Tuesday, July 31, 2012

மின்சாரம்-பகுதி.5

எலெக்ட்ரிக்கல் வயர்களின் முனையில் அதன் இன்சுலேஷனை நீக்கி செப்பு கம்பிகளை எடுத்து சுவிட்ச், சாக்கெட் போன்றவற்றில் இணைக்கும் பொழுது, ஒரு வயரின் ஏதாவது ஒரு கம்பி மற்ற வயரின் இணைப்பை தொட்டுவிடும் வகையில் இருக்கக்ககூடாது. அப்படி இருந்தால் ஷார்ட் சர்க்கியூட் ஆகிவிடும். ஒவ்வொறு வயரிலும் மெல்லிய செப்பு கம்பிகள் பல இருக்கும். இவற்றின் எண்ணிக்கையும் கனமும் அந்த வயரின் கெப்பாசிட்டியை (மின் கடத்தும் திறன்) பொருத்து மாறுபடும். அதனால் எப்பொழுதும் வயரின் நுனியில் இன்சுலேஷனை நீக்கியவுடன், செப்பு கம்பிகளை நன்றாக முறுக்கி(TWIST) விட வேண்டும். படத்தை பார்க்கவும்.


இனி வீடு, கட்டிடங்கள் இவற்றில் எலெக்ட்ரிக்கல் வயரிங் எப்படி செய்யப்படுகிறது என்பதை விரிவாக பார்க்கலாம். வீட்டில் பல அறைகள் இருக்கும். ஒவ்வொரு அறையின் வயரிங்கும் தனித்தனியாக செய்யப்படும். பின் அனைத்து அறைகளின் வ்யரிங்குகளுக்கு  மின் இணைப்பு கிடைக்க- பேஸ், நியூட்ரல், எர்த் ஆகியவை ஒவ்வொரு அறைக்கும் மெயின் போர்டிலிருந்து கொண்டு செல்லப்படும். இப்பொழுது காங்கிரீட் ரூஃப் போடப்படுவதால் வயரிங் வெளியே தெரியாத வகையில் சுவர் மற்றும் ரூஃப் இவற்றின் உட்புறம் பைப் பதிக்கப்பட்டு வயரிங் செய்யப்படுகிறது. வீடு கட்டும் போதுதான் இந்த முறையில் வயரிங் செய்ய முடியும். இது கன்சீல்டு வயரிங்(CONCEALED WIRING) என சொல்லப்படும். கட்டிடம் கட்டி முடித்த பின்னர், சுவர் மற்றும் ரூஃப்-ல் வெளிப்புறமாக பைப் மாட்டி செய்யப்படும் வயரிங் "ஓபன் வயரிங்" ஆகும். கீழே உள்ள படத்தில்(பட்ம்.1) கன்சீல்டு வயரிங் முறையில், வீட்டின் மூன்று அறைகளில் உள்ள சுவிட்ச் போர்டுக்கு மின் இணைப்பு கிடைக்க மெயின் போர்டிலிருந்து எவ்விதம் தனித்தனியாக பி.வி.சி பைப் போடப்பட்டுள்ளது என்பதை விளக்குகிறது.

படம்.1

இவ்விதம் மெயின் போர்டிலிருந்து தனித்தனியாக ஒவ்வொரு அறைக்கும்(சர்க்கியூட்)  கொண்டு செல்லப்படும் பேஸ், நியூட்ரல், எர்த் ஆகிய மூன்று வயர்கள் அடங்கிய தொகுப்பு  "ரன் ஆஃப்(RUN OFF)" என சொல்லப்படும்.

கீழே உள்ள படம் (படம்.2) ஒரு அறையில் பொருத்த வேண்டிய இரண்டு டியூப் லைட்டுகள், ஒரு பேன், ஒரு சாதா பல்பு இவற்றிற்கான வயரிங்கை செய்ய ரூஃப்-ல் எப்படி பைப் போடவேண்டும் என்பதை காட்டுகிறது.  இவ்வாறு போடப்படும் பைப்புகளின் நுனியில் ஒரு பி.வி.சி பெண்ட்-ஐ போட்டு சுவற்றில் விட்டு விட வேண்டும். இதை இந்த படத்தில் காட்ட முடியாது என்பதால் படம் 4, 5-ல் காட்டப்பட்டுள்ளது.

படம்.2

 இப்பொழுது கீழே உள்ள படத்தை(படம்.3) பாருங்கள். மேலே குறிப்பிட்ட படம், அறையில் பொருத்த வேண்டிய இரண்டு டியூப் லைட்டுகள், ஒரு சீலிங் ஃபேன், ஒரு சாதா பல்பு ஆகியற்றிற்கான வயரிங்கை காட்டுகிறது. இந்த வயர்கள் எல்லாம் சீலிங்கில் போடப்பட்டுள்ள பி.வி.சி பைப்-ன் உட்புறம் செல்லும். இவற்றின் நுனிகள் பைப்பின் நுனியில் மாட்டப்பட்டுள்ள பெண்ட் வழியாக சுவற்றில் பதிக்கப்பட்டுள்ள பைப் வழியாக சுவருக்குள் வரும். அந்தந்த லைட், பேன் பக்கத்தில் பதிக்கப்பட்டுள்ள  பிவி.சி ஜங்ஷன் பாக்ஸ் வழியா வெளியே வந்து, அதன் மீது பொருத்தப்பட்டுள்ள சீலிங் ரோஸ்-ல் இணைக்கப்படும். அதிலிருந்து டியூப்லைட், ஃபேன் ஆகியவற்றிற்கு  வெளிப்புறமாக இணைப்பு கொடுக்கப்படும். சுவிட்ச் போர்டிலிருந்து வரும் நியூட்ரல் வயர்(கருப்பு நிற வயர்)  4-வே ஜங்ஷன் பாக்ஸ்-க்குள்ள் வந்தவுடன் அது நான்கு கருப்பு வயர்களுடன் இணைக்கப்பட்டு டியூப் லைட், ஃபேன், லை ஆகிய வற்றிற்கு செல்கிறது. அதாவது இந்த வயர்கள் சுவிட்ச் போர்டிலிருந்து வரும் நியூட்ரல் வயருடன் ஜாயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு செய்யும் பொழுது  இணைக்கப்பட வேண்டிய வயர்களின் நுனியில் உள்ள பி.வி.சி ஸ்லீவ் நீக்கப்பட்டு செப்பு கம்பிகள் ஒன்றாக நன்கு முறுக்கப்படும். அந்த பகுதி இன்சுலேஷன் இல்லாமல் இருக்கும். எனவே அப்பகுதியை பி.வி.சி. இன்சுலேஷன் டேப் மூலம் சுற்றிவிட வேண்டும். இவ்விதம் ஒரு நியூட்ரலில் இருந்து பல பாய்ண்ட்களுக்கு(லைட், டியூப் போன்றவைகள்)  நியூட்ரல் எடுத்தால் அது, பொது நியூட்ரல் (Common Neutral) என சொல்லப்படும்.

படம்.3

படம்.4-ல் சுவிட்சு போர்டு உள்ள சுவரும் எதிர்புறத்திலுள்ள சுவரும், ரூஃப்-ம் காட்டப்பட்டுள்ளது. அந்த அறைக்கு மெயின் சப்ளையை கொண்டு வரக்கூடிய பைப் ரூஃப் வழியாக பெண்டுடன் மாட்டப்பட்டு, பைப் மூலம் சுவிட்சு போர்டுடன் இணைக்கப்பட்டுள்ளது.
படம்.4

உங்களுக்கு புரியும் வகையில் சீலிங்கில் போடப்படும் பைப்புடன் பெண்ட் இணைக்கப்பட்டு சுவருக்குள் கொண்டுவரப்படுகிறது என்பதை விளக்கும் வகையில் கீழே படம் தரப்பட்டுள்ளது. வயரிங்-க்கு உபயோகிக்கும் பைப் வளையும் தன்மை கொண்டதல்ல. இதை ரிஜிட் பைப் (REGID PIPE) என சொல்லுவார்கள்.


படம்.5
அடுத்த பதிவில் சந்திப்போம்...........


Monday, July 30, 2012

சமையலறை கழிவில் இருந்து சமையல் எரிவாயு.1

நாம் தினமும் வெளியே தூக்கியெறியும் சமயல் கழிவுகளாகிய, அழுகிய காய், பழம், பழத்தொலி, சமைத்த உணவு பொருட்கள் போன்றவற்றிலிருந்து நமக்கு தேவையான சமையல் எரிவாயுவை தயாரிக்க முடியும். இன்னும் ஒரு சில மாதத்தில் ஆயில் கம்பெனிகள் முற்றிலுமாக எரிவாயுவிறகு வழங்கப்பட்டு வரும் மானியத்தை நிறுத்த போகின்றன. இதனால் நாம் உபயோகிக்கும் 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டரின் விலை சுமார் ரூபாய்.850-ஐ தொடும். அதாவது இரட்டிப்பு விலையாகி விடும்.

இந்த சூழ்நிலையில் வீட்டில் நாமே கேஸை உற்பத்தி செய்வது நல்லது என்பதால் நீங்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த பதிவு. சமையலறை கழிவிலிருந்து எரிவாயுவை உற்பத்தி செய்ய பயன்படும் சாதனத்தின் பெயர் " பயோ கேஸ் சிஸ்டம்(ANAEROBIC DIGESTER SYSTEM)"  ஆகும். கீழே உள்ள படத்தை பாருங்கள். 

 சிஸ்டம், ஆன் ஏரோபிக் சிஸ்டம் என கூறுவதால் இது ஏதோ பெரிய கருவி என்று நினைத்துவிடாதீர்கள். ரெம்ப சிம்பிளாக சொல்லப்போனால், முன்பெல்லாம் உடுப்பி ஹோட்டலில் காப்பியை தம்ளரில் ஊற்றி அதை வட்டகை கப் கொண்டு மூடி, அதை தலைகீழாக்கி கொண்டு வந்து டேபிளில் வைப்பார்கள். வட்டகை கப் மேல் நோக்கி இருக்கும். தம்ளர் தலைகீழாக இருக்கும். அதைப்போலவே இதில் பெரிய பிளாஸ்டிக் தொட்டியினுள் சிறிய தொட்டி ஒன்று தலைகீழாக கவிழ்த்தி வைக்கப்பட்டிருக்கும்.  சிறிய தொட்டியின் மேல் பக்கத்தில் நடுவில் ஒரு வால்வு பொருத்தப்பட்ட பைப் மாட்டப்பட்டிருக்கும். பெரிய தொட்டியின் பக்கவாட்டில் மேல் பக்கம் ஒரு பைப், எதிர் பக்கத்தில்  கீழ் புறத்தில் புனலுடன் கூடிய நீளமான பைப் என இரு பைப்புகள் பொருத்தப்பட்டிருக்கும்.  அவ்வளவுதான்.  கீழே உளள படத்தை பாருங்கள்.



