Saturday, November 22, 2014

வீட்டு காய்கறி தோட்டம் - 2 (Grow Bag Garden System)

Grow Bag Garden System  என்பது தொட்டியில் செடி வளர்ப்பது போன்றதே. தொட்டிக்கு பதிலாக கனமான பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படும். தண்ணீர் தேங்கி நிற்காமல் இருக்க, பையின் பக்கவாட்டில் சிறிய துளைகள் இருக்கும்.  இது பல அளவுகளில் தயாரிக்கப்படுகிறது. வெளி நாடுகளில் செடிக்கு ஏற்ப கீழ் கண்ட அளவுகளில் பைகள் கிடைக்கிறது.


5 Gallon – 9″W x 8-1/4″ x 19-3/4″ tall
7 Gallon – 9-3/4″ x 8-3/4″ x 22″ tall
10 Gallon – 14″ x 12″ x 21″ tall

 நம் நாட்டிலும் பல பிளாஸ்டிக் கம்பெனிகள் செடி வளர்ப்பு பைகளை தயாரிக்கின்றன. விபரம் அறிய கிளிக் செய்யவும்.

செடி, மரம் ,கொடி போன்றவை வளர ஒரு ஊடகம் தேவை. இயற்கையில் மண் தான் ஊடகமாகும்.  செடி வளர மண் ஏன் தேவை என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

1. செடியின் வேர்களுக்கு ஒரு பிடிப்பு கிடைத்தால் தான் அது மேல் நோக்கி வளர முடியும்.
2. நீரை உள்வாங்கி, மண் ஈரப்பதமாகி செடிக்கு தேவைப்படும் நீரை வேர் வழியாக கொடுக்கும்.
3. செடிக்கு தேவையான உர சத்துக்கள் மண்ணில் இருக்கும் மக்கி போன பொருட்களிலிருந்து  கிடைக்கும்.

தற்பொழுது பிளாஸ்டிக் பைகளில் செடி வளர்க்க, மண்ணுக்கு பதிலாக கோகோ பீட் (COCO PEAT) என ஆங்கிலத்தில் அழக்கப்படும் தேங்காய் நார் கழிவு பயன்படுத்தப்படுகிறது. 

தேங்காய் நார் கழிவு சுத்தம் செய்யப்பட்டு ஹைட்ராலிக் ப்ரஸ் மூலம் 5:1 என்ற அளவில் கட்டிகளாக கம்ரஸ்ட் செய்யப்பட்டு  விற்கப்படுகிறது. ஐந்து கிலோ எடை உள்ள கட்டியின் விலை சுமார் 170 - 250 ரூபாய்.  ஒரு குரோ பேக்கிற்கு 2 கிலோ நார் கழிவு தேவை.
COCO PEAT BRICK

இதில் மண்ணில் இருப்பது போல எவ்வித உர சத்தும் கிடையாது என்பதால், செடியின் வளர்ச்சிக்கு தேவையான உர சத்து கிடைக்க Water soluble fertilizer, Bio fertilizers போன்றவற்றை கொடுக்க வேண்டும்.


சோஷியல் அந்தஸ்துக்காக அல்லது நானும் ஆர்கானிக் காய்கறி செடி வளர்க்கிறேன் என மற்றவர்களிடம் பெருமையடித்துக்கொள்ள விரும்புபவர்கள் தாராளமாக குரோ பேக், கோகோ பீட், உரம் இவற்றை காசு கொடுத்து வாங்கி செடி வளர்க்கலாம். குரோ பேக் ரூ.30/- , கோகோ பீட் 2 கிலோ 100/-, உரம் ரூ.30/- ( விலை சரியாக தெரியவில்லை) ஆக மொத்தம் ரூ.160/- க்கு மேல் வரும். அதோடு விதை அல்லது நாற்று விலையையும் சேர்க்க வேண்டும். உதாரணத்துக்கு கத்தரி செடியை எடுத்துக்கொண்டால் வீரிய ரகமாக இருந்தால் அதிக பட்சமாக மூன்று கிலோ காய் காய்க்கும். இன்றைய விலைப்படி 150 ரூபாய்!

செலவில்லாமல் அல்லது குறைந்த செலவில் ஆர்கானிக் முறையில் காய்கறி செடிகளை வளர்த்து காய்கறிகளை பெறுவதே சிறந்தது.

