Tuesday, June 28, 2011

வீட்டு காய்கறி தோட்டம்

இன்றைக்கு மாதாந்திர பட்ஜெட்டில் சமையலுக்கு தேவையான காய்கறிகளின் செலவுத்தொகை முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மூன்று அல்லது நான்கு பேர் இருக்கும் குடும்பத்திற்கு குறைந்த பட்சம் மாதம் ரூ.600 செலவாகும். இந்த செலவை ஏன் நாம் குறைக்க கூடாது?. இதற்கு ஒரே வழி வீட்டிலேயே ஆர்கானிக் (இயற்கை வழி) காய்கறி தோட்டம் அமைப்பதுதான். இதனால் ஃபிரஷ் ஆக காயகள் பைசா செலவில்லாமல் கிடைப்பதுடன் விஷத்தன்மை கொண்ட பூச்சி மருந்துகள் பயன்படுத்தி வளர்க்கும் செடிகளிலிருந்து கிடைக்கும்  உள்ள விஷத்தன்மை  கொண்ட காய்களை சாப்பிடுவதை தவிர்க்க முடியும்.

வீட்டில் காலி இடம் இருந்தால் (மண் பரப்பு) அதில் தோட்டம் போடலாம். அதைப்போலவே மொட்டை மாடியிலும் தோட்டம் போடலாம். இவ்விதம் நாம் போடும் தோட்டத்தில் வளர்க்கும் செடிகள், நமக்கு தேவைப்படும் காய்கறிகளை ஆண்டு முழுவதும் தரக்கூடியதாக இருக்க வேண்டும். பொதுவாக நமக்கு தேவைப்படும் காய் வகைகளை பார்க்கலாம். 

1. பச்சை மிளகாய்.
2. இலை கொத்தமல்லி.
3. கீரை
4. கத்தரிக்காய்
5. வெண்டைக்காய்.
6. தக்காளி.
7. வெங்காயம்.
8. கறிவேப்பிலை.
9. அவரை
10. பீன்ஸ்  போன்றவைகள்.

சில செடிகளின் விதைகளை நேரடியாக விதைக்க வேண்டும். சிலவற்றை நாற்றாக வளர்த்து அதன் பின் நடவு செய்ய வேண்டும். முதலில் தோட்டத்தை தயார் செய்வது பற்றி பார்க்கலாம். தோட்டம் போடுவதற்கான இடத்தை சுற்றி இரண்டு அடி வெற்றிடமாக இடவேண்டும். நடுவில் உள்ள இடத்தை சுமார் 1 அடி ஆளத்திற்கு நன்றாக மண்வெட்டியால் வெட்டி நன்கு கிளறி விடவேண்டும். அதில் இருக்கும் கல், களை போன்றவற்றை நீக்கிவிட வேண்டும். அதன் பின் ஒரு சதுர அடிக்கு கால் கிலோ (1 செண்ட்  இடத்துக்கு 100 கிலோ) என்ற அளவில் மக்கிய தொழு உரம் போட்டு நன்றாக கலக்க வேண்டும். அதன் பின் ஒரு பாத்திக்கும் அடுத்த பாத்திக்கும் இரண்டரை அடி இடைவெளி இருக்குமாறு நீளத்தில் பாத்தி அமைக்க வேண்டும். இப்பொழுது தோட்டம் ரெடி.

தோட்டம் இல்லாதவர்கள்  தொட்டியில் செடி வளர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.  உடையாத பழைய பிளாஸ்டிக் பக்கெட்டுகள், பிளாஸ்டிக் கோணிகள் இவற்றில் செடி வளர்க்கலாம்.  தோட்டத்து மண், மண் புழு உரம், மணல் ஆகியவற்றை 1:1:1 என்ற படி சம அளவில் கலந்து கற்கள், களைகள் இருந்தால் நீக்கி விட்டு அவற்றை பக்கெட் அல்லது பிளாஸ்டிக் கோணிகளில் மூன்றில் இரண்டு பாகம் நிரப்பவேண்டும். அவ்வளவுதான். 

இனி விதை விதைத்தல் மற்றும் நாற்று தயார் செய்வதை பார்ப்போம். தக்காளி, கீரை, மிளகாய் போன்றவற்றின் விதைகள் மிகவும் சிறியதாக இருப்பதால் அதை விதைக்க முடியாது. முதலில் நாற்றை வளர்த்து அதன் பின்பே நடமுடியும். வெண்டை, அவரை, பாகற்காய், புடலைங்காய், பீன்ஸ் போன்றவற்றின் விதைகளை நேரடியாக தொட்டி அல்லது பாத்திகளில் விதைக்கலாம்.

