Thursday, June 9, 2011

பிரதமருக்கு ஒரு பகிரங்க கடிதம்!

மதிப்பிற்க்குரிய ஐயா,


வணக்கம். வெளிநாட்டு பயணம், ஒப்பந்தங்களில் கையெழுத்து போடுவது, கட்சியின் உயர்மட்ட குழுவில் பங்கேற்பது, கட்சி தலைவரை  சந்தித்து கலந்துறையாடுவது, ஊழல் பற்றி பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் குரல் எழுப்பினால், "கூட்டணி நிர்பந்தத்தால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்த தவறுக்கு பொறுப்பு ஏற்றுக்கொள்கிறேன்" என தன் அரசின் ஊழலுக்கு சப்பைகட்டு கட்டுவது மட்டும் தான்  பிரதமரின் தலையாய கடமை என்ற நம்பிக்கையில் பிரதமராக இருக்கும் தங்களுக்கு ஒரு சாதாரண பிரஜையான நான் கடிதம் எழுதுவது எனக்கு மனதுக்கு சிறிது நெருடலாக உள்ளது. 

அரசின் செயல்பாடுகள் தொடர்பான கேள்விகளுக்கு பிரதமர் என்ற முறையில் பதிலளிக்க வேண்டிய தார்மீக பொறுப்பும், சட்டரீதியான கடமையும் தங்களுக்கு உண்டு.
கேள்விகள்

1. இந்தியாவில் கோடிக்கணக்கானவர்கள் பட்டினியால் வாடிக்கொண்டிருக்கும் பொழுது, பல லட்சம் டன் கோதுமை அரசாங்க கிடங்கில் மழை, வெயில் இவற்றால் பாழாக்கப்படுகிறது. இதை வறுமையில் வாடுபவர்களுக்கு வழங்குங்கள் என உச்ச நீதிமன்றம் கூறியதற்கு "அரசின் கொள்கை விஷயங்களில்  நீதிமன்றங்கள் தலையிடக்கூடாது" என கூறினீர்கள். அப்படியென்றால் மக்கள் வரிப்பணத்தில் கொள்முதல் செய்யப்பட்ட தானியங்களை வீணாக்குவதுதான் காங்கிரஸ் அரசின் கொள்கையா?

2. கருப்பு பணத்தை வெளிநாடிலிருந்து கொண்டு வரவும், கருப்பு பணத்தை வெளிநாட்டில் பதுக்குபவர்களுக்கு மரண தண்டனை அளிக்க வகை செய்யும் சட்டம் கொண்டு வரவும் அரசை நிர்பந்தித்து உண்ணாவிரதம் இருக்க டெல்லி வந்த யோகா குரு  பாபா ராம்தேவை சந்தித்து சமாதானம் செய்ய, மத்திய அமைச்சர்கள் விமானநிலையம் செல்லவேண்டிய அவசியம் என்ன? இதே நடைமுறை அனைவர் விஷயத்திலும் மேற்கொள்ளப்படுகிறதா?  ஆம் என்றால் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருக்க டெல்லி வந்த பொழுது  அவரை வரவேற்று, சமாதானம் செய்ய ஏன் உங்கள் அமைச்சர்கள் யாரும் செல்லவில்லை?.

3. பாபா ராம்தேவ் தனி விமானத்தில் வந்து இறங்கினாரே, அதற்கு யார் பணம் கொடுத்தது? இந்த உண்ணாவிரதத்திற்கு பணம் வழங்கியவர்கள் யார்? அவர்களின் விபரத்தை வெளியிடுவாரா? என கேள்விமேல் கேளிவியாக கேட்டார் காங்கிரசின் பொது செயலாளர் திக் விஜசிங். பாபா ராம்தேவ் டிரஸ்ட் பதிவு செய்யப்பட்ட ஒன்று. அதற்கு பணம் வழங்கியவர்கள் எல்லோரும் காசோலை மூலமாகவே கொடுத்துள்ளனர்.  2010 அக்டோபர் மாதம் 15-ம் தேதி சோனியா காந்தி கலந்து கொண்ட (வர்தாவில்) காங்கிரஸ் ஊர்வலத்திற்கு, மஹாராஷ்டிரா முதல்வர் 2 கோடி ரூபாயும், மற்ற அமைச்சர்கள் தலா 10 லட்சம் ரூபாயும், ஆக மொத்தத்தில் சுமார் 9 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக பத்திரிகைகளில் ஆதாரத்துடன் செய்தி வெளிவந்தது. இந்த பணத்தை யார் கொடுத்தது, இதற்கான செலவு கணக்கை காங்கிரஸ் கொடுக்குமா? என கேள்வி எழுப்பினால் உங்கள் பதில் என்ன?

4.  பாபா ராம்தேவ் உண்ணாவிரத விவகாரம் அரசு சம்பந்தப்பட்டது. அதைப்பற்றி கேள்வி கேட்கவோ அல்லது பதிலளிக்கவோ திக்விஜய சிங்கிற்கு என்ன அதிகாரம் இருக்கிறது?  திக்விஜயசிங்கை பொறுத்தவரை அவர் காங்கிரஸ் கட்சியில் இருப்பவர். அவருக்கு கட்சி பொதுச்செயலாளர் என்ற பதவி கட்சியால் கொடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தால் அல்ல. அவ்வளவு தான். அவர் தேர்தலில் நின்று ஜெயித்து வந்த பாராளுமன்ற அங்கத்தினர் கூட இல்லை!.அங்கத்தினராக இருந்தால் கூட பாராளுமன்ரத்தில் தான் பேச முடியும். "தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்" என்ற பழமொழிக்கு ஏற்ப காங்க்ரஸ் கட்சியின் உறுப்பினர்கள் செயல்படுவதையே காட்டுகிறது.

