Wednesday, August 15, 2012

மின்சாரம்-பகுதி.10

முந்தைய பதிவுகளில் பீங்கானால் செய்யப்பட்ட பியூஸ் யூனிட்களை  சப்ளையின் மெயின் பியூஸ் யூனிட்டாகவும், செக்சன் பியூஸ் யூனிட்டாகவும் பயன்படுத்தப்படுவதை பற்றி பார்த்தோம்.  தொழில் நுட்பம் வளர வளர, சாதனங்களில் மாற்றம் வருவது இயற்கையே.  அதன்படி பீங்கானினால் ஆன பியூஸ் யூனிட்களுக்கு பதிலாக   Miniature Circuit Breaker (MCB), Isolator, Earth Leakage Circuit Breaker (ELCB) / Residual Current Circuit Breaker(RCCB) என பல சாதனங்கள் இப்பொழுது கிடைக்கிறது. இவற்றின் செயல்பாடு, பயன்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்..

Porcelain Fuse Unit

இதில் போடப்படும் பியூஸ் வயர் உருகிவிட்டால், மறுபடியும் பியூஸ் வயரை போடக்கூடிய் ஒன்றாகும். அதாவது "Rewireable Fuse Unit" ஆகும. கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் பியூஸ் யூனிட்டின் டாப்பில் எவ்வாறு பியூஸ் வயர் இணைக்கப்பட்டுள்ளது என்பது காட்டப்பட்டுள்ளது.


மின்சார பொருட்களை விற்பனை செய்யும் கடைகளிலேயே பியூஸ் வயர் கிடைக்கும். இது 5 ஆம்பியர், 10 ஆம்பியர் என பல திறன்களில் கிடைக்கும். பியூஸ் வயர் என்பது செம்பு கம்பியின் மீது தகர பூச்சு (Tinned Copper Wire) பூசப்பட்ட ஒன்றாகும். நாம் இதற்கு பதிலாக, வயரிங் செய்ய பயன்படுத்தும் வயர்களின் உள்ளே பல மெல்லிய செப்பு கம்பிகள் இருக்கும். அவற்றை ஒன்று, இரண்டு, மூன்று என, நம் தேவைக்கு ஏற்ற திறனை தரும் வகையில் ஒன்றாக இணைத்து  உபயோகிக்கலாம். அனைத்து எலெக்ட்டிரீஷியன்களும் இதைத்தான் செய்வார்கள்.

MCB (Miniature Circuit Breaker)

இது பியூஸ் யூனிட்டின் வேலையையே செய்கிறது. ஆனால் ஒரு வித்தியாசம். சர்க்கியூட்டில் ஏதாவது பழுது இருந்து அதிக அளவு மின்சாரம் எடுத்தாலோ அல்லது ஷார்ட் சர்க்கியூட் ஏற்பட்டாலோ, பியூஸ் யூனிட்டில் பியூஸ் உருகி இணைப்பை துண்டித்து விடும். ஆனால் இதில்(MCB), இதிலுள்ள சுவிட்ச் கைப்பிடி மேல் நோக்கி வந்து, மின் இணைப்பை துண்டித்து விடும் வகையில் இதன் மெக்கானிசம் செயல்படும். அதாவது இதனுள் உள்ள, சூட்டினால் விரிவடையக்கூடிய விஷேட உலோகத்திலான லீவர், குறிப்பிட்ட அளவுக்கு மேல் மின்சாரம் இதன் வழியாக சென்றால், அந்த உஷ்ணத்தால் விரிவடைந்து இணைப்பை துண்டித்து விடும். அப்பொழுது சுவிட்ச்சின் கைப்பிடி மேலே வந்துவிடும்.
சூட்டினால் விரிவடைந்த உலோக தகடு தன் நிலைக்கு வர சில நிமிடங்கள் ஆகும். அதன் பின்பே எம்.சி.பி-ஐ ஆன் செய்ய முடியும்.  இதை உபயோகிப்பதால் பியூஸ் போடும் வேலை இல்லை.இது 6,10.16,20,25,32,64 ஆம்பியர் என பல திறன் கொண்டதாக கிடைக்கிறது.

இதை மரப்பலகையிலோ அல்லது சுவிட்ச் போர்டிலோ பொருத்த முடியாது. உலோகத்திலான ரெயில் எனப்படும் வளைவான அமைப்யு கொண்ட  தகட்டில்தான் பொருத்த முடியும். MCB, ISOLATOR, ELCB / RCCB போன்றவைகளை எல்லாம் பொருத்துவதற்கென்று பல மாடல்களில் மெட்டல் பாக்ஸ்கள் கிடைக்கிறது. இவற்றில் இந்த ரெயில்கள் பொருத்தப்பட்டிருக்கும்.  ரெயிலின் படம் கீழே தரப்பட்டுள்ளது.


இந்த தகடு 3.5 செமீ அகலம் கொண்டதாக இருக்கும். நாம் பொருத்தப்போகும் எம்.சி.பி-ன் எண்ணிக்கைக்கு ஏற்ப நீளம் தேவை. மெட்டல் பாக்ஸ்-ல் நீளவாக்கில் இது மாட்டப்பட்டிருக்கும். படத்தில் காட்டப்பட்டுள்ள A - BOTTOM என்ற தகட்டின் விளிம்பில்  எம்.சி.பி-ன் பின் பக்க  அடிப்புற காடி (GROOVE) -ஐ மாட்டிவிட்டு, எம்.சி.பி-ன் மேல் பக்கத்தை ரெயிலின் மேல் பக்கத்தில்(B-TOP) வைத்து அழுத்தினால் தானாகவே MCB லாக் ஆகிவிடும்.  

 ISOLATOR

ஐசோலேட்டர் என்பது  மெயின் சுவிட்ச் போலத்தான்.  சாதாரண மெயின் சுவிட்ச்சில் பியூஸ் யூனிட் இருப்பதால் பியூஸ் போகும் பாதுகாப்பானது. இரண்டாவது ஆன்/ ஆஃப் செய்யும் வசதி உண்டு. ஐசோலேட்டரில் பியூஸ் கிடையாது.  ஆன்/ஆஃப் செய்ய மட்டுமே பயன்படும். இது 2-போல், 3-போல் & 4-போல் அமைப்பில் கிடைக்கிறது.  40,63,100 ஆம்பியர் என்ற திறன்களில் கிடைக்கும். 2-போல் ஐசோலேட்டரை சிங்கிள் பேஸ் சர்வீஸ்க்கும், 3,4-போல் ஐசோலேட்டரை 3-பேஸ் சர்வீசுக்கும் பயன்படுத்தவேண்டும்.

ELCB/RCCB


ELCB  அல்லது RCCB இவை இரண்டுமே ஒன்றுதான். இதன் வழியாக செல்லும் மின் சப்ளையில் இணைக்கப்பட்டுள்ள ஏதாவது ஒரு சாதனத்தில் மின் கசிவு ஏற்பட்டு எர்த் ஆனாலோ அல்லது பேஸ் முனையை யாராவது தவறுதலாக தொட்டுவிட்டாலோ, இந்த சாதனம் 30 மில்லி செகண்டில் மின் இணைப்பை  துண்டித்துவிடும். இதனால் மின் சாதனங்களுக்கு மட்டுமட்டுமல்லாமல் மனிதர்களுக்கும் மின்சாரத்தினால் ஏற்படக்கூடிய ஷாக், உயிரிழப்பு இவற்றிலிருந்து முழு பாதுகாப்பு கிடைக்கிறது. இது சரியாக இயங்குகிறதா என்பதை பரிசோதித்து பார்க்க இதில் டெஸ்ட் பட்டன் உண்டு. அதை அழுத்தினால் டிரிப் ஆகி மின் இணைப்பு துண்டிக்கப்படும். இவ்விதம் டிரிப் ஆனால், சரியாக செயல்படுகிறது என பொருள். இச்சாதனம் 2-போல், 4-போல் மாடல்களில் கிடைக்கிறது. படம் கீழே தரப்பட்டுள்ளது,2-போல் --- சிங்கிள் பேஸ் மின் இணைப்பிற்கு

4-போல்---- 3-பேஸ் மின் இணைப்பிற்கு,

இதன் திறன்  ----------- 16 Amps, 25 Amps, 40Amps, 63 Amps etc

இதன்  சென்சிவிட்டி  ------ 30 mA, 100mA, 300mA, 500mA ஆகும்

MCB DB.

MCB, Isolator, ELCB ஆகியவற்றை பொருத்த ரெடிமேடாக மெட்டலால் ஆன டிஸ்ட்ரிபியூஷன் பாக்ஸ்-கள் பல அளவுகளில் கிடைக்கிறது. அதன் படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் சந்திப்போம்...........20 comments:

 1. மிக்க நன்றி ஐயா...

  இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்... ஜெய் ஹிந்த் !!!

  ReplyDelete
  Replies
  1. சுதந்திர தின வாழ்த்துக்கள்.

   Delete
 2. Replies
  1. நான் கற்றுக்கொண்ட அனைத்து விஷயங்களையும் தொடர்ந்து எழுதப்போகிறேன். தொடர்ந்து ரசியுங்கள்.

   Delete
 3. இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்... ஜெய் ஹிந்த் !!

  ReplyDelete
  Replies
  1. சுதந்திர தின வாழ்த்துக்கள்

   Delete
 4. பயனுள்ள பதிவு  நன்றி,
  ஜோசப்
  http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 5. மிக்க நன்றி ஐயா, இதுவரை ISOLATER, MCB & ELCB தெரியாதிருந்தேன் உஙகள் பதிவின் மூலம் விளக்கமாக தெரிந்துகொண்டேன்.

  ReplyDelete
 6. மிக்க நன்றி ஐயா..

  ReplyDelete
  Replies
  1. தொடர்ந்து படியுங்கள்.

   Delete
 7. pathivukal arumai.
  nandri.

  > k m abubakkar

  ReplyDelete
 8. தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்.

  MCB,Isolator,ELCB கள் பல அம்பியர் திறன்களில் கிடைகின்றன.இவற்றில் எமது வீட்டுக்கு பொருத்தமான பெறுமானத்தை எப்படி கணிப்பிடுவது பற்றி விளக்கம் தரமுடியுமா ஐயா?
  உதாரணத்திற்கு 100W மின்குமிழ் மூன்று ,120W மின்விசிறி ஒன்று மற்றும் 200W TV ஒன்றுக்கான supply க்கான circuit breakerஇக்கு அம்பியர் பெறுமானம் எப்படிக் கணிப்பது???
  உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.

  ReplyDelete
 9. ரெம்ப சிம்பிளான விஷயம். இதை கணக்கிடுவது பற்றி சூரிய ஒளி மின்சாரம் தொடரிலும், இந்த தொடரிலும் குறிப்பிட்டுள்ளேன். கீழே விபரம்.

  OHM'S LAW
  WATT=VOLT X AMPERE
  WATT / VOLT = AMPERE

  100W X 3 = 300W
  120W X 1 = 120W
  200W X 1 = 200W
  TOTAL WATTS = 620
  620 / 230(V) = 2.7 AMPERE. டி.வியை பொருத்தவரை ஆன் செய்தவுடன் அதிகமாக கரண்ட் எடுக்கும். 3 மடங்குஅளவுக்கு அதிகமாக எடுக்கும்.அதையும் கணக்கில் எடுக்க வேண்டும்.

  300+120+600 = 1020 வாட்ஸ்

  = 1020 / 230 = 4.5 ஆம்பியர்.
  இந்த சர்க்கியூட்டுக்கு தேவையானது 4.5 ஆம்பியர் திறன் கொண்ட சர்க்கியூட் பிரேக்கர். மார்க்கெட்டில் ( இந்தியாவில்) குறைந்த பட்ச திறன் கொண்ட சர்க்கியூட் பிரேக்கர் 6 ஆம்பியர். எனவே இங்கு அதைத்தான் உபயோகிப்போம். உங்கள் சந்தேகங்களை Current posting-ல் பின்னூட்டமாக இடுங்கள். அல்லது எனக்கு மெயில் செய்யுங்கள். தினமும் என் பழைய பதிவுகளை பார்த்து அதில் வந்துள்ள பின்னூட்டங்களுக்கு பதில் தருவது கஷ்டம். எதேச்சையாக இதை பார்த்தேன்.

  ReplyDelete
  Replies
  1. மிகவும் சுலபமாக புரியும்படி சொல்லிவிட்டீர்கள் மிக்க நன்றி ஐயா.

   Delete