Wednesday, November 30, 2011

சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு - இனி என்ன நடக்கும்?


 

அமெரிக்காவின் விருப்பத்தை நிறைவேற்றுவதே இந்திய அரசின் தலையாய கடமை. அதன் படி வால்மார்ட், டெஸ்கோ ஆகிய சில்லரை வணிகத்தில் கொடிகட்டி பறக்கும் திமிங்கிலங்களை இந்தியாவில் செயல்பட அனுமதிக்கும் முடிவை மத்திய அரசு எடுத்துவிட்டது.

இம்முடிவு, நான்கு கோடி சிறு வணிகர்களையும், அனைத்து விவசாயிகளையும் பாதிக்கும் என்பதால், எதிர் கட்சிகள் மட்டுமின்றி கூட்டணி மற்றும் காங்கிரஸ் எம்பிக்களிடையேயும் எதிர்ப்பை உண்டாக்கியிருந்தாலும், மன்மோஹன் சிங் இம்முடிவை மாற்றப்போவதில்லை என சொல்லிவிட்டார்.

எதிர்கட்சிகள் இந்த முடிவை மாற்ற வேண்டும் அல்லது ஓட்டு எடுப்புடன் கூடிய ஒத்தி வைப்பு தீர்மானத்திற்கு ஒப்புக்கொள்ள வேண்டும், அதுவரை பாராளுமன்றம் செயல் பட அனுமதிக்க மாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளனர்.

முடிவை மாற்றமுடியாது என்பதில் உறுதியாக இருப்பதால், ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு சம்மதிப்பதை தவிர அரசுக்கு வேறு வழியில்லை. ஓட்டெடுப்பில் வெற்றி பெற வேண்டும் என்பதால் கூட்டணிகளை தாஜா செய்ய கூட்டம் நடத்தப்பட்டதில் எதிர்பார்த்த படியே திமுக ஆதரவாக ஓட்டளிக்கும் என தெரிவித்து விட்டது.  திரிணாமுல் காங்கிரஸ் எதிர்த்து வாக்களிக்கும் என எதிர் பார்க்க முடியாது.

ஒரு வேளை ஓட்டு எடுப்பில் வெற்றி பெற முடியாது என்ற நிலை ஏற்படுமானால், அணு ஒப்பந்த்தின் போது எம். பி களுக்கு தலைக்கு ஒரு கோடி பணம் கொடுத்தது  போல இப்பொழுதும் பணம் கொடுத்து சமாளிக்கும். 

ஆக சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு உறுதியாகி விட்டது.

வால்மார்ட்டும், டெஸ்கோவும் வந்தால் இந்தியாவில் என்ன நடக்கும்?

1. விவசாய விளை பொருட்கள், விவசாயிகள் லாபமடையும் வகையில்  கொள்முதல் செய்யப்படும்.

2. அதே நேரத்தில், அடக்க விலைக்கும் குறைவாகவே உபயோகிப்பாளர்களுக்கு விற்கப்படும்.

3. இதனால், விவசாயிகள் ஆர்வத்துடன் இவர்களுக்கு சப்ளை செய்வார்கள். நுகர்வோரும் இவர்களிடமே பொருட்களை வாங்குவார்கள்.

4. சில காலம் இதே நிலை தொடரும். இவர்களுடன் போட்டி போட்டு நஷ்டத்தில் தொழில் செய்ய முடியாமல் சிறு வணிகர்கள் தொழிலை விட்டு விட்டு மாற்று வேலையை தேடி செல்ல வேண்டியிருக்கும்.

5. ஒட்டு மொத்த சிறு வணிகர்களும் அழிந்த பின், விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை இவர்களை தவிர வேறு யாருக்கும் விற்க முடியாது என்ற நிலை ஏற்படும். அதை போலவே  நுகர்வோர்களுக்கும்  இவர்களை விட்டால் நாதியில்லை என்ற நிலை ஏற்படும்.

