Monday, May 30, 2011

சமச்சீர் கல்வி திட்டம் - ஒரு அலசல்.

சமச்சீர் கல்வி திட்டம் பற்றியும், சமச்சீர் கல்வி திட்டம் வேண்டுமா? வேண்டாமா? என்பதிலும் எல்லோரும் குழப்பத்திலேயே உள்ளனர். இதைப்பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாமல், வேண்டும் என ஒரு பிரிவினரும், வேண்டாம் என மற்றொரு பிரிவினரும் அதற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் மெட்ரிக் பள்ளிகளும் குரல் எழுப்பி வருகிறார்கள். உண்மை என்ன என்பதை தெளிவு படுத்தவே இந்த பதிவு.

தமிழ்நாட்டில் இருக்கும் கல்வி திட்டங்கள்:

மாநில கல்வி திட்டம் (State Board), மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் (இது பற்றி இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன்), சி.பி.எஸ்.சி (Central Board of Secondary Education) என 5 வகை கல்வி திட்டங்கள் நடப்பில் உள்ளது.

மாநில கல்வி திட்டத்தில் இயங்கும்  பள்ளிகள்:

அரசு பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் (Aided School), மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து பள்ளிகள் இவைகள் தான் அரசு கல்வித்திட்டத்தில் இயங்கும் பள்ளிகள். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த பள்ளிகளில்தான் சுமார் 90% மாணவர்கள் கல்வி கற்றனர்.  கல்வி துறை மீது அரசுக்கு ஆர்வம் குறைந்த காரணத்தினால், கல்வி தரம் குறைந்தது. ஆசிரியர் பற்றாக்குறை, அடிப்படை வசதியின்மை போன்ற காரணங்களால் மாணவர்களை மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் சேர்க்கும் நிலை ஏற்பட்டது. ஆசிரியர் பணி புனிதமானது என்று அரசு ஆசிரியர்கள் ஈடுபாட்டுடன் பணி புரிந்த நிலை மாறியது. ஓராசிரியர் ஆரம்பள்ளி, கூறை இல்லாத பள்ளி , மரத்தடி பள்ளி என மாற தொடங்கின.

மெட்ரிக்குலேஷன் பள்ளிகள்:

அதிகரித்து வரும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு பள்ளிகளும், மெட்ரிக் பள்ளிகளும் இல்லாத நிலையில், பெற்றோர்கள் மெட்ரிக் பள்ளியை நோக்கி படையெடுக்க, இதை சாதகமாக்கி  புற்றீசல் போல நாடு முழுக்க மெட்ட்ரிக்குலேஷன் பள்ளிகள் குடிசை தொழிலாக முளைக்க ஆரம்பித்தது. முறையான ஆசிரியர் பயிற்சியோ அல்லது கற்பிக்கும் அனுபவமோ இல்லாதவர்கள் ஆசிரியர்களாக இருந்தாலும், கல்விதரம் அரசு பள்ளிகளை காட்டிலும் உயர்ந்ததாக உள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் அரசு பள்ளி ஆசியரின் சம்பளத்தில் 4-ல்1 பங்குக்கும் குறைவாகவே மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் ஊதியமாக வழங்கப்படுகிறது. நன்கொடை, மிகவும் அதிகமான கல்வி கட்டணம் என பெற்றோர்களை பிழிந்தெடுக்கிறது.

தும்பை விட்டு வாலை பிடிக்கும் பெற்றோர்கள்: 

அடிப்படை கல்வி, மருத்துவ வசதி ஆகியவற்றை செய்து தரவேண்டிய பொறுப்பு இந்திய அரசியலமைப்பு சட்டப்படி அரசுக்கு உண்டு. தேவையான பள்ளிக்கூடங்களை ஏற்படுத்தவும், தரமான கல்வி வழங்கவும் வேண்டும் என அரசை நிற்பந்திக்க வேண்டிய பெற்றோர்கள், தனியார் பள்ளிகளின் கட்டணத்தை குறைக்க கோரினர். இதையடுத்து கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்ய அரசு கமிட்டி அமைத்துள்ளது. கமிட்டி நிணயித்த கட்டணத்தை ஏற்க பள்ளிகள் தயாராக இல்லை. ஆக இந்த கமிட்டி வாழ்நாள் கமிட்டியாகவே  இனி இருக்கும். பிரச்சனை தீர வாய்ப்பு கிடையாது. 

