Saturday, December 6, 2014

தமிழக அரசு தோட்டக்கலை துறையின் “ DO IT YOURSELF" திட்டம்.

சென்னை மற்றும் கோவை நகரங்களில் வசிப்பவர்கள் தங்கள் வீட்டுக்கு தேவையான காய்கறிகளை தங்கள் வீட்டின் மொட்டை மாடியில் ஆர்கானிக் முறையில் செடிகளை வளர்த்து பெறும் வகையில் 50% மானியத்துடன் அதற்கான பொருட்களை வழங்கும் திட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. இதன்படி வழங்கப்படும் பொருட்களின் (கிட்) விலை மானியம் போக 1325 ரூபாய். 

இதற்காக அரசு ஒதுக்கியிருக்கும் பட்ஜெட் ரூ. 5 கோடி. சென்னைக்கு 9500 Kits, கோவைக்கு 3000 kits என ஒதுக்கப்பட்டுள்ளது. நபர் ஒன்றுக்கு அதிக பட்சமாக 5 கிட்டுகள் வழங்கப்படும். 

ஒவ்வொறு கிட்டிலும் உள்ள பொருட்களின் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


செய்முறை விளக்க கையேடு (Technical Booklet) டவுன்லோடு செய்ய கிளிக் செய்யவும்.

விபரங்களுக்கும், பதிவு செய்யவும்  விளக்க கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியை தொடர்பு கொள்ளவும்.Saturday, November 22, 2014

வீட்டு காய்கறி தோட்டம் - 2 (Grow Bag Garden System)

Grow Bag Garden System  என்பது தொட்டியில் செடி வளர்ப்பது போன்றதே. தொட்டிக்கு பதிலாக கனமான பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படும். தண்ணீர் தேங்கி நிற்காமல் இருக்க, பையின் பக்கவாட்டில் சிறிய துளைகள் இருக்கும்.  இது பல அளவுகளில் தயாரிக்கப்படுகிறது. வெளி நாடுகளில் செடிக்கு ஏற்ப கீழ் கண்ட அளவுகளில் பைகள் கிடைக்கிறது.


5 Gallon – 9″W x 8-1/4″ x 19-3/4″ tall
7 Gallon – 9-3/4″ x 8-3/4″ x 22″ tall
10 Gallon – 14″ x 12″ x 21″ tall

 நம் நாட்டிலும் பல பிளாஸ்டிக் கம்பெனிகள் செடி வளர்ப்பு பைகளை தயாரிக்கின்றன. விபரம் அறிய கிளிக் செய்யவும்.

செடி, மரம் ,கொடி போன்றவை வளர ஒரு ஊடகம் தேவை. இயற்கையில் மண் தான் ஊடகமாகும்.  செடி வளர மண் ஏன் தேவை என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

1. செடியின் வேர்களுக்கு ஒரு பிடிப்பு கிடைத்தால் தான் அது மேல் நோக்கி வளர முடியும்.
2. நீரை உள்வாங்கி, மண் ஈரப்பதமாகி செடிக்கு தேவைப்படும் நீரை வேர் வழியாக கொடுக்கும்.
3. செடிக்கு தேவையான உர சத்துக்கள் மண்ணில் இருக்கும் மக்கி போன பொருட்களிலிருந்து  கிடைக்கும்.

தற்பொழுது பிளாஸ்டிக் பைகளில் செடி வளர்க்க, மண்ணுக்கு பதிலாக கோகோ பீட் (COCO PEAT) என ஆங்கிலத்தில் அழக்கப்படும் தேங்காய் நார் கழிவு பயன்படுத்தப்படுகிறது. 

தேங்காய் நார் கழிவு சுத்தம் செய்யப்பட்டு ஹைட்ராலிக் ப்ரஸ் மூலம் 5:1 என்ற அளவில் கட்டிகளாக கம்ரஸ்ட் செய்யப்பட்டு  விற்கப்படுகிறது. ஐந்து கிலோ எடை உள்ள கட்டியின் விலை சுமார் 170 - 250 ரூபாய்.  ஒரு குரோ பேக்கிற்கு 2 கிலோ நார் கழிவு தேவை.
COCO PEAT BRICK

இதில் மண்ணில் இருப்பது போல எவ்வித உர சத்தும் கிடையாது என்பதால், செடியின் வளர்ச்சிக்கு தேவையான உர சத்து கிடைக்க Water soluble fertilizer, Bio fertilizers போன்றவற்றை கொடுக்க வேண்டும்.


