Monday, June 18, 2012

சூரிய ஒளி மின்சாரம்-பகுதி.10

இதுவரை பதிவிட்ட 9 பகுதிகளை படித்ததின் மூலம், சோலார் மின்சாரம் என்றால் என்ன? அது எப்படி நமக்கு தேவைப்படும் 230V ஏ.சி மின்சாரமாக மாற்றப்படுகிறது, அதற்கு என்னென்ன உபகரணங்கள் தேவை, அவற்றின் வேலை என்ன என்பதை புரிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். இறுதியாக சில விஷயங்கள்.

1. இது நீண்ட கால முதலீடு.

2. இந்த சிஸ்டத்தில் பயன்படுத்தப்படும் பொருட்களில் பி.வி. மாடுல்ஸ் எனப்படும் சோலார் பேனல்களின் ஆயுட்காலம் 25 ஆண்டுகளுக்கு மேல். 15 ஆண்டுகளுக்கு 90% செயல்படும் திறனுக்கும்,20 ஆண்டுகாலம் வரை 80% செயல் திறனுக்கும் உத்திரவாதம் உண்டு.

3. அடுத்து சார்ஜ் கண்டிரோலர். இதற்கும் சில வருட கால உத்திரவாதம் உண்டு. ஸ்டாண்டார்டு கம்பெனி தயாரிப்பாக இருந்தால் சர்வீஸ் சென்டரில் ரிப்பேர் செய்யும் வசதி உண்டு.அல்லது புதிதாக வாங்கி மாட்டவேண்டும். இது முற்றிலும் எலெக்ட்ரானிக்ஸ் சாதனம்.

4. இன்வெர்ட்டர். இது எளிதில் பழுதாகாது. அப்படி ஆனால் சர்வீஸ் சென்டரில் கொடுத்து சரி செய்துகொள்ளலாம்.

5. பாட்டரி. இதற்கும் 2-3 வருட உத்திரவாதம் உண்டு. பொதுவாக 4-5 ஆண்டுகள் உழைக்கும்(என் அனுபவத்தில்). அதற்கு பின் புது பாட்டரியை இணைக்க வேண்டும்.

6. 1KW மின் உற்பத்தி திறன் கொண்ட சோலார் சிஸ்டத்தை அமைக்க அரசின் அங்கீகாரம் பெற்ற டீலர்களின் அதிக பட்ச ரேட் ரூ.2,50,000/- இதில் மானிய தொகை ரூ. 81,000/- ஐ கழித்தால் நாம் செலவு செய்ய வேண்டிய தொகை ரூ.1,70,000/- ஆகும். டீலர்கள் கூறும் ரேட் பேரத்திற்கு உட்பட்டது.

7. கடன் வசதி தேவை என்றால் வங்கியை அனுகலாம்.

8. இந்த சோலார் சிஸ்டம் நாள் 1-க்கு 5000W அல்லது 5 யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடியது.

9. நீங்கள் அமைக்க விரும்பினால் "Tamil Nadu Energy Development Agency" தொடர்பு கொண்டு தகவல் பெறலாம். அவர்களின் வெப்சைட்டை பார்வையிட இதை கிளிக் செய்யவும்.

10. நான் ஏற்கனவே அரசின் அங்கீகாரம் பெற்ற உற்பத்தியாளர்களின் பட்டியலை முன்பே கொடுத்துள்ளேன். அதில் லாண்டர்ன் விளக்கு, சோலார் தெரு விளக்கு, வீட்டிற்கான சிறிய அளவிலான சிஸ்டம், சோலார் வாட்டர் ஹீட்டர், 1KW சோலார் பவர் சிஸ்டம் ஆகிய அனைத்துக்குமாக சேர்த்து கொடுக்கப்பட்டுள்ள பட்டியல் ஆகும். இந்த பட்டியலில் 4-வது காலத்தில் "PRODUCT" என குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் எந்ததெந்த  உற்பத்தியாளர்களுடைய 4-வது காலத்தில் "Solar Photovoltaic Systems"  என குறிப்பிடப்பட்டுள்ளதோ, அவர்கள் மட்டுமே 1KW சிஸ்டத்தை அமைக்க அனுமதி பெற்றவர்கள். வரிசை எண்:57,58,67-73-ல் குறிப்பிடப்பட்டவர்கள(9 நபர்கள்) மட்டுமே.