சமயலறை கழிவுகளை  3/4 அங்குல சிறு சிறு துண்டுகளாக்கி தண்ணீருடன் கலந்து "A" பைப்பினுள் ஊற்ற வேண்டும். இவ்விதம் ஊற்றப்படும் கழிவுகளிலிருந்து பாக்டீரியாக்கள் மூலம் மீதேன்(CH4) மற்றும் கார்பன்-டை ஆக்சைடு(CO2) ஆகிய வாயுக்கள் உற்பத்தியாகி உட்புறமுள்ள தொட்டியின் மேல்பகுதியில் தங்கும். இந்த தொட்டி "கேஸ் ஹோல்டர்" என சொல்லப்படும். இவ்விதம் கழிவிலிருந்து எரி வாயு உற்பத்தியாக 48 மணி நேரம் ஆகும். தினந்தோறும் தண்ணீருடன் சேர்த்து கழிவை இதனுள் போடுவதால் தொடர்ச்சியாக எரிவாயு உற்பத்தியாகிக்கொண்டே இருக்கும். மக்கிப்போன கழிவு கூழின் மேல்மட்டத்தில் எரிவாயு  தொடர்ந்து சென்று தங்குவதால் அங்கு அழுத்தம் ஏற்படும். இந்த அழுத்தம், உட்புற தொட்டியை மேல்புறமாக தூக்கும் அளவிற்கு உயரும் பொழுது, தொட்டி மேல் நோக்கி உயரும். இவ்விதம் தொட்டி உயரும் பொழுது எரிவாயு தங்க இடம் கிடைக்கும். 

கேஸ் அடுப்பு எரிய தேவையான அளவுக்கு எரிவாயு அழுத்ததுடன் கிடைக்க இந்த தொட்டியின் மீது கல்லை வைக்கலாம்.  இந்த தொட்டியின் மேல் பக்கத்திலுள்ள வால்வுடன் (C) தேவையான அளவிற்கு வளையும் தன்மை கொண்ட கேஸ் டியூப்பை இணைக்க வேண்டும். அதன் மறு நுனியை அடுப்புடன் இணைக்க வேண்டும். இனி தொட்டியின் மீதுள்ள வால்வை திறந்தால், எரி வாயு டியூப் வழியாக அடுப்புக்கு செல்லும். கேஸ் அடுப்பை உபயோகப்படுத்துவது போல இனி உபயோகிக்கலாம்.

தொட்டியினுள் இருக்கும் கூழான கழிவின் அளவு வெளிப்புறத்திலுள்ள தொட்டியில் பொருத்தப்பட்டுள்ள அவுட் லெட் பைப்பின்(B) மட்டத்தை அடைந்தவுடன், உபரி பால்/கூழ்(SLURRY) அந்த குழாய் வழியாக வெளியே வர ஆரம்பிக்கும். இதில் உரச்சத்து இருப்ப்பதால் இதை செடி, மரங்களுக்கு ஊற்றலாம்.

நமக்கு மூன்று விதத்தில் இதனால் லாபம்.

1. குப்பையை போட இடந்தேடி அலைய வேண்டாம்.
2. வீட்டு சமையலுக்கு தேவையான எரிவாயு பைசா செலவில்லாமல் கிடைக்கிறது. சிலிண்டர் வெடித்து விடுமோ என்ற பயம் இல்லை.
3. வீட்டிலுள்ள செடி, மரம் இவற்றிற்கு இலவசமாக உரம் கிடைக்கிறது.

எவ்வளவு எரிவாயு கிடைக்கும், இந்த சிஸ்டத்தை அமைக்க எவ்வளவு இடம் வேண்டும் என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.


Friday, July 27, 2012

மின்சாரம்-பகுதி.4

இந்த பதிவில் முதலில் வீட்டில் பயன்படுத்தப்படும் மின்சார பொருட்களை பற்றி பார்க்கலாம். பல்பை பொருத்துவதற்கு கோல்டர்(HOLDER) பயன்படுகிறது. இது பேட்டன் ஹோல்டர், பேட்டன் ஆங்கிள் ஹோல்டர், பாயோனெட் ஹோல்டர் என மூன்று வகைப்படும். படத்தை பார்க்கவும்.

 பேட்டன் ஹோல்டர்


பேட்டன் ஆங்கிள் ஹோல்டர்

பாயோனெட் ஹோல்டர்

அடுத்தபடியாக சீலிங்ரோஸ். இது வயரிங் பாயிண்டிலிருந்து சீலிங் பேன், சீலிங்கில் தொங்க விடப்படும் லைட்டுகள், டியூப் லைட் ஆகியவற்றிற்கு மின் இணைப்பை தர உபயோகப்படுத்தப்படும் சாதனமாகும். படம் கீழே தரப்பட்டுள்ளது.

சீலிங் ரோஸ்

3 பின் பிளக் சாக்கெட், 2-பின் பிளக் சாக்கெட்( இவற்றை நாம் பேச்சு வழக்கில் பிளக் பாய்ண்ட் என சொல்லுவோம்), 3-பின் பிளக் டாப், 2 பின் பிளக் டாப்(இவற்றை பிளக் என சொல்லுவோம்) இவையெல்லாம் உங்களுக்கு தெரிந்தவைகளே. படம் போட்டு காட்ட வேண்டிய அவசியமில்லை.

இனி நாம் உபயோகப்படுத்தும் "EXTENSION PLUG BOX"  அசெம்பிள் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம். நாம் எல்லோரும் கம்பியூட்டருக்கு இந்த பாக்ஸ்-ஐ பயன் படுத்துவோம்.


நாம் இப்பொழுது பார்க்கப்போவது ஒரு இண்டிகேட்டர், இரண்டு சுவிட்ச்கள், இரண்டு பிளக்குகள் உள்ள  பாக்ஸ் ஆகும்.

தேவையான பொருட்கள்.
1. கேங் பாக்ஸ் (for 3 switches + 2 three pin sockets. Back side covered) = 1
2. இண்டிகேட்டர் = 1
3. 5ஆம்பியர் சுவிட்ச் = 2
4. 3 கோர் வயர் = 5 மீட்டர்
5. 5 ஆம்பியர் 3 பின் டாப் =1
6. 5 ஆம்பியர் 3பின் சாக்கெட்.

கீழே காட்டியுள்ள படத்தில் காட்டியுள்ளபடி கேங் பாக்ஸ்-ல் இண்டிகேட்டர்,  சுவிட்ச், சாக்கெட் எல்லாவற்றையும் மாட்டவும்.

3 கோர் வயரின் ஒரு நுனியில் 1 அடி நீளத்திற்கு மேல் சிலீவை (SLEEVE) நீக்கி விடவும். இப்பொழுது 1 அடி நீளத்திற்கு உள்ளே இருக்கும் 3 வயர்களும் தனித்தனியாக இருக்கும். இவற்றின் நிறம் சிகப்பு, கருப்பு, பச்சை என இருக்கும். சிகப்பு கலர் வயரை பேஸ்-க்கும், கருப்பை நியூட்ரலுக்கும், பச்சையை எர்த்-க்கும் உபயோகிக்கவும். கீழே உள்ள படத்தில் காட்டிய்படி சுவிட்ச், சாக்கெட், இண்டிகேட்டர் ஆகியவற்றை இந்த வயரால் இணைக்கவும்.

இந்த கேங் பாக்ஸ்-ல் நீங்கள் செய்துள்ள வயரிங் சரியாக செய்யப்பட்டுள்ளதா என்பதை சரி பார்க்கவும். அதன் பின் இந்த பாக்சின் பின் புற மூடியை பொருத்தவும். 3 கோர் வயரின் மறு நுனியில்  சுமார் 2 அங்குலத்திற்கு வெளிப்புற சிலீவை நீக்கி, 3 வயர்களையும் வெளியே எடுக்கவும். 3பின் டாப்பின்  மேல்புறத்தில் உள்ள ஸ்குருவை கழற்றுங்கள். இப்பொழுது பிளக்கின் மூடி தனியாக வந்துவிடும்.  படத்தில் காட்டியபடி இணைப்பை கொடுக்கவும்.
இப்பொழுது EXTENTION POWER BOX ரெடியாகிவிட்டது.

குறிப்பு:  வயரின் மீதுள்ள இன்சுலேஷன் (பிளாஸ்டிக்) -ஐ நீக்கி செப்பு கம்ம்பியை  நன்றாக முறுக்கிய( TWIST) பின்பே அதை இணைக்க வேண்டும்.

இப்பொழுது இந்த பாக்ஸ்-ன் பிளக் டாப்பை  வீட்டிலுள்ள பிளக்கில் மாட்டினால், போர்டுக்கு மின் சப்ளை வரும். போர்டிலுள்ள இண்டிகேட்டர் லைட்  எரியும். முதல் சுவிட்ச்சை ஆன் செய்தால் முதல் பிளக்கிற்கு மின்சார சப்ளை கிடைக்கும். அதை போலவே இரண்டாவது பிளக்கிற்கும்  சப்ளை வரும்.

இனி இந்த பாக்ஸ் எப்படு செயல்படுகிறது என்பதை பார்க்கலாம். பிளக் டாப்பின் எர்த் முனை(பச்சை நிற வயர்) பாக்ஸில் உள்ள பிளக் சாக்கெட்களின் எர்த் முனைகளுடன் நேரடியாக் இணைக்கப்பட்டுள்ளது. அதைப்போலவே  பிளக் டாப்பின் நியூட்ரல் முனை(கருப்பு நிற வயர்) பிளக்குகளின் நியூட்ரல் முனைகளுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. லைன் அல்லது பேஸ் வயர்(சிகப்பு நிற வயர்) பிளக் டாப்பில் இருந்து பாக்ஸின் சுவிட்ச்களின் கீழ் பக்கமுள்ள கனெக்டரில் இணைக்கப்பட்டுள்ளது.