சோஷியல் அந்தஸ்துக்காக அல்லது நானும் ஆர்கானிக் காய்கறி செடி வளர்க்கிறேன் என மற்றவர்களிடம் பெருமையடித்துக்கொள்ள விரும்புபவர்கள் தாராளமாக குரோ பேக், கோகோ பீட், உரம் இவற்றை காசு கொடுத்து வாங்கி செடி வளர்க்கலாம். குரோ பேக் ரூ.30/- , கோகோ பீட் 2 கிலோ 100/-, உரம் ரூ.30/- ( விலை சரியாக தெரியவில்லை) ஆக மொத்தம் ரூ.160/- க்கு மேல் வரும். அதோடு விதை அல்லது நாற்று விலையையும் சேர்க்க வேண்டும். உதாரணத்துக்கு கத்தரி செடியை எடுத்துக்கொண்டால் வீரிய ரகமாக இருந்தால் அதிக பட்சமாக மூன்று கிலோ காய் காய்க்கும். இன்றைய விலைப்படி 150 ரூபாய்!

செலவில்லாமல் அல்லது குறைந்த செலவில் ஆர்கானிக் முறையில் காய்கறி செடிகளை வளர்த்து காய்கறிகளை பெறுவதே சிறந்தது.

செடி வளர்ப்பு பையாக 25 கிலோ, 50 கிலோ அரிசி பேக் செய்து வரும் பிளாஸ்டிக் பையை (கோணி) பயன்படுத்தலாம். கோணியின் உயரம் அதிகமாக இருக்கும் எனவே அதன் மேல் பக்கம் கிழ் நோக்கி வருமாறு வெளிப்புறமாக மடித்து விடவேண்டும். இப்பொழுது  பை இரண்டு லேயராக ஆகி பலமானதாக இருக்கும்.பிளாஸ்டிக் டிரம், கேன் ( பழையது - கீறல், ஒட்டை இருந்தாலும்) படத்தில் காட்டியபடி இரண்டாக வெட்டி உபயோகிக்கலாம். மூடியை நன்றாக மூடி வெட்டிய பகுதி மேல் நோக்கியிருக்கும் படி வைத்து வெட்டிய இரண்டு பகுதியையும் உபயோகிக்கலாம்.
பிளாஸ்டிக் கோணிய  மளிகை கடையிலும், கேன், ட்ரம் இவற்றை பழைய பேப்பர் கடையிலும் வாங்கலாம். இவற்றின்  பக்கவாட்டில் கீழ் பக்கம் சிறிய துளைகள் போடவேண்டும். இவற்றின் வழியாக தண்ணீர் தேங்கி நிற்காமல் வெளியே வழிந்து விடும். இதனால் செடிகள் அழுகாது.

தோட்ட மண், மக்கிய சாண தூள், மக்கிய கம்போஸ்ட் உரம், மணல். இவை நான்கையும் சம அளவில் (1:1:1:1) கலந்து மண் கலவையை தேவையான அளவிற்கு  தயார் செய்து கொள்ள வேண்டும். தோட்ட மண்ணில் கல், செங்கல் கட்டி, சிமிண்ட் கலவைகள், செடி, களைகள் இவை இல்லாதவாறு சுத்தம் செய்து உதிரியாக ஆக்க வேண்டும்.

அதன் பின் வெட்டி தயார் செய்யப்பட்ட கேன்/ட்ரம்/ பிளாஸ்டிக் கோணியில் 2 அல்லது 3 அங்குலம் உயரம் குறைவாக இருக்குமாறு நிரப்பவேண்டும்.

அடுத்த பதிவில் சந்திப்போம்........


Tuesday, November 18, 2014

வீட்டு காய்கறி தோட்டம் -1 ( சதுர அடி தோட்டம்)

வீட்டில் சமையலுக்கு தேவையான காய்களுக்காக காய்கறி தோட்டம் போடுவது ஒன்றும் புதிதான விஷயம் இல்லை. ஆனால் நம் நாட்டிற்கும் வெளிநாட்டிற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. நாம் நிலத்தை நன்கு கிளறி அதில் செடியை நடுவோம். ஆனால் அவர்கள் நிலத்தின் மீது  தேவையான நீளம், அகலம் மற்றும் 16 அங்குல உயரம் கொண்ட மர சட்டத்தை வைத்து அதன் உட்புறம் தோட்ட மண், தொழு உரம்,  மக்கிய குப்பை ஆகியவை கலந்து நிரப்புவார்கள்.  பொதுவாக காய்கறி செடிகளின் வேர் பரவ இந்த ஆழம் போதுமானது. இந்த முறையில் தோட்டம் அமைப்பது ’சதுர அடி தோட்டம்’ (Square Foot Garden) என அழைக்கப்படுகிறது. கீழே 32 சதுர அடி  (8 அடி நீளமும் 4 அடி அகலமும்) உள்ள  தோட்ட அமைப்பு காட்டப்பட்டுள்ளது. 16 அங்குல உயரமுள்ள இந்த மர சட்டத்தினுள் மேலே குறிப்பிட்டபடி நன்றாக கலக்கப்பட்ட தோட்ட மண், தொழு உரம் மற்றும் மக்கிய குப்பை உர கலவை முழுமையாக நிரப்பப்பட்டுள்ளது. மரசட்டத்தின்  மேல் நீள வாக்கில் 8 அடி நீளமுள்ள மர ரீப்பர் சம இடைவெளியில் பொருத்தப்பட்ட்ள்ளது. அதைப்போலவே அகலவாக்கில் 7 ரீப்பர்கள் பொருத்தப் பட்டுள்ளது.  இப்பொழுது 32 கட்டங்களாக (சதுர அடிகளாக) பிரிக்கப்பட்டு விட்டது. இந்த ரீப்பர்கள் அவசியம் கிடையாது. இது செடியை நடுவதற்கு அல்லது விதையை ஊன்றுவதற்கு ஒவ்வொரு சதுர அடியையும் பிரித்து காட்டுவதற்கு மட்டுமே. இதற்கு பதிலாக கயிற்றை கட்டலாம். இது அடையாளத்துக்கு தான்.