தனியார் பள்ளிகளுக்கு அரசு கட்டணம் நிணயிப்பது என்பது எந்த விதத்தில் நியாயம் என எனக்கு புரியவில்லை. ஒரு சிறிய உதாரணம். நியாய விலை கடைகளின் மூலம் மலிவு விலையில் உணவுப்பொருட்களை வழங்க வேண்டியது அரசு கடமை. ஆனால் அதை செய்யாமல், எல்லா மளிகைக்கடைக்காரர்களும் இனி நான் சொல்லும் விலைக்குத்தான்  அரிசி, கோதுமை, சர்க்கரை விற்க வேண்டும் என கூற முடியுமா?  அது நியாயமா?
 
சமச்சீர் கல்வி:

சமச்சீர் கல்வி என்றால், ஒவ்வொரு வகுப்புக்கும் தேவையான தரமான பாடத்திட்டத்தின் கீழ் பாடங்களை கற்பிப்பது ஆகும். சமச்சீர் கல்வி திட்டத்தை உருவாக்க அமைக்கப்படும் கமிட்டி எவ்வித விருப்பு, வெறுப்பின்றி செயல் படக்கூடிய கல்வியாளர்களை கொண்டிருக்க வேண்டும். பொதுவாக அரசு எந்த கமிட்டியை அமைத்தாலும், அது தன் விருப்பப்படி செய்யக்கூடியவர்களையே தேர்ந்தெடுக்கும் நிலை தான் உள்ளது. தரமான பாடத்திட்டத்தை தேர்ந்தெடுக்கும்போது, நடமுறையில் இருக்கும் அனைத்து  பாட திட்டங்களையும்  பரிசீலித்து அதில் சிறந்ததை தேர்வு செய்து,  அதை மேலும் சிறப்பாக ஆக்கி அதை அமுல்படுத்த அரசுக்கு சிபாரிசு செய்ய வேண்டும். தேசிய அளவில் சிறந்த சி.பி.எஸ்.சி கல்விதிட்டத்தை இந்த கமிட்டி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவே இல்லை. அதைப்போலவே, மெட்ரிக் கல்வி திட்டத்தையும் பரிசீலித்ததாக தெரியவில்லை. தாங்களாக பாடத்திட்டத்தை தயாரித்துள்ளனர். இது, கல்வித்திட்டத்தில் 2-ம் நிலையில் உள்ள மெட்ரிக் கல்வித்திட்டத்தை விட தரம் குறைந்ததாக உள்ளதாம். இத்திட்டத்தை மெட்ரிக் பள்ளிகளில் திணிப்பதை எப்படி மெட்ரிக் பள்ளிகள் ஏற்றுக்கொள்ளும்?

இது எப்படி இருக்கு என்றால், ஜட்டி மட்டும் போட்ட பையன், ஜட்டி போட்டு சட்டை, டிரவுசர் போட்ட பையன் ரெண்டுபேரையும் சமமாக்கபோறேன்னு சொல்லிட்டு, ஜட்டி போட்ட பையனுக்கு டிரவுசரை மாட்டிவிட்டுட்டு, இரண்டாவது பையனின் சட்டையை கழட்டி விட்டது மாதிரி இருக்கு.

