Wednesday, September 19, 2012

காணாமல் போகும் "வாத்தியார்" இனம்-2

இந்த பதிவின் முன் பகுதியை படிக்க இதை கிளிக் செய்யவும்.

அவரை உற்று பார்த்தேன். "சார். எப்படி இருக்கீங்க?" என்று பேச்சை ஆரம்பித்தேன்.

"நீ எப்படிருக்க அத முதல்ல சொல்லு. எனக்கு வயசாயிட்டுது. இனி என்ன இருக்கு?. ஏதோ நாளை எண்ணிட்டு இருக்கேன்" என்றார்.

நான் கல்லூரியை முடித்துவிட்டு வந்த பொழுது அவர் வேறு ஊருக்கு மாற்றலாகி போய்விட்டார். அதனால் அவரை சந்திக்கவே முடியவில்லை. தமிழ் எம்.ஏ முடித்து விட்டதால் அவர் அரசு கலைக்கல்லூரிக்கு விரிவுரையாளர் பணிக்கு மாற்றம் கேட்டு விண்ணப்பித்ததாகவும், சீனியாரிட்டி அடிப்படையில் அவருக்கு சில வருடங்களில் கிடைத்ததாகவும். ரிடயர்டு ஆகும் வரை ஊர் ஊராக சுற்ரியதாகவும் தன் கதையை கூறினார். அவர் மனைவியும் அரசு ஆசிரியை. அவர் அப்பொழுதான் சென்னையில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றாராம். எல்லாவிபரங்களையும் ஆர்வத்துடன் கூறினார். என்னைப்பற்றியும் கேட்டு தெரிந்து கொண்டார். நேரம் போனதே தெரியவில்லை. மதியம் ஒரு ம்ணி ஆகிவிட்டபடியால் அவரிடம் விடை பெற்றேன்.

ஒரு சில மாதங்கள் கழித்து என் அண்ணன் மகளுக்கு திருமணம். அம்பத்தூரில் தான். திருமணத்தன்று முழுக்க முழுக்க அவருடந்தான் இருந்தேன்.என்னுடன் பள்ளிக்கூடத்தில் நடந்த சிறு சிறு நிகழ்ச்சிகளை அவர் பேசும் பொழுது அவருக்கு ஒரு சந்தோஷம். அது அவர் முகத்திலேயே தெரிந்தது. எழுபது வயதை தாண்டிவிட்டாலும் அவர் மனதில் ஒரு முப்பத்தி ஐந்து வயது இளமை ஊஞ்சலாடியது தெரிந்தது.

அவர் சொன்னார்... "பள்ளிக்கூடத்தில் வாத்தியாரா இருந்தப்போ இருந்த சந்தோஷம் காலேஜில் வேலை பார்த்த போது இல்லடா!. அந்த காலத்தை நினைச்சே வாழ்க்கையை ஒட்டிட்டு இருக்கேன். இப்ப வாத்தியாரும் வாத்தியாரா இல்லை. பையங்களும் அப்படித்தான். என்னவோ போ. உலகம் ரெம்ப மாறிப்போச்சு. ம்....." என்றார்.  எனக்கும் அவர் ஆதங்கம் புரிந்தது.

அந்த சந்திப்புக்கு பின் ஒருமுறை அவர் வீட்டுக்கு சென்றேன். அதன் பின் அவர் வேறு எங்கேயோ போய்விட்டார். அத்துடன் தொடர்பு அறுந்து விட்டது.

அவர் இருக்கிறாரா? எங்கு இருக்கிறார் என தெரியாது. ஆனால் அவரை பற்றிய என் எண்ணங்கள் நான் இருக்கும் வரை என் மனதில் இருக்கும். இவரைப்போலவே என் பள்ளி வாத்தியார்கள் பாலு சார், ஜகநாதன் சார், முஸ்தபா சார், தஸ்தகீர் சார் இவர்கள் எல்லாம் என் நினைவில் அடிக்கடி வருவார்கள்.

இதுதான் என் காலத்திய வாத்தியார் மாணவர் உறவு. இப்பொழுது இருக்கிறதா?

தேடுகிறேன்..................

அடுதத பதிவில் சந்திப்போம்............

 

 

Saturday, September 8, 2012

நிலக்கரி ஊழல் - மகாத்மா பாடுகிறார்!

ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் கேம் ஊழல், நிலக்கரி ஊழல் என  ஊழல்களால் நொந்து போயிருக்கும்  பாரத தாயை பார்த்து வேதனையுடன் மகாத்மா காந்தி பாடும் பாடல்.

(தங்க பதக்கம் படத்தில் வரும் "சோதனைமேல் சோதனை" என்ற பாடல் மெட்டு)

ஊழல்மேல் ஊழல் போதுமடா சாமி
ஊழல்தான் ஆட்சியென்றால் தாங்காது நாடு

(ஊழல்மேல்.....)

தேர்தல் ஒரு கைவிலங்கு ஜனநாயகம் போட்டது - அதில்
ஓட்டு ஒரு கால்விலங்கு மக்கள் போட்டது

(ஊழல்மேல்.....)

ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல - நான்
அவதாரமில்லையம்மா தத்துவம் சொல்ல

பரிகாரம் தேடி நான் எவ்விடம் செல்ல - எனக்கு 
அதிகாரமில்லையம்மா பூலோகம் செல்ல

ஒரு நாளும் நான் இதுபோல் அழுதவனல்ல - அந்த
திருநாளை அரசியல்வாதி கொடுத்தான் யாரிடம் சொல்ல!

(ஊழல்மேல்.....)

(பாரத மாதா வசன நடையில் பேசுவது)

மகனே, காஞ்சுபோன பூமியெல்லாம்
வத்தாத நதியை பார்த்து ஆறுதல் அடையும்
அந்த நதியே காஞ்சி போயிட்டா..........

துன்பப் படுறவங்க எல்லாம்
அவங்க கவலையை  தெய்வத்துக்கிட்ட
முறையிடுவாங்க. ஆனா அந்த தெய்வமே
கலங்கி நின்னா - அந்த தெய்வத்துக்கு
யாராலே ஆறுதல் சொல்ல முடியும்?

பாட்டு தொடர்கிறது,

தானாடவில்லையம்மா சதையாடுது - அது
தேசதந்தை என்றும் அரசியல்வாதி என்றும் விளையாடுது

பூவாக வைத்திருந்தேன் பாரதமென்பது - அதில்
கருநாகம் புகுந்து கொண்டு சூறையாடுது

அடிதாங்கும் நாடிது  இடிதாங்குமா?
இடிபோல அரசியல்வாதி வந்தால் நாடுதாங்குமா?

(ஊழல்மேல்.....)
 Friday, September 7, 2012

காணாமல் போகும் "வாத்தியார்" இனம்!

இன்று இந்தியாவில் அழிந்து வரும் புலி இனத்தை காக்க புலிகள் சரணாலயம், சமூக ஆர்வலர்களின் பங்களிப்பு, 24x7 ஆங்கில சேனல்கள் பிரபலங்களை வைத்து நிதி திரட்டுதல் என பலவகைகளில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆனால், வறுமையிலும் ஆசிரியர் பணியே நாட்டுக்கு செய்யும் நற்பணி என தங்களை அர்ப்பணித்து கொள்ளும் மகத்தான "வாத்தியார்" இனம் கழிந்த முற்பது ஆண்டுகளாக அழியத்தொடங்கி, இன்று கூலிக்கு மாரடிக்கும் பட்டாளமாக மாறிவருவது, நாட்டின் அழிவையே காட்டுகிறது. நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் வாத்தியார் பணிக்கு சம்பளமும், சலுகைகளும் குறைவு. இருப்பினும் அந்த வேலைக்கு விரும்பி வந்து, ஆத்மார்த்தமாக பணியாற்றினர். அழிந்து வரும் இந்த இனத்தை யார் காப்பாற்ற போகிறார்கள்?

வாத்தியாரிடம் பெற்றோர்களும் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர். காரணம் கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு ஏழு மணி நேரம் அவரின் கண்காணிப்பில் தான் மாணவர்கள் இருக்கிறார்கள். அந்த அளவுக்கு மாணவர்கள் பெற்றோரின் கவனிப்பில் இருப்பதில்லை. தன் குழந்தைகளை  ஆளாக்கும் தகுதி வாத்தியார்களுக்கு மட்டுமே இருக்கிறது என்பதை  உணர்ந்திருந்தனர். வீட்டுக்கு அடங்காமல் சண்டித்தனம் செய்யும் மாணவர்கள் கூட  வாத்தியார்களின் அன்பு கலந்த கண்டிப்புக்கு அடிபணிந்து போவார்கள். ஆனால் இன்றோ, வாத்தியார் கண்டிக்கிறார் என்றால், எதற்காக? யாருடைய நலனுக்காக கண்டிக்கிறார்? என்பதைக்கூட  உணராமல் விரோதியாக நினைத்து அவரையே கொலை செய்யும் நிலைக்கு மாணவர்கள் முன்னேறிவிட்டார்கள். அதைப்போலவே  இன்றைய ஆசிரியர்களும், மாணவர் ஏன் சரியாக படிக்கவில்லை? அதற்கான காரணம் என்ன என்பதை புரிந்து அதை சரி செய்வதை விட்டு விட்டு, தேர்வில் ஆல் பாஸ் வரவேண்டும் என்பதற்காக கண்மூடித்தனமாக தண்டனை என்ற பெயரில் மிருகத்தனமாக தாக்குவதும் நடக்கிறது. ஆக வாத்தியார்-----பிள்ளைகள்----- பெற்றோர்கள் என்ற உறவு சங்கிலி அறுந்து விட்டது.

இன்று கூட (இப்பொழுது எனக்கு வயது 60 ஆகிறது) நான் எதையாவது ப்ற்றி யோசிக்கும் பொழுது சுற்றி வளைத்து வரும் நினைவுகளில் என்னுடைய பள்ளி ஆசிரியர்கள் வருவார்கள். அந்த அளவுக்கு அன்று எங்களுக்கும் வாத்தியார்களுக்குமான உறவு ஆழமாக இருந்தது. நான் கல்லூரியில்(தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி) படிக்கும் பொழுது விடுமுறையில் ஊருக்கு(செங்கோட்டை) வந்திருக்கும் சமயங்களில், எங்கேயாவது என்னுடைய ஆரம்ப பள்ளி ஆசிரியர்களில் இருந்து ஹைஸ்கூல் வாத்தியார் வரை யாரை பார்த்தாலும் மரியாதையுடன்(அப்பொழுது கையில் சிகரெட் இருந்தால் தூக்கி எறிந்து விட்டு, கைக்குட்டையால் நன்றாக வாயை துடைத்து விட்டு) அருகில் சென்று வணக்கம் சொல்லுவேன். அவர்களும் என்னுடைய கல்லூரி படிப்பை பற்றி விசாரிப்பதுடன் அறிவுரைகளும் சொல்லுவார்கள். நான் மட்டுமல்ல என் காலகட்டத்தில் இருந்த மாணவர்கள் எல்லோருமே அப்படித்தான்.

ஏழு எட்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு சம்பவம் நடந்தது. தென்னக ரயில்வேயில் இஞ்சினியராக இருந்த என் அண்ணன்(சித்தப்பா பையன்) வேறு ஊரிலிருந்து சென்னை அம்பத்தூருக்கு குடிவந்தார். அவர் என் வீட்டிற்கு  வந்தார். அப்பொழுது, என்னிடம் " என் வீட்டிற்கு பக்கத்தில் ஒரு ரிட்டயர்டு வாத்தியார் குடியிருக்கிறார். நீ ஹைஸ்கூலில் படிக்கும் போது அவர் உனக்கு வாத்தியாராம்" என்றார்.
"அப்படியா? அவர் பேர் என்ன?"
"அரங்கசாமி"
" அரங்கசாமி சாரா? எனக்கு தமிழ் வாத்தியார்" என்றேன். அவருடைய தொலைபேசி எண் என் அண்ணனிடம் இல்லாததால் உடனடியாக அவரிடம் பேசமுடியவில்லை. என் அண்ணன் போய்விட்டார்.
மறு நாள் போன் அழைப்பு வந்தது.
"ஹலோ"
" திரவியம் வீடுதான?"
"ஆமாம். திரவியம்தான் பேசுறேன் நீங்க யாரு?"
" டேய். நான் அரங்கசாமி பேசுரேண்டா"
" சார்.. எப்படி சார் இருக்கீங்க?"
" நல்லா இருக்கண்டா. உங்க அண்ணன் கூட நானும் உன்னை பாக்க வந்திருப்பேண்டா. வயசாயி போச்சுலா..  வெளியில எங்கும் போறது இல்லடா. ஆமாம் நீ எப்ப இங்க வர?"
"நாளைக்கு கலையில வரேன் சார்"
ஒரு சில நிமிடங்கள் பேசினோம்.