இனி ஒவ்வொரு சதுரத்திலும் என்னென்ன செடிகளை வளர்க்கலாம், எத்தனை செடிகளை வளர்க்க முடியும் என்பதை பார்க்கலாம். கிழே உள்ள படம், வெளி நாடுகளில் சதுர அடி தோட்டத்தில் வளர்க்கப்படும் காய்கறி செடிகளின் எண்ணிக்கை (சதுர அடிக்கு) விபரம் காட்டப்பட்டுள்ளது.

இதில் நாம் உபயோகிக்கும் காய்கறி செடிகள் பற்றி பார்க்கலாம்.


சதுர அடி தோட்டம் என்பது கிடத்தட்ட மேட்டு பாத்தி விவசாயம் போன்றதே. இம் முறை மூலம், குறைந்த நில பரப்பில் அதிக செடிகளை வளர்த்து அதிக காய்கறிகளை பெறுவதே மேலை நாட்டினரின் நோக்கமாகும். ஏக்கர் கணக்கில் வீட்டை சுற்றி இடமிருந்தும் ஏன் இந்த சதுர அடி தோட்டத்தை விரும்புகிறார்கள்? அதற்கான காரணம் இவைதான்.

1. நிலத்தை கொத்தி பக்குவப்படுத்த தேவையில்லை.

2. தோட்ட மண், மக்கிய குப்பை இவை கலந்து செடி வளர தேவையான உயரத்துக்கு நிரப்பப்படுவதால், இம் மண் எப்பொழுதுமே இறுகாமல் லூஸாக இருக்கும். இதனால் வேர்களுக்கு தேவையான காற்றோட்டம் தாராளமாக கிடைக்கும்.

3. கீழேயுள்ள மண் (நிலம்) இறுக்கமாக இருப்பதால், செடிக்கு ஊற்றும் நீர் மண்ணுக்குள் இறங்கி வீணாகாது. அதனால் குறைவான தண்ணீரே தேவை.

4. செடி வளர்வதற்காக நிரப்பப்பட்டுள்ள மண்ணில் உள்ள உர சத்து நீரில் கரைந்து பூமிக்குள் செல்லாமல், செடிக்கே செல்லும்.

5. ஒவ்வொரு வகை செடிக்கும் மாறுபட்ட சத்துக்கள் தேவை. பல வைகையான செடிகள் வள்ர்க்கப்படுவதால், மண்ணில் கலந்துள்ள உரத்தில் இருக்கும் பலவிதமான சத்துக்கள் பரவவலாக தேவைப்படும் செடிகளுக்கு கிடைக்கும்.

நம் நாட்டை பொறுத்தவரை மரத்திலான சட்டம் அமைப்பது என்பது அதிக செலவு ஏற்படுத்தும் விஷயம். மேலும் மழை வெயில் இவற்றால் இற்றுப்போகும். எனவே மரத்துக்கு பதிலாக மண் சரிந்து விழாமல் இருக்க சிமிண்ட் ஸ்லாப் அல்லது பழைய செங்கல் இவற்றை அடுக்கி வைக்கலாம். அல்லது பாக்கிங் கேஸ் ( மரப்பெட்டி) உபயோகப்படுத்தலாம்.

அடுத்த பதிவில் செடிவளர்ப்பு பையில் (GROW BAG) எப்படி காய்கறி தோட்டம் அமைக்கலாம் என்பதை விரிவாக பார்க்கலாம்.

சந்திப்போம்...........


Thursday, October 30, 2014

மறுபடியும் நான்........

வணக்கம் நண்பர்களே,

பல மாதங்களாக பதிவு எதுவும் எழுதவில்லை. அதனால்  எனக்கு ’எக்ஸ்பயரி டேட்’ முடிந்து விட்டது என்ற முடிவுக்கு நீங்கள் வந்திருக்கலாம்.