செடி வளர்ப்பு பையாக 25 கிலோ, 50 கிலோ அரிசி பேக் செய்து வரும் பிளாஸ்டிக் பையை (கோணி) பயன்படுத்தலாம். கோணியின் உயரம் அதிகமாக இருக்கும் எனவே அதன் மேல் பக்கம் கிழ் நோக்கி வருமாறு வெளிப்புறமாக மடித்து விடவேண்டும். இப்பொழுது  பை இரண்டு லேயராக ஆகி பலமானதாக இருக்கும்.பிளாஸ்டிக் டிரம், கேன் ( பழையது - கீறல், ஒட்டை இருந்தாலும்) படத்தில் காட்டியபடி இரண்டாக வெட்டி உபயோகிக்கலாம். மூடியை நன்றாக மூடி வெட்டிய பகுதி மேல் நோக்கியிருக்கும் படி வைத்து வெட்டிய இரண்டு பகுதியையும் உபயோகிக்கலாம்.
பிளாஸ்டிக் கோணிய  மளிகை கடையிலும், கேன், ட்ரம் இவற்றை பழைய பேப்பர் கடையிலும் வாங்கலாம். இவற்றின்  பக்கவாட்டில் கீழ் பக்கம் சிறிய துளைகள் போடவேண்டும். இவற்றின் வழியாக தண்ணீர் தேங்கி நிற்காமல் வெளியே வழிந்து விடும். இதனால் செடிகள் அழுகாது.

தோட்ட மண், மக்கிய சாண தூள், மக்கிய கம்போஸ்ட் உரம், மணல். இவை நான்கையும் சம அளவில் (1:1:1:1) கலந்து மண் கலவையை தேவையான அளவிற்கு  தயார் செய்து கொள்ள வேண்டும். தோட்ட மண்ணில் கல், செங்கல் கட்டி, சிமிண்ட் கலவைகள், செடி, களைகள் இவை இல்லாதவாறு சுத்தம் செய்து உதிரியாக ஆக்க வேண்டும்.

அதன் பின் வெட்டி தயார் செய்யப்பட்ட கேன்/ட்ரம்/ பிளாஸ்டிக் கோணியில் 2 அல்லது 3 அங்குலம் உயரம் குறைவாக இருக்குமாறு நிரப்பவேண்டும்.

அடுத்த பதிவில் சந்திப்போம்........


Tuesday, November 18, 2014

வீட்டு காய்கறி தோட்டம் -1 ( சதுர அடி தோட்டம்)

வீட்டில் சமையலுக்கு தேவையான காய்களுக்காக காய்கறி தோட்டம் போடுவது ஒன்றும் புதிதான விஷயம் இல்லை. ஆனால் நம் நாட்டிற்கும் வெளிநாட்டிற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. நாம் நிலத்தை நன்கு கிளறி அதில் செடியை நடுவோம். ஆனால் அவர்கள் நிலத்தின் மீது  தேவையான நீளம், அகலம் மற்றும் 16 அங்குல உயரம் கொண்ட மர சட்டத்தை வைத்து அதன் உட்புறம் தோட்ட மண், தொழு உரம்,  மக்கிய குப்பை ஆகியவை கலந்து நிரப்புவார்கள்.  பொதுவாக காய்கறி செடிகளின் வேர் பரவ இந்த ஆழம் போதுமானது. இந்த முறையில் தோட்டம் அமைப்பது ’சதுர அடி தோட்டம்’ (Square Foot Garden) என அழைக்கப்படுகிறது. கீழே 32 சதுர அடி  (8 அடி நீளமும் 4 அடி அகலமும்) உள்ள  தோட்ட அமைப்பு காட்டப்பட்டுள்ளது. 16 அங்குல உயரமுள்ள இந்த மர சட்டத்தினுள் மேலே குறிப்பிட்டபடி நன்றாக கலக்கப்பட்ட தோட்ட மண், தொழு உரம் மற்றும் மக்கிய குப்பை உர கலவை முழுமையாக நிரப்பப்பட்டுள்ளது. மரசட்டத்தின்  மேல் நீள வாக்கில் 8 அடி நீளமுள்ள மர ரீப்பர் சம இடைவெளியில் பொருத்தப்பட்ட்ள்ளது. அதைப்போலவே அகலவாக்கில் 7 ரீப்பர்கள் பொருத்தப் பட்டுள்ளது.  இப்பொழுது 32 கட்டங்களாக (சதுர அடிகளாக) பிரிக்கப்பட்டு விட்டது. இந்த ரீப்பர்கள் அவசியம் கிடையாது. இது செடியை நடுவதற்கு அல்லது விதையை ஊன்றுவதற்கு ஒவ்வொரு சதுர அடியையும் பிரித்து காட்டுவதற்கு மட்டுமே. இதற்கு பதிலாக கயிற்றை கட்டலாம். இது அடையாளத்துக்கு தான்.