தினசரி நமக்கு தேவைப்படும் மிளகாய் செடி வளர்ப்பதை பார்ப்போம். நர்ஸரி, அரசு தோட்டக்கலை அலுவலகங்களில் சிறிய பாக்கெட்டுகளில் விதைகள் கிடைக்கும். அவர்றை வாங்கிக்கொள்ளலாம். அல்லது நாம் சமயலுக்கு வாங்கும் மிளகாய் வற்றல் ஒன்று அல்லது இரண்டை (நன்றாக சிகப்பாகவும், காய்ந்தும், நீளமாகவும் உள்ள ) தேர்வு செய்து எடுத்து அதை வெயிலில் காயவைத்து அதிலிருந்து விதைகளை எடுக்கலாம்.

அதன் பின் பிளாஸ்டிக் டிரே ஒன்றை எடுத்து (4" உயரம், 8" அகலம், 12" நீளம் உத்தேசமாக) அதில் முன்பு கூறியபடி மண், மணல், மண்புழு உரம் கொண்ட கலவையை அதில் முக்கால் பாகம் நிரப்பவேண்டும். விதையை அதன் மீது பரவலாக தூவி விட்டு அதை மறைக்கும் அளவிற்கு சுமார் கால் இஞ்சு உயரத்திற்கு அதன் மீது மண்கலவையை தூவ வேண்டும். அதன் பின் பூவாளி அல்லது ஸ்பிரே பாட்டில் மூலமாக நன்றாக மண் ஈரப்பதம் வரும் வரை தண்ணீர் தெளிக்க வேண்டும்.  இந்த டிரேயை நிழலான இடத்தில் வைக்க வேண்டும். மண்னில் ஈரப்பதம் குறையாதவாறு காலையிலும் மாலையிலும் தண்ணீர் ஸ்பிரே செய்ய வேண்டும். டிரே பக்கம் எறும்ம்பு வரக்கூடாது. விதைகள் முளைக்க ஒரு வார காலம் ஆகும். அதிலிருந்து 30 வது நாளில் அந்த நாற்றை பிடுங்கி  ஒரு பக்கெட் அல்லது  பிளாஸ்டிக் கோணிக்கு இரண்டு செடி வீதம் சேர்த்து நடவேண்டும். நாற்றை பிடுங்கும் முன்பு நன்கு நீர் ஊற்றி மண் இளகிய நிலைக்கு வந்த பின் வேர் அறுந்து விடாதவாறு பக்குவமாக எடுக்க வேண்டும். 

டிரேயில் வளரும் நாற்றுக்கள்.

இந்த நாற்றுக்கள் நடப்பட்ட பின் சுமார் 30 நாட்களில் பூ பூக்கும். அதாவது விதை முளைத்ததிலிருந்து 60 -ம் நாள் பூக்கும்.அதன் பின் பூக்கள் சில நாட்களில் காயாக மாறி வளர ஆரம்பிக்கும். 

தோட்டத்தில் பாத்தி அமைத்து நாற்று நடவு செய்திருப்பதை கீழே உள்ள படங்கள் விளக்கும்.
நாற்று நட்டதிலிருந்து தினமும் ஒரு முறை தேவையான அளவு தண்ணீர் ஊற்றவேண்டும். அதாவது "காய்ச்சலும் பாய்ச்சலும்" என்பது போல மண் காய்ந்த பின் தண்ணீர் ஊற்ற வேண்டும். பூ பூக்கும் பருவத்தில் சிறிது மண்புழு உரம் போடவேண்டும். அதிகமாக மண்புழு உரம் போட்டாலும் அது ரசாயன உரத்தை போல பயிருக்கு கேடு செய்யாது.

இப்பொழுது தோட்டத்தில் அல்லது மொட்டை மாடியில் பக்கெட் / பிளாஸ்டிக் கோணியில் செடி வளர்ப்பது பற்றி புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.5 comments:

 1. பசுமையான ஆலோசனைகள்

  ReplyDelete
 2. பயனுள்ள இடுகை.. நம்மூட்டு தோட்டத்தையும் கொஞ்சம் நேரம் கிடைச்சா பாருங்க :-))

  http://amaithicchaaral.blogspot.com/2011/02/blog-post_25.html

  ReplyDelete
 3. நல்ல பகிர்வுசார்.

  ReplyDelete