உருப்படியான காரியம் செய்யலாம் என்ற முடிவில், சோலார் மின்சாரம் பற்றி விரிவான சுமார் 100 பக்கங்கள், 80 விளக்க படங்கள், அட்டவணைகள் கொண்ட புத்தகத்தை எழுதும் வேலையில் இருந்தேன். அதனால் பதிவு எதும் போடவில்லை. சூரிய ஒளி, எலெக்ட்ரிக்கல் பற்றி பதிவு எழுதிய போது, இதை ஏன் புத்தகமாக வெளியிடக் கூடாது என பலர் கேட்டிருந்தார்கள். அதுவே இந்த முயற்சிக்கு தூண்டுகோலாக இருந்தது.

தற்பொழுது சோலார் மின்சாரம் பற்றிய புத்தகத்தை எழுதி முடித்துவிட்டேன். எலெக்ட்ரிக்கல் புத்தகத்தை எழுத தொடங்கியிருக்கிறேன்.

புத்தகத்தை பிரசுரிப்பதில்தான் இப்பொழுது பிரச்சனை. எந்த புத்தக கம்பெனி தமிழ் தொழில் நுட்ப புத்தகங்களை வெளியிடுகிறது என்பது தெரியவில்லை.

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ‘அமேசான்” மற்றும் ’ஃபிளிப்கார்ட்” ஆகியவற்றில் நாமாகவே இ-புக் பிரசுரம் செய்யும் வசதி உள்ளது. இ-புத்தகத்தை அமேசான் கிண்டில் போன்ற இ-புக் ரீடர் மூலமே வாசிக்க முடியும். 

இ-புக்காக வெளியிட்டால் நெட் உபயோகிப்பவர்கள் மட்டுமே வாங்கி படிக்க முடியும். இந்த புத்தகத்தை தமிழில் விளக்கமாக எழுதிய காரணமே சாதாரண எலெக்டிக்கல் வேலை பார்ப்பவர்கள் முதல் பொழுது போக்காக சிஸ்டம் அமைக்க விரும்புவர்கள் வரை சோலார் சிஸ்டத்தை வடிவமைத்து நிறுவுதல் மற்றும் பழுது பார்த்தல் போன்ற வேலைகளை செய்யும் அளவிற்கு அவர்களுக்கு பயன்பட வேண்டும் என்பதே. 

அமேசான் , ஃபிளிப்கார்ட் ஆகிய இரண்டிலுமே தமிழில் இ- புத்தகம் பப்ளிஷ் செய்ய வசதி இல்லை.

இந்த புத்தகத்தை எப்படி, எந்த பிரசுர நிலையம் மூலம் வெளியிடலாம் என்பது பற்றி தங்களிடம் ஏதாவது ஆலோசனை இருந்தால் பிரசுர நிலயத்தின் முகவரி, தொலை பேசி எண், இ-மெயில் முகவரி ஆகியவற்றை குறிப்பிட்டு எனக்கு தகவல் தாருங்கள்.

தங்கள் ஆலோசனையை எதிர்பார்க்கும்

திரவிய நடராஜன்Tuesday, July 22, 2014

இது உண்மைச் சம்பவம்...


.இச்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தயவு செய்து கவனியுங்கள். உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள்.
நீங்கள் குணமடைவீர்கள்!
தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை சந்தித்தார்.
தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில்,இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.
ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு பரிந்துரைத்தார்.
மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில்
பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல்நாள்ரூ2,25,000த்தை டெபாசிட் செய்தார்.
நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து வியந்தார்.
ஆச்சரியப்பட்டார். தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பிறகு ஏதாவது மருந்து சாப்பீட்டீர்களா? என்று டாக்டர் வினவினார்.
இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம்.
இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்.
1 கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப் புண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.
எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.
நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள்.
மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....சுவையாகவும் இருக்கும்.
நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
- ஸ்ரீ சமஸ்கிருத ஆயுர்வேத சர்வதேச ஆய்வு இதழ்

Monday, June 23, 2014

ஏசி சோலார் பேனல் - இரண்டாம் தலை முறை சோலார் சிஸ்டம்.

இதுவரை இந்த பிளாக்கில் நாம் பார்த்தது ஆரம்ப கட்ட நிலையில் இருந்த சோலார் மின்சாரம் தயாரிக்கும் சிஸ்டத்தை பற்றியது. அதாவது சோலார் பேனல்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் டி.சி. மின்சாரம், சார்ஜ் ரெகுலேட்டர் மூலம் கட்டுப்படுத்தப்பட்டு பாட்டரியில் சேமிக்கப்படும். அதன் பின் மின்வாரிய மின்சாரம் இல்லாத நிலையில் பாட்டரியில் இருக்கும் மின்சாரம் டிசி-ஏசி இன்வெர்ட்டர் மூலமாக 230 ஏ.சி. மின்சாரமாக மாற்றப்பட்டு உபயோகிக்கப்படும். இது ஆஃப் கிரிட் சோலார் சிஸ்டம் ஆகும்.

சூரிய ஒளி இருக்கும் நேரத்தில் சோலார் பானலில் உற்பத்தியாகும் டிசி மின்சாரம் சார்ஜ் ரெகுலேட்டர் மூலம் கட்டுப்படுத்தப்பட்டு, இன்வெர்ட்டரில் 230 வோல்ட் மின்சாரமாக மாற்றப்பட்டு நேரடியாக உபயோகப்படுத்தப்படும். எஞ்சிய மின்சாரம் மின்வாரிய சப்ளைக்கு அனுப்பப்படும். இது கிரீட்- டை சோலார் சிஸ்டம் ஆகும்.

இப்பொழுது கிரீட்-டை சோலார் சிஸ்டத்தை அதன் செயல் திறனை அதிகப்படுத்தி எளிய அமைப்பாக "பிளக் அண்டு பிளே" ஆக மாற்றியுள்ளனர். இதில் சோலார் பேனல் மற்றும் சோலார் பேனலின் பின் பக்கம் பொருத்தக்கூடிய, மிகவும் சிறிய அளவிலான (6.5 இஞ்சு நீளம், 6.5 இஞ்சு அகலம், 1 இஞ்சு கனம்)  மைக்ரோ இன்வெர்ட்டர் என்ற இரு சாதனங்கள் மட்டுமே உண்டு.

கீழே மைக்ரோ இன்வெர்ட்டரின் படம்  காட்டப்பட்டுள்ளது.


இதில் "TO SOLAR PANEL" என குறிக்கப்பட்டுள்ள இரண்டு வயர்களையும் சோலார் பேனலுடன் இணைக்க வேண்டும். இது டி.சி. இன்புட் ஆகும். "230 VOLT AC" என குறிப்பிடப்பட்டுள்ள சாக்கெட்டில் 230 Volt AC மின்சாரம் வெளிவரும்.

தற்பொழுது மைக்ரோ இன்வெர்ட்டர்கள் 250 வாட் பேனல்களில் இணைக்கக்கூடியதாகவே தயாரிக்கப்படுகிறது.  நமக்கு ஒரு கிலோ வாட் ( 1000 வாட்) தயாரிக்கக்கூடிய சிஸ்டம் தேவை என்றால் நான்கு மைக்ரோ இன்வெர்ட்டர்கள், நான்கு 250 வாட் சோலார் பேனல்கள் தேவை. இணைப்பு விபரத்தை கீழே உள்ள படம் விளக்குகிறது.

( ஆறு சோலார் பேனல்கள் + ஆறு மைக்ரோ இன்வெர்ட்டர்கள் சிஸ்டம்)

மொட்டைமாடியில் பொருத்தப்பட்டுள்ள சோலார் ஆரேயிலிருந்து (பேனல்களிலிருந்து) நேரடியாக வெளி வரும் 230 வோல்ட் ஏசி மின்சாரம், மெயின் சுவிட்ச்சின் இன்புட் அதாவது மீட்டரிலிருந்து இணைக்கப்பட்டுள்ள வயருடன்(பேஸ் வயருடன் பேஸ் வயரையும், நியூட்ரல் வயருடன் நியூட்ரலையும்) இணைக்க வேண்டும். இது சிங்கிள் ஃபேஸ் சர்வீஸ்-க்கு.

உங்கள் வீட்டில் மும் முனை மின் இணைப்பு இருந்தால் நிச்சயமாக ஆட்டோ ஃபேஸ் சேஞ்சர் அல்லது ஃபேஸ் சேஞ்ச் ஓவர் சுவிட்ச் மாட்டியிருப்பீர்கள். உங்கள் வீட்டின் லோடை மூன்றாக பிரித்து, ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பேஸ் சப்ளை கிடைக்குமாறு இணைக்கப்பட்டிருக்கும்.  இந்த இணைப்பை மாற்ற வேண்டும். அதாவது மூன்றாக பிரிக்கப்பட்டுள்ள லோடுகளை( மூன்று சர்க்கியூட் வயர்களையும் ஒன்றாக இணைத்து, ஒரு சிங்கிள் பேஸ் மெயின் சுவிட்ச்சை தனியாக பொருத்தி அதன் அவுட்புட் டெர்மினலில் இணைக்க வேண்டும். சேஞ்ச் ஓவர் சுவிட்ச்சின் அவுட் புட்டை சிங்கிள் ஃபேஸ் மெயின் சுவிட்ச்சின் இன்புட்டுடன் இணைக்க வேண்டும். இந்த இன்புட் முனையுடன் தான் சோலார் ஆரேயிலிருந்து வரும் அவுட்புட்(230வோல்ட் ஏசி) வயரை இணைக்க வேண்டும்.