5.  நடு இரவில் உங்கள் அரசின் சார்பாக எழுதப்பட்ட கடிதம் பாபா ராம்தேவிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் உண்ணாவிரதத்தை கைவிடும்படி கூறியிருந்தது. அவர் உண்ணாவிரதத்தை கைவிட சம்மதிக்காததால், உடனடியா அப்பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டதுடன், தடியடி நடத்தப்பட்டது. கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டு அங்கு கூடியிருந்த சிறுவர், சிறுமியர், பெண்கள், முதியவர்கள் எல்லோரையும் பலாத்காரமாக போலீசார் வெளியேற்றினர். இதில் 150க்கு மேற்பட்டவர்களுக்கு காயம் ஏற்பட்டது. ஆயுதம் தாங்கி வன்முறையில் ஈடுபடும் கூட்டத்தை கலைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கையை  உண்ணாவிரதம் இருந்து களைப்பில் தூங்கிக்கொண்டு இருந்தவர்கள் மீது எடுத்தது ஜனநாயக படுகொலை. இரண்டு நாள் கழித்து தாங்கள். "தவிர்க்க முடியாத நடவடிக்கை" என கூறியுள்ளீர்கள். அவர்கள் என்ன வெடி குண்டு, ஏகே47 துப்பாக்கியுடன் டெல்லியை சூறையாட வந்தவர்களா?. என்ன தவிர்க்க முடியாத சூழ்நிலை? 

6. உண்ணாவிரதம் இருந்த பாபா ராம்தேவ் மற்றும் அங்கு குழுமியிருந்தவர்கள் மீது கலகம் விளைவிக்க முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. என்ன கொடுமை ஐயா இது? காந்தீய வழியில் உண்ணாவிரம் இருப்பது கலகம் விளைவிக்கும் முயற்சியா? நிச்சயமாக இது ஜனநாயக ஆட்சியாக இருக்கும் பட்ச்த்தில் இது போன்ற நிகழ்ச்சி நடக்க முடியாது! வெள்ளைக்காரனும் தன் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள இதே முறையைதான் கையாண்டான். அப்படியென்றால் சோனியா காங்கிரஸ் ஆட்சி ஒரு காலனி ஆட்சியா?

7. ராம் லீலா மைதானத்தில் 5000 பேருக்கு  யோகா வகுப்பு நடத்த மட்டுமே அனுமதி வாங்கப்பட்டிருந்தது . ஆனால் 50,000 பேர் கூடியதினால் இந்த நடவடிக்கை  என காவல்துறை விளக்கம் தருகிறது. 50000 பேரும் காலையிலேயே கூடிவிட்டார்கள். அவர்கள் காவல் துறையினரின் பார்வையில் பட்டு தான் நுழைவு வாசல் வழியாக உள்ளே வந்திருக்கிறார்கள். அப்படியே ஆகாயத்திலிருந்து குதிக்கவில்லை. அப்பொழுதே அனுமதிக்கப்பட்ட நபர்களுக்கு மேலே மற்றவர்களை அனுமதிக்காமல் இருந்திருக்கலாமே?  அரசின் விருப்பப்படி அவர்கள் உண்ணாவிரதத்தை நிறுத்த மறுத்த பின் தான், 50000 ஆயிரம் பேர் கூடியிருக்கும் விஷயம் தெரிய வந்ததா?

இன்னும் பல கேள்விகள் உண்டு. அதை அடுத்த கடிதத்தில் எழுப்புகிறேன். மிக்க நன்றி.

இப்படிக்குகாந்திதேசத்தில் ஜனநாயகத்தை நிலை நிறுத்த விரும்பும் ஒரு பாமரன்.

3 comments:

 1. அருமையான கேள்வி..... தமிழ் மொழிபெயர்ப்பாளர் இருந்தால் மன்மோகண் ஜி , இதை படித்துவிட்டு நாக்கை பிடுங்கிக் கொண்டு சாகட்டும் !!!

  ReplyDelete
 2. J said...

  அருமையான கேள்வி..... தமிழ் மொழிபெயர்ப்பாளர் இருந்தால் மன்மோகண் ஜி , இதை படித்துவிட்டு நாக்கை பிடுங்கிக் கொண்டு சாகட்டும் !!//

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 3. அருமையான கேள்வி.. மன்மோகன் சிங்குக்கு மொதல்ல ஒருத்தரவேச்சு தமிழ் சொல்லிகுடுத்திட்டு இங்க கட்டாயம் கூட்டிடு வரணும். அவருக்கு காட்டி என்ன பலன். சோனியா அம்மாகுமேல்லோ காட்டனும்.நேரம் இருந்தா இங்கயும் வாங்க..
  சிறையிலிருந்து ராசா எழுதிய கடிதம்

  ReplyDelete