Thursday, May 26, 2011

தேனம்மை லக்ஷ்மணன் அவர்களுக்கு கருத்து கந்தசாமியின் கடிதம்....

தேனம்மை லக்ஷ்மணன் அவர்களுக்கு,

தங்களின் வலைப்பக்கமான "சும்மா"-ல் தாங்கள் பதிவிட்டுள்ள "சமச்சீர் கல்வியும் கருத்து கந்தசாமிகளும்..." என்ற தலைப்பிட்ட தங்கள் பதிவிற்கு பதிலளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், தங்கள் அபிப்பிராயப்படி நானும் கருத்து கந்தசாமியாக மாறி இந்த பதிவை எழுதுகிறேன்.

பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் என்பது ஜனநாயக நாடாகிய இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கு வழங்கி இருக்கும் அடிப்படை உரிமையாகும். இதை நாம் கருத்து சுதந்திரம் என பொதுவாக எடுத்து கொள்ளலாம். 

அதன் அடிப்படையில் வலைப்பக்கத்தில், பதிவர்கள் சமச்சீர் கல்வி தொடர்பான தங்கள் கருத்துக்களை பதிய நியாயப்படியும் சட்டப்படியும் உரிமை உண்டு. 

நான் எந்த அரசியல் கட்சியை சார்ந்தவனோ அல்லது அனுதாபியோ கிடையாது. 

சமச்சீர் கல்வி என்றால் என்ன? இதுவே பலருக்கும் புரியவில்லை. நாடு முழுவதும் ஒரே மாதிரியான தரமான கல்வி ஒரே மொழியில் பயிற்றுவிக்கப்படுவது தான் சமச்சீர் கல்வியாகும். அந்த மொழி எதுவாக இருக்க முடியும்?. இன்றைய சூழலில்  வேலை வாய்ப்பு, தொழில் என்பது மாநிலம், நாடு என்பதையெல்லாம் கடந்து சர்வதேச அளவிற்கு மாறிவிட்டது. அதனால் ஆங்கில  வழி கல்வி தான்  ஒத்து வரக்கூடியது. 

ஆனால் இங்கு நடப்பது என்ன?  ஒரே பாட திட்டம். ஆனால் அது ஆங்கிலத்திலும் இருக்குமாம். தமிழிலும் இருக்குமாம். அதனால் தமிழில் படித்தவர்களும் ஆங்கிலத்தில் படித்தவர்களும் சமமாம்! என்ன கொடுமை இது?

பொறியியல் படிப்பிலோ அல்லது மருத்துவப்படிப்பிலோ  சேரும் தமிழ் வழி கல்வி கற்றவர்கள் படும் அவஸ்தையை கண்கூடாக காணலாம். பாடங்களை புரிந்து கொள்வதும், தேர்வை ஆங்கிலத்தில் எழுதுவது எல்லாமே சிரமமான காரியம். அதன் பின்பு வேலை தேடுவது, வேலை பார்ப்பது, அந்த துறையில் முன்னேறுவது எல்லாமே.......... அப்பப்பா !

மொழி என்பது கருத்துக்களை அல்லது விஷயங்களை பிறருக்கு உணர்த்தும் ஒரு கருவிதான். இவ்வாறு கூறுவதால் நான் தாய் மொழி பற்று அற்றவன் என நினைக்கவேண்டாம். ஒவ்வொருவரும் தாய் மொழியை படிக்க வேண்டும். தாய் மொழி  இலக்கியங்கள், கவிதைகள் இவற்றை படிப்பதால், நம் கலாச்சாரங்கள், பண்பாடுகளை புரிந்து அதன் படி வாழ முடியும்.

இது கருத்து கந்தசாமியின் (என்னுடைய) கருத்து.

மற்ற கருத்து கந்தசாமிகளின் கருத்துகளையும் பார்க்கலாம்.

