Friday, May 27, 2011

மலை வாழ் மக்கள் & தலித்துகள் முன்னேற்றம் காணல் நீரா?.......

இதுவரை பதிவுலகிலும் சரி அச்சு ஊடகம் மற்றும் தொலை காட்சியிலும் சரி, மலை வாழ் மக்கள் மற்றும் தலித்துகளின் முன்னேற்றம் பற்றி தெளிவான திட்டம் பற்றி அரசோ, ஜாதிய கட்சிகளோ அல்லது சமூக ஆர்வலர்களோ இதுவரை விவாதித்ததாக தெரியவில்லை.

எனக்கு தெரிந்த வரை உயர் கல்வியில் இட ஒதுக்கீடு, அரசு வேலையில் இட ஒதுக்கீடு, ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு போன்றவற்றை கேட்டு ஜாதி கட்சிகள் போராடுவதும், அரசு உறுதி மொழி வழங்குவதும் தான் நடைபெற்று கொண்டிருக்கிறது.

ஒரு இன மக்களின் முன்னேற்றத்திற்கான காரணிகள் எவை என இதுவரை அறிவுப்பூர்வமாக சிந்தித்து, ஏன் அதை அவர்களுக்கு கிடைக்க  செய்யவில்லை?  அந்த காரணிகளை கண்டுபிடிக்க கம்ப சூத்திரம் ஒன்றும் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்கு மனச்சாட்சியும், சுயநலமற்ற சிந்தனையும் இருந்தால் போதும்.

காமராஜர் முதலமைச்சராக பதவி ஏற்றவுடன், அவர் அரசு வேலையாக ஒரு மாவட்டத்திற்கு காரில் அதிகாரிகளுடன் சென்றிருந்தார். அப்பொழுது கார் கிராமம் வழியாக சென்றது.  அப்பொழுது ஒரு பையன் கையில் குச்சியுடன் மாடு மேய்த்துக்கொண்டிருந்தான். காரை நிறுத்த சொல்லிய காமராஜ் அந்த பையனை அழைத்து " ஏண்டா பள்ளிக்கூடம் போகாம மாடு மேச்சிட்டிருக்க?" என்று கேட்டார். அவனோ ரெம்ப கூலாக அவரிடம் " கஞ்சி தண்ணிக்கே வழியில்லை, பள்ளிக்கூடம் எப்படி போறது" என்றான்.

சரி. பள்ளிக்கூடத்துக்கு சம்பளம் கட்ட வேண்டாம். அரசாங்கமே சாப்பாடு தரும். பள்ளிக்கூடம் போறீயா?" என்றார். "சரி . பள்ளிக்கூடம் போக சட்டை டிரவுசர் வேணுமே? அது வாங்க எங்ககிட்ட துட்டு இல்லை" என்றான். " அவ்வளவுதான? அரசாங்கமே அதுவும் தரும். இப்ப சரியா?" என்றார். மகிழ்ச்சியோடு அவன் தலையாட்டினான். அவனை தட்டி கொடுத்துவிட்டு, காரில் ஏறி  பயணத்தை தொடர்ந்தார்.

" ஸ்கூல் சம்பளம் கிடையாது, மத்தியானம் சாப்பாடு, ஃபிரியா யூனிபார்ம்! இதெல்லாம் நடக்க கூடியதா?" என மனதுக்குள் எண்ணிக்கொண்டே வந்தனர். அதிகாரிகள் அவர்களின் மன ஓட்டத்தை புரிந்து கொண்ட காமராஜர், அவர்களை பார்த்து புன் முறுவல் செய்துவிட்டு "இவர்களை எல்லாம் அப்படியே விட்டு விட முடியுமா?  நல்ல படிப்ப கொடுத்து, இவங்களையெல்லாம் ஆளாக்க வேண்டாமா?" என்று சொன்னாராம்.