திட்டத்தை அமுல்படுத்த தேவையான முன்னேற்பாடுகள்:

சரி விட்டு தள்ளுங்கள். மெட்ரிகுலேஷன் பள்ளியில படிக்கிற பசங்க தரம் குறைஞ்சு போனா போகட்டும். அரசாங்க பள்ளியில எப்படி இந்த திட்டத்தை செயல் படுத்துவது? வெறும் சமச்சீர் பாட புஸ்தகம்  மட்டும் போதுமா?  அதுக்கு வாத்தியார் வேண்டும். பாடதிட்டப்படி உள்ள பாடங்களுக்கு தேவையான கருவிகள், உபகரணங்கள் அடங்கிய பரிசோதனை கூடம் வேண்டும். இன்னும் இத்தியாதிகள் எத்தனையோ!  ஒட்டு மொத்த பள்ளிகளுக்கும் தேவையானவற்றை அரசாங்கம் செய்திருக்கா? இதெல்லாம் இல்லாம வெறும் கையால முழம் போட்டா வேலைக்கு ஆகுமா? 

சட்டசபை  கட்டிடம் கட்டி முடிக்க இன்னும் ஒரு வருடம் ஆகும் என்ற நிலையிலும், கட்டிடத்தின்  கூறையே போடப்படாத நிலையில் மூன்று கோடி தண்ட செலவு செய்து தோட்டா தரணியை கொண்டு செட்டிங்  போட்டு திறப்பு விழா நடத்தி தன் ஆசையை பூர்த்தி செய்தவரின் ஆட்சியில் இதையெல்லாம் எதிர் பார்க்க முடியுமா?

சமச்சீர் கல்வி திட்டம் ஒத்திவைப்பு:

இப்பொழுது பதவி ஏற்றிருக்கும் அரசு இத்திட்டத்தை அமுல்படுத்தவதை நிறுத்தி வைத்துள்ளது. புது கமிட்டி அமைத்து பரிசீலனை செய்யும் என கூறியுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள படி, தரமான கல்விதிட்டத்தை உருவாக்கவும் , பள்ளிகளுக்கு தேவையான வசதிகளையும் தேவையான ஆசிரியர்களை நியமித்து பயிற்சி அளிக்கவும் காலதாமதம் ஏற்படும் என்பதால் மாணவர் நலனை கருத்தில் கொண்டு, இத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக யாரும் நினைத்துவிடவேண்டாம். இது கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் உள்ள ஈகோ பிரச்சனை.

யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்?

வழக்கம் போல, வரிப்பணத்தில் 200 கோடி செலவிட்டு புத்தகம் அச்சிட்டது பயன்ற்று போவதால் மக்களுக்கு நஷ்டம். 


அச்சகத்தாரிடம் கமிஷன் வாங்கிய பிரமுகர்களுக்கு 10% கமிஷன் லாபம்.


இதைவிட தரமான பாடத்தில் படிக்கும் மெட்ரிக் மாணவர்கள் இந்த ஆண்டு தப்பித்துக்கொண்டார்கள். அதனால் அவர்களுக்கு லாபம்.


இத்திட்டத்தை அமுல்படுத்தாததினால் அரசு பள்ளிமாணவர்களுக்கு லாபம் இல்லை நஷ்டமும் இல்லை. அவர்களுக்குதான் அடிப்படை வசதிகள், தேவையான ஆசிரியர்கள் எண்ணிக்கை உட்பட, எதுவுமே கிடையாதே! ஆறு நிறைய தண்ணி போனாலும் நாய் நக்கித்தான் குடிக்கனும்?

வாழ்க துக்ளக் தர்பார்!


11 comments:

 1. ஸ்பெக்ட்ரம் ஊழலைவிட பயங்கரமாக இருக்கிறது. யார் ஆட்சியில் இந்த தனியார் பள்ளிகளுக்கு சாதகம் என்பது ஆரம்பிக்கப்பட்டது என்பதை ஆராய ஒரு விசாரணைக்கமிஷன் போட வேண்டும்.

  ReplyDelete
 2. Sir, ur absolutely spot on, best solution for this is to increase the quality of the eduction in government and aided schools, that cant be possible simply because teachers and not in good enough numbers, and they are paid to much then needed, and also they are incompetent, there is no possible solution for this, it a mistake govt done in generations, it require at least two generations to come out of it, not in a hurry bury.

  ReplyDelete
 3. ramalingam said...

