வெகு கவனமாகப் படித்துப் பார்த்திருக்கிறார். இந்த மனுவை ஏற்கவோ, நிராகரிக்கவோ பிரதமருக்கு 3 மாதங்கள் அவகாசம் உள்ளது. அதன் பிறகு அவரிடமிருந்து எந்தப் பதிலும் வராமல் போனால் உச்ச நீதிமன்றத்தை அணுகி அதனிடம் அனுமதி பெற சுவாமிக்கு உரிமை இருக்கிறது.
  உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இப்போது இருக்கும் எஸ்.கே. கபாடியா இந்த மாதிரி வழக்குகளை உடனுக்குடன் அனுமதித்துவிடுவார்.
 உலக அரங்கில் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் முக்கியத்துவத்தின் பின்னணியில் பார்க்கும்போது, சோனியா மீது வழக்குத் தொடர சுவாமி அனுமதி கோரியிருப்பது வெறும் இந்திய அரசியல் விவகாரம் இல்லை, உலகில் ஊழல் ஒழிய வேண்டும் என்று நினைக்கும் அனைவராலும் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய விவகாரம் என்று முடித்திருக்கிறார் பாஸ்கல்.
  
ஊழல் ஒழிப்புச் சட்டம் தேவை என்ற கோரிக்கை நிறைவேறும்வரை உண்ணாவிரதம் என்று அறிவித்த காந்தியவாதி அண்ணா ஹசாரேவுக்கு தனது ஆதரவு உண்டு என்று சோனியா அறிவித்தவுடன், அவரே அகமகிழ்ந்து சோனியாவுக்கு நன்றி தெரிவிக்கிறார், பாராட்டுகிறார்.
 சோனியா அத்தோடு சும்மா இருக்கவில்லை, அண்ணா ஹசாரேவின் ஆதரவாளர்களான சாந்தி பூஷண், பிரசாந்த் பூஷண் ஆகியோர் என்ன யோக்கியமா, அவர்களுடைய வண்டவாளங்கள் தெரியாதா, அவர்களை வைத்துக்கொண்டு ஊழலை ஒழிக்கச் சட்டத் தயாரிப்பா என்று கபில் சிபல்கள், திக்விஜய் சிங்குகள், திவாரிகளை விட்டு வசைமாரிப் பொழிய கண்ஜாடை காட்டிவிட்டார்.
  சோனியா பாராட்டும்போது அவருடைய தொண்டரடிப்பொடிகளால் எப்படி அண்ணா ஹசாரேவின் ஆதரவாளர்களைத் திட்டித் தீர்க்க முடிகிறது என்று பத்திரிகைகள் கேள்வி கேட்கவில்லை.
அவ்வளவு ஏன், இந்தியாவின் பிரபல பத்திரிகைகளும் தொலைக்காட்சி ஊடகங்களும் சுப்பிரமணியன் சுவாமி மிகுந்த முயற்சி எடுத்துத் தயாரித்துள்ள 200 பக்கங்களுக்கும் மேற்பட்ட அந்த முக்கிய ஊழல் புகார் குறித்து சிறிதளவுகூட செய்தி வெளியிடவில்லை.
கிளியோ பாஸ்கல் எழுதிய கட்டுரைக்கு நன்றி தெரிவித்து இந்திய வாசகர் எழுதிய கடிதத்துக்குப் பிறகே இது பலரின் கவனத்துக்கும் கொண்டுவரப்பட்டது.
 நன்றி : திரு. எஸ். குருமூர்த்தி (கட்டுரையாளர்)