Saturday, November 26, 2011

"இனிமேலும் அடிப்பேன்" - கர்ஜிக்கும் பஞ்சாப் சிங்கம்.

பஞ்சாப் மாநிலம் வீரத்திற்கும் தியாகத்திற்கும் விளை நிலம் ஆகும். நமக்கு தெரிந்து பதக் சிங்கிலிருந்து ஹர்விந்தர் சிங் வரை பல உதாரண புருஷர்கள் உண்டு. அது சரி யார் இந்த ஹர்விந்தர் சிங்?


இந்த படத்தில் சரத்த்பவாருக்கு அடுத்து இருப்பவர்தான் ஹர்விந்தர் சிங். டெல்லியில் இருக்கும் ஒரு சாதாரண லாரி டிரைவர். இவர் 24-ம் தேதியன்று டெல்லியில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய விவசாயத்துறை அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமாகிய சரத்பவாரின் கன்னத்தில் ஒரு செம அறை விட்டு, அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைவாசி ஏற்றத்தை கட்டுப்படுத்தாதது, ஊழல் இவற்றிற்கு எதிராக கோஷமிட்டார். பின் பாதுகாவலர்கள் அவரை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். 25-ம் தேதியன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்பொழுது தனக்காக வாதாட வக்கீல் தேவை இல்லை என நீதிபதியிடம் கூறிய அவர் மேலும் " இனியும் இவ்வாறு மீண்டும் நடந்து கொள்வேன்" என கூறினார். 

இவருக்கு மட்டும் ஏன் இந்த கொலைவெறி?. இவர் தனுஷின் கொலை வெறி பாடலை கேட்டு இவ்வாறு செய்யவில்லை. விலைவாசி உயர்வு, அரசியல்வாதிகள் செய்யும் ஊழல் இவற்றால் ஆத்திரமடைந்து இருக்கும் 120 கோடி பொது மக்களின் பிரதிநிதியாக தன்னால் முடிந்ததை செய்திருக்கிறார்.

இச்சம்பவத்திற்கு பாராளுமன்றமும் கண்டனம் தெரிவித்துள்ளது. பிரதமரோ " இது போன்ற சம்பவங்கள் தவறானவை என திருவாய் மலர்ந்துள்ளார். பிராணாப் முகர்ஜியோ, "இந்த நாடு எங்கே போய்க்கொண்டிருக்குது" என அச்சத்துடன் கூறியுள்ளார். ஆக மொத்தத்தில் இச்சம்பவத்திற்கான அடிப்படை காரணத்தை உணர்ந்து தங்கள் தவறை திருத்த வேண்டிய நேரம் வந்துவிட் டது என்பதை புரிந்து கொள்ளவில்லை. அதிக பாதுகாப்பு வழங்குவது பற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள். மக்களுக்கு எதிராக செயல்படும் அரசியல் வாதிகளுக்கு, அவர்களின் பாதுகாப்பே எமனாக முடியும் என்பதற்கு இந்திரா காந்தியின் முடிவே சிறந்த உதாரண்ம்.


தற்பொழுது பாராளுமன்ற கூட்டத்தொடர் நடை பெற்று வருகிறது. விலை உயர்வு, கருப்பு பண விவகாரம் இது தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதிக்க கோரி கடும் அமளி ஏற்பட்டு அவை ஒத்திவைக்கப்படும் நிலையில் உணவு பொருட்களின் விலைவாசி உயர்வு தொடர்பாக பதிலளிக்க வேண்டிய விவசாயத்துறை அமைச்சர் பாராளுமன்றத்தில் கலந்து கொள்ளாமல் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பொறுப்பற்ற செயல். இதை யாரும் கண்டிக்கவில்லை.

சரத்பவார் யாருக்காக அமைச்சராக இருக்கிறார்?  விவசாயிகளிடம், அறுவடைக்கு முன்பே அடிமாட்டு விலைக்கு உற்பத்தி பொருளை விலை பேசி முன்பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்து, அதை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் அடிக்கும் மண்டிக்காரர்கள், உணவுப்பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் மாபியாக்களுக்கு சாதகமாக அரசு செயல்பட நிர்பந்திப்பது போன்றவற்றிற்காகவே சரத்பவார் அமைச்சராக இருக்கிறார்.