  /// ஸ்பெக்ட்ரம் ஊழலைவிட பயங்கரமாக இருக்கிறது. யார் ஆட்சியில் இந்த தனியார் பள்ளிகளுக்கு சாதகம் என்பது ஆரம்பிக்கப்பட்டது///

  காமராஜர் ஆட்சி காலம் வரை கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது. அதனால் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கிராமங்களிலிருந்து நகரங்கள் வரை பள்ளிக்கூடங்கள் துவக்கப்பட்டு நல்ல முறையில் நடந்து வந்தது. திராவிட கழகம் வந்த பின் நிலமையே தலை கீழாக மாறியது.

  ReplyDelete
 4. Thirumurugan MPK said...

  //// Sir, ur absolutely spot on, best solution for this is to increase the quality of the eduction in government and aided schools////

  இப்பொழுதுள்ள அரசியல்வாதிகள், அரசு மக்களுக்கு செய்ய வேண்டியதை செய்யாமல், அத்துறைகளில் தனியார் நுழைய வழிசெய்து ஆதாயம் அடைகிறார்கள்.
  உதாரணம் ; பஸ் போக்குவரத்து. மருத்துவம், கல்வி.

  ReplyDelete
 5. //ஆனால் அதை செய்யாமல், எல்லா மளிகைக்கடைக்காரர்களும் இனி நான் சொல்லும் விலைக்குத்தான் அரிசி, கோதுமை, சர்க்கரை விற்க வேண்டும் என கூற முடியுமா? அது நியாயமா?//

  அரசு ரேஷன் கடையில் குறிப்பிட்ட அளவுதான் தருவார்கள். தேவைக்கு மீதியை தனியார் கடைகளில்தான் வாங்க வேண்டும். ஆனால், அங்கே கொள்ளை விலை வைத்தால்? அதிக பட்ச விலை என்பது எல்லா துறைகளுக்கும், பொருட்களுக்கும் அரசு விதித்தே ஆக வேண்டும். அது அரசின் கடமை. இது தனியார் பள்ளிகளுக்கு பொருந்தும்.

  ReplyDelete
 6. தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் முறைப்படுத்துதல் என்று ஓன்று கட்டாயம் வரவேண்டும். இப்போது நடைமுறையில் இருக்கும் matric போர்டு புதிய பள்ளிகள் திறக்கும் போது மட்டுமே சில விதிகளை நிர்ணயிக்கிறார்கள். பள்ளி துவங்கிய பின் விதிகள் பின்பற்றபடுகின்றனவா என்று பார்க்கும் விதி எதுவும் matric போர்டு க்கு இல்லை. அதனால் அதிக கட்டணம் வாங்கிக் கொண்டு முறையான கட்டடம், தகுதி வாய்ந்த ஆசிரியர்கள், விளையாட்டு மைதானம், நல்ல கழிப்பிடம் என்று கல்விகற்கும் அடிப்படை சூழலைக் குறித்த கவலைகள் ஏதுமின்றி பல பள்ளிகள் செயல்படுகின்றன.
  அதனால் அரசு தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்தி முறைப்படுதியே ஆக வேண்டும். ஏனென்றால் அரசு அங்கீகாரம் என்ற tag தாங்கித் தான் இப்பள்ளிகள் இயங்குகின்றன.

  ReplyDelete
 7. நல்ல தெளிவான விவரித்திருக்கிரீர்கள்..
  நடுத்தர வர்க்கம் சமச்சீர் கல்வியை மேல்தட்டு வர்ர்க்கம் தடுத்துக்கொண்டிருக்கிறது...

  ReplyDelete
 8. ஹுஸைனம்மா said..

  ///அரசு ரேஷன் கடையில் குறிப்பிட்ட அளவுதான் தருவார்கள். தேவைக்கு மீதியை தனியார் கடைகளில்தான் வாங்க வேண்டும். ஆனால், அங்கே கொள்ளை விலை வைத்தால்? அதிக பட்ச விலை என்பது எல்லா துறைகளுக்கும், பொருட்களுக்கும் அரசு விதித்தே ஆக வேண்டும். அது அரசின் கடமை. இது தனியார் பள்ளிகளுக்கு பொருந்தும்.///

  தங்களின் வாதம் ஏற்புடையதாக இல்லை.