இனி ஒவ்வொரு சதுரத்திலும் என்னென்ன செடிகளை வளர்க்கலாம், எத்தனை செடிகளை வளர்க்க முடியும் என்பதை பார்க்கலாம். கிழே உள்ள படம், வெளி நாடுகளில் சதுர அடி தோட்டத்தில் வளர்க்கப்படும் காய்கறி செடிகளின் எண்ணிக்கை (சதுர அடிக்கு) விபரம் காட்டப்பட்டுள்ளது.

இதில் நாம் உபயோகிக்கும் காய்கறி செடிகள் பற்றி பார்க்கலாம்.


சதுர அடி தோட்டம் என்பது கிடத்தட்ட மேட்டு பாத்தி விவசாயம் போன்றதே. இம் முறை மூலம், குறைந்த நில பரப்பில் அதிக செடிகளை வளர்த்து அதிக காய்கறிகளை பெறுவதே மேலை நாட்டினரின் நோக்கமாகும். ஏக்கர் கணக்கில் வீட்டை சுற்றி இடமிருந்தும் ஏன் இந்த சதுர அடி தோட்டத்தை விரும்புகிறார்கள்? அதற்கான காரணம் இவைதான்.

1. நிலத்தை கொத்தி பக்குவப்படுத்த தேவையில்லை.

2. தோட்ட மண், மக்கிய குப்பை இவை கலந்து செடி வளர தேவையான உயரத்துக்கு நிரப்பப்படுவதால், இம் மண் எப்பொழுதுமே இறுகாமல் லூஸாக இருக்கும். இதனால் வேர்களுக்கு தேவையான காற்றோட்டம் தாராளமாக கிடைக்கும்.

3. கீழேயுள்ள மண் (நிலம்) இறுக்கமாக இருப்பதால், செடிக்கு ஊற்றும் நீர் மண்ணுக்குள் இறங்கி வீணாகாது. அதனால் குறைவான தண்ணீரே தேவை.

4. செடி வளர்வதற்காக நிரப்பப்பட்டுள்ள மண்ணில் உள்ள உர சத்து நீரில் கரைந்து பூமிக்குள் செல்லாமல், செடிக்கே செல்லும்.

5. ஒவ்வொரு வகை செடிக்கும் மாறுபட்ட சத்துக்கள் தேவை. பல வைகையான செடிகள் வள்ர்க்கப்படுவதால், மண்ணில் கலந்துள்ள உரத்தில் இருக்கும் பலவிதமான சத்துக்கள் பரவவலாக தேவைப்படும் செடிகளுக்கு கிடைக்கும்.

நம் நாட்டை பொறுத்தவரை மரத்திலான சட்டம் அமைப்பது என்பது அதிக செலவு ஏற்படுத்தும் விஷயம். மேலும் மழை வெயில் இவற்றால் இற்றுப்போகும். எனவே மரத்துக்கு பதிலாக மண் சரிந்து விழாமல் இருக்க சிமிண்ட் ஸ்லாப் அல்லது பழைய செங்கல் இவற்றை அடுக்கி வைக்கலாம். அல்லது பாக்கிங் கேஸ் ( மரப்பெட்டி) உபயோகப்படுத்தலாம்.

அடுத்த பதிவில் செடிவளர்ப்பு பையில் (GROW BAG) எப்படி காய்கறி தோட்டம் அமைக்கலாம் என்பதை விரிவாக பார்க்கலாம்.

சந்திப்போம்...........