எப்படியாவது ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தை மட்டுமே கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி, கூட்டணி கட்சிகளை சார்ந்த அம்மைச்சர்களின் செயல்களுக்கு ஆமாம் சாமி போடும் நிலையில் உள்ளது. UPA -1 ல் தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்த தி.மு.க வை சார்ந்த ராஜா ஸ்பெக்டரம் விற்பனையில் ஊழல் செய்து 1.76,000 கோடி ரூபாய் அரசுக்கு நஷ்டம் என்ற நிலை ஏற்பட்ட பின்பும் ம்றுபடியும் UPA -2 ல் அதே ராஜாவை அத்துறைக்கே அமைச்சராக்கியது உதாரணம் ஆகும்

சரத்பவார் அடிவாங்கிய விபகாரம் தொடர்பாக மீடியாக்கள் அன்னா ஹசாரேயிடம் கேட்டதிற்கு அவர் " ஒரு அடிதான் அடித்தாரா?" என பதிலளித்தார். தன்னை காந்தியவாதி என கூறிக்கொள்பவர் இப்படி கூறலாமா? என பலர் குரல் எழுப்பியுள்ளனர். குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் பிரதான அல்லக்கை திக்விஜயசிங் புலம்ப ஆரம்பித்து விட்டார். அன்னா ஹசாரே கேட்டதில் என்ன தப்பு?.

தனது கட்சிக்கு தேசியவாத காங்கிரஸ் என பெயர் வைத்திருக்கும் சரத்பவார் உண்மையான காந்தியவாதியாக இருந்திருந்தால் மறு கன்னத்தை காட்டியிருக்க வேண்டும். அதை தான் அன்னா ஹசாரே இப்படி கேட்டிருக்கிறார்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய மகாத்மா காந்தி ராணுவம், காவல் துறை, சிறை, தூக்கு தண்டனை இவற்றை சட்ட ரீதியான நடவடிக்கையாக ஏன் ஏற்றுக்கொண்டார்?

ராணுவத்தினருக்கு துப்பாக்கி, பீரங்கி இவற்றிற்கு பதிலாக பகவத்கீதையை கொடுத்திருக்கலாம். சிறை தண்டனை, தூக்குத்தண்டனை இவற்றிற்கு பதிலாக குற்றவாளிகளுக்கு கீதா உபதேசம் வழங்கலாம். ஏன் இதை காந்தி செய்ய சொல்லவில்லை? குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவது சரி என்பது தான் அவரது நிலை.

அடுத்ததாக சட்டத்தை தன் கையில் எடுக்கக்கூடாது என்ற வாதம் மறுபக்கம். இது எப்பொழுது பொருந்தும்?  சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நிலையில் சட்டம் தன் கடமையை பாரபட்சம் இல்லாமல் செய்யும் பட்சத்தில். இங்கு என்ன நிலை? 20 வருடங்களுக்கு முன்பு தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்த சுக்ராம் மீது உள்ள ஊழல் வழக்கு ஒரு சில தினங்களுக்கு முன்பு தான் விசாரணை முடிவுக்குக்கு வந்து அவர் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இனி அவர் மேல் முறையீடு என பல முறை நீதிமன்றங்களின் படியேறுவார். இறுதி தீர்ப்பு வழங்க இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம்.  இந்த சூழ்நிலையில் பாதிப்புக்கு உள்ளாகும் மக்கள் என்ன செய்ய முடியும்?

இச்சம்பவம் முடிவல்ல. ஆரம்பமே! இது ஊழல் அரசியல்வாதிகளின் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள கோபத்தை வெளிப்படுத்தும் சம்பவம் தான். ஒன்று மனசாட்சிக்கு பயப்படவேண்டும் அல்லது சட்டத்திற்கு பயப்படவேண்டும். எதற்குமே கட்டுப்படாதவர்களுக்கு இது சரியான தண்டனையே. அடி உதவுவது போல அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான் என்பது பழமொழி.No comments:

Post a Comment