Tuesday, November 27, 2012

நுகர்வோர் வழக்கு - K.வினோத் அவர்களின் இ-மெயிலுக்கான பதில்.

எனது வலைப்பக்க வாசகர் K. வினோத், ஆன்லைன் மூலம் நுகர்வோர் பொருட்களை விற்பனை செய்யும்  "TIMTARA" http://www.timtara.com/ என்ற நிறுவனத்தில் ஒரு பொருளை ஆர்டர் செய்ததாகவும், 15-20 நாட்களில் பொருள் டெலிவரி செய்யப்பட்டுவிடும் என கூறியிருந்தும் மூன்று மாத காலமாகியும் பொருள் டெலிவரி செய்யப்படாததுடன், எவ்வித தகவலையும் அவர்களிடமிருந்து பெற இயலவில்லை. எனவே அந்த நிறுவனத்தின் மீது, நுகர்வோர் வழக்கு தொடர என்னிடம் ஆலோசனை கேட்டிருந்தார். அது தொடர்பாக பதில் அளிக்கும் வகையில் இந்த பதிவு.

நுகர்வோருக்கு (வாடிக்கையாளருக்கு) ஒரு பொருளை விற்பனை செய்ததிலோ அல்லது சேவையை (சர்வீஸ்) வழங்கியதிலோ குறைபாடு ஏற்படுமானால்,  அதை சரி செய்யக்கோரியும், அதனால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய கோரியும் விற்பனையாளர் அல்லது சேவையை வழங்கிய நிறுவனத்தின் மீது  நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி வழக்கு தொடரமுடியும்.

பாதிக்கப்பட்ட நுகர்வோர்  முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு, குறைபாடு மற்றும் அதனால் ஏற்பட்ட கஷ்ட நஷ்டங்களை  குறிப்பிட்டு அதை சரி செய்ய வேண்டும் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் அவ்விதம் செய்யாவிட்டால் வழக்கு தொடரப்படும் என்ற விபரத்தை எழுத்து மூலம் (பதிவுதபால், ஃபேக்ஸ், இ- மெயில்) 15 நாள் அவகாசத்துடன் நோட்டீஸ் வடிவத்தில் அனுப்பவேண்டும்.  

15 நாட்களில் திருப்திகரமான பதில் கிடைக்காவிட்டால் அல்லது பதிலே கிடைக்காவிட்டால், அவருக்கு வழக்கு தொடருவதில் ஆட்சேபணை இல்லை என முடிவு செய்து முறைப்படி நாம் வசிக்கும் இடத்திற்கு உட்பட்ட மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்கு தொடரலாம்.

இவருடைய விஷயத்தில் நோட்டீஸ் அனுப்புவதிலேயே பிரச்சனை உள்ளது. கம்பெனி வெப்சைட்டில் முகவரி இல்லை. அதனால் அந்த நிறுவனத்திற்கு லீகல் நோட்டீஸ் அனுப்பமுடியாது. மேலும் வழக்கு தொடரும்பொழுது எதிர் மனுதாரரை முகவரியுடன் குறிப்பிட்டே மனு தாக்கல் செய்ய முடியும். நம் மனுவின் நகல் எதிர்மனுதாரருக்கு பதிவுத்தபாலில் நீதிமன்றம் அனுப்பும்.

எனவே கம்பெனியின் நிரந்தர முகவரியை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். அந்த வேலையை தனிப்பட்ட முறையில் செய்யமுடியாது.  நாம் ஆன்லைன் மூலம் வங்கி கணக்கிலிருந்து கம்பெனியின் கணக்கு பணம் மாற்றம் செய்திருப்போம். அல்லது விசா கார்டு, கிரெடிட் கார்டு மூலம் பணமாற்றம் செய்திருப்போம். எனவே நாம் செய்த பணமாற்றம் எந்த கணக்கில் போய் சேர்ந்ததோ அந்த வங்கி கணக்குக்கு சொந்தக்காரரின் முகவரியை கண்டுபிடிக்க வேண்டும். எனவே இதை பண மோசடி வழக்காக காவல் துறையில் புகார் அளிக்க வேண்டும்.  காவல்துறை வங்கியின் உதவியுடன் பணம் பெற்ற நிறுவனம்/நபரின் பெயர் முகவரியை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு தொடருவார்கள்.

இவர் என்ன பொருள் ஆர்டர் செய்தார்? எவ்வளவு பணம் செலுத்தினார் என்ற விபரத்தை குறிப்பிடவில்லை.

சுண்டைக்காய் கால் பணம் சுமை கூலி முக்கால் பணம் என்ற நிலைதான் ஏற்படும்.

செலுத்திய தொகை சொற்பம் என்றால் கெட்ட கனவாக நினைத்து மறந்து விடுவது உசிதம். காரணம் காவல் துறையில் புகார் செய்து கிரிமினல் வழக்கு தொடர்ந்தால் வழக்கு முடிய பல ஆண்டுகள் ஆகும். அதோடு ஆகும் செலவும் காலவிரயமும் கணக்கிட முடியாது.

