Tuesday, July 10, 2012

அரசியல்வாதிகளின் "சமூக நீதியும் - இட ஒதுக்கீடு கொள்கையும்". - தொடர்.1

என்னைப்பற்றி ஒரு அறிமுகம். நான் தலித்தும் அல்ல, பிராமணனும் அல்ல. என்னை பொறுத்தவரை ஜாதி, மதம் என்பது நாம் போடும் சட்டையை போலத்தான். நாம் பிறக்கும் போது இது நம்மோடு ஒட்டிக்கொண்டு வந்ததல்ல. இது என் அசைக்க முடியாத கருத்து. அதனால் நான் பொதுவாக ஜாதி, மத வித்தியாசம் பார்ப்பது கிடையாது. "அப்படிஎன்றால் நீங்கள் வேறு ஜாதி பெண்ணை திருமணம் செய்துள்ளீர்களா? அல்லது உங்கள் குழந்தைகளுக்கு வேறு ஜாதியிலிருந்து திருமணம் செய்து வைத்துள்ளீர்களா?" என்ற எதிர் கேள்வி நிச்சயமாக வரும் என எனக்கு தெரியும்.

வாழ்க்கை துணைவி அல்லது துணைவனை தேர்ந்தெடுப்பது என்பது தனிமனித உரிமை மட்டுமல்ல, தன் குடும்பத்தினர், உறவினர்களோடு பொருந்தக்கூடியதாக  இருக்கவேண்டும். ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒவ்வொரு விதமான பழக்க வழக்கங்கள் உண்டு. திருமண பந்தம் என்பது ஒரு நாள் கூத்து அல்ல. ஆயுட்கால பந்தம். எனவே நான் சமுதாய கட்டமைப்பிலிருந்து விலகவில்லை.

சமூக நீதி, இடஒதுக்கீட்டின் மூலம் அவர்களின் முன்னேற்றம் என்ற விஷயத்தை பொறுத்தவரை யாரும் தைரியமாக தங்கள் கருத்தை சொல்ல முன் வருவதில்லை. சொல்லுபவர் பிற்படுத்தப்பட்ட பிரிவை சார்ந்தவராக இல்லை என்றால், பிற்படுத்தப்படாவர்களின் எதிரி என முத்திரை குத்தப்படுவார். அல்லது அவர் பிற்படுத்த ஜாதியை சார்ந்தவராக இருந்தாலும் அவரை ஜாதி துரோகி என முத்திரை குத்திவிடுவார்கள்.

இந்த காரணத்தினால்தான், பிற்படுத்தப்பட்டவர்களின் முன்னேற்றத்தில் ஆர்வம் கொண்டவர்களின் குரல் ஒலிப்பதில்லை. ஜாதி தலைவர்கள், அரசியல்வாதிகளின் திட்டமிட்ட சதியால், இன்று வரை  பிற்பட்டோருக்கான உண்மையான முன்னேற்றம் அவர்களை சென்றடையவில்லை.

ஆனால் அரசின் புள்ளிவிபரம் இட ஒதுக்கீட்டின் மூலம் ஆண்டு ஒன்றுக்கு எவ்வளவு நபர்கள் பொறியியல் படிப்பிலும், மருத்துவ படிப்பிலும் இட ஒதுக்கீட்டின் மூலம் சேர்க்கப்பட்டு பயனடைந்துள்ளார்கள் என்பதை காட்டும். அதைப்போலவே அரசு பணியிடங்களை நிரப்பும் பொழுது இந்த ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படுகிறது என மார் தட்டிக்கொள்வார்கள். 

இவ்வளவு புள்ளி விபரம் கொடுப்பவர்களால், இன்னும் ஏன் ஜாதி அடிப்படையிலும் மத அடிப்படையிலும் பிறபட்ட நிலையில் உள்ளவர்கள், நாடு சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆகியும் ஏன் முன்னேறவில்லை என்ற கேள்விக்குமட்டும் பதில் சொல்ல மாட்டார்கள். "இவர்கள் முன்னேறக்கூடாது. சலுகை கொடுப்பது போல கொடுப்போம். ஆனால் அது பலனளிக்க கூடாது". இது தானே அனைத்து அரசியல் கட்சிகளின் மறைமுக செயல் திட்டம்! "நோயாளி இருந்தால் தானே வைத்தியனுக்கு கொண்டாட்டம்". இவர்கள் பின் தங்கிய நிலையிலேயே இருந்தால்தானே தேர்தலின் போது, "உங்களை முன்னேற்ற எங்களுக்கு ஓட்டு போடுங்கள்"  என பொய் பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வரமுடியும்!.

ஜாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் பின் தங்கிய நிலையில் இருப்பவர்களின் முன்னேற்றத்தில் ஆர்வம் கொண்ட இந்திய பிரஜை நான் என்ற முறையில், என்னுடைய கருத்துக்களை சொல்ல இருக்கிறேன். நிச்சயமாக "இட ஒதுக்கீட்டால் பலன் உண்டு. எத்தனையோ பேர் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், எஞ்சினீயர், டாக்டர் என உருவாகியுள்ளனர்" என பட்டியலுடன் பின்னூட்டம் வரும் என்பது தெரியும். அதற்கும் விளக்கம் உண்டு.

மீண்டும் சந்திப்போம்.............


4 comments:

 1. Replies
  1. இது மிகவும் சென்சிஸ்டிவ்வான விஷயம். கிட்டத்தட்ட புலிவாலை பிடித்த கதைதான். தங்கள் வருகைக்கு நன்றி

   Delete
 2. Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete