Friday, August 31, 2012

கடல்புறா - யவண ராணி. சாண்டில்யனின் சரித்திர நாவல்கள்

கடல்புறா

பி.டி.எஃப் வடிவில் புத்தகத்தை டவுன்லோடு செய்ய கீழே உள்ள லிங்-ஐ கிளிக் செய்யவும்.

கடல்புறா. பாகம். 1

கடல் புறா. பாகம் .2

கடல்புறா பாகம். 3

யவண ராணி

பி.டி.எஃப் வடிவில் புத்தகத்தை டவுன்லோட் செய்ய கீழெ உள்ள லிங்-ஐ கிளிக் செய்யவும்.
யவன ராணி. பாகம். 1

யவன ராணி. பாகம். 2


மீண்டும் சந்திப்போம்.................

Thursday, August 30, 2012

மின்சாரம்-பகுதி.12

2-வே சுவிட்ச் இணைப்பை பற்றி இப்பதிவில் பார்க்கலாம். பொதுவாக வீடுகளில் படுக்கை அறை, வராண்டா, மாடிப்படி ஆகிய இடங்களில் உள்ள விளக்குகளுக்கு 2-வே சுவிட்ச் பயன்படுத்தப்படும். படுக்கை அறையை பொறுத்தவரை மின் விசிறிக்கும் பயன்படுத்தப்படும்.

உதாரணத்திற்கு வராண்டா விளக்கு இணைப்பை எடுத்துக்கொள்ளலாம். இந்த சர்கியூட்டிற்கு 2-வே (Two Way) சுவிட்ச் இணைப்பு எப்படி கொடுக்கப்படுகிறது, அது எப்படி செயல்படுகிறது, அதன் உபயோகம் இவற்றை பார்க்கலாம்.

நாம் குடும்பத்துடன் வெளியில் சென்றுவிட்டு இரவில் வீடு திரும்புகிறோம் என வைத்துக்கொள்வோம். வராண்டா லைட்டுக்கு வராண்டா சுவிட்ச் போர்டில் ஒரு 2-வே சுவிட்ச்சும், ஹாலில் உள்ள சுவிட்ச் போர்டில் ஒரு 2-வே சுவிட்ச்சும் பொருத்தப்பட்டிருக்கும். லைட் ஆஃப் செய்யப்பட்டிருக்கும் நிலையில் 2-வே சர்கியூட் எந்த நிலையில் இருக்கும் என்பதை கீழே உள்ள படம் காட்டுகிறது.                                                                                  
 .
படத்தில் இடது கைப்பக்கம் உள்ளது  வராண்டாவில் உள்ள  சுவிட்ச் போர்டில் பொருத்தப்பட்டுள்ள சுவிட்ச் ஆகும்.  வலது பக்கம் உள்ள சுவிட்ச் ஹாலில் உள்ள சுவிட்ச் போர்டில் பொருத்தப்பட்டுள்ளது ஆகும்.

இந்த இரண்டு சுவிட்ச்சுகளுமே ஆஃப் நிலையில் உள்ளது.  நியூட்ரல் சப்ளையானது  நேரடியாக சப்ளையிலிருந்து(சுவிட்ச் போர்டிலிருந்து) சீலிங் ரோஸ் வழியாக பல்ப் அல்லது டியூப் லைட்டுக்கு செல்கிறது. 

2-வே சுவிட்ச்சில் 1,0,2 என மூன்று டெர்மினல் அல்லது காண்டாக் உண்டு. "0" என்ற நடுவில் உள்ள காண்டாக் பொதுவானது.  வராண்டாவில் உள்ள சுவிட்ச்சின் "2" என அடையாளமிடப்பட்ட காண்டாக்ட், ஹாலில் உள்ள சுவிட்ச்சின் "1" என அடையாளமிடப்பட்டுள்ள காண்டாக்டுடன் வயர் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இதை போலவே வராண்டா சுவிட்ச்சின் "1" என அடையாளமிடப்பட்டுள்ள காண்டாக்ட் ஹாலில் உள்ள சுவிட்ச்சின் "2" என்ற காண்டாக்டுடன் வயரால் இணைக்கப்பட்டுள்ளது.

 சப்ளையின் பேஸ் முனை, வரண்டா சுவிட்ச்சின் "0" என்ற காண்டாக்டுடன் இணைக்கப்பட்டுள்ளது.  ஆஃப் நிலையில் "0" மற்றும் "1" ஆகிய இரு டெர்மினல் களுக்கும் இணைப்பு இருப்பதால் பேஸ் சப்ளை  காண்டாக்ட் "2" லிருந்து வயர் வழியாக ஹாலில் உள்ள  சுவிட்ச்சின் காண்டாக்ட் "1"  -க்கு செல்லும். அந்த சுவிட்ச் ஆஃப் நிலையில் இருப்பதால் அந்த சுவிட்ச்சின்  காண்டாக்ட் "0" -க்கு செல்ல முடியாது. எனவே பேஸ் சப்ளை லைட்டுக்கு கிடைக்காததினால் லைட் எரியாது.

இனி இரண்டாம் நிலையை பார்க்கலாம்.  நீங்கள் வராண்டாவில் உள்ள சுவிட்ச்சை ஆன் செய்யும் பொழுது எப்படி இணைப்பு மாறுகிறது என்பதை கீழே உள்ள படம் விளக்குகிறது.
வராண்டா சுவிட்ச்சை ஆன் செய்தவுடன் அந்த சுவிட்ச்சில்  "0" & "1" ஆகிய இரு காண்டாக்டுக்கும் இணைப்பு ஏற்பட்டு பேஸ் சப்ளை "1"-வது காண்டாக்டிலிருந்து வயர் மூலம்  ஹாலில் உள்ள சுவிட்ச்சின் காண்டாக்ட்"2"-ஐ அடைகிறது. அந்த சுவிட்ச்சின் காண்டாக்டுகள் "2" & "0" இணைப்பில் உள்ளதால், பேஸ் சப்ளை லைட்டுக்கு செல்லும். எனவே லைட் எரியும். அந்த லைட் வெளிச்சத்தில் ஹால் கதவை (மெயின் டோர்) திறந்து உள்ளே போய் விடுவோம்

இனி மூன்றாவது நிலையை பார்ப்போம். ஹாலில் இருக்கும் வராண்டா லைட்டிற்கான சுவிட்ச்  ஆஃப் நிலையில் இருக்கும். ஆனால் வராண்டா லைட் எரிந்து கொண்டிருக்கும். லைட்டை அணைக்க வேண்டுமானால் ஹாலில் உள்ள இந்த சுவிட்ச்சை ஆன் நிலைக்கு மாற்றினால் போதும். லைட்டுக்கு செல்லும் பேஸ் சப்ளை துண்டிக்கப்பட்டுவிடும். இதை கீழே உள்ள படம் விளக்குகிறது.