இப்பொழுது நீங்கள் பிளக் டாப்பை வீட்டிலுள்ள பிளக்கில் இணைக்கும் பொழுது எர்த், நியூட்ரல் ஆகியவற்றின் இணைப்பு நேரடியாக பிளக் சாக்கெட்டிற்கு கிடைக்கும்.  ஆனால் பேஸ் அல்லது லைன் சப்ளை பிளக் சாக்கெட்டுக்கு கிடைக்காது. அது சுவிட்ச்களின் கீழ் பக்க இணைப்புடன் நின்று விடும். நீங்கள் சுவிட்ச்சை ஆன் செய்தால், சுவிட்ச்சின் இரு முனைகளுக்கும்  தொடர்பு கிடைக்கும். அப்பொழுது சுவிச்சின் மேல் முனை வழியாக பேஸ் பிளக் சாக்கெட்டிற்கு வரும். சுவிட்ச்சை ஆஃப் செய்து விட்டால் சுவிட்ச் இணைப்பு துண்டிக்கப்பட்டு, பிளக்கிற்கு சப்ளை வருவது நின்று விடும்.

இந்த முறையில்   நீங்கள் உங்கள் தேவைக்கு ஏற்ப பல பிளக்குகள் கொண்ட பாக்ஸ்-ஐ தயார் செய்யலாம்.

இதே பாக்சில் பியூஸ் யூனிட்டை இணைக்க வேண்டும் என்றால் எளிதாக செய்யலாம். பியூஸ் யூனிட், சுவிட்ச்சு, இண்டிகேட்டர் எல்லாமே ஒரே அளவு கொண்டைவைதான். எனவே  4 சுவிட்ச் + 2 3பின் சாக்கெட்டுக்கான கேங் பாக்ஸை வாங்கினால் அதிகப்படியாக இந்த பியூஸ் யூனிட்டை இணைக்க முடியும். அவ்வாறு செய்யும் பொழுது, முதலில் பியூஸ் யூனிட் அதன் பின் இண்டிகேட்டர் என பொறுத்த வேண்டும். 3கோர் வயரில் உள்ள சிகப்பு வயரை  பியூஸ் காரியரின் ஒரு முனையில் இணைக்க வேண்டும். மறுமுனையை இண்டிகேட்டரில் இணைக்கவேண்டும்.

இப்பொழுது பேஸ் சப்ளையானது பியூஸ் யூனிட்டினுள் சென்று அதில் நாம் மாட்டியிருக்கும் பியூஸ் வயர் வழியாக மறு முனையை அடைந்து இண்டிகேட்டர் மற்றும் சுவிச்சு-களுக்கு செல்லும். பாக்ஸிலோ அல்லது இந்த பாக்ஸில் உள்ள பிளக்குடன் இணைக்கப்பட்ட சாதனங்களிலோ ஏதாவது ஷார்ட் சர்க்குயூட் இருந்தால் பியூஸ் யூனிட்டில் பியூஸ் போய் விடும்.

மீண்டும் சந்திப்போம்..................


Tuesday, July 24, 2012

மின்சாரம்-பகுதி.3

முந்தைய பதிவில் காட்டப்பட்ட அதே படம் ஒரே ஒரு மாற்றத்துடன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நியூட்ரல் லைன் இணைப்பிலாமல் உள்ளது. இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது என்பதை காட்ட பெருக்கல் அடையாளம் போடப்பட்டுள்ளது. இப்பொழுது என்ன நடக்கும்? 


மின் சப்ளையின் பேஸ் முனை வழியாக பல்புக்குள் சென்ற பேஸ், சப்ளையின் (பிளக் பாய்ண்ட் என வைத்துக்கொள்ளலாம்) நியூட்ட்ரல் முனைக்கு வரும். ஆனால் அந்த முனையின் நியூட்ரல் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், நியூட்ரல் கிடைக்காமல் அந்த நியூட்ரல் முனையிலும் பேஸ் சப்ளை வரும். இதை ரிட்டர்ன் சப்ளை (RETURN SUPPLY) என குறிப்பிடுவார்கள். மீட்டர் போர்டிலிருந்து சுவிட்சு போர்டு வரை எங்கு நியூட்ரல் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தாலும் இந்த ரிட்டர்ன் சப்ளை ஏற்படும்.

இனி மின்சார வேலை செய்வதற்கு தேவையான கருவிகள் பற்றி பார்க்கலாம். (1) லைன் டெஸ்டர் (2) கட்டிங் பிளையர் (3)  வயர் கட்டர் (4) ஸ்குரு டிரைவர் (5) இன்ஸ்சுலேஷன் டேப்.

லைன் டெஸ்டர்:  


 இதன் நுனிபகுதி ஸ்குரு டிரைவராக இருக்கும். நடுவில் நியான் பல்பு இருக்கும். இதன் மேல் நுனியில் ஒரு உலோகத்திலான பட்டன் இருக்கும். இது  மின் சப்ளை இருக்கிறதா என்பதை டெஸ்ட் செய்ய அவசியம் தேவை. ஸ்குரு டிரைவர் நுனியை வயரின் செப்பு கம்பியின் மேலோ அல்லது பிளக் பாய்ண்டினுள்ளோ வைக்கும் பொழுது ஒரு விரல் மேலே சொன்ன பட்டன் மேல் இருக்க வேண்டும். மின்சாரம் (பேஸ்) இருந்தால் அது ஸ்குரு டிரைவர் நுனிவழியாக உள்ளே சென்று நியான் பல்பு மற்றும் அதனுடன் உட்புறம் இணைக்கப்பட்டிருக்கும் பல மெக் ஓம்  மதிப்புள்ள ரெசிஸ்டர் வழியாக விரல் நுனியை வந்தடைந்து நம் கால் வழியாக எர்த்தை சென்றடையும். அப்பொழுது மின்சுற்று பூர்த்தி அடைவதால் நியான் பல்பு எரியும். நாம் செருப்பு அணிந்திருந்தால் மங்கலாக நியான் பல்பு எரியும். நாம் டெஸ்ட் செய்யும் வயர் நியூட்ரலாக இருந்தால் நியான் பல்பு எரியாது. டெஸ்டர் எவ்விதம் இணைக்கப்பட்டுள்ளது என்பதை கீழே உள்ள படங்கள் விளக்கும்.








இனி கட்டிங்பிளையர், வயர் கட்டர், ஸ்குரு டிரைவர் இவை பற்றி பார்க்கலாம்.
வயரை வெட்ட, வயரின் பி.வி.சி இன்சுலேஷனை  நீக்க, வயர்களை ஜாயிண்ட் போட கட்டிங் பிளையர் தேவை. படம் கீழே.


CUTTING PLIER
செப்பு கம்பி வெட்டுப்படாமல் இன்சுலேஷனை கட்டிங் பிளையர் வைத்து நீக்க மிக கவனம் தேவை. இந்த வேலையையும், வயரை வெட்டும் வேலையையும் செய்ய ஸ்ட்ரிப்பர் (STRIPPER) கட்டரை உபயோகிப்பது எளிதானது. படம் கீழே.


WIRE STRIPPER & CUTTER
ஸ்குரு டிரைவர். டெஸ்டரை வைத்து பலமாக ஸ்குருவை கழ்ட்டவோ அல்லது மாட்டவே செய்யக்கூடாது. அவ்வறு செய்தால் கைப்பிடி தனியாக உடைந்து வந்து விடும். பிளக், ஸ்சுவிட்ச் போன்றவற்றில் இருக்கும் பித்தளை ஸ்குருக்களை  கழற்ற அல்லது டைட் செய்ய மட்டுமே டெஸ்டரை பயன்படுத்த வேண்டும். பலமான வேலைகளுக்கு கனமான  கைப்பிடி கொண்ட ஸ்குரு டிரைவரையே உபயோகிக்க வேண்டும். இது பல சைஸ்களில் கிடைக்கிறது. படம் கீழே.
 SCREW DRIVER

இன்ஸ்சுலேசன் டேப் என்பது வயர்களை ஜாயிண்ட் செய்யும் பொழுது செப்புகம்பி வெளியே தெரியும். இதன் மேல் பாதுகாப்பாக இன்சுலேசன் செய்ய பயன்படுத்தப்படுகிறது. படம் கீழே தரப்பட்டுள்ளது.




அடுத்த பதிவில் சந்திப்போம்........................





Sunday, July 22, 2012

மின்சாரம் - பகுதி.2

ஏ.சி மின்சாரத்திற்கு பேஸ், நியூட்ரல் என்ற இரு முனைகள் உண்டு என முன் பதிவில் பார்த்தோம். அதில் நியூட்ரல் என்பது நமக்கு மின்சாரத்தை வழங்கும் டிரான்ஸ்பார்மர்-ன் எர்த் ஆகும். பேஸ் என்ற முனையில் மட்டுமே மின்சாரம் வரும். எனவே நியூட்ரல் நம் உயிருக்கு எவ்வித ஆபத்தையும் உண்டாக்காது. பேஸ் வயரை மட்டும் நாம் கவனமாக கையாள வேண்டும். மின்சாரத்தை கடத்தக்கூடிய அதாவது மின்சாரம் எளிதில் செல்லக்கூடிய பொருட்கள் Good Conductor எனவும், மின்சாரத்தை கடத்தாத பொருட்கள் Bad Conductor என சொல்லப்படும்.

Good Conductor : உதாரணம்-உலோகங்கள், தண்ணீர். இவற்றின் வழியாக மின்சாரம் எளிதில் பாயும். அதனால்தான் உலோகக்கம்பிகள் (செம்பு, அலுமினியம்) மின்சார வயரிங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

Bad Conductor: ரப்பர், பிளாஸ்டிக், காய்ந்த மரக்கட்டை, பீங்கான் போன்றவை. இவை மின்சாரத்தை கடத்தாது. அதனால்தான் ஆரம்ப காலத்தில் ரப்பரும் தற்சமயம் பிளாஸ்டிக்கும் வயர்களின் மேல்பகுதியில் பாதுகாப்பு கவசமாக (இன்சுலேட்டர்) பயன்படுத்தப்படுகிறது. அதைப்போலவே சுவிட்ச்கள், பிளக், ஹோல்டர் போன்ற எலெக்ட்ரிக்கல் சாதனங்கள் பிளாஸ்டிக்கினாலும், பியூஸ் கேரியர் பீங்கானிலும் செய்யப்படுகிறது.

