Sunday, May 22, 2011

நானும் அரசியல்வாதிதான்.........

கடந்த காலத்தை நோக்கி என் பார்வை இப்பொழுது. நான் ஹைஸ்கூலில் படித்துக்கொண்டிருந்த நேரம். எங்க தொகுதியில் இடைத்தேர்தல். தி.மு.க சார்பாக கா.மு.கதிரவன் நின்றார். அவர் எங்க ஊர்க்காரர். முஸ்லீம் சமுதாயத்தை சார்ந்தவர். எங்க ஊரில் (செங்கோட்டையில்) ஜாதி மத பாகுபாடு இன்றி எல்லோரும் உறவினர் போலவே பழகுவோம். அவ்ர் ஹரிபோர்டு எஸ்டேட்டின் ஓனர் காஜா மொகைதீன் ராவுத்தர் அவர்களின் மகன்.

அண்ணாத்துரை, மதியழகன், நெடுஞ்செழியன், கருணாநிதி போன்றவர்களின் பேச்சாலும் எம்.ஜி.ஆரின் நடிப்பாலும் திமுக காரனாக மாறிய மாணவர்களில் நானும் ஒருவன். அதனால் அந்த இடைத்தேர்தலில் திமுகவிற்கு பிரச்சாரம் செய்வதென்று நானும் மற்ற மாணவர்களும் முடிவு செய்தோம்.

மேல பஜாரில் கடலை கடை வைதிருந்த அண்ணாமலை நாடாரின் மகன் மதியழகன் எனக்கு 1 வருடம் சீனியர். அவனும் நானும் தான் எங்கள் பள்ளியின் சார்பாக பேச்சுப்போட்டியில் கலந்து கொள்வோம். அவனை மாணவர் திமுக தலைவராக்கினோம்.

முக்கியமாக எங்கள் லட்சியம் அண்ணன் கா.மு.கதிரவனை அந்த இடைத்தேர்தலில் ஜெயிக்க வைக்கவேண்டும் என்பதுதான். இதை நாங்கள் அவரிடம் கூறிய பொழுது அவர் மிகவும் சந்தோஷப்பட்டார். தன் கணக்கப்பிள்ளையிடம் செலவுக்காக எங்களுக்கு பணம் கொடுக்க சொன்னார். நாங்கள் பணம் வாங்க மறுத்து விட்டோம். காரணம் அவர் ஊர்க்காரர்களிடம் அந்த அளவு நெருக்கமாக பழகுபவர். சுருக்கமாக சொன்னால் அவர் ஊர் மக்களுக்கு சொந்தக்காரர் போல.

முத்துசாமி கரையாளர் பார்க்கை ஒட்டியிருந்த "பத்மநாபா" தியேட்டர் அருகில் இருந்த ஒரு கடையின் மாடியை வாடகைக்கு எடுத்து அலுவலகமாக ஆக்கினோம். ஞாயிற்று கிழமை தோறும் கூட்டம் நடக்கும்.

ஆனால் கட்சி போர்டு கிடையாது. கட்சியிடமிருந்து அனுமதி எதுவும் பெறவில்லை. எல்லாம் எங்கள் சொந்த காசில் தான் செலவு செய்தோம். சுமார் 25 பேர் அங்கத்தினர்கள். 

தேர்தல் பொறுப்பை  தினத்தந்தி ஆதித்தனார் ஏற்றிருந்தார். பிரச்சாரத்திற்கு எங்களுக்கு ஒரு வேன் தந்திருந்தார். அதில் சென்று ஒவ்வொரு பகுதியாக சென்று, வீடு வீடாக பிரச்சாரம் செய்தோம். தேர்தல் நாள் நெருங்கியது. பிரச்சாரத்துக்கு வேண்டிய துண்டு பிரசுரம், கொடி இவை எங்களிடம் காலியாகிவிட்டதால், தி.மு.க தேர்தல் ஆபீஸிற்கு எங்களில் ஒருவன் சென்றான்

திரும்பி வந்தவன் வேனில் இருந்த எல்லாவற்றையும் கொண்டு வந்து எங்கள் ஆபீஸில் போட்டு விட்டு, எங்களை பார்த்து கோபத்துடன், கண்களில் நீர் வர "அப்பவே சொன்னேன். கேட்டீங்களா?  இந்த தே..........யா மவனுக நம்ம பேரை சொல்லி, ஆதித்தனாரிடம் துட்டு வாங்கிட்டிருக்கானுக. நமக்கு இது தேவையா?. கட்சியும் வேண்டாம் ஒரு மயிரும் வேண்டாம்" என்று கூப்பாடு போட்டான்.

அவன் நிதானத்துக்கு வந்தவுடன் அவனிடம் விசாரித்த போது, தேர்தல் வேலை பார்த்து வந்த உள்ளூர் தி.மு.க.காரர் ஒருவர், எங்களுக்கு பொறுப்பானவராக ஆதித்தனார் அவரை நியமித்துள்ளதும், எங்களுடைய செலவுக்கான பணத்தை அவர் ஆதித்தனாரின் மேனேஜரிடமிருந்து வாங்கி எங்களுக்கு கொடுப்பதும் அவர் வேலை என தெரிந்தது. நாங்கள் எங்கள் சொந்த செலவில் பிரச்சாரம் செய்வோம், பணம் வேண்டாம் என அண்ணன் கதிரவனிடம் நாங்கள் கூறிய விபரம் அவருக்கு தெரியும். எனவே தினமும் எங்கள் செலவு கணக்கெழுதி, பணத்தை வாங்கி சுருட்டியுள்ளார்.

இது எக்களுக்கு அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. இந்த விஷயம் எந்த விதத்திலும் நாங்கள் செய்து வரும் தேர்தல் பிரச்சாரத்தை பாதிக்க கூடாது என முடிவு செய்து, அமைதியானோம். ஆனால் இந்த சம்பவம் எங்கள் மனதில், தி.மு.க வின் மீதிருந்த மதிப்பை தவிடு பொடியாக்கியது. "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்பது போல, இவரைப்போலத்தான் மற்ற கட்சிக்காரர்களும் இருப்பார்கள் என்ற முடிவுக்கு நாங்கள் வந்தோம்.

மீதி அடுத்த பதிவில்.............3 comments:

 1. நான் கா.மு.கதிரவனின் சொந்தகாரங்களில் ஒருவன்தான். எனது தகப்பானாரும் அவருடன் தேர்தல் சமயங்களில் அவர்கூட செல்வதுண்டு. கட்சிக்காக சொத்தையெல்லாம் இழந்தவர்களில் அவரும் ஒருவர்.அப்போது தன் சொந்த சொத்தை இழந்து கட்ட்சியை வளர்ப்பர் ஆனால் இப்பொழுது கட்சியை இழந்தாவது சொத்தை சேர்க்கின்றனர்.

  ReplyDelete
 2. Avargal Unmaigal said...

  // நான் கா.மு.கதிரவனின் சொந்தகாரங்களில் ஒருவன்தான் ///

  மிகவும் சந்தோஷம். உங்களுக்கு எந்த ஊர் என்று சொல்லவில்லையே!

  ReplyDelete
 3. சொந்தஊர் செங்கோட்டை வளர்ந்த ஊர் மதுரை வேலைபார்த்த ஊர் சென்னை. இப்போது வேலை பார்த்து வாழ்ந்து சாகப்போகும் நாடு அமெரிக்கா

  ReplyDelete