Thursday, November 24, 2011

இந்த அநியாயத்தை யாரிடம் சொல்லி அழ?

மூன்று நாள்களுக்கு முன்பு தில்லியில் உள்ள பெரும்பணக்காரர்கள் 22 பேர்களிடம் விசாரணை நடத்தி, அவர்கள் வருமானக் கணக்கில் காட்டாமல் மறைத்து, எச்.எஸ்.பி.சி. வங்கியில் சேமித்து வைத்திருந்த சுமார் ரூ.500 கோடிக்கு, ரூ.80 கோடி வரி விதித்திருக்கிறது வருமான வரித் துறை. வருமான வரித்துறை இதுவரை யார் எவர் என்கிற பட்டியலை வெளியிடவில்லை.  

இன்னும் விசாரணை முடியவில்லை. விசாரணை முறையாக நடத்தி முடிந்த பிறகு இவர்கள் பற்றி அறிவிக்கப்படும். இவர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதித்துறை செயலர் குஜ்ரால் கூறியிருக்கிறார். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது இருக்கட்டும். இந்தத் தகவலை அந்த பன்னாட்டு வங்கி அளிக்கவில்லை என்பதும், இதனை பிரெஞ்சு அரசு மூலமாகத்தான் இந்திய அரசு பெற்றுள்ளது என்பதும் ஆச்சரியம் தருவதாக இருக்கிறது.  எச்.எஸ்.பி.சி. வங்கியில் கணக்கு வைத்துள்ள 700 பேர் பற்றி பிரெஞ்சு அரசு அளித்த பட்டியலின் அடிப்படையில் கடந்த இரண்டு மாதங்களாக வருமான வரித்துறையினர் ஆய்வுகள் நடத்தி, கடைசியாக இந்த 22 பேரிடமும் நேரிடையாக விசாரணை நடத்தி, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் கூறிய பின்னர்தான், தாங்கள் கணக்கு காட்டாமல் வெளிநாட்டு வங்கியில் பணம் சேர்த்து வைத்திருப்பதை ஒப்புக்கொண்டார்கள். இவர்கள் கணக்கு காட்டாத பணத்துக்கு வரி விதித்திருப்பதுடன், முந்தைய இரண்டு ஆண்டுகளுக்கான இவர்களது வங்கிப் பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களை அளிக்க வேண்டும் என்றும் வருமானவரித் துறை உத்தரவிட்டுள்ளது.  இதுபோன்று வரிஏய்ப்பு செய்து, கணக்கில் காட்டப்படாத வருமானத்தைப் பல்வேறு வெளிநாட்டு வங்கிகளில் சேர்த்து வைத்திருப்பது தொடர்பான 9,900 தகவல்கள் வருமான வரித் துறைக்குக் கிடைத்திருக்கிறது. இதில் மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தும்பட்சத்தில் மேலும் சில நூறு கோடி ரூபாய் வரிஏய்ப்புகள் கண்டுபிடிக்கப்படும் என்பது உறுதி.                         

ஒரு வங்கியில் சாதாரண இந்தியக் குடிமகன் ரூ.25,000க்கு மேலாக இன்னொருவர் கணக்கில் ரொக்கமாகச் செலுத்த முடியாது. இதற்கு அடிப்படைக் காரணம், கறுப்புப் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதுதான். அதேபோல ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக பரிவர்த்தனை செய்பவர் தனது நிரந்தர வருமான வரிக் கணக்கு எண் (பான்) குறிப்பிட்டாக வேண்டும். அதற்குக் காரணம், யார் மூலம் யாருக்குப் பணம் கொடுக்கப்பட்டது என்கின்ற வழித்தடத்தையும் பணத்துக்கான ஆதாரத்தையும் தெரிந்து கொள்வதற்காக தான்.  இந்த 22 பேரும் சுமார் ரூ.500 கோடி வரை வெளிநாட்டு வங்கியில் சேமிக்க முடியும் என்றால், அதுபற்றிய தகவலை இந்தத் தனியார் வங்கி ஏன் உடனடியாகத் தெரிவிக்கவில்லை? அல்லது அவர்கள் தெரிவித்திருந்தும், பிரெஞ்சு அரசு வெளியிடும்வரை நடவடிக்கை எடுக்காமல் வருமான வரித்துறை இத்தனைநாள் காலம் கடத்தியது ஏன்? வங்கிகள் தங்கள் வணிக மேம்பாட்டுக்காக நுகர்வோரின் கறுப்புப் பணத்துக்கு இடம் அளித்தது என்றால், அந்த வங்கிக் கிளைகள் ஏன் இந்தியாவில் அனுமதிக்கப்பட வேண்டும்? அதன் கிளைகளை ஏன் மூடிவிடக்கூடாது?  இதுபற்றிக் கேட்டால், பன்னாட்டு வங்கிகள் மீது நடவடிக்கை எடுத்தால் அதனால் அன்னிய முதலீடு பாதிக்கப்படும் என்று ஓலமிடுவார்கள். அப்படியானால், பன்னாட்டு நிறுவனங்களும் வங்கிகளும் எது வேண்டுமானாலும் இந்தியாவில் செய்துகொள்ளலாம் என்பதுதான் எழுதப்படாத சட்டமா?                      