இனி கீழே உள்ள படத்தை பாருங்கள். ஒரு 230V பல்பு ஒன்று வீட்டு மின்சாரத்தில்(230V AC) இணைக்கப்பட்டுள்ளது. பேஸ் முனை வழியாக 230V மின்சாரமானது பல்பின் ஒரு முனை வழியாக சென்று பல்பினுள் உள்ள டங்ஸ்டன் இழை வழியாக மறு முனைக்கு வருகிறது. அதிலிருந்து  நியூட்ட்ரல் முனைக்கு சென்று மின்சுற்றை(CIRCUIT) பூர்த்தி செய்கிறது.


அதாவது பல்பு 230V மின் அழுத்தத்தில் இயங்கக்கூடியது என்பதால் பேஸ் முனை வழியாக பல்புக்குள் சென்ற மின்சாரத்தின் மின் அழுத்தம் முழுமையாக டங்ஸ்டன் இழையால் பெறப்பட்டு விடுகிறது. மின்சாரம்(ELECTRICITY) என்பது  மின் அழுத்தம்(வோல்ட்) + கரண்ட்(CURRENT-AMPERE) ஆகும். இதைப்பற்றி விரிவாக எனது சூரிய ஒளி மின்சாரம் தொடர் பதிவில் ஆரம்ப பகுதியில் விவரிக்கப்பட்டுள்ளது. டங்ஸ்டன் இழை, குறிப்பிட்ட வெளிச்சத்தை தர தேவையான கரண்டை எடுத்துக்கொள்வதால் பல்பு எரியும். நியூட்ரல் என்பதும் எர்த்-தான் என்பதை உங்களுக்கு நினைவூட்டவே படத்தில் மின் சப்ளையின் நியூட்ரல் முனை எர்த் செய்யப்பட்டுள்ளதை காட்டுகிறது.

இப்பொழுது, இந்த மின் இணைப்பில் 230V பல்புக்கு பதில் 110V பல்பை இணைத்தால் என்னவாகும்? அல்லது 400வாட் பல்பை இணைத்தால் என்னவாகும்? என்ற கேள்வி உங்கள் மனதில் தோன்றினால், உங்களுக்கு இஞ்சினீயரிங் மூளை இருக்கிறது என பொருள்.

230V மின் சப்ளையில் 110 வோல்ட் பல்ப் -ஐ இணைக்கும் பொழுது 230 V மின் அழுத்தம் பல்பின் ஒரு முனை வழியாக டங்ஸ்டன் இழைக்குள் செல்லும். அந்த இழை 110V மின் அழுத்தத்தை தாங்க கூடியது என்பதால் 110V மின் அழுத்தம் போக மீதி உள்ள 120V மின் அழுத்தம் டங்ஸ்டன் இழையின் மறுமுனை வழியாக வெளியே வந்து நியூட்ரலில் சேரும். நியூட்ரலும் எர்த் என்பதால் அந்த 120V மின் அழுத்தம் குறுகிய மின் இணைப்பு (SHORT CIRCUIT) ஆகிவிடும். அப்பொழுது எலெக்ரான்களின் மோதலால் சூடு ஏற்படும். பியூஸ் காரியரில் போடப்பட்டிருக்கும் பியூஸ் வயரை விட டங்ஸ்டன் இழை மெல்லியதாக இருப்பதால், அது உருகிவிடும். அதாவது பல்பு பியூஸ் ஆகிவிடும்.

இனி 400V பல்பை இணைத்தால், நம் மின் சப்ப்ளையின் மின் அழுத்தத்தை விட அந்த பல்பின் டங்ஸ்டன் இழைக்கு 170V மின் அழுத்தம் அதிகம் தேவை. அதனால் அது வடிவமைக்கப்பட்ட திறனுக்கு அதனால் வெளிச்சம் தர முடியாமல் மங்கலாக எரியும்.மேலும் அது முழு திறனுடன் எரிய அதிக அளவு கரண்டை எடுக்கும். இதனால் பியூஸ் வயர் சூடாகி உருகிவிடும். குறைந்த மின் அழுத்தம் இருக்கும் பொழுது மின் சாதனங்களை உபயோகிக்க கூடாது.

நாம் வெற்று காலுடன் தரையில் நின்று கொண்டு மின்சாரத்தின் பேஸ் முனையை கையால் தொட்டால் அல்லது நாம் தரையில் நிற்கும் பொழுது மின்சாரத்தின் பேஸ் நம் மீது பட்டால் என்ன நடக்கும்? கீழே உள்ள படம் விளக்குகிறது.


நம் கையின் வழியாக மின்சாரம் உடலில் பாய்ந்து கால்வழியாக தரை எனப்படும் எர்த்தை வந்தடைகிறது. நியூட்ரலும் எர்த்தும் ஒன்றுதான் என ஏற்கனவே சொல்லியுள்ளேன். எனவே மின் சுற்று பூர்த்தியாகிறது. நம் உடல் ஈரப்பதம் உடையதால், அது டங்ஸ்டன் இளை போல செயல்பட்டு உடல் கருகிவிடும். எனவே

1. மின்ச்சரத்தின் பேஸ் முனையை தொடக்கூடாது.

2. மின்சார வேலை செய்யும் பொழுது காலில் ரப்பர் செறுப்பு அணிய வேண்டும் அல்லது காய்ந்த மரப்பலகையின் மீது நிற்க வேண்டும் , கயில் ரப்பர் கையுறை அணியவேண்டும். நம் உடலின் எந்த பகுதியும் தரையையோ, சுவற்றையோ தொடக்கூடாது.

3. நாம் உபயோகிக்கும் ஸ்குரு டிரைவர், கட்டிங் பிளையர் ஆகியவற்றின் கைப்பிடி, நல்ல இன்ஸ்சுலேட்டிங் பொருட்களால் ஆனவையாக இருக்க வேண்டும். இவற்றின் உலோகப்பகுதியை கை தொடாதவாறு இதை உபயோகிக்க வேண்டும்.

மீண்டும் சந்திப்போம்..................



 

Thursday, July 19, 2012

மின்சாரம் - பகுதி.1

நாம் உபயோகப்படுத்தும் மின்சாரம் இரண்டு வகையானது. (1) ஆல்ட்டர் நேட் கரண்ட் (AC - Alternate Current) (2). டயரக்ட் கரண்ட்(DC-Direct Current). இதில் ஏசி கரண்டுதான் நாம் அன்றாடம் வீட்டில் உபயோகப்படுத்தும் மின்சாரம் ஆகும். டிசி கரண்ட் என்பது டார்ச் லைட்-டிரான்ஸ்சிஸ்டர் பாட்டரி, மொபைல் போன் பாட்டரி, பைக்-கார் பாட்டரி போன்றவற்றிலிருந்து கிடைக்கும் மின்சாரமாகும். மொத்தத்தில் இது பாட்டரியிலிருந்து கிடைக்கும் மின்சாரமாகும். இனி ஏசி மின்சாரத்தின் உபயோகம், தனித்தன்மைகள் இவை பற்றி விரிவாக பார்க்கலாம்.

நாம் உபயோகிக்கும்  ஃபேன், பல்பு, டி.வி, மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மிஷின் எல்லாமே சிங்கிள் பேஸ் 230 வோல்ட் ஏசி மின்சாரத்தில் இயங்கக்கூடியவை. உதாரணத்திற்கு உங்கள்  டேபிள் ஃபேன்-ன் அடிப்பக்க மூடி அல்லது டி.வி-ன் பின் பக்க மூடி இவற்றில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கரை பாருங்கள். 230V AC 50Cyc/Hz என குறிப்பிடப்பட்டிருக்கும். அதாவது மேலே குறிப்பிடப்பட்டுள்ள தன்மை கொண்ட மின்சாரத்தில்தான் அது இயங்கும் என்பதற்கான அறிவிப்பு அது.

டி.சி மின்சாரத்தில், மின்சாரம்(எலெக்ட்டிரான்) ஒரே திசையில் தொடர்ச்சியாக செல்லும். ஆனால் ஏ.சி மின்சாரத்தில் அது இரு திசையிலும் மாறி மாறி செல்லும். இவ்வாறு ஒரு வினாடிக்கு எத்தனை முறை திசைமாறி செல்கிறதோ அது சைக்கிள் அல்லது ஹெர்ட்ஸ் என சொல்லப்படுகிறது. கீழே உள்ள படத்தை பாருங்கள்.


ஒரு பல்பு பாட்டரியுடன் இணைக்கப்பட்டுள்ளது. மின்சாரத்தில் இயங்கும் எந்த ஒரு சாதனத்திற்கும் இரு முனைகள்(இணைப்பு-TERMINAL) உண்டு. அதைப்போலவே டி.சி. மின்சாரமாக இருந்தாலும் சரி அல்லது ஏசி மின்சாரமாக இருந்தாலும் சரி இரு முனைகள் உண்டு.  நடைமுறையில் பாட்டரி மின்சாரத்தின் இரு முனைகளையும்  பாசிடிவ் (POSITIVE), நெகடிவ்(NEGATIVE) என அழைப்பர். இவற்றின் குறியீடு பாசிடிவ்-க்கு  (+) எனவும் நெகடிவ்-க்கு (-)ஆகும். கல்ர் குறியீடு, பாசிடிவ்-க்கு சிகப்பும், நெகடிவ்-க்கு கருப்பும் ஆகும். இனி மேலே உள்ள படத்தை பாருங்கள். பாட்டரியின் பாசிடிவ் முனையும், நெகடிவ் முனையும் பல்பினுடைய இரு முனைகளுடன் தனித்தனியாக இணைக்க பட்டுள்ளது. பாட்டரியின் நெகடிவ் முனையிலிருந்து மின்சாரம்(எலெக்ட்ரான்) பல்பின் ஒருமுனைவழியாக பல்பின் டங்ஸ்டன் இழையினுள் சென்று பல்பின் மறு முனை வழியாக பாட்டரியின் பாசிடிவ் முனையை வந்தடைகிறது. மறுபடியும் தொடர்சியாக இதே பாதையில் அல்லது திசையில் செல்லுகிறது. அது செல்லும் திசையை படத்தில் அம்பு குறியீட்டின் மூலம் காட்டப்பட்டுள்ளது.