  மக்களின் அடிப்படை தேவைகளை அதாவது, கல்வி, மருத்துவ வசதி, சட்டம் ஒழுங்கை பாதுகாத்து மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதுதான் அரசின் அடிப்படை கடமை. இதை மறுக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். நான் காமராஜர் ஆட்சி காலத்தில் பள்ளி மாணவனாக இருந்தவன். அவர் ஆட்சியில் இவை எல்லாவற்றிற்கும் முக்கியத்துவம் கொடுக்கபட்டது. அதனால் இந்த பிரச்சனையே எழவில்லை.
  அடுத்ததாக, "அதிக பட்ச விலை என்பது எல்லா துறைகளுக்கும், பொருட்களுக்கும் அரசு விதித்தே ஆக வேண்டும்." என கூறியுள்ளீர்கள். இது உற்பத்தி பொருட்களுக்குதான் பொருந்தும். எம். ஆர்.பி எனப்படுவதை போல சொல்கிறீர்கள். இந்த எம்.ஆர்.பி அரசு நிர்ணயம் செய்வதல்ல. கம்பெனிகள் தான்.

  ReplyDelete
 9. # கவிதை வீதி # சௌந்தர் said

  நல்ல தெளிவான விவரித்திருக்கிரீர்கள்..
  நடுத்தர வர்க்கம் சமச்சீர் கல்வியை மேல்தட்டு வர்ர்க்கம் தடுத்துக்கொண்டிருக்கிறது.///

  அரசாங்கம் செய்ய வேண்டியதை தனியாரும், தனியார் செய்ய வேண்டியதை அரசாங்கமும் செய்தால் இந்நிலைதான்
  May 30, 2011 7:20 PM

  ReplyDelete
 10. virutcham said...

  /// தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் முறைப்படுத்துதல் என்று ஓன்று கட்டாயம் வரவேண்டும். இப்போது நடைமுறையில் இருக்கும் matric போர்டு புதிய பள்ளிகள் திறக்கும் போது மட்டுமே சில விதிகளை நிர்ணயிக்கிறார்கள். பள்ளி துவங்கிய பின் விதிகள் பின்பற்றபடுகின்றனவா என்று பார்க்கும் விதி எதுவும் matric போர்டு க்கு இல்லை. அதனால் அதிக கட்டணம் வாங்கிக் கொண்டு முறையான கட்டடம், தகுதி வாய்ந்த ஆசிரியர்கள், விளையாட்டு மைதானம், நல்ல கழிப்பிடம் என்று கல்விகற்கும் அடிப்படை சூழலைக் குறித்த கவலைகள் ஏதுமின்றி பல பள்ளிகள் செயல்படுகின்றன.
  அதனால் அரசு தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்தி முறைப்படுதியே ஆக வேண்டும். ஏனென்றால் அரசு அங்கீகாரம் என்ற tag தாங்கித் தான் இப்பள்ளிகள் இயங்குகின்றன.///