6.  இந்நிலை ஏற்படும் வரை பொறுமையாக நஷ்டத்தில் வியாபாரம் செய்து விட்டு, விவசாயிகளிடம் அடி மாட்டு விலைக்கு கொள்முதல் செய்ய ஆரம்பிப்பார்கள். இவர்களை தவிர வேறு யாரும் வாங்க இல்லாததால், இவர்களிடமே பொருட்களை விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

7. போட்டி விற்பனையாளர்கள் இல்லை என்பதால், தாங்கள் வைத்தது தான் விலை என்ற நிலையில் அதிக விலை கொடுத்து பொருட்களை `நுகர்வோர் வாங்கியே தீர வேண்டும்.

ஆக, சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு மூலம் பலனடைய போவது வெளிநாட்டு நிறுவனங்களும், அவர்களிடம் லஞ்சம் அல்லது கட்சி நிதி பெறும் அரசியல்வாதிகளும், அதிகாரிகளுமே!

அதோடு, இந்நிறுவனங்களுக்கு வரி சலுகை வழங்கி மேலும் அரசுக்கு நஷ்டம் ஏற்படும். இதில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு நடை முறையில் உள்ள தொழிலாளர் நல சட்டத்திலிருந்தும் விதி விலக்கு அளிக்கப்படும்.

ஆக மொத்தத்தில் இம்முடிவு நாட்டின் நலனுக்கு எதிரானது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இதை அமுல்படுத்தியே தீருவேன் என ஒற்றைக்காலில் நிற்கும் மன்மோஹன் சிங் ஒரு ஏட்டு சுறைக்காய். ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளே வாழ்க்கையை நடத்தும் அவருக்கு இன்றைய இந்தியாவிற்கு எது தேவை என்பதை உணரும் சக்தி இல்லை. மேலும் இவரும் சரி, வணிக துறை அமைச்சரும் சரி, யாருமே தேர்தலில் நின்று ஜெயித்து வந்தவர்கள் அல்ல! அந்த அளவிற்கு மக்கள் செல்வாக்கு பெற்றவர்கள்.

வெளிநாட்டவரின் நேரடி முதலீட்டின் மூலம் தான் இந்தியாவின் பொருளாதாரம் கொழிக்கும் என்றால் மகாத்மா காந்தி வெள்ளைக்காரனை இந்தியாவிலிருந்து விரட்ட போராடியது முட்டாள் தனம். வெள்ளைக்காரனும் இதைத்தானே செய்தான்?

கழுதைக்கு வாக்குப்பட்டால் உதைக்கு பயப்படலாமா?  

போகிற போக்கை பார்த்தால், வெகு சீக்கிரத்தில் பாராளுமன்றத்திலும்  51% சதவிகிதம் வெளி நாட்டவர் பங்கேற்க சட்டம் கொண்டு வந்தாலும் ஆச்சரியப்பட தேவை இல்லை


Sunday, November 27, 2011

கொலைவெறி பாடல் - ரிமிக்ஸ்எதோ ஒரு புண்ணியவான் இந்த வீடியோவை தயார் செய்து  யூ டியூப்பில் அப்லோட் செய்துள்ளார்.

Saturday, November 26, 2011

"இனிமேலும் அடிப்பேன்" - கர்ஜிக்கும் பஞ்சாப் சிங்கம்.

பஞ்சாப் மாநிலம் வீரத்திற்கும் தியாகத்திற்கும் விளை நிலம் ஆகும். நமக்கு தெரிந்து பதக் சிங்கிலிருந்து ஹர்விந்தர் சிங் வரை பல உதாரண புருஷர்கள் உண்டு. அது சரி யார் இந்த ஹர்விந்தர் சிங்?


இந்த படத்தில் சரத்த்பவாருக்கு அடுத்து இருப்பவர்தான் ஹர்விந்தர் சிங். டெல்லியில் இருக்கும் ஒரு சாதாரண லாரி டிரைவர். இவர் 24-ம் தேதியன்று டெல்லியில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய விவசாயத்துறை அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமாகிய சரத்பவாரின் கன்னத்தில் ஒரு செம அறை விட்டு, அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைவாசி ஏற்றத்தை கட்டுப்படுத்தாதது, ஊழல் இவற்றிற்கு எதிராக கோஷமிட்டார். பின் பாதுகாவலர்கள் அவரை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். 25-ம் தேதியன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்பொழுது தனக்காக வாதாட வக்கீல் தேவை இல்லை என நீதிபதியிடம் கூறிய அவர் மேலும் " இனியும் இவ்வாறு மீண்டும் நடந்து கொள்வேன்" என கூறினார். 