இந்தியாவில் கிளைகள் தொடங்கும் வெளிநாட்டைச் சேர்ந்த வங்கிகளின் முகவர்கள் இங்கே சேவை செய்ய வருவதில்லை. வியாபாரம் செய்து லாபம் சம்பாதிக்கத்தான் வருகிறார்கள். இவர்கள் கிளை தொடங்கியதும் வியாபார நிறுவனங்களை நடத்துபவர்களிடம் அவர்கள் வெளிநாட்டுக்குச் செல்லும்போது விருப்பம்போல செலவு செய்யலாம் என்றும், ஏற்றுமதி - இறக்குமதியாளர்களாக இருந்தால் அவர்களது வியாபாரத்துக்கு வசதியாக தங்கள் வங்கியில் பணம் போட்டு எடுக்கலாம் என்றும் ஆசை வார்த்தைகள் கூறுகின்றன.  இந்தியாவில் செலவு செய்வதைக் காட்டிலும் அமெரிக்க - ஐரோப்பிய நாடுகளில் தங்கள் கறுப்புப் பணத்தைக் கண்டபடி எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் செலவு செய்ய விரும்புபவர்கள் இந்த வங்கி முகவர்களின் ஆசை வார்த்தைக்குப் பலியாகிவிடுகிறார்கள். வெறும் சுற்றுலாச் செலவுக்காக அன்னிய வங்கிக் கணக்கை முறைகேடாகப் பயன்படுத்துவதில் தொடங்கி நிரந்தரமாக வரிஏய்ப்பு செய்வதோடு, கறுப்புப் பணத்தை பல நூறு கோடிகளுக்கு அதிகரிக்கும் அளவுக்கும் செல்கிறது.  

இந்திய அரசுடைமை வங்கிகள் பலவும் அனைத்து நாடுகளிலும் கிளைகள் வைத்திருந்தாலும், இத்தகைய பன்னாட்டு வங்கிகளை பலர் நாடுவதற்கு வேறு சிறப்பான சேவைகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.  இந்தப் பன்னாட்டு வங்கிகளை இந்தியாவில் செயல்பட அனுமதிப்பதற்குக் கூறப்பட்ட முக்கியமான காரணம், இந்த வங்கிகளுடன் ஏற்படும் வியாபாரப் போட்டியால் நமது அரசு வங்கிகள் சுறுசுறுப்படைந்து அவற்றின் சேவைகள் மேம்படும் என்பது. அப்படியொன்றும் சேவைகள் மேம்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால், இந்தப் பன்னாட்டு வங்கிகளின் பாதிப்பால், வாடிக்கையாளர்களுக்குச் சேவைசெய்வதை விட்டு விட்டு, அவர்களை எப்படியெல்லாம் ஏமாற்றிக் கட்டணம் வசூலிக்கலாம் என்பதை மட்டும் நம் வங்கிகள் கற்றுக்கொண்டுள்ளன.  ஆயுதக் கொள்முதலில் கமிஷன், வர்த்தக ஒப்பந்தங்களில் கமிஷன், பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் கிளை தொடங்கும்போது அதற்கும் கமிஷன் என்று பெற்று அவற்றை நேரடியாக ஸ்விஸ் வங்கியில் போடுகின்ற அரசியல்வாதிகள் ஒருபுறம்.  இந்தியாவில் இருந்துகொண்டு, இந்தியாவில் சம்பாதித்து, ஆனாலும் கணக்கு காட்டாத கறுப்புப் பணத்தை மறைத்து வைக்கும் பெரும் தனவந்தர்கள் இன்னொருபுறம்.  இத்தகைய "கறுப்பு'ச்சாமிகளை வெள்ளைச்சாமிகளாக நம் முன் நிறுத்திட முயலும் வெளிநாட்டு வங்கிப் பூசாரிகள் மற்றொருபுறம்.  இவர்கள்தான் பொருளாதார நெருக்கடிக்கு அதிமுக்கிய காரணிகள். ஆனால் இவர்களால் அவதிப்படுவதோ, இதுபற்றி ஒன்றுமே தெரியாத மிக சாதாரண நடுத்தர குடும்பங்கள். எந்த நாளிலும், பல்லக்கு தூக்கிகளுக்கு மட்டும்தானே தோள் வலி!

நன்றி:  தினமணிNo comments:

Post a Comment