அடுத்த பதிவில் உங்களுடைய சந்தேகங்களையும் அதற்கான விளக்கத்தையும்  தொகுத்து  போடலாம் என நினைக்கிறேன். எனவே உங்கள் சந்தேகங்களை என்னுடைய இ-மெயில் முகவரிக்கு எழுதுங்கள்.

thiravianatarajan@gmail.com

மீண்டும் சந்திப்போம்.................

3 comments:

 1. enakku charga control 5amp vendum vilai enna?

  ReplyDelete
 2. முந்தைய பதிவில் ஏற்கனவே பின்னூட்டம் இட்டிருந்தீர்கள். அதற்கு பதில் சொல்லியிருக்கிறேன். 5 ஆம்பியர் என்றால் எத்தனை வோல்ட்? இன்வெர்ட்டர் எத்தனை வோல்ட் பாட்டரி இன்புட்?

  12வோல்ட் என்றால் 1000 -2000 ரூபாய் இருக்கும். நீங்கள் எந்த ஊர்? அங்கேயே சோலார் டீலர் இருந்தால் விசாரிக்கவும்.

  ReplyDelete
 3. இந்த கட்டுரை மார்ச் மாதம் விகடன் இல் பிரசுரமாகி இருந்தது... நம்ம என்னதான் செய்யுறது???