இனி நான்காவது நிலையை பார்க்கலாம். இப்பொழுது வரண்டா லைட் ஆஃப் நிலையில் உள்ளது. வராண்டாவில் உள்ள சுவிட்ச்சும் ஹாலில் உள்ள சுவிட்ச்சும் ஆன் நிலையில் உள்ளது.  இப்பொழுது வராண்டாவில் உள்ள சுவிட்ச்சை ஆன் நிலையில் இருந்து ஆஃப் நிலைக்கு மாற்றினால் லைட்டுக்கு பேஸ் சப்ளை கிடைத்து லைட் எரியும். இதை கீழே உள்ள படம் விளக்குகிறது.


சுருக்கமாக சொல்லப்போனால், 2-வே இணைப்பில் இரு சுவிச்சுகளும் ஒரே நிலையில் இருந்தால் லைட் எரியாது.  அதாவது ஒரு சுவிட்ச் ஆஃப்  நிலையிலும் மற்றது ஆன் நிலையிலும் இருக்க வேண்டும். இதுதான் 2-வே சர்க்கியூட்டின் கொள்கை.

மீண்டும் சந்திப்போம்.....................


Monday, August 27, 2012

மொட்டை மாடியில் ஆர்கானிக் காய்கறி தோட்டம்-கத்தரிக்காய்(Brinjal / Eggplant)

கத்தரிக்காய்


கத்தரி செடியின் ஆயுள் காலம்  சுமார் 150 நாட்கள். இது செடியின் ரகத்தை பொறுத்து  சில நாட்கள் வித்தியாசப்படும். 

தயார் செய்த மண் கலவையை,  டிரே அல்லது பிளாஸ்டிக் கேன் தொட்டியில் மூன்றில் இரண்டு பங்கு நிரப்ப வேண்டும். அதன் பின் விரலால் அரை அங்குலம் பள்ளம் ஏற்படும் வகையில் நீட்டு வசத்தில் கோடு போட வேண்டும். ஒரு கோட்டுக்கும் அடுத்த கோட்டுக்கும்  இரண்டு அங்குல இடைவெளி இருக்குமாறு கோடுகளை போட வேண்டும். அதன் பின் அந்த பள்ளத்தில்  இடைவெளி விட்டு கத்தரி விதைகளை ஒன்றிரண்டாக தூவ வேண்டும். பின் பள்ளத்தின் இருபக்கம் இருக்கும் மண்ணால் மூடி சமப்படுத்த வேண்டும். 

 காய்கறி தோட்டத்தில் கத்தரி பயிர் செய்யும் சிறு விவசாயி, சிறு அளவிலான  விதை படுக்கையை தயார் செய்து அதில் விதைப்பு செய்ய விரலால் பள்ளமாக்குவதை கீழே உள்ள படம் காட்டுகிறது.


அதன்பின்பு அந்த பள்ளத்தில் விதையை பரவலாக துவுவதை கீழே உள்ள படம் காட்டுகிறது.


விதை தூவப்பட்ட பின் மண்ணால் விதைகள் மூடப்படுவதை கீழே உளள படம் காட்டுகிறது.

அதன் பின் விதை முளைப்பதற்கு தேவையான ஈரப்பதம் மண்ணில் இருக்கும் வகையில் தினமும், விதை வெளியே வந்து விடாதபடி கவனமாக  பூவாளி மூலம்  தண்ணீர் தெளிக்க வேண்டும்.

ஒரு சில நாட்களில் விதை முளைத்து செடி வெளியே தெரியும். கிட்டத்தட்ட 30-35 நாட்களில்  மூன்று அல்லது நான்கு இலைகள் கொண்ட நாற்றாக வளர்ந்து விடும். அச்சமயம், அதன் வேர்கள் அறுந்து விடாதபடி கவனமாக பிடுங்கி  ஒரு தொட்டிக்கு ஒரு செடி வீதம் நட வேண்டும். இதை கீழே உள்ள படத்தில் காட்டிய படி பிளாஸ்டிக் கோணியிலும் வளர்க்கலாம்.


நாற்று நட்ட 40-45 நாட்களில்  நன்கு வளர்ந்த செடியாகி பூக்க ஆரம்பிக்கும். பூவின் படம் கீழே காட்டப்பட்டுள்ளது.

 அதன் பின் பூ காயாக மாறும்.  சுமார் இரண்டரை மாதம் காய் காய்க்கும். 

பூ பூக்கவும் அது காயாக மாறவும் அதற்கு தேவையான சத்தை கொடுக்கும் வகையில் வாரம் ஒரு முறை மக்கிய கம்போஸ்ட், மண்புழு உரம் ஆகியவற்றை போட்டு மண்ணை கிளறி விடவேண்டும்.  பூச்சி, புழுதாக்குதல் ஏற்படாமலிருக்க  முன் பதிவில் கூறியபடி வேப்பெண்ணை கரைசலை தெளிக்க வேண்டும்.

இதில் குறிப்பிடப்பட்டுள்ள நாட்க்கள் கணக்கு உத்தேசமானதே. விதையின் ரகம் இனம் ஆகியவற்றிற்கு ஏற்ப நாட்கள் வித்தியாசப்படும்.





Friday, August 24, 2012

சமையலறை கழிவில் இருந்து சமையல் எரிவாயு.3

இந்த தொடரின்  பகுதி 2-ல் குறிப்பிட்டபடி ARTI எனப்படும் Appropriate Rural Technology Institute-க்கு நான் அனுப்பிய மெயிலுக்கு பதில் அனுப்பி இருக்கிறார்கள். கீழே அவர்கள் தந்துள்ள கட்டண விபரங்கள் உள்ளன.

நான் விபரம் கேட்டிருந்தது, ரூ.2,500-க்கு இவர்கள் அனுப்பக்கூடிய கிட்(KIT)-ல் என்னென்ன பொருட்கள் இருக்கும் என்பதை பற்றிதான். அதைப்பற்றி எதுவுமே பதிலில் இல்லை.

இவர்களையே, நிர்மானம் செய்ய சொன்னால் தொட்டி, பைப் போன்ற பொருட்களை நம் ஊரிலேயே வாங்குவார்களாம். அவற்றின் விலையுடன் பயோ கேஸ் அடுப்பு, வால்வு அடங்கிய(என்னுடைய யூகம்) கிட்-க்கு ரூ.2500, ARTI Institutional Overhead Rs.1000, Technology Transfer charge Rs.1000, கூலி ரூ.6000, போக்குவரத்து செலவு இவற்றையெல்லாம் கொடுக்க வேண்டுமாம். இது வேலைக்கு ஆகாது. ARTI Institutional Overhead,  Technology Transfer charge,கூலி இவற்றை எல்லாம் கணக்கிட்டு கம்பெனிகள் விலையை நிர்ணயம் செய்கிறது. இந்த என்.ஜி.ஓ-க்கும் கம்பெனிகளுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை!