இனி ஏசி மின்சாரத்தை பற்றி பார்க்கலாம். கீழே உள்ள படத்தை பாருங்கள்.
இந்த படத்தில் முந்தைய படத்தில் காட்டப்பட்டுள்ள அதே பல்பு ஏ.சி மின்சாரத்தில் இணைக்கப்பட்டுள்ளது.  ஏ.சி மின்சாத்துக்கு பேஸ்(PHASE),  நியூட்ரல்(NEUTRAL) என இரு முனைகள் உண்டு. அவற்றின் குறியீடு P,N ஆகும். ஏசி மின்சாரம் "N" முனை வழியாக பல்புக்கு சென்று, பல்பின் மறு முனை வழியாக ஏசி மின்சாரத்தின் பேஸ்(P) முனையை வந்தடைகிறது.இதை பச்சை நிறத்திலான அம்பு குறி காட்டுகிறது. அதன் பின் எதிர் திசையில் அதாவது ஏசி மின்சாரம் "P" முனை வழியாக பல்புக்கு சென்று "N" முனைக்கு வந்தடைகிறது. இதை சிகப்பு நிற அம்பு குறியீடு காட்டுகிறது. இவ்விதம் ஏசி மின்சாரம் இரு திசையிலும் செல்லும். இந்த திசை மாற்றம் வினாடிக்கு எத்தனை முறை நடைபெறுகிறதோ அதுதான் Cycles per Second அல்லது Hz per Second ஆகும். நம் நாட்டில் நம் உபயோகத்திற்கு வழங்கப்படும் மின்சாரம் 50 cyc /Hz ஆகும்.

இனி வோல்ட், கரண்ட், வாட்  என்றால் என்ன என்பதை பார்ப்போம்.


பேச்சு வழக்கில் நாம் கரண்ட் என்று சொல்வோம். அது மின்சாரத்தை குறிக்கும். ஃபேன் மெதுவாக சுற்றினாலோ அல்லது டியூப் லைட் எரியாமல் விட்டு விட்டு எரிந்தால் லோ வோல்ட் என்று சொவோம். அடுத்தபடி கடையில் பல்பு வாங்கும் பொழுது 40W அல்லது 60 வாட் பல்பு கொடுங்கள் என்று கேட்ப்போம். அதற்கு மேல் நமக்கு மின்சாரத்தை பற்றி தெரியாது. அவசியம் வோல்ட், கரண்ட், வாட்ஸ் என்றால் என்ன? அவை ஒன்றோடு ஒன்று எப்படி தொடர்பு உடையது என்பதைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். 

வோல்ட் (VOLT)


மின்சாரத்திலிருக்கும் எலெக்ட்ரான்களை (ELECTRONS) லோடு அல்லது சர்க்கியூட்  என அழைக்கப்படும் நம் மின்சாதனத்திற்கு அனுப்பும் அழுத்தமே வோல்ட் ஆகும்.  எனவேதான் வோல்ட்டை மின் அழுத்தம் என தமிழில் சொல்கிறோம். மேலே உள்ள படத்தில் தரை மட்டத்திலிருந்து 1 மீட்டர் உயத்தில் தண்ணீர் தொட்டி இருக்கிறது. அதன் அடிப்பாகத்தில் 1 cm அளவுள்ள குழாய் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது.  அடுத்ததாக அதே தொட்டி 10 மீட்டர் உயரத்தில் வைக்கப்பட்டுள்ளது. இப்பொழுது முதல் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் பொழுது அதன் வெளியேறு குழாய் வழியாக வெளிவரும் தண்ணீரின் அழுத்தம் குறைவாக இருக்கும். 10 மீட்டர் உயரத்திலிருந்து வெளிவரும்  தண்னீரின் அழுத்தம் 10 மடங்கு அதிகமாக இருக்கும்.6 வோல்ட், 12 வோல்ட், 24 வோல்ட் பாட்டரிகளை இப்பொழுது ஒப்பிட்டு பார்ப்போம். 24 வோல்ட் பாட்டரி 6 வோல்ட் பாட்டரியை விட 4 மடங்கு மின் அழுத்தம் அதிகமானது. அதைப்போல 12 வோல்ட் பாட்டரியை விட 2 மடங்கு அதிக மின் அழுத்தம் கொண்டது.

கரண்ட் (CURRENT)
தண்ணீர் தொட்டியிலிருந்து குழாய் வழியாக வாட்டர் மாலிகுல்ஸ் என்ற தண்ணீர் வெளியேறும் அளவை போல மின்சார எலெக்டிரான்ஸ் வெளியேறும் அளவை கரண்ட் குறிக்கும். அதாவது நம் சாதனம் உபயோகிக்கும் எலெக்டிரான்ஸ் அளவை குறிக்கும். பொதுவாக கரண்ட் என்பது ஆம்பியர் என அழைக்கப்படும்.

மேலே உள்ள படத்தை பாருங்கள். முதல் தொட்டியின் அவுட்லெட் பைப் 1 செ.மி, இரண்டாவது படத்தில் 10 செ.மி பைப் இணைக்கப்பட்டுள்ளது. 1 செ.மி அளவிலுள்ள குழாய் 1 மணி நேரத்தில் 100 லிட்டர் தண்ணீர் வெளிவருவதாக வைத்துக்கொள்வோம். அப்படியென்றால் 10 செ.மி அளவுள்ள குழாய் மூலம் 100 லிட்டருக்கு அதிகமாக பல மடங்கு தண்ணீர் வெளிவருமல்லவா?. ஆமாம். அதைப்போலவே மின் இணைப்பில் இணைக்கப்பட்டுள்ள சாதனம் அதிக அளவில் மின்சாரத்தை எடுக்கக்கூடியதென்றால், அதற்கேற்ப இணைப்பு வயரின் பருமனை ( cross-sectional area) அதிகரிக்க வேண்டும்.

இப்பொழுது  Ohms's Law  பற்றி தெரிந்து கொள்வோம்.

POWER = VOLTAGE  X  CURRENT   ( P = V x  I )
 or
WATT  = VOLTAGE  X  AMPERE  ( W = V x  A )

இதுதான் அடிப்படை விதி. இப்பொழுது வாட், வோல்ட், ஆம்பியர் இவற்றில் ஏதாவது 2 தெரிந்திருந்தால் மூன்றாவதை கண்டுபிடித்து விட முடியும். உதாரணத்திற்கு  டி.வியை எடுத்துக்கொள்ளலாம். அது இயங்கும் வோல்ட் 220. 100 வாட் என டிவி. காபினட்டில் போட்டிருக்கிறது என வைத்துக்கொள்வோம். அது எவ்வளவு கரண்டை எடுக்கும்?   
W = V x A  
ie   100 W = 220 x A
ie   100 / 220 = A  (Watt divided by Volt)
ie   = 0.455 Amp

அதாவது 0.455 ஆம்பியர் கரண்ட் அதற்கு தேவை.

இனி சீரியஸ் (SERIES CONNECTION) இணைப்பு மற்றும் பேரலல் (PARALLEL CONNECTION)  பற்றி பார்க்கலாம்.

சீரியஸ் இணைப்பு


( ஒவ்வொரு பாட்டரியும் 1.5 V / 1.7 Amp )

இந்த படத்தில் 3 பாட்டரிகள் (1.5V,1.7Amp) சீர்யஸ் முறையில் இணைக்க பட்டுள்ளது.முதல் பாட்டரியின் பாசிடிவ் முனை இரண்டாவது பாட்டரியின் நெகடிவ் முனையிடனும், 2-வது பாட்டரியின் பாஸிடிவ் முனை 3-வது பாட்டரியின் நெகடிவ் முனையிடனும் இணைக்கப்பட்டுள்ளது. இப்பொழுது 1-வது பாட்டரியின் நெகடிவ் முனையும் 3-வது பாட்டரியின் பாஸிடிவ் முனையும்  எதனுடனும் இணைக்கப்படாமல் உள்ளது இந்த இரு முனைகளின் வழியாக நமக்கு 4.5 வோல்ட் / 1.7 ஆம்பியர் கிடைக்கும்.

பாரலெல் (PARALLEL) இணைப்பு




மேலே குறிப்பிடப்பட்ட அதே பாட்டரிகள் பாரெலெல் முறையில் இணைக்கப்பட்டுள்ளது. மூன்று பாட்டரிகளின் பாஸிடிவ் முனைகள் ஒன்றாகவும் நெகடிவ் முனைகள் ஒன்றாகவும் இணைக்கப்பட்டுள்ளது. இப்பொழுது பாஸிடிவ் மற்றும் நெகடிவ் முனைகள் வழியாக நமக்கு  1.5 V / 5.1 ஆம்பியர் மின்சாரம் கிடைக்கும்.

சீரியஸில் இணைக்கும் பொழுது மின் அழுத்தம் (வோல்ட்) மட்டுமே கூடுதலாகும். ஆம்பியர் அதிகரிக்காது.                                                                

பேரலில் இணைக்கும் பொழுது மின் அழுத்தம் (வோல்ட்) அதிகரிக்காது. ஆம்பியர் மட்டுமே அதிகரிக்கும்.

வீட்டில் உபயோகிக்கும் அனைத்து சாதனங்களும் பேரலெல் முறையில் முறையிலேயே நம் மின் இணைப்பிலிருந்து மின்சாரத்தை பெறுகிறது. அடுத்த பதிவில் நமக்கு வ்ழங்கப்படும் மின்சாரம் பற்றியும், வீட்டில் செய்யப்படும் மின்சார வயரிங் பற்றியும் பார்க்கலாம்.

மீண்டும் சந்திப்போம்................



Wednesday, July 18, 2012

இந்த தொடர் பதிவு உங்களுக்கு தேவையா?

நாம் வீட்டில் உபயோகிக்கும் மின்சாரம், எலெக்ட்ரிகல் வயரிங், மின்சாதனங்கள், அவற்றில் ஏற்படும் பழுதை நீக்குதல் போன்றவற்றை தொடர்பதிவாக எழுதினால் பலருக்கும் பயன்படும் என நினைக்கிறேன். உங்கள் கருத்தை சொல்லுங்கள்.

Monday, July 16, 2012

இதில் எது சரி? நீங்களே சொல்லுங்கள்.

A UK daily has been dithering online with its headline on the Indian Prime Minister. The Independent's story on Dr Manmohan Singh fluctuated this morning between asking if he is Sonia Gandhi's "poodle" or her "puppet." It's now settled on  asking if the PM is, as Time magazine suggested last week, 'the underachiever'.-NDTV news

Sonia Gandhi's Poodle?


Or Puppet?

இதில் எது சரி? நீங்களே சொல்லுங்கள்.

ஆட்சேபணைக்கு உரிய விஷயம் என்னவென்றால் மன்மோஹன் சிங் இதுவரை பிரதமராக அவர் தன்னை நினைத்து செயல்பட்டதே இல்லை. அவர் சோனியாவின் தனி மேலாளராகவே (Personal Manager) செயல்படுகிறார்.


Thursday, July 12, 2012

அரசியல்வாதிகளின் "சமூக நீதியும்-இட ஒதுக்கீடு கொள்கையும்" தொடர்.2

இந்தியா சுதந்த்திரம் அடைந்த பொழுது, பல நூற்றாண்டுகளாக கல்வி உரிமை மற்றும் சமூக நீதி மறுக்கப்பட்ட  பிரிவினர்களுக்கு உடனடியாக, ஒரு தற்காலிக நிவாரணம் வழங்குவதற்காக கொண்டுவரப்பட்டதுதான், அரசியல் அமைப்பு சட்டதின்  இட ஒதுக்கீடு  பிரிவு.

இதை எளிமையாக புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட  பயணிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையுடன் ஒப்பிடலாம். விபத்து ஏற்பட்ட பகுதிக்கு விரைந்து வரும் மீட்பு குழுவினர் என்ன செய்வார்கள்?. விபத்தில் காயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸ்சில் ஏற்றி மருத்துவ மனைக்கு எடுத்து செல்வார்கள். அங்கு, கொண்டுவரப்பட்டவர்களின் காயத்தை பரிசோதித்து, அவர்களில் யார் யாருக்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்க வேண்டும் என முடிவு செய்யப்படவேண்டும். லேசாக காயம் பட்டவர்களுக்கு அதற்குரிய சிகிச்சை அளித்து உடனே அனுப்பிவிடலாம். அதிகமாக காயம் பட்டவர்களுக்க்கு சிகிச்சை அளித்து குணப்படுத்த பல நாட்கள் ஆகும். அவர்களை சிகிச்சை பிரிவில் சேர்த்து பல நாட்கள் சிகிச்சை அளிக்க வேண்டும். உயிருக்கு போராடும் நிலையில் உள்ளவர்களை  அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

அவ்வாறு செய்யாமல், உயிருக்கு போராடுபவர்களை ஆஸ்பத்திரி வராண்டாவில் அம்போ என போட்டுவிட்டு, சுண்டுவிரலில் சிராய்ப்பு ஏற்பட்டவனுக்கும், காயமே படாதவனுக்கும் விட்டமின், போஷாக்கு மருந்துகள்,  பால், முட்டை போன்றவற்றை கொடுத்து  ஆஸ்பத்திரியில் அவன் விரும்பும் வரை தங்க வைத்தால் என்ன நடக்கும்?   காயம்பட்டவர்கள் தகுந்த சிகிச்சை இல்லாமல் செத்துப்போவார்கள்.

இந்த செயல்தான் இட ஒதுக்கீட்டில் நடந்து கொண்டிருக்கிறது. அரசு பணி, பொறியியல் படிப்பு, மருத்துவ படிப்பு, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பணியிடங்கள் எல்லாவற்றிலும் SC/ST பிரிவினர்களுக்கு இட ஒதுக்கீடு இருக்கிறது. அதன் படி வருடா வருடம் நிரப்பப்படுகிறது.

இந்த பணிகள் அல்லது படிப்புகளுக்கு கல்வி தகுதி தேவை. இந்த பிரிவினரில் 90% நபர்கள் வசிப்பது கிராமங்களில். மேலே குறிப்பிட்ட இட ஒதுக்கீட்டை பெற தேவையான கல்வி தகுதியை பெற பெரும்பாலான கிராமங்களில் பள்ளிக்கூடங்களே கிடையாது. அப்படியே இருந்தாலும் குடும்ப பொருளாதார சூழ்நிலை இடம் கொடுப்பதில்லை. போதுமான வருமானம் இல்லாமையால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் குழந்தை தொழிலாளர்களாக வேலைக்கு அனுப்பும் சூழ்நிலை! இந்த முட்டுக்கட்டையையெல்லாம் மீறி, பிளஸ்டூ முடித்து விட்டு இட ஒதுக்கீட்டின் பலனை பெறுபவர்கள் மிக சிலரே!

நம் நாட்டின் நிர்வாக லட்சணம் உலகம் அறிந்ததே. காசு வாங்கிக்கொண்டு இந்திய ஜனாதிபதியையும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியையும் கைது செய்ய "அரெஸ்ட் வாரண்ட்" வழங்கும் கீழ் நீதிமன்றங்கள், இரண்டு கையும் இல்லாதவனுக்கு டிரைவிங் லைசென்ஸ் வழங்கும் வாகன போக்குவரத்து துறை. இந்த நிலையில் ஜாதி சான்றிதழ் வழங்கும் தாசில்தார்கள் மட்டும் அரிச்சந்திரனின் பேரன்களா?. காசு கொடுத்தால், கொடுக்கும் காசுக்கு ஏற்ப செட்டியாரும் தலித் ஆகலாம். மூப்பனாரும் பழங்குடியினர் ஆகலாம். இது ஏன் பிராமணனும் ஆதிவாசியாகலாம்.  இவர் இன்ன ஜாதி என்பதை கண்டறிய விஞ்ஞான ரீதியான முறை எதுவும் இல்லாததால் இந்த நிலை தொடரும்.

ஒதுக்கீட்டில் தேர்வு செய்யப்பட்டவர்களின் விபரங்களை பார்த்தால் சில உண்மைகள் தெரியவரும்.

1. இட ஒதுக்கீட்டு சலுகையில் அரசு அல்லது பொதுத்துறையில் அதிகார்களாக பணிபுரியும், வசதியுள்ள பெற்றோர்களின் மகன் அல்லது மகளாக இருப்பார்கள். அதிலும், பெயர் பெற்ற கல்வி நிறுவனத்தில் படித்தவர்களாக இருப்பார்கள். படிப்பில் போட்டி போடுமளவிற்கு இவ்வளவு நல்ல வாய்ப்பு இருந்தும்  இவர்கள் கோட்டாவில்  வந்து மற்றவர்களின் வாய்ப்பை பறித்தவர்கள்.

2. தேர்வானவர்களில் சிலரின் பூர்வீகத்தை கிளறினால் அவர்கள் SC/ST ஆகவே இருக்க மாட்டார்கள்.   
.
ஆக இந்த இட ஒதுக்கீடு சலுகை விழலுக்கு நீர் பாய்ச்சிய முட்டாளின் கதையை போலத்தான்.

சாமானியனான எனக்கு தெரிந்த உண்மை, ஊருக்காக உழைக்க வந்த தியாகிகளாகிய அரசியல்வாதிகளுக்கும், ஜாதி தலைவர்களுக்கும் ஏன் புரியவில்லை? என்று கேட்காதீர்கள். இதைத்தானே அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்!

சாக்கடை அள்ளுபவன் வாரிசுகள் சாக்கடை அள்ளும் நிலையிலும், செருப்பு தைப்பவன் வாரிசு அப்பன் வழியிலும், கூலி வேலை செய்பவன் வாரிசு அப்பனை போலவே சோத்துக்கு அல்லாடும் நிலையில் இருந்தால்தானே அரசியல்வாதி பொழைப்பை நடத்த முடியும்!

மீண்டும் சந்திப்போம்......................



Tuesday, July 10, 2012

அரசியல்வாதிகளின் "சமூக நீதியும் - இட ஒதுக்கீடு கொள்கையும்". - தொடர்.1

என்னைப்பற்றி ஒரு அறிமுகம். நான் தலித்தும் அல்ல, பிராமணனும் அல்ல. என்னை பொறுத்தவரை ஜாதி, மதம் என்பது நாம் போடும் சட்டையை போலத்தான். நாம் பிறக்கும் போது இது நம்மோடு ஒட்டிக்கொண்டு வந்ததல்ல. இது என் அசைக்க முடியாத கருத்து. அதனால் நான் பொதுவாக ஜாதி, மத வித்தியாசம் பார்ப்பது கிடையாது. "அப்படிஎன்றால் நீங்கள் வேறு ஜாதி பெண்ணை திருமணம் செய்துள்ளீர்களா? அல்லது உங்கள் குழந்தைகளுக்கு வேறு ஜாதியிலிருந்து திருமணம் செய்து வைத்துள்ளீர்களா?" என்ற எதிர் கேள்வி நிச்சயமாக வரும் என எனக்கு தெரியும்.

வாழ்க்கை துணைவி அல்லது துணைவனை தேர்ந்தெடுப்பது என்பது தனிமனித உரிமை மட்டுமல்ல, தன் குடும்பத்தினர், உறவினர்களோடு பொருந்தக்கூடியதாக  இருக்கவேண்டும். ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒவ்வொரு விதமான பழக்க வழக்கங்கள் உண்டு. திருமண பந்தம் என்பது ஒரு நாள் கூத்து அல்ல. ஆயுட்கால பந்தம். எனவே நான் சமுதாய கட்டமைப்பிலிருந்து விலகவில்லை.

சமூக நீதி, இடஒதுக்கீட்டின் மூலம் அவர்களின் முன்னேற்றம் என்ற விஷயத்தை பொறுத்தவரை யாரும் தைரியமாக தங்கள் கருத்தை சொல்ல முன் வருவதில்லை. சொல்லுபவர் பிற்படுத்தப்பட்ட பிரிவை சார்ந்தவராக இல்லை என்றால், பிற்படுத்தப்படாவர்களின் எதிரி என முத்திரை குத்தப்படுவார். அல்லது அவர் பிற்படுத்த ஜாதியை சார்ந்தவராக இருந்தாலும் அவரை ஜாதி துரோகி என முத்திரை குத்திவிடுவார்கள்.

இந்த காரணத்தினால்தான், பிற்படுத்தப்பட்டவர்களின் முன்னேற்றத்தில் ஆர்வம் கொண்டவர்களின் குரல் ஒலிப்பதில்லை. ஜாதி தலைவர்கள், அரசியல்வாதிகளின் திட்டமிட்ட சதியால், இன்று வரை  பிற்பட்டோருக்கான உண்மையான முன்னேற்றம் அவர்களை சென்றடையவில்லை.

ஆனால் அரசின் புள்ளிவிபரம் இட ஒதுக்கீட்டின் மூலம் ஆண்டு ஒன்றுக்கு எவ்வளவு நபர்கள் பொறியியல் படிப்பிலும், மருத்துவ படிப்பிலும் இட ஒதுக்கீட்டின் மூலம் சேர்க்கப்பட்டு பயனடைந்துள்ளார்கள் என்பதை காட்டும். அதைப்போலவே அரசு பணியிடங்களை நிரப்பும் பொழுது இந்த ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படுகிறது என மார் தட்டிக்கொள்வார்கள். 

இவ்வளவு புள்ளி விபரம் கொடுப்பவர்களால், இன்னும் ஏன் ஜாதி அடிப்படையிலும் மத அடிப்படையிலும் பிறபட்ட நிலையில் உள்ளவர்கள், நாடு சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆகியும் ஏன் முன்னேறவில்லை என்ற கேள்விக்குமட்டும் பதில் சொல்ல மாட்டார்கள். "இவர்கள் முன்னேறக்கூடாது. சலுகை கொடுப்பது போல கொடுப்போம். ஆனால் அது பலனளிக்க கூடாது". இது தானே அனைத்து அரசியல் கட்சிகளின் மறைமுக செயல் திட்டம்! "நோயாளி இருந்தால் தானே வைத்தியனுக்கு கொண்டாட்டம்". இவர்கள் பின் தங்கிய நிலையிலேயே இருந்தால்தானே தேர்தலின் போது, "உங்களை முன்னேற்ற எங்களுக்கு ஓட்டு போடுங்கள்"  என பொய் பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வரமுடியும்!.

ஜாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் பின் தங்கிய நிலையில் இருப்பவர்களின் முன்னேற்றத்தில் ஆர்வம் கொண்ட இந்திய பிரஜை நான் என்ற முறையில், என்னுடைய கருத்துக்களை சொல்ல இருக்கிறேன். நிச்சயமாக "இட ஒதுக்கீட்டால் பலன் உண்டு. எத்தனையோ பேர் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், எஞ்சினீயர், டாக்டர் என உருவாகியுள்ளனர்" என பட்டியலுடன் பின்னூட்டம் வரும் என்பது தெரியும். அதற்கும் விளக்கம் உண்டு.

மீண்டும் சந்திப்போம்.............


Monday, July 9, 2012

சோலார் மின்சாரத்தின் அடக்க விலை..

சோலார் மின்சாரம் தயாரிக்க தேவைப்படும் சாதனங்கள் (1) சோலார் பேனல்கள், (2) பேட்டரி, (3)சார்ஜ் கண்டிரோலர் + இன்வெர்ட்டர் அல்லது பவர் கண்டிஷ்னர்.

சோலார் பேனல்கள் 25 ஆண்டுகளுக்கு மேல் செயல்படும். எனவே இந்த சிஸ்டத்தின் ஆயுட்காலம் 20 ஆண்டுகள் என வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த 1KW சோலார் சிஸ்டம் நாள் ஒன்றுக்கு 5KW மின்சாரத்தை உற்பத்தி செய்யும். 20 ஆண்டுகளில் இதன் மொத்த உற்பத்தி 36,500 ( 5x 365x 20) யூனிட்களாகும்.

பாட்டரிக்கு 4 வருட உத்திரவாதம் உண்டு. 5 ஆண்டுகள் உழைக்கும். எனவே 5 ஆண்டுக்கு ஒருமுறை என பாட்டரியை மாற்றினால் 20 ஆண்டுகளில் 4 தடவை மாற்ற வேண்டியிருக்கும். அதாவது 8 பாட்டரிகள்.

இன்வெர்ட்டரை பொருத்தவரை டிவி போலத்தான். எளிதில் ரிப்பேர் ஆகாது. அப்படி ஆகும் பொழுது சரி செய்ய வேண்டும். மிகவும் பழையதாகும் பொழுது மாற்ற வேண்டும்.

பல கம்பெனிகள் இதை அமைத்து கொடுக்கிறார்கள். அவற்றில் குறைந்த ரேட்டை அடக்க விலை நிர்ணயம் செய்ய எடுக்கப்பட்டுள்ளது.

கீழே உள்ள பட்டியலை பாருங்கள். உங்களுக்கு கிடைக்கும் மின்சாரத்தின் விலை ரூ.6.38 ஆகும். இந்த அடக்க விலை பொருட்களின் இன்றைய விலைப்படி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



மீண்டும் சந்திப்போம்................


எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்!

1955-ல் நான் 3 வ்யதில்



நான் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் 1969-ம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த பொழுது எடுத்த என்னுடைய புகைப்படம்



1982-ல் நான்






தற்பொழுது





இதுதான் பரிணாம வளர்ச்சியோ?






Friday, July 6, 2012

Do-It-Yourself. 1KW-24V Solar Power System Part.3

இப்பொழுது நீங்கள், நான்கு பேனல்களையும் மொட்டைமாடியிலேயே, பேனலின் பின் பக்கத்திலேயே பேரலெல் இணைப்பை செய்துவிடலாமா? அல்லது தனித்தனியாக ஒவ்வொரு பேனலின் இணைப்பையும் இன்வெர்ட்டர் வைத்திருக்கும் அறைக்கு கொண்டு வரலாமா? என தெளிவான ஒரு  முடிவுக்கு வந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

இவற்றில் நான் கீழே குறிப்பிடும் முறைதான் வசதியானது. எளிதானது. எனவே இதன்படி செய்யுங்கள். நான்கு பேனலகளையும் மொட்டை மாடியிலேயே பேரலல் ஆக இணைப்பதற்கு பதில் இரண்டிரண்டு பேனல்களாக இணைத்தால் இரண்டு அவுட் புட்கள மட்டுமே கிடைக்கும். இதை இன்வெர்டருடன் இணைக்க 2.5 sq mm வயரே போதுமானது. ஒரு அவுட் புட்-க்கு 2 வயர் வீதம் இரண்டு அவுட்புட்-க்கு 4 வயர்களும் எர்த்துக்கு ஒரு வயரும் ஆக மொத்தத்தில் 5 வயர்களே தேவை. படத்தை பார்க்கவும். 



கீழே உள்ள படத்தில் மொட்டை மாடியில் அமைக்கப்பட்டுள்ள சோலார் பேனலில் இருந்து அதன் அவுட்புட் வயர் பி.வி.சி பைப் மூலம் இன்வெர்ட்டர் வைத்திருக்கும் அறைக்கு எப்படி கொண்டுவரப்பட்டுள்ளது என்பதை பார்க்கவும்.



இனி அவுட் வயர், இன்வெர்ட்டர், பாட்டரி ஆகியவற்றை இணைப்பதை பார்க்கலாம்.

 முதல் இரண்டு பேனல்களை பேரல்லிலும், அடுத்த இரண்டை தனியாக பேரலிலும் இணைத்துக்கொள்ளுங்கள். சோலார் பேனலில் வயர் ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் அதை கழற்றிவிடுங்கள்.  அதன் பின் "0" டைப் லக்ஸ் உபயோகித்து கீழ் கண்டவாறு இணைப்பு கொடுங்கள்.

இப்பொழுது 2 சிகப்பு வயர்கள், 2 கருப்பு வயர்கள், 1 பச்சை வயர் என ஐந்து அவுட்புட் வயர்கள் இருக்கும். இவற்றை 3/4 இஞ்ச் பி.வி.சி பைப் மூலம் இன்வெர்ட்டர் வைத்திருக்கும் அறைக்குள் கொண்டுவர வேண்டும். அவுட்புட் வயர்கள் எல்லாம் 2.5 sq mm அளவுள்ள வயர்களே. நீளம் நீங்கள் அமைக்கும் சோலார் பேனலிருந்து அறை வரை தேவைப்படும் நீளமாகும். 

இவ்விதம் கொண்டுவரப்பட்ட சோலார் அவுட்புட் வயர்களில் இரண்டு சிகப்பு வயர்களை ஒன்றாக இணைக்க வேண்டும். அது போல இரண்டு கருப்பு வயர்களையும் ஒன்றாக இணைக்க வேண்டும்.  சுவரில்  40 Amps Double Pole Isolator -ஐ பொருத்துங்கள். இது மெயின் சுவிட்ச் போலத்தான். கீழே உள்ள படத்தில் காட்டிய படி சிகப்பு கருப்பு வயர்களை அதன் மேல் பக்கத்தில் உள்ள கனெக்ட்டரில் இணைத்து விடுங்கள்.  ஐசோலேட்டரின் கீழ் பக்கத்தில் உள்ள இருகனெக்டரின் இரு முனைகளையும்  பவர் கண்டிஷ்னருடன் இணைக்க 6sq mm வயரை உபயோகிக்க வேண்டும். இந்த வயரும் சிகப்பு மற்றும் கருப்பு நிறத்தில் தான் இருக்க வேண்டும்.  ஐசோலேட்டரின் மேல் பக்கத்தில் முதல் துளையில் சோலார் அவுட்புட்டின் சிகப்பு வயரை ( பாசிடிவ்) இணைத்திருந்தால், கீழ்பக்த்தில் முதல் துளையில் 6 sq mm சிகப்பு வயரை இணைக்க வேண்டும். அதைப்போலவே தான் கருப்பு வயரும். படத்தை பார்த்தால் புரியும்.

பச்சை கலர் எர்த் வயரையும், ஐசோலேட்டரின் கீழ் பக்கத்தில் இணைக்கப்பட்ட கருப்பு சிகப்பு வயர் ஆக மூன்று வயர்களையும் பவர்கண்டிஷ்னரில் சோலார் அவுட்புட் இணைப்பிற்கான கனெக்டரில் மாட்டிவிட வேண்டும்.

இனி பாட்டரி பேங் பற்றி பார்க்கலாம். இந்த சிஸ்டம் 24 வோல்ட் டி.சி-ல் இயங்கக்கூடியது. எனவே 150 ஆம்பியர் பாட்டரிகள் இரண்டு சீரியல் முறையில் இணைக்கப்பட்டுள்ளது. சீரியல் இணைப்பு பற்றி முந்தைய பதிவுகளில் விளக்கமாக கூறியுள்ளேன். சீயலில் இணைக்கும் பொழுது 24 வோல்ட்டாக மாறிவிடும். அதாவது 150 ஆம்ப்பியர்-24 வோல்ட் ஆக மாறிவிடும். இணைப்பு படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


இந்த பாட்டரி பேங்கின் பாசிடிவ் முனையை இன்வெர்ட்டரின் பாட்டரி இணைப்பிற்கான கனெக்டரில் பாசிடிவ் முனையுடனும், அதைபோலவே நெகடிவ முனையை  இன்வெர்டரின் பாட்டரி கனெக்ட்டருடனும் இணைக்க வேண்டும். இதற்கு 6sq mm வயரையே இணைக்க வேண்டும். பாசிடிவ்-க்கு சிகப்பு கலர் வயரையும், நெகடிவ்-க்கு கருப்பு கலர் வயரையும் உபயோகப்படுத்த வேண்டும்.

