Saturday, May 14, 2011

ஐயையோ யாராவது காப்பாத்த வாருங்களேன்!

கழிந்த சனிக்கிழமைக்கு முந்திய சனிக்கிழமை அன்று மதியம் 3 மணி அளவில் என் வீட்டின் காலிங் பெல் ஒலித்தது. வெளியே சென்று பார்த்தபொழுது 25 வயது மதிக்கதக்க ஒரு இளைஞர் கையில் புல்ஸ்கேப் பைண்ட் செய்த நோட்டுடன் நின்று கொண்டிருந்தார். கருப்பு கலர் கட்டம் போட்ட சட்டையும், நாலு முழ வேஷ்டியும், காலில் ஹவாய் சப்பலும் அணிந்திருந்தார். அவருடன் பதினெட்டு வயது மதிக்க தக்க ஒரு பையனும் நின்றிருந்தான்.

அவர்களிடம் என்ன வேண்டும் என கேட்டபொழுது " உங்கள் பெயர் திரவிய நடராஜன் தானே?" என்றார்.

" ஆமாம்"

" உங்கள் வீட்டில் நீங்கள், xxxxxxxxxxxxx , xxxxxxxxxxx, xxxxxxxxxx ஆக 4 ஓட்டுக்கள் இருக்கிறது. நீங்கள் ஏன் ஓட்டு போடவில்லை?"

எனக்கு ஜிவ்வென்று கோபம் தலைக்கு ஏறியது. அதை அடக்கி கொண்டு அவரிடம் கேட்டேன்,

"நீங்கள் யார்?"

" நான் எலெக்க்ஷன் ஆபீஸ் ஆள்"

அவர் தோற்றத்திற்கும் அவர் கூறிய பதிலுக்கும் சம்பந்தமே இல்லை என்பது தெரிந்தது. அவர் கட்சிகாரர் என்பது அப்பட்டமாக தெரிந்தது. இருந்தாலும் பொறுமையாக அவரிடம்,

" உங்க ஐ.டி கார்டை காட்டுங்கள்" என்றேன். சுதாரித்துக்கொண்ட அவர்,

" நான் கட்சி ஆபிஸீலிருந்து வாரேன்" என பல்டி அடித்தார்.

" ஏன் ஓட்டு போடலை என்பதை நீங்க ஏன் கேட்கனும்?"

" என்ன பிரச்சனை என்பதை தெரிந்து கொள்ளத்தான்"

" ஓட்டு போடுவதும், போடாம இருப்பதும் என் விருப்பத்தை பொறுத்தது. அதற்கான காரணங்களை கட்சிக்காரனிடம் கூற வேண்டிய அவசியம் கிடையாது. எலெக்சனை நடத்தும் எலக்சன் கமிஷன் தான் இதை கேட்க முடியும். ஆமாம் நீங்க எந்த கட்சி?" 

பதில் எதுவும் சொல்லாமல் அடுத்தவீட்டிற்கு சென்று விட்டார். அவர் எந்தக்கட்சியிலிருந்து வந்திருக்கார் என்பதை நீங்கள் கூட யூகிக்க முடியும். இதை சும்மா விட்க்கூடாது என்ற முடிவோடு கேட்டை பூட்டிவிட்டு வீட்டிற்குள் வந்தேன். 

சிஸ்டத்தை ஆன் செய்து எலெக்சன் கமிஷன் வெப் சைட்டை சர்ச் செய்தேன். அதிலிருந்து தேர்தல் கமிஷ்னரின் தொலைபேசி எண்ணை நோட் பண்ணினேன். (044) 2567 0390.
அவர் எண்ணை டயல் செய்தேன். மூன்று ரிங்குகள் சென்ற உடனேயே தொலைபேசியை எடுக்கப்பட்டது. பேசியவர், தலைமை தேர்தல் அதிகாரி திரு. பிரவீன் குமார் ஐ.ஏ எஸ் அவர்களின் பெண் உதவியாளர். அவர்களிடம் இது பற்றி புகார் செய்தேன். அவர்,

" ஏன் ஓட்டு போடவில்லை என ஒரு கட்சிக்காரர் வாக்காளரிடம் கேட்பது மிரட்டுவது போலாகும். இது சட்டப்படி குற்றம். எனவே இது பற்றி போலீசில் புகார் செய்து விட்டு அதைப்பற்றி எங்களுக்கும் புகார் செய்யுங்கள்" என கூறி என் பகுதி காவல் நிலைய தொலை பேசி எண்ணையும் கொடுத்தார்.

சாதாரனமாக அரசாங்க அலுவலகத்திற்கு போன் செய்தால் எளிதில் லைன் கிடைக்கது. அப்படியே கிடைத்தாலும் பியூன் எடுப்பார். "அய்யா இல்லை" என கூறிவிட்டு நாம் பதில் சொல்லுவதற்குள்ளாகவே இணைப்பை துண்ண்டித்து விடுவார். அப்படி இருக்கும் பொழுது தலைமை தேர்தல் அதிகாரி அலுவகத்தின் செயல் என்னை பிரமிக்க வைத்தது.

வம்பை விலை கொடுத்து வாங்குவானேன் என முடிவு செய்து, போலீசில் புகார் செய்யவில்லை. எனது தொகுதி முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின்  போட்டியிட்ட  கொளத்தூர் தொகுதியாகும்.

எப்படியோ 3 ஓட்டு இயந்திரங்கள் பழுது அடைந்து வாக்குகளை எண்ண முடியாத நிலை நேற்று இரவு வரை நீடித்தாலும், இயந்திரங்களின் வரிசை எண் மாறியுள்ளது என எதிர் வேட்பாளர் சைதை துறைசாமியின் முகவர்களின் ஆட்சேபனையையும் மீறி 2800 வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்டாலின் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எம்.பி. தேர்தலில் சந்தேகத்திற்கிடமான முறையில் வெற்றி பெற்றது போலவே இதுவும் அறிவிக்கப்பட்டுள்ளது.No comments:

Post a Comment