  "நல்லதுக்குக் காலம் இல்லை என்பார்களே... அப்படித்தான் ஒரு முன்மாதிரிப் பள்ளிக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது!
  திருவண்ணாமலை மாவட்டம் வேடியப்பனூரில் அருணாச்சலா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி கடந்த 1999-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. ஏழை மாணவர்களுக்காக டிரஸ்ட் மூலம் எல்.கே.ஜி. முதல் ஐந்தாம் வகுப்பு வரை இலவசக் கல்வி இங்கு வழங்கப்படுகிறது. கடந்த ஆட்சியில், மின்சாரத் தட்டுப்பாடு ஏற்பட்டதுமே, இந்தப்பள்ளி ஆக்கபூர்வமான காரியத்தில் இறங்கியது. இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே சூரிய மின்சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து, பள்ளித் தேவைக்குப் பயன்படுத்தத் தொடங் கினார்கள். இதன்மூலம், ஆண்டுக்கு சராசரியாக சுமார் 4 கே.வி. மின்சாரம் சேமித்தார்கள். 'சூரியஒளி மூலம் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளும் கல்லூரிகளும் தங்களுக்குத் தேவையான மின்சாரத்தைத் தாங்களே தயாரித்துக் கொண்டால், தமிழகத்தின் மின் தேவை யைக் கணிசமாகக் குறைக்கலாம்’ என்று பள்ளியின் நிர்வாகி மதன்மோகன் பல நிறுவ னங்களுக்கும் ஆலோசனை சொல்லி வந்தார்.
  இந்தப் பள்ளிக்கு விருது கொடுத்துக் கௌரவிக்க வேண்டிய மின்சார வாரியம், அபராதம் கட்டச் சொல்லி அதிர்ச்சி கொடுத்திருக்கிறது என்பதுதான் வேதனை.
  பள்ளி நிர்வாகியிடம் பேசினோம். ''இந்தப் பள்ளியில் கடந்த 2009 செப்டம்பரில் சுமார் எட்டு லட்சம் ரூபாய் செலவில் சூரிய மின்உற்பத்திக் கருவி பொருத்தப்பட்டது. அப்போதே பள்ளி நிர்வாகத்தின் சார்பில், 'எங்கள் பள்ளிக்கு சூரிய ஒளி மூலம் பெறப்படும் மின்சாரத்தைத்தான் உப யோகிக்கிறோம். வாரியத்தின் மின்சாரத்தைப் பயன்படுத்தவில்லை’ என்று மின்சார அலுவலகத்துக்குக் கடிதம் கொடுத்து விட்டோம். எங்கள் பள்ளிக்குத் தேவையான மின்சாரத்தை நாங்களே உற்பத்தி செய்து பயன்படுத்தி வந்தோம். அதனால் மின்துறைக்கு மினிமம் கட்டணத்தை மட்டுமே செலுத்தி வந்தோம்.
  இடையில் சில நாட்கள் சூரிய மின் உற்பத்தி இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதால், அரசு வழங்கும் மின்சாரத்தை உபயோகப்படுத்திக் கொண்டோம். அதனால், அந்த மாதம் மின்சார மீட்டர் ஓடியது.
  அதனைக் கணக்கிட்ட மின்துறையினர், 'நீங்கள் தொடர்ந்து மின்சாரத்தைப் பயன்படுத்தி
  இருக்கிறீர்கள். அதை மறைத்துள்ளீர்கள். உங்களது மீட்டர் பழுதாகி உள்ளது என்பதால் கடைசியாக வந்திருக்கும் அதிகபட்ச மின் அளவுப்படி, 10 ஆயிரம் பணம் செலுத்த வேண்டும். இல்லை என்றால் உங்களுடைய மின்இணைப்பு துண்டிக்கப்படும்’ என்று நோட்டீஸ் கொடுத்து உள்ளார்கள். அதற்கு பள்ளி சார்பில் முழுமையான விளக்கக் கடிதம் கொடுத்தும்... அதை ஏற்றுக்கொள்ளாமல் பணம் செலுத்ததற்காக பள்ளியின் மின் சப்ளையைத் துண்டித்து விட்டார்கள்.
  தமிழ்நாடே மின் பற்றாக்குறையால் தத்தளிக்கும் நிலையில், அதற்கு மாற்றாக நாங்கள் சூரிய ஒளி மின்சாரம் பெற முனைந்தது தவறா? நாங்கள் வெளி நாட்டில் இருந்து நிதிஉதவி பெற்றுத்தான் இந்தப் பள்ளியை நடத்துகிறோம். நாங்கள் உபயோகிக்காத மின்சாரத்துக்கு பணம் செலுத்தச் சொன்னால், எங்களால் எப்படி செலுத்த முடியும்?
  மின் துறையால் வழங்கப்பட்ட மின் மீட்டர் பழுது என்கிறார்கள். உண்மையில் பழுது என்றால், அவர்கள் மின் அளவுக் குறிப்பு பார்க்க வரும்போதே தெரிந்திருக்காதா? அப்போதே அதை அவர்கள் மாற்றி இருக்கலாமே? நாங்கள் சூரிய ஒளி கொண்டு, ஒரு நாளைக்கு சுமார் 12,600 வாட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்கிறோம். எங்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மட்டும் சுமார் 4,000 ரூபாய் வரை மின்சாரக் கட்டணம் வந்து கொண்டிருந்தது. அது முழுமையாகக் குறைந்துவிட்டது.
  அந்தப் பணத்தை வைத்து, எங்கள் பள்ளிக் குழந்தைகளின் பல தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும் என்ற சந்தோஷத்தில் இருந்தோம். மேலும், சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பதால், அரசிடம் மானியம் வாங்கலாம் என்றும் முயற்சித்து வருகிறோம். இந்த நிலையில் எங்களுக்கு அபராதக் கட்டணம் விதிக்கப்பட்டதும், சப்ளை துண்டிக்கப்பட்டதும் மிகப்பெரிய வருத்தம்'' என்று ஆதங்கத்தோடு சொன்னார்.
  திருவண்ணாமலை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் வெங்கட்ராமனிடம் இதுபற்றிக் கேட்டோம். ''வாரியத்தின் மின்சாரத்தையும் அவர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள். அதற்கான பணம் செலுத்தவில்லை என்பதால், இணைப்பைத் துண்டித்து இருக்கிறோம். இதுபற்றி, சென்னையில் இருந்து விவரம் கேட்டு வாங்கி உள்ளனர்'' என்றார் மேலோட்டமாக.
  மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ் வநாதனிடம் பேசினோம். ''அபராதம் விதிக்கும் அளவுக்கு மின்வாரிய அதிகாரிகள் சென்றிருக்க வேண்டாம். எச்சரித்து இருக்கலாம். இதுபற்றி நான் விசாரிக்கிறேன்'' என்றார்.
  பாராட்ட மனம் இல்லை என்றாலும், பாதகம் செய்யாமல் இருக்கலாமே!"

  ReplyDelete