சிலர், சமச்சீர் கல்வி திட்டத்திற்கான பாடத்திட்டத்தை தயாரித்த குழு, கருணாநிதி விருப்ப படி கல்விக்கு சம்பந்தமில்லாத விஷயங்களை பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளது. உதாரணம் கருணாநிதியின் கவிதை, செம்மொழி பாடல் போன்றவை. அதனால் புதிய குழு அமைத்து  புதிய பாடத்திட்டம் தயாரித்த பின்பே சமச்சீர்  கல்வி முறையை அமுல் படுத்துவோம் என்ற ஜெயலலிதாவின் முடிவு சரி என்கிறார்கள். தங்கள் கருத்தை சொல்லுவது அவர்கள் உரிமை.

மற்றவர்கள், 200 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து பாட புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. அதனால், ஆட்சேபணைக்குரிய பகுதியை நீக்கி விட்டு புத்தகங்களை வழங்கி இந்த ஆண்டே நடைமுறை படுத்த வேண்டும் என கூறுகிறார்கள்.  இதை சொல்ல அவர்களுக்கும் உரிமை உண்டு.

"முதலில் எல்லாவற்றுக்கும் கண்டமேனிக்கு கருத்து சொல்லும் பழக்கத்தை விடுங்கள். தேவையானால் மட்டுமே சொல்லுங்கள்". என பதிவின் இறுதியில் சொல்லியுள்ளீர்கள். இதில் தான் உதைக்கிறது.

"கண்டமேனி" கருத்து என்றால் என்ன?  

பொதுவாக ஒருவிஷயத்தில் ஒருவர்,  இதுதான் சரி என முடிவு எடுத்திருக்கும் பொழுது, அதற்கு மாறுபட்ட கருத்துக்களை பிறர் சொல்லும் பொழுது, " கண்டமேனிக்கு கருத்து சொல்லாதே" என்பார். இதுதான் நடை முறை வழக்கம்.

 இது விஷயத்தில் தங்களுக்கு ஒரு கருத்து உண்டு. அதிலிருந்து மாறுபட்ட கருத்துக்களை கூறுபவர்களிடம் "நீங்கள் கண்டமேனிக்கு கருத்து சொல்லாதீர்கள்" என அறிவுரை வழங்குகிறீர்கள். இதுதானே உண்மை?

அதோடு நில்லாமல், "தேவையானால் மட்டுமே சொல்லுங்கள்" என கூறியுள்ளீர்கள். எந்தெந்த விஷயங்களில் அல்லது யார் யார் விஷயங்களில் அல்லது எந்தெந்த நேரங்களில் கருத்து சொல்வது தேவையானது என்பதை நிர்ணயம் செய்ய வழிகாட்டுதல் எதாவது உள்ளதா?  அப்படி இருந்தால் சொல்லுங்கள். பலருக்கும் பயன்படும்.

"ஆண் அரசாண்டால் எல்லாம் பெரியவருக்குத் தெரியும் என்றும் பெண் அரசாண்டால் சாமான்யன் கூட ராஜகுருவாய் அட்வைஸியாய் மாறுவதும் ஏன்.? இது இந்தியக் குடும்ப மனோபாவம். பெண் என்பவள் எல்லாவற்றையும் தன்னைக் கேட்டு தன் அனுமதி பெற்றுச் செய்யவேண்டும் என்பது." 

மேற்குறிப்பிடப்பட்டுள்ள தங்கள் வாசகங்கள் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதாக இருப்பதோடு, ஆண் பெண் என்ற பாலின வேறுபாட்டையும் கையில் எடுத்துள்ளது வேடிக்கையாக இருக்கிறது. இதற்கு தெளிவான பதிலை தருகிறேன்.

ஏதோ கருணாநிதி ஆட்சியிலிருக்கும் பொழுது, அவர் ஆண் என்பதால் எல்லோரும் அவரை தூக்கி மடியில் வைத்து கொஞ்சியது போலவும் இப்பொழுது ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் அவர் பெண் என்பதால்  சாமானியன் கூட அட்வைஸ் செய்ய ஆரம்பித்து விட்டார்கள் என வருத்தப்பட்டுள்ளீர்கள். கருணாநிதி ஆட்சி காலத்தில் தவறுகளை சுட்டி காட்டி எல்லா பதிவர்களும் கிழி கிழி என கிழித்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு "உண்மை தமிழன்" வலை தளத்திற்கு சென்று பாருங்கள்!

