Friday, May 6, 2011

பங்கு சந்தை வியாபாரமும், முதலீடும். பகுதி-1

பொதுவாக பங்கு சந்தை என்றாலே நஷ்டம் தான் வரும் என்ற தவறான கருத்து நம்மில் பல்ருக்கும் உண்டு. காரணம் நமக்கு தெரிந்தவர்கள் அதில் நஷ்டப்பட்டு பணத்தை இழந்ததை நாம் கண்கூடாக பார்த்திருப்போம்.

ஆனால், நஷ்டப்பட காரணம் என்ன என்பதை அவர் கூறினாலும் நம்மால் புரிந்து கொள்ளமுடியாது. நமக்கு அதைப்பற்றி ஒன்றுமே தெரியாதே. அதனால் அவர் சொல்லுவதை அப்படியே ஏற்றுக்கொள்கிறோம்.

வியாபாரம் என்றாலே இருவர்களுக்கு இடையே நடப்பது. ஒருவர் நஷ்டப்பட்டால் மற்றவர் லாபம் அடைவார். இதுதானே உண்மை?  உண்மையை சொன்னால் கண் பட்டுவிடும் என்ற மூட நம்பிக்கையால்  லாபம் அடைந்தவர்கள் யாரும் லாபம் கிடைத்ததை சொல்லாமல் நஷ்டம் என்றே சொல்லுவார்கள். 

எல்லா வியாபாரத்திலும் உள்ளது போல இதிலும் லாப நஷ்டங்கள் உண்டு. அது நம் புத்திசாலிதனத்தை பொருத்தது. அதிக முதலீடோ அல்லது இதற்காக கடை போடவேண்டிய அவசியமோ, ஊழியர் நியமிப்பது போன்ற எந்த பிரச்சனையும் கிடையாது. இதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். லாபமடையலாம். 

பங்கு சந்தை என்றால் என்ன?

ஒரு நிறுவனம் தனக்கு தேவைப்படும் அதிகப்படியான முதலீட்டை பெற பங்குகளை பொது மக்களுக்கு விற்பனை செய்யும். இதை ஐ.பி.ஓ (Initial Public Offering )  என கூறுவர். உதாரணத்திற்கு ஒரு நிறுவனம் 100 கோடி ரூபாய்க்கு பங்குகளை விற்கிறது என வைத்துக்கொள்வோம். ஒரு பங்கின் மதிப்பு ( Face Value) 10 ரூ. ஆகும். இதன் படி 100 கோடி ரூபாய்க்கு 10 கோடி பங்குகளை ஐ.பி.ஓ மூலம் விற்கும். ஆனால் ஒரு பங்கின் விலை 10 ரூபாயாக இருக்காது. நிறுவனம் எந்த அளவுக்கு லாபகரமாக இயங்குகிறது, அதன் எதிர்கால வளர்ச்சி போன்றவற்றை கணக்கிட்டு  பிரிமியம் எனப்படும் அதிகப்படியான தொகையையும் சேர்த்து  பங்கின் விலையை நிர்ணயம் செய்வார்கள். இதை ஆஃபர் பிரைஸ் (Offer Price) என சொல்லுவார்கள். கீழே ஒரு கம்பெனியின் ஐ.பி.ஓ விவரத்தை தந்துள்ளேன்.


சாங்வி போர்ஜிங் என்ற நிறுவனம் தனக்கு தேவைப்படும் 36.9 கோடி ரூபாய்க்கான பங்குகளை விற்க உள்ளது. மே மாதம் 4-ம் தேதியிலிருந்து மே 11 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதன் ஆஃபர் விலை ரூ80 - ரூ 85 ஆகும். அதாவது ரூ 70 - 75 -ஐ பிரிமியமாக சேர்த்துள்ளது. இப்பொழுது நன்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

SEBI (Securities & Exchange Board of India) என்ற அரசு அமைப்பிடம் நிறுவனங்கள் ஐ.பி.ஓ விற்கு அனுமதி பெறவேண்டும். அதன் பின்பு NSE (National Stock Exchange), BSE ( Bombay Stock Exchange) ஆகியவற்றில் பதிவு செய்யவேண்டும். அதன் பின்பே பங்குகளை விற்க முடியும். பங்குகள் விற்பனை மற்றும் கொள்முதல் இந்த பங்கு சந்தைகள் மூலமே நடை பெறும். இதனால் முதலீட்டாளர்களுக்கு 100% பாதுகாப்பை அரசு வழங்குகிறது.

முதலீடு மற்றும் வியாபாரம்

1. நெடுங்கால முதலீடு (Long Term Investment):
 உங்களிடம் உள்ள சேமிப்பை அதாவது குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு அது தேவைப்படாது என்ற நிலையில் உள்ள சேமிப்பை பங்குகளில் முதலீடு செய்வது நெடுங்கால சேமிப்பாகும்.

2.குறுகிய கால முதலீடு (Short Term Investment) 
ஆறு மாதம் அல்லது ஒரு ஆண்டு காலத்திற்கு முதலீடு செய்வது குறுகிய கால முதலீடாகும்.
                                                       
3. வியாபாரம் (Trade)
பங்குகளின் விலை இறங்கியிருக்கும் போது வாங்கி ஒரு சில நாட்கள் அல்லது வாரங்களுக்குள் அதன் விலை ஏறியவுடன் விற்று லாபம் சம்பாதிப்பது ஒரு வகை. மற்றது அன்றே, விலை இறங்கியிருக்கும் பொழுது வாங்கி அன்றே விலை ஏறியவுடன் விற்பது( Buy & Sell) அல்லது ஏறியிருக்கும் பொழுது விற்று விட்டு அன்றே இறங்கியிருக்கும் போழுது வாங்கி வியாபாரத்தை முடிப்பது (Short Sell).  அன்றைய தினமே வியாபாரத்தை முடிப்பது இண்ட்ரா டே (Intra day) ஆகும்.

தொடரும்............



3 comments:

  1. அருமை, நன்றிகள், தொடருங்கள்

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கு நன்றி. இது தொடரும்.

    ReplyDelete
  3. அருமை, நன்றிகள், தொடருங்கள்

    ReplyDelete