எனவே சென்னையில் இருக்கும் சிண்டெக்ஸ் வினியோகஸ்தரை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது 1000 லிட்டர் டைஜெஸ்டருக்கு  ரூ.24,000, 750 லிட் டைஜெஸ்டருக்கு ரூ.19,000 எனவும் விலை கூறினார்கள். சிண்டெக்ஸ் டைஜெஸ்டரின் படம் கீழே.


இந்த பதிவில் பயோ கேஸ் சிஸ்டம்(Anaerobic Digester) உள்ளூரில் கிடைக்கும் பொருட்களை உபயோகித்து தயார் செய்வதற்கு தேவையான பொருட்களை முதலில் பார்க்கலாம்.

முதலில் நாம் எவ்வளவு கொள்ளளவு கொண்ட சிஸ்டத்தை அமைக்க போகிறோம் என்பதை முடிவு செய்ய வேண்டும். நான்கு நபர்களுக்கு அதிகமாக அங்கத்தினர்கள் இருக்கும் குடும்பத்திற்கு 1.5 கியூபிக் மீட்டர்(1500 லிட்டர்), நான்கு நபர்கள் வரையுள்ள குடும்பத்திற்கு 1.0 கியூபிக் மீட்டர்(1000 லிட்டர்) கொள்ளளவு கொண்ட சிஸ்டம் தேவை. 

1500 லிட்டர் சிஸ்டம் என்றால் 1500 லிட்டர் தொட்டியும், 1000 லிட்டர் தொட்டியும் தேவை. 1000 லிட்டர் சிஸ்டம் என்றால் 1000 லிட்டர் தொட்டியும் 750 லிட்டர் தொட்டியும் தேவை. கீழே சிண்டெக்ஸ் தொட்டியின் அளவுகள் கொடுக்கப்பட்டுள்ளது.


பெரிய தொட்டிக்குள் சிறிய தொட்டியை தலைகீழாக கவிழ்த்த வேண்டும்.  பெரிய தொட்டிக்குள் (டைஜெஸ்டர் தொட்டி) தண்ணீருடன் சேர்த்து போடப்படும் சமையலறை கழிவிலிருந்து உருவாகும் கேஸ்-ஐ, கேஸ் ஹோலடர் எனப்படும் தலைகீழாக கவிழ்க்கப்பட்ட சிறிய தொட்டியினுள் சேமிக்க வேண்டும். இதுதான் இந்த சிஸ்டத்தின் அடிப்படை தொழில் நுட்பம்.                                           

1500 லிட்டர் தொட்டிக்குள் 1000 லிட்டர் தொட்டியை வைக்க முடியும். காரணம் அதன் விட்டம் 110 செ.மீ. 1500 லிட்டர் தொட்டியின் விட்டம் 135 செ.மீ. இதைப்போலவே 1000 லிட்டர் தொட்டியின் விட்டம் 110 செ.மீ என்பதால் 103 செ.மீ விட்டம் கொண்ட 750  லிட்டர் தொட்டியை அதனுள் வைக்க முடியும்.

Do It Yourself என்ற முறையில் 1500 லிட்டர் கொள்ளளவு கொண்ட டைஜெஸ்டர் சிஸ்டத்தை நாமே செய்வது பற்றி கீழே படங்களுடன் விரிவாக பார்க்கலாம். கீழே படத்தில் காட்டியபடி இரண்டு பிளாஸ்டிக் தொட்டியை தயார் செய்ய வேண்டும்.


1500 லிட்டர் தொட்டியின் மேல் பக்கம் நடுவில் 115 செ.மீ அளவிற்கு வட்ட வடிவமாக ஹேக்சா (HACKSAW) பிளேடு மூலம் வெட்டி எடுத்து விடவேண்டும்.

இப்பொழுது  தொட்டியின் மேல் பக்கம் 115 செ.மீ அளவுக்கு திறப்பு இருப்பதால் இதனுள் 110 செ.மீ விட்டம் உள்ள 1000 லிட்டர் தொட்டி தாராளமாக செல்லும். படத்தை பாருங்கள்

இனி பெரிய(டைஜெஸ்டர்)தொட்டியில் இணைக்க வேண்டிய இன்லெட் மற்றும் அவுட்லெட் பைப்புகளுக்கு தேவையான பிளம்பிங் பொருட்களை பார்க்கலாம். அவற்றின் படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


நாம் அவுட் லெட்டுக்கு 2 1/2 இஞ்ச்(63 எம்.எம்) பைப்பு உபயோகித்தால், அதற்கான எல்போ, மேல் திரெட்டட் கப்ளர், பிமேல் திரெட்டட் கப்ளர் அல்லது நட்டு இவை எல்லாமே 2 1/2 இஞ்ச் ஆக இருக்க வேண்டும். அதைப்போல இன்லெட்-க்கு 3 இஞ்ச் பைப்பு உபயோகித்தால் அதற்கு தேவைப்படும் சாதனங்கள் எல்லாமே 3 இஞ்ச் ஆக இருக்க வேண்டும்.  இது பற்றி பின் விரிவாக பார்க்கலாம்.

இனி இந்த தொட்டியின்(பெரிய தொட்டி) மேல்பக்கம் கீழே உள்ள படத்தில் காட்டிய்படி 2.5"(63mm) அளவுள்ள MTA -ன் மரை உள்ள பக்கம், இறுக்கமாக உள்ளே செல்லும் வகையில் துளை போட வேண்டும்.

இதற்கு  MTA -ன் மரை(thread) பகுதியின் கனம் கொண்ட இரும்பு பைப் ஒன்றை எடுத்து நன்றாக தீயில் பழுக்க சூடு செய்து, அதை துளை போடவேண்டிய இடத்தில் அசைக்காமல் வைத்து அழுத்தினால் பைப் உள்ளே செல்லும். பைப்பை வெளியே எடுத்துவிட்டால் துளை ஆகிவிடும். பைப்பை தொட்டியில் வைத்து அழுத்தி உள்ளே நுளைத்து பின் வெளியே எடுக்கும் வரை, பைப்பை பக்க வாட்டில் அசைக்க கூடாது. அவ்விதம் செய்தால் ஒட்டை பெரியதாகிவிடும். கீழே உள்ள படங்களை பாருங்கள்.


துளையை உண்டாக்க தேவையான இரும்பு பைப்-ஐ அடுப்பில் பழுக்க சூடாக்க வேண்டும். கீழே உள்ள படத்தில் காட்டியபடி சூடாக்கப்பட்ட பைப்பை இடுக்கியால் (Grip Pliers)  பிடித்து தொட்டியின் மீது வைத்து அழுத்தினால் ஒட்டை விழும்.

.
அல்லது "Hole Saw Cutter" எனப்படும் துளைபோடும் கருவியை டிரில் மிஷினில் மாட்டி தேவைப்படும் அளவுக்கு துல்லியமாக துளை போடலாம். இந்த கருவி பிளைவுட் வேலை செய்யும் எல்லா கார்பெண்டர்களிடமும் இருக்கும். படம் கீழே.


இனி இதைப்போலவே இப்பொழுது போட்ட துளைக்கு எதிர்பக்கத்தில் கீழ்பக்கமாக கழிவுகளை போடும் பைப்-ஐ மாட்டுவதற்கான துளை போடவேண்டும். எந்த இடத்தில் துளை வர வேண்டும் என்பதை கீழே உள்ள படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.




இனி 1000 லிட்டர் அளவுள்ள தொட்டியில், அதன் மேல் பக்கம், அதாவது மூடி இருக்கும் பக்கம்,  கீழே உள்ள படத்தில் காட்டியபடி ஹேக்சா பிளேடினால் நான்கு பகுதிகளையும் வெட்டி எடுத்து விடவும். அதைப்போலவே மூடியையும் கழற்றி விடவும்.


கேஸ் ஹோல்டர் எனப்படும் இந்த தொட்டியை டைஜெஸ்டர் எனப்படும் பெரிய தொட்டிக்குள் தலைகீழாக கவிழ்த்தி வைக்கும் போது, வெட்டப்பட்ட பகுதி மற்றும் மூடியை கழ்ற்றியதால் ஏற்பட்ட திறப்பு இவற்றின் வழியாக, டைஜெஸ்டர் தொட்டிக்குள் நாம் ஊற்றும் சமையலறை கழிவும் தண்ணீரும் சென்று இரண்டு தொட்டிகளிலும் சமமாக நிரம்பும்.

அடுத்த பகுதியில் டைஜெஸ்டர் தொட்டியில் கழிவுகளை போடும் பைப் இணைப்பு,  மக்கிப்போன கழிவு கூழ் வெளிவரும் அவுட் லெட் பைப் இணைப்பு மற்றும் கேஸ் ஹோல்டர் எனப்படும் சிறிய தொட்டியில் பொருத்த வேண்டிய கேஸ் வால்வு இவற்றை பற்றி விரிவாக பார்க்கலாம்.

மீண்டும் சந்திப்போம்............


Thursday, August 23, 2012

மொட்டை மாடியில் ஆர்கானிக் காய்கறி தோட்டம்-முட்டைகோஸ்(Cabbage)

முட்டைக்கோஸ் (Cabbage)


நம் வீட்டு சமையலில் வாழைக்கய், கத்தரிக்காய், உருளை கிழங்கு போன்று முக்கிய இடம் பெறும் காய் முட்டைகோஸ் ஆகும். வீட்டு தோட்டத்திலும், தொட்டியிலும் எளிதாக வளர்க்க முடியும். இந்த பதிவில் இதைப்பற்றி பார்க்கலாம்.

இதை பயிர் செய்ய ஏற்ற காலம் மலைப்பாங்கான பகுதியில்(Hills) ஜனவரி-பிப்பிரவரி, ஜூலை-ஆகஸ்ட், செப்டம்பர்-அக்டோபர். சமவெளி பகுதியில் ஆகஸ்ட்-நவம்பர். இந்த கால விபரங்கள் பெரும் விவசாயிகளுக்குத்தான். நாம் எப்பொழுது வேண்டுமானாலும் பயிரிட்டு பார்க்கலாம். இதன் விதையை  தொட்டியில்/பிளாஸ்டிக் டிரேயில் விதைக்கலாம்.  பத்து செ.மீ இடைவெளியில் விதைகளை பரவலாக விதைக்க வேண்டும். கீழே விதையின் படம் காட்டப்பட்டுள்ளது.



கீழே உள்ள படத்தில், மூன்றில் இரண்டு பாகம் மண் கலவை நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் கேனில் விதையை நடும் முறை காட்டப்பட்டுள்ளது. பென்சிலால் சுமார் அரை அங்குல ஆழத்திற்கு பள்ளத்தை ஏற்படுத்தி அதனுள் ஒரு விதை என்ற கணக்கில், ஒரு விதைக்கும் அடுத்த விதைக்கும் சுமார் 10 செ.மீ இடைவெளியில் தேவையான விதைகளை விதைக்கவேண்டும். விதை போட்ட குழிகளை பக்கத்திலுள்ள மண்ணால் நிரப்பி விட வேண்டும். அதன் பின் பூவாளியால் தொட்டி மண் மீது மிதமான ஈரப்பதம் வரும் வரை தண்ணீர் தெளிக்க வேண்டும். 


இவ்விதம் தினமும் தொடர்ந்து மண்ணில் ஈரப்பதம் இருக்குமாறு தண்ணீர் தெளிக்க வேண்டும். ஒரு சில நாட்களில் விதை முளையிட்டு, செடி வெளியே வரும். கீழே உள்ள படத்தை பார்க்கவும்.


நான்கு ஐந்து இலைகள் வந்த பின், செடியை பிடுங்கி வேறு தொட்டிகளில் (கேன்) தொட்டிக்கு ஒன்றுவீதம்  நட வேண்டும். அவ்வாறு செடியை நடுவதற்காக  நாற்றை பிடுங்கும் பொழுது அதன் வேர்கள் அறுந்து விடக்கூடாது.  கீழே உள்ள படத்தில் காட்டியபடி செடியின் பக்கவாட்டில் மண்ணை கம்பியால் லேசாக கிளறி  செடியை எடுக்க வேண்டும்.


அதற்கு முன்பாகவே தேவைப்படும் கேன்களை மரப்பலகையின் மீதோ அல்லது செங்கல்களின் மீதோ வைத்து மண்கலவையை ஒவ்வொரு தொட்டியிலும் மூன்றில் இரண்டு பாகம் நிரப்பி ரெடியாக வைத்திருக்க வேண்டும்.



கீழே உள்ள படத்தில் காட்டியபடி ஒவ்வொரு தொட்டியின் நடுவிலும் ஒரு செடியை நடவேண்டும்.  நடுதல் என்றால் தொட்டியின் நடுவில் செடியின் வேர்கள் புதையும் அளவிற்கு குழியாக்கி அதனுள் வேர்கள் இருக்குமாறு நிற்க வைத்து பக்கத்திலுள்ள மண்ணால் குழியை நிரப்ப வேண்டும்.




சுமார் 50-60 நாட்களில் முட்டைகோஸ் உருவாகும். அது நன்றாக பெரியதாக ஆனவுடன் அறுத்தெடுத்து  உபயோகப்படுத்தலாம். கீழே உள்ள படத்தில் சிறிய அளவில் முட்டைகோஸ் வந்துள்ளது.


செடி வளர்ப்பவர்கள் தினமும் காலையிலும் மாலையிலும் சில நிமிடங்களாவது செடியை கவனிக்க வேண்டும். செடியில் எதாவது புழு அல்லது பூச்சி இருந்தால் அதை அழித்து விட வேண்டும்.  செடியின் இலையை பூச்சி அரித்து இருந்தால் அந்த இலையை வெட்டி எடுத்து விட வேண்டும். கீழே உள்ள படத்தை பார்க்கவும். உடனடியாக வேப்பெண்ணை, வேப்பெண்ணை சோப்பு கரைசல் இவற்றை தண்ணீரில் கலந்து செடியின் மீது ஸ்பிரே செய்ய வேண்டும்.


கீழே உள்ள படம் ஸ்பிரேயர் மூலம் மேலே கூறிய கரைசலை தெளிப்பதை காட்டுகிறது.


ஒவ்வொரு வாரமும் மக்கிய தழை உரம் அல்லது மண்புழு உரத்தை போட்டு மண்ணை கம்பால் செடிக்கு பாதிப்பு வராதவாறு கிளறி விட வேண்டும்.  தொட்டியில் இருக்கும் அதிகப்படியான நீர் துளையின் வழியாக வெளியே வரும். செங்கல் அல்லது பலகையின் மீது தொட்டியை வைப்பதால் துளைக்கு கீழ் புறம் சிறிய பிளாஸ்டிக் டப்பாவை வைத்து அந்த நீரை சேமித்து மீண்டும் பயன்படுத்தலாம். இதனால் மொட்டை மாடியின் தரை வீணாகாது. தண்ணீர் ஊற்ற பூவாளிக்கு பதில் துளையிடப்பட்ட மினரல் வாட்டர் பாட்டிலில் நீரை நிரப்பி தொட்டியினுள் வைக்கலாம். சொட்டு நீர் பாசன முறையில் நீர் பாயும்.


மீண்டும் சந்திப்போம்............


Wednesday, August 22, 2012

மொட்டை மாடியில் ஆர்கானிக் காய்கறி தோட்டம்

இன்றைக்கு இருக்கும் விலைவாசியில் சுமார் குழந்தைகள் உட்பட நான்கு நபர்கள் இருக்கும் குடும்பத்துக்கு சராசரியாக ரூ.40-50 க்கு காய்கறி வாங்க வேண்டும். எப்படி பார்த்தாலும் மாதத்துக்கு ரூ.1500/- செலவாகிறது. இவ்விதம் வாங்கும் காய்கள், பூச்சி கொல்லி மருந்து தெளித்து வளர்க்கப்பட்ட செடிகளிலிருந்து கிடைப்பவை. அதன் நச்சு தன்மை காய்களிலும் இருக்கும். எவ்வித ரசாயனப்பொருளும் உபயோகிக்காமல் இயற்கை முறையிலேயே நமக்கு தேவையான காய்களை ஏன் நாம் உற்பத்தி செய்யக்கூடாது? அதற்கு வீட்டில் தோட்டம் போட இடம் வேண்டும் என கவலைப்படவேண்டாம். இருக்கவே இருக்கிறது மொட்டை மாடி!

பிளாஸ்டிக் கோணிகள் அல்லது பிளாஸ்டிக் கேன் இவற்றை செடி வளர்க்க பயன்படுத்தலாம். மினரல் வாட்டர் பாட்டிலிலின் கீழ் பக்கம் ஊசியால் சிறிய துளை போட்டு அதில் நீர் நிரப்பி, செடியின் மூட்டில் வைப்பதன் மூலம் சொட்டு நீர் பாசன முறையில் தண்ணீர் ஊற்றலாம். தண்ணீர் செலவு குறைவு.

மிளாகாய், தக்காளி, கத்தரி, வெண்டை, முட்டைகோஸ், காலிஃப்ளவர், அவரை, பாகற்காய், காராமணி(தட்டப்பயறு) பீக்கங்காய், புடலங்காய், சுரைக்காய், வெங்காயம் போன்ற எல்லா காய்களையும் உற்பத்தி செய்யலாம்.

சில செடிகளின் விதைகளை நேரடியாக விதைக்க(ஊன்றுதல்) வேண்டும். உதாரணம் வெண்டை, அவரை, முட்டைகோஸ். சிலவற்றை விதைத்து பின் நாற்றாக வளர்ந்த பின் தனித்தனியாக நடவு செய்ய வேண்டும். உதாரணம் கத்தரி, மிளகாய், தக்காளி.

தேவையான பொருட்கள்

1. நாற்றுக்கள் தயார் செய்ய: குழித்தட்டு (Multi Cell Tray) & பிளாஸ்டிக் டிரே(Plastic Tray)
  

பிளாஸ்டிக் டிரே

குழித்தட்டுகள் செடி மற்றும் விதைகள் விற்கும் நர்சரியில் கிடைக்கும். இது நம் ரெஃப்பிரிஜியேட்டரில் ஐஸ் கியூப்புக்கு உள்ள தட்டை போலவே இருக்கும். இதற்கு பதில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்கும் கடையில் கிடைக்கும் டிரேயை உபயோகப்படுத்தலாம். ஆனால் இவை 5அங்குல ஆழம்(Depth)) உள்ளதாக இருக்க வேண்டும். சாதாரணமாக 1 /12 அடிக்கு 1 1/4 போன்ற சைஸ்களில் கிடைக்கும். தேவையான சைஸ் பார்த்து வாங்கலாம்.

2. செடி வளர்க்க:  பிளாஸ்டிக் கோணிகள் / பெரிய பிளாஸ்டிக் கேன்
செடியை வளர்க்க பிளாஸ்டிக் கோணியை பயன்படுத்தலாம். இப்பொழுதெல்லாம் அரிசியிலிருந்து ரசாயன பொருட்கள் வரை எல்லாவற்றையும்  சணல் கோணிகளுக்கு பதிலாக பேக் செய்ய கம்பெனிகள் இந்த பிளாஸ்டிக் கோணிகளைத்தான் உபயோகிக்கிறது. எனவே இவற்றை பழைய புட்டி கடையில் தேவையான அளவிற்கு மலிவாக வாங்கலாம்.

உதாரணத்திற்கு 2 அடி அகலமும் 3 அடி உயரமும் உள்ள கோணியை எடுத்துக்கொள்வோம். கோணியின் வாய் பகுதியை உட்புறமாக அடிப்புறத்தை தொடுமாறு  மடக்க வேண்டும். இப்பொழுது கோணியின் உயரம் 1 1/2 அடியாக ஆகிவிடும். அதன் சுற்றுப்பகுதி இரண்டு லேயர் உள்ளதாக ஆகிவிடும்.  இதனுள் செடிவளர்க்க தேவையான மண்ணை நிரப்ப வேண்டும். தண்ணீர் தேங்கி நிற்பதை தவிற்க  கோணியின் பக்க வாட்டில், கீழ் பக்கமாக கனமான ஊசியால் ஒரு சில துவாரங்களை போடவேண்டும்.


பிளாஸ்டிக் கோணி

அல்லது பெரிய பிளாஸ்டிக் கேன்களை பயன்படுத்தலாம்.இவை பல வருடங்கள் உழைக்கும். படத்தில் காட்டியபடி பெரிய கேன்களை எடுத்து இரண்டாக ஹாக்சா பிளேடினால் அறுத்தால் இரண்டு தொட்டிகள் கிடைக்கும். அவற்றின் கீழ் பக்கம் தண்ணீர் வடிய துளையை போடவேண்டும். அதன் பின் இதில் மண்ணை நிரப்பி செடி வளர்க்கலாம்.




3. செடி வளக்க தேவையான மண்: 
 தோட்ட மண், சாண தூள், மக்கிய கம்போஸ்ட் உரம், மணல். இவை நான்கையும் சம அளவில்(1:1:1:1) கலந்து மண் கலவையை தேவையான அளவிற்கு  தயார் செய்து கொள்ள வேண்டும். இதில் கல், செங்கல் கட்டி, சிமிண்ட் கலவைகள், செடி, களைகள் இவை இல்லாதவாறு சுத்தம் செய்து உதிரியாக ஆக்க வேண்டும்.


காய்ந்த சாணத்தூள், மக்கிய கம்போஸ்ட் உரம் இல்லை என்றால் மண்புழு உரத்தை அதற்கு பதிலாக உபயோகிக்கலாம்.

4.  நீர் பாசனம்:  காலி ஒரு லிட்டர் மினரல் வாட்டர் பாட்டில்கள்

நாம் வளர்க்கும் செடிகளுக்கு சொட்டு நீர் பாசன முறையில் தாண்ணீர் விட்டால் தண்ணீர் வீனாகாது. காலியான மினரல் வாட்டர் பாட்டில்களின் அடிப்புறம் படத்தில் காட்டியபடி ஊசியால் ஒரு சிறய துளையை போட்டு அதில் தண்ணீரை நிரப்பி செடியின் மூட்டில் வைத்து விட்டால் தண்ணீர் சொட்டு சொட்டாக செல்லும். 

நமக்கு தேவையான காய்கறி செடியின் தரமான் விதைகளை தமிழ் நாடு அரசு தோட்டக்கலை துறையிடமிருந்தும், விவசாய பல்கலைகழகத்திடமிருந்தும் பெறலாம். வீட்டு காய்கறி தோட்டத்திற்கான விதை பாக்கெட்டுகள் குறைந்த விலையில் கிடைக்கிறது. பாக்கெட்டின் விலை ரூ.15 அல்லது 20 இருக்கும். இவர்களிடம் வாங்கும் விதைகள் தரமானதாக இருக்கும். அல்லது தனியார் நர்சரியிலிருந்தும் வாங்கலாம்.

அடுத்த பதிவில் கத்தரி செடி வளர்ப்பது பற்றி பார்க்கலாம்.

மீண்டும் சந்திப்போம்.................





Sunday, August 19, 2012

மின்சாரம்-பகுதி.11

மின் பழுதுகளை பற்றியும் அவற்றை நீக்குவது பற்றியும் இனி பார்க்கலாம். பொதுவாக பழுதுகளை மூன்று வகையாக பிரிக்கலாம். அவை 1).ஷார்ட் சர்க்கியூட் (Short Circuit),  2). லூஸ் காண்டாக்ட் (Loose Contact), 3).மின் சாதனங்களில் ஏற்படும் பழுதுகள்.

ஷார்ட் சர்க்கியூட்:
மின்சார பழுதுகளிலேயே மிகவும் ஆபத்தானது இது. இதன் காரணமாகவே தீ விபத்துக்கள் ஏற்படுகிறது. மின்சார வயரிங்களுக்கு பயன்படுத்தப்படும் வயர் செப்பு ன்கம்பியால் ஆனது. முன் காலத்தில் இந்த செப்பு கம்பி ஒற்றை வயராக (Single Strand) இருக்கும். அதாவது 1/18 வயர் என்றால் அதில் 18 கேஜ் கம்பி ஒன்று இருக்கும். 3/20 என்றால் மூன்று 20 கேஜ் கம்பிகள் இருக்கும். 7/20 என்றால் ஏழு 20 கேஜ் கம்பிகள் இருக்கும். இப்படி ஒற்றை கம்பியை உபயோகிப்பதால் ஏற்படும் மின் இழப்பை தவிர்க்க இப்பொழுது பல மெல்லிய கம்பிகள் உபயோகப்படுத்தப்படுகிறது. இது மல்டி ஸ்ட்ராண்ட்(Multi Strand) என அழைக்கப்படுகிறது. 1/18, 3/20,7/20 என்ற அளவுகளில் இல்லாமல் தற்பொழுது மெட்ரிக் சிஸ்டத்தில் 1sq mm, 1.5sq mm, 2.5sq mm, 4sq mm , 6sq mm,10sq mm என்ற அளவுகளில் தயாரிக்கப்படுகிறது.

ஃபினோலெக்ஸ் என்ற நிறுவன தயாரிப்பு வயர்களில் கீழ் கண்டவாறு செப்பு கம்பிகள் பயன்படுத்தப்படுகிறது. இது கம்பெனிக்கு கம்பெனி மாறுபடும்.

1sq mm  = 32 x 0.2mm (அதாவது 0.2mm கனமுள்ள 32 கம்பிகள்)
1.5sq mm =30 x.0.25mm / 48 x 0.2mm
2.5sq mm =50X0.25 mm / 80x 0.2mm
4sq mm= 56 X0.3mm
6sq mm = 84 X 0.3 mm

வய்ரை சுவிட்ச், சாக்கெட், சீலிங் ரோஸ், ஹோல்டர், பியூஸ் யூனிட் ஆகியவற்றில் இணைப்பு கொடுக்க நுனிப்பகுதியிலுள்ள பிளாஸ்டிக் இன்சுலேஷனை நீக்கி செப்பு கம்பியை வெளியே எடுப்போம். அவற்றை நன்றாக முறுக்கிய பின்பே டெரிமினலுள் நுழைத்து ஸ்குருவை டைட் செய்ய வேண்டும். அவ்வாறு நன்றாக டுவிஸ்ட் செய்யாமல் இணைக்கும் பொழுது ஒரு சில செப்பு கம்பிகள் தனியாக வெளியே நீட்டிக்கொண்டிருக்கும். இவை சப்ளையின் நியூட்ரல் வயரை/ டெர்மினல் இவற்றை தொட வாய்ப்பு ஏற்படும். அச்சமயம் ஷார்ட் சர்க்கியூட் ஏற்படும்.

ஒரு வயரின் மின்சாரத்தை கடத்தும் திறனுக்கு அதிகமான கரண்டை எடுக்கக்கூடிய சாதனத்தை இணைக்கும் பொழுது வயர் சூடாகி, அதன் மீதுள்ள இன்ஸ்சுலேஷன் உருகிவிடும். அப்பொழுது செப்பு கம்பி வெளியே வந்து, அத்துடன் உருகிய நிலையில் இருக்கும் நியூட்ரலை தொட்டு ஷார்ட் சர்க்கியூட் ஏற்படும். 

லூஸ் காண்டாக்ட்
மேலே குறிப்பிட்டபடி வயர் இணைப்பின் பொழுது, கனெக்டருக்குள் வயரின் நுனியை நுழைத்து நன்றாக ஸ்குருவை டைட் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாத பட்ச்சத்தில் அந்த இணைப்பு லூஸ் ஆகிவிடும். அதனால் மின் இணைப்பு விட்டு விட்டு கிடைக்கும். அப்பொழுது ஸ்பார்க் ஏற்பட்டு வயரிங்கின் பிளாஸ்டிக் இன்சுலேஷன் உருகி தீ விபத்து ஏற்படும். 

மின் சாதன பழுதுகள்
டேபிள் ஃபேன், அயர்ன் பாக்ஸ், ஏர் கூலர், மிக்ஸி, கிரைண்டர் போன்ற சாதனங்களை பிளக் பாயிண்டில் இணைத்து பயன்படுத்துவது வழக்கம். இவற்றில் ஷார்ட் சர்க்கியூட் அல்லாத பழுது ஏற்பட்டு இருக்குமானால், சாதனம் இயங்காது. ஆனால் மின் சப்ளை இருக்கும். ஷார்ட் சக்கியூட் ஏற்பட்டு இருக்குமானால் அதற்கான செக் ஷன் பியூஸ் யூனிட்டில் பியூஸ் போய் விடும். பியூஸ் வயர் தேவையான அளவுக்கு அதிகமான கனத்தில் போடப்பட்டிருக்குமானால், பியூஸ் போகாமல் வயரின் இன்சுலேஷன் தீ பற்றிக்கொள்ளும். எனவே சரியான அளவு பியூஸ் வயர்களையே பியூஸ் யூனிட்டில் பயன்படுத்த வேண்டும். சரியான அளவு என்றால் என்ன என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். உதாரணத்திற்கு  தண்ணீர் மோட்டாருக்கான இணைப்பை எடுத்துக்கொள்வோம். 1 HP மோட்டார் பம்பு என்றால் அது இயங்க தேவையான மின்சாரம்  4 ஆம்பியர்(1HP = 756 Watts. W = V x A  ie A=W / V ie 800/230 = 3.75 Amps. அதாவது 4 ஆம்பியர் . இதற்கு 5 ஆம்பியர் பியூஸ் வயரை உபயோகிக்க வேண்டும். MCB என்றால் அதன் குறைந்த பட்ச அளவே 6 ஆம்பியர் என்பதால் 6 ஆம்பியர்  MCB-ஐ உபயோகிக்க வேண்டும்.

இனி வயரிங்களுக்கு பயன்படுத்தும் வயர்களின் அளவு, அவ்ற்றின் மின்சாரத்தை கடத்தும் திறன் இவற்றை பார்க்கலாம். கீழே தரமான வயர்களின்
திறன் பட்டியலாக தரப்பட்டுள்ளது.



1. சுவிட்ச் போர்டிலிருந்து டியூப் லைட், லைட் ஹோல்டர், ஃபேன் போன்றவற்றிற்கு 1 sq mm  அல்லது 1.5 sq mm  வயர் உபயோகப்படுத்தப்படும். இதை லைட் பேஸ் என சொல்லுவார்கள்.
2. சுவிட்ச் போர்டிலிருந்து மேற்குறிப்பிட்ட இணைப்புகளுக்கான பொது நியூட்ரலுக்கு (Common Neutral) 2.5 sq mm வயரை உபயோகப்படுத்தவேண்டும்.
3. சுவிட்ச் போர்டிலுள்ள 5 ஆம்பியர் பிளக் சாக்கெட்டுக்கு 2.5 sq mm வயரை உபயோகப்படுத்த வேண்டும்.
4. கிரைண்டர், மிக்ஸி போன்றவற்றிற்கான பிளக் சாக்கெட் வயரிங்க்கு 2.5 sq mm உபயோகிக்க வேண்டும்.
5. வாட்டர் ஹீட்டர், ஏர் கண்டிஷ்னர் போன்றவற்றிற்கு 4 sq mm வயரை உபயோகிக்க வேண்டும்.
6. பிளக் சாக்கெட், ஏசி பாயிண்ட், ஹீட்டர் கிரைண்டர் போன்ற அனைத்து சாதனங்களுக்கும் உரிய வயரிங்கில் எர்த்துக்கு 1.5 sq mm வயரை பயன்படுத்த வேண்டும்.
7. அனைத்து நியூட்ரலுக்கும் 2.5 sq mm வயரை உபயோகித்தால் போதும்.


அடுத்த பதிவில் மீண்டும் சந்திப்போம்....................





Wednesday, August 15, 2012

மின்சாரம்-பகுதி.10

முந்தைய பதிவுகளில் பீங்கானால் செய்யப்பட்ட பியூஸ் யூனிட்களை  சப்ளையின் மெயின் பியூஸ் யூனிட்டாகவும், செக்சன் பியூஸ் யூனிட்டாகவும் பயன்படுத்தப்படுவதை பற்றி பார்த்தோம்.  தொழில் நுட்பம் வளர வளர, சாதனங்களில் மாற்றம் வருவது இயற்கையே.  அதன்படி பீங்கானினால் ஆன பியூஸ் யூனிட்களுக்கு பதிலாக   Miniature Circuit Breaker (MCB), Isolator, Earth Leakage Circuit Breaker (ELCB) / Residual Current Circuit Breaker(RCCB) என பல சாதனங்கள் இப்பொழுது கிடைக்கிறது. இவற்றின் செயல்பாடு, பயன்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்..

Porcelain Fuse Unit

இதில் போடப்படும் பியூஸ் வயர் உருகிவிட்டால், மறுபடியும் பியூஸ் வயரை போடக்கூடிய் ஒன்றாகும். அதாவது "Rewireable Fuse Unit" ஆகும. கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் பியூஸ் யூனிட்டின் டாப்பில் எவ்வாறு பியூஸ் வயர் இணைக்கப்பட்டுள்ளது என்பது காட்டப்பட்டுள்ளது.


மின்சார பொருட்களை விற்பனை செய்யும் கடைகளிலேயே பியூஸ் வயர் கிடைக்கும். இது 5 ஆம்பியர், 10 ஆம்பியர் என பல திறன்களில் கிடைக்கும். பியூஸ் வயர் என்பது செம்பு கம்பியின் மீது தகர பூச்சு (Tinned Copper Wire) பூசப்பட்ட ஒன்றாகும். நாம் இதற்கு பதிலாக, வயரிங் செய்ய பயன்படுத்தும் வயர்களின் உள்ளே பல மெல்லிய செப்பு கம்பிகள் இருக்கும். அவற்றை ஒன்று, இரண்டு, மூன்று என, நம் தேவைக்கு ஏற்ற திறனை தரும் வகையில் ஒன்றாக இணைத்து  உபயோகிக்கலாம். அனைத்து எலெக்ட்டிரீஷியன்களும் இதைத்தான் செய்வார்கள்.