வீடுகளில் Three Phase Grid-Tie சோலார் சிஸ்டம் அமைக்க அரசிடம் திட்டம் எதுவும் இல்லாததால் அதைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டாம் என்பதால் இங்கு விவரிக்கப்படவில்லை.

மைக்ரோ இன்வெர்ட்டர்கள் வெளிநாடுகளில்தான் தயாரிக்கப்படுகிறது. இதற்கும் சோலார் பேனல்கள் போலவே 25 ஆண்டுகள் உத்தரவாதம் உண்டு. இதன் விலை 125 -150 அமெரிக்க டாலர்கள்(ரூ.7500 -9000)ஆகும்.

மைக்ரோ இன்வெர்ட்டர் பொருத்தப்பட்ட சோலார் சிஸ்டம் அமைக்க ஆகும் செலவு விபரம்.

250 வாட் சோலார் பேனல்கள் 4 = ரூ.55,000( Rs.55 per Watt)
மைக்ரோ இன்வெர்ட்டர்கள் 4   = ரூ. 36,000( அதிக பட்சம்)

ஆக மொத்தம்                                  = ரூ. 90,000

சாதாரண கிரிட் டை சோலார் சிஸ்டத்துக்கு ஆகும் அதே செலவுதான்.

நன்மைகள்: 25% அதிகமான மின் உற்பத்தி திறன். 25 ஆண்டுக்கு இன்வெர்ட்டருக்கான உத்தரவாதம்.


             
Thursday, June 19, 2014

மின்சாரத்தை சேமிக்க முடியுமா?

மின் வெட்டு ஏற்படும் காலங்களில் எல்லாம், அரசு "மின்சாரத்தை வீணாக்காதீர்கள். அவசியப்படும் பொழுது மட்டுமே மின் சாதனங்களை உபயோகப்படுத்துங்கள். மின்சாரத்தை சேமியுங்கள்" என விளம்பரம் செய்யும். (இப்பொழுது செய்வதாக தெரியவில்லை). தங்களுக்கும் சமூதாய பொறுப்பு உண்டு என காட்டிக்கொள்ளும் வகையில் என்னை போன்ற பதிவர்கள் கூட இது போல் அறிவுரை சொல்வதுண்டு.  உண்மையிலேயே, நம்மால் மின்வாரிய மின்சாரத்தை, தேவையற்ற மின் பயன்பாட்டை குறைப்பதன் மூலம் சேமிக்க முடியுமா? முடியாதா? என்ற சந்தேகம் வந்துள்ளது.  நீங்களே சொல்லுங்கள்.

வலது பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு படிவத்தில் வாக்களியுங்கள்.


கவனிக்க: ஓட்டளிப்பு பட்டை இயங்காததால் பின்னூட்டத்திலேயே தெரியப்படுத்துங்கள். மன்னிக்கவும்.Monday, June 16, 2014

இரட்டிப்பு மின்சார உற்பத்தி செய்யும் பத்ரி சேஷாத்ரி வீட்டு சோலார் சிஸ்டம் !

பத்ரி சேஷாத்ரி அவர்கள் தனது "சோலார் விளக்கு + மொபைல் சார்ஜர்" என்ற பதிவில்,

"நான் சுமார் ஓராண்டுக்குமுன் சூரிய ஒளி மின்சாரத்துக்கான அமைப்பை என் வீட்டில் ஏற்படுத்தியிருந்தேன். சென்ற ஆண்டு முழுதும் அதனால் என்ன சேமிப்பு என்பதைக் கணக்கிட்டுப் பார்த்தேன்.
சூரிய ஒளி மின் அமைப்பை ஏற்படுத்துவதற்குமுன் ஓராண்டில் நான் செலவழித்த மின் கட்டணம் சுமார் ரூ. 43,000. சூரிய ஒளி மின் அமைப்பை நிறுவியதன்பின் ஓராண்டில் செலவழித்த தொகை சுமார் ரூ. 20,000. ஓராண்டில் சேமிப்பு சுமார் ரூ. 23,000/-"

என குறிப்பிட்டுள்ளார்.வருடம் 1-க்கு இவர் செலுத்திய மின் கட்டணம் ரூ.43,000 என்றால் சராசரியாக மாதம் 3,583 ரூபாய் ஆகும். கீழே கொடுக்கப்பட்டுள்ள மின் வாரிய கட்டண பட்டியல் படி இரண்டு மாதத்திற்கு 600 யூனிட்டுகளுக்கு மேல் செலவு செய்திருக்கவேண்டும்.


 இந்த பட்டியலின் படி ஒரு யூனிட்டின் கட்டணம் ரூ.5.75 ஆகும். இது தான் அதிக பட்ச கட்டணம்.

சோலார் இணைப்புக்கு முன் செலுத்திய கட்டணம்(ஆண்டுக்கு) = ரூ. 43,000

அதாவது உபயோகப்படுத்திய யூனிட்டுகள்  = 7,478.
 (Rs 43,000 divided by 5.75 = 7,478 Units )

சோலார் இணைப்புக்கு பின் செலுத்திய கட்டணம் (ஆண்டுக்கு) = ரூ.20,000.

அதாவது உபயோகப்படுத்திய யூனிட்டுகள் = 3,478.
( Rs. 20,000 divided by 5.75 = 3,478 Units)

வித்தியாச யூனிட்கள் அல்லது கிடைக்கப்பெற்ற சோலார் மின்சாரம் = 4000 யூனிட்கள்
( 7,478 - 3,478 = 4000)

அமைக்கப்பட்டுள்ள சோலார் சிஸ்டம் பற்றிய அவர் பதிவு கீழே.

என் வீட்டுக் கூரைமீது சூரிய ஒளி மின்சார உற்பத்தி

அதாவது  அவர் பதிவில் கூறப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் அவர் அமைத்திருப்பது  1.15 கிலோ வாட் (5 x 230W = 1.150 Kw) சோலார் சிஸ்டமாகும்.  இந்த சிஸ்டம் ஒரு ஆண்டில் (365 நாட்களில்) 4000 யூனிட்டுகளை உற்பத்தி செய்திருக்குமானால் அது உலக மகா அதிசயமாகும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையை பாருங்கள். 

இது இந்திய அரசின் வானிலை ஆய்வு மையம் கொடுத்திருக்கும் புள்ளி விபரமாகும். இதன்படி சென்னையில் சராசரியாக ஒரு வருடத்தில், நாள் தோறும் கிடைக்கும் சூரிய ஒளி மூலம் ஒரு சதுர மீட்டர் சூரிய ஒளி பரப்பில் 5.16 கிலோ வாட் (5.16 யூனிட்) சோலார் மின்சாரம் உற்பத்தி செய்யமுடியும். ஒரு கிலோ வாட் சோலார் பேனல்களின் மொத்த பரப்பளவு ஒரு சதுர மீட்டராக இருக்கும் படியே சோலார் பேனல்கள் தயாரிக்கப்படுகிறது. எனவே  இந்த பட்டியலை ஒரு கிலோ வாட் பேனல்கள் நாள் ஒன்றுக்கு உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் அளவாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதன்படி பத்ரி வீட்டில் அமைக்கப்பட்டிருக்கும் 1.15 கிலோ வாட் சோலார் பேனல்கள் ஒரு வருடத்தில் உற்பத்தி செய்ய வேண்டிய யூனிட்கள் எவ்வளவு?

1.15 Kw X 5.16 X 365 = 2,166 (2,165.9) யூனிட்டுகள்.

ஆனால் பத்ரி வீட்டில் உள்ள சிஸ்டம் 4,000 யூனிட்டுகள் உற்பத்தி செய்துள்ளது!

அதாவது இரட்டிப்பு உற்பத்தி ஆகும்.

இது உலக மகா சாதனைதான்!Wednesday, June 11, 2014

தமிழக அரசின் " Solar Rooftop Capital Incentive Scheme " - ஒரு அலசல்

தமிழக அரசு இந்த சோலார் மின்சார திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இது கிரிட் டை சோலார் சிஸ்டம் (Grid Tie Solar System) ஆகும். முந்தைய சோலார் பற்றிய பதிவுகளில் இது பற்றி விரிவாக சொல்லப்படாத காரணத்தால் இந்த பதிவை எழுதுகிறேன்.

செயல்படும் முறை

கிரிட் டை சோலார் சிஸ்டம் சாதாரண சோலார் சிஸ்டத்தை போன்றதே. ஆனால் இரண்டு விஷயங்களில் மாறுபட்டது. 

1. இதில் பாட்டரிகள் கிடையாது.