இனி இன்வெர்ட்டரில் ஏசி அவுட்புட்-ல்  Phase, Neutral, Earth  கனெக்டர்கள் இருக்கும். இதை 2.5 Sq mm வயரால் ( சிகப்பு, கருப்பு, பச்சை) சேஞ்ச் ஓவர் சுவிட்ச்சுடன் (10Amp -15Amp)இணைத்து விடவேண்டும். அதைப்போலவே  மின்வாரிய சப்ளையையும் (சிங்கிள் பேஸ் சப்ளை) இந்த சுவிச்சில் இணைக்க வேண்டும். இந்த சுவிட்ச்சின் அவுட்புட்டை  நம் வீட்டின் லைட், பேன் போன்றவற்றின் சர்க்கியூட்டுடன் இணைக்க வேண்டும். இந்த வேலையை நீங்கள் செய்ய முடியாது. எலெக்ட்ரீஷியனால் தான் செய்ய முடியும்.  வாட்டர் ஹீட்டர், ஏசி போன்றவற்றை இதில் இணைக்ககூடாது.

சூரிய வெளிச்சம் இருக்கும் நேரத்தில் இன்வெர்ட்டரிலிருந்து சோலார் மின்சாரத்தை உபயோகிக்குமாறு இந்த சுவிட்ச்சை மாற்றி விட வேண்டும். நாம் உபயோகிக்கும் மின்சாரம் போக, மீதி கிடைக்கும் சோலார் மின்சாரம் பாட்டரியில் சேமிக்கப்படும். மாலையில் சுவிட்ச்சை மின்வாரிய சப்ளைக்கு மாற்றிவிட வேண்டும். பவர்கட் ஏற்பட்டால் இந்த சுவிட்ச்சை சோலாருக்கு மாற்றினால் பாட்டரி மின்சாரம் இன்வெர்ட்டர் மூலம் நமக்கு கிடைக்கும்.

இந்த சிஸ்டத்தை அமைக்க ஆகும் செலவு விபரம் கீழே பட்டியலாக தரப்பட்டுள்ளது.


அடுத்த பதிவில் சந்திப்போம்...........


Monday, July 2, 2012

Do-It-Yourself.1KW-24V Solar Power System.Part.2

முந்தைய பதிவில் குறிப்பிட்ட மாதிரி நீங்கள் சோலார் ஆரே அமைப்பதற்கான இரும்பிலான அமைப்பை (Structure) உருவாக்கி விட்டீர்கள். இதை மேல் பக்க பிரேம் தனியாகவும், கால்கள தனியாகவும் செய்து. பிரேமுடன் கால்களை போல்ட் நட்டு போட்டு பிக்ஸ் செய்யும் வகையில் அமைப்பது நல்லது. அவ்வாறு இருந்தால் மொட்டை மாடிக்கு எடுத்து செல்ல வசதியாக இருக்கும். அங்கு அதை அசெம்பிள் செய்து கொள்ளலாம்.

தெற்கு(South facing) திசையை நோக்கி பேனல் பார்க்கும் வகையில் அதை வையுங்கள். சரியாக திசையை பார்க்க  நீங்கள் திசை காட்டும் கருவியை (Compass) பயன்படுத்தலாம். இனி ஒவ்வொரு பேனலாக பிரேமில் மாட்டவேண்டும். ஒரு பேனல் சுமார் 20 கிலோ எடை உள்ளது. மேல்பக்கத்தில் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. எனவே அதை எடுத்து மாட்டும் பொழுது கவனமாக கையாள வேண்டும். பேனலில் ஜங்ஷன் பாக்ஸ் மேல் பக்கம் இருக்கும் படி வைக்க வேண்டும். பேனலின் பின் பக்கத்திலுள்ள துளைகள், பிரேம் சட்டத்தில் உள்ள துளைகளின் மேல் இருக்கும்படி வைக்கவும். பேனலை சட்டத்தோடு இணைக்க ஸ்டெயின்லெஸ்  ஸ்டீல் (SS Bolt&amp&Nut) அல்லது பித்தளை போல்ட் நட்டைதான் உபயோகிக்க வேண்டும். அது அதிக நீளம் உள்ளதாக இருக்க கூடாது. நீளம் அதிகமாக இருந்தால் அது பேனலை டேமேஜ் செய்துவிடும். சரியான நீளத்தில் இருக்க வேண்டும். அதைப்போலவே அதன் கனம் (Thickness) பேனல் துளையை விட குறைவாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் நான்கு போல்ட்டையும் மாட்டும் வகையில் பேனலை அலைன் செய்ய முடியும்.

இப்பொழுது நான்கு பேனல்களையும் பேரலெல் முறையில் இணைக்க வேண்டும். ஒரு பேனல் 250W. ஆகும். பேரலில் இணைத்தால்தான் அது 1000W ஆக மாறும். அதே நேரத்தில் இந்த பேனல் 24V மின் அழுத்தம் கொண்டது ஆகும். பேரலில் இணைக்கும் பொழுது அதன் மின் அழுத்தம் மாறுபடாமல் அதே 24V ஆகவே இருக்கும். இந்த பேனல் தரும் டிசி கரண்ட் 8.62 ஆம்பியர். பேரலில் இணைக்கும் பொழுது அதன் மொத்த கரண்ட் 34.48(8.62x4) ஆம்பியர் ஆக மாறிவிடும். கீழே கொடுக்கப்பட்டுள்ள விபர குறிப்பை பாருங்கள்.


நான்கு பேனகளையும் பேரலில் இணைப்பதை இப்பொழுது பார்க்கலாம். இதை மூன்று முறையில் இணைக்கலாம்.

1. MC4 Connector, T Connector போன்றவற்றை உபயோகித்து இணைக்கலாம். இந்த கனெக்டர்கள் வாட்டர் புரூஃப் ஆனது. வெளிநாடுகளில் இதைத்தான் உபயோகிக்கிறார்கள். கீழே உள்ள படத்தை பாருங்கள்.

 
கீழே உள்ள படம் MC4, Y கனெக்டர் ஆகியவற்றை உபயோகித்து 3 பேனல்களை இணைத்திருப்பதை காட்டுகிறது. வெளிநாடுகளில் ரெடிமேடாகவே 0.5,1,1.5 மீட்டர் என்ற அளவில் வயரின் இருமுனைகளிலும் சாதாரண MC4 கனெக்டரின் Female, Male பகுதிகள் இணைக்கப்பட்டும், இதைப்போலவே Y கனெக்டர் இணைக்கப்பட்டும் கிடைக்கிறது. இந்த படத்தில் காட்டியுள்ளபடி 4 பேனல்களையும் இணைக்கலாம்.


அடுத்து, கிழே காட்டியபடியும் இணைக்கலாம். இது குழப்பமில்லாத முறை. படத்தை பாருங்கள்


  இந்த முறைப்படி பேரலல் இணைப்பு கொடுக்க தேவையானது 4ஜோடிMC4 கனெக்டர் மட்டுமே. ஒவ்வொரு பேனலிலும் பாசிடிவ் (+) முனை வயரானது Male பகுதியுடனும், நெகடிவ் (-) முனையானது Female பகுதியுடனுடனும் இணைக்க பட்டிருக்கும். எனவே சிகப்பு நிற வயரின் ஒரு முனையில் MC4-ன் Female பகுதியையும், கருப்பு வயரின் ஒரு நுனியில் MC4-ன் Male பகுதியையும் இணைத்து, தனித்தனியாக 4 பேனல்களின் அவுட்புட் கரண்டை, இன்வெர்டர் வைத்திருக்கும் அறைக்கு கொண்டு செல்லலாம். இவ்விதம் தனித்தனியாக இணைப்பை கொண்டு செல்வதால் வயரும் 10 ஆம்பியர் கரண்டை கொண்டு செல்லும் திறன் உள்ளதாக இருந்தால் போதும். வயரினுடைய Current Carrying Capacity பற்றி தெரிந்து கொள்ள இந்த பட்டியலை பாருங்கள்.


இதன்படி ஒவ்வொரு பேனல்களின் அவுட்புட்டை தனியாக எடுத்து செல்ல நமக்கு 8.62 ஆம்பியர் கரண்டை தாங்கும் வயர் எது? மேல் வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளது வயரின் சைஸ் அதாவது Cross Sectional Area of Wire. Current Rating என கீழ் வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளது வயரின் கரண்டை கடத்தும் திறன். நாம் 12 ஆம்பியர் அல்லது 15 ஆம்பியர் திறன் கொண்ட வயரை தேர்ந்தெடுக்கலாம். அதாவது 1.0 sq mm அல்லது 1.5 sq mm வயர். 1.5 sq mm வயரே நல்லது.

நான்கு பேனலையும் பேனலுக்கு பின்பக்கமே பேரலெல் இணைப்பு கொடுத்தால் அதன் மொத்த அவுட்புட் 35 ஆம்பியர் ஆகும். இதை இன்வெர்டருக்கு எடுத்து செல்ல நமக்கு தேவையான வயர் எது என்பதை பார்க்கலாம். 6sq mm என்றால் அதன் திறன் 35 ஆம்பியர். இதை உபயோகிக்க முடியாது. அதனால் 10sq mm உபயோகிக்க வேண்டும். விலையும் அதிகம். பெரிய கடைகளில் மட்டுமே கிடைக்கும். எனவே இரண்டு பேனல்களை பேரலெல் முறையிலும் மற்ற இரண்டை தனியாக பேரலெல் முறையிலும் இணைத்தால் இரண்டு சர்க்கியூட் ஆகும். அப்பொழுது 20 ஆம்பியர் திறன் உள்ள 2.5sq mm வயரை உபயோகித்தால் போதும்.

MC4கனெக்டரே இல்லாமலும் கீழே உள்ள படத்தில் காட்டியிருப்பதை போல "O" டைப் லக்ஸ் (Lugs) உபயோகித்தும் இணைக்கலாம்.



அதாவது பேனலின் ஜங்ஷன் பாக்ஸை திறந்து  வெளியே வரும், MC4 கனெக்டர் இணைக்கப்பட்ட வயரை கழற்றி விட்டு அதில் இந்த லக்ஸ்-ஐ இணைத்து விடலாம்.

அடுத்த பதிவில் சந்திப்போம்........