இவருக்கு மட்டும் ஏன் இந்த கொலைவெறி?. இவர் தனுஷின் கொலை வெறி பாடலை கேட்டு இவ்வாறு செய்யவில்லை. விலைவாசி உயர்வு, அரசியல்வாதிகள் செய்யும் ஊழல் இவற்றால் ஆத்திரமடைந்து இருக்கும் 120 கோடி பொது மக்களின் பிரதிநிதியாக தன்னால் முடிந்ததை செய்திருக்கிறார்.

இச்சம்பவத்திற்கு பாராளுமன்றமும் கண்டனம் தெரிவித்துள்ளது. பிரதமரோ " இது போன்ற சம்பவங்கள் தவறானவை என திருவாய் மலர்ந்துள்ளார். பிராணாப் முகர்ஜியோ, "இந்த நாடு எங்கே போய்க்கொண்டிருக்குது" என அச்சத்துடன் கூறியுள்ளார். ஆக மொத்தத்தில் இச்சம்பவத்திற்கான அடிப்படை காரணத்தை உணர்ந்து தங்கள் தவறை திருத்த வேண்டிய நேரம் வந்துவிட் டது என்பதை புரிந்து கொள்ளவில்லை. அதிக பாதுகாப்பு வழங்குவது பற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள். மக்களுக்கு எதிராக செயல்படும் அரசியல் வாதிகளுக்கு, அவர்களின் பாதுகாப்பே எமனாக முடியும் என்பதற்கு இந்திரா காந்தியின் முடிவே சிறந்த உதாரண்ம்.


தற்பொழுது பாராளுமன்ற கூட்டத்தொடர் நடை பெற்று வருகிறது. விலை உயர்வு, கருப்பு பண விவகாரம் இது தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதிக்க கோரி கடும் அமளி ஏற்பட்டு அவை ஒத்திவைக்கப்படும் நிலையில் உணவு பொருட்களின் விலைவாசி உயர்வு தொடர்பாக பதிலளிக்க வேண்டிய விவசாயத்துறை அமைச்சர் பாராளுமன்றத்தில் கலந்து கொள்ளாமல் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பொறுப்பற்ற செயல். இதை யாரும் கண்டிக்கவில்லை.

சரத்பவார் யாருக்காக அமைச்சராக இருக்கிறார்?  விவசாயிகளிடம், அறுவடைக்கு முன்பே அடிமாட்டு விலைக்கு உற்பத்தி பொருளை விலை பேசி முன்பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்து, அதை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் அடிக்கும் மண்டிக்காரர்கள், உணவுப்பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் மாபியாக்களுக்கு சாதகமாக அரசு செயல்பட நிர்பந்திப்பது போன்றவற்றிற்காகவே சரத்பவார் அமைச்சராக இருக்கிறார்.

எப்படியாவது ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தை மட்டுமே கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி, கூட்டணி கட்சிகளை சார்ந்த அம்மைச்சர்களின் செயல்களுக்கு ஆமாம் சாமி போடும் நிலையில் உள்ளது. UPA -1 ல் தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்த தி.மு.க வை சார்ந்த ராஜா ஸ்பெக்டரம் விற்பனையில் ஊழல் செய்து 1.76,000 கோடி ரூபாய் அரசுக்கு நஷ்டம் என்ற நிலை ஏற்பட்ட பின்பும் ம்றுபடியும் UPA -2 ல் அதே ராஜாவை அத்துறைக்கே அமைச்சராக்கியது உதாரணம் ஆகும்

சரத்பவார் அடிவாங்கிய விபகாரம் தொடர்பாக மீடியாக்கள் அன்னா ஹசாரேயிடம் கேட்டதிற்கு அவர் " ஒரு அடிதான் அடித்தாரா?" என பதிலளித்தார். தன்னை காந்தியவாதி என கூறிக்கொள்பவர் இப்படி கூறலாமா? என பலர் குரல் எழுப்பியுள்ளனர். குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் பிரதான அல்லக்கை திக்விஜயசிங் புலம்ப ஆரம்பித்து விட்டார். அன்னா ஹசாரே கேட்டதில் என்ன தப்பு?.

தனது கட்சிக்கு தேசியவாத காங்கிரஸ் என பெயர் வைத்திருக்கும் சரத்பவார் உண்மையான காந்தியவாதியாக இருந்திருந்தால் மறு கன்னத்தை காட்டியிருக்க வேண்டும். அதை தான் அன்னா ஹசாரே இப்படி கேட்டிருக்கிறார்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய மகாத்மா காந்தி ராணுவம், காவல் துறை, சிறை, தூக்கு தண்டனை இவற்றை சட்ட ரீதியான நடவடிக்கையாக ஏன் ஏற்றுக்கொண்டார்?

ராணுவத்தினருக்கு துப்பாக்கி, பீரங்கி இவற்றிற்கு பதிலாக பகவத்கீதையை கொடுத்திருக்கலாம். சிறை தண்டனை, தூக்குத்தண்டனை இவற்றிற்கு பதிலாக குற்றவாளிகளுக்கு கீதா உபதேசம் வழங்கலாம். ஏன் இதை காந்தி செய்ய சொல்லவில்லை? குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவது சரி என்பது தான் அவரது நிலை.

அடுத்ததாக சட்டத்தை தன் கையில் எடுக்கக்கூடாது என்ற வாதம் மறுபக்கம். இது எப்பொழுது பொருந்தும்?  சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நிலையில் சட்டம் தன் கடமையை பாரபட்சம் இல்லாமல் செய்யும் பட்சத்தில். இங்கு என்ன நிலை? 20 வருடங்களுக்கு முன்பு தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்த சுக்ராம் மீது உள்ள ஊழல் வழக்கு ஒரு சில தினங்களுக்கு முன்பு தான் விசாரணை முடிவுக்குக்கு வந்து அவர் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இனி அவர் மேல் முறையீடு என பல முறை நீதிமன்றங்களின் படியேறுவார். இறுதி தீர்ப்பு வழங்க இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம்.  இந்த சூழ்நிலையில் பாதிப்புக்கு உள்ளாகும் மக்கள் என்ன செய்ய முடியும்?

இச்சம்பவம் முடிவல்ல. ஆரம்பமே! இது ஊழல் அரசியல்வாதிகளின் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள கோபத்தை வெளிப்படுத்தும் சம்பவம் தான். ஒன்று மனசாட்சிக்கு பயப்படவேண்டும் அல்லது சட்டத்திற்கு பயப்படவேண்டும். எதற்குமே கட்டுப்படாதவர்களுக்கு இது சரியான தண்டனையே. அடி உதவுவது போல அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான் என்பது பழமொழி.Thursday, November 24, 2011

இந்த அநியாயத்தை யாரிடம் சொல்லி அழ?

மூன்று நாள்களுக்கு முன்பு தில்லியில் உள்ள பெரும்பணக்காரர்கள் 22 பேர்களிடம் விசாரணை நடத்தி, அவர்கள் வருமானக் கணக்கில் காட்டாமல் மறைத்து, எச்.எஸ்.பி.சி. வங்கியில் சேமித்து வைத்திருந்த சுமார் ரூ.500 கோடிக்கு, ரூ.80 கோடி வரி விதித்திருக்கிறது வருமான வரித் துறை. வருமான வரித்துறை இதுவரை யார் எவர் என்கிற பட்டியலை வெளியிடவில்லை.  