நுகர்வோர் வழக்கை வக்கீல் மூலமாக நடத்தினால் வக்கீல் பீஸ் ஆக குறைந்த பட்சம் ரூ.3000-5000 வரை கொடுக்க வேண்டும். வழக்கு விசாரணைக்கு வரும் நாட்களில் நம் வக்கீல் ஆஜராகிரா என்பதை பார்க்க நாமும் நீதிமன்றம் செல்ல வேண்டும். குறைந்த பட்சம் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் தீர்ப்பு கிடைக்க மூன்று ஆண்டுகள் ஆகும். தீர்ப்பு நமக்கு சாதகமாக இருந்தால் எதிராளி மாநில ஆணையத்தில் மேல் முறையீடு செய்வார். நமக்கு பாதகமாக இருந்தால் நாம் மேல் முறையீடு செய்ய வேண்டும். அங்கும் மூன்றாண்டுகள் ஆகும் தீர்ப்பு கிடைக்க. இங்கும் வாதாட வக்கீலுக்கு பீஸ் கொடுக்க வேண்டும். வழக்கறிஞர் இன்றி நாமே நடத்தினால் பணச்செலவு கிடையாது. ஆனால் கிட்டத்தட்ட 5வருடம் அலைய வேண்டும். கிடைக்கும் நஷ்ட ஈடும், வழக்கு செலவுக்காக தரும் தொகையும் சேர்த்து பார்த்தாலும் வக்கீல் பீசுக்கு சரியா வராது.

எதிராளிக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்ற வெறி இருந்தால் சொற்ப தொகையாக இருந்தாலும் வழக்கு தொடரலாம். அல்லது பெரும் தொகையாக இருந்தால் வழக்கு தொடருவதை தவிர்க்க முடியாது.

இதை அவரே முடிவு செய்ய வேண்டும்.

மீண்டும் சந்திப்போம்..............


 



10 comments:

  1. ஐந்து வருடம் அலைய வேண்டுமா...!

    நல்ல முடிவு சொன்னீர்கள் ஐயா... நன்றி...

    ReplyDelete
  2. sir, i was also cheated by timtara..i have filed a case thru m/s.akosha.and got my amount after 60 days..please ask your friend to contact akosha..i hav paid a nominal fee of rs.500/- to them..

    ReplyDelete
  3. Hello Sir,
    Have a look at this URL http://www.whois.com/whois/timtara.com. This shows that culprit's address and phone numbers. Please do use it, if you really want to file a case.

    ReplyDelete
  4. கவைக்குதவாத சட்டம். தவறு நம் மீதுதான். எந்தப் பொருளாக இருந்தாலும் நேரில் சென்று பார்த்து வாங்க்க்கூடிய இடங்களில் வாங்குவதே உத்தமம்.

    ReplyDelete
  5. வழக்கு முடியும் போது பகைமை மாறி நட்பு உண்டான கதை உண்டு .வழக்கு என்பது வளவள கொளகொள !

    ReplyDelete
  6. Dear Elite traader

    It will be really helpful if you disclose the details about Akosha.I lives in chennai currently.

    ReplyDelete
    Replies
    1. dear vinoth, please register with www.akosha.com and upload your complaint about your problem with timtara. they will call and assist you..

      Delete
  7. Dear Palaniswamy,

    Thanks for your help....

    ReplyDelete
  8. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டப்படி ஆவணங்கள் தொடர்பான வழக்கை 90 நாட்களுக்குள்ளும், பகுப்பாய்வுக்கு உட்பட்ட வழக்குகளை 150 நாட்களுக்குள்ளும் முடிக்க வேண்டும். ஆனால், நீங்கள் இதை சொல்லாமல், ஐந்து வருடங்கள் ஆகும் என்று பயமுறுத்துகிறீர்கள்.

    கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களும், இடைத்தரகர்களும் ஆன வக்கீலுக்கு பீஸ் 3000 - 5000 ஆகும் என குறிப்பிடுகிறீர்கள். உண்மையில், தீர்ப்புரையில் குறிப்பிடப்படும் வழக்கு செலவுத் தொகை முழுவதுமோ அல்லது பாதியோதான் (சூழ்நிலைக்கு ஏற்ப) வக்கீலுக்கான பீஸ். பொதுவாக இது 500 முதல் 1000 வரைதாம்.

    சட்டம் சரியாக இருக்கிறது என்பதை குறிப்பிட்டும், அதை சரியாக பயன்படுத்தி நாமே வாதாடி நீதி பெறுவது என்பது என்பது குறித்து ஆலோசனையை மட்டும் தெரிந்தால் சொல்லுங்கள். தவறாக சொல்லி சட்டத்தின் மீது மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தாதீர்கள்.

    ReplyDelete