MCB (Miniature Circuit Breaker)

இது பியூஸ் யூனிட்டின் வேலையையே செய்கிறது. ஆனால் ஒரு வித்தியாசம். சர்க்கியூட்டில் ஏதாவது பழுது இருந்து அதிக அளவு மின்சாரம் எடுத்தாலோ அல்லது ஷார்ட் சர்க்கியூட் ஏற்பட்டாலோ, பியூஸ் யூனிட்டில் பியூஸ் உருகி இணைப்பை துண்டித்து விடும். ஆனால் இதில்(MCB), இதிலுள்ள சுவிட்ச் கைப்பிடி மேல் நோக்கி வந்து, மின் இணைப்பை துண்டித்து விடும் வகையில் இதன் மெக்கானிசம் செயல்படும். அதாவது இதனுள் உள்ள, சூட்டினால் விரிவடையக்கூடிய விஷேட உலோகத்திலான லீவர், குறிப்பிட்ட அளவுக்கு மேல் மின்சாரம் இதன் வழியாக சென்றால், அந்த உஷ்ணத்தால் விரிவடைந்து இணைப்பை துண்டித்து விடும். அப்பொழுது சுவிட்ச்சின் கைப்பிடி மேலே வந்துவிடும்.
சூட்டினால் விரிவடைந்த உலோக தகடு தன் நிலைக்கு வர சில நிமிடங்கள் ஆகும். அதன் பின்பே எம்.சி.பி-ஐ ஆன் செய்ய முடியும்.  இதை உபயோகிப்பதால் பியூஸ் போடும் வேலை இல்லை.இது 6,10.16,20,25,32,64 ஆம்பியர் என பல திறன் கொண்டதாக கிடைக்கிறது.

இதை மரப்பலகையிலோ அல்லது சுவிட்ச் போர்டிலோ பொருத்த முடியாது. உலோகத்திலான ரெயில் எனப்படும் வளைவான அமைப்யு கொண்ட  தகட்டில்தான் பொருத்த முடியும். MCB, ISOLATOR, ELCB / RCCB போன்றவைகளை எல்லாம் பொருத்துவதற்கென்று பல மாடல்களில் மெட்டல் பாக்ஸ்கள் கிடைக்கிறது. இவற்றில் இந்த ரெயில்கள் பொருத்தப்பட்டிருக்கும்.  ரெயிலின் படம் கீழே தரப்பட்டுள்ளது.


இந்த தகடு 3.5 செமீ அகலம் கொண்டதாக இருக்கும். நாம் பொருத்தப்போகும் எம்.சி.பி-ன் எண்ணிக்கைக்கு ஏற்ப நீளம் தேவை. மெட்டல் பாக்ஸ்-ல் நீளவாக்கில் இது மாட்டப்பட்டிருக்கும். படத்தில் காட்டப்பட்டுள்ள A - BOTTOM என்ற தகட்டின் விளிம்பில்  எம்.சி.பி-ன் பின் பக்க  அடிப்புற காடி (GROOVE) -ஐ மாட்டிவிட்டு, எம்.சி.பி-ன் மேல் பக்கத்தை ரெயிலின் மேல் பக்கத்தில்(B-TOP) வைத்து அழுத்தினால் தானாகவே MCB லாக் ஆகிவிடும்.  

 ISOLATOR

ஐசோலேட்டர் என்பது  மெயின் சுவிட்ச் போலத்தான்.  சாதாரண மெயின் சுவிட்ச்சில் பியூஸ் யூனிட் இருப்பதால் பியூஸ் போகும் பாதுகாப்பானது. இரண்டாவது ஆன்/ ஆஃப் செய்யும் வசதி உண்டு. ஐசோலேட்டரில் பியூஸ் கிடையாது.  ஆன்/ஆஃப் செய்ய மட்டுமே பயன்படும். இது 2-போல், 3-போல் & 4-போல் அமைப்பில் கிடைக்கிறது.  40,63,100 ஆம்பியர் என்ற திறன்களில் கிடைக்கும். 2-போல் ஐசோலேட்டரை சிங்கிள் பேஸ் சர்வீஸ்க்கும், 3,4-போல் ஐசோலேட்டரை 3-பேஸ் சர்வீசுக்கும் பயன்படுத்தவேண்டும்.

ELCB/RCCB


ELCB  அல்லது RCCB இவை இரண்டுமே ஒன்றுதான். இதன் வழியாக செல்லும் மின் சப்ளையில் இணைக்கப்பட்டுள்ள ஏதாவது ஒரு சாதனத்தில் மின் கசிவு ஏற்பட்டு எர்த் ஆனாலோ அல்லது பேஸ் முனையை யாராவது தவறுதலாக தொட்டுவிட்டாலோ, இந்த சாதனம் 30 மில்லி செகண்டில் மின் இணைப்பை  துண்டித்துவிடும். இதனால் மின் சாதனங்களுக்கு மட்டுமட்டுமல்லாமல் மனிதர்களுக்கும் மின்சாரத்தினால் ஏற்படக்கூடிய ஷாக், உயிரிழப்பு இவற்றிலிருந்து முழு பாதுகாப்பு கிடைக்கிறது. இது சரியாக இயங்குகிறதா என்பதை பரிசோதித்து பார்க்க இதில் டெஸ்ட் பட்டன் உண்டு. அதை அழுத்தினால் டிரிப் ஆகி மின் இணைப்பு துண்டிக்கப்படும். இவ்விதம் டிரிப் ஆனால், சரியாக செயல்படுகிறது என பொருள். இச்சாதனம் 2-போல், 4-போல் மாடல்களில் கிடைக்கிறது. படம் கீழே தரப்பட்டுள்ளது,



2-போல் --- சிங்கிள் பேஸ் மின் இணைப்பிற்கு

4-போல்---- 3-பேஸ் மின் இணைப்பிற்கு,

இதன் திறன்  ----------- 16 Amps, 25 Amps, 40Amps, 63 Amps etc

இதன்  சென்சிவிட்டி  ------ 30 mA, 100mA, 300mA, 500mA ஆகும்

MCB DB.

MCB, Isolator, ELCB ஆகியவற்றை பொருத்த ரெடிமேடாக மெட்டலால் ஆன டிஸ்ட்ரிபியூஷன் பாக்ஸ்-கள் பல அளவுகளில் கிடைக்கிறது. அதன் படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.





மீண்டும் சந்திப்போம்...........