Friday, August 12, 2011

நீங்களும் காளான் வளர்க்கலாம் ............1

காளான்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதுடன், பல வியாதிகளுக்கு இயற்கை மருந்தாகவும் இருப்பதால், இது மக்களால் விரும்பி சாப்பிடப்படும் பொருளாகிவிட்டது. வெளி நாடுகளில், வீடுகளில் தங்கள் தேவையை பூர்த்தி செய்யவும் பொழுதுபோக்காவும் செய்யப்படுவதுடன் பெரிய நிறுவனங்கள் தானியங்கி கருவிகளை உபயோகித்து தொழில் ரீதியாகவும் செய்கின்றன. குறைந்த முதலீடு, அதிக லாபம் தரும் தொழில். காலி இடம் இருப்பவர்கள் ஷெட் அமைத்து செய்யலாம். அல்லது வீட்டின் ஒரு அறையில் வளர்க்கலாம். இதை வளர்க்க தண்ணீர், உரம் இவை எதுவுமே தேவை இல்லை.

காளான்களில் பல வகைகள் இருந்தாலும் சாப்பிடக்கூடிய ரகங்கள் சில மட்டுமே. அவற்றில் நம் நாட்டின் சீதோஷ்ண நிலையில் வளர்க்க கூடிய ரகங்களான சிப்பி காளான், பால் காளான் இவற்றில் சிப்பி காளான் மட்டுமே ஆண்டு முழுவதும் வளர்க்கக்கூடியது. அதிக பலன் தரக்கூடியது என்பதால் அதைப்பற்றி பார்க்கலாம்.

 சிப்பி காளான் (Oyster Mushrooms)

மற்ற தாவரங்களைப்போல காளானுக்கு விதை கிடையாது. ஸ்போர்ஸ் (Spores ) எனப்படும் நுண்ணுயிர் விதைகள் மட்டுமே உண்டு. இதை சேகரிப்பதும் அதன் மூலம் வளரச்செய்வதும் கடினம் என்பதால் டிஷ்யூ கல்சர் எனப்படும் திசு வளர்ப்பின் மூலம் செய்யப்படுகிறது. முதலில் பி.டி.ஏ எனப்படும்  கடல்பாசி ஊடகத்தில் வளர்க்கப்பட்டு பின் அது தானியத்தில் வளர்க்கப்படுகிறது. இறுதியாக இது வைக்கோலில் வளர்க்கப்பட்டு, காளான் அறுவடை செய்யப்படுகிறது. காளான் வளர்ப்பை இரண்டு பிரிவாக பிரிக்கலாம்.

1. திசு வளர்ப்பு செய்து அதன் மூலம் படுக்கை வித்தை தயார் செய்தல்.

பி.டி.ஏ  ஊடகத்தை தயர்ர் செய்தல்
காளான் திசுவை ஊடகத்தில் வளர்த்தல்
தாய் வித்து தயாரித்தல் (Mother spawn)
படுக்கை வித்து தயாரித்தல் (Bed spawn)

2. காளான் வளர்ப்புக்கு தேவையான படுக்கையை தயார் செய்து அதில் படுக்கை வித்துகளை தூவி காளானை வளர்த்து அறுவடை செய்து விற்பனை செய்தல்.

வைக்கோலை பக்குவப்படுத்துதல்
படுக்கை தயாரித்தல்
வளர்ப்பு
அறுவடை செய்து விற்பனை செய்தல்

நாமே படுக்கை வித்தை தயார் செய்து காளான் வளர்ப்பது என்பது இத்தொழிலுக்கு புதிதாக வருபவர்களுக்கு சிரமமான காரியம். எனவே படுக்கை வித்தை வாங்கி காளான் வளர்ப்பதை பற்றி முதலில் விரிவாக பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

1. படுக்கை வித்து (Bed Spawn) = 5 பாக்கெட்
2. வைக்கோல் =  10 கிலோ
3. பிளாஸ்டிக் பை ( 30 cm X 60 cm )  = 10 
முதலில் வைக்கோலை எடுத்து நன்றாக உதறி சுத்தம் செய்துவிட்டு அதை 3-4 அங்குலம் நீளமுள்ளதாக சிறு துண்டுகளாக வெட்ட வேண்டும். அதன் பின் தண்ணீரில் சுமார் 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பின் அதை எடுத்து தண்ணீர் உள்ள பாத்திரத்தில் போட்டு சுமார் அரை மணி நேரம் வேகவிடவும். பின் தண்ணீரிலிருந்து எடுத்து நிழலில், சுத்தமான தரையில் பிளாஸ்டிக் பேப்பரில் உதிரியாக பரப்பி காயவிடவும். 50% ஈரப்பதம் வரும் வரை அதை உலரவிட்டு எடுக்கவும். அதாவது வைக்கோலை கையால் எடுத்தால் ஈரம் இருக்கவேண்டும். ஆனால் அதை பிழிந்தால் தண்ணீர் சொட்டக்கூடாது. இதுதான் சரியான பக்குவம்.  இவ்வாறும் படுக்கைக்கு வைக்கோலை தயார் செய்யலாம். அல்லது ரசாயன பொருளை பயன்படுத்தியும் தயார் செய்யலாம்.

100 லிட்டர் தண்ணீருக்கு 7.5 கிராம் கார்பெண்டாசிம் (Carbendazim) பவுடர், 50 மி.லி பார்மாலின் திரவம் என்ற கணக்கில் தண்ணீரில் கலந்து சுமார் 12 மணி நேரம் அதில் வைக்கோலை ஊற வைக்க வேண்டும். அதன் பின் அதை எடுத்து முன்பு கூறிய படி 50% ஈரப்பதம் வரும் வரை நிழலில் உலர விட வேண்டும். வைக்கோல்  தயார் நிலைக்கு வந்தவுடன், படுக்கையை தயார் செய்து விட வேண்டும்.  வைக்கோல் காய்ந்துவிட்டால் அதை உபயோகிக்க முடியாது.

 பிளாஸ்டிக் பையை (30 cm X 60 cm) எடுத்து அதன் அடிப்பக்கத்தை சனல் அல்லது ரப்பர் பேண்ட் போட்டு கட்டிவிடவும். பின்  வெளிப்பக்கம் உள்ளே வருமாறு பையை திருப்பி விடவும் .இவ்வாறு செய்வதால் படுக்கை உருளை வடிவில் கிடைக்கும்.

படுக்கை வித்து பையிலிருந்து வித்தை வெளியே எடுக்கவும். இது ஒரு கட்டி போல இருக்கும். அதை இரண்டாக உடைத்து கொள்ளவும். ஒரு பாக்கெட் வித்தையை இரண்டு படுக்கைகளுக்கு உபயோகிக்கலாம். உடைத்த ஒருபகுதியை  உதிர்த்து வைத்துக்கொள்ளவும்.

அதனுள் வைக்கோலை போட்டு நன்கு அழுத்தவும்.சுமார் 3 அங்குலம் உயரம் வந்த பின் உத்தேசமாக நாம் உதிர்த்து வைத்திருக்கும் விதையில் ஐந்தில் ஒருபகுதியை கையில் எடுத்து  பையின் ஓரத்தில் வைக்கோலின் மீது பரவலாக தூவவும். அதன் பின் முன்பு செய்தது போலவே 3 அங்குலத்திற்கு வைக்கோலை நிரப்பி வித்தை தூவவும். இவ்வாறு ஐந்து அடுக்குகள் வைக்கோலை நிரப்ப வேண்டும். பின் பையின் வாயை வைக்கோல் இருக்கமாக இருக்கும் படி கயிற்றால் கட்டி விடவேண்டும்.

அதன் பின் பையில் பரவலாக நிறைய ஓட்டைகளை  சுத்தமான ஊசியால் போடவேண்டும். இவ்வாறு செய்வது பையினுள் இருக்கும் காளான் விதையின் மேல் படர்ந்திருக்கும் மைசீலியம் என்ற வெள்ளை நிறப்பொருள்  காளானாக வளர்வதற்கு தேவையான காற்றை பெறுவதற்கு ஆகும். இப்பொழுது படுக்கை தயாராகி விட்டது.

இது போலவே இதர படுக்கைகளையும் தயார் செய்ய வேண்டும்.

படுக்கை வித்து:  இது தமிழ் நாடு விவசாய கல்லூரியில் (கோயம்புத்தூர்) கிடைக்கிறது. 300 கிராம் எடை கொண்ட வித்து பையின் விலை 30 ரூபாய். காளான் வளர்ப்பவர்களில் பலர் சொந்த உபயோகத்திற்காகவும், விற்பனைக்காகவும் படுக்கை வித்து தயார் செய்கிறார்கள். அவர்களிடமிருந்தும் பெறலாம்.

தொடரும் ...................
5 comments:

  1. அமைதிச்சாரல் said...

    உபயோகமான பகிர்வு.////

    நன்றி

    ReplyDelete
  2. ரொம்ப உபயோகமான பதிவு

    ReplyDelete