2. இதில் பொருத்தப்படும் Bi-directional மின்சார மீட்டர், சாதாரண மீட்டரை போல ஒரே திசையில் (Clockwise Direction) மட்டுமே சுற்றாமல், முன் நோக்கியும் பின் நோக்கியும் (Clockwise & Anti clockwise) இயங்கக்கூடியது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள படம் இந்த சிஸ்டம் இயங்கும் முறையை விளக்குகிறது.மொட்டை மாடியில் பொருத்தப்பட்டுள்ள சோலார் பேனல்களின் மீது விழும் சூரிய ஒளிக்கதிரானது, டி.சி மின்சாரமாக மாற்றப்பட்டு, டிசி-ஏசி இன்வெர்ட்டருக்கு செல்லும். அங்கு 220 வோல்ட் ஏசி மின்சாரமாக மாற்றப்படும்.  அச்சமயம் வீட்டில் நீங்கள் மின்வாரிய மின்சாரத்தை உபயோகித்துக்கொண்டு இருந்தால், அதை துண்டித்து விட்டு சோலார் மின்சாரத்தை கொடுக்கும். நீங்கள் உபயோகிக்கும் மின்சாரம், சோலார் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை விட குறைவாக இருந்தால், மீதியுள்ள சோலார் மின்சாரத்தை மின்வாரிய சப்ளைக்கு (மின்வாரிய டிரான்ஸ்ஃபார்மருக்கு) அனுப்பும். இப்பொழுது மீட்டர் மறுபக்கமாக சுழலும். நீங்கள் உபயோகிக்கும் மின்சாரம், சோலார் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை விட அதிகமாக இருந்தால் தேவைப்படும் அதிகப்படியான மின்சாரத்தை மின்வாரிய சப்ளையிலிருந்து எடுத்துக்கொள்ளும். அப்பொழுது மீட்டர் முன்பக்கமாக சுழலும்.

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மீட்டர் ரீடிங் எடுக்கும் பொழுது, நீங்கள் உபயோகித்த மின் வாரிய மின்சாரம், நீங்கள் மின்வாரியத்திற்கு கொடுத்த மின்சாரம் இவற்றை கணக்கிடுவர்.

இதன் அடிப்படையில் நீங்கள் செலுத்தவேண்டிய மின் கட்டணம் அதாவது மின்வாரியத்திற்கு நீங்கள் சப்ளை செய்த சோலார் மின்சாரத்தின் அளவு, நீங்கள் உபயோகித்த மின்சாரத்தின் அளவைக்காட்டிலும் குறைவாக இருந்தால், வித்தியாச அளவிற்கு மட்டுமே நிர்ணயிக்கப்படும். அதை செலுத்தினால் போதும்.

நீங்கள் மின் வாரியத்திற்கு சப்ளை செய்த மின்சாரத்தின் அளவு, நீங்கள் உபயோகித்த மொத்த மின்சாரத்தின் அளவை காட்டிலும் அதிகமாக இருந்தால், வித்தியாச அளவு மின்சாரம் அடுத்த மாத கணக்கில் வரவு வைக்கப்படும். இவ்விதம் நடக்க வாய்ப்பே இல்லை. காரணம் ஒரு வீட்டிற்கு அனுமதிக்கப்படும் சிஸ்டத்தின் அளவே 1Kw ஆகும். இது அதிக பட்சமாக நன்கு வெயில் அடிக்கும் நாட்களில் நாள் ஒன்றுக்கு 5  யூனிட் மின்சாரத்தை மட்டுமே உற்பத்தி செய்யும். ஆனால் நாம் 5 யூனிட்டுகளுக்கு அதிகமாகவே உபயோகிப்போம்.

 வருடக்கடைசியில் நம் கணக்கு மின்வாரியத்தால் செட்டில் செய்யப்படும்.

1.  அரசின் இத்திட்டப்படி 1KW சோலார் சிஸ்டமே அமைக்க வேண்டும்.

2. மத்திய அரசின் மானியமாக 30%  மற்றும் மாநில அரசின் மானியமாக ரூ. 20,000/-  உண்டு.

3. இந்த சிஸ்டத்தை அமைக்க ஆகும் செலவு ரூ. 91,000- 1,10,000/-. மானியம் நீங்கலாக நாம் செலுத்த வேண்டிய தொகை ரூ. 43,700 - ரூ.60,000/- ஆகும்.

4. சிஸ்டம் இன்ஸ்டால் செய்து கொடுக்கும் நிறுவனங்கள், அவை வசூலிக்கும் கட்டண விபரங்களை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்-ஐ கிளிக் செய்யவும்.
 
System Installer Details

குறைபாடுகள்
மின்வாரிய சப்ளை இல்லாத பொழுது, இந்த சிஸ்டத்தில் உள்ள Anti-Islanding Protection செயல்பட்டு சோலார் மின்சப்ளையை துண்டித்து விடும். இதனால் வீட்டில் மின் சப்ளை இருக்காது. இந்த Anti-Islanding Protection வைத்திருப்பதன் காரணம், மின்சப்ளையை ஆஃப் செய்து விட்டு மின்வாரிய ஊழியர்கள் பழுது சரி செய்து கொண்டிருக்கும் பொழுது, நம் வீட்டு சோலார் மின்சாரம் அவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடாது என்பது தான்.

இந்த சிஸ்டத்தின் மூலம் மின்வாரிய மின்சாரம் இல்லாத நேரங்களில் சோலார் மின்சாரத்தை உபயோகிக்க முடியாது.