சாமானியன் என மிகவும் சாதாரணமாக குறிப்பிட்டுள்ளீர்கள். ஜனநாயக நாட்டில் சாமானியன் என்ன? பிச்சைக்காரனுக்கு கூட, ஆட்சியிலிருப்பவர்கள்  வரிப்பணத்தை விரயம் செய்தால் அதை ஆட்சேபிக்கும் உரிமை உண்டு. காரணம் அவன் வாங்கும் பீடியிலிருந்து குடிக்கும் டீ வரை அவனும் மறைமுகமாக அரசுக்கு வரி செலுத்துகிறான்.

அடுத்ததாக, "இது இந்தியக் குடும்ப மனோபாவம். பெண் என்பவள் எல்லாவற்றையும் தன்னைக் கேட்டு தன் அனுமதி பெற்றுச் செய்யவேண்டும் என்பது." என்று கூறி பெண் என்ற கேடயத்தை எடுத்துள்ளீர்கள். இதை எதற்காக இங்கு குறிப்பிடுகிறீர்கள் என புரியவில்லை. ஜெயலலிதா பெண் என்பதால் ஆண்கள் எல்லோரும், இந்திய குடும்ப மனோபாவத்தின் அடிப்படையில்  அவருடைய செயல்களை குறை கூறுவதாக பொருள் கொள்ளும் படி உள்ளது.

குடும்ப மனோபாவம் என்பது பற்றிய விஷயத்திற்குள் நான் வர விரும்பவில்லை. காரணம் இந்த பதிவு கிருபானந்த வாரியாரின் சொற்பொழிவை காட்டிலும் பெரிதாக ஆகிவிடும்.

குடும்பம், ஆட்சி என்பது வெவ்வேறு விஷயங்கள். குடும்பத்தில் ஒரு பெண் செய்யும் செயலால் வரும் கஷ்ட நஷ்டங்கள் அந்த குடும்பத்தை மட்டுமே சாரும். முதல்வர் பணி என்பது, வரிப்பணத்தில், மக்களுக்கு தேவையானவற்றை, விரயம் மற்றும் ஊழல் இல்லாமல் செய்யும் பணியாகும். அவர் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்  தன்னிஷ்டப்படி செயல்பட்டால் நாட்டிற்கே நஷ்டம்.

எனவே முதல்வர் பெண் என்பதால் தன்னிச்சையாக ஊறு விளைவிக்கும் வகையில் செய்யும் எந்த செயலை பற்றி விமர்சிக்க கூடாது என்ற தங்கள் பெண் உரிமை கருத்தை ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

"இதில் வேடிக்கை முகப்புத்தகத்தில்., அரசுப்பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்காதவர் கூட எல்லாருக்கும் சமச்சீர் கல்வி என்பது கானல்தானா என முதலைக் கண்ணீர் வடிப்பது" என குறிப்பிட்டுள்ளீர்கள்.

இதில் என்ன வேடிக்கை இருக்கிறது?  எல்லா பெற்றோர்களும் குறைந்த செலவில் தங்கள் பிள்ளைகளுக்கு தரமான கல்வி (சமச்சீர் கல்வி) கிடைக்க வேண்டும் என்று தான் விரும்புவார்கள். அக்கல்வி அரசு பள்ளிகளில் கிடைக்காத பொழுது அதிகம் செலவானாலும் பரவாயில்லை என தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பார்கள். இது இயற்கை. அரசு பள்ளிகளில் சமச்சீர் கல்வி வந்து அதை தரமாக செயல்படுத்திய பின்பு, இவர்கள் அரசு பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்ப்பார்கள். இதை எப்படி குற்றம் சொல்ல முடியும்?.

தங்களுக்கு, தங்கள் கருத்தை எழுத, எப்படி உரிமை இருக்கிறது என நினைக்கிறீர்களோ, அதே உரிமை மற்றவர்களுக்கும் உண்டு என்பதை மறுக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.

பின் குறிப்பு.  இது தங்கள் பதிவின் மீதான எனது கருத்து தான். பொதுவாக  இது போல பதிவிற்கு, பதில் பதிவு போடும் பழக்கம் எனக்கு கிடையாது. தவிர்க்கமுடியாத சூழ்நிலையில் பதிவிட்டுள்ளேன். தவறாக நினைக்க வேண்டாம்

15 comments:

 1. wow! மிக தெளிவான கருத்துக்கள். உங்கள் கருத்துக்களை நூறு சதவிகிதம் ஒத்துக்கொள்கிறேன்!

  ReplyDelete
 2. ஐயா, தங்கள் நேர்மையைப் பாராட்டுகிறேன்.

  ReplyDelete
 3. bandhu said...

  //wow! மிக தெளிவான கருத்துக்கள். உங்கள் கருத்துக்களை நூறு சதவிகிதம் ஒத்துக்கொள்கிறேன்!//

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 4. இந்த அம்மா கொஞ்சம் அதிகப் பிரசங்கிதான்.

  ReplyDelete
 5. DrPKandaswamyPhD said...

  // ஐயா, தங்கள் நேர்மையைப் பாராட்டுகிறேன்///

  தங்கள் கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 6. ramalingam said...

  ///இந்த அம்மா கொஞ்சம் அதிகப் பிரசங்கிதான் ///

  தங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 7. ஐயா...
  உங்களின் விளக்கமும் வாதமும்
  நியாயமாக இருக்கிறது.

  ReplyDelete
 8. காமராஜ் said...

  /// ஐயா...
  உங்களின் விளக்கமும் வாதமும்
  நியாயமாக இருக்கிறது////

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 9. சமச்சீர் கல்வி என்பதை நாம் இன்னும் கொஞ்சம் முயற்சி செய்து புரிந்து கொள்ளவேண்டும். பிறகு தான் ஏற்கவோ நிராகரிக்கவோ முடியும்.
  http://www.virutcham.com/2011/05/சமச்சீர்-கல்விஆர்வலர்கள/
  (சமச்சீர் கல்வி:ஆர்வலர்கள் பதில் அளிப்பார்களா?)

  ReplyDelete
 10. ஐயா,
  தாங்கள் கருத்தினை முன் வைத்துள்ள பாங்கும், கண்ணியமான அணுகு முறையும் வரவேற்கத்தக்கது. பதிவுலக நாகரிகத்திற்கு இது சிறப்பான முன் உதாரணம். பொதுக் கருத்துகளை அணுகி அதனையொட்டிய எதிர்வினைகளை முன் வைப்பவர் எவ்வித சார்புமின்றி நடுனிலையுடன் இருத்தல் அவசியம். அதுவே அவருக்கும் அவர் கூறும் கருத்துக்களால் பிறருக்கும் நன்மை பயக்கும். இது குறித்து தோழி தேனம்மை சிந்திப்பாராக...

  ReplyDelete
 11. virutcham said...

  சமச்சீர் கல்வி என்பதை நாம் இன்னும் கொஞ்சம் முயற்சி செய்து புரிந்து கொள்ளவேண்டும். பிறகு தான் ஏற்கவோ நிராகரிக்கவோ முடியும் ////

  தங்கள் வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 12. வருணன் said...

  ஐயா,
  ///தாங்கள் கருத்தினை முன் வைத்துள்ள பாங்கும், கண்ணியமான அணுகு முறையும் வரவேற்கத்தக்கது.///

  தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 13. அருமையான அலசல்... தேனம்மை போன்ற “பெண்” கள் பொது வாழ்விற்கு வந்த பிறகும் “ பெண்” என்ற கேடயத்தை பயன்படுத்துவது அடுத்தவர் பரிதாபத்தை சம்பாதிக்கவா?

  ReplyDelete
 14. lakshu said...

  அருமையான அலசல்... தேனம்மை போன்ற “பெண்” கள் பொது வாழ்விற்கு வந்த பிறகும் “ பெண்” என்ற கேடயத்தை பயன்படுத்துவது அடுத்தவர் பரிதாபத்தை சம்பாதிக்கவா?

  தங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 15. உணமைகளை அப்படியே சொல்லியிருக்கிறீகள். அவர் பதில் எதுவும் இதுவரை சொல்லவில்லையே!

  ReplyDelete