  தாங்கள் அடிப்படை விஷயத்தை புரிந்து கொள்ளாமல் சொல்லுகிறீர்கள்.
  அடிப்படை கல்வி(10வரை) கல்வி வழங்க வேண்டியது அரசின் கடமை. இதை செய்யாது தான் பிரச்சனைக்கு காரணம். ரேஷன் கடையில் குறைந்த விலைக்கு சர்க்கரை தருகிறார்கள். அதே சர்க்கரையை மளிகை கடையில் வாங்கும் பொழுது ஒவ்வொரு கடையிலிலும் ஒவ்வொரு விலை கொடுக்க வேண்டியிருக்கும். ரேஷன் கடையும், மளிகை கடையும் சிவில் சப்ளையிடம் அனுமதி வாங்கியவைகள் தான். ஏன் இந்த வேறுபாடு? அரசுக்கு குறைந்த விலையில் சர்க்கரை ஆலைகள் கொடுக்கிறது. அதனால் ஏற்படும் நஷ்டத்தை ஓபன் மார்க்கெட் சர்க்கரையில் சேர்த்து வியாபாரிகளுக்கு விற்கிறது. மேலும் அரசு மக்கள் வரிப்பணத்தில் இயங்குவதால் ரேஷன் பொருட்களை குறைந்த விலையில் விற்பதால் ஏற்படும் நஷ்டத்தை செலவாக கருதும். தனி நபர் அதைப்போல நிரந்தர விலையில் விற்க முடியாது. கொள்முதல் விலை, கடை நிர்வாக செலவு, மூலதனத்திற்கான் லாபம் இவற்றை எல்லாம் கணக்கிட்டு வியாபாரம் செய்வார்கள். இதனால் விலை கூடும் , குறையும். இதைப்போலவே தனியார் பள்ளிகள் கட்டணம் நிர்ணயம் செய்யும். இதில் எப்படி அரசு நிரந்திர கட்டணம் வசூலிக்க உத்தரவிட முடியும்?

  ReplyDelete
 11. மன்னிக்கணும். நீங்க தான் புரிந்து கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது.

  //அடிப்படை கல்வி(10வரை) கல்வி வழங்க வேண்டியது அரசின் கடமை. இதை செய்யாது தான் பிரச்சனைக்கு காரணம்//
  இதில் மாற்றுக் கருத்து இல்லை.
  ஆனால் அதில் இருந்து விலகி ரொம்ப தூரம் வந்தாயிற்று. இப்போ இருக்கும் தனியார் பள்ளிகளை முழுவதும் அரசு எடுத்துக் கொள்வதோ அல்லது மூடி விடுவதோ இயலாது. அதற்கு இணையான எண்ணிக்கையில் அரசு கல்விக்கூடங்கள் துவங்கினால் ஒழிய அனைத்துத் தரப்பினருக்கும் தரமான கல்வியை இலவசமாகவோ அல்லது குறைந்த கட்டணத்திலோ கொடுக்க அரசால் இயலாது.
  தனியாரின் கல்வி அரசின் கல்வியை விட சிறந்தது என்ற எண்ணத்தை மக்கள் மனதில் இருந்தும் உடனே எடுத்து விட முடியாது. பெற்றோர் எப்படியாவது பணத்துக்கு ஏற்பாடு செய்து பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்த்து விட்டு மதிப்பெண் அறுவடைக்கு காத்து இருக்கிறார்கள். உள்ளே உண்மையில் படிக்க வேண்டியது பிள்ளைகள். அவர்களுக்கு பெற்றோர் கட்டிய பணத்துக்குரிய அடிப்படை வசதிகள் கூட ஏன் கழிப்பிட வசதி கூட முறையாக பல பள்ளிகளில் இல்லை. பள்ளிகள் அரசு அங்கீகாரம் பெற்று இயங்குகின்றன. அதனால் அரசுக்கு கட்டண நிர்ணயம் முறையான வசதி முதலியன குறித்து விதிகளை நிர்ணயிக்கவோ அதை முறைப்படுதவோ அதிகாரம் இருக்கிறது. இருக்க வேண்டும்.

  எனது நேரடி அனுபவத்தில் இருந்து இதை சொல்கிறேன். அரைகுறை சமசீர் கல்வியை நிராகரிக்கும் அதே வேளையில் தனியார் பள்ளிகளை அரசு முறைப்படுத்த வேண்டும் என்பதை ஆதரிக்கிறேன்.
  நீங்கள் குறிப்பிடும் consumer பொருட்கள் கொஞ்சம் கூடக் குறைய என்றது வரும் போது விவரமான பெற்றோர் அதை மாற்றுக் கடையில் வாங்கிக் கொள்வார்கள். அல்லது சிறு நஷ்டங்களை சகித்துக் கொள்வார்கள். ஆனால் கல்வி என்று வரும் போது பள்ளி பள்ளியாக தரம் பார்த்து மாற்றிக் கொண்டே இருக்க முடியாது.

  ReplyDelete