அன்றே அதற்கான வேலைகளை துவங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் படி 300 நப்ர்கள் இருக்கும் ஒரு கிராமத்திற்கு ஒரு ஆரம்ப பள்ளி,..அருகாமையில் இருக்கும் படி நாலைந்து கிராமங்களுக்கு ஒரு நடு நிலை பள்ளி, 3 கி.மீ. -க்கு ஒரு ஒரு உயர் நிலை பள்ளி என பள்ளிக்கூடங்கள் உருவானது. கல்வி என்பது காணல் நீர் என நினைத்திருந்த கிராமப்பகுதி வாழ் தலித்துகளுக்கு கல்வி கிடைத்தது.

இப்பொழுது ஓய்வு பெறும் நிலையில் இருக்கும், சமீபத்தில் ஓய்வு பெற்றவர்களும் கிராமப்பகுதியை சார்ந்த தலித்களும், இதர பிற்படுத்தப்பட்டோரும் இவரால் துவங்கப்பட்ட பள்ளியில் படித்தவர்கள் என்பதை மறுக்க முடியாது.

இவரது ஆட்சிக்குப்பின் வந்த அரசுகள் இவர் செயல் படுத்தியதை பழுதின்றி செயல் படுத்தியிருந்தால், தமிழ் நாட்டில் 1995-லேயே தலித்துகள் எல்லோரும் கல்வி கற்றவர்களாக ஆகியிருப்பார்கள். அதனால் அவர்கள் வாழ்க்கை தரம் உயர்ந்திருக்கும்.

அவர் ஆட்சி காலத்தில் அரசுக்கு வருமானம் மிகவும் கம்மி. இந்த நிதி சுமையை சமாளிக்க, ஊர்மக்களை ஒருங்கிணைத்து குழு அமைத்து அவர்களை கல்விக்காக நிதியுதவி வழங்க செய்தார். இது அவர் நிர்வாக திறமைக்கு எடுத்துக்காட்டு.

அவருக்கு பின் வந்த ஆட்சியாளர்கள் இதை ஏன் தொடர்ந்து செயல் படுத்தவில்லை?

நோயாளி இருந்தால்தான் வைத்தியனுக்கு பொழைப்பு நடக்கும்?. அதைப்போலவே தலித்துகளும் பிற தாழ்த்தப்பட்டவர்களும் பின் தங்கிய நிலையில் இருந்தால் தானே அவர்களுக்கு சலுகைகளை தருகிறோம் என கூறி ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வர முடியும்!. இதுதான் இன்றைய அரசியல்வாதிகளின் லாஜிக்.

ஆரம்ப கல்வியே கற்க வாய்ப்பில்லாமல் இருக்கும் பெரும்பாண்மை  மக்களுக்கு பொறியியல் படிப்புக்கும், மருத்துவ படிப்புக்கும் இட ஒதுக்கீடு செய்வது  கேலிக்கூத்து. 

அதோடு மட்டுமா விட்டார்கள்? அரசு பணியில் ஒதுக்கீடு!. "ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துவது" போல, அரசில் பல ஆண்டுகளாக பணியிடங்கள் நிரப்ப படுவதில்லை. மக்கள் ஜனத்தொகைக்கு ஏற்ப ஊழியர் எண்ணிக்கையை உயர்த்தவே இல்லை. இந்த கொள்ளையில் இட ஒதுக்கீடு என்ன பயனளிக்கும்? மேலும் வேலை வாய்ப்பு அளிப்பதில் அரசு துறையின்  பங்கு 5%-க்கும் குறைவே!

அப்படியானால் அரசின் உயர் கல்வி ஒதுக்கீடு, வேலை வாய்ப்பு ஒதுக்கீடுகள் யாருக்கு போய் சேருகிறது?

கிராமப்புறத்தில் வசிக்கும் வசதி படைத்தவர்களுக்கும், டவுன் மற்றும் நகர் புறத்தில் வசிப்பவர்களுக்குமே போய் சேருகிறது. இவர்கள் ஏற்கனவே முன்ன்னேறிய நிலையில் உள்ளவர்கள்.

இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்த சலுகை அளித்தாலும் பொருளாதார நிலையில் பின் தங்கியிருக்கும் 90% தலித்துகளும், பிற்படுத்தப்பட்டவர்களும் முன்னேற்றம் அடையப்போவதில்லை.

அரசு இப்பொழுது என்ன செய்ய வேண்டும்?

கிராமப்பகுதியில் உள்ளவர்களுக்கு விவசாயம், கால்நடை பராமரிப்பு, மற்றும் கிராமியம் சம்பந்தப்பட்ட துறைகளில் வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும்.

கிராம பகுதியில் தேவையான பள்ளிக்கூடங்களை திறந்து, அவர்களுக்கு தரமான கல்வி வழங்க வேண்டும்.

தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொள்ள அரசியல்வாதிகள் என்ன முட்டாள்களா?. அதனால் அரசியல்வாதிகள் தாமாக செய்ய மாட்டார்கள்.

கிராம பகுதி மக்கள் ஒன்று திரண்டு போராடவேண்டும். அதுவும் ஜாதி கட்சி களின் சூழ்ச்சிகளை முறியடித்து ஒற்றுமையுடன் போராட வேண்டும். 

நடக்கும் என நம்புவோம். நம்பிக்கையே வாழ்க்கை!. 
3 comments:

 1. //காமராஜர் முதலமைச்சராக பதவி ஏற்றவுடன், அவர் அரசு வேலையாக ஒரு மாவட்டத்திற்கு காரில் அதிகாரிகளுடன் சென்றிருந்தார். அப்பொழுது கார் கிராமம் வழியாக சென்றது//
  அது அந்த காலம் இந்த கால அமைச்சர்கள் பதவி ஏற்றவுடன் டில்லிக்கும் வெளிநாட்டிற்க்கும் செல்லவே அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லையே. காமராஜ்ர் இருந்த கட்சியை சார்ந்த நமது பிரதமரை எடுத்து கொள்ளுங்கள் அவர் நம் நாட்டில் இருந்த நாட்களை விட வெளிநாட்டில் இருந்த நாட்கள்தான் அதிகம். வோட்டுகளுக்காகதான் தலித்துக்கள் அல்லது உயிரை தரதான் தலிதுக்கள்

  ReplyDelete
 2. //நோயாளி இருந்தால்தான் வைத்தியனுக்கு பொழைப்பு நடக்கும்?. அதைப்போலவே தலித்துகளும் பிற தாழ்த்தப்பட்டவர்களும் பின் தங்கிய நிலையில் இருந்தால் தானே அவர்களுக்கு சலுகைகளை தருகிறோம் என கூறி ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வர முடியும்!. இதுதான் இன்றைய அரசியல்வாதிகளின் லாஜிக்///

  நல்ல சொன்னிங்க ஐய்யா. நெத்தியடி.

  ReplyDelete
 3. மன்னிக்கவும். தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள். காமராஜர் இருந்தது இந்திய தேசிய காங்கிரஸ். இந்திராகாந்தி தன் பதவியை காப்பாற்ற அவசர கால நிலையை கொண்டுவந்ததுடன் காங்கிரஸ் உடைந்தது. இந்திரா காங்கிரஸ் தோன்றியது. அதுதான் இப்பொழுது இருக்கும் காங்கிரஸ். கொடியில் ராட்டை சின்னம் போய் கைசின்னம் வந்தது. காங்கிரசின் சின்னமாக இருந்த ஏர் உழவன் சின்னம் போய் கை வந்தது. இப்பொழுது பழைய காங்கிரஸ் கிடையாது. மன்மோஹன் சிங் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. சோனியாவால் நியமிக்கப்பட்டவர்.

  ReplyDelete