என் போன் சம்பாஷனையை கேட்டுக்கொண்டிருந்த என் மகள் (அப்பொழுது கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தாள்) "யாருப்பா போன்ல பேசினது" என்று கேட்டாள். நான் "என் ஹைஸ்கூல் வாத்தியார்" என்று சொன்னதும் அவளுக்கு ஆச்சர்யம்."எப்படிப்பா 35-40 வருஷத்துக்கு முன்னால கிளாஸ் எடுத்த வாத்தியாரைஉனக்கு ஞாபகம் இருக்கு?. அவருக்கும் ஞாபகம் இருக்கு?" என வியப்புடன் கேட்டாள். என் காலத்தில் உள்ள வாத்தியார் மாணவன் உறவுகளை பற்றி சொன்னேன். நம்ப முடியாமல் கேட்டுக்கொண்டாள்.

மறு நாள் காலையில் டூ வீலரில் அம்பத்தூர் ஓ.டி சென்று என் அண்ணன் வீட்டை தேடி கண்டுபிடித்தேன். அது ஒரு பிளாட்ஸ்.  2-ம் மாடியில் அவர் வீடு. இரண்டு வீடுகள் இருந்தது. வீட்டு வாசல் பக்கம் நம்பரை பார்த்தேன். முதல்  வீடுதான். கதவு மூடி இருந்தது. அடித்த வீட்டு கதவு திறந்திருந்தது. ஹாலில் வாசலுக்கு எதிராக போடப்பட்டிருந்த சோபாவில் ஒரு பெரியவர் உட்கார்ந்து வெளியே பார்த்துக்கொண்டிருந்தார். ஒரு வினாடி. என் மனசுக்குள் "இவர் அரங்கசாமி சாரா?" என்ற சந்தேகம் .சுமார் 40 வருடங்களுக்கு முன் பார்த்தது. மடிப்பு கலையாத வெள்ளை நிற முழு கை சட்டை. அகலமாக கரையுள்ள மடித்துக்கட்டாத எட்டு முழ வேட்டி, அடர்த்தியான கருமை நிற பாரதியார் மீசை. கலையாத சீவிய அடர்த்தியான தலை முடி. இந்த தோற்றத்தில் அவர் மனக்கண் முன் வந்தார். அதற்குள் வீடு வாசலுக்கு அருகில் வந்து விட்டேன். நான் என் அண்ணன் வீட்டு கதவை தட்டவும், அதுவரை என்னை பார்த்துக்கொண்டிருந்த அவர் " திரவியமா" என்றார்.

என் சந்தேகம் தீர்ந்து விட்டது. ஆமாம் அவர் என் வாத்தியார் தான். " ஆமாம் சார். நான் திரவியம் தான்" என் பதில் சொல்ல, அதே நேரத்தில் தன் வீட்டு கதவை திறந்து கொண்டு அண்ணனும் வெளியே வந்தார். அங்கேயே நின்று சில நிமிடங்கள் பேசினோம். என் அண்ணன் என்னை தன் வீட்டிற்கு கூப்பிட, என் தர்ம சங்கட நிலை புரிந்த அரங்க சாமி சார் என்னிடம் " போய் தலையை காட்டிட்டு வா. நாம நிறைய பேசனும்" என்றார். சரி என்று கூறி விட்டு அண்ணனுடன் சென்றேன். 15 நிமிடத்தில் அங்கிருந்து கிளம்பி, சார் வீட்டுக்கு போனேன். சோபாவில் தன் பக்கம் உட்கார சொன்னார். அவர் முன்னால் இதுவரை நான் உட்கார்ந்தது இல்லை. என்னை அறியாமலே ஒரு தயக்கம். "பராவாயில்ல சார்" என்றேன். என் கையை பிடித்து இழுத்து தன் பக்கத்தில் உட்கார வைத்தார். ஒரு கை என் தோளில் விழுந்தது. மறு கை என் கையை பிடித்தது. என்னை உற்று பார்த்தார். அடுத்த வினாடி அவர் கண்களில் நீர் வந்தது............

மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்...........
Sunday, September 2, 2012

உழுந்தம்பருப்பு சாதம் + தேங்காய் துவையல்.

தொடர்ந்து சூரிய ஒளி மின்சாரம், மின்சாரம், சமையல் எரிவாயு, காய்கறி தோட்டம் என உங்களை ரெம்பவும் நோகடித்து விட்டதால் பழையபடி நீங்கள் புத்துணர்ச்சி பெறவே இந்த பதிவு

உழுந்தம்பருப்பு சாதம்.

தேவையான பொருட்கள்.

1. பச்சரிசி-------------- 4 (கிண்ணம்) அதாவது தேவையான அளவு.
2. உளுத்தம்பருப்பு( தொலி நீக்கியது)----------- 1 கிண்ணம்.
3. தேங்காய் பூ--------------- 1 முறி தேங்காய்
4. உப்பு --------------- தேவையான அளவு.
குறிப்பு:  அரிசி, உளுத்தம் பருப்பு 4:1 என்ற விகிதம்.

செய்முறை:
பச்சரிசியை நன்றாக மூன்று முறை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்ய வேண்டும். 
உளுத்தம் பருப்பையும் நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
ஒரு முறி தேங்காயை நன்றாக திருகி பூ தயார் செய்யவேண்டும்.

அதன் பின் நான்கு கிண்ணம் சாதத்திற்கு எவ்வளவு தண்ணீர் வழக்கமாக வைப்பீர்களோ அதே அளவு தண்ணீர்ல் அரிசி, பருப்பு தேங்காய் இவை மூன்றையும் போட்டு,  சிறிது உப்பையும்(ருசிக்கு ஏற்ப) சேர்த்து குக்கரில் சாதத்தை வேக வைக்கவும்.

தேங்காய் துவையல்

1.நன்றாக முற்றிய தேங்காய் பூ ----- 1 முறி.
2.கோலிக்காய் அளவுக்கு புளி
3.சிறிது பெருங்காயத்தூள்
4. மிளகாய் வற்றல் --------- காரத்துக்கு ஏற்ப
5. உளுந்து ------- 1 ஸ்பூன்
6.கடுகு 1/2 ஸ்பூன்
7. கருவேப்பிலை கொஞ்சம்

செய்முறை:
உளுந்து, கடுகு, மிளகாய் வற்றல் ஆகியவற்றை தனித்தனியாக இருப்பு சட்டியில்(கடாயில்) போட்டு வறுத்து வைத்துக்கொள்ளவும். அத்துடன் தேங்காய் பூ, புளி, கருவேப்பிலை, உப்பு, பெருங்காயத்தூள் இவறை சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கட்டியாகவும், நைஸ் ஆகவும் அம்மியில்(மிக்ஸியில்) அரைக்கவும். இப்பொழுது துவையல் ரெடி.

சுட்ட அப்பளம்: தேவையான அப்பளத்தை எடுத்து அடுப்பில் சுட்டு எடுக்கவும்.

சாப்பிடும் முறை:
1. சாதம் இளம் சூட்டில் இருக்கும் போது, நீங்கள் சாப்பிடும் சாதத்தின் அளவில் மூன்றில்  ஒரு பங்கு அளவுக்கு எடுத்துக்கொள்ளவும். அதில் முக்கால் எலுமிச்சை அளவுக்கு கருப்பட்டியை(வெல்லம்) எடுத்து நன்றாக தூளாக்கி அதில் போடவும். ஒரு கரண்டி நல்லெண்ணையை ஊற்றி நன்றாக சாதத்தை பிசைந்து சாப்பிடவும்.

2. அதன் பின் சாதத்தில் தேவையான அளவு துவையலை போட்டு, ஒரு கரண்டி நல்லெண்ணையை ஊற்றி சாதத்தை நன்கு பிசைந்து சுட்ட அப்பளத்துடன் சேர்த்து சாப்பிடவும்.

3. கடைசியாக தேவையான அளவு சாதத்தில் லூஸான தயிர் ஊற்றி பிசைந்து துவையலையும், சுட்ட அப்பளத்தையும் . தொட்டு சாப்பிடவும்.


மீண்டும் சந்திப்போம்...............