Wednesday, April 4, 2012

"டாட்ரா" - மாபெரும் ராணுவ வாகன ஊழல்!


ஹிந்து நாளிதழுக்கு தரைப்படை தலைமை தளபதி வி.கே. சிங் பேட்டி அளித்தார். அப்பொழுது தனக்கும் மத்திய அரசுக்கும் இடையே, பிறந்த தேதி தொடர்பான சர்ச்சையை பற்றி பேசிய அவர் ராணுவத்திற்கு தேவைப்படும் 600 "டாட்ரா" டிரக்கை ரணுவம் பெற்றுக்கொள்ள தனக்கு ரூபாய் 14 கோடி லஞ்சம் தர சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் லாபியிஸ்ட் (இடை தரகர்) தன்னை அணுகியதாகவும் கூறினார். தான் இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றும், அந்த லாபியிஸ்ட் சமீபத்தில் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஆவார். இந்த சூழ்நிலையில் தான் அதிர்ச்சி அடைந்ததாகவும், இது பற்றி பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணியிடம் கூறியதாகவும் பேட்டி அளித்தார். அதோடு பாதுகாப்பு அமைச்சரிடம் தான் இந்த பதவிக்கு பொருத்தமானவர் இல்லை என அமைச்சர் கருதினால், தான் இந்த பதவியிலிருந்து விலகி கொள்வதாக கூறியதாகவும் கூறினார். இப்பேட்டி அரசியலில் பெரும் பூகம்பத்தை உண்டாக்கியது. " ராணுவ தளபதி, தன் பிறந்த தேதி விவகாரத்தினால் விரக்தி அடைந்து  இவ்விதம் குற்றம் சட்டுகிறார்" என்று ஒரு தரப்பினர் அரசுக்கு ஆதரவாகவும், வேறு ஒரு தரப்பினர் " டாட்ரா டிரக் வாங்குவதில் பெரும் ஊழல் நடக்கிறது. அதனால் தான் அவர் உணமையை வெளிப்படுத்தியுள்ளார்" என அவருக்கு ஆதரவாகவும் குரல் எழுப்பினர்.

வி.கே. சிங் தன்னை சந்தித்து  தனக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்ததை புகார் செய்ததை பாதுகாப்பு அமைச்சர் ஒப்புக்கொண்டார். ராணுவ தளபதி எழுத்து மூலமாக புகார் கொடுக்காததால் தான் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறினார்.

இதற்கிடையில் மார்ச் 12-ம் தேதி வி.கே. சிங் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்கள் பல வருடங்களாக வாங்கப்படாததால் ஆயுத பற்றாக்குறை இருப்பதால், திடீர் என போர் ஏற்பட்டால் அதை எதிர் கொள்ளும் நிலையில் ராணுவம் இல்லை என்பதை விளக்கியுள்ளார். வழக்கம் போலவே மன்மோகன் சிங் இந்த விஷயத்திலும் மவுனமாக இருந்தார். 

ஆனால் இந்த கடிதம் மீடியாக்களில் வெளிவந்து மீண்டும் பிரச்சனையை கிளப்பியது. அது பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது. இந்த விஷயத்திலும் இரு விதமாக சர்ச்சை செய்யப்பட்டது. இக்கடிதம் டாப் சீக்ரட் ஆகும். இது வெளிவர வேண்டும் என்றால் ஒன்று இக்கடிதத்தை எழுதிய ராணுவ தளபதி அல்லது அவர் ஆதரவாளர்கள் லீக் செய்திருக்கவேண்டும். அல்லது கடிதத்தை பெற்றுக்கொண்டுள்ள பிரதமர் அலுவலகம்  லீக் செய்திருக்க வேண்டும்.

லல்லு பிரசாத் யாதவ் போன்ற ஊழல் பெருச்சாளிகள், இக்கடிதத்தை வி.கே. சிங் தான் லீக் செய்தார் என ஒருதலை பட்சமாக குற்றம் சாட்டி அவரை பதவி விலக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் குரல் எழுப்பினர்.

 டாட்ரா டிரக்கை ராணுவத்திற்கு சப்ளை செய்யும் மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் " பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட்" என்ற பொதுத்துறை நிறுவனத்தில் பணி புரிந்த முன்னாள் உதவி பொது மேலாளர் (டிரக் டிவிஷன்) எஸ். என். அசோகா என்பவர்,  பி.இ.எம்.எல்- ல் நடைபெறும் ஊழலை தனது மேல் அதிகாரியான  சேர்மன் வி.ஆர்.எஸ். நடராஜனுக்கு ஒரு அறிக்கையாக தயாரித்து அனுப்பினார். அதில் முக்கியமான குற்றச்சாட்டு அரசின் விதிமுறைகளை மீறி, உற்பத்தியாளரான Czech Reoublic நாட்டில் உள்ள "MS Tatra" நிற்வனத்திடமிருந்து டிரக்கை வாங்காமல், Tatra Spiox UK  என்ற நிற்வனத்திடமிருந்து வாங்கப்படுவது ஆகும்.  இந்த அறிக்கையின் நகலை, கர்நாடகாவை சார்ந்த காங்கிரஸ் எம்.பி. டாக்டர். அனுமந்தப்பா -வுக்கு அசோகா கொடுத்தார்.  அனுமந்தப்பா கர்நாடக " All India Federation SC / ST,  and Minorities Employees Welfare Association" பிரஸிடெண்ட் ஆவார். அனுமந்தப்பா இந்த அறிக்கையின் நகலை ஜனாதிபதி, பிரதமர், சோனியா காந்தி, பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி,  குலாம்நபி ஆஸாத் ஆகியோருக்கு உடனடி நடவடிக்கைக்காக  ஆகஸ்ட் 2009 -ல் அனுப்பினார். ஆனால் அதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவிலை.  குலாம் நபி ஆஸாத் மட்டும் அந்த புகாரை ஏ.கே. அந்தோணிக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளார்.  அந்தோணி எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை.

பிரச்சனை பெரிதாகி, பாராளுமன்றத்தில் எதிரொலித்ததால்  ஏ.கே. அந்தோணி டாட்ரா டிரக் கொள்முதல் பற்றி சி.பி.ஐ விசாரணைக்கு உத்தவிட்டார். அத்துடன்  பிரதமருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை லீக் செய்தது யார் என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க, ஐ.பி க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த டாட்ரா டிரக்  ஐரோப்பிய சந்தையில்  சுமார் 40 லட்சம் ரூபாயிலிருந்து 50 லட்சம் ரூபாய்க்கு கிடைக்கிறது. ஆனால் பி.இ.எம். எல் ராணுவத்திற்கு இரட்டிப்பு விலையில் அதாவது 80 லட்சம் ரூபாய்க்கு விற்கிறது.

இதுவரை வாங்கப்பட்ட டாட்ரா டிரக்குகளின் எண்ணிக்கை 7,000 ஆகும்.

மீதி தகவல் அடுத்த பதிவில்.............
No comments:

Post a Comment