இன்னும் விசாரணை முடியவில்லை. விசாரணை முறையாக நடத்தி முடிந்த பிறகு இவர்கள் பற்றி அறிவிக்கப்படும். இவர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதித்துறை செயலர் குஜ்ரால் கூறியிருக்கிறார். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது இருக்கட்டும். இந்தத் தகவலை அந்த பன்னாட்டு வங்கி அளிக்கவில்லை என்பதும், இதனை பிரெஞ்சு அரசு மூலமாகத்தான் இந்திய அரசு பெற்றுள்ளது என்பதும் ஆச்சரியம் தருவதாக இருக்கிறது.  எச்.எஸ்.பி.சி. வங்கியில் கணக்கு வைத்துள்ள 700 பேர் பற்றி பிரெஞ்சு அரசு அளித்த பட்டியலின் அடிப்படையில் கடந்த இரண்டு மாதங்களாக வருமான வரித்துறையினர் ஆய்வுகள் நடத்தி, கடைசியாக இந்த 22 பேரிடமும் நேரிடையாக விசாரணை நடத்தி, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் கூறிய பின்னர்தான், தாங்கள் கணக்கு காட்டாமல் வெளிநாட்டு வங்கியில் பணம் சேர்த்து வைத்திருப்பதை ஒப்புக்கொண்டார்கள். இவர்கள் கணக்கு காட்டாத பணத்துக்கு வரி விதித்திருப்பதுடன், முந்தைய இரண்டு ஆண்டுகளுக்கான இவர்களது வங்கிப் பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களை அளிக்க வேண்டும் என்றும் வருமானவரித் துறை உத்தரவிட்டுள்ளது.  இதுபோன்று வரிஏய்ப்பு செய்து, கணக்கில் காட்டப்படாத வருமானத்தைப் பல்வேறு வெளிநாட்டு வங்கிகளில் சேர்த்து வைத்திருப்பது தொடர்பான 9,900 தகவல்கள் வருமான வரித் துறைக்குக் கிடைத்திருக்கிறது. இதில் மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தும்பட்சத்தில் மேலும் சில நூறு கோடி ரூபாய் வரிஏய்ப்புகள் கண்டுபிடிக்கப்படும் என்பது உறுதி.                         

ஒரு வங்கியில் சாதாரண இந்தியக் குடிமகன் ரூ.25,000க்கு மேலாக இன்னொருவர் கணக்கில் ரொக்கமாகச் செலுத்த முடியாது. இதற்கு அடிப்படைக் காரணம், கறுப்புப் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதுதான். அதேபோல ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக பரிவர்த்தனை செய்பவர் தனது நிரந்தர வருமான வரிக் கணக்கு எண் (பான்) குறிப்பிட்டாக வேண்டும். அதற்குக் காரணம், யார் மூலம் யாருக்குப் பணம் கொடுக்கப்பட்டது என்கின்ற வழித்தடத்தையும் பணத்துக்கான ஆதாரத்தையும் தெரிந்து கொள்வதற்காக தான்.  இந்த 22 பேரும் சுமார் ரூ.500 கோடி வரை வெளிநாட்டு வங்கியில் சேமிக்க முடியும் என்றால், அதுபற்றிய தகவலை இந்தத் தனியார் வங்கி ஏன் உடனடியாகத் தெரிவிக்கவில்லை? அல்லது அவர்கள் தெரிவித்திருந்தும், பிரெஞ்சு அரசு வெளியிடும்வரை நடவடிக்கை எடுக்காமல் வருமான வரித்துறை இத்தனைநாள் காலம் கடத்தியது ஏன்? வங்கிகள் தங்கள் வணிக மேம்பாட்டுக்காக நுகர்வோரின் கறுப்புப் பணத்துக்கு இடம் அளித்தது என்றால், அந்த வங்கிக் கிளைகள் ஏன் இந்தியாவில் அனுமதிக்கப்பட வேண்டும்? அதன் கிளைகளை ஏன் மூடிவிடக்கூடாது?  இதுபற்றிக் கேட்டால், பன்னாட்டு வங்கிகள் மீது நடவடிக்கை எடுத்தால் அதனால் அன்னிய முதலீடு பாதிக்கப்படும் என்று ஓலமிடுவார்கள். அப்படியானால், பன்னாட்டு நிறுவனங்களும் வங்கிகளும் எது வேண்டுமானாலும் இந்தியாவில் செய்துகொள்ளலாம் என்பதுதான் எழுதப்படாத சட்டமா?                      

இந்தியாவில் கிளைகள் தொடங்கும் வெளிநாட்டைச் சேர்ந்த வங்கிகளின் முகவர்கள் இங்கே சேவை செய்ய வருவதில்லை. வியாபாரம் செய்து லாபம் சம்பாதிக்கத்தான் வருகிறார்கள். இவர்கள் கிளை தொடங்கியதும் வியாபார நிறுவனங்களை நடத்துபவர்களிடம் அவர்கள் வெளிநாட்டுக்குச் செல்லும்போது விருப்பம்போல செலவு செய்யலாம் என்றும், ஏற்றுமதி - இறக்குமதியாளர்களாக இருந்தால் அவர்களது வியாபாரத்துக்கு வசதியாக தங்கள் வங்கியில் பணம் போட்டு எடுக்கலாம் என்றும் ஆசை வார்த்தைகள் கூறுகின்றன.  இந்தியாவில் செலவு செய்வதைக் காட்டிலும் அமெரிக்க - ஐரோப்பிய நாடுகளில் தங்கள் கறுப்புப் பணத்தைக் கண்டபடி எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் செலவு செய்ய விரும்புபவர்கள் இந்த வங்கி முகவர்களின் ஆசை வார்த்தைக்குப் பலியாகிவிடுகிறார்கள். வெறும் சுற்றுலாச் செலவுக்காக அன்னிய வங்கிக் கணக்கை முறைகேடாகப் பயன்படுத்துவதில் தொடங்கி நிரந்தரமாக வரிஏய்ப்பு செய்வதோடு, கறுப்புப் பணத்தை பல நூறு கோடிகளுக்கு அதிகரிக்கும் அளவுக்கும் செல்கிறது.  

இந்திய அரசுடைமை வங்கிகள் பலவும் அனைத்து நாடுகளிலும் கிளைகள் வைத்திருந்தாலும், இத்தகைய பன்னாட்டு வங்கிகளை பலர் நாடுவதற்கு வேறு சிறப்பான சேவைகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.  இந்தப் பன்னாட்டு வங்கிகளை இந்தியாவில் செயல்பட அனுமதிப்பதற்குக் கூறப்பட்ட முக்கியமான காரணம், இந்த வங்கிகளுடன் ஏற்படும் வியாபாரப் போட்டியால் நமது அரசு வங்கிகள் சுறுசுறுப்படைந்து அவற்றின் சேவைகள் மேம்படும் என்பது. அப்படியொன்றும் சேவைகள் மேம்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால், இந்தப் பன்னாட்டு வங்கிகளின் பாதிப்பால், வாடிக்கையாளர்களுக்குச் சேவைசெய்வதை விட்டு விட்டு, அவர்களை எப்படியெல்லாம் ஏமாற்றிக் கட்டணம் வசூலிக்கலாம் என்பதை மட்டும் நம் வங்கிகள் கற்றுக்கொண்டுள்ளன.  ஆயுதக் கொள்முதலில் கமிஷன், வர்த்தக ஒப்பந்தங்களில் கமிஷன், பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் கிளை தொடங்கும்போது அதற்கும் கமிஷன் என்று பெற்று அவற்றை நேரடியாக ஸ்விஸ் வங்கியில் போடுகின்ற அரசியல்வாதிகள் ஒருபுறம்.  இந்தியாவில் இருந்துகொண்டு, இந்தியாவில் சம்பாதித்து, ஆனாலும் கணக்கு காட்டாத கறுப்புப் பணத்தை மறைத்து வைக்கும் பெரும் தனவந்தர்கள் இன்னொருபுறம்.  இத்தகைய "கறுப்பு'ச்சாமிகளை வெள்ளைச்சாமிகளாக நம் முன் நிறுத்திட முயலும் வெளிநாட்டு வங்கிப் பூசாரிகள் மற்றொருபுறம்.  இவர்கள்தான் பொருளாதார நெருக்கடிக்கு அதிமுக்கிய காரணிகள். ஆனால் இவர்களால் அவதிப்படுவதோ, இதுபற்றி ஒன்றுமே தெரியாத மிக சாதாரண நடுத்தர குடும்பங்கள். எந்த நாளிலும், பல்லக்கு தூக்கிகளுக்கு மட்டும்தானே தோள் வலி!

நன்றி:  தினமணி