Saturday, February 4, 2012

பூவுக்குள் பூகம்பம்!

மலர் எவ்வளவு மென்மையானதோ அதைப்போலவே சிறுவர், சிறுமியர் மனதும். உலகத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையும் துடிப்பும் அவர்களிடம் இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் பாரபட்சமின்றி அலசி முடிவெடுக்கவும், அதே நேரத்தில் தங்கள் மனதில் சரி என தோன்றுவதை துணிச்சலாக அச்சமில்லாமல் அடித்து சொல்லும் மன நிலை இருக்கும். ஆனால் நாம் அவர்களை சிந்திக்க விடுவதே இல்லை. இன்றைய வாழ்க்கை நிலை அப்படி.

1995 -ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி பாகிஸ்தானை சேர்ந்த 12 வயது சிறுவன் இக்பால் மாஸி லாகூருக்கு அருகில் சுட்டு கொல்லப்பட்டான். அவன் 4 வயதாக இருக்கும் பொழுது, தாங்கள் பட்ட கடன் தொகை ரூ.13,000 க்காக அவன் பெற்றோர்களால்  கொத்தடிமையாக  தரை விரிப்பு (கார்பெட்) கம்பெனிக்கு விற்கப்பட்டான். ஆரு ஆண்டுகள் கழித்து உச்ச நீதிமன்ற உத்தரவின் படி விடுவிக்கப்பட்ட குழந்தை தொழிலாளர்களில் அவனும் ஒருவன். குழந்தை தொழிலாலர் முறைக்கு எதிரான இயக்கத்தில் சேர்ந்தான். அமெரிக்க அரசு அவனுக்கு பாராட்டு விருது வழங்கியதுடன் அவன் அமெரிக்காவில் கல்வி கற்க அவனுக்கு ஏற்பாடு செய்தது. அமெரிக்கா செல்வதற்கு சில நாட்கள் முன்பு கார்பெட் மாபியாவால் சுட்டுக்கொல்லப்பட்டான்.  அப்பொழுது அவனுக்கு வயது 12. 
 இக்பால் மாஸி

இந்த கொலை செய்தி   KRAIG  KIELBURGER , MARC KIELBURGER என்ற கனடிய சகோதரர்ளை தவிர மற்றவர்களுக்கு செய்தியாகவே தென்பட்டது. தங்கள் வயதை ஒத்த இளைஞனின் கொலை அவர்களின் மனதில் பெரும் புயலாக தாக்கியது. குழந்தை தொழிலாளர்கள், கொத்தடிமை முறை இது இவர்கள் கேள்விப்படாத விஷயம். எனவே இதன் கொடுமையை நேரில் கண்டு உணர இந்தியா உட்பட ஐந்து நாடுகளுக்கு பயணம் செய்தனர். தொழிற்சாலைகளிலும், மற்ற ஆபத்தான வேலைகளிலும் சிறுவர் சிறுமியர்கள் ஈடுபடுத்தப்படுவதும், அவர்கள் 12 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை வேலை செய்வதும் அதிர்ச்சியாக இருந்தது. பயணத்தை முடித்து கனடா திரும்பியவுடன் தங்கள் பள்ளி நண்பர்களுடன் சேர்ந்து " Free the children" என்ற அமைப்பை உருவாக்கினர்.

இந்த அமைப்பின் மூலம் கல்வி, விளையாட்டு என பட்டாம் பூச்சிகளாக பறக்க வேண்டிய சிறுவர் சிறுமியர்களின் இளைமை காலம் வறுமையின் காரணமாக பறிக்கப்படுவதை விளக்கி, இந்த நிலைமையை மாற்றும் கடமை தங்களுக்கு உண்டு என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அதை நடைமுறைப்படுத்தவும் ஆரம்பித்தனர். இதை பாராட்டி Reebok -ன்  சர்வதேச மனித உரிமைக்கான அவார்டு வழங்கப்பட்டது. அப்பொழுது KRAIG  KIELBURGER க்கு வயது 14. அந்த நிகழ்ச்சியின் வீடியோவை பாருங்கள்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் அளித்த நன்கொடை 1,50,000 கனடிய டாலர்கள். இவர்களின் கோஷம், 
"நான் என்பதிலிருந்து நாங்கள்"
  
" எங்களுடைய நாள்"

இந்த அமைப்பில் பல லட்சம் பள்ளிமாணவ மாணவியர்கள், இளைஞர்கள், சமூக நல ஆர்வலர்கள் உறுப்பினர்கள். மூவாயிரத்துக்கும் மேற்பட்ட வாலண்டியர்கள். இந்தியா, கென்யா, கெய்ட்டி, போன்ற நாடுகளில்  பின் தங்கிய கிராமப்பகுதிகளில் பள்ளிக்கூடங்கள் கட்டுதல், குடிதண்ணீர் வசதி, கல்வி கற்பித்தல், மருத்துவ முகாம்கள் போன்றவற்றை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

MTV தன்னுடைய " அடுத்த தலைமுறை" என பொருள்படும் Degrassi என்ற நிகழ்ச்சிக்காக இந்த குழுக்களுடன்  செல்கிறது. இதுவரை இந்த அமைப்பு சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட பள்ளிக்கூடங்களை கட்டியுள்ளது. ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கல்வி கற்பித்து வருகிறது.  உணர்ச்சிகளை புரிந்து  உதவி செய்ய மதம் , இனம், கருப்பன் வெள்ளையன் என்ற் நிற வேறுபாடு, மொழி இவை தடையில்லை என்பதை இவர்கள் நிரூபித்து வருகிறார்கள். இவர்களின் ஆர்வத்தை வெளிபடுத்தும்  வீடியோவை இந்த பதிவில் பெரும் முயற்சி செய்தும் இணைக்க முடியவில்லை. ஒருவேளை ஏற்கனவே ஒரு வீடியோவை இணைத்துள்ளதால், லிமிட்டை தாண்டியிருப்பது காரணமாக இருக்கலாம். தெரியவில்லை. அடுத்த பதிவில் இணைக்கிறேன்.

தொடர்ச்சி அடுத்த பதிவில்.....................1 comment: